Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்

அத்தியாயம்  – 3

 

மீனாட்சியை சரணடைந்த மூவரும் கதறி தீர்க்க மீனாட்சிக்கு அவ்வளவு ஒரு வேதனையாக இருந்தது… அவர்களை பார்த்து துக்கம் தொண்டையை அடைத்தாலும் அழுகையை அடக்கியவர் அந்த குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு ஒன்றும் சொல்லாமல் முதுகை மட்டும் தட்டிக் கொடுத்து அவர்களை அழவிட்டவர்… வெகுநேரம் அழவும்…அவர்களின் கண்ணைத்துடைத்து…

 

ம்ம்ம்..சரி விடுங்கத்தா போதும் அழுதது…. உங்க அம்மா எங்கயும் போகல உங்ககூடவேதான்தா இருப்பா…??” கனி சுதாரித்து எழுந்தவள் அவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்த மீனாட்சிக்கும் துரைக்கும் இடுக்கமாக இருந்த அந்த இடத்தில் நாற்காலிகளை எடுத்து போட்டாள்…துரையின் முகத்தை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை..

 

ஏத்தா துணைக்கு யாருமில்லையா… உங்க அம்மா வழியில யாருமில்லைன்னு தெரியும் .. அப்பா வழியிலயும் யாருமில்லையா…??”

 

அவர்களுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தவள்… இல்ல ஆன்ட்டி… அப்பா வழியிலயும் யாருமில்ல…??”

 

ரம்யாவையும் ஹரிணியையும் தன் அருகில் அமர செய்தவர்…ஆன்டினுயெல்லாம் கூப்புடாதத்தா… அத்தைன்னு சொல்லு…நான் வாக்கப்பட்டதும் உங்க அம்மா பொறந்த ஊர்லதான்தா…துரை அப்பா வழியில் உங்க அம்மா எனக்கு நாத்தனார்  வேணும்..??” அவர்களை பார்க்க சோர்ந்து போய் சாப்பிடாமல் பட்டினியாக கிடந்தவர்கள் போல தெரிய..தன் மகனை அழைத்தவர் மூவருக்கும் சாப்பாடு வாங்கி வரச் சொன்னார்…துரை வெளியே கிளம்பவும்..

 

எப்படி கேட்பது என்று தயங்கியவள் பின் இதைவிட்டால் வேற வழியில்லை… என நினைத்த கனிஅத்தே எங்க தாத்தாக்கிட்ட குத்தகைக்கு விட்டிருந்த நிலத்துல எனக்கு ஏதாச்சும் வேலை வாங்கி தாறிங்களா…??” அவள் நேற்று மாலையே இந்த முடிவுக்கு வந்துவிட்டாள்..தன் தாய் படுக்கையில் இருந்தாலும் தங்களை நெருங்க கொஞ்சம் அஞ்சியவர்கள் இப்போது தயங்காமல் முகத்திற்கு நேராகவே ரெண்டாந்தாரமா கட்டிக்கிறேன்… இல்ல வச்சுக்குறேன் என கேட்க ஆரம்பித்தனர்… அனைவருக்கும் தன் அப்பா….. அண்ணன் வயதிருக்கும்..இவர்களுக்கு இப்படி கேட்க எப்படி மனசு வந்தது என்பதுதான் தெரியவில்லை….கோபால் மாமா எவ்வளவுநாள் உதவி செய்வாங்க….

 

 நேத்தே அந்த வீட்டுக்கார ஆன்ட்டி வந்து வீட்டை காலி பண்ணச் சொல்லிட்டாங்க..என்ன பண்ணலாம் கிராமமா இருந்தா வாடகையும் கொஞ்சம் கம்மியா இருக்கும்…தாத்தா வேலை பார்த்த ஊராயிருந்தா நமக்கு கொஞ்சம் பாதுகாப்பு கிடைக்கும்… நம்ம தங்கச்சிகளையும் ஏதாவது கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து விட்டுரலாம் என நொடியில் முடிவு செய்தாள்..

