Advertisement

*24*

அன்று இனியன் விளையாட்டாய் சொன்னதாய் அனைவரும் நினைக்க, அவர்கள் நினைப்பை பொய்யாக்கும்படி, தீவிரமாக தன் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் இறங்கியிருந்தான். நிவேதா தான் பயந்து போனாள். கோர்ட்டும், சட்டமும் அவளுக்கு அத்துப்படி என்றாலும், அங்கே வழக்காடுதல் என்பது முற்றிலும் புதிது. இனியனிடம், வேறு சீனியர் வக்கீலை அவள் பரிந்துரைக்க, அவன் பிடிவாதமாய் மறுத்துவிட்டான்.

‘யாரோ ஒருத்தரை இனியும் நம்பி எதுலையும் இறங்க நான் தயாரா இல்லை நிவேதா! நீ என்னை அண்ணனா ஏத்துகுறதா இருந்தா நான் சொல்றதை எனக்காக தைரியமா பண்ணு, உன்கூட நான் இருக்கேன்’ என்றுவிட்டான்.

அவளோ உடனே, ‘உங்களுக்காக செய்யுறேன்! ஆனா உங்களை அண்ணனா ஏத்துக்க முடியாது’ சொல்லிவிட்டு வேகமாய் நகர்ந்துவிட்டாள். இதுவரை ‘அண்ணன்’ என்றவளுக்கு இப்போது என்ன வந்தது? என சில நிமிடங்கள் சுணங்கினாலும், அடுத்து செய்ய வேண்டியதில் கவனம் திரும்பிவிட்டது அவனுக்கு.

என்ன செய்வது? எப்படி செய்வது? என திட்டம் தீட்டி முடிக்கவே அவனுக்கு பத்து நாட்கள் ஓடிவிட்டது. நிலாவும் கோகுலும் தன் போக்கில் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்தனர். வேணியும் தேவியும் தங்கள் ஊருக்கு ஒருமுறை சென்றுவிட்டு வருவதாய் சொல்லி கிளம்பியிருந்தனர். இனியனும் நிலாவும் பேசிக்கொள்ளும் நேரங்களே குறைந்து போயிருந்தது இந்த பத்து நாட்களில்.  அன்றோ சென்னையில் அதிசயமாய் மழை பெய்துக்கொண்டிருந்தது.

வேலை முடித்து வீட்டுக்கு வந்த நிலா, கூடத்தில் இனியன், நிவேதாவுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பதை கண்டு மெல்லிய சிரிப்பை அவளுக்கு வரவேற்ப்பாக்கி தன்னறைக்குள் சென்றாள். ரெப்ரஷ் முடிந்து ஹாலுக்கு வரும்போது அதியன் போட்ட சூடான டீயின் நறுமணம் அவளை சுண்டி இழுத்தது.  ஈரமான தன் கைப்பையை அதியன் உலர்த்துவதற்காக தயார் செய்வதை கண்டாள். 

“உள்ள இருக்க திங்க்ஸ் எல்லாம் வெளில எடுத்து வச்சுட்டு காய வைக்கவா?” அதியன் கேட்க, சம்மதம் சொன்னாள் நிலா. “மழை தான் பெய்யுதே, ஸ்கூட்டியை விட்டுட்டு டேக்ஸில வந்துருக்கலாம்ல? இப்படி நனைஞ்சுட்டு வரணுமா?” அதியன் கேட்டதும் “போடா” என்றுவிட்டு அவன் போட்ட டீயை விரும்பி குடித்தாள் நிலா.

“அடியேய் அண்ணி!? இதென்ன பேக்கா இல்ல குப்பை லாரியா? தின்னுட்டு போட்ட சாக்லேட் பேப்பர் கூட அப்டியே வச்சுருக்க?” எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும் குப்பைகளில் ஷாக் ஆகி அதியன் கேட்க, “சுவட்ச் பாரத் டா! தூய்மை இந்தியால குப்பை போடலாமா?” என்று சொன்னவளை “குப்பக்காரி” என முறைத்தான் அதியன்.

