Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம்  –  9
 
அரவிந்தும் தமிழும் வருவதை பார்த்த துரை அவர்கள் அருகில் கோபமாக வந்தவன் தமிழை பார்த்து முறைக்க அப்போது அரவிந்திற்கு போன் வரவும் அவன் துரைக்கு கைகாட்டியபடி அந்த போனை எடுத்து சற்று தள்ளிச் சென்று பேச ஆரம்பித்தான்….
 
“என்ன தமிழ்… இது என்ன பழக்கம் எத்தனை தரம் நாம வெளியில வந்திருக்கோம்…ஒன்னு என்னோட வரணும்….. இல்ல கதிரோட வரணும்ன்னு தெரியாதா… இன்னைக்கு என்ன புதுசு புசுசா என்னன்னமோ பண்ணுற… இவன் யாரு நேத்து வந்தவனோட உனக்கு என்ன பேச்சு….??” கோபத்தில் பல்லை கடிக்க…
 
உள்ளுக்குள் நடுங்கியவள்…”.இல்ல மச்சான் ஒரு இடத்துல கூட்டம் ரொம்ப வரவும் உங்களயெல்லாம் தவற விட்டுட்டேன்.. அதான் மச்சான் அவங்கள பார்க்கவும் அவங்களோட வந்தேன்…??”
 
“இது ஒன்னும் நகரம் இல்லை தமிழ்… யாரும் யாரோட போனாலும் கண்டுக்காம போறதுக்கு….கிராமம்… யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா கண்ணு…மூக்கு வச்சு பேச ஆரம்பிச்சிருவாங்க… நீ இன்னும் சின்ன புள்ள இல்ல..புரிஞ்சு நடந்துக்க… மாமாவ இங்கன எல்லாருக்கும் தெரியும் அவுக கவுரவத்துக்கு எந்த குறைச்சலும் வரவிடாம நடந்துக்க…புரியுதா…??”
 
“ஸாரி மச்சான்…??”
 
“போ..போய் அவங்களோட சேர்ந்து நில்லு…இன்னும் கதிர காணோம் உன்னை தேடி எந்த பக்கம் போயிருக்கான்னு தெரியல..??”. போனை எடுத்து கதிருக்கு முயற்சி செய்து கொண்டிருக்க அரவிந்த் போன் பேசினாலும் தன் கவனத்தை இவர்கள் பக்கம்தான் வைத்திருந்தான்… துரை ஏதோ திட்டுவதும் அதற்கு தமிழ் பயந்து போய் பதில் சொல்வதையும் பார்த்தான்…..
 
தமிழுக்கு தெரியும் தன் அண்ணனை பற்றியும் துரையை பற்றியும் இவள் சேட்டைகள்… குறும்புகள்…..எல்லாம் வீட்டில் மட்டும்தான் வெளியிடங்களில் போறதும் தெரியக்கூடாது வாரதும் தெரியக்கூடாது என்பது தன் தந்தையின் எழுதப்படாத சட்டம்… அதை மீறி இன்று அரவிந்தோடு அரட்டை அடித்தபடி வந்தது தன் தவறுதான் என்பதை உணர்ந்தவள் அமைதியாகி கனியோடு போய் நின்று கொண்டாள்..கனியும் துரை கோபமாக ஏதோ சொல்வதை பார்த்தவள் பாவம் என்ன சொல்லி திட்டினாங்கன்னு தெரியலையே என நினைத்தவள் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள்…
 
. ராட்டிணத்தை பார்க்கவும் ரம்யாவும் ஹரிணியும் கண்டிப்பாக ஏறலாம் என குதிக்க…கனி வர மறுத்துவிட்டாள்…
 
“சும்மாவே எனக்கு தலை சுத்துர மாதிரி இருக்கு நீங்க வேணா அக்காவோட போய்ட்டு வாங்க…??”
 
