புதுப்புது அர்த்தங்கள்…. நாள்-13

அத்தியாயம் 36

சந்தியா…..

 மாலை வரவேற்பிற்குப் போக வேண்டும் என்று விஸ்வா சொல்லியிருக்க , சந்தியாவும் கிளம்பத் தொடங்கினாள் . 

விஸ்வாவும் வர , இப்போதைய டிரண்டான , தம்பதியர் இருவரும் ஒரே  நிறத்தில் உடை அணிவது போல் தாங்களும் உடை அணிய ஆசைப்பட்டாள் . அதை  விஸ்வாவிடம் கேட்க , 

“நிச்சயமாக அணியலாம் , நீயே உடையை எடுத்து வை , நான் குளித்து விட்டு வருகிறேன்…” என்று குளியலறைக்குள் புகுந்தான்.

சந்தியா, தன்னுடைய பச்சைச் சேலைக்கு ஏதுவாக அவனுக்கும் லைட் பச்சை நிறத்தில் சட்டை எடுத்து வைக்க , அவனும் அணிந்து கொண்டான் . 

இருவருக்கும் அது அழகாகவும் பாந்தமாகவும் இருந்தது . சில செல்ஃபிகளை எடுத்துக்கொண்டனர் . பின் இருவரும் வெளியே வர ,

ஹாலில் அமர்ந்திருந்த ராஜி , “என்னடா விஸ்வா  டிரஸ் இது ? பச்சை கலர் ஜிங்குச்சா… , மஞ்சக் கலர் ஜிங்குச்சா… என்று ரசனையில்லாமல் அணிந்திருக்கிறாய்?” என்று கடிய ,

“இருவரும் ஒரே நிறத்தில் அணியலாம் என்று ஐடியா அம்மா..” என்று விஸ்வா எடுத்துரைக்க ,

“அதற்காக உனக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது , இப்படிப் போனால் என்ன நினைப்பார்கள்….?  அவள் தான் பட்டிக்காட்டுத்தனமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்றால் நீயும்…” என்று முகத்தைச் சுழிக்க ,

இந்த வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த சங்கரன் , “அவர்களுக்குப் பிடித்ததை அவர்கள் போடட்டும் ராஜி .  உடையெல்லாம் தனிமனித உரிமை…” என்று எடுத்துரைக்க ,

“குடும்பத்தில் உரிமை , சுதந்திரம் என்றெல்லாம் பேசாதீர்கள் . எல்லோரும் இணைந்து தான் செயல்பட வேண்டும். பெரியவர்கள் பேச்சைக் கேட்டுத் தான் நடக்கவேண்டும்…” என்று படபடத்தார் ராஜி .

பின் விஸ்வாவை பார்த்து  , “உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன் ,  வேற ஏதாவது லைட் கலர் சட்டை போடு ,நீ வேண்டுமானால் அதற்கேற்ப உன் சேலையைத் தேர்ந்தெடு சந்தியா…” என்று கட்டளையிட, 

ஏற்கனவே இந்தப் பேச்சால் மனம் வாடியிருந்த சந்தியா , “கணவன் ஏதாவது சொல்வானா…?” என்று பார்க்க,

“வா சந்தியா , வேறு உடையை தேர்ந்தேடுப்போம்…” என்று  விஸ்வா கூற ,

“இல்லை வேண்டாம் , இனிமேல் நான் மாற்றி கிளம்புவதென்றால் நேரமாகிவிடும் . நீங்கள் மாற்றிக் கொண்டு வாருங்கள்….” என்று தன் அழுகையை மறைக்கப் பூஜை அறைக்குள் சென்றாள் .

“சரி…” என்று விஸ்வா அறைக்குள் செல்ல , 

இவையனைத்தையும் ஒரு அதிருப்தியுடன் பார்த்து விட்டு சங்கரன் நகர்ந்தார் .

காரில் சந்தியா அமைதியாக வர , விஸ்வா பேச்சைத் தொடங்கினான் .

