Advertisement

*7*

அடிக்கிற கை அணைக்குமா?

அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே!!

கோடை சூரியன் உச்சத்தில் வந்து நின்றது. நிழல் எட்டிக்கூட பார்க்காத அந்த இடத்தில் வழியும் வியர்வையை துடைத்துக்கொண்டே ‘வருவியா? வரமாட்டியா? வரலன்னா உன் பேச்சுக்கா! என மனதுக்குள் பாடிக்கொண்டே நிலாவுக்காக காத்திருந்தனர் அனைவரும். இனியன் மட்டும் ஆதியோகி போஸில் இருந்து மாறவே இல்லை.

“அவ வரமாட்டா!” கோகுல் சொன்னதும், நம்பிக்கையின்றி அமர்ந்திருந்த அனைவரும் இனியனை பார்த்தனர். தவநிலை மாறாது இருக்கும் தன் அண்ணனை கண்ட அதியன், “என் அண்ணன் சொன்னா கரெக்டா இருக்கும்! அண்ணி வந்துடுவாங்க!” என்றான்.

“அவ வரமாட்டாங்குறேன்!” கோகுல் மறுபடி அழுத்தமாய் சொல்ல, “வருவாங்கங்குறேன்!!” என்றான் அதியன்.

கோகுல், “வரமாட்டா!! பெட்டு வச்சுக்கலாமா?”

அதியன், “வச்சுக்கலாமே! ஐநூறு ரூவா பெட்!” காலரை தூக்கி விட்டுக்கொண்டான்.

கோகுல், “ஹும்ம்! பிஸ்கோத்து காசு!! நான் ரெண்டாயிரம் ரூவா பெட் வைக்குறேன்! பிகாஸ் நான் தானே ஜெய்க்க போறேன்!!”

“அதையும் பார்த்துரலாம்!” அதியன் சொல்ல, அவர்களுக்குள் இன்னும் பேச்சுக்கள் அதிகமானது.

இதுவரை பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த வேணி, வெகுண்டெழுந்தார்.

“நிறுத்துங்கடா!! புத்தி கித்தி இருக்கா இல்லையா உங்களுக்கு? இப்ப என்னமாறி சூழல்ல இருக்கோம்!! கொஞ்சம்கூட விவஸ்தை இல்லாம நடந்துக்குரீய?” அவர் பொரிய தொடங்க, வாயை திறந்தான் இனியன்.

“இப்போ இவங்க சீரியஸா இருந்து மட்டும் என்னங்க அம்மா ஆகபோது? நீங்க பொறுத்துருங்க! அவ வருவா!!” இனியன் சொல்லிட, அவன் முகத்திற்காக அமைதியானார் கிருஷ்ணவேணி.

‘இதேதான் ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கான்!’ என நினைத்தது கோகுலின் மனம்.

மதியம் இரண்டு மணிக்கு டோக்கன் வாங்கியிருந்தார் குருநாதன். அதற்குள்ளாவது நிலா வந்துவிட வேண்டுமென அவர் வேண்டிக்கொண்டிருந்தார். ‘என்ன ஒரு பொறுமையான பையன்? இக்கட்டான நிலைல கூட இந்த அசாத்திய பொறுமை நிலா குணத்துக்கு பொருத்தமானது! காலடி சொர்கத்தை எட்டி உதைக்க பார்க்குதே இந்த பொண்ணு?’ அவர் மனம் வெதும்பிக்கொன்டிருந்தது.

மணி மெல்ல நெருங்கி இரண்டை தொட்டிக்கொண்டிருந்த வேளை, உள்ளிருந்து கிளார்க் இவர்களிடம் வந்தார்.  அப்போது அருகில் இருந்த வேறு சிலர், “எங்களுக்கு ரெஜிஸ்டிரேஷன் கொஞ்சம் சீக்கிரமா முடிச்சு குடுத்தா நல்லா இருக்கும் சர், ஏதாது உதவி பண்ணுங்களேன்!” என்றதும், கிளார்க் இனியன் குடும்பத்தை பார்த்துக்கொண்டே, “அடுத்தது நீங்க தான்!” என்றார்.

“நடுல ஒரு கல்யாணம் இருக்குன்னு சொன்னாங்களே!!” என்றதும், “கல்யாணம் இருக்கு, ஆனா கல்யாண பொண்ணு இல்ல!!” என்றார் நக்கலாய்.