. இன்னும் அரவிந்த் போன் பேசி முடிக்காமல் இருக்க துரையோ கதிருக்கு போனில் சொல்லிவிட்டு வந்தவன் தமிழோடு ஹரிணியையும் ரம்யாவையும் ராட்டிணத்தில் ஏறச் சொன்னான்… அது நீளமான பெஞ்ச் போல இருக்க முதலில் ரம்யாவும் ஹரிணியும் ஏற அடுத்து தமிழ் ஏறியிருந்தாள் அடுத்து ஒருவர் மட்டும் அமரும் அளவு இடமிருந்தது…
 
“உனக்கு இன்னும் மயக்கம் வருதா??” எனக் கேட்டவனிடம் …
 
“இல்ல இப்ப பரவாயில்லை…??”கனிக்கு குழப்பமாக இருந்தது …துரை கொடுத்த கொலுசை நினைத்து……. மற்றவர்கள் எல்லாம் தன் பிறந்தநாள் பரிசை எல்லார் முன்னிலையிலும் கொடுத்திருக்க இவன் தனியாக கொடுத்ததால் இதை தன் தங்கைகள் பார்த்தால் ஏதாவது நினைத்து கொள்வார்கள்…இந்த கொலுச நாம வாங்கிக்கிட்டா அது ரொம்ப தப்பாயிடும்…இது என்னமோ திருட்டுத்தனம் மாதிரி இருக்கு… இவங்க குடுக்கிறதா இருந்தா அங்க எல்லார் முன்னாடியும் கொடுத்திருக்கனும் அத விட்டுட்டு இப்ப போய் நாம இத வாங்கினா…….
 
அக்கா நாம அவங்களுக்கு ஒழுக்கத்தில் முன்னுதாரணமா இருக்கனும் என்று நினைத்துதான் தங்கைகள் வருவதற்குள் அதை தன் கைப்பையில் போட்டு வைத்திருந்தாள்…. இதை அணிந்தால் யாராவது கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்… மீனாட்சி அத்தையே நம்மள பத்தி என்ன நினைப்பாங்க….இந்த கொலுசு எப்படி பார்த்தாலும் 5000 ரூபாயாச்சும் இருக்கும்…இவ்வளவு காசு போட்டு நமக்கு எதுக்கு இவங்க பரிசு கொடுக்கனும்…. அந்த அட்வான்ஸ் எவ்வளவுன்னு கேட்டு அதையும் அவங்ககிட்ட குடுத்திரனும்…. இப்ப நல்ல மூடுல இருக்கும் போது கொடுத்திட்டு அப்புறமா அன்னைக்கு மாதிரி பேசினாலும் பேசுவாங்க… காசுனால இவங்களோட பிரச்சனை வரவேக்கூடாது நமக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்காங்க.. மறுபடி மறுபடி செலவு வைக்கக்கூடாது என நினைத்தவள் கொலுசை எப்படி கொடுக்க வேண்டும் என மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டாள்…
 
“அக்கா …”என தங்கைகளின் உற்சாகக்குரல் கேட்டு ராட்டினத்தை பார்த்தவள் அப்போதுதான் பார்த்தாள் தமிழுக்கு அருகில் அரவிந்த் உட்கார்ந்திருப்பதை… மெதுவாக துரையை பார்க்க அவன் பல்லை கடித்துக் கொண்டு இருந்தான்.. போச்சு அரவிந்தோட வந்ததுக்கு தானே இவங்க முதல்ல சத்தம் போட்டாங்க மறுபடியும் இவங்க ஏன் அவங்க பக்கத்துல உட்கார்ந்திருக்காங்க…துரை பேசியது கேட்காவிட்டாலும் இதற்காகத்தான் பேசியிருப்பானோ என்ற ஊகம் கனிக்கு இருந்தது… இப்போது இவன் கோப முகத்தை பார்க்கும் போது தமிழை நினைத்து பாவமாக இருக்க….
 
தமிழுக்கும் அங்கு பயமாகத்தான் இருந்தது… ராட்டினம் சுற்றப்போகும் கடைசி நேரத்தில்தான் அரவிந்த் ஏறியிருந்தான்…மெதுவாக துரையை பார்க்க அவன் கோபமுகம் தெரியவும் இவள் தலைகுனிந்து ஹரிணியிடம்
“நீ இந்த பக்கம் மாறி உட்கார்ந்துக்கிறியா??”
 