“அம்மா நம் நல்லதிற்குத் தான் சொல்வார்கள் , அதான் நீ தேர்ந்தெடுத்ததை மாற்றினேன் சந்தியா…” என்று வழக்கமான பல்லவியைப் பாட ,

சந்தியா  மௌனமாகவே வர , “பிளீஸ் சந்தியா பேசு…”  என்று தூண்ட ,

“நீங்கள் சட்டையை மாற்றியதில் எனக்கு  வருத்தம் இல்லை . ஆனால் அத்தை என்னைப் ‘ பட்டிக்காடு , உடை தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை…” என்று மட்டம் தட்டிப் பேசிய போது, நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே ,  இத்தனைக்கும் அது நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிய சட்டை…” என்று கண்கலங்க ,

“ஸாரி சந்தியா , நான் அதைக் கவனிக்கவும் இல்லை . அதைப்பற்றி பெரிதாக யோசிக்கவும் இல்லை , ஸாரி… ஸாரி… . இனிமேல் இப்படி நடக்காது…” என்று சரண்டராக ,

சந்தியா  வளர்ந்த விதத்தால் அவளுக்குக் கோபப்படவோ , சண்டையிடவோ வரவில்லை . 

அவன் மன்னிப்புக் கேட்டதும் அமைதியானாள்  . 

ஆனால் மனதில் ஒரு வலியை உணர்ந்தாள் . பின் விஸ்வா அவளை ஏதேதோ பேசிச் சமாதானப்படுத்தினான் . 

கல்யாண மண்டபம் வர , நண்பர்கள் வர , விஸ்வா அறிமுகப்படுத்த , சந்தியாவும் சண்டையை மறந்து  பேச ஆரம்பித்தாள் .

அத்தியாயம் 37

விஸ்வாவும் சந்தியாவும் வந்த கொஞ்ச நேரத்தில் ரகுவும் குடும்பத்துடன் மண்டபத்திற்குள்  வர,  இவர்களைக் கண்டதும் , விஸ்வா பேச வந்தான் . 

சுவாமிநாதனும் சுந்தரியும் ஒரு தலையசைப்போடு நகர , ரகு வேறு வழியில்லாது நிற்க ,  “ஏன் திருமணத்திற்கு வரவில்லை…?” என்று விஸ்வா  கோபித்துக் கொண்டான் .

“அந்த நேரத்தில் வெளியூரில் இருந்ததால் வர முடியவில்லை….” என்று ரகு சமாளிக்க, 

பின், “ஒரு நிமிடம்…” என்று தள்ளியிருந்த  சந்தியாவை அழைத்து, அவனுக்கு அறிமுகப்படுத்தினான் . 

 “ரஞ்சனி பாதிக்கபட்டிருக்கிறாள்…” என்பது ரகுவின் மனதிற்குள் இனம்புரியாத கோபத்தை உருவாக்க , 

ரகுவும் சிறிது நேரம் கடமைக்காகப் பேசி விட்டு,  வேலையிருப்பது போல் நகர்ந்தான். 

வரவேற்பு முடிந்து காரில் திரும்பும் பொழுது  , ரகு தன் பெற்றோரிடம் தன் எரிச்சலையும் , மனவருத்தத்தையும் புலம்பிக் கொண்டே வந்தான் . பின்,  “இந்தப் பெண்ணாவது கஷ்டப்படாமல் இருக்க வேண்டும்…” 

“பார்த்தால் அப்படித் தெரியவில்லை ரகு..” என்றார் சுந்தரி

“ஏன் அம்மா?”

“கல்யாணம் ஆகி  ஒன்பது மாதம் இருக்குமா? பெண் முகத்தில் மலர்ச்சியே இல்லை…” 

 அனைவருக்கும் அந்த உண்மை புரிய , வருத்தப்பட்டார்கள் . 

மேலும் இரண்டு மாதங்கள் ஓட ,  அந்த வாரப் புதன்கிழமை ரஞ்சனிக்குப் பிறந்தநாள் வந்தது .

அலுவலகத்தில்  ஊழியர்களுக்குப் பிறந்த நாள் வந்தால் , அதைக் கட்டாயம் கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள் . அதே போல் அலுவலகம் சார்பில் சின்னப் பரிசும் கட்டாயம் உண்டு . 

ரகு வந்த பிறகு, இந்தப்  பிறந்த நாள் கொண்டாட்டம்  , ஊக்கப் பரிசுகள் , டீம் டின்னர் என்று பல பழக்கங்களைப்  புகுத்தியிருந்தான் . இப்பழக்கங்கள் அலுவகத்திற்கும் ஊழியர்களுக்கிடைய ஒரு நெருக்கத்தையும் , பிடிப்பையும் ஏற்படுத்தும் என்று நம்பினான் .

மேலும் ரகுவின் டீமில் இளவட்டங்களே இருக்க , எப்போதும் இளமைக் கொண்டாட்டம் தான் . 

இதனால் விஷால் அவ்வப்போது ரகுவின் டீமை பார்த்துக் காய்வான் .

