Advertisement

*23*

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!!

“உங்க பாதுகாப்புக்கு தான் போலீசும், ஸ்பெஷல் ஸ்குவாடும் இருக்கு! அதையும் மீறி பொது இடத்துல பொது மக்கள் முன்நிலையில உங்க துப்பாக்கியை உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன?” 

கிட்டத்தட்ட இருபது பேர் அந்த அறையில் இருந்திருப்பர். நமக்கு பரிட்சையமான ஷீலா, அசோக், சுதீப் தவிர பிற புதுமுகங்கள் அறையை நிறைத்திருந்தது. அவர்களின் மத்தியில் திடமான முகத்துடன் அமர்ந்திருந்தான் இனியன் இளஞ்செழியன். ‘விசாரணை கமிஷன்’ என்ற பெயரில் ஒரே கேள்வியாய் வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி அங்கிருந்த அனைவரும் கேட்டுக்கொண்டிருக்க, பொறுமையை இழுத்துபிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் இனியன்.

“நீங்க தனிப்பட்ட முறையில பாதுகாப்புகாக துப்பாக்கி வச்சுருக்குறது தப்பில்லை! அதை பொது இடத்துல பிரயோகப்படுத்துனது தப்பு!!” கண்ணாடி போட்ட ஆன்ட்டி ஒன்று மேதாவியாய் சொன்னது.

“உங்க பாதுகாப்புக்கு போலீஸ் இருக்கும்போது, சட்டத்தை நீங்க உங்க கைல எடுத்தது காவல்துறையை நீங்க அவமதிக்குற மாதிரி!” என்றார் நரைத்த தலை தாத்தா.

“சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமில்ல, சொந்தங்களுக்கு அப்பாற்பட்டும் தான் நம்ம நடவடிக்கை அமையனும்! நீங்க சுட்டதுல யாரோட உயிராது போயிருந்தா அது சிபிஐ-க்கே அவப்பெயர் உண்டுபண்ணிருக்கும், அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?” அசோக் சாரின் அருகே இருந்தவர் சொல்ல, விழியை மட்டும் ஒவ்வொருவரிடமும் உலவ விட்டுக்கொண்டிருந்தான் இனியன்.

“நாங்க இத்தனை கேள்வி கேட்குறோம், ஒரு கேள்விக்கு கூட உங்களால பதில் சொல்ல முடியலல?” இனியனை கேள்வி கணைகளால் மடக்கி விட்டதாய் எண்ணி, ஒருவர் மெருமிதமாய் சொல்ல, முணுக்கென்று சிரித்து விட்டான் இனியன். அனைவர் முகமும் அதிருப்தியை காட்ட, முனகலாய், “சாரி… சாரி…” என்ற இனியன், “கேள்வி கேட்டா பதில் சொல்ல இடைவெளி விடனும்! கேட்டுக்கிட்டே போனா, நான் எப்படி பதில் சொல்ல முடியும்?” என்றான் மிச்சம் இருந்த சிரிப்பின் சாயலோடு!

“இப்போ சொல்லுங்க, எதுக்காக உங்க பர்சனல் துப்பாக்கியை பிரயோகப்படுத்துனீங்க?” சற்று கடுமையாக வெளிவந்தது இக்கேள்வி. அதற்கேற்றபடி இனியன் முகமும் கடுமை பூசிவிட, “துப்பாக்கியை வச்சுருக்கிறதே பிரயோகப்படுத்தான்னு நினைக்குறேன்” என்றான்.

“அதற்க்கான அவசியம் என்ன? உங்களை காப்பாற்ற தான் போலிஸ் வந்துட்டாங்களே?” 

“அவங்க வந்து எங்களை காப்பாத்துவாங்கன்னு நாங்க காத்திருந்தா இந்நேரம் என் வீட்ல குறைஞ்சது  ரெண்டு பேராது மேலோகம் போயிருப்பாங்க!!” கடினப்பட்டு குரலடக்கி பேசினான்.

இனியன், “துப்பாக்கி என்னோட தற்காப்புக்கு! அந்த நேரத்துல என் தம்பி அங்க இல்லாம, உங்க கழுத்துல அவனுங்க கத்தியை வச்சுருந்தாலும், நான் இதே தான் செய்துருப்பேன்! சொந்தக்காரன், தெரிஞ்சவன், தெரியாதவன் இது எல்லாம் எனகில்ல! பாதுகாப்புக்கு கூட யூஸ் பண்ண முடியாதுன்னா இந்த துப்பாக்கி எனக்கெதுக்கு?” வைத்திருந்த பிஸ்டலை எடுத்து டேபிள் மீது வீசினான் இனியன். 

