Advertisement

*8*

சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே!

மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்!

நிலா தன்னை முறைத்துவிட்டு காரில் ஏறிவிட, இனியன் பிரீசாகி நின்றான். ‘நம்ம கன்னத்துல என்னைக்கு விழ போதுன்னு தெரியலையே!’ அவன் மனம் நினைக்க, வீடு வந்து சேரும் வரை பலத்த அமைதி நிலவியது.

இருவரையும் வீட்டின் வாசலில் நிற்க வைத்து ஆலம் சுற்றினார் கிருஷ்ணவேணி. அக்கம் பக்கத்து பிளாட் வாசிகள் இதை விசித்திரமாய் பார்த்துக்கொண்டிருந்தனர். அதில் ஒரு சிலர் நேரே வந்து, ‘கல்யாணம் ஆச்சா? எங்ககிட்ட கூட சொல்லல?’ என வாசலிலேயே நிற்க வைத்து தேவியிடம் குறைபடித்தனர்.  

உள்ளே நுழைந்ததும் தன் அறைக்கு திரும்பிய நிலாவை, “நில்லும்மா!” என தடுத்தார் வேணி.

அவள் திரும்பி பார்த்ததும், “எங்களையெல்லாம் காக்க வச்சுட்டு காலைல எங்க போயிருந்த?” என்றார். நிலாவை கேள்வி கேட்டதும் தேவியும் கோகுலும் அப்படியே நின்றனர். அதியன் உள்ளுக்குள் சிறிது சந்தோசப்பட, நிலா பதில் சொல்லாமல் நிற்ப்பதை கண்ட இனியன், “ம்மா?” என ஏதோ சொல்ல வந்தான். அவனை பேச விடாமல் தன் பார்வையிலே அடக்கினார் வேணி.

“சொல்லு நிலா, எங்க போயிருந்த?” மீண்டும் அவர் கேட்க, “என் ஆபிஸ் வேலையா போயிருந்தேன்!” பட்டும் படாமல் பதில் வந்தது.

“கிளம்புறப்போ சொல்லிருக்கலாம்ல?” அழுத்தமான அவர் கேள்வியில், கோவம் கிளம்பியது நிலாவுக்கு.

“பாதி வழில தான் ஒரு முக்கியமான வேலை வந்துச்சு!”

அவள் சொன்னதும், நிலாவை நெருங்கிய வேணி, “உன் வேலைல காலநேரம் பார்க்க முடியாதுன்னு எனக்கு தெரியும்!! கல்யாணத்தை வச்சுக்கிட்டு நீ உன் வேலைய பார்க்க போனது எனக்கு பிடிக்கல! ஆனாலும் என்னோட கோவம் வருத்தம் எல்லாம் நீ சொல்லாம போனாதால மட்டும் தான்!!” என்றார்.

கத்தாமல் ஆர்ப்பாட்டம் செய்யாமல், தன் அன்னையிடமோ இனியனிடமோ குறைபடிக்காமல் தன்னிடம் நேரடியாக மனதில் பட்டதை சொல்லும் வேணியை நிலாவுக்கு பிடித்திருந்தது. அவர் சுட்டிக்காட்டியதில் தன் தவறு விளங்க, அமைதியாய் இருந்தாள்.

“நீ போனது தப்புன்னு நான் சொல்லல, சொல்லிட்டு போயிருக்கனும்ன்னு தான் சொல்றேன்!” அவர் சொல்ல நிலா பதில் சொல்லாமல் இருந்தாள்.

அவளை நெருங்கி சிகை வருடியவர், “ஆணவமும், அகம்பாவமும் என்னைக்கும் ஒரு பொண்ணுக்கு வேலியா இருக்க முடியாது நிலா! துணிச்சலுக்கும் திமிருக்கும் வித்தியாசம் தெரியல உனக்கு!! உன்னை ஆறு வயசு வரை நான் தான் வளர்த்தேன்! அதுக்கு பிறகு அடிக்கடி பார்த்துக்க முடியாம போச்சு!! நீ எதனால இப்டி ஆகிட்டன்னு எனக்கு தெரியல, இது உன்னோட இயல்பான குணமும் இல்லை!” என்றுவிட்டு பெருமூச்சொரிந்தவர், “இந்த கல்யாண வாழ்கை கண்டிப்பா உன்கிட்ட ஒரு மாற்றத்தை கொண்டு வரும்!!” என்றார் தீர்கமாய்.

நிலாவுக்கு கண்கள் முட்டிக்கொண்டு நீர் திரண்டது. கடினப்பட்டு அதை தனக்குள்ளே இழுத்துக்கொண்டாள்.  பின் திரும்பியும் பாராமல் தன் அறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொண்டாள்.

