Advertisement

*5*

 

காலண்டரில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்!

தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்!!

 

“விடிஞ்சா விடிஞ்சுரும் சீரியலே முடியபோது, இன்னும் என் மருமவள காணோமே தேவி?” டிவியில் ஒரு கண்ணும் வாசலில் ஒரு கண்ணும் இருந்தாலும் பொரி உருண்டையை கொறிக்க தவறாமல் தேவியை கேட்டார் வேணி.

 

அதியன் மும்மரமாய் பப்ஜி விளையாடிக்கொண்டிருக்க, இனியன் அமைதியாய் அமர்ந்திருந்தான். வேணி கேட்டதும் தேவிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சங்கடமாய் போனது. அவர் சங்கடத்தை உணர்ந்த இனியன், “ம்மா!! நிலா பார்க்குற வேலைல நேரம் காலம் எல்லாம் கிடையாது. கிளம்புறப்போ ஏதாது முக்கியமான வேலை வந்துருக்கும்! அதான் லேட் ஆகுது!” என்றிட, இனியனை பூரிப்பாய் பார்த்தார் தேவி.

 

“அதுக்கில்லடா! மதியமும் சாப்பாடு கொண்டு போலயாம்! ராத்திரி சாப்பாடும் லேட்டா சாப்புட்டா குடலு கெட்டு போகாது!!” பேசி முடித்ததும் மற்றொரு பொறிஉருண்டை அவர் வாய்க்குள் நுழைந்தது.

 

“கெட்டு போனா பிரிட்ஜ்ல வச்சுக்கலாம்!!” விளையாடிக்கொண்டிருந்த அதியன் குரல் மட்டும் கொடுக்க, “கெட்டு போன பிறகு பிரிட்ஜ்ல வச்சு என்னடா பிரயோஜனம்? ஜோக்கா இருந்தாலும் நியாயம் வேணாமா!” சிரித்துக்கொண்டே இனியன் கேட்டான்.

 

“ஹிஹி” அதியன் அசடு வழிய, “இந்தமாறி கெட்டு போன ஜோக்கெல்லாம் சொல்லாத சொல்லாதன்னு எத்தனை தடவ சொல்றேன்” வேணி கையில் இருந்த ரிமோட்டை அதியன் மீது தூக்கி எறிய, அதிலிருந்து தப்பிக்க இனியன் பின் ஒளிந்தான் அதியன்.

 

அவன் தப்பித்ததும், அது விளையாட்டாய் மாறியது. வேணி வேறேதும் சிக்குமா என தேடவே, அதியனை இழுத்து பிடித்துக்கொண்ட இனியன், “தேவிம்மா அந்த பூரிக்கட்டையை வேணிம்மாகிட்ட தூக்கி போடுங்க!” என்றான். “அடப்பாவி அண்ணா!!” அதியன் அடுத்த டையலாக் சொல்வதற்குள் பூரிக்கட்டை பறந்து வந்தது.

 

அதிலிருந்தும் அவன் லாவகமாக தப்பிக்க, இப்போது மூவரும் சேர்ந்து அதியனை குறிவைத்தனர். டேபிள், சோபா என மாறி மாறி அவன் தாவ, இவர்களும் விடாமல் அவனை துரத்தினர். இத்தனை நாட்களாய் அமைதிக்கு நோபல் பரிசு வாங்கலாமா என யோசித்துக்கொண்டிருந்த வீடு, ஆரவாமாய் மாறியதும் தன் முடிவை கைவிட்டது.

 

தன் அப்பார்ட்மென்ட் பார்கிங்கில் வண்டியை நிறுத்தினாள் இன்பநிலா. கோகுலும் தன் பைக்கை பார்க் செய்ய, “எதுக்கு வண்டிய நிறுத்துற? நீ கிளம்பு!” என்றாள்.

 

“வீட்டுக்கு வரவனை வான்னு கூப்புடலன்னா கூட பரவால! இப்படி போன்னு தொரத்தாத! ஹும்ம்!” வேக வேகமாய் லிப்ட்டை நோக்கி நடந்தான். மின்தூக்கியை கீழே வர சொல்லி பொத்தானை அழுத்திவிட்டு அவன் நிற்க, அவனை தாண்டிக்கொண்டு படிக்கட்டை நோக்கி சென்றாள் நிலா.

