Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
 
அத்தியாயம்  –   15
 
 
கனி அங்கு அமர்ந்திருந்த துரையை பார்க்கவும் இவங்களா……???” என எழுந்தவள் அப்படியே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க துரையோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தன் வீல் சேரை லேசாக ஆட்டியபடி அவளை தன் லேசர் பார்வையால் ஆராய்ந்தபடி..
 
.சொல்லுங்க மேடம் என்ன வேணும்… உட்காருங்க ??”
 
கனிக்கு இன்னும் அதிர்ச்சியாக மேடமா…. நாமளா…. ஒரு வருசத்துக்குள்ள நம்ம முகத்தையே மறந்திட்டாங்களா… அப்படியா நாம ஆளே அடையாளம்  தெரியாத அளவுக்கு மாறிட்டோம்…. அவள் பேவென விழிக்க…இவன் தன் பார்வையை மாற்றவில்லை…
அவளை யாரோ போல பார்த்திருக்க கனிக்கு முதல்முறையாக மனதில் அடிவிழுந்தது…. இந்த ஒரு வருசத்துல வேற ஒரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களோ.. இவனை பார்த்த அதிர்ச்சியில் இவளுக்கு கண்ணைக்கட்டி மயக்கம் வருவது போல இருக்க… அவன் எழுந்து நிற்க…. இவளும் தன்னை அறியாமல் எழப்போனவளை… தன் கையால் உட்காரும்படி சைகைகாட்டியவன்….
 
தன் பின்புறம் இருந்த வாட்டர்கேனை எடுத்து அவள் கையில்கூட தராமல் அவள் பக்கம் வைத்தான்… இப்போது அவன் தோற்றத்தை கண்டு வியந்திருந்தாள்…. முன்பெல்லாம் முடி அதிகமாக அவன் நெற்றியில் வந்து புரளும் …சாதாரணமாக வேட்டி சட்டைதான் அணிந்திருப்பான்… இப்போது  கருப்பு நிற பேண்ட் வெள்ளை முழுக்கைச் சட்டை அணிந்திருந்தான்… கருப்பு சூ அணிந்திருந்தான்… .தலையை சற்று ஒட்ட வெட்டி மீசையை கத்தரித்து ஆளே மாறி …
முன்பிருந்ததைவிட இன்னும் அழகானவன்  போல இருக்க இவ்வளவு மாறியுமே நமக்கு இவங்கள தெரியுது ஆனா இவங்களுக்கு தெரியலையா இல்ல வேணும்னே நடிக்கிறாங்களா…. அவளுக்கும் தொண்டைக்குள் ஏதோ அடைத்து பேச்சே வராமல் தண்ணீர் வேண்டும் போல இருக்க தன் பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்…….
 
கனி துரையை நோட்டமிட்டது போலவே அவனும் அவளை அங்குலம் அங்குலமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்… அப்போது பார்த்ததைவிட நல்ல மெலிந்த தோற்றம் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு காதில் கையில் ஒரு பிளாஸ்டிக் வளையல்…. தோடு…  இரவெல்லாம் சரியான தூக்கம் இல்லாதவள் போல கண்ணைச்சுற்றி கருவளையம்…. ஒரு சாதாரண பூனம் சேலை…
இந்த ஒரு வருடத்திலேயே நிறைய மாற்றங்கள் அவளில்… அப்போதும் அவள் தங்கம் அணியவில்லைதான் ஆனால் அவள் முகத்தில் ஒரு துறுதுறுப்பு இருக்கும் …. இப்போது அவள் முகத்தில் வயதிற்கு மீறிய பொறுப்புணர்ச்சி….  அவளை பார்த்தவன் தன் கையை இறுக மூடி கோபத்தை கட்டுப்படுத்தியபடி அவள் தோற்றத்தை இன்னும் ஆராய்ந்து பார்க்க அவள் இப்போது பேசுவது போல தெரியவில்லை எனவும்…..
 