கசக்கி போட்ட காகிதம், எழுதாத பேனா, பூ குத்திய பின், சில பழைய மேகசின்ஸ், நியூஸ் பேப்பர் கட்டிங்க்ஸ், குறிப்பெடுக்கும் கையேடு, அத்தனையிலும் சிக்கி கொண்டிருந்த ஹெட்செட், பிய்யும் நிலைமையில் இருந்த ப்ளூடூத், அனாமத்தாய் அடியில் கிடந்த சார்ஜ் இல்லாத பவர் பேன்க் என அவள் கைப்பை கலைக்கட்டியது.

‘இனி ஒவ்வொன்னா எடுத்தா வேலைக்காகாது’ என்றெண்ணிய அதியன், நின்றவாக்கில் அவள் பையை தலைகீழாய் கவிழ்த்தான்.  குப்பைகள் எல்லாம் சிறு குவியலாய் கொட்ட, அதில் வேகமாய் வந்து விழுந்தது ஒன்று!! ‘டங்’கென்ற ஒலி!!

நிலா ‘என்ன?’ என்று எட்டிப்பார்க்க, அதியன் ‘அச்சோ’ என்று குனிந்தான். இனியனும் கவனம் கலைந்தான். “என்னடா கீழ போட்ட?” அண்ணனின் கேள்விக்கு, “எல்லாத்தையும் எடுத்துட்டேன்னு நினச்சு தான் கொட்டுனேன்! என்னன்னு தெறில” சொல்லிக்கொண்டே அவன் எடுக்கையில் கையில் சிக்கியது ஒரு போன்.

“அட, ஐ-போனு!” அதியன் சிறிது வியப்பாய் சொல்லி “நிலா, ஐ-போன் எல்லாம் வச்சுருக்க! சொல்லவே இல்ல” என்றான்.

“என்கிட்ட ஐ-போன் இல்லையே” நிலா சொன்னதும் இனியன் நிவேதாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டு, “என்னடா?” என்றான் அதியனை.

அந்த போனை கொண்டு வந்து இனியனிடம் கொடுத்தான் அதியன்.  தேநீர் கோப்பையை கிட்செனில் வைத்துவிட்டு திரும்பிய நிலா, இனியன் கையில் இருந்த போனை கண்டதும், அது எங்கிருந்து வந்தது என நியாபகம் வந்தது அவளுக்கு…!

“அது அந்த வீட்ல இருந்து எடுத்துட்டு வந்தது” நிலா சொல்ல, “எந்த வீடு?” என்ற இனியனிடம், “அந்த சதாசிவம் வீட்டுக்கு நைட் போயிருந்தேன்ல? அப்போ அங்கிருந்து எடுத்தேன்!!” என்றாள் நிலா. அவன் கண்ணில் சிறு ஒளி பிறந்தது.  அப்போதைக்கு அதை ஒத்திவைத்தவன்,     

“நிலாம்மா, இங்க வாங்க” இனியன் அழைக்க அவன் அருகே சென்று அமர்ந்தவள், “என்ன அத்தூ?” என்றாள். 

“நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோ! இந்தமுறை எந்த சொதப்பலும் இல்லாம ப்ளான் நடக்கணும்!!” 

நிலா, “நான் என்ன செய்யணும்?”

“நான் சொல்லுறமாறி ஜெயானந்தன் மேல கேஸ் குடுக்கணும்!” அவன் சொல்ல, “நல்லா யோசிச்சுட்டியா அத்தூ? நம்ம கண்டிப்பா இதை செய்யணுமா?” நிலாவின் பேச்சை நம்பமுடியாமல் பார்த்தான் இனியன்.

