Advertisement

*9*

மூனான்ஜாமம் வீணாபோகும் முழுசா போத்திக்கவா!

ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா!!

தன் கட்டிலில் கோவமாய் உட்காந்திருந்தாள் நிலா. சாற்றியிருந்த அறை கதவின் மீது சாய்ந்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இனியன். உள்ளே வந்து அரைமணி கடந்தும் அவனை நிலா ‘வா’ என அழைக்கவில்லை. அவனும் அவள் அழைக்காததால் உள்ளே வரவில்லை.

நிலாவின் கையில் பால் டம்ப்ளரை திணித்து உள்ளே அனுப்பியிருந்தார் கிருஷ்ணவேணி. இனியன் சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு போவதாக சொல்லி மழுப்ப, அடிக்காத குறையாய் அவனை உள்ளே தள்ளி கதவை வெளிதாழ் போட்டிருந்தார்.

‘எல்லா படத்துலயும் வரமாறி கீழ தான் படுக்கனும்ன்னு நினைக்குறேன்! அவ சொல்றதுக்கு முன்ன நம்மலே பெட்ஷீட் தலைகானிய எடுத்து போட்டு படுத்துகிட்டா என்ன?’ இனியன் நல்ல விதமாய் யோசிக்க, ‘சும்மா இரு மடையா!! ஒருவேளை அவளே எல்லாதுக்கும் ரெடியாகி உட்காந்துருந்தா என்ன செய்வ!!’ என்றது மூளை.

‘அதானே? அவ பர்ஸ்ட் நைட் வேணாம்ன்னு சொல்லவே இல்லையே!! எப்டி ஆரம்பிக்கிறது?’ என சிந்தித்தவன், பின்னே ‘க்கும்’ என தொண்டையை கனைத்துவிட்டு, “படுக்கலாமா?” என்றார்.

அவள் உக்கிரகாளியாய் எழுந்து நின்று அனல் பறக்க முறைக்க, “நின்னு நின்னு கால் வலிக்குது, தரைல படுக்கவா? இல்ல பால்கனில படுத்துக்கவான்னு கேட்டேன்!” என்று உடனடியாய் சரண்டர் ஆனான்.

‘ஹும்ம்’ என தலையை சிலுப்பிக்கொண்டு மெத்தையில் ‘பொத்’தென அமர்ந்தாள் நிலா.   

‘ஜஸ்டு மிஸ்ஸு’ நெஞ்சில் கைவைத்துக்கொண்டான் இனியன்.

‘முதல் பால் வைடா போய்டுச்சு! புல் ஸ்விங்ல போட்டது தப்பு!! ஹால்ப் ஸ்விங்ல போட்டுருக்கணும்!!’ சிந்தனை ஈட்டியை தீட்டியவன், அடுத்த பால் போட ரெடி ஆனான்.

“இந்த லைட்டெல்லாம் ரொம்ப பளிச்சுன்னு இருக்குல? ரூமே வெளிச்சமா இருக்கு” இனியன் கேட்க, அவனை முறைத்தபடி, “இருக்காதா பின்ன? இவ்ளோ பெரிய பல்பு நீ நிக்குறியே?அப்போ ரொம்ப வெளிச்சமா தானே இருக்கும்?” என்றாள் கடுப்பாய்.

மூக்கு உடைந்தது போல இருந்தது, தொட்டு பார்த்துக்கொண்டான் இன்னும் ஒட்டியிருக்கிறதா என்று. நல்லவேளை இருந்தது. கிடைத்த பல்பின் காரணமாய் கதவை ஓங்கி குத்தினான் இனியன். சத்தம் வெளியே கேட்டது போல, “என்னடா அங்க சத்தம்?” என்றார் வேணி. “ஒன்னும் இல்ல, சும்மா பேசிட்டு இருக்கோம்மா!” என்றான் வடிவேல் பாணியில்.

