Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம்  – 4
 
துரையை பார்த்தவள்” வாங்க “ என்று ஒரு வார்த்தை சொன்னதோடு தன் போக்கில் கோலமிட ஆரம்பித்தாள்… நேற்றிலிருந்து தங்களிடம் பேசாவிட்டாலும் அவனை பற்றி அவள் தவறாக நினைக்கவில்லை… மீனாட்சியின் மகன் தவறானவன் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றவில்லை… மேலும் அவன் தாய் தங்களை இந்த வீட்டிற்கு கிளம்ப சொன்ன போது எந்த மறுப்பும் சொல்லாமல் வண்டி பிடித்து வந்தது… நாயை பழக்கி விட்டது என அவன் செய்த செயல்கள் மூலம் அவன் மேல் நல்ல அபிப்பிராயமே வைத்திருந்தாள்… தன்னை பார்க்கும் பார்வையிலும் எந்த விரசமும் இல்லை ரசிப்பு தன்மையே இருந்ததை கவனித்தவள் ஒன்றும் சொல்லாமல் தன் கோலத்தை தொடர்ந்தாள்… சிறு வயதில் இருந்தே அவளுக்கு பொறுப்புணர்ச்சி அதிகம்… சில ஆண்கள் தவறு செய்தாலும் ஒட்டு மொத்த ஆண்களையும் அவள் வெறுக்கவில்லை… தன் வீட்டு ஓனர் கோபாலன் மாமா… தங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என நிறைய ஆண்கள் உதவியும் செய்திருந்தனர்… அதிலும் தன்தாய் உடம்பு சரியில்லாமல் இருந்த இந்த கடைசி ஆறு மாதத்தில் ஹாஸ்பிட்டல் செல்ல உதவி செய்த ஆட்டோகாரர் முதல் டாக்டர் வரை அனைத்து நல்ல உள்ளங்கள் கொண்ட ஆண்களையும் பார்த்திருந்ததால் துரையை தவறாக நினைக்கவில்லை….
 
கனி தன் போக்கில் கோலம் போடவும் இவனும் தன் தோப்பை பார்க்க கிளம்பிவிட்டான்…. அவன் சுற்றி வரவும் அவன் தாய் கதிருடன் வண்டியில் வந்திருக்க இவன் வரும்போது  கயிற்று கட்டில் வெளியில் கிடக்க கதிர் ரம்யாவோடும் ஹரிணியோடும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்…கனி அப்பத்தாவிற்கு இனிப்பில்லாமல் காப்பியை கொடுத்தவள் மற்றவர்களுக்கும் காப்பி கொடுத்துக் கொண்டிருக்க துரை வரவும் அவனுக்கு காப்பித்தட்டை நீட்டினாள்… கதிர் பய இவங்ககிட்ட நல்லா பேசுறானே நமக்கு என்னமோ இவளை பார்த்தாலே பேச்சே வரமாட்டேங்குது… கதிருடன் சென்று கட்டிலில் அமர…
 
டேய் மாப்புள்ள நம்ம ஜிம்மியை இவங்க ரெண்டு பேரும் நம்மகிட்ட இருந்து பிரிச்சிருவாங்க போலடா… இவங்க சொல்றத கேக்குது நான் செல்றது கேக்க மாட்டேங்குதுடா….??”
 
ஜிம்மி தன்னைக்கூட கண்டு கொள்ளாமல் ரம்யாவுடனும் ஹரிணியுடனும் விளையாடிக் கொண்டிருக்க அந்த பெண்களை பார்க்கும் போது துரைக்கு பாவமாக இருந்தது… முதலில் இவர்களுக்கு நல்ல உடை வாங்கி கொடுக்க வேண்டும் என எண்ணியவன் தன் தாயிடம் இதைப்பற்றி பேசலாம் என முடிவு செய்ய…
 
அப்பத்தாவும் மீனாட்சியும் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்… கனி தாங்கள் கொண்டு வந்த பொருட்களை அந்தந்த இடங்களை பார்த்து வைக்க கதிர் மீனாட்சி சொன்னபடி அவர்களுக்கு தேவையான காய்கறிகளும் மளிகை சாமான்களும் வாங்கி கொடுப்பதற்காக கடைக்கு கிளம்ப துரை வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்…
 
வழியில் அவன் நண்பன் ராசு…” டேய் மச்சான் நேத்து எங்கடா போனிங்க…??”
 