 உங்களுக்கு பேச ஒன்னும் இல்லைனா கொஞ்சம் வெளிய போங்க எனக்கு நிறைய வேலை இருக்கு…??” வாசல்பக்கம் கையை காட்ட….
 
அவளுக்கு சட்டென கண்ணீர் குளம் கட்டியது… அவள் முகமாறுதலை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் பியூனை அழைக்க பெல்லில் கைவைக்க போக….தன் சுயநினைவுக்கு வந்து…  காயத்ரியின் நிலையை எண்ணி பார்த்தவள்…..சட்டென
 
 ஸார்… நாங்க லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தோம்… அத பத்தி கேட்கத்தான் வந்தேன்…??”
 
ம்ம்ம்….” என்றவன் அங்கு மேஜையில் இருந்த அப்ளிகேசன்களில் இருந்து அவர்களுடையதை எடுத்தவன்…. எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்க்க அவளின் புகைப்படத்தை தடவிப்பார்க்கும் ஆசையை கட்டுப்படுத்தியவன்…. உனக்கு லோனா நீ எப்படி என்கிட்ட லோன வாங்கப்போறன்னு நான் பார்க்கத்தானே போறேன்….
அதை நன்கு ஆராய்ந்தபடி சில சான்றிதழ்கள் தேவைப்படவும் அதை சொன்னவன் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்லி….அவளை போகச்சொல்லிவிட்டு பியூனை உள்ளே வரச்செய்து தனக்கு ஹோட்டலில் சாப்பாடு வாங்கிவரும்படி சொல்லி அனுப்ப….
 
வெளியே கால்வைக்க போனவள் அவன் சொன்னதை கேட்கவும் ஹோட்டல் சாப்பாடா … தன்னை அறியாமல் …..
 
அத்தை சாப்பாடு கட்டித்தரலையா… இல்ல உங்க மனைவி….??” என இழுக்க…….
 
என்னோட பர்சனல் விசயங்களை பத்தி கேட்க நீங்க யாரு… நான் கண்டவங்ககிட்டயும் என்னோட பர்சனல் விசயத்தை பேச தயாரா இல்ல… நீங்க இப்ப போகலாம்??”
 
அப்படியே கையால் வாயை மூடியவள் சட்டென வெளியில் வந்திருந்தாள்….  அவளை உள்ளிருந்தே கேமராவில் பார்த்துக் கொண்டிருக்க கேபினில் யாரும் இல்லாமல் அனைவரும் சாப்பிட சென்றிருக்க பியூன் மட்டும் வெளியில் அமர்ந்திருந்தான்…
இவள் அங்கிருந்த சேரில் அமர்ந்து தன் கண்ணைத் துடைத்து முகத்தை சீராக்கியவள் இரண்டு நிமிடம் கண்ணை மூடி அமர்ந்திருந்து விட்டு தன் கைப்பையுடன் வெளியேறியிருந்தாள்….
 
இவள் சென்ற பத்து நிமிடங்களில் துரைக்கு சாப்பாடு வர அதை  பார்த்தபடியே இருந்தவன் அவளின் மெலிந்த தோற்றமே தன் கண்முன்னால் வர… மறுபடி பியூனை அழைத்து அந்த சாப்பாட்டை அவனையே சாப்பிடச் சொல்லி எடுத்து போகச் சொன்னான்…
 
பேங்க்கில் இருந்து வெளியே வந்த கனிக்கு கடைக்கு செல்லும் மனநிலை இல்லாததால் நாளை வந்து கடையை திறந்து கொள்ளலாம் என முடிவு செய்தவள் வீட்டிற்கு நடக்க ஆரம்பிக்க நடக்கும் பாதையை கண்ணீர் மறைத்தது….
நாமதானே அவங்கள வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டோம்… அப்புறம் அவங்க ஹோட்டல்ல சாப்பிட்டா என்ன பட்டினியா இருந்தா என்ன…யார கட்டிக்கிட்டா என்ன தன் மஞ்சள் கயிற்றை தொட்டுப் பார்த்தவள் அது கோர்த்திருந்த தாலி அவன் கட்டியது… செயினை அடகு வைத்திருந்தாள்.. .. இது நம்ம கழுத்துல இருக்கிறதாலதான் நிறைய ஆண்கள் நம்மகிட்ட தவறா பேசவோ நடக்கவோ முயற்சி செய்யலை…
 
