Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்

 ( இறுதி அத்தியாயம் )    –    27

    

அடுத்தடுத்த நாட்களில் குடும்பமே கதிர் காயத்ரி திருமண வேலைகளில் ஈடுபட துரை வேலைக்கு செல்லும் நேரம் போக மீதி நேரங்களில் எல்லா வேலைக்கும் கனியை துணைக்கு வைத்துக் கொண்டான் …

பத்திரிக்கை கொடுக்க காயத்ரிக்கு வேண்டிய துணிமணிகள், சீர்வரிசை பொருட்கள் வாங்க எந்த ஒரு சிறுவேலைக்கும் கனியின் துணை தேவையாயிருந்தது…

கனியும் உற்சாகத்தோடு பொருட்களை பார்த்து பார்த்து வாங்க… கதிர் அதிக சாமான்களை வாங்கவே விடவில்லை…தேவையில்லா வீண் செலவு என அதை தடுத்துவிட்டான்…

காயத்ரியின் பாட்டி ஏற்கனவே 30 பவுன் நகை சேர்த்து வைத்திருக்க… அதுபோக துரை 30 பவுன் வாங்கி கொடுத்திருந்தான்…கதிர் தங்கைகள் நால்வரையும் கடைக்கு கூட்டிச் சென்று அவர்களுக்கு தேவையான நகைகளை வாங்கிகொள்ள சொல்ல…தமிழ் வாங்கிய நகைகளுக்கு  அரவிந்த் பணம் கொடுத்திருந்தான்…

கதிர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை… இது தன் மனைவி தாய்மைக்கான பரிசு என சொல்லிவிட்டான்…பொங்கலுக்கு வந்தவர்கள் கதிர் திருமணம் முடிந்து செல்லலாம் என தங்கியிருக்க அரவிந்த் மட்டும் அவ்வப்போது சென்று தன் பெற்றோரை பார்த்து வந்தான்…

தமிழை அலைச்சல்கூட்ட வேண்டாம் என அழைத்துச் செல்லவில்லை துரை…தமிழ் திருமணத்தை போல வீட்டிற்கு முன்னால் கொட்டகை போட்டு திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கேற்றாற்போல ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தனர்…

 

அன்று இரவு துரை தன் பீரோவில் ஏதோ தேடிக் கொண்டிருப்பதை பார்த்த கனி அவனை ரசித்தபடி கட்டிலில் அமர்ந்திருக்க… ஹாய்டி பொண்டாட்டி என்ன அத்தான சைட் அடிச்சிக்கிட்டு இருக்க… வேலையெல்லாம் முடிஞ்சிருச்சா…??”

 

கண்ணால் கணவனை ரசித்தபடி …”ம்ம்ம்…..

 

எல்லாருக்கும் கல்யாண டிரெஸ் தைச்சிட்டிங்களா.. பிளவுஸ் நான் சொன்ன மாடல்லதானே தைச்ச…??”.

 

காயத்ரியும் கனியும் ஒரு நல்ல நாளில் தங்கள் அப்பத்தாவை வைத்து கடையை திறந்தவர்கள் இரண்டு பெண்களை வேலைக்கு வைத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்திருந்தனர்…

கனியும் காயத்ரியும் நெட்டில் உள்ள ப்ளவுஸ் டிசைன்களை பார்த்து அதன்படி மாடல்மாடலாக தைத்துக் கொடுக்க நிறைய கல்லூரி பெண்கள்… இளம்பெண்களின் மனதுக்கு பிடித்திருந்ததால் சில நாட்களிலேயே அந்த ஊரில் இருவரும் நல்ல டெய்லராக அடையாளம் காட்டப்பட… நிறைய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர்…

கல்யாண வேலைகள் ஒரு புறம் நடந்தாலும்… இவர்களின் வேலையும் நடந்துகொண்டுதான் இருந்தது… துரையும் கதிரும் தங்கள் வாழ்க்கைதுணையின் திறமையை ஊக்கப்படுத்தி தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்…. 