காலையில் இருந்து நடப்பதை அவர்களும் பார்த்துக்கொண்டிருந்ததால், அவர்கள் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். அதில் தேவியின் முகம் அவமானத்தால் சிவந்தது.

‘ஹும்ம்!! எப்படியும் நான்தான்டா ஜெய்ப்பேன்!’ கோகுலின் கண்கள் அதியனிடம் சவால் விட, ‘அதையும் பார்த்துறலாம்!’ என அவன் கண்களும் சொன்னது.

ஒப்பிற்க்காக கிளார்க், “அடுத்து நீங்கதான்! பொண்ணு வருமா வராதா!” என்றிட, ‘இன்னும் கொஞ்ச நேரம் டைம் கேட்டு பார்க்கலாமா?’ என நினைத்துக்கொண்டே, ஒருவர் முகத்தை ஒருவர் தயக்கமாய் பார்க்க, “எல்லாம் ரெடி!! நீங்க டாக்குமென்ட் சப்மிட் பண்ணிடலாம்!!” சமீபத்தில் கேட்ட குரலில் ஒருசேர கிளார்க்கின் பின்னே பார்த்தனர் எல்லோரும்.

வியர்த்து வழிந்த முகத்துடன் மூச்சு வாங்க நின்றிருந்தாள் இன்பநிலா. தேவிக்கு போய்க்கொண்டிருந்த உயிர் திரும்பி வந்து சேர்வதை போல இருந்தது. இனியன் நிலாவை பார்த்தபடி ‘நான்தான் சொன்னேனே!’ சிறு சிரிப்போடு அமர்ந்திருந்தான்.

“ஹேய்! நான் பெட்டுல ஜெய்ச்சுட்டேனே! இரண்டாயிரம் எடு, இரண்டாயிரம் எடு!!” அண்ணி வந்த சந்தோஷமும் சேர்ந்துக்கொள்ள குதித்தான் அதியன்.

கோகுலுக்கு, ‘இரண்டாயிரம் போச்சே!’ என வருத்தபடுவதா, இல்லை ‘தன் தங்கையான தோழிக்கு திருமணமாக ஆகபோவதில் சந்தோஷப்படுவதா?’ என்றே புரியாமல் இரண்டும்கெட்டான் நிலையில் இருந்தான்.   

உடனே சமாளிப்பாய், “ஏதோ பொழுதுபோக்குக்கு விளையாண்டதை உண்மைன்னு நம்பிட்டியே அதியா! இங்க பாரு பழக்க வழக்கம் எல்லாம் சாப்பாடு பேச்சோட நிறுத்திக்கணும். பர்சுல எல்லாம் பங்கு கேக்க கூடாது! புரிஞ்சுதா!?” கோகுல் சொல்ல, அதியன் அவனை ‘பெரியமனுசனாடா நீ!?’ என்பதை போல முறைத்தான்.

‘நான் எப்போடா பெரிய மனுஷன்னு சொன்னேன்!?’ என பதிலுக்கு பார்த்தான் கோகுல்.

நிலா வந்ததும் பதட்டம் நீங்கிட, கோவமாய், “இவ்ளோ நேரம் எங்கடி போன? உன் இஷ்டத்துக்கு உன்னை வளர விட்டது எவ்ளோ தப்புன்னு இன்னைக்கு தான் புரிஞ்சுகிட்டேன்! உன்னால இங்க எத்தனை பேருக்கு மனகஷ்டம் தெரியுமா?” தேவி திட்ட, “உள்ளே போலாமா? எல்லாம் ரெடி தானே!?” என கிளார்க்கிடம் கேட்டாள் நிலா.

பின் அவரோடு நகர்ந்தவள் ஒரு நொடி தங்கி, இனியனை ஒரு பார்வை பார்த்தாள். அது ‘என்னோடு வா’ என்ற பொருளை அவனுக்கு உணர்த்த, சாவி கொடுத்த பொம்மை போல அவள் பின்னே சென்றான் இனியன்.