“என்ன பேசுற நிலா? அவனுக்கு தண்டனை கிடைக்கனும்ன்னு பல வருஷமா துடிச்சுட்டு இருந்தது நீ தானே? உன் ஆசையை, உன்னை கஷ்டபடுத்துனவனை தண்டிக்கணும்ன்னு தானே நாங்க போராடிட்டு இருக்கோம்?” சிறிது கோவம் கூட எட்டிப்பார்த்தது.

“இப்பவும் அவனுக்கு தண்டனை கிடைச்சே ஆகணும்ன்னு தான் தோணுது, ஆனா உங்களுக்கு இதனால ஏதும் ஆகிடுமோன்னு ஒரு பக்கம் பயமா இருக்கு, இப்போலாம் முன்னமாறி என்னால தைரியமா இருக்க முடியல! யார் மேலயும் பற்று இல்லாம இருந்த என்னை, முழுசா பழையபடி மாற்றிட்டே நீ!” சொன்னவளை புருவம் சுருங்க பார்த்தான் இனியன்.

“நான் உன்னை பலவீனமாக்கிட்டேனா நிலா?”  அவன் குரலில் எதிலோ தோற்று போனதொரு பாவம்.

அதை அறிந்து “இல்ல அத்தூ, இல்லவே இல்ல!!” என்றாள் பதைபதைப்புடன்.

மௌனமாய் எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான். நிவேதாவும் அதியனும் அங்கே இருக்கவா போகவா என்று சங்கடத்துடன் இருந்தனர். ‘ஒரு நிமிஷம்’ என்று அவர்களிடம் சொன்னவள், எழுந்து உள்ளே சென்றாள். 

இருகைகளையும் கோர்த்து முகத்தை மூடி அமர்ந்திருந்தான் இனியன். அவனுக்கு எதிரே முட்டி போட்டு அமர்ந்தவள், அவன் கைகளை பிரித்து, “அத்தூ, நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சுக்கலை” என்றாள்.

“நீ சொன்னதோட அர்த்தம் என்னை அப்டிதான் யோசிக்க வைக்குது” கசங்கிய அவன் முகம் வருத்ததை கொடுக்க, அவனை அப்படியே அணைத்துக்கொண்டாள் நிலா. அவள் அணைப்பில் அடங்கி அமைதியாய் இருந்தான் இனியன்.

“யாரும் வேண்டாம்ன்னு விட்டேத்தியா இருந்தேன் அத்தூ! என்னை மறுபடியும் உணர்வுள்ள மனுஷியா மாத்திருக்க! அதைதான் சொன்னேனே தவிர, நீ என்னை பலவீனப்படுத்துறன்னு நான் சொல்லல! என்னோட பலமே நீதான் அத்தூ!! அதனாலதான் அவனால எதுவும் உங்களுக்கு ஆகிட கூடாதுன்னு பயப்படுறேன்! கண்ணு முன்னாடி சாவை பார்த்தவ நான், பயம் இருக்காதா?” கடைசியாய் அவள் சொன்ன வார்த்தைகளின் வலி, அப்பட்டமாய் வெளி தெரிய, அவளை தன்னோடு இறுக்கிகொண்டான் இனியன். 

சிறிது நேர மௌனத்தின் பின், அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன், “உன்னோட அழகே உன் தைரியம் தான்!! எதுக்காகவும் உன்னை மாத்திக்க கூடாது, புரிஞ்சுதா?” என்றிட, அவன் முகத்தையே குழப்பமாய் பார்த்த நிலா, “எப்பவும் என் உதடு தானே அழகுன்னு சொல்லுவ?” என்றாள் அதிமுக்கியமாய்.

அவள் கேட்ட கேள்வியில் ‘அட லூசே’ என்று கடுப்பான இனியன், “நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன், கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம….!!?” கேட்டுக்கொண்டே அவள் கன்னத்தை இறுக்கி பிடித்து, “இந்த வாய் தானே, வாய் தானே பேசுது” அவன் பார்வையில் ஆசை கூட நிலா இதழியானாள்.

