Advertisement

                 அத்தியாயம்…1

 

           “மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா     
                        நாடு கலங்குதப்பா      
             நாட்டு மக்க தவிக்கிதப்பா     
                         நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா     
              நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா     
     
            ரோசாப்பூ மாலப்போட்டு       
                    ராசா நீ அமர்ந்திருக்க     
             அத்தருமை மணக்குதப்பா      
                      பன்னிரு வாடையப்பா     
               ஏ அங்கம் மணக்கும் ராசா     
                   இந்த ஊரக்காக்கும் ராசா          
               ஏ அங்கம் மணக்கும் ராசா     
                      இந்த ஊரக்காக்கும் ராசா     
     
               பார்த்தாலே பச்சமுகம்…… ம்……     
                     பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்          
              பச்ச முகத்தழகா என் ராசா      
                      பச்ச முகத்தழகா என் ராசா     
             நீங்க பரலோகம் எங்கள விட்டு பரலோகம்     
                       ராசா பரலோகம் போனியப்பா என் ராசா     
             நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா”

 

“ யேய்… ம்ம்ம்….. நல்லா ஆடுங்க…” கதிரேசன் அந்த கரகாட்ட பெண்களோடு தானும் ஆட நம் கதையின் நாயகன் துரைசிங்கம் அந்த கரகாட்டக்கார பெண்களுக்கு தன்னுடைய பையிலிருந்து பணத்தை எடுத்தவன் அப்படியே அவர்களிடம் எண்ணாமல் கொடுத்துவிட்டு தானும் கூட சேர்ந்து ஆடினான்…இருவரும் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு ஆடிக்கொண்டிருக்க…. கதிரேசனும் தன் பங்குக்கு அவன் பையிலிருந்து எல்லாக்காசையும் எடுத்துக் கொடுத்தான்…. அந்த பெண்களுக்கு சந்தோசம் தாங்கவில்லை….

 

மேளம் அடித்துக் கொண்டிருந்த மற்ற ஆண்களோ….” என்னடா கோவில் திருவிழாவுல இந்த பாட்டுக்கு கரகாட்டம் ஆடச்சொல்லுறானுகளேன்னு பார்த்தேன்…. பரவால்ல  குடிகார பயலுக காசாச்சும் குடுத்தானுகளே….??”

கதிரேசன்…. “எவண்டா எங்கள பார்த்து குடிகாரன்னு சொன்னது…. யோவ் பெரிசு நீயா…??”கூட்டத்தில் நின்று கொண்டிருந்த வயதான பெரியவரை பார்த்து கேட்க….

 

“அட… ஏப்பா நீ வேற நானே கிளவியோட சண்டை போட்டுட்டு… அவ கஞ்சி ஊத்தமாட்டாங்கிறாளே… என்ன பண்ணுறதுன்னு தெரியாம இப்பத்தான் இங்கன வந்தேன் என்கூட ஏழரைய இழுக்குற…..??”

 

தடுமாறியபடி வந்த நம்ம துரைசிங்கம்… அவரை கட்டிப்பிடித்து…” டேய் மாப்புள்ள…. இவரா இருக்காதுடா…. வேற எவனோ…. டேய் யார்டா …??’அவன் இவர்கள் இருவரும் கூட்டத்தை நோக்கி சலம்பல் பண்ண… துரைசிங்கத்தையும் கதிரேசனையும் பார்த்தவர்கள் இவனுக பண்ணுறது ரொம்ப ஓவர்தான் நாம ஏதாச்சும் சொன்னோம்னா இவனுக நம்மள புடிச்சுக்குவானுகளே மெல்ல கூட்டத்தை விட்டு கலைய ஆரம்பித்தார்கள்…. இவன்கள் இருவரும் பண்ணும் கூத்தை அங்கு ஒரு செல்போன் கேமராவில் பதிவு பண்ண…..

