Advertisement

தன்னிலை துறந்து சுடும் எண்ணையில் தெளித்த பெருந்துளி நீராய் குதித்த ஜெயானந்தனை, “காம் டவுன் மிஸ்டர் ஜெயானந்தன்! என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொன்னீங்கன்னா, எங்களுக்கு விசாரிக்க வசதியா இருக்கும்!” என்று நிவேதா பொறுமையாய் கேட்டதும், இரு தினங்கள் முன்பு நடந்ததில் இருந்து காலை தான் தப்பித்து வந்து சேர்ந்தது வரை மீண்டும் சொன்னார் ஜெயானந்தன்.

“அப்போ உங்களை யாரோ கடத்தி வச்சுருந்தாங்க! அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு நீங்க வந்துருக்கீங்க? இல்லையா?” 

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “ஆமா” என்றார் அவர். 

“லாஜிக்கலி, கடத்துறவங்க யாரும் உங்களோட சொந்த பங்களாலையே உங்களை அடைச்சு வைக்க மாட்டாங்களே!? அதுவும் நீங்க அங்கதான் இருப்பேன்னு உங்க ஆளுங்க கிட்ட சொல்லிட்டு போயிருக்கீங்க!” என்றவளை கண்டு எரிச்சலானார் ஜெயானந்தன்.

“அதெல்லாம் என்ன எழவுன்னு எனக்கு தெரியாது! நான் சொல்றது, சொன்னது எல்லாமே நிஜம்! இவனுங்க எல்லாம் பொய் சொல்றானுங்க!”

நிவேதா, “உங்க கூடவே இருந்த, உங்க நம்பிக்கைக்கு பாத்திரமான, நடந்ததை நேரில் பார்த்த இவங்க சொல்றது பொய்!! சாட்சியோ ஆதாரமோ இல்லாம நீங்க சொல்றது உண்மை! அப்டிதானே?”   

“ஆ..ம்.ம்..மா!”

“கடந்த மார்ச் மாதம் பதிமூன்றாம் நாள் எங்க இருந்தீங்க?” திடீரென அவள் கேட்ட கேள்வியை உள்வாங்காத ஜெயானந்தன், நுணலும் தன் வாயால் கெட்டதை போல “சென்னைல தான்” என்றார்.

எலி சிக்கிடுச்சே!! என்ற குதூகலிப்பு இனியன் முகத்தில். 

நிவேதா, “ப்ளீஸ் நோட் ஹிஸ் வேர்ட்ஸ் யுவர் ஆனர்! நான் குறிப்பிட்ட அந்த தேதியில், தான் சென்னையில் இருந்ததாக இப்போது சொல்லும் இவர்தான் அன்றைய தேதி டெல்லியில் கட்சி மீடிங்கில் இருந்ததாக காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அன்றைய தினம் முன்னால் அமைச்சரும் இவரது சகோதரருமான திரு சதாசிவம் குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது” அவள் சொல்ல, ‘பெட்டி கேஸு’ என அவர் சொன்ன ஒன்றத்துக்கும் ஆகாத வழக்கு தன்னை முழுதாய் விழுங்க திசை மாறுவதை உணர்ந்து வெளிறி போனார் ஜெயானந்தன்.

நீதிபதியை நோக்கி, “திடீர்ன்னு கேட்டதும் நியாபகம் இல்லாம சொல்லிட்டேன், நான் அன்னிக்கு சென்னைல இல்ல, டெல்லில தான் இருந்தேன்!!” படபடத்தார்.

“பாருங்க யுவர் ஆனர், தன் குடும்பம் பறிபோன தினம் கூட சரியா நியாபகம் இல்லாத இவருடைய வார்த்தைகளை நம்பி இவரை யாரோ கடத்திட்டாங்கன்னு நம்ம எப்டி ஏத்துக்க முடியும்?” ‘நம்பத்தன்மையில்லாத வார்த்தைகள்’ என அங்கே பதிய வைத்தாள் நிவேதா.

“நான் ஏதோ ஒரு குழப்பத்துல தெரியாம சொல்லிட்டேன், இதையெல்லாம் வச்சு ஒரு முடிவுக்கு வர கூடாது!!” துரிதகதியில் தன்னை காப்பற்றிக்கொள்ள வார்த்தைகளை வீசினார்.

“அப்போ உங்க குடும்பமே தற்கொலை செய்துக்கொண்ட அன்னைக்கு நீங்க சென்னைல இல்ல, டெல்லில இருந்தீங்க! சரியா?” அவர் வார்த்தைகளை அவரிடமே திரும்ப சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டாள் நிவேதா.