 தான் செய்தது தவறு என வீட்டை விட்டு வந்திருந்த நாளில் இருந்து அவளுக்கு உறுத்த ஆரம்பித்திருந்தது… இப்ப வீட்டவிட்டு வந்த நாம இவங்க தாலி கட்டுறதுக்கு முன்னாடியே உறுதியா நின்னிருக்கனும்… நம்மள என்ன கையை கால கட்டியா கல்யாணம் பண்ணினாங்க… ரொம்ப அவமானப் பட்டுட்டாங்களோ…
ஆமா நீ அன்னைக்கே சொல்லாம கொள்ளாம ஓடிவந்தின்னா …… திரும்ப பார்க்கும் போது இந்த அளவுக்கு பேசுனதே பெரிசு இவங்க கொஞ்சம் மாறிட்டாங்களோ…. முன்னாடி மாதிரி இருந்திருந்தா நம்மள அடிச்சிட்டுதான் மறுவேலை பார்த்திருப்பாங்க…இப்ப இவங்க நம்மள பார்த்தத அத்தைகிட்ட சொன்னா கண்டிப்பா அத்த வந்து நம்மள பார்ப்பாங்க… நம்மள வரச் சொல்லுவாங்களோ….
 
ஒரு மனம் ஆமாம் என்று சொல்ல மற்றொரு மனமோ… உனக்கெல்லாம் வெட்கமே இல்ல நீதான் அவங்க மகன வேண்டாம்னு சொல்லிட்டு அசிங்கப்படுத்திட்டு வந்திருக்க மறுபடி உன்னை எப்படி கூப்பிடுவாங்க… வந்திருக்குற புது மருமக என்ன சொல்லுவாங்களோன்னு நினைக்க மாட்டாங்க… கனிக்கு தன் மனம் என்ன நினைக்கிறதென்றே தெரியவில்லை…
இப்ப நம்மள பார்த்ததும் இவங்க என்ன பண்ணியிருக்கனும்னு நினைக்கிற… உன்கிட்ட நல்லா பேசனும்னா… இல்ல நல்லா கோபத்தை காட்டியிருக்கனும்னா… துரை தன்னை பார்த்தால் ஒன்று திட்டுவான் இல்லை அவனின் குணத்திற்கு ஒரு அறையாவது வைப்பான் என நினைத்திருக்க இது எதுவும் நடக்காமல் தன்னை யாரோ போல நடத்தியதை கனியால் தாங்கமுடியவில்லை… அவளுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது…… அங்கிருந்து மெதுவாக தங்கள் வீட்டிற்கு வரவே ஒரு முக்கால் மணி நேரமாயிற்று…
 
 
வீட்டிற்கு வரும்போதே நிறைய செருப்புகள் வாசலில் கிடக்க யார் வந்திருக்காங்க… காயத்ரி அக்கா சொந்த காரங்களா…. அவங்களுக்கு யாரும் இல்லைனு சொன்னாங்களே ஒரே சத்தமாக இருக்கவும் மெதுவாக உள்ளே நுழைய வாசலில் நுழையும் போதே பார்த்து விட்டாள் அப்பத்தாவை…..
தன் தங்கைகளை கட்டிப்பிடித்தபடி அழுது கொண்டிருக்க இவள் உள்ளே நுழையவும் அனைவரும் இவளை சூழ்ந்தனர் அடுத்த  அரைமணி நேரத்தில் கனி அப்படியே ஆச்சர்யத்தில் வாய்பிளந்து அமர்ந்திருந்தாள்… அவர்கள் சொன்னதை கேட்டு…. இது எப்படி….
 