 

‘இவ ஏன் படிக்கட்டுல போறா?’ கோகுல் நினைக்க, மின்தூக்கி இன்னும் வராததால் மீண்டும் மீண்டும் பொத்தானை அழுத்தினான். ‘பட்டன் வேலை செய்யல போல’ நினைத்துக்கொண்டு தொடர்ந்து அவன் பட்டனை புண்ணாக்கிய சத்தத்தில் ஓடி வந்தார் செக்யூரிட்டி.

 

“என்னப்பா பண்ற?”

 

“லிப்ட் பட்டன் வொர்க் ஆகல!!” என்றான் அழுத்துவதை நிறுத்தாமல். “பட்டன் எல்லாம் நல்லாதான் வொர்க்கு ஆவுது! ஆனா லிப்ட் தான் வொர்க்கு ஆவல!!” என்றார்.

 

அழுத்துவதை நிறுத்தியவன்,  அவரை முறைத்துக்கொண்டு, “இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன?” என்றான். “எல்லாரும் படிக்கட்டுல தானே போறாங்க! அதுலயே தெரியலையா?” என்றார்.

 

வாய்க்குல்லையே முனகிக்கொண்டவன், “லிப்ட் வேலை செய்யலன்னு போர்ட் வச்சா தானே தெரியும்!” என்றிட ஒரு நொடி சுற்றும் முற்றும் தேடியவர் பின் அவனை முறைத்தபடி, “அந்த போர்ட் மேலதான் ஒய்யாரமா நிக்குற!” என்றார்.

 

கீழே குனித்து பார்த்தவன், ‘என்ன சொல்லி சமாளிக்குரதுன்னு தெரியலையே’ என முனகிக்கொண்டே, “கால்ல மிதிக்குற மாறி எதுக்கு போர்ட் வைக்குற? சரி சரி இனியாது ஒழுங்கா வேலைய பாரு, இல்லனா செக்யூரிட்டி கிட்ட சொல்லிடுவேன்!!” வேகமாய் அங்கிருந்து நகர்ந்து படிக்கட்டை நோக்கி ஓடினான்.

 

“அது செக்யூரிட்டி இல்ல, செக்குரட்டரி! இவனுக்கு எல்லாம் எவன் வேலை குடுத்தானோ?” என்ற செக்யூரிட்டியின் குரல் இவனை எட்டியது. தன்னையே நொந்துக்கொண்ட கோகுல், “இன்னைக்கு எவன் சோப் எடுத்து குளிச்சேனோ தெரியல!! போறவன் வரவன் எல்லாம் மூஞ்சில கரி பூசுறான்!!” வாய்விட்டு புலம்பிக்கொண்டே படிக்கட்டுகளில் லொங்கு லொங்கென ஏறினான்.

 

மூன்றாம் தளத்தின் படிகட்டுகள் அருகே செல்கையில் நிலாவை பிடித்தவன், “லிப்ட் வேலை செய்யலன்னு சொல்லலாம்ல?” என்றான். அதற்கு பதிலாய் ஒரு சிரிப்பு மட்டுமே வர, இருவரும் மௌனமாய் படியேறினர்.   நான்காம் தளத்தின் அருகே செல்லும்போதே சத்தம் பலமாய் கேட்க, “யார் வீட்லயோ ஜாலியா விளையாடிட்டு இருக்காங்க!” என்றான் கோகுல்.

 

“ஹே உங்க ப்ளோர்ல தான் யாரோ கத்துறாங்க!!” கோகுல் சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கி செல்ல, தன் வீட்டில் இருந்துதான் இந்த பயங்கரசத்தம் வருகிறது என்பதை நிலாவால் நம்பமுடியவில்லை.

 

‘ஒரு வேலை ஏதும் சண்டையா இருக்குமோ?’ கோகுலுக்கு சந்தேகம் எழ, “ஓகே நிலா, நாளைக்கு வரேன்! பை!” என கலண்டுக்கொள்ள பார்த்தவனின் சட்டையை பிடித்து இழுத்து, “கதவ திறடா” என்றாள் நிலா.

