Advertisement

*25*

போராடினால் நாம் வெல்லலாம்

வான் வீதியில் கால் வைக்கலாம்

பூலோகமே பேர் சொல்லலாம்

சாகாமலே நாம் வாழலாம் 

“டேய் கதவை திறங்கடா கபோதிங்களா! எதுக்குடா என் வீட்லயே என்னை பூட்டி வச்சுருக்குறீங்க? 

மயக்கம் கலைந்து எழுந்த ஜெயானந்தன், தான் இருக்கும் இடம் உணரவே சில நிமிடங்கள் பிடித்தது. பின்னந்தலையில் ‘சுரீர் என்ற வலி விட்டு விட்டு வந்தது. எழுந்து நின்றதும், அவருக்கு நடந்ததெல்லாம் நினைவு வந்தது. 

“அந்த டிரைவர் நாதாரிய…!!? பல கெட்ட வார்த்தைகளோடு தன்னை அடித்தவனை அர்ச்சித்த ஜெயானந்தன் கதவை திறக்க போக, அது பூட்டியிருப்பது தெரிந்ததும், ‘ஒருவேளை டாக்டர கூப்பிட குமரேசன் போயிருப்பானோ? அப்டிதான் இருக்கும் என்று எண்ணி சில நேரம் அமைதியாய் இருந்தார். இரண்டு மணி நேரங்கள் கடந்தும் அவன் வராததால், கதவை தட்ட தொடங்கினார். ஆள் அரவம் இல்லாமல், உல்லாசமாய் இருக்க வேண்டும் என ஒதுக்குபுறமாய் தான் வாங்கிபோட்ட பங்களா இப்போது ஜெயிலாய் தெரிந்தது அவருக்கு! 

‘இனி யாரும் தன்னை வந்து காக்க போவதில்லை என்று உணர்ந்த பின், அவர் அங்கிருந்து விடுபட போராடுவது பலமாய் இருந்தது. 

தேக்கில் இழைத்து வைத்த பலமான வாசல் கதவை உடைக்கும் அளவு தட்டினார். பின்வாசல் வழியே நீச்சல் குளத்தை தாண்டி சுவர் ஏறி குதித்து செல்லலாம் என்றால் அந்த கதவும் பூட்டப்பட்டிருந்தது. மொட்டை மாடி பால்கனி என எவ்வழியிலும் வெளியேற முடியாதபடி அனைத்தது கதவுகளும் சாற்றப்பட்டிருந்தது. 

கத்தி கத்தி பார்த்தவர் ஓய்ந்து போய் அமர்ந்துவிட்டார். ‘யாரா இருக்கும்? எதுக்காக என்னை அடைச்சு வைக்கணும்? டிரைவர் யாரோட ஆள்? பலவித கேள்விகள் அவர் மூளையை குடைந்தது. இனியன் மட்டுமே அவரது எதிரி இல்லையே! அவனை ‘எதிரி என்ற ஸ்தானத்தில் கூட அவர் வைத்து பார்த்தது இல்லை. அரசியல் பழிவாங்கலாய் இருக்கும் என்றே கணக்கிட்டார். 

‘எப்படியாது வெளில போய்டணும்! அப்புறம் இருக்கு என்னை அடைச்சு வச்சவனுங்களுக்கு! இதை வச்சே சிம்பதி உருவாக்கி இந்த எலெக்ஷன்ல ஜெயிச்சுடலாம் அப்போதும் சூழ்நிலையை ஓட்டாய் மாற்றும் யோசனையே அவரை சூழ்ந்தது. மதியம் உண்ட பிரியாணி சில மணி நேரமே தாக்கி பிடித்தது.  இரவு நேர உணவு கேட்டு அவர் வயிறு கூப்பாடு போட, கிச்சனுக்கு சென்றார். 

குளிர்சாதனப்பெட்டியில் ஏதேனும் இருக்குமா என தேட, இரண்டு தண்ணீர் பாட்டில்களை தவிர வேறு எதுவுமே இல்லை! அந்த இடத்தையே சுற்றி வந்தபோது கண்ணில் பட்டது ஒரு பெரிய பாத்திரம். ஆர்வமாய் அருகே சென்று திறந்து பார்த்தவர் முகம் அஷ்டக்கோனலானது. ‘உணவே வேண்டம் என்று வந்து படுத்தார். எந்த பக்கம் உருண்டு புரண்டும் தூக்கம் வராமல், வெறுங்குடல் உணவுக்கு கத்த, கிச்சனில் இருந்த அந்த பாத்திரத்தை எடுத்து வந்து அமர்ந்தார். 

தயிர் கலந்து ஊறவைத்த பழைய சோறு அவரை ‘வா வா என அழைத்தது.  வாழ்க்கையோட ஆரம்பத்தில் அவருக்கு இது கூட கிடைக்காமல் இருந்தது. பழையதெல்லாம் பழையது உள்ளே செல்லும் போது கண் முன்னே வந்தது. ஜெயானந்தன் வாய்விட்டே சொன்னான், “மதியம் பிரியாணி தின்னு ஏப்பம் விடும்போது கூட நினைக்கல, நைட்டே வாழ்க்கை எனக்கு பழைய சோறை போடும்ன்னு

கணினி திரையில் அவனை பார்த்துக்கொண்டிருந்த இனியன், சத்தம் போட்டு சிரித்தான். 