வெளியே பால்கனியில் ஒருபுறம் அதியனும், மறுபுறம் நிவேதாவும் நின்று மாலை நேர சாலையை வெறித்துக்கொண்டிருந்தனர். இருவர் சிந்தனையையும் அருகில் இருந்த மற்றொருவர் நிரப்பியிருந்தனர்.

அதியன் முனகலாய், “இதான் லாஸ்ட் சான்ஸ், சொதப்பாம பண்ணனும், யாராது நல்ல வக்கீலா பார்க்கலாம்ன்னு சொன்னா, இந்த அரைவேக்காட்டை நம்பிட்டு இருக்கான்!!” சற்று சத்தமாகவே ஒலித்தது நிவேதாவின் செவிகளை சென்றடைந்தது. 

கோபமாய் திரும்பி அவனருகே வந்தவள், “ஹலோ மிஸ்டர், நானும் இந்த விஷயம் ஆரம்பிச்சதுல இருந்தே பார்க்குறேன், என்னை குறை சொல்லிட்டே இருக்கீங்க? உங்க மனசுல என்ன நினச்சுட்டு இருக்கீங்க? உலகத்துலயே நீங்க மட்டும் தான் திறமைசாலியா என்ன?” பொரிந்து தள்ள, தன் ஆள்காட்டிவிரலை காதில் விட்டு கடகடவென ஆட்டியவன், “பொழுது சாஞ்சாலே இந்த கொசு தொல்ல தாங்கல, காதுல வந்து மியாவ் மியாவுங்குது!” எங்கோ பார்த்து சொல்ல, அவனை இடித்துக்கொண்டு முன்னால் வந்து நின்றாள் நிவேதா.

அப்போது தான் அவளை பார்ப்பவன் போல, “எதுக்கு என் முன்னாடி வந்து நிக்குற?” என்றான்.

“என்ன கிண்டல் பண்றீங்களா என்னை?” அவள் முறைப்பதை கண்டு பல்வரிசை தெரிய சிரித்தவனை தன்னை மறந்து சில நொடிகள் ரசித்தாள் நிவேதா. அதை கண்டுகொண்டவனின் சிரிப்பு இன்னும் விரிந்தது. சட்டென சுதாரித்தவள், அவனை விட்டு சற்று தள்ளி சென்று, “என்னை கிண்டல் பண்றீங்களான்னு கேட்டேன்?” என்றாள் இழுத்து பிடித்து வைத்த கோவத்துடன். 

அதியன், “பரவாலையே! கண்டுபிடிச்சுட்டியே!!” என்றான் நக்கலாய்.

அவன் நக்கல் தொனியில் அவளுக்கு தன்மானம் சீண்டபட்டது.  துளிர்த்த கோவத்துடன், “இந்த கேஸ்ல நான் ஜெயிச்சு காட்டுவேன்! என்னை அரைவேக்காடுன்னு சொன்ன நீங்களே உன்னால தான் நாங்க ஜெயிச்சோம்ன்னு என்னை தேடி வந்து சொல்லுவீங்க!!” சவால் போல அவள் பேச, “என்ன சவால் விடுறியா?” என்று சிரித்தான் அதியன்.

“சவாலா பேசல!! ஆனா இப்போ சவாலா இதை எடுத்துகிட்டா என்னனு தோணுது!!” நிவேத்தா திடமாய் சொல்ல, “அப்போ சவாலுக்கு நானும் ரெடி!!” என்றான் அதியன். 

“சவால்ல நாந்தான் ஜெயிக்க போறேன் மிஸ்டர் அதியன்! சோ நீங்க தோத்துட்டா எனக்கு என்ன செய்வீங்க?” என்று புருவம் உயர்த்தி கேட்க, “நீயே சொல்லு” என்ற அதியனிடம், “எல்லார் முன்னாடியும் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும், கேட்ப்பீங்களா?” என்றாள். 