“விசாரணை கூண்டில் நிற்கும் திரு.ஜெயானந்தன், நான் முன்னர் குறிப்பிட்ட அத்தேதியில் சென்னையில் தான் இருந்துள்ளார் என்பதை இங்கே சாட்சியின் மூலம் நிரூபிக்க விழைகிறேன் யுவர் ஆனர்” 

அவள் கூறும் சாட்சி யாரென்பதை யூகித்தார் ஜெயானந்தர். இனியனின் அருகே இருந்த அவர் ஏற்பாடு செய்த போலி சாமியார் வீங்கிருந்த தன் கன்னத்தை கை குட்டையால் ஒற்றிக்கொண்டே எழுந்து வர தயாராயிருந்தான்.

நீதிபதி, “அதற்க்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?” 

நிவேதா, “திருவாளர் ஜெயானந்தனின் வாக்குத்தூய்மையை அளவிட, இந்த சாட்சியும், அவர் சொல்லப்போகும் மெய்யும் அவசியமாகிறது”

ஜெயானந்தன் பதட்டமாய் குறுக்கிட்டார். “இந்த கேஸை வேணுன்னே தேவையில்லாத வகைல திசை திருப்புறாங்க! இந்த தேர்தல்ல என் செல்வாக்கை சரிக்கனும்ன்னு எதிர்கட்சியோட சேர்ந்து இவங்க செய்யுற சதி இது! நம்பாதீங்க” எங்கே விசாரித்தால், குட்டு வெளிப்பட்டுவிடுமே என்ற ஐயம் அவர் முகத்திலும், குரலிலும் அப்பட்டமாய் தெரிந்தது.

“குற்றசாட்டு பொய்யாய் மாறும் பட்சத்துல இது உங்க செல்வாக்கை எந்த விதத்துலையும் சரிக்காது! 

வாதத்தை தொடரலாம்” நீதிபதியின் நேரடி பதிலில் செயலற்று நின்று போனார் ஜெயானந்தன். நீதிபதிக்கு நன்றியுரைத்த நிவேதா, பாலாஜி என்ற போலி சாமியாரை விசாரனை கூண்டில் ஏற்றினாள். 

“சொல்லுங்க பாலாஜி! உங்களுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?” பாலாஜி ஒருமுறை மட்டுமே நிமிர்ந்து எதிரில் இருந்தவரை பார்த்தான். அவரது கனல்விழி வீச்சில் கரைந்து போவோமோ என அஞ்சுமளவு அத்தனை கனல் அவர் பார்வையில். வெடுக்கென குனிந்துக்கொண்டான்.

மறுமுறை நிவேதா கேட்ட பின்பு, “நான் அவரோட ஆட்கள்ல ஒருத்தன்!” என்றவனை, “அவரோட ஆட்கள்ன்னா?” என துருவினாள் நிவேதா.

“அ..து..?” சொல்லலாமா வேண்டாமா என திணறிய பாலாஜியின் விழிகள் ஒரேமுறை தான் இனியனை சந்தித்தது. முறுக்கிய கையில் ஏற்றிவிட்ட வெள்ளிக்காப்பை சரிசெய்துக்கொண்டே அவன் பார்த்த, அந்த ஒரு பார்வை, அவன் வயிற்றில் அரிசி கலைய, “அவரோட ஆளுன்னா, அவர் அடியாளுங்கள்ள ஒருத்தம்மா” என்று உண்மையை கக்கினான்.

“அடியாளா? அவருக்கு எதுக்கு அடியாள்?” தெரியாததை போல நிவேதா வினவ, “அவரை எதிர்த்து எவனாது பேசுனா, அவரு வழில எவனாது குறுக்க வந்து தொல்லை குடுத்தா, சில சமயம் அவருக்கு யாரையாது பிடிக்கலன்னா கூட, ‘செஞ்சுடுவோம்!!!” என்றான் அனைவர் மத்தியிலும். அவனது வெளிப்படையான வாக்குமூலத்தில் மிக பெரிய சலசலப்பு எழுந்தது.       

“சரி, இவரோட அண்ணனும், அவர் குடும்பமும் இறந்து போன அன்னைக்கு இவர் எங்க இருந்தார்? சென்னைலையா? டெல்லிலையா?” 

“சென்னைல தான் மேடம், எங்ககூட தான் அண்ணன் இருந்தாரு!!” பாலாஜி சொல்ல, ஜெயானந்தனின் பற்கள் நொறுங்கியது ஆத்திரத்தில். முன்னிருந்த கட்டையை இறுக்கி பிடித்தன அவர் கரங்கள்.

“உங்கக்கூட என்ன செஞ்சுட்டு இருந்தாரு!?” அவள் கேட்ட அடுத்த கேள்விக்கு மீண்டும் அவனிடம் தயக்கம்! சில நொடிகளில், ‘தலைக்கு மேலே வெள்ளம் போனால், ஜான் என்ன முழம் என்ன?’ என்று நினைத்தானோ என்னவோ, முழுக்கதையும் சொல்ல தொடங்கினான்.