 

இருவரும் துரைசிங்கத்தின் புல்லட்டில் வீட்டிற்கு வர இரவு மணி 10 இருக்கும்…. ஊரின் எல்லைக்கு வரும் முன்பே நன்றாக முகத்தை கழுவியவர்கள் தங்கள் சட்டை பையில் இருந்த திருநீறை எடுத்து பட்டை அடித்துக் கொண்டு ஏற்கனவே பறித்து வைத்திருந்த கொய்யா இலைகளை வாயிற்குள் போட்டு மென்று….

 

 

“டேய் மாப்புள்ள வாசனை வருதான்னு பாரு??” என மாறி மாறி ஊதியவர்கள்… ஒன்றும் தெரியாதவர்கள் போல முகத்தை வைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வர… வீட்டின் வாசலில் துரைசிங்கத்தின் தாய் மீனாட்சியும் அவள் தம்பி மனைவியும் கதிரேசனின் தாயுமான வசந்தாவும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள்….

துரைசிங்கத்தை பார்க்கவும் எழுந்த வசந்தா “வாங்க மாப்புள்ள….டேய் கதிரு சாமி கும்பிட்டிங்களா…??”

 

“கும்பிட்டோம்மா…”பவ்வியமாக. தன் பையிலிருந்த திருநீற்றை எடுத்து தன் தாய்க்கும் அத்தைக்கும் கொடுக்க…..

 

மீனாட்சி…..” ஏண்டா மத்தியானம் போனிங்க…. ஒரு கரண்ட் பில்லுக்கும் அரியருக்கு பணம் கட்டிட்டு சாமிகும்பிட்டுட்டு வர இம்புட்டு நேரமா…..??”

 

அப்போதுதான் இருவருக்கும் நியாபகத்திற்கு வந்தது…. கரெண்ட் பில்லுக்கும் அரியருக்கு கட்ட கொடுத்த பணத்தையும்தான் தாங்கள் கரகாட்டகார பெண்ணிற்கு கொடுத்தது….என்ன சொல்வது என்று இருவரும் யோசிக்க….

 

“என்னடா கேக்குறேன்…ரெண்டு பேரும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்…??”

 

“எல்லாத்துக்கும் காரணம் உங்க தம்பி மகன்தான்??” கதிரை கைகாட்ட….. அடப்பாவி என்று முழித்து பார்த்தவனை நோக்கி கண்ணடித்தவன்…

 

“நீங்க குடுத்த பணத்தையும்… இவன்கிட்டதாம்மா குடுத்து இவனோட அரியர் பணத்தோட வைக்கச் சொன்னேன்… நாங்க போற வழியிலயே… இவனோட பர்ஸ் எங்கயோ விழுந்திருச்சும்மா…. அதத்தேடத்தான் இம்புட்டு நேரம்… கடைசி வரைக்கும் பர்ஸ்ஸ கண்டுபிடிக்க முடியலம்மா….??” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல….

 

“இவன்கிட்ட ஏன் மாப்புள்ள  பணத்தை குடுத்திங்க… வெளங்காதவன்…. போச்சா… இன்னைக்குத்தான் கடைசிநாளுன்னு சொன்ன இப்ப இந்த தடவையும் பரிட்சை எழுத முடியாம போச்சா…இனி என்ன பண்ணுறது… வரும்போதே நினைச்சேன் மாப்புள்ள,…… என்னடா உங்க முகம் சோர்ந்து போயிருக்கேன்னு… பாவம் எம்புட்டு அலைஞ்சிங்களோ…சரி பணம் போனா போகுது… வாங்க…. அத்தை நாட்டுக்கோழி அடிச்சு குழம்பு வச்சு கொண்டு வந்திருக்கேன்.ரெண்டு பேரும்..சாப்புடுங்க..??” .கதிரேசன் துரைசிங்கத்திற்கு ஹை-பை கொடுத்தபடி கைகால் முகம் கழுவி வந்து சாப்பாட்டை எடுத்து வாயில் வைக்க போக…..