 

ஏத்தா இந்த பொறுக்கி பயலுக ரொம்ப தொல்லைபண்ணுனானுகளா… அதான் ஊருக்கு வரனும்னு நினைக்கிறியா??”

 

கனி என்ன சொல்லுவாள் தாய் படுக்கையில் விழுந்ததில் இருந்து வெளியில் போகும்போது தண்ணீர் பிடிக்க செல்லும்போது என வெளியில் சென்றாலே இவங்க செஞ்ச தொந்தரவு கொஞ்ச நஞ்சமில்லை… அம்மாவிடமும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளே வைத்து புழுங்கி கொண்டிருந்தாள்..இதனாலேயே தன் தங்கைகளை அதிகம் வெளியே விடாமல் வைத்திருந்தாள்… ஆனால் தன் தாய் இருக்கும் போது வெளியில் செல்லும் போது மட்டும் தொல்லை செய்தவர்கள் இன்று தாய் இறக்கவும் வீட்டிற்கே வந்து விட்டனர்…  இவர்கள் வர கொஞ்ச நேரம் தாமதமாகி இருந்தால்கூட இவர்களை உயிருடன் பார்த்திருக்க முடியாது… கதவை அவர்கள் போட்டு உடைக்கவுமே கனி மண்ணெண்ணெய் கேனை எடுத்திருந்தாள்… தங்கள் உயிரை விட மானமே பெரியது என நினைத்துதான் மூவருமே சாகத் துணிந்திருந்தனர்… ஆனால் மீனாட்சியை பார்க்கவுமே தன் தாய் சொன்னது நியாபகத்திற்கு வந்தது… இவர்களால் மட்டும் தங்களுக்கு உதவி செய்ய முடியும் தன் தாய்தான் அவர்களை இங்கு அனுப்பியதாக நினைத்தாள்… இல்லையென்றால் சாவின் விளிம்பில் இருக்கும் போது இவர்கள் வருவார்களா…

 

என்னத்தா என் முகத்தையே பாக்குற..??”கனியின் கன்னத்தை பிடித்துக் கேட்க..

 

ஒன்னுமில்லத்த.. நீங்க அங்க மட்டும் வேலை வாங்கி குடுத்துட்டிங்கன்னா நான் வேலை பார்த்துக்கிட்டே அம்மா தையல் சொல்லிக்குடுத்துருக்காங்க… தைச்சு குடுத்துக்குவேன்.. அதோட தாத்தாவுக்கும் அம்மாவுக்கும் தெரிஞ்சவங்க யாராச்சும் இருப்பாங்க எங்களுக்கும் கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும் அத்த.??”. கனிக்கே தன்னை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது… இதுவரை உறவென்று தங்களை தேடி யாருமே வந்ததில்லை.. முதல் முறையாக பார்க்கும் மீனாட்சியிடம் தன்னை அறியாமல் ஒரு பாசம் உருவாவதை அவளால் தடுக்கமுடியவில்லை…

 

மீனாட்சிக்கும் இந்த பெண்களை தனியாக இங்கு விட்டுச் செல்லும் எண்ணம் எல்லாம் இல்லை ..வீட்டிற்குள் நுழையும் போதே மண்ணெண்ணெய் கேனை பார்த்திருந்தார்…  இந்த வயதில் இவர்களுக்கு வந்த துன்பத்தை நினைத்து கலங்கியவர்… இவர்களின் முடிவையும் புரிந்து கொண்டார் துரைக்கு இரண்டு வயதாக இருக்கும் போதுதான் அவன் தந்தை இறந்திருந்தார்…தான் ஒரு கணவனை இழந்தவள் என்றும் பாராமல் ஆண்கள்….  உறவினர்கள் நடந்து கொண்ட முறையில்தான் அவள் புகுந்த வீடே வேண்டாம் என்று தன் கணவன் பங்கு சொத்துக்களை குத்தகைக்கு விட்டுவிட்டு பிறந்த வீட்டிற்கு வந்திருந்தார்… தன் பெற்றோர்கள்..சகோதரர்கள் இருந்த போதே தனக்கு இந்த நிலைமை என்றால் இவர்களுக்கு உறவென்று சொல்ல யாருமில்லை… கடவுள் நல்ல நேரத்துலதான் இங்க கூட்டிட்டு வந்தாரோ நாம கொஞ்சம் தாமத படுத்தியிருந்தாக்கூட இந்த பச்ச குருத்து மூனும் இன்னேரம் என்ன நிலைக்கு ஆளாகியிருக்குங்க…

