Advertisement

மனதால் உன்னை சிறையெடுப்பேன்
 
அத்தியாயம்  –  13
 
கனிக்கு தன் எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயமாக இருந்தது… இப்ப எல்லாரும் இருக்கும் போதே இவங்க இப்படி பேசுறாங்களே நாம தனியா இவங்களோட எப்படி இருக்கிறது….அன்று கோபத்தில் முத்தமிட்டதும் இன்று எல்லோரும் இருக்கும்போது அடித்ததும் இப்போது பேசியதும் என அவள் துரையை விட்டு மனதால் இன்னும் இன்னும் விலகித்தான் நின்றாள்… தமிழை நினைத்தும் அரவிந்தை நினைத்தும் கோபமாக வந்தது… இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறதா இருந்தா முதல்லயே சொல்லியிருக்கனும் அதவிட்டுட்டு இவ்வளவுதூரம் வந்த பிறகு கடைசி நேரத்துல சொன்னா… என்ன அர்த்தம் இவங்க ரெண்டு பேராலத்தான் நான் இப்ப இவங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்…..அதெப்படி பார்த்த கொஞ்ச நாளுலேயேவா லவ் வரும்…. இதென்ன லவ்வோ….. மனம் ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தாலும்  மணமக்கள் இருஜோடியும் எல்லாருடைய காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர்கள்… அவர்களிடம் திருநீறு பூசிக் கொண்டார்கள்…….
 
 முத்துராமனுக்கும் வசந்தாவுக்கும்தான் மனதை பிசைந்தது… இனி துரை நமக்கு மாப்பிள்ளையாக முடியாதா…. சிறுவயதில் இருந்து அவன்தான் மருமகனாக போகிறான் என்ற நினைப்பிலேயே இருந்துவிட்டு இன்று அதை மாற்றுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது…இந்த ஏமாற்றத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை….. கதிர் எந்த வேலையிலும் பங்கு கொள்ளாமல் அப்படியே ஒரு மூலையில் அமர்ந்துவிட்டான்… இந்த மூனு நாளா இருந்த உற்சாகம் போன இடம் தெரியவில்லை…..உற்சாகமாக இருந்தபோது மலைபோல குவிந்த வேலைகளை  கடகடவென செய்தவன் இன்று அப்படியே யார்வீட்டு கல்யாணமோ என அமர்ந்திருந்தான்…சிறுவயதில் இருந்தே தன் தங்கையின் கணவனாக துரையையே நினைத்திருந்தவனுக்கு இப்போது அந்த இடத்தில் அரவிந்தா…..
 
 மீனாட்சி அம்மாள்தான் எல்லாவற்றையும்  மேற்பார்வை பார்க்க காலை மதிய விருந்து  முடிந்து உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிளம்ப ஆரம்பித்தார்கள்.. அரவிந்தின் தந்தை வரவில்லை முக்கியமான வேலை இருப்பதால் நாளை வருவதாக சொன்னவர் வந்து கனியோடும் அவள் தங்கைகளோடும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வரவேண்டும் என சொல்ல…  மீனாட்சி அம்மாவிடம் இருந்து போனை வாங்கிய அரவிந்த் இங்கு நடந்ததை சுருக்கமாக சொல்ல….. அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…
 
அரவிந்த் வீட்டிற்குகூட செல்லாமல் நேரடியாக இங்கேயே வந்திருந்தான்… கனியை தன் மருமகளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்…இன்று தன் மகன வேறு பெண்ணை விரும்புவதாக சொல்லவும்….அந்த பொண்ணு மேல ரொம்ப விருப்பம் இருக்கிறதாலத்தான் இவன் நம்மகிட்டக்கூட சொல்லாம இங்க வந்திருக்கான் … தனக்கு இருப்பது ஒரு மகன் அவனுடைய விருப்பம்தான் முக்கியம் என நினைத்து.. இப்பொழுது தன்னால் கிளம்பிவர முடியாது… நீங்களே திருமணத்தை நடத்தி வையுங்கள் என மீனாட்சியிடம் சொல்லியிருந்தார்…  மீனாட்சி அரவிந்தையும் தமிழையும் எல்லா சீர்வரிசை முறைகளோடு குடும்பமாக சேர்ந்து போய் முறைப்படி விட்டுவிட்டு வருவோம் என சொல்லி லாரியை வரச் சொல்லி அவள் சீர்வரிசைகளை ஏற்றச் சொல்லியிருந்தார்….
 