முகூர்த்தப்பட்டு எடுத்த போது அனைவருக்கும் பட்டுச்சேலை எடுத்துக் கொடுத்திருக்க கனி தனக்கும் தமிழுக்கும் ஒரே மாதிரி டிசைனில் பிளவுசை தைத்தாள்…. துரை தனியாக தன் மனைவிக்கு ஒரு பிங்க் நிறத்தில் ஒரு டிசைனர் சேலையை எடுத்திருந்தவன் நெட்டில் தேடிப்பிடித்து ஒரு டிசைனை எடுத்துக் கொடுத்து அந்த மாடலில் பிளவுஸ் தைக்கச் சொல்லி நச்சரித்திருந்தான்….

 

ஏங்க நீங்க சொன்ன மாடல்ல தைச்சிட்டேன் ஆனா முதுகு ரொம்ப இறக்கமா இருக்கே…. அந்த கயறு மட்டும் இல்ல முதுகுல ஒன்னுமே போடத மாதிரி இருக்கும்…. கர்மம் கர்மம் என்ன மாடலோ ஒரே ஒரு விரல் அளவுக்கு மட்டும் துணிவைச்சு…

இத நீங்க தேடி தேடி கண்டுபிடிச்சு என்னை தைக்க சொல்றிங்க நான் இத காயத்ரி அக்காவுக்கு தெரியாம தைக்கிறதுக்குள்ள நான் பட்ட கஷ்டம்…. .ஸ்ஸ்ஸ் ஆனா ஒன்னுங்க நான் அந்த பிளவுஸ போட மாட்டேன் சொல்லிட்டேன்… கனி மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே இருக்க…

 

அவளை திரும்பி பார்த்தவன் குறும்பு பார்வையோடு ஒன்றும் சொல்லாமல் ஏதோ பத்திரம்போல இருந்ததை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க கணவனின் கவனம் வேறுபக்கம் இருப்பதை பார்த்தவள்…

தன் அருகில் இருந்த பேப்பர்களை பார்வையிட்டு கொண்டிருக்க ஏதோ பாண்டு போல இருக்கவும் எடுத்து பார்த்தாள்… பிக்ஸர் டெப்பாசிட்டில் ஒரு பெரிய அமௌண்ட்டை தன் பேரிலும் தன் தங்கைகளின் பேரிலும்  டெப்பாசிட் செய்ததற்கான பாண்டு அது தேதியை பார்க்க அவர்கள் திருமணத்திற்கு முன்னே போடப்பட்டிருந்தது…

துரை தான் தேடியதை எடுத்துவைத்தவன் மற்றதை எடுத்து பீரோவிற்குள் வைத்துக் கொண்டிருக்க கனி ஏதோ யோசனையில்  இருக்கவும்….  பீரோவை மூடி கதவை தாழிட்டு வந்தவன் தன் மனைவியின் மடியில் தலைவைத்து படுக்க… தன் நினைவுக்கு வந்தவள் கணவனின் தலையை கோதியபடி ஏங்க எங்க பேர்ல பிக்சர் டெபாசிட்ல பணம் போட்டுருக்கிங்களா??”

 

தன் மனைவியின் விரல்களோடு விளையாடிக் கொண்டிருந்தவன்… ஆமா போட்டுருக்கேன்

எப்ப கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க உங்க மாமா பொண்ணுங்கன்னு தெரியறதுக்கு முன்னாடியேவா…??”

 

அவள் நெற்றியை தன் நெற்றியோடு மோதியவன் ஆமாடி…. நீங்க இங்க இருக்கும்போது நம்ம மாம்பழங்களை ஒரு பெரிய ஜூஸ் கம்பெனிக்கு மொத்தமா கொடுத்தோம்ல அவங்க கொடுத்த பணத்தை அப்படியே உங்க மூனுபேர் பேர்ல டெபாசிட் பண்ணினேன்… இப்ப அதுக்கு என்ன??”