வேணி, “எது பேசுனாலும் லைட்ட அமத்திட்டு பேசு! எனக்கு கண்ண கூசுது!!” என்றிட, ‘குட் மம்மி’ இனியன் நினைத்து முடிப்பதற்குள், “இங்க ரூமுக்குள்ள எரியுற லைட்டு, அங்க ஹால்ல இருக்க உன் அம்மா கண்ணை கூசுதா?” என்று எகிறினாள் நிலா.

“திட்டாத நிலா, பாவம் அவங்க!” தன் அன்னைக்காக அவன் பரிந்து வர, “என்ன? என்ன பாவம்?” என்றாள் அவன் அருகே வந்து.

இனியன், “நைட்கண்காமாலா நோய்ன்னு கேள்விபட்டுருக்கியா?” என்றதும், “வாட்? நைட்டு கண்ணு கமலா வா?” என்றாள் புருவம் நெரித்து.  

“உனக்கு தெரியாதா?” படுஆச்சர்யமாய் அவன் வினவ, நிலாவுக்கே தயக்கம் ஏற்ப்பட்டது. அதே தயக்கத்துடன், “தெரியாதே!?” என்றிட, “படிச்ச பொண்ணு, இதுகூட தெரியாம இருக்க?” என்றான் மீண்டும் வேண்டுமென்றே. அவன் போட்ட மந்திரம் வேலை செய்ய தொடங்கியது. அவள் முகம் சுருங்கி போய், “அப்டின்னா என்ன?” என்று கேட்க, “நிஜமாவே தெரியாதா? நான் உனக்கு இதெல்லாம் தெரியும்ன்னுள்ள நினச்சேன்!!” என்றபடியே அவளறியாமல் அவள் தோள் சுற்றி தன் கையை படரவிட்டவன், “நான் சொல்றேன் கேளு” என பேசிக்கொண்டே கட்டிலருகே சென்றான்.

அவள் கண்ணோடு கண்பார்த்து பயங்கர சீரியஸ்ஸான டோனில், “நைட்கண்காமாலா அப்டிங்கிறது ஒரு மோசமான நோய். லட்சத்துல வெறும் தொன்னூராயிரத்தி தொன்னுத்தி ஒன்பது பேருக்கு தான் இந்த வியாதி வரும்! ரொம்ப அபூர்வமான நோய். இதுல ரொம்ப சோகமான விஷயம் என்னன்னா இதுக்கு இன்னும் யாருமே மருந்து கண்டுபுடிக்கல” பேய் கதை சொல்வதை போல சொல்லிமுடித்தான் இனியன். அப்போது இருவரும் கட்டிலில் அமர்ந்திருந்தனர்.

“இந்த வியாதி வந்தவங்களுக்கு வெளிச்சத்தை பார்த்தா வெள்ளையா தெரியுமாம்! இருட்டை பார்த்தா கருப்பா தெரியுமாம்!! வியாதி முத்திப்போனா தான் இப்படி ஆகும்!”

“அப்பிடியா? இதை எப்படி சரிசெயுறது அத்து?” தன்னை மறந்து அவன் பேச்சில் ஐக்கியமாகியிருந்த நிலாவால் இனியனை தான் ‘அத்து’ என அழைத்ததை உணரமுடியவில்லை.

ஆனால் அதை கேட்டுக்கொண்டிருந்த இனியனுக்கு வானில் பறப்பதை போல இருந்தது. தன் முன்னே நான்கு வயது சிறுமியாய் இரட்டை ஜடையில் மல்லிபூ சுற்றி, பாவாடை சட்டையில் சமத்தாய் கைகட்டி அமர்ந்துக்கொண்டு, “சொல்லு அத்து, சீக்கம் சொல்லு” என சிரிக்கும் அவன் இதழி தெரிந்தாள். அவனை மீறி முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.  

தன் இதழி மீண்டும் கிடைத்துவிட்ட பூரிப்பில் எப்போதும் செய்வது போல அவள் முகத்தை தன் இருகைகளால் தாங்கியவன், அவள் நெற்றியோடு தன் நெற்றியை ஆதூரமாய் மோதினான். பின் மெல்ல நிமிர்ந்து அவளை உச்சு முகர, நிலாவும் தன் நிலையை மறந்து அவன் இதழியாய் மாறியிருந்தாள். தன் நெஞ்சுக்குள் அவளை பொத்திக்கொண்டான் இனியன். இனி தன்னை விட்டு அவள் போக கூடாது என நினைத்தானோ என்னவோ.