 சுவாமிநாதனும் ஊழியர்களை மதிப்பவர் தான் , ஆனால் அவருடையது ஓல்ட் ஷுகூல் ஆஃப் தாட்ஸாக இருக்கும் .

அன்று ரஞ்சனியின் பிறந்த நாள் கொண்டாட்டமும் ஆரம்பித்தது, 

“தைரியலட்சுமியாய் மென்மேலும் வளர வேண்டும்…” என்று சுவாமிநாதன் வாழ்த்தினார். 

ரஞ்சனி கண்கலங்க , ஆசி பெற்றாள் .  

 ரகு மற்றும் அனைத்து அலுவலக நண்பர்களும் வாழ்த்த , ரஞ்சனி ரொம்ப நாளுக்கு அப்புறம் சந்தோஷ வானில் பறந்தாள் . 

மொத்தத்தில் இந்த வேலை , பழைய ரஞ்சனியை மீட்டுக்  கொண்டிருந்தது.

 வீட்டில் அனைத்தையும் பகிர , அனைவரும் மகிழ்ந்தனர் .

அந்த ஞாயிற்றுக்கிழமை ஹரிணியும் ரஞ்சனியும் பிரபல மாலிற்கு ஸாப்பிங் வந்திருந்தனர் .  ரஞ்சனியின் உடைத் தேர்வு நன்றாக இருப்பதால் , தனக்கும் சில உடைகளைத் தேர்ந்தெடுத்துத் தரும்படி  அழைத்து வந்திருந்தாள் ஹரிணி  .

அலுவலகம் செல்லும் உடைகளைத் தேர்ந்தெடுத்த பின் , சேலை பிரிவுக்கு வந்திருந்தனர் . 

ஹரிணி இரண்டு மூன்று சேலைகள் எடுக்க ,  ஹாங்கரில் தொங்க விட்டிருந்த சேலை ரஞ்சனிக்கு மிகவும் பிடிக்க , அதை எடுத்தாள் .

சிறிது நேரத்தில் சந்தியா அங்கே வந்து , “இங்கே  ஒரு சிகப்பு சேலை தொங்கியதே….” என்று விசாரிக்க ,

“இவர்கள் எடுத்து விட்டார்கள்…” என்று கடையாள் ரஞ்சனியைக் காட்ட ,

“ஓ…!” என்றவள் , “சரி, அந்த மாடலில் வேறு சேலைகள் இருந்தால் காட்டுங்கள் .”

“வேறு இல்லை மேடம் , அது  தான் கடைசி பீஸ் . வேறு பார்க்கிறீர்களா ?”

சந்தியா சட்டென்று வாடினாள்  . பின் , “சரி , காட்டுங்கள் …” என்று மற்றவற்றைப் பார்க்க ,

இதைக் கவனித்த ரஞ்சனி ,  “இதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்…” என்று கொடுத்தாள் .

“இல்லை , பரவாயில்லை..  நான்  வேறு பார்க்கிறேன்…” என்று மறுக்க ,

“பரவாயில்லை எடுத்துக் கொள்ளுங்கள்..” என்று மறுக்க மறுக்க கையில் திணித்தாள் ரஞ்சனி. 

“ரொம்ப நன்றி . கடையில் நுழையும் போதே இதைப் பார்த்து விட்டேன் , ரொம்பப் பிடித்திருந்தது . கணவருக்கு எடுத்து முடித்துவிட்டு வருவோம் என்று நினைத்தேன்….” என்று மெல்லிய புன்னகையைச் சிந்த ,

வழக்கம் போல்  ஹரிணி , “ஏதாவது விஷேசமா ?” என்று துருவ ,

“ஆம் , முதலாம் ஆண்டு திருமண நாளிற்குத்தான்…” என்று வெட்கப்பட ,

இருவரும் வாழ்த்துச் சொல்லி விட்டு , மற்ற சேலைகளைப் பார்க்கத் துவங்கினர் ,

“ரொம்ப தேங்கஸ்….” என்றாள் சந்தியா மீண்டும் , 

“விடுங்க …” என்று ரஞ்சனி நிறுத்த ,

“நான் சந்தியா  , நீங்கள்?”

“நான் ரஞ்சனி , இவள் ஹரிணி..” என்று சின்ன அறிமுகம் நடந்தது.

மூவரும் பேசியபடி மற்ற சேலைகளைப் பார்க்க , அப்போது போனைப் பேசி முடித்து விட்டு வந்த விஸ்வா , “எடுத்து விட்டாயா சந்தியா ?” என்றபடி வர,

“எடுத்து விட்டேன் . அப்புறம் … , இவங்க ரஞ்சனி…” என்று நடந்ததைச் சந்தியா  விளக்க , 

விஸ்வா அதிர்ந்து நின்றான் .