“பார்த்தியா வேணி? நான் பேசுறதை கூட மதிக்காம எப்டி போறான்னு?” தேவி புலம்பியதும், “ப்ச்! அதான் புள்ள வந்துடுச்சே! இத்தனை நேரம் என்ன வேலைல சிக்கியிருந்துசோ யாரு கண்டா? மூச்சு வாங்க அரக்க பறக்க வந்துருக்கு! திட்டாம கல்யாணத்தை சந்தோசமா பாரு” தேவிக்கு சமாதானம் சொல்வதை போல தனக்கு தானே சொல்லிக்கொண்டு உள்ளே சென்றார் கிருஷ்ணவேணி.

ரெஜிஸ்டராரிடம் நலம் விசாரிப்பு செய்தவள், அவர் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் சொன்னாள். பின்பு தூசி தட்டப்படாத ஒரு லெட்ஜரை கிளார்க் எடுத்து கொடுக்க, “ரெண்டு பேரும் மாலை மாத்திக்கலாம்!” என்றார் பதிவாளர்.

பையில் இருந்த ரோஜா இதழ் மாலையை அதியனும் கோகுலும் எடுத்து இருவர் கையிலும் கொடுத்தனர். முதலில் மாலையை கையில் ஏந்திய இனியன், நிலாவை பார்க்க, அவள் அவன் கண்களை பாராது நின்றிருந்தாள். சிரிப்போடு அதை அவள் கழுத்தில் அவன் அணிவிக்க, அவனது விரல் பதிந்த இடம் சிலிர்க்க தொடங்கியது.

அவளது தடுமாற்றத்தை மறைக்கும் முகம் இனியனுக்கு சிரிப்பை மட்டுமே வரவழைத்தது. இத்தனை நேரம் தங்களை காக்க வைத்தாள் என்ற கோவம் துளி கூட அவன் முகத்தில் இல்லை.

“அண்ணி? மாலையை போடுங்க!! அண்ணன் ரொம்ப நேரமா ‘அண்ணா ஆர்ச்’ மாறி வளைஞ்சே நிக்குறான்!” அதியன் குரலில் இனியனை நிமிர்ந்து பார்த்தாள் நிலா.

அவன் சிரித்த முகத்தை கண்டதும், தன் தயக்கத்தை விரட்டியவள், நிமிர்வாய் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் இட்டாள். வேணியும் தேவியும் தாங்கள் கைம்பெண் என காரணம் காட்டி தாலி எடுத்து கொடுக்க மறுக்க, குருநாதன் தாலி சரடை எடுத்து இனியனின் கையில் கொடுத்தார்.

அதை வாங்கிய இனியனுக்கு அளவிடமுடியாத ஆனந்தம் என சொல்லிவிட முடியாது. உள்ளுக்குள் சற்றே ‘முதலை வாய்க்குள் காலை விட்டதை’ போல பயம் எட்டிப்பார்த்தாலும் “பயமா? எனக்கா? ஹிஹிஹாஹா!’ வெளிமனம் பந்தா காட்டி, துணிவை கொடுத்தது.

கோகுல் தன் மொபைலில் அலைபாயுதே படத்தில் இருந்து ‘மாங்கல்யம் தந்த்துனாநேனா’ மியூசிக்கை ஓடவிட்டான். “மூணு முடிச்சு போட்டு, உன்னை தொட்டு தாலி கட்டுன புருஷன்!” என காலத்துக்கும் இனியன் சொல்லிக்கொள்ள முடியாதபடி, தங்க சங்கலியில் கோர்க்கப்பட்டிருன்தது தாலி.  

அதை அலேக்காக வாங்கி நிலாவின் கழுத்தில் மாட்ட வேண்டியது மட்டுமே இனியனின் வேலை. தாலி கயிறாய் இருந்தால் மூன்று மாதத்தில் தாலி பிரித்து கோர்க்கும் சம்பிரதாயம் வைக்க வேண்டும். அது நிலாவுக்கு தொந்தரவை கொடுக்கும் என முற்ப்போக்காய் எண்ணிய வேணியின் வேலை இது.

நிலா இனியனின் முகத்தில் நேருக்கு நேராய் பார்த்தாள். அதில் தொனித்த பாவம், இனியனை அசைக்கவில்லை. தாலியை நிலாவின் கழுத்தில் இட்டான். கையில் இருந்த செவந்தி இதழ்களை அங்கிருந்தோர் அவர்கள் மேல் தூவினர். கோகுல் தன் கேமராவில் அந்த தருணத்தை சிறைபிடித்தான். பின்பு சட்டப்பூர்வமான திருமணத்திற்க்கான கையெழுத்து போட, லெட்ஜரை கொடுத்தார் பதிவாளர்.