“தாராளமா!!” உடனே ஒப்புக்கொண்ட அதியனை சற்று சந்தேகமாகவே நிவேதா பார்க்க, “ஒருவேளை நான் ஜெயிச்சுட்டா? நீ என்ன செய்வ?” அவன் பார்வை சுவாரஸ்யமாய் அவள் மீது படிந்தது.

“நான் உங்ககிட்ட சாரி கேக்குறேன்!!” அவள் சொன்னதை தலையசைத்து மறுத்தவன்,  “உன் சாரியெல்லாம் எனக்கு வேணாம்!” என்க,

“வேற என்ன பண்ணனும்?” என்றாள் நிவேதா.

“என்னை கல்யாணம் பண்ணிக்கணும்!” கண்ணடித்து அவன் கேட்க, நிவேதாக்கு சகலமும் ஸ்தம்பித்தது.  அவளை அதற்குமேலே யோசிக்க விடாமல், 

“அதியா…!!!! நிவேதாஆஆ???? வாங்க சீக்கிரம்” அறையில் இருந்த இனியனின் சத்தத்தில் தங்கள் பேச்சை பாதியில் விட்டு அவனிடம் ஓடினர். 

கணினி திரையின் முன்பு அமர்ந்திருந்த இனியன், “இதை பாரு!!!” என திரையை காட்டினான். அதை ஓடிய கானொளியில் அங்கிருந்த நால்வரின் கண்களுமே அதீதமாய் பளிச்சிட்டது. 

“அண்ணா!! செம்ம செம்ம செம்மண்ணா!!” இனியனை கட்டிக்கொண்டான் அதியன். 

“நிலா நீ தெரிஞ்சு செஞ்சியோ, தெரியாம செஞ்சியோ! இது நமக்கு எவ்ளோ பெரிய எவிடென்ஸ் தெரியுமா? தேங்க் யூ சோ மச் நிலாகுட்டி”  இந்த வழக்கில் வெற்றியை சந்திப்பது உறுதி என்ற திடமான நம்பிக்கை ஏற்பட, தங்கள் திட்டத்தை எந்தவித ஐயமும் இன்றி செயல்படுத்த செய்முறை பார்த்தனர். 

இரு தினங்களுக்கு பிறகு…

இனியனின் அலைபேசி மௌனமாய் அதிர்ந்தது. அதை இயக்கி பார்த்தவன் “அவங்க கிளம்பிட்டாங்க” என்று பொதுவாய் சொன்னான்.

அங்கே தன் சொகுசு காரில் சௌகர்யமாய் சாய்ந்துகொண்டு ஏசி காற்றில் ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார் ஜெயானந்தன். 

“யப்பா!! செம்ம பிரியாணிடா! நாளைக்கும் அவன்டையே வாங்கிட்டு வா!!” பல்லிடுக்கில் சிக்கியிருக்கும் மாமிசத்தை வெளியெடுக்கும் முயற்சியோடு அடுத்த நாள் உணவுக்கும் இப்போதே தன் பி.ஏ குமரேசனிடம் ஆர்டர் செய்தார் ஜெயானந்தன். 

“சரிண்ணே” என்ற குமரேசனின் குரல் சற்றே கம்மி ஒலித்தது. 

“கோர்ட்டு கேஸுன்னு ஒரு தொல்லை ஒளிஞ்சுதுன்னு நிம்மதியானா, தேர்தல் பிரசாரம்ன்னு இவனுங்க வேற சாவடிக்குறானுங்க! ரெண்டு நாளுக்கு எவன் தொல்லையும் இல்லாம நிம்மதியா இருக்கனும்டா!!” பேசிக்கொண்டிருண்ந்த ஜெயானந்தன் சட்டென நிறுத்தி, “டேய் குமரேசா, எந்த ****க்கும் அப்பாயிண்டுமெண்டு குடுத்து தொலைக்கலல? இல்லனா காலிலேயே வந்து தாலி அருப்பானுங்க” அவர் கேட்டதற்கு, ‘இல்லை’ என தலையசைத்தான் குமரேசன்.