நிலா, “என்னாச்சு அத்தூ?  

இனியன், காதில் இருந்த ஹெட்செட்டை கலட்டி வைத்துவிட்டு, அவளை தோளோடு அணைத்துக்கொண்டான். 

“ஒன்னும் இல்லடா நிலாகுட்டி! நீ கேஸ் குடுத்தியே, என்னாச்சு? 

நிலா, “அப்பாவோட போட்டோ வச்சு போலியான ஆதார் கார்ட், லைசென்ஸ், பாஸ்போர்ட் எல்லாம் ரெடி பண்ணிட்டதுனால எந்த பிரச்சனையும் இல்லாம, கேஸ் பைல் பண்ணியாச்சு! கடைசியா ஜெயானந்தனை பார்க்க போனவரு திரும்ப வரலைன்னு சொன்னேன்! எப்படியும் நாளைக்கு குமரேசனை விசாரிப்பாங்க! அடுத்த நாள் ஜெயானந்தனை தேடுவாங்க! என்றதும் இனியன், “அதானே நம்ம ப்ளான்னே என்றான்.

நிலா, “எப்டி அத்தூ, என்னைக்கோ இறந்தவருக்கு கவர்ன்மென்ட் ஐ.டி எல்லாம் சுலபமா கிடைச்சுது!? 

இனியன், “நம்ம ஊருல ஒரிஜினல் வாங்குறதுக்கு தான் கஷ்டபடனும், போலி வாங்க கலர் கலர் நோட்டை அள்ளி வீசுனா போதும்!! என்று கசப்பாய் சொல்ல, அதை ஒப்புக்கொண்டாள் நிலா. அவளுமே பலமுறை போலியான ஆவனங்கள் பற்றி கேள்விபட்டிருக்கிறாள். ஆனால் முதல்முறை ஒரு நற்காரியத்துக்காக அவளே அதை செய்கையில் எத்தனை எளிதாய் இதெல்லாம் கிடைத்துவிட்டது என்ற வியப்பு அவளை விடவில்லை. 

அதியனிடம் இருந்து அழைப்பு வந்தது. 

“அவன் சாப்பிடுட்டான் அதியா என்று இனியன் சொன்னதும், அழைப்பு துண்டிக்கப்பட்டது. உண்டு முடித்த பாத்திரத்தை வைத்துவிட்டு திரும்பும்போது பிரகாசமாய் இருந்த வீடு நொடியில் இருந்தது. கருகும்மென இருந்த இருட்டில் தட்டு தடுமாறி இரண்டு நிமிட தூரத்தை கால் மணியில் அடைந்தார். சோபாவில் அமரும்போது, ‘ஹப்பா என்று இருந்தது. 

ஆனாலும் உள்ளுக்குள் உதறல் எடுக்க தொடங்கியது. மாளிகை போன்ற வீடு துளி வெளிச்சமும் இன்றி இருந்திருக்க, இருட்டில் எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு உருவம் இருப்பது போலவே தோன்றியது. பேசாமல் தூங்கிவிடலாம் என முடிவு செய்து சோபாவிலேயே படுத்துவிட்டாலும் ஏசியில் படுத்து பழகிய உடம்பு வியர்வையில் தூங்க விடாமல் அலும்பு செய்தது. 

கண்ணயர்ந்த சில நொடிகளில் அவர் காதருகே ‘டமாஆஆல் என்ற பேரொலி. பதறியடித்து எழுந்தார். 

“யாரு?? யாரு??? ஆளில்லாத அவ்வீடு அவர் குரலையே பலவித கோணத்தில் எதிரொலித்தது. 

நெஞ்சுக்கூடு எகிறி குதித்தது. “யாருன்னு கேக்குறேன்ல? மீண்டும் குரல் எதிரொலிக்க அமைதியாய் இருந்த இடம் அவருக்கு ‘பயப்பட ஒன்றும் இல்லை என ஆறுதல் சொன்னது. மீண்டும் தடுமாறி சோபாவுக்கு வந்து அமர, இடப்பக்கம் முன்பை விட பலமாய் ஏதோ விழுந்து உடையும் ஒலி. உட்கார்ந்தவர் வியர்த்து விருவிருக்க எழுந்துவிட்டார். 

“ஏ….ய் நான் மந்திரி ஆக போறவன்டா! என்கிட்ட வச்சுக்கா..தீங்க, நா..சம் பண்ணிடுவேன் பார்த்துக்க!! வார்த்தைகள் திக்கினாலும் சற்று தில்லாகவே பேசினார்.

இப்போது அவருக்கு பின்னால் பேரொலி கேட்க, துள்ளி குதித்து முன்னால் ஓடினார். நெஞ்சுக்கூடு ஏறி ஏறி இறங்கியது. இருட்டில் கண்கள் சற்று பழகியிருந்தாலும், முழுதும் பொருட்கள் தெரியாமல், அங்கும் இங்கும் ஓடினார். மாடி படிகட்டுகள் இருப்பது தெரியாமல் நேரே ஓடி, தடுக்கி கீழே விழுந்தார். விழுந்ததில் முன் நெற்றியிலும் கை முட்டியிலும் நல்ல அடி விழுந்து வலியை ஏற்படுத்தியது. 