பல நீண்ட ஆண்டுகள் கழித்து தன் கூடு சேர்ந்த நிம்மதியில் நிலாவும் அவன் நெஞ்சில் இடைவெளியின்றி ஒட்டியிருந்தாள். ஆழி அலை போல பொங்கிக்கொண்டிருந்த மனது இப்போது நிர்மூலமாயிருந்தது, கடிகாரத்தில் பதினொரு மணி குயில் பதினொரு முறை கூவும் வரையில்.  

சத்தத்தில் சுயம் பெற்ற நிலா, இனியனின் அணைப்பில் இருப்பதை கண்டு பதறி எழுந்தாள். எழுந்ததும் ஆட்டம் தொடங்கியது.

முதலில் பதட்டமும் தடுமாற்றமும் அவளை ஆட்கொள்ள, அவன் கண்ணை பார்க்க துணிவின்றி, “ஏ.. ஏ.. எதுக்கு என்னை ஹக் பண்ணுன?” என்றாள்.

மாயத்திரை முழுதும் மறையாத நிலையில் இனியன் கட்டிலை விட்டு எழுந்துகொள்ளாமல், “வா இதழி” என்றான் ஆதூரமாய்.

அதை தவறாய் புரிந்துக்கொண்ட நிலா, “சீ!! மேரிட்டல் ரைட்ஸ் வச்சு என்னை அப்யூஸ் பண்ண பார்க்குறியா?” என சுடு தாரை அவன் மீது கொட்டினாள். சூழ்ந்திருந்த திரை பட்டென விலகியது. விருட்டென எழுந்தான் இனியன். அவன் எழுந்த வேகத்தில் சற்று பின்வாங்கினாள் நிலா.

“அப்யூஸா?” என கேட்டுகிட்டு பொறுமையாய் அவளை சுற்றியபடி மேலும் கீழும் பார்த்தான். அவன் பார்வையில் உள்ளுக்குள் நடுங்கினாலும், வெளியே விறைப்பாய் நின்றிருந்தாள் நிலா.

அவள் முகத்தை உற்று நோக்கிவிட்டு, “ஒருத்தன் என்ன நடந்தாலும் கோவப்படாம இருக்கான்னா, அவனுக்கு சூடு சொரணை எதுவும் இல்லைன்னு அர்த்தம் இல்ல! அடுத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்குறான்னு அர்த்தம்!!” என்றவன், சட்டென தன் முகத்தை மாற்றி எப்போதும் போல சிரித்தபடி வைத்துக்கொண்டு, “நல்ல ஸீன், உன்னால நாராசமா போச்சு!!” என்றான்.

நிலா பதில் சொல்லும்முன், “வெளிச்சமா இருந்தா எனக்கு தூக்கம் வராது, சோ எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டு வந்து படு!!” என்றதோடு மெத்தையில் விழுந்து தன்னை போர்வையில் புகுத்திக்கொண்டான்.

அவன் செய்கையில் செய்தவதரியாது அவள் அப்படியே நிற்க, அதை உணர்ந்தவன் போல போர்வையை விலக்கி தலையை வெளியே நீட்டிய இனியன், “கீழ படுத்துக்க கஷ்டமா இருக்குன்னா இங்க, என்கூட பெட்லயே படுத்துக்கலாம்! நான் ஒன்னும் கோவபடமாட்டேன்!” என்றுவிட்டு மீண்டும் போர்த்திக்கொண்டான்.

அவன் தலையிலேயே ‘நங் நங்கென’ கொட்டவேண்டும் போல இருந்தது நிலாவுக்கு. அவனை திருமணம் செய்வதாய் தான் எடுத்த அவசர முடிவை எண்ணி இப்போது தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள் இன்பநிலா. அங்கேயே குறுக்கும் நெடுக்கும் அவள் நடைபயில, மெதுவாய் எட்டிப்பார்த்தான் இனியன்.   