பின்னர், “மதமதப்பா இருக்கு, நான் தூங்குறேன், பீச் அவுசு வந்ததும் மெல்ல எழுப்பு! ஹான் அப்புறம் நைட்டுக்கு நம்ம பார்ட்டியை புக் பண்ண மறந்துடாத என்னடா!?” மெத்த உண்டுவிட்டு மெத்தை உணவுக்கும் ஆர்டர் செய்த நிம்மதியில் கண்ணயர்ந்தார் ஜெயானந்தன். 

டிரைவர் சீட்டில் இருந்தவனும் அவன் அருகே இருந்த குமரேசனும் ஒருமுறை பார்த்துக்கொண்டனர். பின், கார் நேரே சாலையில் சீறி பாய்ந்தது. ஜெயானந்தனை குமரேசன் எழுப்ப, சோம்பல் முறித்து மெல்ல கண் திறந்தவர், “என்னடா அதுக்குள்ள இருட்டிடுச்சு?” என்றிட, பதில் சொல்லாமல் கதவை திறந்துவிட்டான் குமரேசன்.

“ஷப்பா!!! ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல” வெளியில் வந்து பார்க்க, அவர் முகத்தில் எரிச்சலும் கோவமும் குழுமியது. 

“என்ன இடம் டா இது? பீச் அவுஸ் போக சொன்னா, ஏதோ காட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துருக்க?” என்று கத்தினார். 

குமரேசன், “உங்களை ஒருத்தர் பார்க்கனும்ன்னு வெயிட் பண்றாரு, அதான் இங்க வந்தோம்!” தயங்கி தயங்கி அவன் சொல்ல, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ஜெயானந்தன். 

“எவனையும் பார்க்க கூடாதுன்னு தானே இரண்டு நாளு தனியா இருக்க போறேன், உன்கிட்ட சொன்னேனா இல்லையாடா!? அப்புறம் எதுக்கு இங்க என்னை கூட்டிட்டு வந்த?” என்று ஆக்ரோஷமாக, அடி விழுந்த கன்னத்தை கையில் தாங்கியபடி, “ரொம்ப முக்கியமா பார்க்கனும்ன்னு சொன்னாங்க அண்ணே, அதான்” என்றான் குமரேசன்.

“அதுக்கு அவன் இடத்துக்கு நான் வரணுமா? என்னை தேடி வந்து பார்க்க ஊரே நிக்குது! இவன் யாருடா என்னையே வர வைக்குறான்?” ரௌத்திரமான முகத்துடன் முன்னோக்கி நடந்தார் ஜெயானந்தன். குமரேசன் அவர் பின்னூடே ஓட, ஒரு திடமான பொருள் திடீரென ஜெயானந்தனின் பின்னந்தலையை அழுத்தமாய் தாக்கிட, நிலைகுலைந்து திரும்பிய அவர் கண்களில் ஓங்கிய கையுடன் தெரிந்தான் அவர் காரின் டிரைவர். 

“டே…ய்… குமரே..சா… பு..டி…டாஆஆ” திக்கி திக்கி சொன்னவர் நினைவு தப்பி அப்படியே மயங்கி சரிந்தார். 

குமரேசன் விழுந்தவரை தாங்கி பிடிக்காமல், “அண்ணே மயங்கிட்டாரு” என்று குரல் கொடுக்க, மறைந்திருந்த பலரும் வெளிவந்தனர். பெண்கள் அன்றி ஆண்கள் மட்டுமே அவ்விடத்தை ஆக்கிரமித்திருந்தனர். 

அவர்களை கண்டதும் கையில் இருந்த கட்டையை ‘டமால்’ என தரையில் போட்ட அந்த டிரைவர், “அண்ணாத்த!! இத்தோட ஆள வுட்ரு! நா எங்குனா எஸ்ஸாயிடுறேன், இந்தாளாண்ட என்னால மல்லு கட்ட முடியாது!” கையிரண்டையும் தலைக்கு மேல் தூக்கி சரண்டர் ஆனான் அவன். 