“அண்ணே, ஒருநாள் என்னை கூப்பிட்டு சாமியார் வேஷம் போட சொன்னாரு!  எதுக்குன்னே தெரியாம நானும் செஞ்சேன், அப்புறம் என்னை அவர் அண்ணன் சதாசிவத்துக்கிட்ட அழைச்சுட்டு போய், “இவர் பெரிய சாமியார்! சொன்னதெல்லாம் பலிக்கும்! சொல்றதெல்லாம் நடக்கும்! நீங்க அமைச்சர் பதவில இருந்து இன்னும் ‘மேல’ போகணும்ன்னா இவர் சொல்றதை செய்யுங்கன்னு சொன்னாரு! அவரு சரியான சாமி பைத்தியம்! அண்ணே சொன்னதை அப்டியே நம்பி, என்னை பெரிய சாமியாருன்னு நினச்சு என்ன என்னவோ கேட்டாரு! நானும் அண்ணே சொல்லிக்குடுத்த மாறி அவர்கிட்ட பேசுனேன்!

எதேட்சையாய் நடந்ததையும், நாங்களா செஞ்ச சிலதையும் என்னோட மகிமைல நடந்ததா சதா அண்ணனை நம்ப வச்சோம்! கடைசில அவர் என் வார்த்தைக்காக அவர் குடும்பத்தையே கொலை செய்யுற அளவுக்கு போயிட்டாரு!” என்று நிறுத்த, 

“சதாசிவம் குடும்பம் தற்கொலை செஞ்சுக்கலையா?” 

பாலாஜி, “இல்ல, எல்லாரையும் சதாசிவம் தான் கொன்னாரு! ஜெயா அண்ணன் சொல்லி, நாந்தான் எல்லாரையும் கொலை செய்ய சொன்னேன்” என்றான். 

“புரியலையே! முழுவதும் சொல்லுங்க”

“சதாசிவத்தோட ஜாதக கட்டங்கள்படி, ரத்த சொந்தங்களோட துர்நேரத்தால தான் அவருக்கு இன்னும் பெரிய பதவி அமையல, இல்லனா இந்நேரம் அவரு “பிரதமரே” ஆகிருப்பான்னு சொன்னேன்!!”   இறுதியில் சொல்கையில் குரலில் சுருதி குறைந்தது.

கேட்ட அத்துனை முகத்திலும் “இதை நம்ப அந்த ஆளு என்ன லூசா?” என்ற கேள்விதான் தோன்றியது.

நிவேதா நம்பிக்கையின்மையோடு “இதை அவர் நம்பினாரா?” என்றாள்.

“நம்பினாராவா? நான் சொன்ன அதே அம்மாவாசைல குறிச்சு குடுத்த நேரத்துல ஒரே இடத்துல எல்லாரையும் ஒரே மாறி கொன்னாரு! அவரு எந்த அளவுக்கு மூடநம்பிக்கையை நம்புறவர்ன்னா, ‘வீட்ல ஏழு ஓட்டை போட்டுவையுங்க, போற உயிர் அதுவழியா வெளில போகும்ன்னு’ சொன்னப்போ உடனே ஆளை கூப்ட்டு வீட்ல ஏழு ஓட்டையை போட்டுட்டாரு!” நடந்த நிகழ்வை அவனால் கூட நம்பமுடியவில்லை என்பது அவன் நடந்ததை விவரித்த விதத்தில் தெரிந்தது. 

“இதெல்லாம் நீங்க தான் அவருக்கு சொன்னீங்களா?”

மறுகணம் அவள் வாக்கியத்தை சரி செய்தான் பாலாஜி. “நானா சொல்லலம்மா! ஜெயா அண்ணன் சொன்னதை நான் அப்படியே சதா அண்ணன் கிட்ட சொன்னேன்! ஆனாலும் மனுஷன் குடும்பத்தையே கொல்லுவாருன்னு நினைக்கல!!” 

“எதுக்காக உங்க ஜெயா அண்ணன் இப்படி சொல்ல சொல்லனும்?” அவன் வாயாலே உண்மையை பிடுங்க, வலை விரித்தாள் நிவேதா. சரியாய் அதில் தானும் விழுந்து, ஜெயானந்தனையும் விழ வைத்தான் பாலாஜி.