“ம்ம் சரிக்கா” இவள் எழப்போக ராட்டினம் கிளம்பவும் ஹரிணி அப்படியே அமர்ந்துவிட்டாள்….ராட்டினம் வேகமாக சுற்ற அனைவரும் உற்சாக குரல் கொடுக்க வேகம் அதிகமாக அதிகமாக பெண்கள் பயப்பட ஆரம்பித்தனர். .ரம்யாவும் ஹரிணியும் தங்கள் மடியிலேயே முகம் புதைக்க தமிழோ கண்ணை இறுக்க மூடி பயத்தில் பக்கத்தில் இருந்த அரவிந்தின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவளும் தன் மடியிலேயே முகத்தை புதைத்து கொள்ள…தன் கையை பிடித்திருந்த தமிழின் கையை கெட்டியாக பிடித்தவன் அதன் மென்மையை உணரத்துவங்கினான்… தமிழ் அரவிந்தின் கையை பிடித்தது கீழிருந்து பார்க்கும் போது தெரியவில்லை….
 
ராட்டினம் வேகமாக சுற்றி முடித்து நிற்கவும் அனைவரும் கீழே இறங்க அரவிந்தை பார்த்தவள் “என்ன இன்னும் இறங்காம உட்கார்ந்திருக்கிங்க…??”
 
“இறங்கலாம்னுதான் பார்க்கிறேன் நீ என்னோட கையை விட்டாத்தானே…??” அவள் கையை பார்த்தபடி சொல்ல…
 
அப்போதுதான் பார்த்தாள் தன் கை அவன் கையை இறுக பற்றியிருப்பதை ….தீ சுட்டாற்போல எடுத்தவள்..” இங்க ஏன் உட்கார்ந்திங்க… வேற இடம் கிடைக்கலையா….??”. கோபத்தில் பொரிய…
 
“நாம ரெண்டு பேரும் வரும்போது உன்கிட்ட துரை என்ன சொன்னாரு… கோபமா என்னவோ சொன்ன மாதிரி இருந்துச்சு…அத கேட்கத்தான் இங்க உட்கார்ந்தேன்..??”..இப்போதுதான் சுற்றுப்புறம் உரைக்க அனைவரும் இறங்குவதை பார்த்தவள் சட்டென எழுந்து ரம்யாவையும் ஹரிணியையும் அழைத்துக் கொண்டு மறு பாதையில் கீழே இறங்கினாள்…. அவளையே தீவிரமாக பார்த்த அரவிந்த் தானும் கீழே இறங்கி வர…..
 
இவர்கள் கீழே இறங்கி வரவும் கதிரும் அப்போதுதான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தவன்… தமிழை திட்ட ஆரம்பிக்க ஏற்கனவே ராட்டினத்தில் தன்னோடு அரவிந்த் வந்ததற்கு துரை என்ன சொல்வானோ என பயந்து போயிருந்தவள் கதிர் திட்டவும் அழவே ஆரம்பித்துவிட்டாள்…
 
தமிழ் அழவும் கனிக்கும் அரவிந்துக்கும் ரொம்ப சங்கடமாக இருந்தது… நம்மளாலதான் இந்த பொண்ணு திட்டுவாங்குதோ…. என அரவிந்தும்… பாவம் ரெண்டு பேரும் திட்டுனா அவங்க என்ன பண்ணுவாங்க என யோசித்த கனி சட்டென தன் பையிலிருந்த கொலுசை எடுத்தவள் தமிழிடம் கொடுத்து…
“ அக்கா… உங்க மச்சான் இத உங்களுக்காகத்தான் வாங்கினாங்க போல உங்கக்கிட்ட குடுக்க உங்கள தேடிப்பார்த்தாங்களா நீங்க இல்லைங்கவும் கொஞ்சம் கோபம் வந்திருச்சுக்கா..அண்ணாவும் பாவம் ரொம்ப நேரமா உங்கள தேடினாங்க போலக்கா அதான் ….. இதுக்கெல்லாம் அழாதிங்க அக்கா.??”
 
கொலுசை வாங்கி பார்த்த கதிர் தன் கோபத்தை மறந்து “டேய் மாப்புள்ள ரொம்ப சூப்பரா இருக்குடா… எப்ப வாங்கின.. எனக்கு தெரியாம நகை கடைக்கு போற அளவுக்கு வந்துட்டியா… ஆமா இவ கொலுசு அந்து போனது உனக்கு எப்புடிடா தெரியும்…??”
 