மூடியிருந்த கதவையே பார்த்துக்கொண்டிருந்த வேணியை நெருங்கிய தேவி, “அவ அப்பா இறந்ததுல இருந்தே இப்படிதான் இருக்கா வேணி, கிட்டத்தட்ட பத்து வருஷமா!!”

தேவியின் கையை இறுக்க பற்றிய வேணி, “காலம் எல்லாத்தையும் மாத்தும்!! கவலைப்படாத!!” என்றார். நிலாவின் இந்த எடுத்தெறியும் குணமும், திமிரும், மரியாதையின்மையும் எதனால் வந்தது என தெரிந்த ஒரே ஜீவன், மௌனமாய் மனதுக்குள் அழுதுக்கொண்டிருந்தது.

களைப்பு நீங்க குட்டி தூக்கம் போட்டு அனைவரும் எழுந்திரிக்க, வானில் நிலா வாக்கிங் போய்க்கொண்டிருந்தது.  ஆனால் இன்னமும் நிலாவின் அறைக்கதவு திறக்கப்படவில்லை. எல்லோரும் வந்து டைனிங் டேபிளில் ஆஜர் ஆனதும் தேவி உணவை பரிமாறினார்.  இனியன் சாப்பாட்டில் கைவைக்க, “ஏய் கிறுக்குபயலே!” என்றார் வேணி.

‘என்னையா? உன்னையா?’ என இனியனும் அதியனும் குழம்பிப்போய் வேணியை பார்க்க, இனியனை முறைத்தார் வேணி. ‘அப்போ நம்ம இல்ல!’ என்று தட்டோடு ஐக்கியமானான் அதியன்.

“என்னங்க அம்மா?” இனியன் கேட்கவே, “உனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கா! நியாபகம் இருக்கா? அவளோட சேர்ந்து சாப்புடு! இதை கூட சொல்லனுமா?!” வேணி சொல்லிட, “அவ லேட்டா தான் சாப்புடுவா வேணி!” என்றார் தேவி.

‘லூசா நீ?’ என்பதை போல தேவியை பார்த்த வேணி, “இனி ரெண்டு பேரும் ஒண்ணா தான் சாப்புடுவாங்க! சரியா?” என்றார். தான் எழுந்து போய் அவளை அழைத்துவர வேண்டும் என இனியனுக்கு புரிந்தது. எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று புல் கட்டு கட்டிக்கொண்டிருக்கும் அதியனையும் கோகுலையும் ஏக்கமாக பார்த்துவிட்டு எழுந்து சென்றான் இனியன்.

கதவருகே நின்றவன், மெலிதாக தட்டினான். காதை கதவின் மீது வைத்து உட்புறம் ஏதேனும் சத்தம் வருகிறதா என சோதிக்க, குண்டூசி சத்தம் கூட கேட்கவில்லை. மீண்டும் ஒருமுறை அவன் தட்ட அப்போதும் பலத்த அமைதி.

இம்முறை, வாய்திறந்து, “நிலா?” என்றான். ஏதோ சத்தம் கேட்டது. மீண்டும் அவன் அழைத்ததும் “கதவு திறந்து தான் இருக்கு வா!” என்ற குரல் கேட்டது. கொஞ்சமாய் கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றான். அவள் கட்டிலில் படுத்திருப்பது தெரிந்தது. கதவை சாற்றிவிட்டு அவள் அருகே சென்றான்.

“சாப்பிட வா நிலா!!” அவளிடம் பதிலில்லை.

“எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க! வா!!” அவள் கண்கள் விட்டதில் ஓடும் மின்விசிறியை வெறித்தன. சில நிமிடங்கள் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

“அம்மா பேசுனதுல கோவமா?” இனியன் கேட்டதும், அவள் பார்வை அவனிடம் தாவியது. ஆனால் பதில் இல்லை.

அவள் சொல்லாத பதிலும் அவனுக்கு விளங்கியதை போல, “இன்னும் எத்தனை நாளைக்கு இதையே நினச்சுட்டு இருப்ப இதழி? டைம் இஸ் தி பெஸ்ட் ரெமிடி! ஐ க்நொவ்! பட் நீ ரொம்ப டைம் எடுதுட்ட! போதும்!!” என்றான். அவள் எழுந்து அமர்ந்துக்கொண்டு அவனை பார்த்தாள்.