“சதா அண்ணே, எப்பவும் ஜெயா அண்ணனை மதிக்கவே மாட்டாரு! இரண்டு பேருக்கும் பெருசா ஒத்து போகாது! இந்த முறை எலக்ஷன்ல அமைச்சர் பதவிக்கு தான் நிக்கணும்ன்னு ஜெயா அண்ணன் ஆசைப்பட்டு சதாண்ணன் கிட்ட கேட்க, எல்லார் முன்னாடியும் ரொம்ப அசிங்கமா பேசிட்டாரு! அதுல ஜெயா அண்ணாக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு!! இவரு இருந்தா தானே நான் அமைச்சர் ஆகுறது கஷ்டம், அவரை குடும்பத்தோட மேல அனுப்புறேன்னு போதைல சொன்னவரு, அதே மாறியே பண்ணிட்டாரு” 

அதுவரை தன் ஆத்திரத்தை அணைகட்டி வைத்திருந்த ஜெயானந்தன், “இவன் யாருன்னே எனக்கு தெரியாது! எங்கிருந்தோ ஒருத்தனை பொய் சாட்சி சொல்ல அழைச்சுட்டு வந்துட்டு என் மேல வீண் பழி போடுறீங்க!?” என்று குதித்தார்!

ஆனால், அவர் வாதத்தை ஏற்காத நீதிபதி, விசாரணையை தொடர சொன்னார்.

“நீங்க சொன்னபடி பார்த்தா, பெத்த அம்மா, மனைவி மகள் மகன் எல்லாரையும் சதாசிவமே கொலை செஞ்சு அதை தற்கொலையா மாற்றிருக்காரு!!! ஆனா அதுல ஜெயானந்தனுடைய மனைவி மற்றும் மகனும் இருந்தாங்களே! தன் குடும்பத்தை கூடவா ஜெயானந்தன் காப்பாற்றிக்கொள்ள நினைக்கல?” பாலாஜியிடமே அதை வினவினாள்.

“நாங்களும் எவ்ளவோ சொன்னோம், ஆனா தன்னோட குடும்பம் மட்டும் தப்பிச்சுட்டா என்மேல சந்தேகம் திரும்பிடும், எல்லாரும் செத்தாதான் அனுதாப ஓட்டு வாங்கி நான் ஜெயிக்க முடியும்! அதுக்கு பிறகு எத்தனை பொண்டாட்டி வேணுனா வச்சுக்கலாம்ன்னு அண்ணன் சொல்லிட்டாரு” என அவன் சொல்ல, அவன் சொல்வது மெய்யோ? பொய்யோ? அங்கிருந்தோரின் அருவெறுப்பான பார்வை ஜெயானந்தனை மொய்த்தன.

“இவன் பொய் சொல்றான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!” கட்டிடம் எதிரொலித்தது ஜெயானந்தனின் குரலை!

“யாரோ என்னை அசிங்கபடுத்தனும்ன்னு திட்டம் போட்டு இதெல்லாம் செஞ்சுருக்காங்க!! ஒருத்தன் காணோம்ன்னு ஆரம்பிச்ச வழக்கு, இப்போ சம்பந்தமே இல்லாத இடத்துல போய் நிக்குது!!” அவர் சினத்துடன் சீர, நீதிபதி அவருக்கு ஜால்ரா அடிக்காமல், “இப்போதுதான் வழக்கு சரியான பாதையில் செல்கிறது” என்று சொல்லி அவரது ஆணவ மூக்கை உடைத்தார்.

நிவேதா, “சாட்சிகள் பொய் சொல்லலாம்! ஆனால் ஆதாரங்கள்!!!? 

உங்கள் முன்னிலையில் இந்த வழக்கிற்கான முக்கிய ஆதாரமொன்றை சமர்ப்பிக்க அனுமதி வேண்டுகிறேன் யுவர் ஆனர்” அனுமதி அடுத்த கணமே கிடைத்தது. 

அங்கிருந்த ப்ரொஜெக்டரில் நிவேதா சமர்பித்த காணொளி உருபெற்று ஓடியது. முதலில் அங்கும் இங்கும் ஆடிய படம், பின் ஒரு பதின் வயது பையனின் கையில் நிலைபெற்றது. அவ்விடத்தில் நிறுத்திய நிவேதா, “இந்த பையன் யாருன்னு தெரியுதா?” என்றாள்.

சிவந்திருந்த ஜெயானந்தனின் கண்கள், இன்னமும் சூடேறி கோவப்பழத்தை தோற்கடித்தது. “என் பையன் தான்!!” இறந்து போன மகனை கானொளியில் காண்கையில் நெஞ்சின் மூலையிலும் தகப்பன் பாசம் எழும்பவில்லை. மாறாக, இவ்வழக்கின் முடிவு தன்னை எந்த அளவு பாதிக்க போகிறது, எப்படி மீண்டு வருவது என்றே யோசித்தார்.

மீண்டும் காணொளி ஓடியது.  ஜெயானந்தனின் மகனே பேசினான்.

“ஹே பிரண்ட்ஸ்! இன்னைக்கு என்னோட வீட்ல ஒரு பங்க்ஷன்! இங்க நடக்குறதை உங்களுக்கெல்லாம் நான் லைவ்வா காட்றேன்!!” பேசிக்கொண்டே அவன் வீட்டை சுற்றிக்காட்டி ஒவ்வொன்றாய் விளக்க, வழியில் இடைப்பட்ட, தன் அன்னை, அக்கா, அண்ணன், அம்மா, பாட்டி என அனைவரையும் காட்டி செல்லம் கொஞ்சினான்.