 

கனிக்கு கண்கலங்கியது வரதட்சனை வாங்கி கல்யாணம் பண்ணுற இந்த காலத்துல நம்ம தங்கச்சிகளுக்கும் இவங்க பேங்கல டெபாசிட் பண்ணியிருக்காங்களா…. ஏங்க இது உங்க பணம் அதை ஏன் எங்க பேர்ல டெபாசிட் பண்ணிவைச்சிருக்கிங்க…??”

 

ஏய் லூசு அதென்ன என் பணம் உன் பணம்னு பிரிச்சு பேசுற.. எப்ப உங்களுக்கு யாரும் இல்லைனு தெரிஞ்சுச்சோ அப்பவே அம்மா என்னை கூப்பிட்டு சொல்லிட்டாங்கடி நீங்க மூனுபேரும் என் பொறுப்புன்னு நீ வேற ஆள கல்யாணம் பண்ணியிருந்தாலும் நாங்க இதெல்லாம் செய்யிறதாத்தான் இருந்தோம்

என்ன ஐயா உன்னை பார்க்கவும் தொபுகடீர்னு லவ்வுல விழுந்துட்டேன்….. அம்மாக்கூட பால்காசெல்லாம் பேங்கல போட்டு உங்களுக்கு நகைவாங்கதான் வைச்சிருக்காங்க…நானும் முன்னாடி ரொம்ப பொறுப்பில்லாம இருந்தேன் உன்னை பார்க்கவும்தாண்டி பணத்தோட அருமை தெரிஞ்சது….??”

 

தெரியும் தெரியும்….

என்னடி தெரியும்…

உங்களுக்கு பணத்தோட அருமை தெரியாதுன்னு அதான் அன்னைக்கு உங்க கரகாட்டக்கார பிரண்டு சொன்னாங்களே…. கரகாட்டத்துக்கு 10000…15000 குடுத்திங்கன்னு அப்பவே ஐயாவோட அருமை பெருமை எல்லாம் தெரிஞ்சுப்போச்சு… அவனை சீண்ட…

 

அவளோடு கட்டிலில் சாய்ந்தவன்… ஏய் மனுசன்னா அப்புடி இப்புடி இருக்கத்தான் செய்வாங்க… நீங்களெல்லாம் இப்ப சீரியலே கதியா கிடக்கிறமாதிரி அப்ப எங்களுக்கு அவங்கமேல ஒரு கிறுக்கு…. அந்த கிறுக்குத்தான் இப்ப என் பொண்டாட்டி மேல வந்திருச்சே…

கைகளை அவள் மேல் அத்துமீற விட்டவன் முன்னாடியெல்லாம்  என்கிட்ட பேசாம ஆட்டம் காட்டினவளா நீ… என்னமா வாய் பேசுற பேசுற வாயை இப்ப என்ன பண்ணுறேன் பாரு..??”.இன்னும் ஏதேதோ சொல்ல

கலகலவென சிரித்தவள் காதலுடன் அவன் கன்னத்தில் முத்தமிட அவன் மறுகன்னத்தை காட்டவும் முத்தமிட போனவள் அந்த கன்னத்தை கடிக்க அவளை இறுக்கி அணைத்தவன் தன் யுத்தத்தை அவள் இதழில் இருந்து ஆரம்பித்தான்….

 

….. முத்துராமனுக்கு தன் மகனை நினைத்து பெருமையாக இருந்தது… படிப்புதான் வரவில்லையே தவிர மற்ற அனைத்திலும் பொறுப்பாய் செயல்பட்டான்…குடும்பத்தை வழிநடத்தி செல்வது அனைவரையும் பொறுப்பாக பார்த்துக் கொள்வது தன்மீதும் தன் மனைவி மீதும் அவ்வளவு பாசம் வைத்திருப்பது தான்கூட தன் மனைவியை கோபத்தில் கத்தினாலும் தாயை விட்டுக் கொடுக்காமல் அதே சமயத்தில் தன்னிடமும் மிகவும் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரியவைப்பான்…