அவன் கோவம் கலந்த செயலில் அசோக் சர், “இனியன், டோன்ட் டூ லைக் திஸ்” என்றார் முதன்முறையாய் வாய்திறந்து.

“கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துருந்தா இந்த பதவியோட அருமை தெரியும், ஜஸ்ட் எக்சாம் பாஸ் பண்ணி ப்ரோமோஷன் வாங்குனவர் தானே!!” சம்பந்தமே இன்றி ஷீலா அவ்வாறு சொல்ல, அவரை உருத்து பார்த்த இனியன், “சிபாரிசுல உள்ள வந்தவங்களுக்கும், சின்சியரா படிச்சு பாஸாகி உள்ள வந்தவங்களுக்கும் என்னைக்குமே ஆகாது!” என்றான். அவன் தன்னைதான் சொல்கிறான் என புரிந்த ஷீலாவின் முகம் கருமை பூசியது. 

அங்கிருந்த அனைவரையும் பொதுவாய் நோக்கி, “என்னை கொலை செய்யும் நோக்கத்தோட வந்தவங்களை காவல்துறை இன்னும் கைது செய்யல! எதுக்காக என்னை தாக்க வந்தாங்கன்னு விசாரணை ஆரம்பிக்கல! ஆனா என்னையும் என்னை சார்ந்தவர்களையும் பாதுகாக்க, நான் துப்பாக்கி எடுத்தது தான் உங்களுக்கு இப்போ பிரச்சனை!? இருக்கட்டும்!! இது விஷயமா நான் யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க முடியாது! எத்தனை நாள் சஸ்பென்ஷன்னு சொல்லிட்டா, நான் ரொம்ப ப்ரீயா இருப்பேன்!!” அவன் சற்று திமிராகவே சொல்ல, அக்குழு தங்களுக்குள் விவாதித்தது.

பின்னர், “நீங்க செய்த தவறை  ஒப்புக்கொண்டதால, ஒரு மாதம் வரை உங்களை பணியிடைநீக்கம் செய்றோம்!  நீங்க விசாரணை செய்துக்கொண்டிருந்த அமைச்சர் கொலைவழக்கை சீனியர் ஆபிசர் ஷீலா இனிமே ஹேண்டில் பண்ணுவாங்க! கையெழுத்து போட்டு கொடுத்துட்டு நீங்க போகலாம்!” என்றார் அவர்களுள் தலைவர் போல் இருந்த ஒருவர்.

இனியன், “தேங்க்ஸ் சார்” என்றான் நிமிர்வாய். தன் கேபினுக்குள் புகுந்ததும் அவனை சூழ்ந்துக்கொண்டனர் நால்வர் படை.

ஐஷூ, “வாட் ஹேபன்ட் சார்?” 

இனியன், “ஒரு மாசம் சஸ்பென்சன்” என்றதும் அயர்ந்து போயினர் நால்வரும். அதை விட, இனி இந்த வழக்கில் ஷீலாவின் கீழ் அவர்கள் பணிபுரிய வேண்டும் என சொன்னதும், ‘ஐயோ’ என தலையில் கைவைத்து அமர்ந்தே விட்டனர். 

இனியன், “நம்ம ஏற்கனவே ரெடி பண்ணுன எவிடென்ஸ் இருக்கு! அதில்லாம சாட்சி ஒருத்தர் இருக்காரு! எல்லாம் சப்மிட் பண்ணுங்க, நடக்கிறது நடக்கட்டும்!” என்றவன், தன் பொருட்களை சேகரித்துக்கொண்டு கிளம்பினான். செல்லும்முன், “அந்த சாமியாரை விசாரிக்க சொன்னேனே! என்னாச்சு?” என கேட்க, “அந்த ஆளை எங்க தேடியும் கண்டுபிடிக்க முடில சர்! அவனை பத்தின டீடெய்ல்ஸ் யாருக்கும் தெரியல! எனக்கென்னவோ அவன் ஒரு டுபாக்கூரா இருப்பானோன்னு தோணுது!!” என்றான் சிவா.