 

அதற்குமேல் கெஞ்சினாலும் விடமாட்டாள் என தெரிந்ததால் தாழிடாத கதவை மெது மெதுவாய் அவன் திறக்க, சலிப்படைந்த நிலா வேகமாய் கதவை தள்ளினாள். திறந்ததும் உள்ளே நுழைய கீழே இருந்த பூரிக்கட்டையை கவனிக்காமல் கால் வைத்ததும் அது டைல்ஸ் தரையில் வழுக்கி விட்டது. ஸ்லிப் ஆகி விழ போன நேரத்தில் ஓடி வந்து தாங்கினான் இனியன். அவன் கண்கள் பயத்தில் இறுக்கி மூடியிருந்த அவள் விழிகளையே பார்த்தது. கண்கள் மெல்ல திறந்ததும், அவன் சுற்றி இருந்த அனைத்தும் ஸ்த்தம்பித்து நின்றதை போன்ற ஒரு மாயை. டைனிங் டேபிளில் ஒற்றை காலை தூக்கிக்கொண்டு நிற்கும் தம்பி, திடீரென மகள் வந்த அதிர்ச்சியில் வாய்மீது கைவைத்து நிற்க்கும் தேவி, மருமகளை பார்த்த பூரிப்பில் அவளை தழுவிக்கொள்ள, கை விரித்தபடி தன் அன்னை என அனைவரும் அசையாமல் நின்றதை போல தோன்றியது இனியனுக்கு. 

 

பின்னணியில் இளையராஜா, “மெல்ல மெல்ல என்னை தொட்டு மன்மதன் உன் வேலையை காட்டு! ஓ உன் பாட்டு! ஆடு ஓ வந்தாடு!

நீ தராததா? நான் தொடாததா? சொல்லி தந்து அள்ளிக்கொள்ள சொந்தமாகவில்லையே தேகம்!! ஓ உன் தேகம்! மோகம் ஓ உன் தாகம்!! சூழலுக்கு தக்க பாட்டை இசைக்க மெய்மறந்து அவளை தாங்கிப்பிடித்தபடி நின்றிருந்தான் இனியன் இளஞ்செழியன்.

 

அந்த முகத்தை இனியன் உற்று நோக்க, ‘இந்த அரும்பு மீசை கூட உன் முகத்துல அழகா தான் இருக்கு!!’ அவள் இதழ்களை நோக்கி எழுந்த அவன் கைக்கு முன்னே இரு விரல்கள் அழகாய் சொடுக்கிட, மெதுவாய் நிமிர்ந்து அந்த விரல் வந்த வழி பார்த்தவன் அதிர்ந்துபோனான். 

 

கதவில் சாய்ந்து நக்கலான பார்வையோடு சிரிப்பை அடக்கிய தோற்றத்தில் இன்பநிலா நின்றுக்கொண்டிருக்க, இளையராஜா பின்னணியில் ஓடிக்கொண்டிருந்த தன் பாட்டை சட்டென நிறுத்தினார்.   ‘அப்போ என் கையில?’ இனியன் குனிந்து பார்க்க, பளபளக்கும் தன் பல்லை காட்டினான் கோகுல். உடனே ‘ஐய்ய’ இனியன் நகர, பேலன்ஸ் இன்றி தரையில் ‘பொத்’தென விழுந்தான் கோகுல்.

 

இனியன் முகத்தில் டன் கணக்கில் அசடு வழிந்தது. டேபிள் மேல் ஏறி நின்றிருந்த அதியன், “தொப்பி தொப்பீ” குலுங்கி சிரிக்க அந்த சிரிப்பு மற்றவர்களையும் தொற்றி கொண்டது. கோகுலை கைகொடுத்து தூக்கி விட்டான் இனியன். கொஞ்சமாய் அடிபட்ட தன் இடுப்பை தேய்த்துக்கொண்டே, “கண்ணை துறந்துகிட்டே கனவா பாஸ்!? ஆமா நான் எந்த ஆங்கிள்ல பாக்க நிலா மாறி இருக்கேன்?” என்றிட, இனியனால் யார் முகத்தையும் நேர்க்கொண்டு பார்க்க முடியவில்லை.

 

பொருட்கள் எல்லாம் அங்கும் இங்கும் இறைந்து கிடப்பதை பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் நிலா. “நிலா கண்ணு? பாத்து எவ்ளோ நாளாச்சு?” அவள் கைபிடித்து இழுத்து அருகில் அமர்த்திக்கொண்டார் வேணி.