அதைவிட தொழில்….சிலசமயங்களில் வட்டி சரியாக வராமல் போனால் அவர்களிடம் கோபப்பட்டு கத்துவார்.. ஆனால் கதிர் பொறுப்பேற்றபிறகு அந்த பிரச்சனையே இல்லை … யாரிடம் எப்படி பேசினால் பணம் கிடைக்குமோ அதன்படி செயல்பட்டான்… எந்த ஒரு விசயத்தையும் ஆராய்ந்து முடிவெடுத்தான்…

அதைவிட காயத்ரியை திருமணம் செய்துகொள்ள சொன்னதற்கு ஒருவார்த்தை மறுப்பு சொல்லாமல் சம்மதம் சொன்னதே அவருக்கு அவ்வளவு திருப்தியாய் இருந்தது… தன்னை போல பணத்தை முதலில் கொடுத்துவிட்டு அவர்களிடம் அதை திரும்ப வசூல்பண்ண நாயாய் அலையாமல் அவர்களே வட்டியை தங்கள் வட்டி கடைக்கு கொண்டுவந்து கொடுக்கும் அளவிற்கு மாற்றியிருந்தான்……

 

கதிர் காயத்ரி கல்யாணதினம் கோலாகலமாக விடிய துரை பம்பரமாய் சுழன்று எல்லா வேலையையும் பார்த்திருந்தான்… எந்த வேலையாய் இருந்தாலும் அதை கச்சிதமாய் செய்திருக்க அரவிந்தும் துணை நின்றிருந்தான் …..

கதிர் காயத்ரி கழுத்தில் தாலிகட்ட தமிழும் கனியும் நாத்தனார் முடிச்சு போட்டனர்… தமிழை கவனித்துக் கொண்டிருந்த அரவிந்த நொடிக்கொருமுறை அவளுக்கு என்ன வேண்டும் ஏதாவது கொண்டு வரவா … வந்து உட்கார்ந்து ரெஸ்ட் எடு என சொல்லிக் கொண்டிருக்க கனியும் அவள் தங்கைகளும்தான் அவர்களை ஓட்டத்துவங்கினர்….

 

கனி மாமா என்ன அக்காவை விட்டு ஒரு நிமிசம்கூட இருக்க மாட்டிங்க போல…. அட…..டட…டடா …..??”

 

தமிழ் ஏய் சும்மா இருடி அவங்கள ஒன்னும் சொல்லாத தன் கணவன் கைக்குள் கையை கொடுத்தவள்….உன்வீட்டுக்காரர் மட்டும் என்ன மட்டமா… அங்க பாரு கைதான் வேலை பார்க்குதே தவிர கண்ணு ஒரு நிமிசத்துக்கொருதரம் பொண்டாட்டிய சைட் அடிக்கிது…??”

 

கனி நிமிர்ந்து பார்க்க துரை கனியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்…  கனிக்கு வெட்கம் தாங்கவில்லை….

 

தமிழ் ஆனா இந்த கதிர் அண்ணாவை பாரேன்… கேடி….. என்னமோ முன்னபின்ன காயத்ரியை பார்க்காம பெத்தவங்களா பார்த்து செய்யுற அரேஜ்டு மேரேஜ் மாதிரி காயத்ரிய நிமிர்ந்துகூட பார்க்காம மத்தவங்களோட பேசிக்கிட்டு இருக்கு…

ப்பா இந்த ஆம்பளைங்கள நம்பவே கூடாது….. நான்தான்  உருண்டுபிரண்டு அடியெல்லாம் வாங்கி இவங்கள கல்யாணம் பண்ணினேன்…

இதுக ரெண்டும் என்னன்னா பிள்ளையார் தன் அம்மா அப்பாவ சுத்திவந்து மாம்பழத்தை வாங்கின மாதிரி இருந்த இடத்துலயே இருந்துகிட்டு லவ் பண்ணின பொண்ண கல்யாணம் பண்ணிருச்சுக… தன்னை நோக்கி தன் சுட்டுவிரலை நீட்டியவள் தமிழு நீ இன்னும் வளரனும்டி….. ??”