“எனக்கு என்மேல நம்பிக்கை இருக்கு! உனக்கு உன்மேல நம்பிக்கை இருந்தா வந்து படு!!” அவள் பார்ப்பதற்குள் மீண்டும் போர்வைக்குள் அவன் புகுந்துவிட, அயர்விலும், கோவத்திலும் கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது நிலாவுக்கு.

‘ஹும்ம்! என் பெட்ல அவனே சொகுசா படுத்துட்டு இருக்கான்! எனக்கென்ன வந்துச்சாம்!!’ தனக்குள்ளே சொல்லிவிட்டு அவனுக்கு மறுபக்கமாய் சென்று படுத்தாள் நிலா. மெத்தை அமுங்கியதில் அவள் படுத்துவிட்டால் என்பது தெரிய, மீண்டும் தலையை வெளியே நீட்டினான். அறை முழுதும் இருள் சூழ்ந்திருக்க, ஒரு ஓரமாய் கோழி முட்டையளவு பிங்க் பல்ப் தன் பிரகாசத்தை அறையில் பரப்ப முயன்றுக்கொண்டிருந்தது.

தன் அருகே பார்த்தான். நிலவை போன்ற பிறை வடிவத்தில் தெரிந்ததை இருட்டில் சற்று உற்று பார்த்தான். ‘என்னவா இருக்கும்? அட! அவ முதுகா இது!’ சிரித்துக்கொண்டான். இருட்டுக்கு கண் பழக சில நொடிகள் பிடித்தது. அவள் தூங்கவில்லை என்பதும் இனியனுக்கு தெரிந்தது. அவள் அருகே படுத்திருப்பதே ஒரு வித மனநிறைவை அவனுக்கு கொடுத்தது.

மெதுவாக, “உன்மேல உனக்கு நம்பிக்கை வந்துருச்சு போல!!?” என்று சிரித்தபடி அவன் கேட்க, வெடுக்கென அவன் பக்கம் திரும்பிய நிலா, “மூடிட்டு படு!” என்றாள். சிரிப்பை ஆப் செய்த இனியன், போர்வையை தலைவரை போர்த்துக்கொண்டு, “மூடிட்டேங்க!” என்றான். மறுப்பக்கம் திரும்பியிருந்த நிலாவுக்கு அவன் பதிலில் சிரிப்பு வந்தது. குரலில் கடுமை கொண்டு வந்து, “கையு, காலுன்னு ஏதாது என் பக்கம் வந்துச்சு, என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!!” என மிரட்டினாள்.

“அதேதான் நானும் சொல்றேன்! உன் கையு காலு என் மேல பட்டுச்சு! என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” அவன் சொன்ன தொனி வேறுவிதமான பொருள் கொடுக்க “ச்சீ போ” திரும்பிபடுத்துக்கொண்டாள் நிலா.

போர்வை முழுவதையும் அவன் சுருட்டிக்கொண்டிருக்க, நிலா, இழுத்த இழுப்பில் போர்வையோடே அவனும் நிலா அருகே வந்துவிட்டான். அவள் முறைக்கவே, “ஏய் நான் மூடிட்டு தான் இருந்தேன்! நீதான் என்னை இழுத்துட்ட!” என்றதும், “ச்சீ” என அவனை தள்ளிவிட்டாள்.

நகர்ந்து படுத்தவனுக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. ‘நானா இப்டீல்லாம் பேசுறேன்?!’ தன்னையே மௌனமாய் கேட்டுக்கொண்டான். மணி முள் நிற்காமல் நகர, இருவரும் தூங்கிபோயினர்.  சிறிது நேரத்திற்க்கெல்லாம் இனியனின் கை கால் அசைக்க முடியாதபடி ஆகிட, தூக்கம் கலைந்து கண்ணை திறந்து பார்த்தான். அவனை கிட்டே வரக்கூடாதென அந்த மிரட்டி மிரட்டியவள், இப்போது அவன் மீது ஒய்யாரமாய் கை காலை போட்டு தூங்கிக்கொண்டிருந்தாள்.