நடு முற்றத்துக்கு வந்தவன், அங்கு போடப்பட்டிருந்த யாக குண்டத்தையும், பூஜை சாமான்களையும் பொறுமையாய் காட்டினான். குத்துவிளக்கை ஒளிரவிட்டுக்கொண்டிருந்த தன் தமக்கையிடம், “என் அக்காக்கு இன்னும் டூ மந்த்ஸ்ல மேரேஜ்! இந்த வீட்டை விட்டு போய்டுவா! எனக்கு சண்டை போட ஒரு ஆள் குறைஞ்சுடும்!!” வருத்தமாய் அவன் சொன்னதும் அவன் தலையில் செல்லமாய் கொட்டிவிட்டு சிரிப்புடன் சென்றாள் அவள்.

அங்கே ஓடிவந்த அவன் அன்னை, “வாசல்ல வண்டி சத்தம் கேக்குது! சாமியார் வந்துட்டாரு போல! இந்த போனை வச்சு நோன்டிட்டே இருக்காம ஒழுக்கமா இரு, இல்லனா உன் பெரியப்பா கிட்ட வாங்கி கட்டிக்குவ” என்றுவிட்டு வெளியே விரைய, தன் பெரிய தகப்பனின் கோவம் தெரிந்த சின்னவனும், ‘போனை எங்க வச்சு பங்க்ஷனை ரெக்கார்ட் பண்றது?’ என சிந்தித்தான். 

பின்னே ஒவ்வொரு இடமாய் அவன் வைத்து பார்க்க, எந்த ஒரு இடமும் வீடியோ ரெக்கார்டிங்க்கு ஒத்துக்காமல் போனது. இறுதியாய் அவன் கண்ணில் பட்டது சுவரோடு பதிக்கப்பட்டிருந்த அலமாரி. அதன் கண்ணாடி கதவை திரண்டி அலைபேசியை நிற்க வைத்தவன், வீடியோவை ஆனில் உள்ளதா என சரி செய்துவிட்டு மறைந்தான்.

அதன் பின்னே, நடந்த பூஜைகளும், மந்திரங்களும் சில மணி நேரங்கள் கடக்க, அதை துரிதமாய் ஓடவிட்டாள் நிவேதா. விசாலமான அந்த ஹாலில் சதாசிவமும் அவர் அன்னையும் மட்டுமே இருந்தனர். மற்ற அனைவரும் கட்டாய ஒரு மணி நேர தியானத்திற்காக மாடி அறைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

“அம்மா! நான் அமைச்சர்ல இருந்து இன்னும் மேல உயரனும்மா!”

அவர் அன்னையும் வரப்போவது தெரியாமல், “கண்டிப்பாயா! உனக்கு எல்லாம் நல்லதா நடக்கணும்! அதை பாக்க தான் உசுர கைல புடிச்சுக்கிட்டு இருக்கேன்!!” என தாயாய் சொல்ல, “நீ உசுர விட்டா தான்ம்மா அது நடக்கும்” என்ற சதாசிவத்திடம், “என்னைய்யா சொல்ற?” என்று அதிர்வாய் கேட்ட பெரிய மனுஷியின் குரல்வளை நெரிக்கப்பட்டு ஐந்தே நிமிடத்தில் உயிர் உயர பறந்திருந்தது.

அதை காணொளியை காணும்போதே நெஞ்சு படபடத்தது. 

பின் படியேறி சென்ற சதாசிவம் என்ன செய்தார் என்று தெரியவில்லை. சில மணி நேரங்கள் ஹாலில் எந்த அசைவும் இல்லை. பலவித அபாய ஒலிகள் மட்டும் அவ்வப்போது கேட்டது. நேரம் சென்று சதாசிவம் கலைத்த தோற்றத்துடன் கீழிறங்கினார். தனக்கு உயிர் கொடுத்தவள், உயிரற்ற உடலாய் சோபாவில் சரிந்துகிடப்பதை கண்டவர், அவரை தூக்க வேண்டி குனிய, கேமராவை மறைத்தது ஒரு உருவம்.

“நீயா? அ…து!!!?” சதாசிவமாய் இருக்க வேண்டும்!

மறைத்திருந்த உருவமோ, “நானே நானே! டெல்லிக்கு போனவன் இங்க எப்டி வந்தான்னு பார்க்குறியோ?” ஜெயானந்தனின் குரல் தான் அது!!