கண்கள் சொருகுவதை போல இருந்தது. எழுந்து கொள்ள முயன்று முடியாமல் அப்படியே கண் மூடினார். இரண்டு நாட்களும் இரண்டு யுகங்களாய் அவருக்கு கழிந்தது. தலை ‘விண் விண்ணென தெறிக்க, சரியான உணவும், கொஞ்சம் கூட எட்டி பார்த்திராத உறக்கமும் இரண்டே நாட்களில் அவரை பாதி செத்தவராய் காட்டியது. 

அடுத்த நாள் காலை அவர் அதீத பசியில் தண்ணீராவது அருந்தலாம் என அடுக்களைக்கு செல்ல, அப்போது எங்கோ கதவு திறக்கும் சத்தம் கேட்டு கையில் இருந்த பாட்டிலை அப்படியே போட்டுவிட்டு திடுதிடுவென ஓடினார். வாசல் கதவு இன்னமும் பூட்டியிருந்தது. பின்னே ஒவ்வொரு கதவாய் அவர் திறந்து திறந்து பார்க்க, இறுதியாய் மொட்டை மாடியை அடையும் கதவு பூட்டவிழ்க்கபட்டிருக்க, பேருவகையோடு திறந்து ஓடினார். 

வெளிப்புற காற்றும், கண்ணுக்கெட்டிய தூரத்தில் மனித நடமாட்டமும் பட்டபோது ‘தப்பித்து விட்டோம் என்ற நிம்மதியே வந்தது. 

‘ஆனால், எப்படி கீழே போறது? யோசித்தது சில நொடிகளே!! ‘வயசுல நான் ஏறி குதிக்காத சுவரா? மாடியா? என மனதை திடப்படுத்தி பெரும் போராட்டத்தின் பின் அவர் தரையை அடைந்திருக்க, நொடியும் வீணடிக்காமல்  வாசலுக்கு ஓடினார். வெளி கேட்டையும் சிரமமின்றி திறந்தவர் மூச்சிறைக்க ஓடினார். இரண்டு நாட்களில் உடல் வலுவிளைந்து முகம் களையிழந்து எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தார். பெரும்பாடு பட்டு சாலைக்கு வந்ததும், கை நீட்டி வாகனங்களை நிறுத்த, ஒருத்தனும் நிறுத்தியபாடில்லை! இறுதியாய் ஒரு ஆட்டோ பிடித்து தன் வீட்டை அடைந்தவரை சூழ்ந்துக்கொண்டனர்  ஆட்கள். 

“என்னண்ணே ஆச்சு?

“யாரு தலீவா உன்னை இப்படி செஞ்சது? 

“ரெஸ்ட் எடுக்க தானே தலீவா போன? 

தொண்டர்கள் தாங்கு தாங்கென தாங்கினாலும், தன் ராஜாங்கம் வந்தடைந்த தெம்பில், தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவன் யாரென்ற கோவம் எரிமலையாய் உள்ளே கனன்றது. 

ஜெயானந்தன், “நான் யாருன்னு தெரியாம இதை செஞ்சுட்டான்! ஆயுசுக்கும் மறக்காத மாறி அவனுக்கு திருப்பி குடுக்கணும்!  யாருன்னு கண்டுபுடிங்கடா! தன் ஆட்களை ஏவியவர், “குமரேசன் எங்கடா? என்றார்.

“அவரு ரெண்டு நாளா இங்க வரல தலீவா! நீ ரெஸ்ட்க்கு போய்ட்டா அவருக்கு எப்பவும் லீவு தானே? என்றான் ஒருவன்.

“அவனை உடனே வர சொல்லு!! அப்புறம் அந்த டிரைவர் ****ய தேடி புடிச்சு கொண்டு வாங்க, அவனை துவைச்சா இதை எவன் செஞ்சதுன்னு தெரிஞ்சுடும்!! ஜெயானந்தனின் கட்டளையின் பேரில் அவர் ஆட்கள் வேலையில் இறங்கினர். 

சிறிது நேரத்திற்குள்ளாகவே குமரேசன் படபடக்கும் நெஞ்சோடு அங்கு வந்து சேர்ந்தான்.

அவனை பார்த்ததும் “டேய் குமரேசா? நீ இருக்கும்போது தானே டா, அந்த *** என்னை அடிச்சு போட்டான்? அங்கிருந்த நான் எப்டிடா நம்ம பங்களாக்கு போனேன்? நீ என்னை விட்டு எங்க போயிருந்த? என்னை எவன் பார்க்கனும்ன்னு சொன்னதுக்காக அங்க அழைச்சுட்டு போன? மரியாதையா சொல்லு? அவன் சட்டையை பிடித்து அவர் குலுக்க, உச்சகட்ட பயத்தில் ஆடி போனான் குமரேசன். 