தூக்கம் முழுவதுமாய் களைந்து போனது இனியனுக்கு. அவளை தொந்தரவு செய்யாதபடி திரும்பிக்கொண்டவன், உறங்கும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். மோதிர விரலை வாயில் வைத்துக்கொண்டு அவள் தூங்க, அவன் நினைவுகள் அப்படியே பின்னோக்கி ஓடியது.

“டேய் செழியா! ஸ்கூல் விட்டாச்சா? வா! வா! உன் தேவி அத்தைக்கு பொண்ணு பொறந்துருக்கு!!” இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் வேணி கூறியது இப்போது சொல்வது போல இனியன் காதில் எதிரொலித்தது.

தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அள்ளி அவன் உயரத்துக்கு குனிந்து காட்டினார் வேணி. கண்கொட்டாமல் குழந்தையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் இனியன். தன் குட்டி விரல்களை வாயில் வைத்து உறங்கிக்கொண்டிருக்க, அதை மெல்ல எடுத்துவிட்டான்.

“கைசூப்பாத பாப்பூ” அவன் சொல்ல, அது புரிந்தது போல தூக்கத்தில் தலையை திருப்பியது குழந்தை.

“இந்த பாப்பாவ பிடிச்சுருக்கா?” தேவி கேட்க, “ரொம்ம்ம்ப! எனக்கே குடுத்துடுரீங்களா?” என்றான் ஆறு வயது இனியன்.

“அதுக்கென்ன! நீயே வச்சுக்கோ!” தேவி சொன்னதும், அவன் முகத்தில் சந்தோசத்தின் சாயல். அவனை சீண்டவென, “அப்போ உன் தம்பியை இவங்களுக்கு குடுத்துடலாமா?” என்றார் வேணி. இரண்டு வயது அதியன் பாயில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்த இனியன், “ஹான், மாட்டேன் மாட்டேன்! தம்பியும் வேணும், பாப்பாவும் வேணும்” என்றான். இரு அன்னையும் சிரித்துகொண்டனர்.

‘நெடுங்காலமாய் புலங்காமலே, எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே!!

உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே, உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே!!

பழனியாண்டவர் சன்னதியில் மனமார தரிசித்துகொண்டிருந்தனர் இருகுடும்பமும். எல்லோரும் சாமியை பார்க்க, ஒன்பது வயது இனியன் தன்னருகே நிற்கும் இன்பநிலாவை தவிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தான். தரிசனம் முடித்து எல்லோரும் நகர, வேணியின் சேலையை பிடித்து இழுத்த இனியன், “வேனாங்கம்மா! பாப்பூக்கு வலிக்கும்!” என்றான்.

“ப்ச்! இங்க வந்தும் அழுதுட்டு இருந்த, உன் அப்பாகிட்ட செமத்தியா வாங்குவ சொல்லிட்டேன்!” மிரட்டலோடு அவர் முன் செல்ல, நிலா இருகைகளையும் விரித்துக்கொண்டு இனியனிடம் தூக்க சொல்லிக்கொண்டிருந்தாள். அவளை தூக்கி கொண்ட இனியன், “பாப்பூ நீ வலி தாங்க மாட்ட! அழுவ! நம்ம இப்படியே ஓடிடலாமா?” என்றதும், “வூ வூ” என மறுப்பாய் தலையாட்டினாள் குட்டி நிலா.

மழலை மொழியில் தன் காதை பிடித்து அவள் காட்டிக்கொண்டு சொல்ல, “உனக்கு தோடு போட்டாலும், போடலைன்னாலும் அழகா தான் இருப்ப செல்லம்!” என்றான் இனியன். அதற்குள், “வந்தியா இல்லையா?” என்ற வேணியின் அதட்டலில் மனமின்றி நிலாவை தூக்கிக்கொண்டு சென்றான்.