கனிக்கு அங்கு மணமேடையில் நிற்க முடியவில்லை… வரும் உறவினர்களோடு இயல்பாக பேசி துரை அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருக்க போட்டோ கிராபர்தான் ஒவ்வொரு முறை போட்டோ எடுக்கும் போது கனியை மாப்பிள்ளைக்கிட்ட இன்னும் கொஞ்சம் நெருங்கி நில்லும்மா என சொல்ல வேண்டியதாக போயிற்று….. உறவினர்கள் செல்லவும் மாலை மறைவில் கனியின் கையை பிடித்தவன்…
 
எவ்வளவு நேரம்தான் நீ இப்படி தள்ளிப் போக முடியும் இன்னைக்கு ராத்திரின்னு ஒன்னு வரும்ல அப்ப என்ன பண்ணப்போற…..??” துரை தன் காதல் யாரிடமும் சொல்லாமல் ஜெயித்ததை நினைத்து சந்தோசப்பட்டவன் பின் திடிரென சிரித்து…. நாம காதலிக்கிறவளுக்குகூட தெரியாம ஜெயிச்சிருச்சு…. துரை இன்று இரவு தான் கனியிடம் காதலை சொல்லும் தருணத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க…. கனியோ துரை சொன்னதை மீண்டும் ஒரு முறை யோசித்து பார்த்தவள்….
 
 
ஐயோ நாம இப்ப என்ன பண்ணப்போறோம்… இவங்கிக்கிட்ட தனியா மட்டும் மாட்டவே கூடாது கடவுளே நீதான் காப்பாத்தனும்…. கடவுளுக்கு அவசரமாக வேண்டு கோளை வைக்க…
 
அங்கு தமிழும் அந்த நிலையில்தான் நின்றாள் வைராக்கியமாக இவ்வளவு நேரம் நின்றவள் காலையில் தன் தந்தை பெல்டால் அடித்தது உடம்பு புண்ணாக வலித்தது… பட்டு சேலை கட்டி மூடியிருந்தாலும் சில இடங்களில் அப்படியே கன்றி சிவந்து போய் இருந்தது… எப்படா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்போம்.. கண்ணை கட்டி மயக்கம் வருவது போல இருக்க…ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் அரவிந்த்தான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றவள்…தன் அம்மா… அப்பா… அண்ணா மூவரும் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருப்பது இன்னும் வேதனையாக இருந்தது… கல்யாணத்திற்கென்று தனக்கு ஒரு கிளிப் வாங்கினால்கூட தன்னிடம் வந்து அவ்வளவு நேரம் விளக்கம் கொடுக்கும் அம்மா… நகையோ …துணியோ வாங்க கூட்டிப் போனால் விலையை பார்க்காமல் தான் விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுக்கும் அப்பா… எல்லாவற்றையும் விட கதிரை அவளுக்கு ரொம்ப பிடிக்கும் வெளியில்தான் சும்மா அடித்துக் கொண்டு சண்டைப்போட்டாலும் தன் அண்ணன் என்றால் உயிர்… அப்படிப்பட்ட அண்ணன் யார்வீட்டு கல்யாணம் போல சேரில் அமர்ந்திருப்பது அவளுக்கு மனது தாங்கவில்லை…
 
 
. அரவிந்த் தமிழை பார்த்தவன் அவளை ஒரு சேரில் அமர வைத்து அவளுக்கு அங்கிருந்தவர்களிடம் ஒரு ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லி… அவளை அவளுடைய அறையில் சற்று ஓய்வெடுக்கச் சொன்னான்….
 