 

“அத்தே….” என்று ஓடிவந்தாள் முத்தமிழ்…கதிரேசனின் தங்கை…. சாப்பிட  உட்கார்ந்தவர்களை பார்த்தவள்…” உங்க ரெண்டு பேருக்கும் வெக்கமே இல்லையா..ஒன்னுமே தெரியாதவங்க மாதிரி நெத்தியில பட்டைய போட்டு உட்கார்ந்தா நான் நம்பிருவனா…..??” இவள் அவர்கள் இருவரையும் பார்த்து கத்த…

 

“ஏய் வாய மூடுடி…. மாப்புள்ள  உன்னைய கட்டிக்க போறவரு… இவன் உன் அண்ணன்… நாளைக்கு உம்புள்ளைகளுக்கு இவன் மடியில வச்சுத்தான் காது குத்தனும்…ரெண்டு பேர்கிட்டயும் மரியாதையா பேசு….ஒழுங்கா மச்சான்னு சொல்லு…??”

 

“இந்த மச்சான் மாப்புள்ள ஒன்னும் எனக்கு தேவையே இல்லை…. இவனெல்லாம் ஒரு அண்ணனா கரகாட்டாகாரி சட்டையில போய் காச குத்திவிட்டு ஆடிக்கிட்டு இருக்கான்…??” இருவரையும் பார்த்து பொரிந்தவள்..

.தன் தாயிடமும் அத்தையிடமும் திரும்பி…..” ரெண்டு பேரும்  இத பாருங்க அப்ப தெரியும் இவுக ரெண்டு பேரோட வண்டவாளமும்…. என்னமோ எம்புள்ளைக ரெண்டும் தங்க கம்பிக… ஊர்பயலுகளுக்குத்தான் இவுக மேல காண்டுன்னு சொல்லுவிங்க….??” தன் செல்போனை அவர்கள் இருவரிடமும் காட்ட….. அதில் அவர்கள் அந்த கரகாட்டகார பெண்களோடு ஆடியது… அவர்களுக்கு பணம் கொடுத்தது என அனைத்தும் பதிவாகி இருந்தது….

 

“டேய் மாப்புள்ள இந்த குட்டி குரங்கு போகும்போதே எனக்கு கொஞ்சம் காசு குடுடா நான் படம்பாக்க போகனும்னு கேட்டுச்சு… தரலைனு சொல்லவும் ஏதோ பண்ணி நம்மள மாட்டி வச்சிருச்சேடா….??”

 

இரண்டு பேரையும் பார்த்தவள்…போனை அத்தையிடம் கொடுத்துவிட்டு வந்து “நல்லா மாட்டுனிங்களா…பக்கத்தூரு திருவிழாவுக்கு என்னையும்  கூட்டிட்டு போங்க… என் பிரண்ட்ஸ் எல்லாம் வந்திருப்பாங்கன்னு எவ்வளவு கெஞ்சினேன்.. மச்சான் நீங்க என்னை மண்டையில கொட்டி வேணாமுன்னு சொன்னிங்க… சரி அப்ப படத்துக்காச்சும் போறேன்னு இவன்கிட்ட காசு கேட்டா தரமாட்டேன்னு சொன்னான்ல இருக்கு இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் நீங்க திட்டுவாங்குறத நான் கண்ணால பாக்கனும் என்பிரண்ட் அங்க நீங்க பண்ணுன அலப்பறை எல்லாம் அப்பப்ப வீடியோவுல எனக்கு அனுப்பி வைச்சிட்டால்ல……??”

 

“கவுண்டவுண் ஸ்டார்ட்….திட்டு ஆரம்பிக்க போகுது மச்சான்….. அத்தே என்ன பேசாம இருக்கிங்க…??”  தன் அத்தையை தூண்டிவிட அந்த வீடியோவை பார்த்துவிட்டு கோபமாக திரும்பிய இருவரும் பேச ஆரம்பிப்பதற்குள்….