“அண்ணே! என்னை மன்னிச்சுடுங்க அண்ணே! பயத்தில் நடுங்கிக்கொண்டே அவன் சொல்ல, அந்நேரம் அவர் வீட்டின் உள்ளே நுழைந்தனர் காவல் துறையினர். திடீரென அவர்களை கண்டதும், குமரேசன் காலரில் இருந்து கையை எடுத்த ஜெயானந்தன், “ஏதும் சொன்னியாடா இவனுங்ககிட்ட? என்றார் மெதுவாய். அவன் தலை ‘இல்லை என ஆடியது.

“வணக்கம் சர்! நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்!! 

“எதுக்காக என்னை பார்க்க வந்துருக்கீங்க? பிரசாரத்துக்கு எக்ஸ்ட்ரா பாதுகாப்பு வேணுன்னு கேட்டுருந்தோமே? அதுக்காகவா? இயல்பாய் பேச முயற்சி செய்தார் ஜெயானந்தன்.

“இல்ல சர் என்ற இன்ஸ்பெக்டர், தன் கையில் இருந்த வாரண்ட்டை எடுத்து நீட்டினார். 

“நீங்க இன்னைக்கு கோர்ட்ல ரிபோர்ட் பண்ணனும் சர்!! சுந்தரம் என்பவர் இரண்டு நாட்கள் முன்னாடி காணாமல் போயிட்டாரு! அவரு கடைசில உங்களை சந்திக்க வந்துருக்காரு! அதான் உங்களை விசாரிக்கணும்

அவர் சொன்னதும் கொதித்தெழுந்தார் ஜெயானந்தன். 

“நீங்க யார்கிட்ட பேசுறீங்கன்னு தெரியுதா? ஜெயானந்தன்!!!!!!!! எம்.பி கேண்டிடேட்! எவனோ ஒருத்தன் காணாம போனதுக்கு என்னை சந்தேகபடுறீங்க? 

“சர், அவரோட பொண்ணு கோர்ட்ல ‘ஹீபஸ் கார்பஸ் அதாவது, ‘ஆட்கொணர்வு மனு போட்டுருக்காங்க! இருபத்து நான்கு மணி நேரத்துல அவரை நாங்க கண்டுபிடிச்சு கோர்ட்ல நிறுத்தனும், இல்லனா அவர் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிஞ்சுக்க நீதிபதி முன்னால் விசாரணை நடக்கும்! உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல! மினிஸ்டரோ, மூட்டை தூக்குறவனோ எல்லாம் ஒண்ணுதான் இந்த சட்டத்துல!

இன்ஸ்பெக்டர் சொன்னதும் இரண்டு நாட்கள் இருந்த மனஉளைச்சல் இன்னும் அதிகமாய் ஆனது. திமுதிமுவென கோவம் ஏற, “அவன் என்னைதான் கடைசியா பார்த்தான்னு என்ன சாட்சி இருக்கு? என்றார்.

“சாட்சி உங்க பக்கத்துலையே இருக்கு என குமரேசனை இன்ஸ்பெக்டர் காட்டியதும், அப்பட்டமான அதிர்ச்சி அவர் முகத்தில். குமரேசன் குனிந்த தலை நிமிரவில்லை!

இன்ஸ்பெக்டர் அவர் ஜீப்பில் முன்னால் செல்ல, தன் காரில் நீதிமன்றத்தை வந்தடைந்தார் ஜெயானந்தன். அந்த ஷணம் வரை அவருக்கு சுந்தரம் யார்? அவன் மகள் யார்? என எந்த தகவலும் தெரியாது! நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தபோது அங்கே கண்ட இனியனையும், அவனுடன் நின்றிருந்த நிலாவையும் கண்டதும், தொண்டை கொஞ்சமாய் அழுத்தியது. இயல்பாய் இருந்திருந்தால் அவரது யோசனையும் நடவடிக்கையும் வேறாய் இருந்திருக்கும். இப்போதோ இரண்டு நாட்கள் நடந்த அனைத்தும் அவரை யோசிக்க முடியாதபடி வாட்டியிருந்தது. 

தன் தனிப்பட்ட லாயரை கூட அணுக தோன்றாமல், நீதிமன்றத்தை வந்து அடைந்திருந்தார். 

‘ஏதோ பெரியதாய் நடக்கபோகிறதோ? என்னை அடைத்து வைத்தது ஒருவேளை இவனோ? இந்த புது வழக்கு என்னை பழி வாங்கவோ? என பலவித கேள்விகள் அவரை பாம்பாய் சுற்றியது.   

ஊடகவியலாளர்கள் நிலாவை சுற்றியிருந்தனர். “உங்க அப்பா காணாமல் போனதுக்காக நீங்க மிஸ்டர் ஜெயானந்தனை எந்த விதத்துல சந்தேகப்படுறீங்க?

நிலா, “இறுதியாய் அவரை பார்க்க தான் போனாரு! திரும்பி வரலை! அதனால

“வர போகும் தேர்தல்ல வெற்றி அவருக்குதான்னு கருத்துகணிப்பு சொல்லுது! அதனால எதிர்கட்சிகள் உங்க மூலமா அவர் செல்வாக்கை குறைக்க முயற்சி எடுக்குறதா சொல்றாங்களே? அப்படியா?