 

அரவிந்த் அவள் காதிற்குள்… ஆமாண்டி நீ இன்னும் வளரனும் இப்ப நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறதானே…??”

 

அவனை பார்த்தவள் என்னத்தான் கேட்கலை…??”

 

ம்ம்ம் முத்தம் கொடுக்க சொன்னா என்னம்மா யோசிக்கிற… குளிச்சிட்டேன்… விரதம்னு சொல்லுறதானே… அதெல்லாம் விடனும்டி….கேட்டவுடன குடுக்கனும்…  அப்புறம் பகல்ல…..????” ஏதோ ஆரம்பிக்க அவன் வாயை மூடியவள் ……. அடப்பாவி என்ற ரேஞ்சுக்கு பார்த்துவைக்க….

 

க்கும்…க்கும்…மாமா நாங்களெல்லாம் இங்கதான் இருக்கோம்….

 

இன்னுமா போகாம இருக்கிங்க…??” அவர்களை  கேலி செய்ய ஆரம்பித்தான்… திருமணம் நல்ல முறையில் நடைபெற வந்தவர்களை வரவேற்று சாப்பிட்ட சொன்னவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறையவும் போட்டோ கிராபர் வந்து அனைவரையும் சேர்த்து ஒரு குரூப் போட்டோ எடுத்தார்…

துரைக்கு தன் திருமணத்தன்று கனி தன்னைவிட்டு தள்ளி தள்ளி போனது நியாபகம் வர… திரும்பி தன் மனைவியை பார்த்தான்… கனி இயல்பாகவே தன் அருகில் நெருக்கமாக தன் கையோடு கைவைத்து தோளில் சாய்ந்தபடி நின்றிருந்தாள்….

மலர்ச்சியோடு அவள் தோளில் கைப்போட்டவன் அவளை இன்னும் நெருங்கியிருந்தான்… கனி தன் அத்தானை நிமிர்ந்து பார்க்க அவளை நோக்கி கண்சிமிட்டியவன் அவள் தாடையை பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஏதுவாக முன்புறம் திருப்ப… என்னாச்சு அத்தான்…கிசுகிசுப்பாக கேட்க…

 

அவள் காதிற்குள் ஐ லவ்யுடி பொண்டாட்டி… கனி கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டாள்… இத்தனை பேரை வைச்சிக்கிட்டு என்ன சொல்லுராங்க….. தமிழ் தன் மாமனார் மாமியாரை நல்ல முறையில் கவனித்து சாப்பிட அழைத்துச் செல்லவும் கனியும் சென்று அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள்…..

அன்றைய பொழுது போய் மயக்கும் இரவு வர காயத்ரியை முதலிரவு அறைக்கு தயார் செய்து அனுப்பிவிட்டு கனி தங்கள் வீட்டிற்கு வர துரை தன் வண்டியை கிளப்பியபடி இருந்தான்….

 

எங்கத்தான் கிளம்பிட்டிங்க… இன்னேரத்துக்கு…??”.

ஏய் சீக்கிரமா வா உனக்காகத்தான் வெயிட்டிங்…??”

எங்க போறோம் அத்தைக்கிட்ட சொல்லலையே…??”

அதெல்லாம் சொல்லிட்டேன் வாடி…??” தன் வண்டியை தோப்பு வீட்டிற்கு விட்டவன்…. அவளை ஒரு அறைக்குள் தள்ளி தன் பையில் இருந்த சேலையை குளித்துவிட்டு கட்டிவரச் சொல்ல…

அது அன்று அவன் அவளுக்காக எடுத்திருந்த பிங்க் நிறச்சேலை…. ஐயோ… இதுவா அலறியவளை உள்ளேவிட்டு கதவடைத்தவன் தங்கள் அறைக்குள் நுழைந்திருந்தான்….