 

துரைசிங்கம் முந்திக்கொண்டு தன் அத்தையை பார்த்து…” இதுக்குத்தான் அத்தை நான் அப்பவே சொன்னேன் இவள கம்பியூட்டர் படிப்பை படிக்க வைக்க வேண்டாம் பிஏ தமிழ் எடுத்து படிக்க வைங்கன்னு… இப்ப பார்த்திங்களா இவ படிச்ச படிப்பை வைச்சு கம்யூட்டர் கிராபிக்ஸ் செஞ்சு வேற யாரோ ரெண்டு பேர் ஆடுறத எங்களமாதிரி மாத்தி வச்சிருக்கா,,,,.. எங்கள பார்த்தா அந்த கரகாட்டக்காரிகளோட ஆடுனவங்க மாதிரியா இருக்கு.. இன்னைக்கு பூராவும் நாங்க காச தொலைச்சிட்டு தேடி அலைஞ்சிட்டு வாரோம் எங்கள போய் இவ சொல்றத கேட்டு சந்தேகப்படுறிங்களா…??”

 

கதிரேசன் சந்தோசத்துடன்…” ஏம்மா பொம்பள புள்ளைய இப்படியா வளர்ப்ப கொஞ்சம்கூட பொறுப்பில்லாம… நாங்க காலையில இருந்து அலைஞ்சிட்டு வந்ததென்ன… எங்கள சாப்பிடக்கூட விடாம இவ பேச்ச கேட்டுக்கிட்டு எங்களையே திட்ட வருவியா… அத்த அதுக்கு நீயும் துணையா??”

 

வசந்தா…” ஏண்டா கதிரு இப்புடி கூடவாடா… வேற முகத்தை மாத்த முடியும்…??”.வசந்தா ஆச்சர்யமாக கன்னத்தில் கைவைத்து கேட்க…

 

“வாம்மா வேணும்னா அந்த மாதிரி உன்னைய ஆடவைக்கிறேன்.. அவள கண்டிப்பியா இப்ப போய் கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க… எங்களுக்கு பசிக்கிது இப்ப நாங்க சாப்பிடவா வேண்டாமா…??”

 

“எங்க அவ…??”  அதற்குள் பரணியில் ஏறியிருந்தவளை பார்த்தவள்…

“ யேய் மரியாதையா இறங்கி வாடி… எவ்வளவு திமிரு இருந்தா ஒன்னும் தெரியாத புள்ளைக மேல இப்படியெல்லாம் பழிய போடுவ.. மரியாதையா இறங்கி வா..??”

 

“ம்மா…. அவங்க ரெண்டு பேரும் நல்லா பொய் சொல்றாங்க… குரங்குகளா.. இருங்க நாளைக்கு வச்சிக்குறேன்.. உங்கள.. இப்புடி ஏமாந்தவங்களா இருக்கிங்க நீயும் அத்தையும்… பிராடுக சொல்றத அப்படியே நம்புறிங்க… பெத்த மக என்மேல  நம்பிக்கை இல்லையில்லை..ச்சே நான் போய் வேற வீட்ல பொண்ணா பிறந்திருக்கலாம்… இவனெல்லாம் ஒரு அண்ணன் இவன்கூட வந்து பொறக்க வச்சிட்டியே ஆண்டவா….??” எப்பவும் சண்டை வந்தால் அங்கு படுத்து தூங்க ஒரு தலைகாணி பாய் வைத்திருப்பாள்… இப்ப கீழ போன அம்மாக்கூட நம்மள விட்டுருவாங்க.. இந்த ரெண்டு பிசாசுகளும் விடாதுக பேசாம இங்கயே தூங்கிருவோம்.. படுக்க போக…

 

வசந்தா..” ஏய் நம்ம வீட்டுக்கு போய் படுடி…?”

 

மீனாட்சி” விடு வசந்தா தூங்கிட்டு போறா…??”