“அக்யூஸ்ட் லிஸ்ட்ல செக் பண்ண சொன்னேனே!!” மீண்டும் இனியன் கேட்க, “நம்ம ஸ்டேட் அக்யூஸ்ட் லிஸ்ட் புல்லா செக் பண்ணியாச்சு சர்! ஒன்னும் கிடைக்கல! இனி, நம்ம ஜெயில்ல இருந்த அதர் ஸ்டேட் ஆளுங்க லிஸ்ட் தான் பார்க்கணும்!!” என்றான் மதன். இனியன் துரிதமாக அதை செயல்படுத்தும்படி சொல்லிவிட்டு சென்றான்.

அங்கே நிலாவின் வீட்டில் குருநாதனை தவிர மற்ற அனைவரும் ஆஜராகியிருந்தனர். முக்கியமான வேலை இருந்ததால் குருநாதன் ஆபிஸ் சென்றுவிட நிவேதா இரவு வருவதாய் சொல்லி அங்கேயே தங்கிவிட்டாள்.

தேவி, “ரொம்ப நாளுக்கு அப்புறம் நிம்மதியா இருக்க மாறி இருக்கு!!” மனதார சொன்னதும், அதியன், “ஐயோ அத்தே, நீங்க ஒவ்வொரு முறை இப்படி சொல்லும்போதும் சொல்லிவச்சமாறி ஏதாது நடந்து தொலைக்குது!! அதனால கம்முன்னு இருங்க” என்றிட வேணி உட்பட அனைவருமே தேவியை பரிகாசித்து சிரித்தனர். கோகுல் தன் இடக்கையால் அதியனுக்கு ஹை-பை கொடுத்து தேவியின் கையால் நன்றாக அடிவாங்கிக்கொண்டான்.

சிரிப்பலை ஓய்ந்ததும் அதியனே, “எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணி பண்ணனும் ஓகேன்னு! ஒருத்தன் சொல்லிட்டு வீட்டை விட்டு போனான்!! இப்போ அவன் வந்து கேட்டா நம்ம எந்த பிளான்ன சொல்றது?” இனியன் அவர்களிடம் விட்டு சென்ற பொறுப்பை நினைவு படுத்த, “நைட்டுக்கு பருப்பு அடையும் தேங்கா சட்னியும் செய்ய போறோமே, அந்த பிளான்ன சொல்லு!!!” என அசராமல் சொல்லி சிரிக்க வைத்தார் வேணி.

“இவ்ளோ பெரிய ஆபீசரா இருக்க உன் அண்ணனுக்கு எந்த பொறுப்பை யாருகிட்ட கொடுக்கணும்ன்னு தெரியல பாரேன்!!” வடிவேலு மொடுலேஷனில் அதியன் விளையாட்டாய் கேட்ட கேள்விக்கு அதே பாணியில் பதில் சொன்னான் கோகுல்.   இம்முறை நிலாவிடம் இருந்து வாங்கி கட்டிக்கொண்டான் அடிகளை!

நிலா, “என் புருஷன் எல்லாத்தையும் பார்த்துக்குவாருங்குற தில்லுல தானே இப்படி எல்லோரும் விளையாடிட்டு இருக்கீங்க? யாராது அவருக்கு உதவி செய்யுறீங்களா?” கணவனுக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு சென்றாள்.

கோகுல், “பின்ன, ஹீரோன்னா சும்மாவா!?” என்றான் கிண்டலாய்!! அதியனும் அவனோடு சேர்ந்துக்கொண்டு நிலாவை வம்பிழுத்துக்கொண்டிருக்க, தேவிக்கும் வேணிக்கும் அவர்களை வேடிக்கை பார்ப்பதே நிம்மதியாய் இருந்தது. 

அவர்களின் சத்தம் வெளி வரை கேட்க, உள்ளே வந்த இனியன், “எதுக்கு இவ்ளோ சத்தம்?” என்று அவர்களுக்கு மேல் சத்தம் போட்டதும், அவர்களின் இறைச்சல் ஒலி இறங்கியது. ஆளாளுக்கு மாற்றி மாற்றி புகார் பத்திரம் வாசித்தனர். பொறுமையை இழுத்து பிடித்த இனியன், “எனக்கு கொஞ்சம் தண்ணீ கொண்டு வா” என நிலாவை உள்ளே அனுப்பினான். 

அதியனை கடுமையாய் பார்த்து, “விளையாடுற நேரமா இது அதியா?” என்றான். ஒற்றை வரியானாலும் தன் அண்ணனின் எண்ணவோட்டத்தை சட்டென கிரகித்துகொள்ளும் அதியனுக்கு இனியன் கேட்டதும், “ஆளுக்கொரு மூலைல உம்முன்னு மூஞ்ச வச்சுக்கிட்டு உட்காந்தா மட்டும் எல்லாம் நல்லதா நடந்துடுமா? அப்டின்னா சொல்லு, சோறு தண்ணீ இல்லாம நானும் கோகுலும் உட்காந்துருக்கோம்!!” தன் பேச்சில் கோகுலையும் சேர்த்துக்கொண்டு சொன்னான் அதியன்.