 

தன் மகனுக்கு போன் செய்தவர் வரும்போது சாமான்களை கொண்டு செல்வதற்கு வண்டி பிடித்து வரச் சொல்ல.. இப்போதுதான் மூவருக்கும் மூச்சே வந்தது..

 

துரைக்கு தெரியும் தன் அம்மா இந்த முடிவைதான் எடுப்பார் என்று துரை எவ்வளவுதான் விளையாட்டுத்தனமாய் இருந்தாலும் பெண்கள் விசயத்தில் ரொம்ப ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்பது சிறுவயதில் இருந்து அவன்தாய் போதித்து வரும் பாடம்… அது அவன் ஆழ்மனதில் எப்போதுமே இருக்கும்… அதனால்தான் அவன் குடித்துவிட்டு என்ன ஆட்டம் போட்டாலும் எந்த பெண்களையும் வம்பிழுத்ததில்லை… தரக்குறைவாக பேசியதும் இல்லை…தொடவும் மாட்டான்… முத்தமிழே தங்கள் வீட்டிற்கு தினமும் வந்தாலும் தானாக ஒருநாள் கூட அவளிடம் எந்த வம்பும் செய்ததில்லை… சிறு வயதாய் இருக்கும் போது சேர்ந்து விளையாடியவர்கள் அவள் பெரியவளாய் ஆனதும் அவளை விட்டுத்தள்ளித்தான் இருப்பான்..  இந்த விசயத்தில் தன் மகன் மீது மீனாட்சிக்கு ரொம்ப பெருமையே உண்டு…

 

ஆத்தா எல்லாச் சாமானையும் எடுத்து மூட்டை கட்டுங்கடா..??”

 

கனி யோசனையில் இருக்க… என்னத்தா…??”

 

இல்லத்த இவங்க ரெண்டு பேருக்கும் டிசி வாங்கனுமே..??”

 

அதப்பத்தி எல்லாம் கவலைப்படாத்தா என் மகன் பாத்துக்குவான்…??”

அந்த நேரம் விசயமறிந்து பதறியடித்து கோபாலன் வேகமாக வீட்டிற்கு வர மீனாட்சியை பார்க்கவும்… உறவினரோ என தயங்கி நின்றார்…

 

கனி வாங்க மாமா??” சேரை எடுத்து போட..

 

இப்பத்தாம்மா ஊருல இருந்து வந்தேன்.. அந்த பயலுககிட்ட எத்தனை முறை கண்டிச்சும் திரும்ப வந்திருக்காகன்னா நான் போய் போலிசுல கம்பிளைண்ட் குடுத்துட்டு வரவாம்மா…??”

 

வேண்டாம் மாமா நாங்க எங்க அம்மா பிறந்த ஊருக்கே போகலாம்னு முடிவு பண்ணிட்டோம் … இப்ப நீங்க போய் அவங்க மேல கம்பிளைண்ட் கொடுத்தா அவங்க உங்களுக்கு பிரச்சனையை கொடுப்பாங்க … விட்டுருங்க மாமா.. இவங்க எங்களுக்கு அத்தை முறை வேணும்…நாங்க இவங்ககூடதான் மாமா.ஊருக்கு போறோம்…??” என.மீனாட்சியை அறிமுகப்படுத்த..