முதலில் அவளுக்கு மொட்டை போட்டு சந்தனம் தடவினர். ஐந்து வயது அதியன், அவளுக்கு விளையாட்டி காட்டிக்கொண்டிருந்தான். இனியனோ ‘கொட்டவா வேணாமா’ என கேட்டுக்கொண்டிருந்த கண்ணீருடன் நின்றுக்கொண்டிருந்தான். அடுத்து காது குத்து சம்பிரதாயத்துக்காக நிலாவை தாய்மாமன் மடியில் உட்கார வைக்க சொல்ல, தேவியும் அவர் கணவர் சுந்தரமும் ஒருமனதாய் இனியனின் தந்தை தமிழரசனை அமர சொன்னனர்.

வேணி முந்தானையை சுருட்டி கண்ணை மூடிக்கொண்டு நின்றான் இனியன். அவ்வப்போது எட்டிப்பார்க்க, அதியனின் விளையாட்டில் சிரித்துக்கொண்டிருக்கும் நிலாவை கண்டதும் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டான். அடுத்த முறை அவன் எட்டி பார்த்தபோது ஆசாரி நிலாவின் காதில் ஊசியோடு சென்றிருந்தார். நிலா உதடு பிதுக்கி அழ தொடங்கும் முன் கத்தி ஊரைக்கூட்டியிருந்தான் இனியன். அவன் அன்று அழுத அழுகையை இப்போது கேட்டாலும் வேணி கதை கதையாய் சொல்லுவார். அத்தனை ஆர்ப்பாட்டம் செய்திருந்தான். நிலாவே ஐந்து நிமிடத்தில் அழுகையை நிறுத்தியிருந்தாள். இனியனோ அவளை பார்க்கும்போதெல்லாம் அழுதான்.

‘தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக, நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி!

நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுதடி!

“அவளை இறக்கி வைக்கவே மாட்டியா நீ?” டீச்சர் இனியனை ஆச்சர்யமாய் கேட்டார்.

இனியன் படிக்கும் அதே பள்ளியில் நிலாவை யூ.கே.ஜி சேர்த்துவிட்டிருந்தனர். காலை வருவது முதல் மாலை அழைத்துக்கொண்டு போவது முடிய, அவளை தரையில் விடாமல் தூக்கிக்கொண்டு சுற்றுவான் பதினொரு வயது இனியன்.

மதிய உணவு இடைவெளியில் அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டு சாப்பாடு ஊட்டிகொண்டிருந்தவனை பார்த்து அவர் ஆச்சர்யமாய் கேட்டார்.

“மாட்டேன்” என்றுவிட்டு அவளுக்கு ஊட்டுவதிலேயே கவனமாய் இருந்தான். அருகே அதியன் தானாய் சாப்பிட்டு கொண்டிருக்க, “இவன் உன் தம்பி தானே? இவனுக்கும் ஊட்டலாம்ல?” என்றதும், “நோ மிஸ்! நான் பிக் பாய் ஆகிட்டேன், நானே சாப்புடுபேன்!” என்றான் அதியன். மூவரையும் பார்த்து சிரித்தபடி நகர்ந்தார் டீச்சர்.  

சாப்பிடும்போதும் கைசூப்பிகொண்டிருந்த நிலாவின் விரலை வாயில் இருந்து எடுத்து விட்ட இனியன், “கை சூப்ப கூடாது பாப்பூ” என்றான். அவள் “ஏன்?” என்றதும், “இப்படியே பண்ணிட்டு இருந்தா உதடு முன்னே துருத்திக்கும்! அசிங்கமா ஆகிடும்!” என்றான்.

அவன் சொன்னதை தலையை உருட்டி உருட்டி அவள் கேட்டுக்கொண்டாலும் மீண்டும் அவள் விரல் வாய்க்கு தான் போகும் என்பதை அறிந்த இனியன் சிரித்துக்கொண்டான். இது இத்தனை வருடத்தில் மாற்ற முடியாத அவளது பழக்கம்.