நிலா தன் பேச்சை பொறுமையாய் கேட்கிறாள் என்பது அவனுக்கு தெம்பூட்ட, அவள் அருகே அமர்ந்து விரல்களை பிடித்துக்கொண்டான். ஒவ்வொரு விரலாய் மெல்ல வருடிக்கொண்டு, “வாழ்க்கைல கசப்பான நிகழ்வு எல்லோருக்கும் நடக்கும்! அதையே நினச்சுட்டு நம்ம முடங்கிட கூடாது, மீண்டு வரணும்! பல வருஷமா உனக்கு நீயே முகமூடி போட்டு சுத்திட்டு இருக்க, அதை கலட்டி வைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு! உனக்கு இனிமே நான் இருக்கேன்! நம்ம குடும்பம் இருக்கு!!” அவன் பேச பேச இனியனின் கண்களையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த நிலாவை ஆசையாய் பார்த்தான் இனியன்.

“என்னடா ஏதோ சொல்லனும்ன்னு நினைக்குற போலருக்கு? எதா இருந்தாலும் சொல்லு! மனசு விட்டு பேசு!!” அவன் தூண்ட, “ரூட் போடுறியா?” என்ற ஒற்றை கேள்வியில் அவனை ஆப் செய்தாள் இதழி.

அவளது திடீர் கேள்வியில் திக்கி திணறி அவன் முழிக்க, அவனையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் நிலா.   

“அப்டியேவா தெரியுது? உறுதிசெய்துக்கொள்ள வேண்டி அவன் கேட்க, “பச்சையா தெரியுது!!” என்றாள் நிலா.

“ரைட்டு விடு! மிஷன் ஃபைலியர்!! ரொம்ப பசிக்குது, வா சாப்பிடலாம்!!” சொல்லிவிட்டு அவன் வெளியே செல்ல, ‘இவன்கிட்ட பேசுனா ஏதோ மேஜிக் நடக்குது உள்ளுக்குள்ள’ தன் மனவருத்தம் தற்காலிகமாய் நீங்கியதில், புன்னகை செய்தாள் நிலா.

இவர்கள் இருவரும் வருவதற்குள் வேணியும் தேவியும் உணவை முடித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தனர். அதியனும் கோகுலும் கடைசி வாய் உப்புமாவோடு இருவரையும் வரவேற்றனர்.

“நீங்க வரதுக்குள்ள ரெண்டு ரவுண்ட் ஓடிடுச்சு!! ஏவ்வ்வ்வ்!!!” என்றான் அதியன்.

நிலாவுக்கும் தனக்கும் தட்டில் உப்புமா வைத்துகொண்டு சாப்பிட அமர்ந்தான் இனியன். உணவுவேளை அமைதியாய் போய்க்கொண்டிருக்க வேளை, வேணி தொலைக்காட்சியை ஓட விட்டார்.

கோகுல், “அமைச்சர் டெத் பத்தி ஏதாது க்ளூ கிடைச்சுதா?” என்றான். நேரிடையாய் ‘காலைல எங்க போன?’ என்றால் பதில் வராது என தெரிந்தபடியால்.

உணவை அளந்துகொண்டே, “இஸ்திரி போடுற ஆளு போன் பண்ணான்! அந்த பால்க்காரன் இன்னைக்கு வந்துருக்கான்னு! அதான் நேரா அங்க போயிட்டேன்!!” என்றாள் நிலா.

கோகுலுக்கு பதில், இனியன், “ஓஓ!” என்றான். நிலாவுக்கு கீற்றாய் புன்னகை வந்தது.

கோகுல், “அப்புறம் என்னாச்சு? அந்த ஆளை பார்த்தியா? போறப்போ என்கிட்ட சொல்லிருந்தா நானும் வந்துருப்பேன்ல?”

அவனது கடைசி வரிக்கு பதில் சொல்லாமல், “பாத்தேன்! போலிஸ் மாத்தி மாத்தி வீடு தேடி வந்து விசாரிக்குறாங்க, அசிங்கமா போச்சுன்னு கொஞ்ச நாள் சொந்த ஊரு பக்கம் தங்கிருந்துருக்கான்!!” என்றாள் நிலா.

“பின்ன, விசாரிக்க மாட்டாங்களா? பாடியை பர்ஸ்ட் பார்த்ததே அவன்தானே?!” என கோகுல் சொன்னதும், “ம்ம்ம்!! போலீஸ்கிட்ட சொன்னதே தான் என்கிட்டயும் சொன்னான்! காலைல எப்போதும் போல ஐஞ்சு மணிக்கு பால் எடுத்துட்டு போயிருக்கான்! கதவு உள்பக்கமா சாத்தி இருந்துருக்கு. எப்போவாது ஒன்னு இரண்டு நாள் இந்தமாறி அவங்க எழுந்துக்க லேட் ஆகுமாம்! சோ பின் பக்கமா போய் கிட்சென் வின்டோ வழியா பாத்திரத்தை உள்ளே வைக்கும்போது அமைச்சரோட அம்மா ஹால்ல, தரைல விழுந்து கிடந்துருக்காங்க!!” என்றாள்.