 

“எம்புட்டு வளர்ந்துட்ட? சரியா சாப்புடுறியா இல்லையா நீ? இப்படி துரும்பாட்டம் இருக்க?” நிலா பதில் சொல்லும்முன், “போனது போட்டும் கழுத! வாய்க்கு ருசியா என்ன பிடிக்குமோ கேட்டு வாங்கி தின்னு இனிமே! என் மவன் நல்லா சமைப்பானாக்கும்! என்ன?” என்றார்.

 

ஷாக்கான கோகுல், “என்ன ஆன்ட்டி நீங்க? மருமவளை சமைக்க சொல்லாம உங்க பையனை சமைக்க சொல்றீங்க?” என்றான்.

 

“யாரு சமைச்சா என்ன? வயித்துக்கு ஆகாரம் போனா ஆகாதா? என் புள்ளைக்கு முடியாதநாளு என் மருமவ செய்யப்போறா? சரிதானே கண்ணு?” நிலாவிடம் அவர் கேட்க,  “சரிங்க ஆன்ட்டி!!” அரும்பிய புன்னகையை மறைத்துக்கொண்டு இனியனை பார்த்தாள் நிலா. வேணி சொன்னத்தில் வருத்தமோ வெறுப்போ விருப்பமின்மையோ ஏதும் அவன் முகத்தில் தெரியவில்லை. வெறும் புன்னகை மட்டுமே!

 

“இப்படி நல்ல மாமியார் எல்லாம் கதைலயும் படத்துலயும் தான் கொட்டி கிடக்கு!” கோகுல் முனக, “என்ன?” என்ற வேணியிடம் “குச் நஹி” என சரண்டர் ஆனான்.

 

“உனக்கு புடவை, தாலிச்செயின் எல்லாம் இன்னைக்கு வாங்குனோம்! ஒருக்கா பாரு!! பிடிக்கலன்னா நாளை கழிச்சு மாத்திக்கலாம்!!” வேணி இன்னும் சில விஷயங்களை சொல்ல, பொறுமையாய் அவர பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கும் நிலாவை ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்தார் தேவி.

 

வேணி, “நான் ஒருத்தி டயர்டா வந்துருக்க புள்ளைய ரெஸ்ட் எடுக்க விடாம பேசிட்டே இருக்கேன்! தேவி எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வை.. சீக்கிரமா தூங்குவோம்!” என்றதும், சமையலறைக்கு விரைந்தார் தேவி.

 

அதுவரை அமைதியாய் இருந்த அதியன், “ஒருநாளாது எங்ககிட்ட இப்படி சொல்லிருக்கியாமா?” என்றான்.

 

“அதுக்கு மொதோ நீங்க வேலைக்கு போகணும்!! சும்மா இருக்கவன ரெஸ்ட் எடுக்க சொல்ல நான் என்ன மடச்சியா?” என்றார். ‘ஸ்… கிரேட் இன்சல்ட்!!” அதியன் சொல்ல, ‘இது தேவையா?’ என்ற ரீதியில் சிரித்தான் இனியன்.

 

நிலா எழுந்து தன்னறைக்கு சென்றுவிட, கோகுல், “அப்புறம் மாப்ளை சர், ஷாப்பிங் போனீங்க போல, ஊர் பிடிச்சுருக்கா?” என்றான். இருவரும் சில நிமிடங்கள் சுவாரஸ்யமாய் பேசிக்கொள்ள, “என்னபத்தி அம்மாகிட்ட கேட்க சொன்னேனே? கேட்டீங்களா?” என்றிட, “பேசவே நேரம் இல்ல!” என்றான் இனியன்.

 

“தட்ஸ் ஓகே! என்ன பத்தி பேச சொன்னா பெருமையா பேசிட்டே இருப்பாங்க! நிறுத்தவே மாட்டாங்க!”

 

அதேநேரம் “அந்த வெட்டிப்பயக்கிட்ட என்ன தம்பி பேச்சு!!! தோசை சூடா இருக்கு! சாப்பிட வாங்க!!” தேவி அழைக்க, இனியனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. கோகுல் தன் மூக்கை தொட்டு பார்த்துக்கொண்டான் இருக்கிறதா என்று!!   

 

“நான் கிளம்புறேன்!!” முறுக்கிக்கொண்டு கோகுல் கிளம்ப, கிட்செனில் இருந்தே, “ஒழுங்கா வந்து சாப்பிட உட்காரு” என்றார் தேவி. மீண்டும் இருமுறை மறுத்தும் அவர் கோவமாய் வர சொல்லவே அனைவருடனும் வந்து அமர்ந்தான் கோகுல்.