மெலிதாய் சிரித்தாள் நிலா. “நான் எந்த கட்சியும் சார்ந்து இங்க வரல! என் தனிப்பட்ட பிரச்சனைக்காக நீதி கேட்டு வந்துருக்கேன்!

“உங்க அப்பா பல வருடங்கள் முன்னே இறந்துவிட்டதா கேள்விபட்டோமே!? இது நீங்களா ஜோடிச்சுருக்க வழக்கா?

நிலாவை விடுத்து இனியன் பேசினான். “நாங்க எதையுமே ஜோடிக்கலை! அவரோட பாஸ்போர்ட் லைசென்ஸ் ஆதார் எல்லாமே கரண்ட்ல இருக்கு! இது போதாதா அவர் உயிரோட தான் இருக்காருன்னு நிரூபிக்க? அவர்களையே திரும்பி கேட்டான்.

“எதுக்காக திரு.சுந்தரம் திரு.ஜெயானந்தனை சந்திக்கணும்?

“அதை ஒன்னு என் அப்பா சொல்லணும், இல்லனா ஜெயானந்தன் தான் சொல்லணும் என்றாள் நிலா. 

இம்முறை கேள்வி இனியனிடமே வந்தது. “உங்களை அமைச்சர்ர் சதாசிவத்தோட தற்கொலை வழக்குல இருந்து பாதிலேயே நீக்கி, பணி இடை நீக்கம் செய்துருக்காங்க!  இப்போ மறுபடி அவர் சகோதரர் மேல உங்க மனைவி மூலம் வழக்கு தொடுத்துருக்கீங்க! இதுல ஏதும் உள்பகை இருக்குதா? 

“எனக்கு எந்த பகையும் இல்ல, ஜெயானந்தன் சார்க்கு  இருக்கான்னு அவர்ட்ட தான் கேட்கணும் 

ஜெயானந்தன் வந்து இறங்கியதை பார்த்ததும், நிருபர்கள் அவரிடம் மொய்த்தனர். 

“ஒரே மாதத்தில் இரு வேறு வழக்குகள்! இதை எப்படி எதிர்கொள்ள போறீங்க?

இனியனை பார்வையால் எரித்தவர், “என்னை குறுக்கு வழில வந்தாவது வீழ்த்தனும்னு நிறைய பேர் வஞ்சம் வச்சு காத்திருக்காங்க! முதல் வழக்குல எனக்கு கிடைச்ச வெற்றி தான் இந்த வழக்குலையும் கிடைக்கும்!! மத்ததை வழக்கு முடிஞ்சதும் பேசுவோம் என்றவர் உள்ளே சென்றார். அவர் பின்னே குமரேசன் சென்றான்.

வராண்டாவில் நின்றுக்கொண்டிருந்த இனியனிடம் நின்றவர், “ரொம்ப தப்பு பண்ற! நான் திருப்பி அடிச்சா நீ தாங்க மாட்ட! என்றார் கண்களில் வன்மத்தோடு.

அசராது நின்றவன், “திருப்பி அடிக்கவிட்டா தானே? என்றான் சிரித்த முகமாய்.

“என்னைக்கோ செத்தவனை உயிரோட இருக்கான்னு சொன்னா, தலையாட்டி நம்பிடுவானுங்களா? இதெல்லாம் பெட்டி கேசு! என்னை இங்க வரவச்சுட்டோம்ன்னு பெருமை பட்டுக்காதா! உன்னை வாழவே முடியாதபடி செய்ய போறேன்! இந்த ஜெயானந்தனை ஏன் எதிர்த்தோம்ன்னு நீ வருந்தணும் அவர் பேசிக்கொண்டே போக, யாரையோ கை நீட்டி அழைத்தான் இனியன். அவன் அருகே வந்து நின்றதும், அவன் தோளில் கைபோட்டபடி, “பேச்சை குறைங்க தலைவரே! உள்ள போங்க! உங்களுக்கு பல அதிர்ச்சி காத்திருக்கு! இனியன் சொன்னதில் கடுப்பானவர் அருகே இருந்தவனை எதேட்சையாய் பார்க்க தூக்கி வாரி போட்டது.

“நீ.. நீ..?? நிமிராத தலையோடு உடலில் அங்கங்கே சில வீக்கங்களோடு நின்றிருந்தவனை கண்டு திணறினார் ஜெயானந்தன். 

இனியன், “வார்த்தை திக்குதோ? அதிர்ச்சியா இருக்குமே? நம்ம உருவாக்குன போலி சாமியாரு இங்க எப்படி வந்தான்னு மண்ட காயுமே? என்றான். 

ஜெயானந்தனுக்கு மட்டுமல்ல, குமரேசனுக்குமே பலத்த அதிர்ச்சி! 

“குடுத்த காசை காலி பண்ணிட்டு எக்ஸ்ட்ரா பீரு கேட்டு பார்-ல சண்டை போட்டுக்கிட்டு இருந்தான், செல்லத்தை அப்படியே அலேக்கா தூக்கிட்டு வந்துட்டேன்!