வெளியூருக்கு போயிட்டேண்டா….??”
 
டேய் நானும் நம்ம கூட்டாளிகளும் இன்னைக்கு நம்ம தோப்பு வீட்டுக்கு வந்திரவா..??”.
 
பதறிய துரை....டேய்…டேய் அங்க போயிராதிங்க  எங்க அத்த குடும்பம் அங்கதான் தங்கியிருக்காங்க… நான் வேற இடமாப் பார்த்து சொல்றேண்டா… அங்கதான் எங்க அம்மாவும் அம்மாச்சியும் இருப்பாங்க.. அப்புறம் என்னாகும்னு தெரியும்லடா எக்காரணம் கொண்டும் அங்க மட்டும் போயிராதிக… ??”துரையும் அவன் நண்பர்களும் பொழுது போக்கிற்காக அங்குதான் சீட்டாடுவது ….தாயம்…கேரம் என என்ன தோனுதோ தன் நண்பர்களுடன் அங்குதான் பொழுதை போக்குவான்… என்றாவது ஒரு நாள் அந்த தோப்பு வீட்டிலேயே சமைத்து தன் நண்பர்களோடு குடித்து பொழுதை போக்குவான்…சில சயங்களில் அசைவ உணவுகளை அங்கு சமைத்து சாப்பிடுவார்கள்… இவனுக எல்லாம் எக்காரணம் கொண்டும் அந்த வீட்டுக்கு போகாம பார்த்துகனுமே..கதிர்கிட்டயும் சொல்லி வைக்கனும்… என யோசித்தபடி தன் வீட்டிற்கு கிளம்பினான்…
 
கதிர் வாங்கி கொடுத்த மளிகை சாமானிற்கு கனி கோபாலன் கொடுத்த காசிலிருந்து அதற்குண்டான பணத்தை கொடுத்து விட்டாள்…கதிர் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை…. அவள் தனக்கும் தன் தங்கைகளுக்கும் பாதுகாப்பான இடத்தை தேடினாலே தவிர அவர்களின் காசு பணத்தை எதிர் பார்க்கவில்லை… தன் தாய் சொல்லிக்கொடுத்த கைத்தொழில் தன்னை எப்போதும் காக்கும் என்ற தன் நம்பிக்கையோடு இருந்தாள்…
 
பேச்சியம்மாளும் பகலில் தன் மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவுதான் கதிர்…  இல்லை துரையை கொண்டு வந்து இங்குவிடச் சொல்லுவார்… காலையில் மீனாட்சி பாலை கொண்டு வந்து கொடுத்துவிட்டு தன் தாயை கூட்டிச் செல்வார்…. பசு மாடுகளை மீனாட்சியே பராமரிப்பது தெரிந்து அவருக்கு உதவி செய்யும் நோக்கில் அவரிடம் சொல்லி மாடுகளை அங்கு கொண்டு வந்து கட்டி போடச் சொல்லி அவளே பார்த்துக் கொண்டாள்… இவளுக்கு அந்த மாடுகளை பராமரிப்பது பற்றி தெரியாவிட்டாலும் அப்பத்தாவிடமோ இல்லையென்றால் மீனாட்சியிடமோ கேட்டு கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்…
 
இப்போதெல்லாம் முத்தமிழின் பாதி நேரம் இவர்களுடன்தான் கழிந்தது… கல்லூரி விட்டு வரவும் இங்கு வந்து விடுவாள்…ரம்யாவோடும் ஹரிணியோடும் அரட்டை அடித்தபடி இருக்க கனி எப்போதும் வேலை பார்த்துக் கொண்டு இவர்களை கவனித்தபடி இருப்பாள்… இன்னும் பத்து நாளில் பள்ளி திறக்கப்படும் தங்கைகளை சேர்ப்பது பற்றி எப்படி துரையிடம் கேட்பது என யோசித்துக் கொண்டிருந்தாள்… தினமும் அவன் தோப்பிற்கு வந்தாலும் தன் வேலையை மட்டும் பார்த்து விட்டு ஆட்களுக்கு வேலையை பிரித்து கொடுத்துவிட்டு சென்று விடுவான்…
 