ஜெயானந்தன் நகர, இப்போது சதாசிவமும் ஜெயானந்தனும் தெளிவாய் தெரிந்தனர். கூடவே குமரேசன் இருக்க, போலி சாமியாராய் இருந்த பாலாஜி இன்னும் சில அடியாட்களோடு உள்ளே வந்திருந்தனர்.

அத்தனை பேரின் திடீர் வரவை பார்த்ததும் சற்றே ஆடிபோனார் சதாசிவம். ‘கையும் களவுமாய்’ மாட்டுவதென்பது இதுதானோ?  

“எல்லாரையும் கொன்னுட்ட போலருக்கு?” ஜெயானந்தன் வினவிய நேரடி கேள்வியில், ‘இவன் அனைத்தையும் அறிவான்’ என்று புரிந்துக்கொண்ட சதாசிவம் நிமிர்ந்து நின்றார். 

சதாசிவம், “ஆமாடா! எல்லாரையும் கொன்னுட்டேன்! நம்ம அம்மா, உன் புள்ள, என் புள்ளைங்க, என் பொண்டாட்டி, உன் பொண்டாட்டி யாரையும் விட்டுவைக்கல! உன்னை மட்டும் தனியா எப்டி கொல்லலாம்ன்னு யோசிச்சுட்டு இருந்தேன், இப்போ நீயே வந்து சிக்கிட்ட! குடும்பத்தோட நீயும் சாவு! அப்போதான் நான் உலகத்தையே ஆள முடியும்!”         

அந்த ராப்பொழுதில் கணீரென ஒலித்தது ஜெயானந்தனின் கோர சிரிப்பு!

“இன்னுமாடா உனக்கு புரியல! முட்டாள்!!!! குடும்பத்துல இருக்க எல்லாரையும் கொன்னுட்டா உனக்கு பெரிய பதவி கிடைக்கும்ன்னு எவனாது சொன்னா, அப்படியே நம்பிடுவியா? ஹாஹா!!

இதெல்லாம் என்னோட ஏற்ப்பாடு! உன்னை போட்டுத்தள்ளிட்டு உன் இடத்துக்கு நான் அசால்ட்டா வர போறேன்!” 

தான் பொய்த்துபோனதில், ஏமாற்றப்பட்டதில் சதாசிவத்தின் காலின் ரத்தம் கூட, உச்சத்தலையில் சீறி பாய்ந்தது.  ஓரடியில் தன் தம்பியை நெருங்கி அவர் சட்டையை கொத்தாக பற்றிய சதாசிவம், “எனக்கே துரோகம் செய்துட்டல்ல!!! உன்னை கொல்லாம விடமாட்டேன்டா!!” என கொதித்தார். உண்மை தெரிந்த பின்னும், தன் குடும்பத்தை இழந்தது அவருக்கு வருத்தமளிக்கவே இல்லை! தம்பியை ஒத்த தமையன்! 

அவர் சட்டையில் கையை வைத்ததுமே, ஜெயானந்தனின் ஆட்கள் சதாசிவத்தை சூழ்ந்து பிடித்துக்கொண்டனர்.

“ஹே! நீ இப்ப பல்லை புடிங்குன பாம்புடா! உன்னால ஒன்னும் புடுங்க முடியாது!!!” 

ஜெயானந்தனின் ஆணவ பேச்சில் சதாசிவத்தின் கொதிப்பு கூடியது. 

தன்னை இறுக்க பிடித்திருந்தவர்களிடம் இருந்து திமிறி கொண்டே “உன் சாவு என் கைலதான்டா” என்று அலட்றியவரை, “அதுக்கு நீ இருந்தாதானே!?” என்ற ஜெயானந்தன், அருகே இருந்த பிளவர் வாசை எடுத்து நச்சென சதாசிவத்தின் தலையில் அடிக்க, விழி சொருகி கீழே விழுந்தார் அவர். 

விழுந்து கிடந்தவரின் உடலில் மூச்சு இன்னுமும் சென்று வருவதை கண்ட குமரேசன், “அண்ணே, இன்னும் சாவல!” என்றான்.

தன் ஷூ காலை தன் தமையனின் குரல்வளையில் வைத்து இருபுறமும் ஒரு நிமிடம் இரக்கமின்றி நசுக்கிவிட்டு, “இப்போ மூச்சு வருதா பாரு?” என்றார் ஜெயானந்தன்.

பரிசோதித்த குமரேசன் நிம்மதியான நகையுடன், “இல்ல அண்ணே! காலி” என்றான்.

“இவனை கொண்டு போய் மாடி ரூம்லேயே தூக்குல தொங்க விடுங்க! கதவை உள்பக்கமா பூட்டிட்டு சுவரேறி குதிச்சு வெளில வந்துடுங்க! நான் கிளம்புறேன்! காலைல டெல்லில இருந்து வந்தமாறி வேற ஸீன் போட்டு ஒப்பாரி வைக்கணும்!!” ஜெயானந்தன் வந்த வழி சென்றுவிட, அவன் ஆட்கள் வீட்டை விட்டு சென்று சிறுது நேரம் வரை அந்த காணொளி நீண்டிருந்தது. அதற்கு மேல் இடபற்றாக்குறையோ? மின்கல பற்றாக்குறையோ? எதுவோ ஒன்று அலைபேசியை அணைத்திருந்தது.