இவங்க நம்ம அத்தையா…… மீனாட்சியையும் வசந்தாவையும் கட்டிக் கொண்டு அழ அந்த இடமே ஒரு கணமான சூழ்நிலையில் இருந்தது… கனிக்கு அப்ப அவங்க நம்ம சொந்த அத்தை பையனா…கதிர் அண்ணா இனி நமக்கும் உண்மையான அண்ணனா…யோசிக்க அப்படியே கண்ணீர் கரகரவென ஊற்ற அப்பத்தா வந்து கனியை கையை எடுத்து தன் மடியில் வைத்தபடி….
 
 
ஐயோ… நான் பெத்த மக்கா…. நானும் என்ற புள்ளைகளும் இருந்தும் நீங்க .யாரோ மாதிரி அனாதை இருந்திருக்கிகளேத்தா… நான் என்ன பண்ணுவேன்… போன பிறவியில என்ன பாவம் பண்ணுனனோ என் புள்ளைய தொலைச்சேன்… என்  மக ரெண்டே வருசத்துல புருசன சாகக்குடுத்துட்டு புள்ளையோட வந்தா…. நீங்க இப்படி சாப்பாட்டுக்கே வழியில்லாம இந்த வீட்டுல இருக்கிகளே…
இதெல்லாம் பாக்கனும்னா என்னை இத்தனை வருசம் உசுரோட வைச்சே… தெய்வமே நீ என்ன கல்லா…உனக்கு கண்ணே இல்லையா….??” அவர் இத்தனை வருடம் தன் மனதிற்குள் இருந்த மன குமுறல்களை தன் அழுகையால் வெளிப்படுத்த முத்துராமனும் மீனாட்சியும் தன் தாய்க்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்…
 
 காயத்ரிக்கு இவர்கள் முழு குடும்ப விபரம் தெரியாது… கல்யாணம் ஆனது மட்டுமே சொல்லியிருந்தாள் மற்ற விபரங்கள் தெரியாது இன்று இவர்களை பார்த்தவுடன் அவளுக்கும் சந்தோசம் நமக்குத்தான் யாருமில்லை… இவங்களுக்காச்சும் எல்லாரும் இருக்காங்க… 
கதிர் தன் தங்கைகளோடு அங்கிருந்த சேரில் அமர்ந்திருக்க கதிரின் பார்வை வந்ததிலிருந்து காயத்ரியைத்தான் சுற்றிக் கொண்டு இருந்தது… அவள் குடும்ப விபரம் தெரியவும் அவள் மேல் பரிதாபம் எழ…. அத்தோடு கனியையும் அவதங்கச்சிகளையும் பார்த்துக்கிட்ட நன்றி உணர்ச்சியும் சேர்ந்து வந்தது… …..
 
 
முத்துராமன் அனைவரையும் வீட்டிற்கு கிளம்ப சொல்ல கனி அப்போதுதான் கவனித்தாள்…. துரையின் மனைவி மட்டும் வராததை… இப்ப எதுக்கு அங்ககூப்பிடுறாங்க… துரை அந்த அப்ளிகேஷனில் கனியின் போட்டோவை பார்க்கவுமே தன் தாய்க்கு போன் செய்திருந்தான்… அவர்கள் கனி பேங்க்கிற்கு போவதற்குள் பாதி தூரத்திற்கு மேல் வந்திருக்க வந்ததிலிருந்து ஹரிணியோடும் ரம்யாவோடும் பொழுதை கழித்தவர்கள் அவர்களுக்கும் இவர்களின் பாசம் தேவையாக இருந்தது ….ஹரிணியும் ரம்யாவும்…கனி திருமணம் முடிந்து வீட்டை விட்டு கிளம்பும் போது எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் தான் சாகப்போவதாக சொல்லி மிரட்டித்தான் அழைத்து வந்திருந்தாள்….
வந்ததிலிருந்து உழைப்பு உழைப்பு உழைப்பு அது மட்டுமே அவளின் முழுமூச்சாகி போக இவர்களுக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியாமல் நாமதான் அக்கா வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருக்கோமோ என்ற எண்ணம்கூட வந்திருந்தது… கிடைத்த ஒய்வு நேரத்தில் எல்லாம் அக்காவிற்கு உதவி செய்திட ஆரம்பித்தனர்… இன்று மற்றவர்களை போல தங்களுக்கும் எல்லா சொந்தமும் இருப்பதை உணர்ந்தவர்கள் இந்த முறை அக்கா என்ன சொன்னாலும் கட்டாயம் அக்காவையும் அழைத்துக் கொண்டு இவர்களோடு கிளம்ப வேண்டும்… அக்காவும் மாமாவும் சந்தோசமா இருக்கனும் என கடவுளை வேண்டிக் கொண்டார்கள்…
 