 
 அரவிந்த் திடிரென கிளம்பி வந்ததால் அவன் வேலை பார்த்த இடத்திலிருந்து போன் வந்து கொண்டே இருக்க…..அந்த போன்கால்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்….தான் திடிரென வந்த சூழ்நிலையை சொல்ல…. அவன் மேலதிகாரிகள் இன்னும் ஒரு நாள் மட்டும் லீவ் எடுத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த பிராஜக்டை முடித்துக் கொடுத்துவிட்டு ஒரு பத்து பதினைந்து நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளும்படி சொல்லிவிட நாளை இரவு கண்டிப்பாக தான் கிளம்ப வேண்டும் என நினைத்தவன் அதற்குண்டான வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்…. மீனாட்சியையும் … முத்துராமனையும் அழைத்து விபரத்தை சொல்லி தான் பத்து நாட்கள் கழித்து வந்து மீண்டும் ஊருக்கு செல்லும் போது தமிழை தன்னோடு அழைத்து செல்வதாக சொல்லி அவளுக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான வேலையை ஆரம்பிக்க தேவையான சான்றிதழ்களையும் மீனாட்சி அம்மாவிடம் கேட்க ஆரம்பித்தான்…. முத்துராமனும் கதிரும் தான் இருக்கும் பக்கமே வராததால் அடுத்த லீவுக்கு வரும்போது இவர்களோடு பேசி பழகி தன் மனதை புரியவைக்கலாம் என முடிவு செய்தான்..
 
துரை பந்தியை கவனித்துக் கொண்டிருக்க கனியும் அவள் தங்கைகளும் என்ன செய்வதென தெரியாமல் அங்கிருந்த சேரில் அமர்ந்திருந்தனர்… கனிக்கு இரவு நேரம்கழித்து படுத்ததால் தூக்கம் வருவது போல இருக்க முகத்தை கழுவலாம் என தமிழின் அறைக்கு சென்றவள் கதவு சாத்தியிருக்கவும் ஒரு வேளை அரவிந்தும் தமிழும் உள்ள இருக்காங்களோ என நினைத்து தயங்கியவள் பக்கத்தில் இருந்த அப்பத்தாவின் அறைக்கு போக அப்பத்தா கண்மூடி படுத்திருந்தார்… தூங்குகிறாரா… இல்லையா என தெரியவில்லை… அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல் சத்தம் எழுப்பாமல் பாத்ரூமிற்குள் நுழைய துரையும் தன் அம்மாச்சியை தேடி வந்திருந்தான்…..
 
அம்மாச்சி அம்மாச்சி….தொட்டு எழுப்ப…
 
 கனி துரையின் குரல் கேட்கவும் பாத்ரூம் பைப்பை திருகப்போனவள் அதை அடைத்துவிட்டு அமைதியாக இருந்தாள்…  இவங்க இங்க என்ன பண்ணுறாங்க ஒரு வேளை அப்பத்தாவை சாப்பிட கூப்பிட வந்திருப்பாங்களோ… சத்தம் வராமல் இருக்கவும் மெதுவாக எட்டி பார்க்க அப்பத்தா தன் பேரனை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தார்… துரையின் முதுகு பக்கம் மட்டும் தெரிந்தது…
 
 
என்ன அம்மாச்சி ??”…சைகையால் கேட்டபடி அவரை சமாதானப்படுத்த…
 
அப்பு…சாமி…. இந்த கிழவி உன் வாழ்க்கையை கெடுத்துப்புட்டேனப்பு….. நான் நல்லதுதான் நினைச்சேன் அது தலைகீழா மாறிருச்சேப்பா…..??”
 