இனியன் கையொப்பமிட, நிலா ஒரு நொடி தயங்கி பின் வேகமாய் கையொப்பமிட்டாள். ஒருவழியாய் இருவரின் திருமணமும் எளிமையான முறையில் ஆரவாரமின்றி நடந்து முடிந்தது.  

“கல்யாணம் முடிஞ்சுடுச்சு அடுத்து சாப்பாடு தானே?” கோகுல் சொல்ல, அருகே இருந்த சைவ ஹோட்டலுக்குள் புகுந்தனர். முதலில் பாலும் பழமும் சம்பிரதாயத்துக்காக ப்ரூட் மிக்ஸருடன் பால் ஆர்டர் செய்யப்பட, இதர உணவுகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப்ப தேர்வு செய்யப்பட்டது.

“இனியா? நிலாக்கு பாலும் பழமும் ஊட்டி விடுடா!” வேணி சொன்னதை செய்ய இனியன் முன்வர, தன் முட்டைக்கண்ணை விரித்துக்காட்டி பயமுறுத்தினாள் இன்பநிலா.

அதற்கு அசராத இனியன், பிறர் கவனம் கவராதபடி கட்டாயப்படுத்தி அவள் இதழ்களுக்குள் திணித்தான். நிலாவை இனியனுக்கு ஊட்ட சொல்ல, பிடிவாதமாய், ‘முடியாது’ என மறுத்துவிட்டாள். அதற்குமேல் வற்புறுத்தாமல் உணவை முடித்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.

குருநாதன் பாதி வழியில் விடைப்பெற்றுக்கொள்ள, கால் டேக்ஸ்சியில் இனியனின் அருகே அமர்ந்திருந்தாள் நிலா. அயர்வாய் இருப்பதாய் சொல்லி நிலாவே வண்டி சாவியை கோகுலிடம் கொடுத்திருக்க, அவனும் அதியனும் நிலாவின் ஸ்கூட்டியில் காரை பின்தொடர்ந்தனர்.   

நிலாவின் கைபிடிக்க இனியனுக்கு ஆசையாக இருந்தது. கால் மேல் கால் போட்டபடி கதவோரமாய் அமர்ந்து போக்குவரத்து நெரிசலை ரசித்துக்கொண்டிருக்கும் நிலாவை ஓரக்கண்ணால் ரசித்தான் இனியன்.

‘தொடலாமா? வேணாமா?’ அவன் மனதுக்குள் பட்டிமன்றமே நடந்தது. அவள் விரல் பிடித்து அவன் கழித்த நேரங்கள் கனவு போல கண்முன்னே தோன்றியது.    

‘தொட்டுதான் பார்ப்போமே! முறைச்சா கையை எடுத்துடலாம்!’ மனது சொல்ல, மறுநொடி, ‘உன் அம்மா அத்தை முன்னாடி அவ கோவம் வந்து உன்னை அடிச்சுட்டா, அசிங்கமா போய்டும் பார்த்துக்க!!’ என மூளை எச்சரித்தது.

‘என்னடா இது வம்பா போச்சு!!’ சலித்துகொண்டவன், ‘இந்த வம்பே வேணாம்!’ என முடிவெடுத்து மறுபக்கம் திரும்பிக்கொண்டான். ‘அவளை பார்த்தா தானே பிரச்சனை!’ என்ற எண்ணம்.

ஆனால் ஐந்தே நிமிடத்தில் அவன் விரதத்தை கலைக்கும் மோகினியாய் வந்து தீண்டியது அவள் குழல் காற்றில். தன் மீது பட்டு சிலிர்ப்பை கொடுக்கும் குழலை, ‘ஏண்டா? ஏன்?’ என பாவமாய் பார்த்தான் இனியன்.

காலின் மீது தாளமிடும் அந்த விரல்களை இறுக்கி பிடிக்க ஆர்வம் எல்லை மீற, ‘அடிச்சாலும் வாங்கிக்கலாம்!’ என துணிந்து அவள் கரம் பற்ற சென்றான். அவன் கை அவள் விரல்களை பற்ற நெருங்கிய நொடி கார் சடன் ப்ரேக் போட்டு சாலையில் ‘க்ரீச்’ என்ற சத்ததோடு நிற்க, காரின் உள்ளிருந்தவர்கள் ஒருசேர குலுங்கினார்.  