 

மீனாட்சி அவரை பார்த்து கும்பிட்டவர்… நீங்க கவலை படாதிங்கண்ணே நான் பார்த்துக்குறேன்… இன்னைக்கு நாங்க வர செத்த தாமதாமாகியிருந்தாக்கூட என்னன்னமோ நடந்திருக்கும்… இதென்ன ஊரா…ரௌடிபயலுக ஊரு… நீங்க கவலை படாதிங்க நான் பார்த்துக்குறேன்.??”.துரை வண்டியோடு வர

 

சாமான்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் உதவியோடு ஏற்ற..இவர்களும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்..கோபாலன் கொஞ்சம் பணம் கொடுக்க வாங்க மறுத்த கனியை எவ்வளவோ சமாதானம் செய்துதான் கொடுத்தார்.. இவர்கள் இங்கிருந்து கிளம்புவது அவருக்கு வருத்தத்தை அளித்தாலும் இன்று இவர்கள் வராவிட்டால் இந்த பெண்களின் நிலையை நினைத்து பார்த்தவர்… அந்த ரௌடிகள் கொஞ்சம் மோசமானவர்கள்தான்…தான் ஒரு ஆளாக இந்த பெண்களை பாதுகாக்க முடியாது என்பதால் அமைதியாக இருந்தார்.. மூவரும் அவர் காலடியில் விழுந்து வணங்கி மீனாட்சியோடு கிளம்பினர்.. மீனாட்சியை தனியாக அழைத்து அவரின் வீட்டு விலாசத்தையும் போன் நம்பரையும் வாங்கியவர் தன் மகன் ஊரிலிருந்து வந்தவுடன் அவளை தன் மகனுக்கு பெண் கேட்டு வருவதாக சொல்லவும் மீனாட்சிக்கு சந்தோசம்.. பரவாயில்லை பார்க்க நல்ல வசதியானவரா தெரிஞ்சாலும் ரொம்ப நல்லவரா இருக்காரு… என நினைத்தார்… கோபாலனுக்கு மனதில் குற்ற உணர்ச்சி எழுந்தது.. நாம இப்பத்தான் இந்த மூனு பொண்ணுகளுக்கும் உதவி செய்ய முடியல கண்டிப்பா கனியை நம்ம பையனுக்கு பேசி  கல்யாணத்தை நடத்திரனும்… என உறுதியுடன் நினைத்தார்…

 

ஜீப்பில் மகனோடு மீனாட்சி முன்னால் ஏற இவர்கள் மூவரும் பின்னால் ஏறியிருந்தனர்… இதுவரை துரை அவர்களிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை… அவர்களும் துரை பேசாததால்  அவனுடன் பேசவில்லை…

 

ஜீப்பில் ஏறியவர்கள் அடுத்த அரைமணி நேரத்தில் தங்களை அறியாமல் உறக்கத்திற்கு செல்ல.. மீனாட்சி தான் பிறந்த ஊருக்கே அவர்களை கூட்டி வந்தார்… ஊருக்குள் நுழையவும் துரை தன் தாயிடம்

அம்மா வீட்டுக்குத்தானே..??”

 

இல்லடா தம்பி நம்ம தோப்பு வீட்டுக்கு விடு..??”அதிர்ச்சியாகி. காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன்…

 அம்மா அங்க எதுக்கு… இவங்களுக்கு வேற வீடு பார்த்துக்குடுங்கம்மா.. அந்த வீட்டை நான் தரமாட்டேன்…??”

 

டேய்…..டேய்…நீ என்ன சின்ன புள்ளையா..இது என்னோட பொம்மை நான் குடுக்க மாட்டேன்னு சொல்லுறதுக்கு…போடா.. அவ்வளவு பெரிய வீட்ல இவங்களுக்கு கொஞ்சமா இடம் குடுடா… நானும் எத்தனை நாளா அந்த தோப்பை பார்த்துக்க ஒரு நல்ல ஆளா பாக்கச் சொன்னேன்… நீயும் அந்த கதிரு பயலும் இந்தா இந்தான்னு ஒருத்தரையும் கூட்டிட்டு வரலை… இந்த பொண்ணுகளுக்கும் இதுதாண்டா பாதுகாப்பு.. நீயும் நானும் வந்து அப்பப்ப பாத்துக்கலாம்…??”