தமிழ் தன் அழுகையை நிறுத்தி கொலுசின் அழகில் மயங்கி” ரொம்ப நல்லாயிருக்கு மச்சான்..??”.சந்தோசத்துடன் தன் காலில் அணிய துரைக்கு கோபத்தில் கண்கள் ரத்தமென சிவந்தது…. அப்ப நாம வாங்கித் தந்தது இவளுக்கு பிடிக்கலையா…தனக்கு முகத்தில் அடித்தார் போல இருந்தது கனியின் செயல்…துரைக்கு….. கோபம் …. ஆங்காரம் … வெறுப்பு என எல்லாம் எழ வேகமாக வண்டியை நோக்கி சென்றிருந்தான்…..
 
அனைவரும் வீட்டிற்கு வர… வீட்டிற்குள் வரவுமே ஹரிணியும் ரம்யாவும் சாப்பாடு வேண்டாம் என சொல்லி படுக்க போய்விட்டனர்… துரை தன் கோபத்தை குறைக்க தோப்பு பக்கம் நடக்க ஆரம்பிக்க லேசான வெளிச்சம் இருந்தது…கனி காப்பி போட்டு அனைவருக்கும் கொடுத்தவள் துரையை காணாமல் அவனை தேடி தோப்பு பக்கம் சென்றவள் அவனை பார்க்கவும் காப்பித்தட்டை நீட்ட… வந்த கோபத்தில் தன் கையால் அந்த தட்டை தூக்கி வீசியவன் அவள் கையை பிடித்து தன் புறம் இழுக்க…. அந்த இறுக்கத்தில் கை வலித்தாலும் கனிக்கு பயத்தில் இதயம் படபடவென அடிக்க என்ன பேசுவது….எதற்கு இந்த கோபம் கைகாலெல்லாம் வெடவெடவென நடுங்கத் துவங்கியது……
 
அவளை முறைத்தவன்…கோபத்தில் கண்கள் சிவக்க…முகம் இறுக” உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா நான் உனக்கு வாங்கி கொடுத்த ஒரு பொருளை தமிழ்கிட்ட குடுப்ப… என்ன இப்ப இவன பார்க்கவும் நீங்க இருந்த இருப்பு மறந்து போச்சா …. நானும் எங்க அம்மாவும் மட்டும் இல்லைனா.. அன்னைக்கே உன் மானம் போயிருக்கும்… கஞ்சிக்கே வழியில்லாமத்தான் இங்க வந்திங்க அத மறந்திறாத…. பணக்காரன  பார்க்கவும் நான் வாங்கி கொடுத்த கொலுசு உனக்கு ரொம்ப மட்டமா போச்சா…என்கிட்ட ஒரு பொருள் வாங்கிக்கிட்டா அத கஷ்டப்பட்டு உழைச்சாவது கழிக்கனும் நினைக்கிறா…. அவன் வாங்கி கொடுத்தா வாய் பேசாம வாங்கிக்கிற… நான் அந்த அளவுக்கு கேவலமா போயிட்டனா..??” அவள் இடுப்பில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுக்க…
 
கனிக்கு பயத்தில் இப்ப அவன் அவன்னு இவங்க யாரச் சொல்லுராங்க… ஒரு வேளை அரவிந்தையோ…….. இல்லையே இன்னைக்கு எல்லாரும்தானே நமக்கு பரிசு கொடுத்தாங்க.. வேற யாரு… இவள் மூளைக்கு எதுவும் எட்டவில்லை..” எப்பவும் என்னோட நிலை எனக்கு தெரியும் நீங்க ஒன்னும் சொல்லிக்காட்ட வேண்டாம்… நாங்க கஞ்சிக்கு இல்லாமத்தான் இங்க வந்தோம்… அத நீங்க சொல்லனும்னு அவசியம் இல்ல 24 மணி நேரமும் அது எனக்கு நியாபகம் இருக்கு….. கண்ணில் கண்ணீர் ஊற்றினாலும் பேச்சு நிற்கவில்லை….. நிச்சயமா இந்த நிலை மாறிரும் நாங்க இனி உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோம்….நான் இங்க வந்தது உங்களுக்கு அப்ப இருந்து பிடிக்கலைதானே…. வேணும்னா அத்தைக்கிட்ட சொல்லிட்டு நாங்க வேற வீட்டுக்கு போயிரவா… நான் எப்பவும் அடுத்தவங்க பணத்துக்கு ஆசைப்படல..எங்க அம்மா எங்கள அப்படி வளர்க்கவும் இல்ல.??”கனிக்கு மனது கொதித்தது… இந்த வார்த்தை வந்துரும்னுதானே நாம மாடா உழைச்சோம்…. இப்ப வந்திருச்சே…..
 