இனியன் சலிப்போடு ‘உச்சு’கொட்ட, “விசாரணை கமிஷன் சிறப்பா நடந்துருக்கும் போலயே, உன் மூஞ்சியே பிரகாசமா இருக்கு!!!” இனியனின் தோளில் கைபோட்டு சிரித்தான் அதியன்.

வேணி, “அவனே இப்போதான் சோர்ந்து போய் வந்துருக்கான்! மேற்கொண்டு பேச்சு வழக்காம சும்மா இருடா” என்றதும், நிலா தண்ணீரோடு வந்தாள். ஜில்லென்று தண்ணீர் குடலை குளிர்வித்ததும், சௌகர்யமாய் சோபாவில் சாய்ந்து அமர்ந்துகொண்ட இனியனை மறுபடியும் துருவினான் அதியன். 

“அங்க என்ன ஆச்சுன்னு சொல்லு இனியா?”

“ப்ச்!! அதை ஏன்டா கேக்குற?” நொந்துபோன தொனியில் ஆரம்பித்த இனியன், “பொண்ண கைய பிடிச்சு இழுத்தியா? ரேஞ்சுக்கு கேட்ட ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு காதுல ‘ஒய் ப்ளட் சேம் ப்ளட்’ வர வச்சுட்டானுங்க” என்று முடித்தான். 

வேணி, “அப்புறம்?”

இனியன், “அப்புறம் என்ன? ஒரு மாசம் சஸ்பென்ஷன், கேஸு ஷீலா கைக்கு மாறுது!!” 

கோகுல் ஆரவாரமாய், “நிலா இந்த வாரத்துக்கு கன்டென்ட் கிடைச்சாச்சு!! நோட் பண்ணிக்கோ! ‘இனியனின் கையை பிடித்து இழுத்த ஷீலா! கேஸு போனாலும் பீஸு கிடைக்குமா? சிபிஐ ஆவல்!!!! தலைப்பு செய்தி போல அவன் சொல்லி முடித்த கணம், அருகில் இருந்த குட்டி தலையணையை எடுத்து அவன்மீது வேகமாய் வீசினான் இனியன். 

“அடிபட்டு இருக்கியேன்னு சும்மா விடுறேன்!! இல்லனா மண்டையை பொலந்துருப்பேன் பார்த்துக்க! சொந்த வீட்லயே கன்டென்ட் திருடுற! பக்கி!!” இனியன் திட்டினான் மற்றவர்கள் திட்டவில்லை அவ்வளவே வித்தியாசம்!!

“வர திங்கள் கேஸ் கோர்டுக்கு வரபோது!! என்ன செய்யலாம்ன்னு இருக்க அத்தூ?” நிலா விஷயத்திற்கு வந்தாள். 

“சாலிடான எவிடென்ஸ் எதுவும் இல்லாதமாறி பக்காவா ப்ளான் போட்டு பண்ணிருக்கான் ஜெயானந்தன். ஆதாரம் இல்லன்னாலும் ஒரு சாட்சி இருக்கு!” என்று இனியன் சொல்ல, “அந்த குடிகாரன் ஒருத்தன் இருந்தானே அவனா?” என்றான் கோகுல்.

மறுப்பாய் தலையசைத்த இனியன், “அமைச்சரோட குடும்ப வக்கீல் ஷங்கர்!” என்றான்.

“கொலை நடக்குறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி சதாசிவத்தோட பேருல இருக்க அத்தனை சொத்துகளையும் ஜெயானந்தன் தன்னோட பேருல மாத்தி எழுத சொல்லி ஷங்கரை மிரட்டிருக்கான். அவர் அவன் மிரட்டலுக்கு பயந்து சொன்னதை செஞ்சுருக்காரு! கொலை நடந்த அன்னைக்கு ராத்திரி ஷங்கருக்கு போன் பண்ண ஜெயானந்தன், சொத்து பத்திரங்களோட உடனே வீட்டுக்கு வர சொல்லிருக்கான்! அவர் போனபோது, எல்லாரும் தூக்குல தொங்கிட்டு இருந்துருக்காங்க!   