“அங்க இங்க வீங்கிருக்கே, அது என்னனு பார்க்குறியா? ஒரு இடத்துல உட்காருடான்னா கேட்காம ஓடிட்டே இருந்தான், அதான் லைட்டா தட்டுனேன்! பிஞ்சு உடம்பு, வீங்கிகிச்சு! என்ற இனியனை கொல்லும் அளவு ஆத்திரத்துடன் முறைத்தவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

குமரேசன், “கொலை கேஸை எடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு இப்போ இவனை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த? என்னை ஏமாத்திடாத!! அவசரமாய் மொழிந்துவிட்டு அவனை ஜெயானந்தன் பின்னூடே ஓடினான்.

நிவேதா அவஸ்தையாய் நின்றுக்கொண்டிருந்தாள். இன்னும் சிறுது நேரத்தில் அவள் தன் முதல் வாதத்தை துவங்க வேண்டும். வழக்கில் எந்த சந்தேகமும் இன்றி தெளிவாக இருந்தாலும், உள்ளுக்குள் உதறல் எடுத்தது. 

‘தன்னால் முடியுமா? என்ற பயம். 

இனியன் நேரிடையாய் அங்கே பேச போவதஈல்லை. அதற்கு பதிலாக நிவேதாவை அனுப்பி வைக்கிறான், அவ்வளவே! பேச வேண்டிய வார்த்தைகள், கேட்க வேண்டிய கேள்விகள், மடக்க வேண்டிய இடங்கள் என அனைத்தையும் பலமுறை சொல்லியிருந்தான். 

வழக்கு திசை மாறும்போது அதை கட்டியிழுத்து தங்கள் வாதத்திற்குள் கொண்டு வர வேண்டியது மட்டுமே நிவேதாவின் பொறுப்பு!!


“லாயர் மேடம்ன்னு பேஸ்மன்ட் வீக் போல! இப்ப்படி நடுங்கிறீங்க? கிண்டலாய் ஒலித்த அதியனின் குரலில் அவள் போட்ட சவால் நினைவு வந்தது. 

மனதை நொடியில் திடப்படுத்தி அவனை நோக்கினாள். கண்களில் ஒரு தெளிவு. 

“என்னால முடியும்!! 

அதியன் மேற்கொண்டு வாதம் செய்யவில்லை!

“நம்மளோட கடைசி முயற்சி இது! ஜெயிச்சே ஆகணும்! ஒருவேள தோற்த்துட்டா அவன் நம்ம ஒருத்தரையும் வாழ விடமாட்டான்! எல்லாம் உன் கைல…. சாரி!!! வாய்ல தான் இருக்கு!! சீரியசாய் ஆரம்பித்து சிரிப்பில் முடித்தவனை கண்டு அவள் இதழோரங்களும் வளைந்தது.

“இனியன் சொன்னதை சரியா செய்வேன்! பயம் வேணாம் திண்ணமாய் சொன்னவள் தன் இருக்கைக்கு சென்றாள். அனைவரும் மானசீகமாய் இறைவனை வேண்டினர்.  நீதிபதியின் வருகைக்கு பின்னர் வழக்கு ஆரம்பமானது.  

வழக்கின் சாராம்சத்தை ஒருமுறை வாசித்த நீதிபதி, “சுந்தரம் அவர்களை கண்டுபிடிச்சாச்சா? என்றாள் அங்கிருந்த காவல் அதிகாரியிடம்.

“இல்லை, அவர் கடைசியா மிஸ்டர் ஜெயானந்தனை தான் பார்த்ததா சொல்றாங்க! அவரோட பி.ஏ. குமரேசன் அதை உறுதி பண்ணிருக்காரு! என்றதும், “ம்ம்ம்! காணாமல் போனவர் தரப்பில் வாதத்தை தொடங்கலாம்!! என்றார்.

வியர்த்த நெற்றியை கைகுட்டையில் ஒற்றி எடுத்துக்கொண்டு எழுந்தாள் நிவேதா. ஒருமுறை இனியனை திரும்பி பார்த்தாள். அவன் கட்டை விரல் உயர்த்தி, உதட்டசைவில், “ஆல் த பெஸ்ட் என சொல்ல, அதியனும், சிரித்த முகமாய் ‘கலக்கு என்றான். புது தெம்பு வந்து ஒட்டிக்கொண்டது அவள் உடலில். நிலா கண்மூடி அமர்ந்திருந்தாள். மனம் முழுக்க பிராத்தனையும், அவள் தந்தையின் உருவமுமே நிறைந்திருந்தது. 

“இன்பநிலா என்பவருடைய தந்தை திரு.சுந்தரம் அவர்கள் காணாமல் போனது குறித்த ஹீபஸ் கார்பஸ் வழக்கின் பேரில் அவர் இறுதியாய் சந்தித்த திரு.ஜெயானந்தன் அவர்களை விசாரிக்க வேண்டி அனுமதி வேண்டுகிறேன் மை லார்ட் 

“ப்ரோஸீட்

மூன்று முறை ஜெயானந்தனின் பெயர் ஒலிக்கப்பட்டது. கோவத்துடன் விசாரணை கூண்டில் வந்து நின்றார். சத்தியம் வாங்கப்பட்ட பின், “நீங்கதானே திரு.ஜெயானந்தன்? என்றாள் நிவேதா.

“ஆமா வார்த்தை அவர் பல்லிடுக்கில் சிக்கி திணறி வெளி வந்தது.