துரைக்கு இன்னும் கோபம்தான் அதிகரித்தது…” ஏய் என்ன சொன்ன இந்த இடத்தை விட்டு போயிருவியா…ஓஓஓஓஓ……. அப்ப அவன் அந்த அளவுக்கு உனக்கு தைரியம் கொடுத்திருக்கானா….??”இவ நம்மளவிட்டு போறேன்னு சொல்லுறாளா…. வந்த கோபத்தில் தான் என்ன செய்யுறோம் என்ன பேசுறோம் என்றே துரைக்கு தெரியவில்லை….
 
 இவ என்னை விட்டு போயிருவாளா அவள் கன்னத்தை பிடித்து தன் பக்கம் இழுத்தவன் தன் கோபத்தை அவள் இதழில் காட்டத்துவங்கினான்….. அவள் இதழோடு தன் இதழை வைத்தவன் தன் வன்மையை காட்ட அவள் வயது அவனுக்கு தெரியவில்லை… அவள் மனம் புரியவில்லை…. நம்மளவிட்டு போகக்கூடாது… .இவ எப்படி இத சொல்லலாம்….இவ எனக்கு சொந்தமானவ யாருக்கும் நான் இவள விட்டு கொடுக்க மாட்டேன்… இவ வாழ்ந்தாலும் செத்தாலும் என்கூட மட்டும்தான் துரைக்குள் ஒரு முரட்டுத்தனம் புகுந்திருந்தது…
 
தன் மனதை கனிக்கு புரியவைக்காமல் தன் இதழால் தன் காதலை சொல்ல ஆரம்பித்தான்… அவனுக்கு தெரியவில்லை அந்த அளவுக்கு கனிக்கு மனப்பக்குவமும் இல்லை உடலும் அந்த அளவுக்கு இல்லை என்று…..  கனிக்கு மயக்கம் வருவது போல இருந்தது… ஏதோ ஒரு சுழலுக்குள் மாட்டியது போல இருக்க…… அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் அவளை விலக்கி தள்ளிவிட்டு தன் ஜீப்பை நோக்கி சென்றவன் வேகமாக வண்டியை கிளப்பியிருந்தான்….. கனி அவன்விட்ட இடத்திலேயே அப்படியே உறைந்து போய் விழுந்து கிடந்தாள்…….
 
வீட்டின் உள்ளே அரவிந்தும் கோபத்தில்தான் இருந்தான்…. தான் பேசப்போகும் போதெல்லாம் தமிழ் தன்னை தவிர்ப்பதை கண்டவன்… திருவிழா கடையில் தன்னோடு பேசி அரட்டை அடித்தவள்..பதிலுக்கு பதில் பேசியவள் இப்ப நாம பேச வந்தாலே கண்டுக்காம போறான்னா…. அப்ப அந்த துரைதான் என்னமோ சொல்லியிருக்கனும் அவன் சொன்னா இவ நம்மகூட பேசமாட்டாளா… வீட்டை நோட்டமிட அப்பத்தாவும் மீனாட்சியும் வெளியில் பேசிக் கொண்டிருக்க கதிர் கயிற்று கட்டிலில் படுத்து தூங்கியிருந்தான்.. ..ஹரிணியும் ரம்யாவும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க கனியை தேடியவன் அவளை காணாமல் தமிழ் தன் உடையை மாற்ற அறைக்குள் நுழைவதை பார்த்தவன் அவள் கதவடைப்பதற்குள் தானும் நுழைந்து கதவை தாழிட்டிருந்தான்…. கதவின் ஒலி கேட்டு திரும்பியவள் அரவிந்தை பார்க்கவும் பதறிப்போய்….
 
“ என்ன பண்ணுறிங்க…கதவை திறங்க??” அவனை தாண்டி கதவை திறக்க முயல….  அவள் கையை பிடித்து இழுத்தவன்
“ஏன் என்கிட்ட பேசாம இருக்க சொல்லு??” அவளை போட்டு உலுக்க
 
“உங்ககிட்ட பேச என்ன இருக்கு??”
 