 அதிகமாக உதவி கேட்கவும் கனிக்கு தயக்கமாக இருந்தது.. அன்று முத்தழகு தனக்கு ஒரு டிசைன் பிளவுஸ் தைத்துதரச் சொல்ல கனி அந்த வேலையில் மூழ்கி இருந்தாள்… கைவேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் தங்கைகளின் படிப்பை பற்றியே யோசனையில் இருக்க பேசாம கதிர் அண்ணாக்கிட்ட கேட்கலாமா என நினைத்தாள்..
 
தோப்பு வீட்டில் புல் அதிகமாக இருந்த காலி இடத்தில் மீனாட்சி சொன்னபடி மாட்டை மேயவிட்டவள்…மீதி இடங்களை மண்வெட்டி வைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்… ரம்யாவும் ஹரிணியும் உதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு இந்த வேலை எல்லாம் பழக்கமில்லாததால் செய்ய முடியவில்லை…. சற்று நேரத்திலேயே தஸ்புஸ்ஸென்று மூச்சு வாங்கி அந்த வெயில் பொறுக்க முடியாமல் ஓடிவிடுவார்கள்…தங்கைகளை வேலை செய்ய சொல்லாவிட்டாலும் அவர்கள் வந்து வேலை செய்யும் போது… அவள்  இது நல்லதுதான் என நினைத்து பேசாமல் இருப்பாள்… அவளுக்கும் இது புதிதுதான் ஆனால் தன்னால் முடிந்த உதவிகளை மீனாட்சி அத்தைக்கு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்
 
பசுக்களை பார்ப்பது…முத்தமிழின் தோழிகள் நிறைய பேர் அவளுடைய பிளவுஸ் டிசைனை பார்த்து பிடித்து போய் தங்களுக்கு தைத்து தரச் சொல்லி துணி கொடுத்திருக்க ஓய்வு நேரங்களில் அந்த வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தாள்… மீதி நேரங்களில் தோப்பில் வேலை பார்ப்பவர்களை மேற்பார்வை இடுவது… அதிக குப்பைகள் சேராமல் பார்ப்பது என வேலையை இழுத்து போட்டு செய்தாள்…
 
அன்று காலை துரை தோப்பு வீட்டுற்குள் நுழையும் போதே வாசலில் போட்டிருந்த சிறிய கோலத்தை பார்த்தவன் யோசனையோடு உள்ளே வர… கனி உள்வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்… ஒரு கோடு இழுக்கவே அவ்வளவு மெதுவாக இழுக்க  இவ கைக்கு என்னாச்சு என்று யோசித்தவன் கனியின் பின்னால் நின்று
க்கூம் ….” என தொண்டையை செரும…
 
குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள்…
 
கையில என்ன…??”
 
இவரு நம்மகிட்டத்தான் பேசுறாரா…. இதுநாள் வரை தன்னிடம் பேசியதே இல்லை… எது என்றாலும் மீனாட்சி அத்தை மூலமாகத்தான் வரும்…
 
உன்னைத்தான் கேக்குறேன்… கையில என்னாச்சு அடிபட்டிருக்கா….??”
 
கோலமாவு டப்பாவை வெடுக்கென வாங்கியவன் அவள் கையை விரித்து பார்க்க… ஆங்காங்கே சிவந்து கன்றிப்போய் இருந்தது… …” யேய் என்னாச்சு??”
 
ச்சு… அது ஒன்னுமில்ல நேத்து ரொம்ப நேரம் மண்வெட்டி வச்சு வேலைப்பார்த்தேன்… அதான் …??”
 
உன்னை யாரு இந்த வேலையெல்லாம் பார்க்க சொன்னது…??” வேகமாக வீட்டிற்குள் செல்லப் போக…
 
கனி…கனி..??” என்ற அப்பத்தாவின் சத்தமான குரலில் என்னமோ ஏதோவென்று இவள் உள்ளே ஓட…துரையும் பின்னாலே வேகமாக போக….
 