கோகுல், “மயங்கி விழுந்துட்டாங்கன்னு நினச்சு வாசல்ல நின்ன செக்யூரிட்டி கார்ட்ஸ வரவச்சு உள்ள போயிருக்கான்!! அப்போதான் தெரிஞ்சுருக்கு அவங்க கழுத்து அறுபட்ட நிலைல பிணமா கிடந்துருக்காங்கன்னு!! உடனே மேல இருக்க அமைச்சர் ரூமுக்கு ஓடி போய் விஷயத்தை சொல்லலாம்ன்னு பார்த்தா, அந்த ரூமுல வரிசையா ஆறு பேரு தூக்குல தொங்கிட்டு இருந்துருக்காங்க அமைச்சர் உட்பட!! சரியா? இதைத்தாண்டி வேற ஏதாவது சொன்னானா?” என்றதும் ‘இல்லை’யென்றாள் நிலா.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அதியன், “அமைச்சர் வீடுன்னா எவ்ளோ பாதுகாப்பா இருக்கும்? இப்படி பால்க்காரன், பேப்பர் போடுறவன் எல்லாம் வந்து போற அளவுக்கா சாதாரணமா இருக்கும்?” என்றான் சந்தேகமாய்.

கோகுல், “எல்லாரும் அப்டிதான்!! ஆனா இவர் கொஞ்சம் டிஃப்பரன்ட்!! யார் வேணாலும் இவரை பார்க்க வரலாம்!! இஸ்திரி போடுறவன், பால்காரன், மெக்கானிக் எல்லாரும் ஈசியா இவர் வீட்டுக்கு வந்து போவாங்க. வாசல்ல இருக்க போலிஸ், வரவங்களை செக் பண்ணிட்டு உள்ளே அனுப்புவாங்க!! இப்படி எளிமை எளிமைன்னு படம் காட்டி தானே பத்து வருஷமா அமைச்சரா இருக்காரு!!”     

அந்நேரம் தொலைகாட்சியில் பத்து மணி செய்தி ஒளிபரப்பப்பட, அனைவர் கவனமும் அங்கே குவிந்தது. முதல் செய்தியாக, “அமைச்சர் சதாசிவத்தின் கொலை வழக்கு புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில், வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தை முனுமுனுக்கவைத்துள்ளது” என வந்ததும் டிவியை பட்டென அணைத்தார் கிருஷ்ணவேணி.

டைனிங் டேபிளில் இருந்த நால்வரும் ஒருசேர, உச்சுகொட்டிகொண்டு வேணியை பார்த்தனர்.

தேவி, “என்ன லுக்கு?? சாப்பிட்டுட்டு எழுந்துரிங்க எல்லாம்!! நல்ல நேரம் ஆரம்பிக்கபோது!” என்றார்.

அதியன், “எதுக்கும்மா?” என கேட்க, “நீ போய் ரூமுக்குள்ள படு! சின்ன பையன்கிட்ட எல்லாம் சொல்ல கூடாது இதை!!” என்றார் வேணி.

கோகுல் அவசரமாய், “நான் பெரிய பையன் தான் ஆன்ட்டி!! என்கிட்ட சொல்லுங்களேன் என்னன்னு?” என்றதும், “ஆமா, அவனுக்கு பத்து வயசு உனக்கு பாஞ்சு வயசு!! ஒழுங்கா கிளம்புளே!!” என விரட்டினார் வேணி.

அதியன் ரூமுக்குள் சென்றுவிட, கோகுல் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான். தேவி ஒரு டம்பளர் நிறைய பாலை சுண்ட காய்ச்சி வேணி கையில் கொடுத்தார்.

“என்கிட்ட ஏன் குடுக்குற?”

“நீயே அவகிட்ட குடு வேணி, எனக்கு பயமா இருக்கு!!” சொல்லிவிட்டு நிற்காமல் தன்னறைக்கு ஓடிவிட்டார் தேவி.

இனியன், “எதுக்குங்கம்மா நல்ல நேரம் பார்க்குறீங்க இப்போ?” என்றான்.

வேணி, “வேற எதுக்கு? உங்க சாந்தி முகூர்த்ததுக்கு தான்!!” என்றதும், கடைசி வாய் உப்புமா நிலாவின் தொண்டையில் சிக்கி புரை ஏறியது. எங்கோ தூரத்தில் ‘நகிர்தனா தினனனா னா என்ற மியூசிக் இனியனின் செவியை ஏக சுரத்தில் வந்தடைந்தது.

-தொடரும்…

Advertisement