“என்கிட்ட பேச ஒன்னுமே இல்லையா…. நீ பொய் சொல்லுற…. துரை உன்கிட்ட என்னமோ சொன்னான்…. அதனாலதான் நீ பேச மாட்டேன் சொல்லுற….??”
 
“ஆமா… ஆமா… அவங்களுக்கு நான் உங்ககூட பேசுறது பிடிக்கலை… இனிமே என்னோட பேசாதிங்க…??”
 
கோபத்தில் பல்லை கடித்தவன்…”அப்ப உங்க மச்சானும் அண்ணனும் சொன்னாத்தான் என்கிட்ட பேசுவியா… இல்லைனா பேச மாட்டியா .??”. அவளை இறுக்கி அணைத்தவன்” நீ என்கிட்ட பேசத்தான் அவங்ககிட்ட கேட்கனும்… நான் யாருக்கிட்டயும் கேட்கனும்னு அவசியம் இல்லை.. .இதப்போய் உங்க மச்சான்கிட்ட சொல்லு ??”அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அவள் கன்னத்தில் முத்தமிடவர….
 
 
அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள்” என்ன பண்ணுறிங்க… நீங்க வெளிநாட்டுல வேலை பார்த்தாலும் இங்கதானே பிறந்து வளர்ந்திங்க… இப்படி கல்யாணம் பண்ணாத ஒரு பொண்ணத் தொடக்கூடாதுன்னு தெரியும்தானே…. இதுனாலதான் எங்க மச்சான் உங்ககிட்ட பழகவேண்டாம்னு சொன்னாங்களோ…??” கோபத்தில் அவன் கன்னத்தில் அடிக்க வர….
 
எட்டி அவள் கையை பிடித்தவன்…” ஏய் என்னடி எப்ப பார்த்தாலும் மச்சான் மச்சான்னு சொல்லுற… என்ன என்னை பார்த்தா பொறுக்கி மாதிரி இருக்கா… இன்னைக்கும் என்ன லவ் பண்ண எத்தன பொண்ணுங்க காத்துக் கிடக்காங்கன்னு தெரியுமா… என்னமோ நீதான் பெரிய ரதிமாதிரி பில்டப் பண்ணுற…வழியக்க வந்து பேசுனா நான் உனக்கு சீப்பாயிட்டனா..போடி??” வாய்தான் போடி என்றதே தவிர கையோ அவளை இன்னும் இழுத்து அவளை இறுக்கி அணைத்தது…
 
தமிழுக்கு இவன் சொல்வது போல நினைப்பெல்லாம் இல்லை… இவன் மேல் நல்ல மதிப்பே வைத்திருந்தாள்… ஆனால் இவன் செயல்தான்…. அப்படி பேச வைத்திருந்தது… இவ்வளவு பேசியும் தன்னை அணைத்திருப்பதை பார்த்தவள் மேலும் கோபமாக பேச வர அவளை பேசவிடாமல் தடுத்திருந்தான்…கையால் இல்லை தன் இதழால்… அவள் கண்கள் அப்படியே அதிர்ச்சியில் விரிய…. மூச்சடைத்து நின்றவளை தன்னிடம் இருந்து விலக்கியவன்…
“ என்னை பொறுக்கின்னு நினைச்சில்ல…. அப்ப பொறுக்கி இப்படித்தான் நடந்துக்குவான்…??” அவன் மார்பில் தன் கையால் குத்தியவள்… அழுகையுடன்..
 
“போடா பொறுக்கி…??” கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்தாள்… வாசலுக்கு வர கதிர் எழுந்து உட்கார்ந்திருக்கவும் வேகமாக தன் கண்களை துடைத்தவள்…
“அண்ணா வீட்டுக்கு போவமா…??”
 
“ஏய் என்னடி ஆச்சு திடிருன்னு அண்ணான்னு கூப்பிடுற… நான் திருவிழாவுல திட்டுனதுக்கா…  அவளிடம் வந்தவன்… உன்னை ரொம்ப நேரம் காணோம்னு தேடினேனா அதாண்டி கோபத்துல திட்டிட்டேன்… அதுக்கு ஏன் முகத்தை ஒரு மாதிரி வைச்சிருக்க….  இனிமேல் திட்ட மாட்டேன்… சிரி….??”
 