“இல்ல அத்தாச்சி உங்க தம்பியும் அத்தையும் மட்டும்தான் வீட்ல இருக்காங்க எல்லாரும் இங்க இருக்கோம்… இவ வீட்டுக்கு போய் சாப்பாடு போடட்டும் யேய் போடி…??”

 

“யாருக்கு சாப்பாடு போட…??” முத்துராமன் உள்ளே நுழைய…

“வாடா தம்பி.. உனக்கு சாப்பாடு போடத்தான்…??”

 

“ஆமாக்கா நீங்க எல்லாரும் இங்க ஒன்னா சாப்புடுவிங்க நான் மட்டும் ஒத்தயில சாப்பிடனுமா அதான் வந்துட்டேன்…??”

 

“வாங்க மாமா… வாங்க சாப்பிட அப்ப அம்மாச்சி…??”

கைகழுவி வந்தவர்…” யேய் மாப்புள்ளைக்கு இன்னும் கறிய அள்ளிப்போடுடி. அம்மாச்சிக்கு பசியில்லையாம் வேண்டாம்னு சொல்லிருச்சுப்பா…??”.தானும் சாப்பிட அமர..

அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்த துரைசிங்கமும் கதிரேசனும் …” அம்மா நாங்க தோட்டத்து வீட்டுக்கு போறோம் படுக்க..??”. வெளியில் செல்ல

 

“சரி பாத்து போங்கடா….??” அவர்களின் ராஜ்ஜியம் அந்த தோப்பு வீட்டில்தான்… கம்பீரமாக செல்லும் தன் மகன் துரைசிங்கத்தை பார்க்க…ஆறடி உயரம் அதற்கேற்ற உடல்வாகு… சற்று மாநிறம் இந்த காலத்து இளைஞர்களுக்கே உரிய துறுதுறுப்பு…  .27 வயது இளைஞன் எம்.காம் வரை படித்துவிட்டு தன் தாயின் ஆசைக்காக கவர்மெண்ட் வேலைக்கு தயார்படுத்தி கொண்டிருப்பவன்.. அவனுக்கு இரண்டு வயதாக இருக்கும் போது அவன் தந்தை மஞ்சள்காமாலையால் இறந்திருக்க தன் புகுந்த வீட்டின் ஆதரவு இல்லாமல்… அங்கு தனக்கென்று இருந்த சொத்துகளை குத்தகைக்கு விட்டுவிட்டு தன் பிறந்த வீட்டிற்கே வந்தவரை அவரின் உடன் பிறப்புகள்..அவருடைய சொத்தை பிரித்து கொடுத்து தங்கள் வீட்டிற்கு அருகிலேயே வீட்டையும் கட்டிக் கொடுத்தனர்…

 

வந்த நாளில் இருந்து கதிரும் இவனும் ஒன்றாகத்தான் சுத்துவார்கள்… முத்தமிழ் அவனுக்கு ஏழு வயது இளையவள்.. சிறுவயதில இருந்து அவர்களுடனே சுத்துவாள்.. பெரிய பெண்ணாக வந்த பின்தான் இவளே வேண்டாம் என கழட்டி விட்டு அவர்கள் செல்ல அதுவே அவர்களின் தினப்படி சண்டைக்கு காரணமாக இருந்தது.. குத்தகை பணம் ஊரிலிருந்து வருவதாலும் இங்கு மீனாட்சியே விவசாயம் பார்த்து சொத்து சேர்த்து வைத்திருந்தார்..தன் மகனை எப்படியாவது ஒரு பேங்க் உத்தியோகத்தில் சேர்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை.. துரைசிங்கத்திற்கு இந்த ஆசை இல்லை.. அவனுக்கு இந்த ஊரே பிடித்திருந்தது வேலைக்காக வெளியூர் செல்வது பிடிக்கவில்லை இருந்தாலும் தன் தாய் மேல் மிகுந்த அன்புடையவன்…. அவன் எவ்வளவுதான் சேட்டை செய்தாலும் தன்தாய் ஒன்றை சொல்லிவிட்டால் தட்டாமல் கேட்பான்…