‘என்ன ஆச்சு?’ பதற்றமாய் முன்கண்ணாடி வழியே வெளியே பார்த்தால் ஒருவன் தள்ளாடியபடி காரை பற்றிக்கொண்டு எழுந்து நிற்க முயன்றுக்கொண்டிருந்தான்.

“பெருமாளே!! பொறுமையா போக கூடாதா? இப்படி அவர் மேல இடிச்சுட்டியே தம்பி?” தேவி பதறி சொல்ல, “மேடாம்! நான் இடிக்கல! அவனே வந்து மோதிகினான்! தண்ணி வண்டி போலக்கீது!” டிரைவர் சொன்னதும் தான் அந்த ஆளை சரியாய் கவனித்தனர். குடிபோதையில் தள்ளாடிக்கொண்டிருந்தான்.

எழுந்து நின்றவன், கார் கண்ணாடியை வேகமாய் அடித்தான். “இன்னாடா கசுமாலம்! என் பொண்டாட்டிகினே துட்டு வாங்கின்னு வந்து என்மேல வண்டி ஏத்தி கொல்ல பாக்குறியா?” நடுரோட்டில் நிறுத்தி அவன் கத்த, அவனை எரிச்சலோடு பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.  அவன் கத்தியும் யாரும் காரை விட்டு இறங்காததை கண்ட அந்த குடிமகன், “நான் தொண்டத்தன்னி வத்த கத்தின்னு இக்கீறேன், நீ சொகுசா பொட்டிக்குள்ள குந்தினுக்குரியா? அடச்சி! வெளில வா!” மேலும் அவன் குரல் ஓங்கியதில்  நிலாவுக்கு கோவம் தலைக்கேறியது.

டிரைவர் மட்டும் இறங்கி சென்று, “யோவ், நீயாதானே வந்து மோதிகின? ஒழுங்கா வழிய வுடு!” என்றதும், தள்ளாடியபடியே, “ஆம்மாஆ! நானே தான் வந்து மோதிகினேன்! ஏன்னா நான் சரக்கடிச்சுருக்கேன்! நீ தெளிவோ தானே இருந்த? நீ நவுந்து போயிருக்கலாமுல?” ராகம் போட்டு பேசினான்.

“இத்தப்பாரு! பேஜாரு வோணாம்! ஒரு நல்ல காரியம் முடிச்சு போய்னுக்குறோம்! மரியாதையா ரூட்ட வுடு!” டிரைவர் அவனிடம் தணிவாய் சொல்ல, “நல்ல காரியம் முடிச்சுக்குனியா? அப்போ வா, எல்லாம் ஒண்ணா இனிப்பு துன்னலாம்! நல்ல காரியம் பண்ணா இனிப்பு துன்னனும்ன்னு என் ஆயா சொல்லும்!” காரின் முன் சம்மணம் போட்டு அமர்ந்துக்கொண்டான் அவன்.

“ச்சை! பொழப்பை கெடுக்கன்னே வந்துருதுங்கோ!” தலையில் அடித்துக்கொண்ட டிரைவர், அவனை தாண்டிக்கொண்டு செல்ல வேண்டி காரை கிளப்பினார். உடனே வாரி சுருட்டிக்கொண்டு எழுந்த குடிமகர்ர்ர்ர் “என்னை தாண்டிகினு இங்கேருந்து போயிடுவியா நீ? இந்த கோட்டரு கோவிந்தசாமிய டபாய்சுட்டு உசுரோடு போயிடுவியா?” லுங்கியை அரிவாளாய் மாற்றி காற்றியில் பட்டம் விட்டபடியே ஏகசுரத்தில் கத்தினான் அவன்.

ஸ்கூட்டியில் பின்தொடர்ந்து வந்திருந்த கோகுலும் அதியனும், ‘ஏதோ பிரச்சனை போலயே’ என யூகித்து மிஸ்டர் கோவிந்தசாமியை நெருங்கினர். அதற்குள் தேவி கோகுலை அழைத்து, “ரொம்ப நேரமா பிரச்சனை பண்ணிட்டு இருக்கான், கொஞ்சம் என்னனு பாருடா!” என்றிருந்தார்.