‘கண்ணாக கருத்தாக

உனை காப்பேன் உயிராக

“வர மாட்டேன்!!!” அவளை வாசலுக்கு இழுக்க இழுக்க, இனியனின் கையை இறுக்க பற்றிக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள் நிலா. இனியன் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தான். வாசலில் கார் நிற்க, சற்று தள்ளி நின்ற டெம்போவில் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தது.

“இவருக்கு சென்னைல வேலை கிடைச்சது எங்களுக்கு சந்தோஷம் தான்! ஆனா உங்களையெல்லாம் விட்டுட்டு போக மனசே இல்ல!” தேவி உண்மையான வருத்ததுடன் சொன்னார்.

தமிழரசன், “அட என்னம்மா? சுடரொளி பத்திரிக்கைல வேலை கிடைச்சுருக்குன்னா சும்மாவா? நம்ம உறவு என்ன இப்படியேவா நின்னுடும்? அடிக்கடி வந்து போக இருந்துப்போம்! என் பையனுக்கு உன் பொண்ண குடுன்னு கேட்டா குடுக்க மாட்டியா என்ன?” என்றார் சிரிப்பாய்.

சுந்தரமும் தேவியும் பதில் சொல்லும்முன் முந்திக்கொண்டு, “அப்பா மூத்த பையனுக்குன்னு கேளுங்க” என்றான் மெதுவாய். பன்னிரண்டு வயது இனியனுக்கு என்ன புரிந்ததோ!

அவன் சொன்னது அனைவர் காதிலும் விழ, ‘அட பாரேன்!’ என்றனர். நிலா அழுகையை நிறுத்தியபாடில்லை.  சுந்தரம், “என் பொண்ண, உன் பையனுக்கு தான் கட்டி குடுப்பேன்!” இனியன் முகம் வாடிட, “உன் மூத்த புள்ளைக்கு தான் குடுப்பேன்!!” என்றுவிட்டு, “என்ன மருமவனே சந்தோசமா?” என்றார் சுந்தரம். கல்யாணம் என்றால் என்னவென்று முழுதாய் தெரியாத வயதிலும் திருமணமானால் நிலா  தன்னுடனே இருப்பாள் என்பது மட்டும் அவனுக்கு தெளிவாய் புரிந்தது.

அவர்களோடு போக மறுத்து நிலா அழ, அவள் உயரத்திற்கு முட்டி போட்டு அமர்ந்த இனியன், “அப்பா கூட போ பாப்பூ! நல்லா படி, பிக் கேர்ல் ஆகு! அதுக்கு அப்புறம் நீ என்னோடவே தான் இருப்ப!” என்றான். அவள் அப்போதும் ‘மாட்டேன்’ என்று அழுக, “நீங்க என் தங்கமுள்ள? என் செல்ல நாய்குட்டியிள்ள? உன் அத்து சொன்னா கேப்ப தானே?” அவன் தாஜா செய்ய, சில நிமிடங்களில் அழுகை குறைந்து அவர்களோடு சென்றாள் நிலா. இறுதியாய் அவள் கன்னம் தாங்கி நெற்றி முட்டி, உச்சி முகர்ந்து வழியனுப்பி வைத்தான். கார் கண்விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றான். கார் ஜன்னல் வழி இனியனை எட்டிப்பார்த்துக்கொண்டே சென்றாள் நிலா.

‘உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே

அட உன்னுள் உறைந்தேனே!

இன்று என்னுள் மாற்றம் தந்தாயே! உனை என்றும் மறவேனே!

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா! – நான்

கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா!

சட்டென மழை தொடங்கியது. அவன் மீது நீர் துளிகள் கொட்ட, சிறிது நேரத்தில் அவன் தொப்பலாய் நனைந்து போனான். அவன் கனவு கலைந்தது, பாட்டும் நின்றது. விருட்டென எழுந்து அமர்ந்தான். அவன் எதிரே தண்ணீர் ஜாருடன் நின்றுக்கொண்டிருந்தாள் நிலா. என்ன நடந்தது என அவன் யூகிக்கவே சில நிமிடங்கள் பிடித்தது.