துரையோ கத்திப் பேசமுடியாமல்… இல்ல அம்மாச்சி இப்பவும் நீ எனக்கு நல்லதுதான் பண்ணி வைச்சிருக்க…மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க
 
ஏப்பு இந்த புள்ளைய நீ எம்புட்டு விரும்புன பொறந்ததில் இருந்து இவளத்தான் கட்டிக்க போறோம்னு எம்புட்டு கனவு கண்டிருப்ப… எல்லாம் இப்படி போச்சேப்பா…. அவளும் விடிஞ்சா எந்திரிச்சா மச்சான் மச்சான்னு உங்க வீட்டுலதானப்பா பழியா கிடந்தா… இப்ப வெள்ளத்தோலை பார்க்கவும் மாறிப்புட்டாளேப்பா…. இதுக்கு அம்மாச்சி மண்டை உடையாம செத்தே போயிருக்கலாம்… உங்க ஆத்தாவுக்காகத்தான் இந்த பொண்ணக் கட்டிக்கிட்டியாப்பு தன் பேரன் முகத்தை பார்த்துக் கொண்டு கேட்க துரை தலையை மட்டும் ஆட்டினான்… இதுவும் நல்ல புள்ளதாப்பு… ஆனா நீ அவளத்தானே மனசுக்குள்ள நினைச்ச ??”மீண்டும் ஒப்பாரி வைத்து அழ… துரையால் முடியவில்லை…
 
 இன்னும் கொஞ்சம் சொந்தகாரங்க வெளியில உட்கார்ந்திருக்காங்க இப்ப நாம எப்படி கத்தி பேசி அப்பத்தாவுக்கு புரிய வைப்பது என நினைத்தவன் அவர்கள் என்ன சொன்னாலும் தலையைதலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருக்க….
 
துரை சிறுவயதில் தமிழோடு விளையாடியதில் இருந்து அவள் வயதிற்கு வந்து குச்சு கட்டியது பள்ளிக்கு அழைத்து சென்றது அவளுக்கு துணிகள்… பாசிகள் வாங்கி கொடுத்தது என அவன் செய்த சின்ன சின்ன உதவியைகூட அப்பத்தா பில்டப்செய்து பெரிய மலையை பெயர்த்து எடுத்து கொடுத்தார் போல சொல்லி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க துரையின் முகம் புன்னகையில் இருந்தாலும் அப்பத்தாவிற்காக தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தான்…. இவன் முகம் தெரியாததால் துரையும் வருத்தப்பட்டு கொண்டிருப்பதாக கனி நினைக்க அப்பத்தா சொன்னதை கேட்டவள்….
 
 ஐயோ இந்த அளவுக்கு தமிழக்காவ இவங்க விரும்பி இருக்காங்களா… காலையில் அரவிந்தோடு சண்டை போட்டது…. நாம இங்க வந்ததாலதானே நம்மளதேடி அரவிந்த் வந்தாங்க… அதனால தானே தமிழ் அக்கா அரவிந்த் விரும்ப ஆரம்பிச்சாங்க….. அப்ப எல்லாத்துக்கும் நாமதான் காரணம்…. அதான் இவங்களுக்கு நம்ம மேல இவ்வளவு கோபம் போல… கதிர் அண்ணாவும் அத்தையும் சேர்ந்து நம்மள இப்படி வம்பு பண்ணி கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்களே….சும்மாவே இவங்களுக்கு நம்மள புடிக்காது…. இப்ப தமிழக்காவ இவங்க கட்டிக்க விடாம நாமதான் பண்ணிட்டோம்னு இவங்க ரொம்ப கோபமா இருப்பாங்களே….. ஐயோ நாம தேவையில்லாம இங்க வந்து இவங்க வாழ்க்கையை கெடுத்துட்டமே…..அதனாலதான் இவங்க இன்னைக்கு ராத்திரி வரட்டும்னு சொன்னாங்களோ…. இப்ப என்ன பண்ணுறது… இவளுக்கு அழுகை வர…..

Advertisement