 ரஞ்சனி முதலில் தடுமாறினாலும் சற்றுச் சமாளித்துச்  சிரித்தாள் .  பின், “ நாங்கள் கிளம்புகிறோம்…” என்று நகர்ந்தாள். 

விஸ்வா அவன் போவதைக் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டே நின்றான் .

சந்தியா ஏதோ பேச , அவனிடம் இருந்து பதில் வரவில்லை என்பதை உணர்ந்து ,  நிமிர்ந்து பார்க்க , அவன் அவர்கள் போன பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான் .

“என்னங்க…?  என்னாச்சு… ?”  என்று உலுக்கினாள் . 

சுதாரித்த விஸ்வா , “ஒன்றும் இல்லை…” என்று தலை கோதியவன் , “எடுத்து விட்டாயா? போகலாமா…?”என்று அவசரப்படுத்தினான் .

“முடிந்து விட்டது..” என்று  சந்தியா சொல்ல ,  பில்லிங் செக்ஸனுக்கு நகர்ந்தான் .

அத்தியாயம் 38

ரஞ்சனியும் ஹரிணியும் மாலிலே உணவருந்தினர் .  “மீண்டும் ஒரு சுற்று போவோமா?” என்று ஹரிணி கேட்க ,

என்னதான் ரஞ்சனி சமாளித்தாலும் மிகவும் சோர்வாக உணர்ந்தாள் . தனியாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள் . 

“இல்லை ஹரிணி , கால் கொஞ்சம் வலிக்கிறது , வீட்டுக்கு போகலாம் .”

“சரி ரஞ்சனி , இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்” என்று கிளம்பினர் .

வீட்டிற்கு வந்தவள் , சரோஜா அம்மாவிடம் உண்டு விட்டேன் ,  ஓய்வு எடுக்க போகிறேன் என்று சொல்லி விட்டு , அறைக்குள் புகுந்து கொண்டாள்.

தன் செயற்கை காலைக் கலட்ட , கண்ணீர் வழிந்தது . அப்படியே கட்டிலில் விழுந்தாள் . 

என்னதான் நான் தைரியமான பெண் என்று சொல்லிக் கொண்டாலும் ,  இது தான் எதார்த்தம், மனிதர்கள் இப்படித்தான் என்று சமாதானப்படுத்தி கொண்டாலும் , நேரில் சந்தித்த போது , ஏமாற்றம் முகத்தில் அறைந்தது . 

இருவரும் சென்னையில் கழித்த ஒருநாள் ,  படம் போல் ஓடியது . அதை ஏற்று கொள்ள முடியாமல்  கண்ணீர் பெருகியது . அப்படியே அழுதபடியே உறங்கிப் போனாள் .

நன்றாக தூங்கி எழுந்த பின் , சற்று தெம்பாக உணர்ந்தாள் . 

“ஏன் கோழை போல் நடந்து கொண்டோம் …” என்று தன்னையே குட்டினாள் . முதற்கட்ட அதிர்ச்சியாக இருக்கும் என்று அவளே தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டாள் .

பின் சரோஜா அம்மாவை அழைத்துக் கொண்டு குன்றத்தூர் கோவிலுக்கு சென்று வந்தாள் . 

பெற்றவர்களை  வருத்தப்படுத்த வேண்டாம் என்று வீட்டில் விஸ்வாவை சந்தித்ததைச் சொல்லாமல் விட்டாள் .

அதே வேளையில் சந்தியா ,   “இங்கேயே  சாப்பிட்டு போகலாமா?“ என்று கேட்க ,

“எங்கே மீண்டும் ரஞ்சனியை பார்க்க நேருமோ…” என்று பயந்து “இல்லை… ,  இங்கே வேண்டாம்…. .வெளியே சாப்பிடலாம்” என்று இழுத்து வந்துவிட்டான் . 

பின் வேறொரு ஹோட்டலில் உண்டு விட்டு , வீட்டுக்குக் கிளம்பினர் . 

காரில் விஸ்வா அமைதியாகவே வர , சந்தியா விவரம் கேட்க,,

  “கொஞ்சம் டயர்டாக இருக்கிறது, லேசாக தலைவலிக்கிறது சந்தியா .”