காணொளி முடிந்ததும் வாதத்திற்கே இடமின்றி உண்மை புலப்பட்டு விட்டதிலும், அது தந்த அதிர்விலும் அங்கே நீடித்த அமைதி நிலவியது.

நிவேதா தன் வாதத்தை தொடங்கி, நிசப்தத்தை விரட்டினாள்.

“ஆட்கொணர்வு மனுவில் தொடங்கிய இவ்வழக்கு அமைச்சர் கொலையில் முடிந்துள்ளது.  

எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமின்றி சத்தியம் வெளிப்பட்டுவிட்டது. வழக்கின் தீர்ப்பை காலம்தாழ்த்தாது வழங்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் யுவர் ஆனர்” நிவேதா தன் பெரும்கடமையை செவ்வனனே செய்துவிட்ட திருப்தியுடன் சென்று கதிரையில் அமர்ந்தார். 

நீதிபதி அவர் உரையை துவக்க சில நிமிடங்கள் எடுத்தார். 

நீதிபதி, “எதிர்பாராத திருப்பம்! அதிர்ச்சியான உண்மை! நியாயப்படி நான் இப்போதே தீர்ப்பு வழங்க வேண்டும்!” என்று நிறுத்தினார். இரு தரப்பு நியாயங்களையும் கேட்டே தீர்ப்பளிக்க வேண்டும் என்ற கடமை அவருக்கு இருப்பதால்,

“உங்க தரப்பு நியாயம்ன்னு ஏதாது இருக்கிறதா ஜெயானந்தன்?” என்றார்.

கோவத்தின் கொதிநிலையை எப்போதோ தாண்டியிருந்தார் ஜெயானந்தன். உள்ளுக்குள் வன்மமும் குரோதமும் கொழுந்து விட்டு எரிந்தது. இப்போதே இது அத்தனைக்கும் காரணமானவனை கொன்று போட அவர் கரங்கள் பரபரத்தது. தன் அரசியல் கனவை அரும்பிலேயே அறுத்தெறிந்த அவனை அழிக்க அவர் மனம் அப்போதே யோசிக்க தொடங்கியது. இருப்பினும், அந்நேரத்தில் தனக்கென ஆதரவாய் யாரும் இல்லாததால், ஆத்திரத்துக்கு இடம் கொடுத்து அவசரப்படாமல், அறிவை உபயோகப்படுத்த நினைத்தார்.

நீதிபதி கேட்ட போது, தன் உணர்வுகளை உள்ளடக்கியபடி, “எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுது, என் லாயரை கன்சல்ட் பண்ணனும்” என்றார்.    

நீதிபதியின் அக்கேள்வி இனியனுக்கு அயர்ச்சியூட்டியது. தீர்ப்பை தள்ளி போடுவார் என அவன் நினைக்கவில்லை. சாட்சியும் ஆதாரமும் ஜெயானந்தனுக்கு எதிராக இருக்க, அன்றே ஒரு முடிவு கிடைக்கும் என நம்பினான். நிலா இன்னமும் கண்களை திறக்கவில்லை. அவள் வேண்டுதல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது. 

“சரி, நீதிமன்றம் உங்களுக்கு பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுக்கிறது! அதற்குள் உங்கள் தரப்பு நியாயங்களும் வாதங்களும் பெறப்பட வேண்டும்!” நீதிபதி கொடுத்த அவகாசத்தில் முற்றிலும் ஓய்ந்து போனான் இனியன். 

‘ப்ச்’ சலிப்போடு வெறுப்பும் கூட, நாற்காலியின் கைப்பிடியை ஓங்கி அடித்தான். அந்த சத்தத்தில் வேண்டுதல் தடைபட கண் திறந்தாள் நிலா.

“என்ன அத்தூ?” கலக்கத்தில் கலங்கியிருந்த அவள் முகத்தை கண்டதும் தன் இறுக்கத்தை தளர்த்தி மென்னகையை வரவழைத்தான் இனியன்.

அவன் முகத்தில் என்ன படித்தாலோ, “எல்லாம் நல்லதுக்கு தான்” என்ற நிலா சொன்னபோது, 

நீதிபதி, “அதுவரை உங்களையும் குற்றத்துக்கு உடனிருந்த அனைவரையும் பதினைந்து நாள் கட்டாய நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது” என்ற எதிர்பாராத முடிவை தெரிவித்தார் அவர். 