“என் கட்சிக்காரர் திருமதி இன்பநிலாவின் தந்தை இறுதியாய் உங்களை சந்தித்துவிட்டு திரும்பி வரவில்லை. அவர் இப்போது எங்கே? 

ஜெயானந்தன், “என்ன கேட்டா? நான் தான் ஒளிச்சு வச்சுருக்கேனா? குரல் சற்று உயர்ந்தது.

“நீதிபதியின் முன்னால், விசாரணை கூண்டில் இருப்பவர் எந்த கேள்விக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும், இல்லையேல் அது கோர்ட்டை அவமதிப்பதை போன்றது 

அதியனோ, ‘அட்றா அட்றா என்றான் மெதுவாய்.

“இப்போ சொல்லுங்க, திரு.சுந்தரம் எங்கே?

ஜெயானந்தன், “அவன் யாருன்னே எனக்கு தெரியாது!

“ஆனா, அவர் உங்களை தானே சந்திக்க வந்துருக்காரு?

“ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வராங்க என்னை பார்க்க, எல்லாரையும் நான் தெரிஞ்சு வச்சுருக்க முடியுமா?

நிவேதா, “கண்டிப்பா முடியாது!! ஆனா, சுந்தரம் உங்களை தேடி வந்து சந்திக்கல, நீங்கதான் அவரை தேடி போய் சந்திசுருக்கீங்க!? அவரை யாருன்னு கூட தெரியாமையா தேடி போய் பார்த்தீங்க? என்றாள். 

“என்ன உளறல் இது? முதல்ல சுந்தரம்ன்னு ஒரு ஆளு உயிரோடவே இல்ல! இல்லாதவன இருக்குறதா காட்டி வேணுன்னே என் மேல கேஸை திருப்பி விட்டு பழி போடுறீங்க! 

நிவேதா, “அவர் உயிரோட இருக்குறதுக்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அவரை நேரில் பார்த்ததுக்கான சாட்சியும் இருக்கு!! 

ஆதாரங்களை சரிபார்த்த நீதிபதி, “சாட்சியை விசாரணை செய்யலாம் என்றார். குமரேசனின் பெயர் மும்முறை ஒலித்தது.

“நீங்கதானே குமரேசன்? இங்க நிற்கும் திரு.ஜெயானந்தனுடைய காரியதரிசி? 

“ஆமா

“சுந்தரம் அவர்களை எதற்க்காக இவர் சந்திக்கணும்?

குமரேசன், “எதுக்காகன்னு தெரியாது! ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கனும்னு பீச் அவுஸ் போக சொன்னாரு! அப்புறம் திடீர்னு வேறொரு இடம் சொல்லி அங்க ஒருத்தரை நான் பார்க்கனும்ன்னு சொன்னாரு! அங்க போனதும், நானும் டிரைவரும் வெளில நின்னுட்டோம்! இவர் மட்டும் உள்ள போயிட்டு வந்தாரு! 

உள்ளே இருந்தவரை பார்த்துட்டு இவர் வெளில வந்தப்போ தலைலையும் கையிலயும் அடிபட்டுருந்தது. என்னாச்சுன்னு கேட்டதுக்கு ‘ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டு பீச் அவுஸ் போக சொன்னாரு! அவரை அங்க விட்டுட்டு நான் திரும்ப போயிட்டேன்! இன்னைக்கு காலைல அவரே வீட்டுக்கு வந்துட்டாரு!      

குமரேசன் சொல்லிமுடிக்க, கோவம் அடங்காமல் கத்தினார் ஜெயானந்தன். “நம்பாதீங்க ஐயா! அவன் பொய் சொல்றான்! என் உப்பையே தின்னுட்டு எனக்கே துரோகம் செய்யுறான் 

நீதிபதி, “விசாரணையின் நடுவே தேவையில்லாமல் கத்தக்கூடாது

நிவேதா, “இவர்கள் இருவரையும் அழைத்து சென்ற காரோட்டியை விசாரிக்க அனுமதி வேண்டுகிறேன்

“கிராண்டட்

கோவிந்தசாமி உள்ளிருக்கும் பயத்தை வெளிக்காட்டாமல் வந்து நின்றான். அவனை பார்த்ததும் ஜெயானந்தனின் முகம் செந்நிறம் கொண்டது ரௌத்திரத்தால்.

“சொல்லுங்க மிஸ்டர் கோவிந்தன், எவ்ளோ நாளா இவருக்கு கார் டிரைவரா இருக்கீங்க?

“அது ஆச்சு மாடம் 2 மாசம்

“இரண்டு நாட்கள் முன்னாடி அவரை பீச் அவுஸ்ல டிராப் பண்ணீங்களா? 