 

முகத்தை ஊர்ரென்று வைத்திருந்தவன் ஏதோ பேசப்போக… அதற்குள் அவர்கள் மூவரும் முழித்திருந்தனர்…

 

கனி என்னத்தே ஆச்சு ஏன் காரை நிறுத்தி வச்சிருக்கிங்க??”

ஒன்னுமில்லத்தா ந்தா….. ஊரு வந்திருச்சு…??” வசந்தாவுக்கு போன் செய்தவர் கொஞ்சம் பாலை எடுத்துக் கொண்டு கதிரோடு தோப்பு வீட்டிற்கு வரச் சொல்லி சொன்னவர்…

 

டேய் மூஞ்சிய இப்படி வைக்காத பாக்க சகிக்கலை..??”.தன் மகனின் கன்னத்தை உருவ..தாய் மகனின் பாசத்தை பார்த்தவர்கள் தன் தாயின் நினைவில் கண் கலங்கினர்… தோப்பு வீட்டிற்கு இவர்கள் வருவதற்குள் கதிர் தன் குடும்பத்தோடு அங்கிருந்தான்… அனைவரும் வாசலில் நிற்க இவர்கள் மூவரும் தயங்கி தயங்கித்தான் இறங்கினார்கள்… மீனாட்சி ஏற்கனவே போனில் சொல்லியிருந்ததால் அனைவரும் அவர்களை அன்போடு வரவேற்றனர்… முத்தழகு வந்து அவர்களின் கையை பிடிக்க வசந்தா வந்து அவர்களை வரவேற்றார்….

 

கனி மெதுவான குரலில் அத்தை நாங்க இவங்கிட்டத்தான் வேலை பார்க்கனுமா….??”

 

இல்லத்தா தங்கம் நாம நம்ம ஊருக்கு போகவே இல்ல.. இது நான் பிறந்த ஊருத்தா… இதுவும் நம்ம வீடுதான் நீங்க இங்கயே தங்கிக்கங்க… வீட்டுக்கே கூட்டிட்டு போயிருவேன்… ஆனா பாரு வீட்ல கல்யாணம் ஆகாத ஒரு ஆம்பள புள்ளைய வச்சிக்கிட்டு உங்கள கூட்டிட்டு போனா அப்புறம் ஊருல  பயலுக நாக்குல பல்லை போட்டு பேசிருவானுகல.. அதான்தா இங்க கூட்டிட்டு வந்தேன்…??”

 

கனிக்கு மீனாட்சியை பார்க்கையில் அப்படி ஒரு பாசம் தோன்றியது… இந்த காலத்துல இப்படி ஒருத்தங்களை பார்க்க முடியுமா … ஒரு பொண்ணை பார்க்கவே அவ்வளவு யோசிப்பாங்க.. ஆனா நாங்க மூனு பேரு கடவுளே எந்த காலத்திலயும் நம்மளால இவங்களுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது..

 

அந்த வீடு சற்று பெரியவீடுதான் ஒரு பெரிய அறையில் கதிர்….. துரையின் பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்திருக்க…துரைக்கு இந்த வீட்டை எப்போதுமே ரொம்ப பிடிக்கும்… இன்று என்ன செய்வது இனி எப்போதும் போல இங்கு நுழைய முடியுமா என யோசித்துக் கொண்டிருந்தான்…

 

பாலை காய்ச்சி கொண்டு வந்து வசந்தா அனைவருக்கும் கொடுக்க கனிக்கும் அவள் தங்கைகளுக்கும் நடப்பது கனவுதானோ என தோன்றியது… இவர்களை சற்று இயல்பாக்க பாலை இவர்களிடம் கொடுத்து துரைக்கும் கதிருக்கும் கொடுக்கச் சொல்ல.. கனி அதை எடுத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது கதிர் இந்த பக்கம் திரும்பி இருக்க துரை இவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான்…

 