அப்பு தொரை செத்தநேரம் வெளிய இருப்பு கூப்புடுறோம்??” என சொல்லியவர் கனியை இழுத்துக் கொண்டு உள் அறைக்குள் சென்றவர் சொன்ன விசயத்தில் கனிக்கு அழுகையும் சந்தோசமும் ஒன்றாக வந்தது…கண்ணீர் வழிய நின்றவளை… “ஆத்தா எதுக்கு அழுகுற…நல்ல காரியம் நடக்கிறப்ப அழுகக்கூடாது என் மவளுக்கு ஒரு போன போட்டு வரச்சொல்லி தொரைக்கிட்ட சொல்லுத்தா நான் உள்ள போறேன்….??”
 
கனி வெளியில் வர வேகமாக அவளிடம் வந்தவன்…” என்னாச்சு அம்மாச்சி என்ன சொன்னாங்க…??”
 
ஹரிணி பெரிய பொண்ணாயிட்டா..??”. கண் கலங்கி போயிருந்தவளை பார்த்தவன்
 
ஸ்ஸ்ஸ்… இது நல்ல விசயம்தானே இதுக்கு எதுக்கு அழுகுறகண்ணைத்துடை…??” போனை எடுத்து தன் தாய்க்கு விபரத்தை சொல்ல அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரும் வசந்தாவும் அங்கிருந்தனர்…. ஹரிணியை சென்று பார்த்தவர்கள்…தன் தாயிடம் பேசி ஒரு முடிவெடுத்தவர்..
 
துரையிடம் வந்து…” இந்த சாமான்களை கொஞ்சம் வாங்கிட்டு வந்துருடா தம்பி ஒரு சிட்டையை கொடுக்க கனியை அழைத்தவர்….. ஆத்தா நீயும் போடா துரையோட போய் வேண்டிய சாமான்களை வாங்கிட்டு வந்துருங்க….??”
 
நானா…தயங்கியவள்… தமிழ் அக்காவ போகச் சொல்லுவமே அத்தை…??” அவளுக்கு துரையோடு தனியாக செல்ல ஏதோ மாதிரியாக இருந்தது…
 
ஆத்தா ஏதோ அவ தோழிக்கு கல்யாணம்னு அவ கிளம்பிக்கிட்டு இருந்தாத்தா…  நம்ம கதிரத்தான் அங்க கொண்டு போய் விடச்சொன்னேன்… எப்படியும் அவவர சாயங்காலம் ஆகும்தா…நீ போய்ட்டு வந்துரு… போ போய் கிளம்பு…??”
 
அடுத்த ஐந்து நிமிடத்தில் கனி கிளம்பியிருக்க துரை தன் ஜீப்போடு வந்தான்… “சீக்கிரம் வந்துருங்கப்பா நீங்க வரவும்தான் மத்த சடங்கெல்லாம் செய்யமுடியும்…??” வசந்தாவோடு எவ்வாறு செய்யலாம் என யோசனை கேட்டபடி பேச்சை ஆரம்பிக்க…  அவள் வந்து ஏறவும் ஜீப்பை கிளப்பியவன் சென்று நிறுத்திய இடம் ஒரு மெடிக்கல் ஷாப் தான் மட்டும் இற்ங்கி சென்றவன் அவள் கைக்கு போட மருந்துடன் வந்தான். ..ஜீப்பில் ஏறியவன்..ஜீப்பை கிளப்பியபடி அவள் பக்கம் மருந்தை நீட்டி” கைலபோட்டுக்கோ….??”
 
இது ஒன்னும் பெரிய காயமில்ல… இதுக்கு எதுக்கு மருந்து வாங்கிட்டு வந்திங்க…??”
 
ஜீப்பை நிறுத்தியவன் ஒன்றும் சொல்லாமல் மருந்தை அவள் கையில் போட ஆரம்பித்தான்… கையை பின்னால் இழுக்க போனவளை நிமிர்ந்து ஒரு முறை முறைக்க ஒன்றும செய்ய முடியாமல் பேசாமல் இருந்தாள்… கடைத்தெருவுக்கு போனவர்கள் மீனாட்சி கொடுத்த சிட்டையில் இருந்த பொருட்களை பார்த்து பார்த்து வாங்க கடைசியில் ஜவுளிக்கடைக்கு கூட்டிச் சென்றிருந்தான்…

Advertisement