 

மீனாட்சி வெள்ளந்தி மனம் படைத்தவர்… தன் கணவருக்கு பிறகு தனக்கென்று இருக்கும் மகன்மீது உயிரையே வைத்திருந்தார்…. ஆயிரம் பேர் அவனை குறைசொன்னாலும் தன் மகனை விட்டுக் கொடுக்காமல் இருப்பார்.. அந்த தோப்புவீடு இவர்களுக்கு சொந்தமானதுதான்… பெரியவனான பிறகு துரையும் கதிரும் பாதி நேரம் அங்குதான் நேரத்தை போக்குவார்கள்… அது பெரிய மாந்தோப்பு…ஒரு ஓரத்தில் வாழை பயிரிட்டிருந்தான்…. தென்னை மரங்கள் ஒரு 50 மரங்கள் நிற்கும் மீதி இடங்கள் புல்மண்டி போய் கிடந்தது பெரிய கிணறு… மோட்டார் வைத்து செடிகளுக்கு பாய்வதால் எப்போதும் பச்சை பசேலென்று இருக்கும்… வயலில் வேலை நேரம் போக பாதிநேரம் தோப்பில்தான் அவனுக்கு வேலையிருக்கும்…

 

துரையும் கதிரும் தோப்பு வீட்டிற்குள் நுழைந்தவர்கள்… கதவை திறந்தபடி கதிர்.”.நல்ல வேளைடா எங்கப்பா சாப்பிட வரும்போது நாம சாப்பிட்டு முடிச்சிருந்தோம்….. இல்ல பேச்சுக்குடுத்தே இன்னைக்கு நடந்தத நம்மகிட்ட போட்டு வாங்கிருப்பார்….. இருந்தாலும் நாம இன்னைக்கு பண்ணுனது கொஞ்சம் ஓவர்தாண்டா… மொத்தமா பதினைஞ்சாயிரத்தை தூக்கி குடுத்திருக்கோம்….??”

 

“ஆமாண்டா கரெண்ட் பில்லுக்கு குடுத்த பணத்தோட வாழைத்தார் வித்த காசு ஒரு அஞ்சாயிரம் வச்சிருந்தேன்… அதுவும் போச்சுடா…??”

 

அங்கு மதுரையில் ஒரு இடத்தில் அட்டைப்பெட்டி அட்டைபெட்டி போல ஐந்து வீடுகள்… பத்துக்கு பத்து ரூமில்தான் அனைத்து பொருட்களும் இருந்தன… கட்டிலில் ஒரு உருவம் படுத்திருக்க அவளை சுற்றி மூன்று பெண்களும் அழுது கொண்டிருந்தனர்…. அந்த பெண்களின் தாய் தன் கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தார்… மூத்தவள் கனிமொழி… அடுத்த இருவரும் இரட்டையர்கள் ரம்யா… ஹரிணி… இவர்களுக்கு தகப்பன் இல்லை… மூத்தவள் பிறந்து அடுத்த பிள்ளைகள் நிறைமாதமாக இருந்தபோது ஒரு வாகன விபத்தில் இறந்து விட்டார்… அடுத்து இரண்டும் பெண்பிள்ளைகள்… ஏதோ கிராமத்தில் அவர்களுடைய தாத்தா அனுப்பிய அரிசி …. கொஞ்சம் பணத்தோடு இவர்களின் தாய் தையல் இயந்திரத்தோடு போராடி இத்தனை வருடங்கள் வளர்த்தவர்… இந்த ஆறு மாதத்தில் பிளட்கான்சரில் சாவின் விளிம்பிற்கு வந்திருந்தார்…..வெளியே தெரியாமல் அவள் உள்ளேயே இருந்த நோய் சாகும் தருவாயில் தெரிய இந்த மூன்று பெண்களும் நிலைகுலைந்து போயிருந்தனர்… மூத்தவள் காலேஜ்ஜில் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்க தங்கைகள் இருவரும் ஒன்பதாம் வகுப்பில் இருந்தனர்