இனியனின் இறுக்கம் தன்னால் தளர்ந்தது. முகத்தில் இயல்பான புன்னகை மெய்யான மகிழ்வில் வெளிவர, “இது போதும் நிலா, நமக்கு இனிமே நல்லது தான்!!!” என்றான் ஆத்மாத்தமாய்.

போலிசாரின் புடைசூழ, ஊடகவியலாளர்கள் மின்மினியாய் ஒளி கொடுத்து அவரை கேமராவில் சிறைபிடிக்க, வன்மமான அவர் முகம், தன் மனைவியை அணைத்தவாக்கில் பிடித்துக்கொண்டு நிற்கும் இனியனை மட்டுமே குறிவைத்தது.

அவர்களை தாண்டி போகும் நேரம், “ஒரு நிமிஷம்?” என அவரை தடையிட்டு நிறுத்தினாள் நிலா. இனியன் ‘ஏன்?’ என புரியாமல் அவளை ஏறிட்டான். 

ஜெயானந்தனின் கண்கள் இனியனை தாண்டவில்லை. கால்கள் மட்டுமே நின்றது. உடன் இருந்த காவலர்கள் “சீக்கிரமா பேசுமா” என காலம் ஒதுக்கினர்.

ஜெயானந்தனின் குரோத விழிகள் முன் சொடுக்கிட்டாள் நிலா. அவர் விழிகள் அவனிடம் இருந்து அவளிடம் நகர்ந்தது. 

“எதிர்ப்பார்க்கலைல? உன் ஆட்டத்தோட முடிவு இவ்ளோ சீக்கிரமா வரும்ன்னு நினைச்சு கூட பார்க்கலைல!? ஹும்ம்!! உனக்கு ரொம்ப கொடூரமான சாவு வரணும்ன்னு தான் எதிர்பார்த்தேன்! நடக்கும்! கண்டிப்பா நடக்கும்!! 

உன் கால்ல விழுந்து கெஞ்சுனேன், என் அப்பாவை விட்டுடுன்னு! என் அப்பாக்கூட வெளி மனுஷன், ஆனா உன் பையன்? அவனை கூட காப்பாத்தணும்ன்னு தோனலல உனக்கு? ஒரு உயிரை வேட்டையாடி திங்குற மிருகம் கூட, தன் குட்டிக்கு ஒண்ணுன்னா, பார்த்துட்டு சும்மா இருக்காது! 

நீ அந்த மிருகத்தை விடவும் கேவலமானவன்! நீ எல்லாம் இன்னும் எதுக்கு உயிரோட இருக்க? செத்துடுடா!! உன்கிட்ட நிக்குறது கூட பாவம் ச்சீ!!!!” அதோடு இனியனின் கரம் பற்று நகர்ந்துவிட்டாள் நிலா. 

போலிஸ் எதற்கும் காத்திராமல் அவரை இழுத்துக்கொண்டு சென்றது. 

தன் மனைவியின் பேச்சில், சிந்தனைவயப்பட்டான் இனியன். அவனை ஒருவர் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டே பின்னால் வருவது கூட உணரவில்லை. 

மிக அருகே நெருங்கி வந்த அவர் அவர்களின் குறுக்காய் நிற்க, நிலா அவரை கண்டுக்கொன்டாள்.

“கமிஷனர் சர்?” நிலா சொன்னதும் தான் அவரை கவனித்தான் இனியன். 

அவரை கண்ட பின் பேச்சில்லை. பேச தயங்கிய கமிஷனர் தேவசகாயம், “ஐயம் சாரி” என ஆரம்பித்தார்.

இனியன் அதை ஏற்கவும் இல்ல, மறுக்கவும் இல்லை.

“உதவின்னு நீ கேட்டு வந்தப்போ செய்யுறேன்னு வாக்கு குடுத்தும் என்னால அந்த சமயம் உனக்கு உதவ முடில! அரசியல் சூழ்நிலை, என் உயர் அதிகாரியோட பிரசர் எல்லாம் என்னை முடக்கிடுச்சு! உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்ன்னு பல வருஷமா முயற்சி பண்ணேன்! இப்போதான் உன்னை பார்க்க முடிஞ்சுது!!” தேவசகாயம் பத்து வருடங்களுக்கு முன்பு தான் செய்ய தவறிய உதவிக்காக இப்போது மன்னிப்பு கேட்க, 

இனியன் கண்கள் கூரானது. “உங்களால அப்போ எனக்கு உதவ முடியல! ஆனா இப்போ முடியும் தானே?” ஐயத்துடன் அவன் கேட்டதை ஐயம் திரிபட, “கண்டிப்பா செய்வேன்” என்று உறுதி கொடுத்தார் திடமாய்.

“உங்க உதவி தேவைப்படுது! மீட் யூ சூன்” என்றான் இனியன் இளஞ்செழியன்.      

Advertisement