இந்த முறை கனி என்ன சொன்னாலும் யாரும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை… அப்பத்தா ஒருவரே தன் பேத்தியை பேசி பேசி கரைக்க ஆரம்பிக்க எந்த பக்கம் போகமுடியாமல் கடைசியில் காயத்ரியை கையை காட்டினாள்…
 
அக்காவுக்கு வேற உதவிக்கு ஆளில்லை… அவங்க செஞ்ச உதவிக்கு இப்ப நாங்க அவங்களோட கண்டிப்பா இருக்கனும் ப்ளிஸ்….??”. என கெஞ்ச…
 
மீனாட்சி….ஏத்தா எங்கள பத்தி என்ன நினைச்ச நாங்க கிளம்ப சொன்னது காயத்ரியையும் சேர்த்துத்தான்… அவள மட்டும் தனியா விட்டுட்டு போக நாங்க என்ன அவ்வளவு கல்நெஞ்சு காரங்களா…. போத்தா போய் கிளம்புற வழிய பாருங்க….??”.. இப்போது முழிப்பது காயத்ரியின் முறையாயிற்று… நாமளா இவங்கள இப்பத்தான் முதல்முறையா பார்க்கிறோம்… நாம எப்படி இவங்களோட…
 
ஐயோ இல்லம்மா நான் வரல…. இது நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே இங்கதான் எனக்கு ஒன்னும் பயமில்ல …. நீங்க மட்டும் கிளம்புங்க….??”
 
வசந்தாவோ…. டேய் கதிரு இவங்க இப்படியெல்லாம் சொன்னா கேட்க மாட்டாங்க…. நீ போய் வண்டி பிடிச்சிட்டு வா… சாமான எல்லாத்தையும் மூட்டை கட்டுறோம்….??” அவர் அதற்குள் எல்லாவற்றையும் மூட்டை கட்ட போக …..
 
 
கதிரோ….. ஹப்பா அம்மாவும் நமக்கு அப்பப்ப உதவி பண்ணுறாங்க…. காயத்ரியை சைட் அடித்தபடி வெளியில் சென்றவன் ஹோட்டலுக்கு சென்று மதிய உணவோடு வண்டியும் பிடித்து வர இவர்கள் அனைவரும் சாப்பிட்டு சாமான்களை ஏற்றி வீட்டுக்கு வர மணி 6 ஆயிற்று….
 
கனி உள்ளுக்குள் உதறலோடு வர… போச்சு போச்சு இன்னைக்கு நாம அவங்கமனைவிக்கிட்ட வேற அவமானம் படனும்… என்ன பண்ணலாம் நைட்டுக்கு மட்டும் பார்த்துட்டு நாளைக்கு வேற எங்கயாச்சும் போயிருவமா….
கடவுளே இதென்ன சோதனை… அவங்க வீட்டவிட்டு வெளிய விரட்டிடுவாங்களோ..இல்ல அண்ணா வீட்டுலயே இருந்துக்கலாமா…. அச்சோ நாம இன்னைக்கு செத்தோம்… கனி வகையாக ஒன்றை மறந்து விட்டாள்…துரை சொல்லாமல் எப்படி அத்தையும் மற்றவர்களும் நம்ம வீட்டுக்கு வருவார்கள் என்பதை … அனைவரும் வீட்டிற்கு வரும் போது மணி 6 இருக்கும் அனைவரும் வீட்டிற்குள் செல்ல… கனியும் உள்ளே நுழையப்போக….

Advertisement