இவளுக்கு கண்ணில் நீர் கரகரவென ஊற்றிற்று….
 
பதறியவன்…” ஏய் லூசு…. இதுக்கெல்லாமா அழுவ..அண்ணன்தானே திட்டினேன்.. இனிமே திட்டமாட்டேன்…. வா??” அப்போதுதான் அங்கு வந்த அரவிந்தை பார்த்தவள் வேகமாக தன் கண்ணைத்துடைத்து விட்டு தன் அண்ணனின் கையைபிடித்து இழுத்தபடி அவன் வண்டிக்கு அருகில் சென்றாள்…
 
கதிர் தன் தங்கையை அழைத்து கொண்டு செல்லவும் அரவிந்த் அந்த கட்டிலில் படுத்தான்… அப்போதுதான் உள்ளே வந்த கனியின் முகம் ரத்தபசையில்லாமல் வெளுத்து போயிருந்தது… துரையின் செயல்…. கோபம்… எல்லாம் நினைத்து பார்த்தவள் தங்களின் யாருமில்லா நிலையையும் நினைத்து அழுதாள்… அழுதாள் அன்று இரவு முழுதும் அழுதாள்…..
 
இரண்டு நாட்கள் கழித்து ஹரிணியும் ரம்யாவும் தமிழுக்கு போன் செய்து வரச் சொல்ல…:” ரெண்டு நாளா ஏக்கா நீங்க வராம இருக்கிங்க… நீங்க வராம நல்லாவே இல்லக்கா ப்ளிஸ்கா வாங்க…. வாங்க??”  அடம் பிடிக்க…..
 
கதிர் துரைக்கு போன் செய்து” மாப்புள்ள என்ன ரெண்டு நாளா தோப்பு பக்கம் ஆளக்காணோம்… தேங்காய் லோடு ஏத்த இன்னைக்கு லாரி வரும்னு இப்பத்தான் போன் பண்ணினாங்க.. உன்னோட ஒரு நம்பர் ஸ்விட்ச் ஆப்னு வருதாம்… எனக்கு கால்பண்ணி சொன்னாங்கடா… வரும்போது நம்ம தமிழையும் கூட்டிட்டு வா… என்னன்னு தெரியல ரெண்டு நாளா ஆள் ரொம்ப டல்லா இருக்கா… இன்னைக்கு லீவ்தானே… இங்க நல்லா பொழுது போகும்… என்னடா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன் நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்… வர்றியா??”
 
“ம்ம்ம்…”
 
“என்னடா இவ்வளவு பேசுறேன் ஒத்த வார்த்தையில பதில் சொல்லுற…. எல்லாரும் திருவிழாவுக்கு போயிட்டு வந்துட்டு நல்லாயில்ல… நம்ம கனிக்கு நல்ல காய்ச்சல்… நீயும் தமிழும் டல்லாகிட்டிங்க…??”.
 
கனிக்கு காய்ச்சல் என தெரியவும் துரை சட்டென கிளம்பியிருந்தான்… இருவரும் வர வீடே அமைதியாக இருந்தது..கனி உள்ளே படுத்திருக்க மற்ற எல்லாரும் தோப்பில் இருப்பதாக கதிர் சொன்னான்…. அரவிந்தின் காரை காணவில்லை…..
 
“என்னடா காரைக்காணோம்…??”
 
“காரா… ஓஓஓஓ…. அரவிந்த கேட்கிறியா… அவருக்கு என்னமோ முக்கியமான வேலையாம் நேத்தே கிளம்பிட்டாரு… ரெண்டு நாளுல  வேலைக்கு அவர் வெளிநாட்டுக்கு கிளம்புறாராம்டா… அவசரமா வரச் சொல்லி போன் வந்துருச்சு… நீ வருவன்னு பார்த்தார் நீ இந்த பக்கம் வரவே இல்லையா அதான் என்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டாருடா…??”
 
 கதிரின் பதிலில் தமிழ் அப்படியே அதிர்ச்சியாகி நிற்க துரையோ ஆனந்தமாக நின்றான்…..
 
                                         இனி……….??????.

Advertisement