இங்கே ரஞ்சனி வேலை தேடத் தொடங்கினாள் . இரண்டு, மூன்று தேர்வுக்கு ராகவ்வுடன் சென்னை சென்று வந்தாள் . அப்படி வரும் பொழுது ராமலிங்கம் வீட்டில் தங்கினாள்.
இப்படியாக வேலை தேடும் படலம் நடந்து கொண்டிருக்க , ஒருநாள் ராமலிங்கம் சுவாமிநாதனைச் சந்திக்க , “பேச்சு எப்படியோ விஸ்வா கல்யாணம்…..” என்று போக ,
ராமலிங்கம் ரஞ்சனியைப் பற்றி சொல்ல , “ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் . அந்தப் பெண்ணுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்…” என்று சுவாமிநாதன் வருத்தப்பட்டார்.
உடனே ராமலிங்கம் சுவாமிநாதனிடம் , “உன்னுடைய அலுவலகத்தில் ஏதேனும் வேலை ஏற்பாடு பண்ண முடியுமா?”
சுவாமிநாதன் யோசிக்க , “நான் உன் அலுவலகத்திற்கு அப்ளை செய்யச் சொல்கிறேன் . நீ அவளைச் சோதித்து, திருப்தி என்றால் தேர்வு செய் இல்லை என்றால் வேண்டாம் . அந்தப் பெண்ணிற்கும் சிபாரிசெல்லாம் பிடிக்காது . எனக்குத்தான்அவள் தெரிந்த இடத்தில் கொஞ்ச நாள் வேலை செய்தால் நல்லது என்று தோன்றுகிறது .”
“சரி , என் மகனிடம் கலந்து பேசிச் சொல்கிறேன்..”
“சரிப்பா , என் கையெழுத்து வேலை முடிந்து விட்டதல்லவா? நான் புறப்பட்டுமா….?” என்று கிளம்பினார் ராமலிங்கம் .
சுவாமிநாதன் விவரமாக ரகுவிடம் சொல்லாமல் , “ ராமலிங்கம் தன் சொந்தக்காரப் பெண்ணிற்கு வேலை கேட்கிறார்…” என்று மட்டும் சொன்னார்.
“சரிப்பா , அடுத்த வாரம் நம் கம்பெனியில் வேலைக்கான தேர்வு நடக்கிறது . அதற்கு வரச் சொல்லுங்கள் . திறமையிருந்தால் நிச்சயமாக வேலை தருகிறேன்…” என்றான் கறாராக .
“சரிப்பா , அப்படியே செய்வோம் , நான் ராமலிங்கத்திடம் விவரத்தைச் சொல்லி விடுகிறேன்.”
ராமலிங்கம் ரஞ்சனியிடம் விவரத்தைச் சொல்ல , “சிபாரிசில் போவது சரியாக வராது பெரியப்பா….” என்று தயங்க ,
“இல்லைம்மா , தேர்வானால் தான் வேலை . சிபாரிசு எல்லாம் ஒன்றும் கிடையாது . மேலும் நீ இப்போது தான் முதன்முறையாக வேலைக்குப் போகிறாய்…” என்றவர் , சற்றுத் தயங்கி, அவள் காலைப் பார்த்து விட்டு , “நமக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று தெரியாதும்மா . தெரிந்த இடமாக இருந்தால் வசதியாக இருக்கும் என்று நினைத்தேன் . இங்கே இருந்து உன் கஷ்ட நஷ்டங்களைத் தெரிந்து கொண்டோமென்றால் அடுத்த வேலைக்குச் செல்வது எளிதாகிவிடும் ரஞ்சனி . அதான் யோசித்தேன் . நீயும் நன்றாக யோசித்து முடிவு எடு .”
பெரியப்பாவின் அக்கறை புரிய , “சரி…”என்றாள் . பின், “நன்றி பெரியப்பா…” எனச் சொல்ல ,
“விடுடா , பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு , நீயும் வித்யாவும் ஒன்று தான்…” என்று தலையைத் தடவிக் கொடுத்து விட்டு நகர்ந்தார் .
ரஞ்சனி வீட்டில் பேச , பெரியப்பாவின் முடிவை அனைவரும் ஆதரிக்க , தேர்வுக்குச் சென்றாள் .
‘ராமலிங்கத்தின் சொந்தகாரப் பெண்’ என்று நினைத்தானே தவிர இவளை யோசித்திருக்கவில்லை. ‘சி.ஏ.வில் தேர்வாகிவிட்டால் போல…’ என்று நினைத்தான் . அவளைப் பார்த்தவுடன் மனதில் சின்ன சந்தோஷம் வந்து ஒட்டிக் கொண்டது .