“முதலிலே சொல்லியிருக்கலாமே , நேராக வீட்டுக்குப் போயிருக்கலாமே ….” என்று சந்தியா வருத்தப்பட ,

“என்ன மலையவா வெட்டி முறித்தேன் , சாப்பிடத்தானே செய்தேன் “ என்று  அவளைச் சகஜமாக்கும் பொருட்டு கண்சிமிட்டிச் சிரித்தான் .

“சரிங்க “என்று புன்னகைத்தவள் , 

“வீட்டுக்குப் போனதும் நன்றாக ஓய்வெடுங்கள் .” என்று அன்புக் கட்டளைவிட்டாள்.

“ம்ம்… “என்று காரைச் செலுத்தினான் .

இருவரும் வீட்டிற்குள் நுழைய , சங்கரனும் , ராஜியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர் . அப்படியே அறைக்குச் செல்வது மரியாதையாக இருக்காது என்பதால் ஸோபாவில் அமர்ந்தான் .

சந்தியாவும் தேர்ந்தெடுத்த உடைகளை காண்பித்தாள் . 

உடைகளை ஒரு பார்வை பார்த்து விட்டு , ராஜி விஸ்வாவை பார்த்து ,” ஏன் ஒருமாதிரி இருக்கிறாய் விஸ்வா ? “

“ தலைவலி  அம்மா .”

“அவனுக்கு  முடியவில்லை என்றால் இன்னொரு நாள் போயிருக்க வேண்டியதுதானே….” என்று ராஜி சந்தியா மீது பாய ,

“அவர் தான் போகலாம் என்றார்  அத்தை…” 

“ஆமாம்,  நான் தான் சொன்னேன் அம்மா .”

“அவன் உனக்காகப் பார்த்திருப்பான் , ஆனால் நீ அவன் முகத்தைப் பார்த்து எதையும் கண்டுபிடிக்கவில்லையா? ஜாலியாகக் கிளம்பி போய்விட்டாய் , என்ன பொண்டாட்டியோ ?” என்று சலிக்க ,

சந்தியா கண் கலங்கி , விஸ்வாவைப் பார்க்க , விஸ்வா இருந்த மனநிலையில் , அமைதியாக இருந்தான் .

சந்தியா ஒரு விரக்திப் புன்னகையோடு நின்றாள் . 

“எல்லாவற்றையும் எடுத்து கொண்டு போய் உள்ளே வை” என்று ராஜி பணிக்க , 

சந்தியா உள்ளே சென்றாள் .

உடனே ராஜி , “இங்கேயே இரு விஸ்வா” என்று உள்ளே சென்றார் .

இவை அனைத்தையும் கவனித்த சங்கரன் ,” என்னடா பிரச்சனை?” 

“ஒன்றும் இல்லை அப்பா….. “என்று தடுமாற , சங்கரன் தீர்க்கமாக பார்க்க ,

 அம்மா வராததை உறுதி செய்தவன் , “இன்று கடையில் ரஞ்சனியை  பார்த்தேன்…. .”

“அவள் எப்படி இங்கே?  ஏதாவது பேசினாயா…? நலம் விசாரித்தாயா…? நன்றாக இருக்கிறாளா…?”

“இல்லை அப்பா . அவளைப் பார்த்த அதிர்ச்சியில் , ஒன்றுமே ஓடவில்லை….” 

“ஓ…!” என்றவர் , “எப்படி இருக்கிறாள்?”

“நன்றாக இருக்கிறாள் அப்பா , செயற்கை கால் பொறுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன் , நடையில் வித்தியாசம் இருந்தாலும்  நன்றாக நடக்கிறாள் .”

“நீ நலம் விசாரித்து இருக்கலாம்…” என்று குறைபட , 

“அவளைப் பார்த்தவுடன் ரொம்பக் குற்ற உணர்ச்சியாக இருந்தது அப்பா , அப்புறம் சந்தியாவும் கூட இருந்தாள்….” என்று இழுக்க ,

“அதானே…. இவன் சரியான சுயநலவாதி… “ என்று சங்கரன் மனதில் சலிப்பாக நினைத்தார் . 

அதற்குள் தைலத்துடன் ராஜி வர , பேச்சு அத்தோடு நின்றது . 

சங்கரன் யோசனையோடு எழுந்து செல்ல , ராஜி விஸ்வாவிற்கு தைலம் தேய்க்கத் தொடங்கினார் .

“விஸ்வா வரவில்லையே….” என்று எட்டிப்  பார்த்த சந்தியா , 

இக் காட்சியைக் கண்டவுடன் , கசந்த முறுவலை சிந்தினாள் . 

தொடரும்.,…