கதிரை பார்க்கவும் கனி தன்னை அறியாமல் அண்ணா… பால் இந்தாங்க..??”பாலை அவன் புறம் நீட்ட தன்னை முதல் முறையாக அண்ணா என்று அழைக்கும் தங்கையா… ஆச்சர்யமாக பார்த்தபடி பாலை எடுத்தவன்.. முத்தமிழ் ஒரு நாள்கூட கதிரை அண்ணன் என்று அழைத்ததில்லை… போடா.. வாடா என்றுதான் அழைப்பாள்…

 

துரையை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை… பார்த்ததில் இருந்து தங்களிடம் ஒரு வார்த்தைகூட பேசாததால் இவர் ரொம்ப முசுடோ என நினைத்து அவனிடம் ஒன்றும் சொல்லாமல் பாலை மட்டும் எடுத்துக் கொடுக்க அதை வாங்கியவன் இப்போதுதான் கனியை நிமிர்ந்து பார்த்தான்…

 

நல்ல சிவந்த நிறம் திருத்தமான முகம் சிறிய வயதாக இருப்பாளோ என்று நினைத்தான்… காது கழுத்து எதிலும் நகை எதுவும் போடவில்லை நெற்றியில் மட்டும் சிறு கடுகு போல ஒரு கருப்பு பொட்டு… போட்டிருந்த சுடிதாரும் பல முறை போட்டு சாயம் வெளுத்து போய் இருந்தது…தன் தலைமுடியை கொண்டையாக மாற்றியிருந்தாள்…  பாலை எடுக்காமல் இருக்கவும் நிமிர்நது அவனை பார்க்க அவன் பார்வை தன் உடைமேல் இருப்பதை பார்த்தவள்… இதுவரை தன்னை பார்த்த ஆண்களை போல தன் உடலை வெறிக்காமல் தன் உடையை பார்ப்பதை உணர்ந்தவள்… உள்ள இருக்குற பொண்ணோட நம்மள ஒத்து பார்க்குறாரோ என நினைத்தாள்… முத்தமிழ் போட்டிருந்த நகைகளும் அணிந்திருந்த விலை உயர்ந்த சுடிதாரும் அவர்களின் செல்வ செழிப்பை காட்டியது.. தான் துணி தைத்து கொடுப்பதால் அவளுக்கு ஒரு துணியை பார்த்தாலே அதன் தரம் தெரியும் … தான் போட்டிருந்த துணியின் விலையும் தெரியும் இதற்காக இவள் ஒன்றும் கவலைப்படவில்லை…

 

இவள் வீட்டிற்குள் வர முத்தமிழ் தன் தங்கைகளோடு பேசியபடி இருந்தாள்…  முத்தமிழுக்கு இவர்கள் மூவரையும் ரொம்ப பிடித்தது… அதிலும் தாய் தந்தை இருவரும் இல்லை என்று தெரிந்ததும் இன்னும் பாசம் அதிகமாக இருந்தது….  அப்பத்தா அந்த பெண்களையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருக்க… மணி 12 க்கு மேல் ஆனதால் அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்…

 

துரை தன் தாயை அழைத்து கட்டிக்கிடந்த நாயை அவிழ்த்து விட்டு மூவருக்கும் பழக்கிவிடச் சொன்னான்… எந்த பயமும் இல்லை என்றாலும் பெண்கள் மட்டும் தனியாக இருப்பதால் நாயை அந்த மூவருக்கும் பழக்கிவிட… ரம்யாவுக்கும் ஹரிணிக்கும் சந்தோசம் தாங்கமுடியவில்லை… இருவருக்கும் நாய் என்றால் எப்போதுமே பிடிக்கும் தன் தாய் இறந்த சோகத்தை மறந்து இருவரும் நாயோடு தங்கள் பொழுதை போக்க அனைவரும் கிளம்பினர்… ஆயிரம் முறை பத்திரம் சொல்லி கதைவை நன்றாக பூட்டிக்கொள்ளச் சொல்லி வெளியே தங்கள் காருக்கு வர… அனைவரும் ஏறினாலும் அப்பத்தா பேச்சியம்மாள் மட்டும் ஏறாமல் நின்றார்…

 

முத்துராமன்… ஆத்தா வா நேரமாகலையா…??” கையால் சைகை செய்து அழைக்க…

 

இல்லடா நீங்க போங்க…. நான் இங்கனயே இந்த புள்ளைகளுக்கு துணைக்கு படுத்துக்குறேன்… நீங்க போங்க??” வர மறுத்து உள்ளே வர அவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்..