இவர்கள் சந்தித்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் இருக்க , இந்த ஒன்றை வருடத்தில் ரஞ்சனியின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்பவங்கள் பல நடந்திருக்க……. , ரகுநந்தன் அவளுடைய ஞாபகத்தில் இல்லாமல் போனான் .
ரஞ்சனி முகத்தில் தன்னைக் கண்டு கொண்டதற்கான மாற்றத்தைத் தேட , அது காணாததால் சோர்ந்து போனான் .
“என்னடா ரகுநந்தா , உனக்கு வந்து சோதனை? அழகான பெண்ணின் ஞாபகத்தில் நீ இல்லாமல் போய்விட்டாயே, துக்கம் , அவமானம்…” என்று மைண்ட் வாய்ஸ் ஓட ,
ரகு வெளியே புன்னகைத்தபடி , அவளை அமரச் சொன்னான் . அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்ததால் , அவள் நடையில் இருந்த வேறுபாட்டை, அவன் கவனிக்கவில்லை .
ரஞ்சனி சான்றிதழ்களைக் கொடுக்க , அவன் தேர்வாளராக மாறி , அதை உற்று நோக்கினான் .
“ஆறு மாதத்திற்கு முன்னாலே சி.ஏ முடித்துவிட்டீர்களே ? ஏன் இன்னும் வேலைக்குப் போகவில்லை…?”
ரஞ்சனிக்குத் ‘தெரிந்து கொண்டே கேட்கிறானே..’ என்று உள்ளே புசுபுசுவென கோபம் வர , அவனைக் கோபமாக பார்க்க ,
அவன் முகத்தில் கேலி , கிண்டலுக்கான பாவங்கள் இல்லாமல் காரணம் தெரிந்து கொள்வதாக மட்டுமே இருக்க , குழம்பிப் போனாள் .
அவன் பார்வையை நேராக சந்தித்து , “கொஞ்சம் பெர்ஸனல் இஷ்யூ ஸார்…”
“ஸாரிங்க , ஏன் இந்த ஆறுமாத இடைவெளி என்று சொல்லித் தான் ஆக வேண்டும்?” என்று வலியுறுத்த,
“உடம்பு சரியில்லாமல் போய்விட்டது . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன் .உங்களுக்குத் தேவையென்றால் தகவல்களை மருத்துவமனையில் இருந்து வாங்கித் தருகிறேன்.”
மேலும் ரகு சில கேள்விகளைக் கேட்டு , அவளுடைய அறிவைச் சோதித்தான்,
பதில்கள் திருப்திகரமாக இருக்க ,
“ஓ.கே. , நீங்கள் வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள் . வெளியே அனு இருப்பாங்க , அவங்களிடம் சம்பளம் மற்றும் வேலைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள் ரஞ்சனி . ஆல் தி பெஸ்ட்”
“சரி” என்று ரஞ்சனி எழுந்து கொள்ள ,
“எப்போது ஜாயின் செய்கிறீர்கள்…?”
“அடுத்த திங்கள் ஜாயின் பண்ணட்டுமா? மதுரைக்குப் போய் வர வேண்டியுள்ளது ஸார் .”
“ஒ.கே . “
அனுவைப் பார்க்கப் போக , முதலில் அவள் நடையை யோசனையோடு பார்த்த அனு , நிலைமை புரிந்து சட்டென்று சிநேக பாவத்திற்கு மாறி வரவேற்றாள் .
அனு முப்பத்துகளின் தொடக்கத்தில் இருந்தாள் . சமீபத்தில் தான் திருமணம் நடந்ததற்கான அனைத்து அறிகுறிகளும் அவளிடத்தில் தெரிந்தது .
ரஞ்சனி சில நடைமுறை வேலைகளை முடித்துவிட்டு , “திங்கள் பார்க்கலாம்….” என்று விடைபெற்றாள்
அத்தியாயம் 32
ரஞ்சனி, திங்கள் அன்று அலுவலகத்தில் இணைந்து கொண்டாள். கீழ்தளம் , முதல் மாடி என்று இரண்டு தளங்களாகக் கட்டிடம் அமையப் பெற்றிருந்தது .
நல்ல வேளையாக ரஞ்சனிக்குக் கீழ் தளத்தில் தான் வேலை .
ஹரிணி என்று மற்றொரு பெண்ணும் இருந்தாள் . மூன்று மாதத்திற்கு முன் தான் சேர்ந்திருந்தாள் . அனு இருவரையும் அறிமுகம் செய்து வைக்க , இருவரும் ஒத்த வயதென்பதால் சிநேகமாகினர் .