“நீ இதுவரைக்கும் சொன்னதை சரியா செஞ்சதே பெரிய விஷயம்! அதுக்கே பாராட்டனும்! இனி நீ கிளம்பலாம், நாங்க சொல்றப்போ மட்டும் வந்துடு! ஊர விட்டு எங்கயும் ஓடிடாத!!” சிவா அவனிடம் சொல்ல ‘ஷப்பா’ என்று நிம்மதியானான் அவன்.

கோகுல், “எனக்கென்னவோ இவனை பார்த்து சந்தேகமா இருக்கு, குடிச்சுட்டு எங்கயாது போய் விழுந்து கிடந்தா, இவனை நம்ம எங்கன்னு தேடுறது? நம்ம கஸ்டடிலையே இருக்கட்டும்!!” அவன் சொன்னதை  மீதமிருந்த அனைவரும் ஏற்றுக்கொள்ள, கொதித்தெழுந்தான் அந்த டிரைவர்.

“இன்னாமே நினச்சுன்னு இருக்குறீங்கோ? பெரிய சாரு, நம்மளையும் மதிச்சு உதவி கேட்டாறேன்னு என் மீட்டிங்கெல்லாம் அப்பால நவுட்டின்னு வந்து இந்த பிராடு கம்***க்கு டிரைவரா இருந்தா, என் வொர்க்க பாத்து கிளாப் பண்ணாம, இப்படி டவுட் படுறீங்கோ?  ஒரு மாசமா பகல்ல குடிக்காம நறும்பு தளச்சியே வந்துபூச்சு தெரியுமா?” கடைசியில் கண்ணை கசக்கிக்கொண்டே பேசிய அவனை யாரென்று நீங்களே யூகித்திருக்க முடியும். நம்ம ‘குவாட்டர் கோவிந்தசாமி’ தான் அது!!!

“இவனை ஏன் அண்ணா இந்த வேலைக்கு எடுத்த?” அதியன் அலுத்துக்கொண்டான்.

விழுந்து கிடந்த ஜெயானந்தனை நிழல்படம் எடுத்து வாட்சப்பில் நிலாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்த இனியன், “இவன் மாட்டுனா நம்மளை பத்தி சொல்ல எந்த ரகசியமும் இவனுக்கு தெரியாது! ஒருவேளை மாட்டிகிட்டு தப்பிச்சு ஓடிட்டா கூட, இவனை பத்தி விசாரிச்சா ஒரு துப்பும் கிடைக்காது, ஏன்னா சாரு அந்த அளவுக்கு ஃபேமசு” என்று சிரிப்பில் இதழ் வளைக்க, மற்றவர்கள் அவனை கிண்டல் செய்து சிரித்தனர். 

தன் இமேஜ், டேமேஜ் ஆனதில் காண்டான கோவிந்தன், “நில்லா மாடம் காண்டி தான் நீ கேட்டதும் சரின்னு ஒத்துகினே, எம்மாம்பெரிய வேலை பண்ணிருக்கே, எல்லாம் என்ன கலாய்க்குறீங்கோ!” சலித்துக்கொண்டான். 

“சரி, சரி உன் வேலை முடிஞ்சுது, நீ கிளம்பு! நாங்க கூப்பிடும்போது வந்துடு! உன் பொண்டாட்டிகிட்ட உன் சம்பளத்தை குடுத்தாச்சு” என்று சொல்லி கோவிந்தனை அங்கிருந்து கிளப்பிவிட்டனர். 

குமரேசன் முகத்தில் பயம், குற்றயுணர்வு, வேறு வழி இல்லாத அவஸ்தை என பலவித ரசங்கள் போட்டிபோட்டு வெளிவந்தது. 