 

வாழ்க்கையில் வறுமையை கொடுத்திருந்த கடவுள் அழகை இவர்கள் மூவருக்கும் அள்ளி அள்ளி கொடுத்திருந்தார்…தங்கள் தாயிற்கு பிறகு மூவருக்கும் எதிர்காலமே பூதாகாரமாக கண்ணுக்கு தெரிந்தது… அவர்கள் வீட்டின் உரிமையாளர் ஆறு மாதமாக வாடகை வாங்காமல் அவர்களை குடியிருக்கச் சொல்ல…. தன் தாயும் தங்கைகள் போட்டிருந்த தோடு கொலுசு என ஒவ்வொன்றாக விற்று அவர்களின் பொழுது போய் கொண்டிருக்க… இப்போது அவர்களின் தாய்க்கு கடைசி நிமிடங்கள்…… மெதுவாக கண்விழித்தவர்… பேச முடியாமல் சைகையால் தன் மூத்த மகளை அழைத்து ஒரு பெட்டியை காட்டி அதை எடுத்து வரச் செய்தவர்…

 

அதிலிருந்த டைரியை எடுத்து … “நா…நான் செத்தா இதுல கடைசிபக்கத்துல ஒருத்தரோட விலாசம் இருக்கு அவங்களுக்கு தகவல் சொல்லிரும்மா…. அவுக உனக்கு ஏதாச்சும் உதவுவாக… ஒரு சிறு பையை கொடுத்தவர்….உங்க அப்பா நியாபகமா நான் வைச்சிருக்குறது இது ஒன்னுதாண்டா… இதமட்டும் பத்திரமா வச்சிக்க..??” அவர் மகளின் கையில் கொடுத்தவர் ஒரு பச்ச மண் தலையில இவ்வளவு பாரத்தை வச்சிட்டு போறமே..இதுக எப்புடி இந்த உலகத்துல வாழப்போகுதுக… கடவுளே எப்படியாச்சும் இந்த மூனு உயிரையும் பார்த்துக்கடா…..கையை தன் மகள் கைமேல் வைத்தபடி உயிர் பிரிந்தது…..

 

மூன்று பெண்களுக்குமே உலகமே இருண்டது போல இருந்தது…… அடுத்து என்ன…யோசிக்க முடியவில்லை… இவர்கள் கத்திய கத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து கூட…..மூவரும் தன்தாயின் உடலைபிடித்துக் கொண்டு கதறியது பார்ப்பவர்கள் அனைவரையும் துன்பத்தில் தள்ளியது.. கனிமொழிக்கு எதுவுமே புரியவில்லை…தன்னால் தங்கைகளை பார்த்துக் கொள்ள முடியுமா…. தன்னைவிட நான்கு வயது சிறியவர்கள் தானாவது தந்தையை சிறுவயதில் பார்த்த நியாபகம் மங்கலாக ஏதோ ஒரு உருவம் தெரிந்தது… தன் தங்கைகளுக்கு அந்த பாக்கியம்கூட இல்லை… இப்போது தாயும் இல்லாமல்… அனாதையாக மூனு பேரும் நிற்கிறோமே

 

சிறிதுநேரம் கழித்து…பக்கத்து வீட்டில் இருந்தவர்…” கனி பணம் இருந்தா குடுக்குறியாம்மா.. உங்க அம்மாவ நல்லடக்கம் செய்ய. எல்லா ஏற்பாடும் செய்யனும்…..செலவுக்கு வேணும்…??”

 

“எவ்வளவுண்ணா வேணும்….??”

 

“ஒரு பதினைஞ்சாயிரமாச்சும் வேணும்மா…??”

அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்… பதினைஞ்சாயிரமா….. பத்து ரூபாய்கூட இல்லையே….

 

                                                                                 இனி………….????

 

Advertisement