“ நாம் அனைவரும் ரகுநந்தன் ஸார் டீம் . ஒரு வருடமாகத் தான் இங்கே வந்து ஸார் சார்ஜ் எடுத்துள்ளார் . மும்பையில் ரகு ஸார் மூன்று வருடம் பெரிய கம்பெனியில் வேலை பார்த்து , அந்த அனுபவத்தைக் கொண்டு புதிய துணைக் கிளையை இங்கு திறந்துள்ளார் .இவருடைய திறமைக்கு வரும் புது கம்பெனிகளைத் தான் நாம் டீல் செய்கிறோம் . ஒரு வருடத்தில் நல்ல வளர்ச்சி…” என்று பெருமிதமாக சொன்னாள் அனு.
“மற்றபடி பழைய கம்பெனி கணக்குகளைப் பெரியவரே பார்க்கிறார் .”
தனக்கு அருகிலே ரஞ்சனி க்குச்சீட்டு கொடுத்து விட்டு , “எனக்கு உன்னுடைய சிரமங்கள் பெரிதாகத் தெரியாது , உனக்கு ஏதாவது உதவி….. இல்லை, கடினமாக இருக்கிறது என்றால் வெளிப்படையாகச் சொல்லி விடு , நாம் நமக்குள் உதவிக்கொள்ளலாம்..” என்று அனு சொன்னாள் .
“நன்றி மேடம்…”
“அடி ஆத்தி , இந்த மேடம் , அக்கா எல்லாம் இப்பவே கட் செய்து விடு , ஜஸ்ட் கால் மீ அனு…” என்றாள் வேகமாக .
“நீ ஒரு நிமிடத்தில் அவர்கள் வயதைக் கூட்டி விட்டாயே , அவர்களே ‘நான் இளமை’ என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். நீ இப்படி காலி செய்து விட்டாயே….”என்று சிரிக்க ,
அப்போது வந்த அனு , “என்ன சிரிப்பு ஹரிணி ? போய் வேலையை பார் …” என்று துரத்த ,
“அப்புறம் ….” என்று ஹரிணி ஜாடை காட்டிவிட்டு நகர்ந்தாள் .
பின் ரஞ்சனிக்கு சில வேலைகளைப் பணித்து விட்டு , “உனக்கு அலுவலக காஸிப் ஏதாவது தெரிய வேண்டுமென்றால், நீ ஹரிணியை மட்டும் கேட்டால் போதும் அனைத்தையும் புட்டு புட்டு வைத்துவிடுவாள்….” என்று சலித்தபடி அனு நகர்ந்தாள் .
மதியம் உணவிற்கு உட்காருகையில் விஷால் வந்து இணைந்தான் . அனுவிடம் நெருக்கமாக அளாவ ,
ரஞ்சனி, சங்கடத்துடன் அமைதியைக் கடைபிடிக்க , உள்ளே புகுந்த ஹரிணி , “நாங்களும் இருக்கோம் விஷால்…”என்று வம்பு செய்ய ,
சற்று வழிந்தபடி , “நாளை முதல் நாம் இருவரும் தனியாகச் சாப்பிடுவோம் அனு , கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை…” என்று விஷால் கொடி பிடிக்க ,
“விஷால்……” என்று பல்லைக் கடித்த அனு ,
பின் , “என் அருமைக் கணவர் . நம் கம்பெனி தான் . முதல் தளத்தில் பெரியவர் சுவாமிநாதன் கீழ் பணிபுரிகிறார் . இரண்டு மூன்று பெரிய கம்பெனிகளை டீல் செய்கிறார்…” என்று அறிமுகப்படுத்தி வைக்க ,
ரஞ்சனி சற்று அசுவாசத்துடன் , “வணக்கம்” என்றாள் .
விஷால் இவளைப் பற்றிய விவரங்களைக் விசாரிக்க , “புதுவரவு…” என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள் . பின் கதை பேசிக் கொண்டே உணவை முடித்தனர் .
“எல்லாம் ஆபீஸ் ரொமான்ஸ் தான் . லோயர் மிடில் கிளாஸ் குடும்பம் . பல வருடக் காதல் , இருவரும் குடும்ப பொறுப்புகளை முடித்து , திருமணம் முடிப்பதற்குள் நாட்கள் ஓடிவிட்டது” என்று நாட்களில் ஒரு இழுவையைப் போட்டு நிறுத்தினாள் .
மேலும், “திருமணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகிறது . அதனால் நமக்கு நல்ல பொழுதுபோக்கு…” என்று கண்ணடித்தாள் .
ரஞ்சனி மெல்லிய சிரிப்பைச் சிந்த ,
“உன் புன்னகை அழகாக உள்ளது..” என்று ஹரிணி மெச்சினாள் .
“நன்றி “
மேலும் வெளிப்படையாகப் பேசும் தோழி கிடைத்ததில் மகிழ்ந்து போனாள் .
மொத்தத்தில் முதல் நாள் அனுபவம் ரஞ்சனிக்கு நன்றாகவே அமைந்தது .