ஒரு அரைமணி நேரம்கழித்து  கனி தயாராகி வர  துரை தன் அறையை முதலிரவு அறையை போல தயார் செய்து வைத்திருந்தான்… அப்படியே வாய்பிளந்து நின்றவளை பின் இருந்து அணைத்தவன்…. ஏய் என்ன இவ்வளவு ஷாக்…??”

 

ஏங்க இதென்ன வேலை….??”

ம்… நமக்குத்தான் முதலிரவு முறைப்படி நடக்கலையே… நீதான் கல்யாணம் நடந்த அன்னைக்கே இந்த அப்பாவி அத்தான அம்போன்னு விட்டுட்டு போயிட்டியே அதான்……??” அப்பாவிபோல முகத்தை வைத்தபடி சொல்ல….

அவன் பாவனையில் சிரித்தவளை மோகத்துடன் பார்த்தவன் தன் சட்டையில் இறக்கம் அதிகமாக இருக்கவும் தன் தலைமுடியை விரித்து விட்டிருந்தவளின் முடியை ஒதுக்கி அவள் முதுகில் இருந்த தன் முத்த எண்ணிக்கையை ஆரம்பிக்க… அவன்மீசை குறுகுறுப்பில் நெளிந்தவளை தன்னுள் இறுக்கியவன்…அங்கு டேபிளில் இருந்த மல்லிகை பூவை எடுத்து அவள் தலையில் வைத்து தன் முகத்தை அதில் புதைத்திருந்தான்…

 

ஒரு ஐந்து மாதம் கழித்து….

 

மீனாட்சியிடம் இருந்து வந்த போனை ஆன் செய்து பேசியவன்… இதோ கிளம்பிட்டேன்மா…. வந்துக்கிட்டே இருக்கேன்…. ம்ம்ம் போட்டுட்டேன்…??” அடுத்த பத்து நிமிடத்தில் தன் வீட்டில் இருக்க….

 

கனி தயாராகி வாசலில் அமர்ந்திருந்தாள்… என்ன தம்பி இவ்வளவு  லேட்டாக்கிட்ட…. இன்னைக்கு டாக்டர் வரச் சொல்லியிருந்தாங்க தானே….??”

 

இதோ கிளம்பிட்டேன்மா… கனி போவமா…??”

 

தன் அத்தையிடமும் அப்பத்தாவிடமும் சொல்லிவிட்டு கிளம்ப அவள் காரில் ஏற கதவை திறந்து வைத்தவன் தன் மனைவி ஏறவும் கதவை அடைத்துவிட்டு  காரை கிளப்ப……

 

என்னத்தான் வேலை ரொம்ப இருந்துச்சா….??”

 

தன் மனைவியின் முகத்தை ஆசையுடன் பார்த்தவன்… ஆமாண்டா கொஞ்சம் லேட்டாகிருச்சு… வண்டியை மெதுவாக ஓட்டியபடி அவள் வயிற்றில் தன் கையை வைத்தபடி நம்ம புள்ளைக ரெண்டும் என்ன சொன்னாங்க…..??”

 

ம்ம்ம் இந்த அப்பா ரொம்ப மோசம் இன்னும் அம்மாவ பார்க்க வரலைனு சொன்னாங்க….??”

 

அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்தவன். அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டாங்களே… அவங்க ரெண்டும் என் செல்லம்ஸ்….குட்டிஸ்…தங்கம்ஸ்…. அவங்க அப்பா வேலைக்கு போற அந்த நேரத்தை தவிர உன்னைத்தான் சுத்தி சுத்தி வர்றதா சொல்லியிருப்பாங்க…. உண்மைதானே….??”

 

கனி என்ன அதை மறுக்கவா போகிறாள்… அவளுக்கும் தெரியும் அதுதான் உண்மையென்று….

 

 

Advertisement