 

கனி என்னதான் வெளியில் தைரியமானவள் போல காட்டிக் கொண்டாலும் புது இடம் புது ஊர் இது எப்படி இருக்குமோ என்று பயந்து போயிருந்தாள்.. தன் பயத்தை வெளியில் காட்டினால் தங்கைகள் ரொம்ப பயந்து விடுவார்களே என நினைத்துத்தான் முகத்தை தைரியமாக வைத்திருந்தாள்… அப்பத்தா இருப்பதாக சொல்லவும் அவள் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை… கதவை அடைத்து தாழ் போட்டவள் அப்பத்தாவை கட்டி அணைக்க அவருக்குமே கண் கலங்கியது.. இவர்கள் மூவரையும் பார்க்கும் போது தன் மனதிற்குள் ஏதோ பிசைந்தது..தன்னை அறியாமல் பாசம் தலைத்தூக்க மூவரோடும் பாயில் அவர்களை அணைத்துக் கொண்டு படுக்க இத்தனை வயதிலும் ஆண்டவன் தன்னை உயிரோடு வைத்திருப்பதற்கு ஏதோ காரணம் இருப்பது போல அவருக்கு தோன்றியது……

 

அதிகாலை 5 மணிக்கு தங்கள் வீட்டு சேவல் கூவ கண்விழித்த துரைக்கு எப்போதும் தன் தோப்புவீட்டில் மாமரங்களை ஒரு சுற்று சுற்றி பார்வையிட்டால்தான் நல்ல பொழுதாக தோன்றும்… இப்ப என்ன செய்யலாம் என யோசித்தவன்… அந்த பொண்ணுக டவுனுல வளர்ந்ததுக இப்பவா எந்திரிச்சிருக்க போகுதுக… தான் காலை நேரத்து வாக்கிங் போல அங்கிருந்து நடந்து வந்தவன் தோப்பு வீட்டிற்கு வர வாசலில் பெரிய ரங்கோலி கோலம் போடப்பட்டிருந்தது… கோலத்தை ரசித்தபடி கேட்டை திறந்து உள்ளே வர உள்வாசலில் கனி கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்…. அதிகாலையில் குளித்திருப்பாள் போல தலை ஈரம்காய விரித்துவிடப்பட்டிருந்தது … மெரூன் நிற சேலை சட்டை… நேற்று இரவு பார்க்கும் போது சிறுபெண் போல காணப்பட்டவள் சேலையில் பெரிய பெண்ணாகத் தெரிந்தாள்… மெல்லிய சிவந்த அழகான விரல்கள் அதில் கோலமாவை எடுத்து லாவகமாக கோலம்போட நெற்றியில் பொட்டு பொட்டாக வியர்வைத்துளிகள்.. குனிந்து கோலம் போடுவதால் அவள் சேலைக்கும் சட்டைக்கும் இடையில் இடை பளிச்சென்று தெரிந்தது…

 

உள்ளுணர்வு ஏதோ உணர்த்த சட்டென நிமிர்ந்தவள் தன் பின்னால் நின்ற துரையை பார்த்தாள்.. அவன் பார்வையில் ஒரு ரசனையை பார்த்தவள் இவங்க நாம போடுற கோலத்தை ரசிக்கிறாங்களா என நினைத்து அவன் முகத்தை பார்க்க அதில் அவளை ரசிக்கும் பாவனையே தெரிந்தது…

 

                                         இனி……………??????.

Advertisement