நிலா பல்லை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவளது கோவம் எப்போதோ கரை கடந்துவிட்டிருந்தது. இருந்தாலும் நான்கு ஆட்கள் இருக்கும் இடத்தில் நம் தலையீடு வேண்டாம் என அதிசயமாய் அமைதி காத்தாள்.

அதியனை நிற்க சொல்லிவிட்டு அவனை நெருங்கிய கோகுல், “அண்ணே! என்ன பிரச்சனை?” என்றான் சாதுவாய். அவனை மேலும் கீழும் பார்த்த கோவிந்தசாமி, “நான் பிரச்சனைன்னு உன்னாண்ட சொன்னேனா?” என்றான்.

“இல்லண்ணே! வண்டியை மறிச்சு ஏதோ பேசிட்டு இருக்கீங்களே! என்னன்னு தெரிஞ்சா முடிவு சொல்லலாம்ன்னு தான்!!” சிரித்த முகமாய் கோகுல் கேட்க, “முடிவு சொல்ல நீ இன்னா பெரிய ஜச்சா?” கையை கொக்கு போல மடக்கி அவன் மூஞ்சி முன்னே நீட்டினான் கோவிந்தசாமி.     

ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் இவர்களை கண்டு நகைப்பது போல தோன்றியது கோகுலுக்கு. தன் முன் நீட்டியிருந்த அவன் கையை பிடித்து மெதுவாய் இறக்கியவன், “சர், எல்லாரும் பார்க்குறாங்க, நம்ம அப்டி ஓரமா போய் பேசிக்கலாமா?” என்றான்.

“நான் அப்டிக்கா போனதும், காரை இப்டிக்கா நவுட்டிகினு போய்டலாம்ன்னு பிளான்னிங் போடுறியாடா எங்கோப்பன் மவனே!” அவனது ஆட்டம் அதிகமாக, அதியன் கோவமாய் வந்தான்.

அதியன், “ஏய் நகருடா ஒழுங்கா! ஒரு அரை விட்டா சுருண்டு விழுந்துடுவ!” விரல் நீட்டி எச்சரிக்க, ஸ்டெடியாய் நிமிர்ந்து நின்றவன், “மேல கை வச்சுடுவியா? வைச்சு பாரு! வைச்சு பாரு!!” நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அதியனிடம் வந்தான்.

“அதியா சண்டை வேணாம்டா!!” உள்ளிருந்து வேணி குரல் கொடுக்க, அதியன் அதை மதியாதவனாய் கையை ஓங்கினான். கோகுல் இருவருக்கும் இடையே புகுந்து பிரித்து விட முயன்று தோற்றான். இருவரையும் சமாளிக்க முடியாமல் திணறும் கோகுலை கண்ட இனியன் வேகமாய் காரிலிருந்து வெளியே வந்தான்.

குடிமகனுக்கு இணையாய் அதியனும் சண்டையில் இறங்க தயாராய் துள்ளிக்கொண்டிருந்தான். அதியனை பிடித்து இழுத்த இனியனிடம், “விடு செழியா! ஓவரா போறான்! ரெண்டு அடி போட்டாதான் அடங்குவான்!” திமிற, “ஹே அவனுக்கு ஈகுவலா நீயும் பண்ணுறியே! கோவப்படாதடா! பொறுமையா இரு!!” என அவனை அடக்கினான் இனியன்.

கோவிந்தசாமியிடம், “சர், சாரி சர்! தெரியாம உங்கமேல மோதிட்டோம்! பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க!! கொஞ்சம் வழி விட்டா நாங்க போய்டுவோம்!!” இனியன் நயமாய் பேச, அதியன் குதித்தான். “இவன்கிட்டலாம் எதுக்குடா கெஞ்சுற?” இனியனும் அதியனும் மாறி மாறி பேசிக்கொள்ள, கோகுல், “அண்ணே! நான் சொல்றேன்ல? பிரச்சனை பண்ணாம வழி விடுங்க” பொறுமை குறைய சொன்னான்.