அவளே வாய் திறந்தாள். “பர்ஸ்ட் லைட்டா தெளிச்சேன்! நீ எழுந்துக்கல! அதான் தண்ணிய அப்டியே கொட்டிட்டேன்!” என்றாள். முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டான் இனியன்.

“சரி எழுந்துரிச்சு போ, நான் ட்ரெஸ் மாத்தனும்!!” அவள் சொல்ல, “நீ மாத்து! நான் என்ன செய்யப்போறேன்!” என்றான் கொட்டாவி விட்டபடி.

“ப்ச்! காலைலேயே ஆர்க்யூ பண்ண வைக்காத! ஒழுங்கா இடத்தை காலி பண்ணு!” அவள் சொல்ல, “இப்போதானே எழுந்துரிசேன்! ரெஸ்ட் ரூம் போனும்! நான் வரதுக்குள்ள நீ ட்ரெஸ் மாத்திக்கோ!” போர்வையை மடித்து ஒழுங்கு படுத்திக்கொண்டே சொன்னான்.

“நான் சேன்ஞ் பண்றப்போ நீ வெளில வந்துட்டன்னா? உன்னை எல்லாம் நம்ப முடியாது!!” அவள் சொன்னதும், அருகே சென்றவன், “நம்பிக்கை! அதானே எல்லாம்!!” என்றான் சீரியசாய். தன் தலையில் மெதுவாய் அடித்துக்கொண்டாள் நிலா. பாத்ரூமுக்குள் அவன் நுழைந்த அடுத்த நொடி குடுகுடுவென ஓடிப்போய் வெளியில் தாழ் போட்டு விட்டாள் நிலா. உள்ளிருந்து, “ஏய்” என அவன் கத்த, “நான் டிரஸ் மாத்திட்டு ஓபன் பண்றேன், அதுவரை உள்ளேயே நீராடு” என்றாள் நக்கலாய்.

பாத்ரூம் கதவு திறந்தபோது நிலா அறையில் இல்லை. உடை மாற்றிக்கொண்டு வெளியே சென்றான். அவள் டைனிங் டேபிளில் கோகுலோடு அமர்ந்து சாப்பிட்டுகொண்டிருப்பதை கண்டான் இனியன்.

அவனை கண்டதும், “குட் மார்னிங் பாஸ்” என்றான் கோகுல். பதிலுக்கு இவனும் வாழ்த்து சொல்ல, அவனை சீண்டும் பொருட்டு, “கோகுல், உனக்கு ஒன்னு தெரியுமா?” என்றாள் நிலா.

“கூகுளுக்கு தெரியாதது கூட இந்த கோகுலுக்கு தெரியும்! இன்னான்னு சொல்லு!!” என்றான் கோகுல்.

“உனக்கு ‘நைட்கண்காமாலா’ நோய்ன்னா என்னனு தெரியுமா?” என்றாள் நிலா. இனியனுக்கு ஜர்க்கானது.

“எது? கமலாவ நைட்டு காணோமா?” கோகுல் வாயை பிளக்க, வேணி அங்கே வந்தார். “இதென்ன கண்ணு வாய்ல நுழையாத வியாதியா இருக்கு?” என்றதும், “பாவம் ஆன்ட்டி நீங்க? உங்களுக்கு வந்துருக்க வியாதி பத்தி உங்களுக்கே தெரியல!!”   

“எந்த மடப்பய சொன்னான் எனக்கு வியாதி இருக்குன்னு?” அவர் பொரிய, “அப்டின்னா என்ன டிசீஸ்?” என்றான் அதியன்.

நிலா, “அது எனக்கு தெரியாது! உன் அண்ணனுக்கு தான் தெரியும்!!” என்றதும் இனியன் சிரிப்போடு, “அந்த வியாதி வந்தவங்க, ராத்திரி அடுத்தவங்க மேல காலை பப்பரப்பான்னு போட்டுக்கிட்டு தான் தூங்குவாங்க! அதுமட்டுமில்ல, எருமை வயசானாலும் விரல் சூப்பிகிட்டு தான் தூங்குவாங்க, தெரியுமா?” என்றதும், நிலாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

-தொடரும்…

Advertisement