அதியன் அவனிடம் சென்று தோளில் கைபோட்டு, “என்ன பீலிங்க்ஸா? உச் உச் உச்” என்றான் அனுதாபமாய். வார்த்தைகள் மட்டுமே அனுதாபத்தை காட்டியது, குரல் நயத்தில் இம்மியும் அதின்றி, பரிகாசம் செய்தது. 

மதனும், முஸ்தபாவும் விழுந்து கிடந்த ஜெயானந்தனை தூக்கி அவன் வந்த காரிலேயே போட்டனர். 

இனியன், “என்ன வருங்கால அமைச்சரோட பி.ஏ? உன் தலைவன் கவுந்து கிடக்குறதை பார்த்தா மனசு வலிக்குதோ?” கேட்டு, அவன் முக மாறுதலை கவனித்தவன், “உயிரை எடுக்கும்போது சந்தோசமா சிரிச்சுட்டு நிப்ப, அப்போ எந்த குற்றவுணர்ச்சியும் உனக்கு வராது! ம்ம்ம்?” என்றான் அதிகாரமாய் மிரட்டும் தொனியில். 

குமரேசன், “ஏதோ வீடியோ கிடைச்சுடுச்சுன்னு மிரட்டிட்டு இருக்க, என் தலைவனோட உண்மையான முகம் உனக்கு தெரியாது” என்றான்.

கோகுல், “இந்த மூஞ்சியவே பார்க்க வேணான்னு தான் நாங்க குப்புற கவுத்து போட்டுருகோம்! இதுல இன்னொரு மூஞ்சி வேறயா?” 

அதியன், “சரிப்பா! நீ உன் தலைவனை கூட்டிகிட்டு கிளம்பு, நாங்க வீடியோவை ரிலீஸ் பண்ணிக்குறோம், உன் தலைவன் கூடவே ஜெயில்ல உட்காந்து லெக்பீஸ் தின்னு”    அவன் சொன்னதும் குமரேசனுக்கு வியர்த்து ஒழுகியது. 

“இங்க பாருங்க, நீ சொன்னதுமாறி செய்யுறேன்! கேஸ்ல நான் வராதமாறி பார்த்துக்கோங்க! அமைச்சர் கொலை கேஸ் முடிஞ்சுது முடிஞ்சதாகவே இருக்கணும்” குமரேசன் பதட்டமாய் சொல்ல, அவன் தலைவர் பற்றி எண்ணி சிரித்தபடி, “அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்! நீ நாங்க சொன்னதை மட்டும் சரியா செய்” என்றான் இனியன். 

அதுப்படி காரில் இருந்த ஜெயானந்தனோடு குமரேசன் அவரது பீச் அவுசிற்கு சென்றான். சென்றடைந்ததும், இனியனுக்கு அழைத்தவன், “அண்ணனை உள்ள போட்டுட்டு வெளிய பூட்டிட்டேன், அவர் போனு சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன், லேண்ட்லைன் ஒயரை அறுத்தாச்சு! வாட்ச்மேன்க்கு லீவு சொல்லி அனுப்பிட்டேன்! அவ்ளோதானே?” சொன்ன வேலையெல்லாம் செய்துவிட்டு சரியா? என்றான் குமரேசன்.

இனியனிடம் இருந்து ‘சரி’ என்ற பதில் வந்ததும் அங்கிருந்து அவன் சென்றுவிட்டான். ஆளில்லாத வீட்டில் தனியாக மயக்க நிலையில் கிடந்தார் ஜெயானந்தன்.

அதியன், “ப்ளான் சரியா போகுதாண்ணா?”

இனியன் “சோ ஃபார், சோ குட்” என்றான். 

இரு தினங்களில் ‘சுந்தரம்’ என்பவர் காணாமல் போனாதாய் சொல்லி, நிவேதா மூலம் நீதிமன்றத்தில் ‘ஹீபஸ் கார்பஸ்’ மனு நிலாவால் தொகுக்கப்பட்டது.    

Advertisement