“என்னாண்ட சொல்றதுக்கு நீ யாருடா?” குடிமகன் எகிறிக்கொண்டு வர, “நான் கோகுல், சுடரொளி பத்திரிக்கை நிரூபர்” என்றான். அவன் பேரை கேட்டதும் அதிர்ச்சியடைந்தான் அவன். ‘தான் பத்திரிக்கையாளன்’ என தெரிந்ததும் பம்முகிறான் என நினைத்த கோகுல்,  “வழிய விடு” என்று அவன் மீது கை வைக்க, பாய்ந்து வந்து கோகுலின் சட்டையை கொத்தாய் பிடித்தான் கோவிந்தன்.

“நீதானாடா அந்த கோகுலு! குடிகெடுத்த பொறம்போக்கு! நாதாரி, பேதில போவ!!” மப்பு தலைக்கேறி போக கோகுலை உலுக்கினான் அவன். என்னவென்று புரியாமல் கோகுல் முழிக்க, “உன்னைத்தாண்டா ரொம்ப நாளா தேடினுக்கீறேன்! வசமா மாட்டிகினியா” என கத்தினான்.

“எக்ஸ்யூஸ் மி, ஐ திங்க் யூ ஹேவ் மிஸ்டேகன் மி!!” கோகுல் கோவமாய் சொல்ல, “இத்தேமாறி தான்டா பேசி பேசி என் பொண்டாட்டியை உஷார் பண்ணிட்ட! போன்ல எவனாண்டடி பேசினுக்கீறன்னு எப்பா கேட்டாலும், கோகுலு கிட்ட பேசுறேன் கூகுலு கிட்ட பேசுறேன்னே சொல்றாடா அவ! எம்பேமானி! உன் பொண்டாட்டியாண்ட நான் மிசுடு காலு வுட்டேனா? அப்ப நீ ஏண்டா என் ரூட்டுல கடையை போடுற? உன்னை அடிக்க முடியாம தான் மட்டமான சரக்கை தெனோ அடிச்சுகினு ரோட்ல கடக்குறேன்!!” அவன் அலப்பறையில் பெருங்கூட்டமே கூடிவிட்டது.

கோகுல், “ஹலோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல! அண்ட் உன் பொண்டாட்டி யாருன்னே எனக்கு தெரியாது!”      

“யாருன்னு தெரியாமையே ரூட்டை போட்டுனுக்கிரீயா? உன்னை இன்னைக்கு அடிச்சு காயப்போடாம விடமாட்டேன்டா!!” கோவிந்தன் கோகுலை அடிப்பதற்கு திமிறி வர, அடுத்த நொடி தரையில் ‘பொத்’தென விழுந்தான்.

இனியனும் அதியனும் ப்ரீஸ் ஆகி நின்றனர். கையால் மூடியிருந்த முகத்தை திறந்து கோகுல் பார்க்க, அந்த குடிமகன் விழுந்து கிடப்பதை கண்டதும், பின்னால் திரும்பினான். அடித்த தன் கையை உதறிக்கொண்டு அங்கே உக்கிரகாளியாய் நின்றிருந்தாள் இன்பநிலா.

தன்னை சுற்றி நின்ற மூன்று ஆடவர்களை கண்டவள், “ஒரு அடில சுருண்டு விழுந்துட்டான்! இதுக்கு மூணு பேரும் இவ்ளோ நேரமா மல்லுகட்டிட்டு இருக்கீங்க!!” என்றுவிட்டு கோவமாய் கார் கதவை திறந்தவள், இனியனை ஸ்பெஷலாய் முறைத்தாள்.

விழுந்தவன் இன்னமும் எழுந்திரிக்காததை கண்ட அதியன், “அண்ணனின் ஒளிமயமான எதிர்காலம் என் கண் முன்னே தெரிகிறது! மெதுவாய் பாடிக்கொண்டே காருக்குள் ஏறினான்.

வீட்டிற்க்கு சென்றதும் தன்னறைக்குள் புக திரும்பிய நிலாவை, “நில்லும்மா!!” என நிறுத்தினார் கிருஷ்ணவேணி.

“எங்க எல்லாரையும் காக்க வச்சுட்டு காலைல எங்க போயிருந்த?” என்றார் மாமியாராய் மாறிய வேணி. அழுத்தமான அவர் குரலில் அப்படியே நின்றாள் இன்பநிலா.

-தொடரும்…       

Advertisement