“ஆமா மாடம்! ஆனா அதுக்கு முன்னாடி ஒரு வூட்டுக்கு போனோம்! இவரு மட்டும் தனியா உள்ளார பூட்டு  நேரம் கழிச்சு வந்தாரு! அப்பால, பீச்சவுசு போய் இறங்கிகின்னு, இரண்டு நாலு லீவு குடுத்து எங்களை திரும்பி போவ சொல்டாரு 

ஜெயானந்தன், “இவன் சொல்றது சுத்தமான பொய்! குமரேசன் யாரோ எனக்காக வெயிட் பண்றதா பொய் சொல்லி ஏமாத்தி அழைச்சுட்டு போய்ட்டான்.  அங்க போனதும், இதோ இந்த டிரைவர் தான் என் பின்னந்தலையில ஏதோ கட்டையால அடிச்சான். நான் அப்டியே மயங்கி விழுந்துட்டேன்! கண்ணை முழிச்சு பார்த்தப்போ நான் என் பங்கலால இருந்தேன்! எல்லா கதவும் யாரோ வெளில பூட்டி வச்சுருந்தாங்க! என்னால கடந்த இரண்டு நாட்களா வெளிலயே வார முடியல! இன்னைக்கு காலைல தான் என் சொந்த முயற்சில ரொம்ப சிரமப்பட்டு வெளில வந்துருக்கேன்!! 

நிவேதா, “இது என்ன புதுக்கதை? நீங்க சொல்றதை பார்த்தா யாரோ உங்களை கடத்தி வச்சுருந்த மாதிரி சொல்றீங்களே?

ஜெயானந்தன், “கடத்தி தான் வச்சுருந்தாங்க!! அதுதான் உண்மை

நிவேதா, “தி கிரேட் ஜெயானந்தனை யாராவது கடத்த முடியுமா? என்று மெலிதாய் அவள் சிரிக்க, ஜெயானந்தனுக்கு உச்சி காய்ந்தது. 

“சரி, உங்களை கடத்தினது யாரு?

ஜெயானந்தன், “கம்ப்ளைன்ட் குடுக்குறேன், கண்டுபிடிச்சு சொல்லுங்க திமிராக வந்தது அவர் பேச்சு!

நிவேதா, “இது முறையான பதில் இல்லையே? 

“பின்ன என்ன? என்னை கடத்தி வச்சுருந்தாங்கன்னு சொல்றேன், அதை என்னனு கேட்காம பொய் சொல்றவங்களை எல்லாம் நம்பி பேசிட்டு இருக்கீங்க? 

“அவங்க சொல்றது பொய்ன்னு நிரூபிக்க ஆதாரம் வேணுமே? நீங்க கடத்தப்பட்டுருந்தது உண்மைன்னா, இவங்க சொல்றது பொய்ன்னு நாங்க ஏத்துக்க முடியும்!! நிவேதா சொன்னதும், “அப்போ அந்த குமரேசனை வர சொல்லுங்க, அவன்கிட்ட நானே கேள்வி கேட்குறேன்! உண்மை எப்டி வெளில வருதுன்னு பார்க்குறேன் என்றார்.

குமரேசன் வந்து நின்றான். 

“மரியாதையா உண்மையா சொல்றா! என்னை அந்த டிரைவர் அடிக்கும்போது நீயும்தானே கூட இருந்த! அங்கிருந்த நான், எப்டி என் பங்களாக்கு போனேன்? உண்மைய சொல்லு என்றார்.

குமரேசன் அவரை நேர்கொண்டும் பார்க்கவில்லை.   

“எங்க சார்க்கு தலைல அடிபட்டதுல எல்லாம் மறந்துடுச்சுன்னு நினைக்குறேன்!! அவர்தான் இரண்டு நாள் என்னை யாரும் தொல்லை பண்ண கூடாதுன்னு சொல்லி அந்த பங்களாக்கு போனாரு! இவரை யாருமே அடிக்கல! அவருக்கு எப்டி அடிபட்டுசுன்னும் எங்களுக்கு தெரியாது! இப்ப எல்லாத்தையும் மாத்தி மாத்தி பேசிட்டு இருக்காரு, அடிபட்டதுல அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல! என்றிட, அவனை அடிக்க வெளியே எகிறி வந்தார் ஜெயானந்தன். 

“என்னடா டேய், என்னை பைத்தியம்ன்னு சொல்றியா? என் நிழல்ல அண்டி பொழைக்குற நாயி!! என்னையே பைத்தியம்ன்னு சொல்றியா?  

காவலர்கள் அவரை பிடித்து மீண்டும் கூண்டில் நிறுத்த, “இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது என்றார் நீதிபதி. 

இனியன் ஜெயானந்தனின் முகத்தை தவிர வேறு எதையும் கவனிக்கவில்லை. அவன் கோவப்படுவதையும், எரிச்சலாவதையும், தன் கூற்றை ஒருவர் நம்பாததையும், உண்மையை கூட பொய்யென ஒருவர் சொல்லும்போது அவன் முகம் காட்டிய பாவங்களில் இருந்து தன் மனதை நிம்மதியை மீட்டேடுத்துக்கொண்டிருந்தான்.

‘இதுமாதிரி தானே என் நிலா அன்னைக்கு துடிச்சுருப்பா! எல்லோரும் அவளை பைத்தியம்ன்னு சொன்னபோ அவளுக்கு எப்படி இருந்துருக்கும்!? ஹும்ம்!! அனுபவி ஜெயானந்தா!! இனியனின் விழிகள் கோவத்தில் துடித்துக்கொண்டிருந்த ஜெயானந்தனை திருப்தியாய் நோட்டமிட்டது.  

Advertisement