எல்லாருக்கும் தட்டில் தோசை வைத்த தேவி, கோகுல் தட்டில் சாதத்தை போட்டு, “மதியம் வடிச்ச சோறு மீந்து போச்சு! அப்பார்ட்மென்ட்க்கு பிச்சைகாரன் கூட வர மாட்டான்! வீனா போய்டும்! அதனால நீயே அந்த ரசம் ஊத்தி சாப்ட்டுடு!” சொல்லிவிட்டு மீண்டும் கிட்செனுக்குள் புகுந்தார்.

 

வேணி முதற்கொண்டு மூவரும் சிரிக்க, ‘ஒரே நாள்ல எத்தனை அடி!’ என நொந்தவன், “ஆட்சுவலி ஐ லைக் ரசம் ரைஸ் யூ க்நொவ்?” என சமாளித்துவிட்டு, கெத்தாய், “ம்மா, ஊருக்கா இருக்கா?” என்றான்.

 

இரவு உடையில் சாப்பிட வந்தாள் இன்பநிலா. அனைவர் கவனமும் சாப்பாட்டில் இருக்க, அங்கே தோசையோடு வந்த தேவிக்கு தான் ‘பக்’கென இருந்தது. எத்தனை ஜாடை காட்டியும் நிலா மதிக்காததால் வேறு வழியின்றி, “நிலா கொஞ்சம் உள்ள வா!” என்றார்.

 

நிலா தன் புருவம் மட்டும் உயர்த்தி பார்க்க, “சாப்புடற புள்ளைய எதுக்கு எழுப்பற தேவி?” என்றார் வேணி. இப்போது ஐவரும் சாப்பாட்டை விட்டு தேவியையே பார்த்தனர்.

 

தயங்கி தயங்கி பார்த்தவர் பின் வேறு வழியின்றி, “ஆம்பளைங்க இருக்க இடத்துல நைட்டி போட்டு வந்துருக்கா!! மேல ஷாலு துண்டி கூட போடாம!!” என்றிட, நிலாவின் உக்கிர பார்வைக்கு ஆளானார் தேவி.

 

வாய் வர வந்த சூடான வார்த்தைகள் அவள் உதடு தாண்டி வரும் முன், “கண்ணியமான ஆம்பளையோட கண்ணு, பொண்ணோட கழுத்துக்கு கீழ போகாது!! என் புள்ளைங்க ரெண்டும் கண்ணியவான்!! கோகுலை நீ பெறாத புள்ளைன்னு சொன்ன? அப்போ இங்க யார நினச்சு நிலா தயங்கணும்?”  வேணி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தார் தேவி.

 

நிலாவுக்கு அந்த நொடியில் தன் மாமியாரை மூட்டை மூட்டையாய் (ஹிஹி! அளவ தான் அப்டி சொல்றேன்) பிடித்து போனது.

 

சூழ்நிலையை மாற்ற வேண்டி, “அண்ணி??” என அனைவர் கவனத்தையும் திருப்பினான் அதியன். இனியன் மனதுக்குள், ‘ரெண்டு நாள் முன்ன வரைக்கும் பஜாரி, ராட்சஸி, இப்போ அண்ணியா?’ என நினைத்து சிரித்துக்கொண்டான்.

 

“உங்க ஆர்டிகிள் எல்லாம் அத்தை காட்டுனாங்க.. சூப்பரா பண்ணிருக்கீங்க!! ஆனா ஏன் உங்க பேருல பண்ணாம வேற பேருல போட்டுருக்கீங்க?” அதியன் கேட்க, திடுக்கென ஆனது நிலாவிற்கு. உடனே அவள் கண்கள் இனியனை தான் கண்டது.

 

அவன் சாதாரணமாய் இருக்க, கோகுல், “நானும் கேட்ருக்கேன்! இதுவரை சொன்னதில்லை!” என்றான். அதியன், “ஆனா பேரு நல்லா இருக்கு அண்ணி!! ‘இதழி’ன்னு” சொன்ன நொடி இனியனின் தலை வெடுக்கென நிமிர்ந்தது.

கையும் களவுமாய் மாட்டிய திருடன் போல முழித்தாள்  இன்பநிலா @ இதழி.

-தொடரும்…

 

Advertisement