போலியான கையெழுத்து போட ஆட்கள் கிடைச்சாலும், கைரேகையை போலியா வைக்க முடியாது இல்லையா? அதனால, இறந்து போனவர்களோட கட்டைவிரல் ரேகையை பதிவு எடுத்துகிட்டு அங்கிருந்து எல்லோரும் திரும்பிட்டாங்க!!” 

வேணி, “சொந்த குடும்பத்தையே அழிச்சுட்டு இவன் என்னத்துக்கு வாழ போறான், ச்சை!!”

நிவேதா, “அப்போ விரல்ல மை அச்சு இருந்துருக்குமே? போலிஸ் அதை கவனிக்கலையா?” என்றாள்.

இனியன், “இல்ல, தடயம் இல்லாதபடி எல்லாத்தையும் அழிச்சுட்டு தான் போயிருக்காங்க!!”

நிலா, “அந்த ஜெயானந்தன், கொலை நடந்தப்போ டெல்லில இருந்ததா சொல்லிருக்கான், ஆனா அவன் சென்னைல தான் இருந்தான்னு ப்ரூப் பண்ண முடியாதா?” 

இனியன், “சதாசிவத்தோட வீட்ல உடைஞ்சு கிடந்த பிளவர் கேஸ்ல ஜெயானந்தனோட கைரேகை தெளிவா பதிவாகிருக்கு, அதுக்கான ரிபோர்ட் என்கிட்ட இருக்கு!! அது இல்லாம, அன்னைக்கு ராத்திரி ஜெயானந்தன் தன்னோட கார்ல அடையார் சிக்னல க்ரோஸ் பண்ணிக்ருகான்! சிக்னல் கேமரால அது தெளிவா பதிவாகிருக்கு, இதுமட்டும் தான் இப்போதைக்கு எவிடென்ஸ்!!!” என்றான்.

அதியன், “இப்போதைக்கு நம்மகிட்ட இருக்க ஸ்ட்ராங் ப்ரூப் அந்த ஷங்கர் தான்! நம்ம கஸ்டடில இருக்க அவர சேஃபா கோர்ட்ல ஒப்படைக்கணும்!” என்றிட அப்போதைய நிலைமை தீவிர பாவம் பூசியது. 

***திங்கட்கிழமை காலை யாருக்கு சாதகமாய் விடிந்தது என்ற புதிரில் விடை தேட, கோர்டுக்கு கிளம்பினர். அதிகாரியாய் இல்லாமல், பார்வையாளனாய் சென்றான் இனியன். அதியன் இறுதிநேரத்தில் அவர்கள் தரப்பின் முக்கிய சாட்சியான லாயர் ஷங்கரை அழைத்து வருவதாக சொல்லிவிட, ஜெயானந்தனின் வருகைக்காக காத்திருந்தது நீதிமன்றம்.

ஷீலா இனியனை கண்டுகொள்ளாமல் திமிராய் அமர்ந்திருந்தார். இனியனின் நால்வர் படை இப்போது ஷீலாவின் பின்னால் செயலற்று நின்றிருந்தது.

ஜெயானந்தன் தனக்கே உரிய ஆர்ப்பாட்டத்துடன், வெள்ளைவேட்டி ஜால்றாக்களோடு வந்து சேர, அரசு தரப்பு வக்கீல் தன் வாதத்தை துடங்கி வைத்தார். 

“இரு மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் திரு.சதாசிவம் அவர்களின் இறப்பு வழக்கு சிபிஐ விசாரணைக்கு கைமாறியிருந்த நிலையில் அவரது இறப்பு தற்கொலை அல்ல, ‘கொலை’ என்று சந்தேகித்தனர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணை முடிவில் அமைச்சரையும் அவர் குடும்பத்தையும் கொலை செய்தது அவரது சகோதரர் ஜெயானந்தன் என்று புலனாய்வு துறை அறிக்கை சமர்பித்துள்ளது!” 

நீதிபதி, “சொந்த தம்பி மேலேயே புகாரா? ஆதாரங்கள் எங்க?” என்றார். இனியன் மனது உலன்றுக்கொண்டிருன்தது. ‘ஏதோ சரியில்லாத உணர்வு’. ஜெயானந்தனின் அசால்ட்டும், இலகுத்தன்மையும் இதில் ஏதோ அவன் வேலை ஒளிந்திருப்பதை சொல்லாமல் சொல்லியது.

சமர்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களை பார்வையிட்ட நீதிபதியின் முகத்தில் முதலில் குழப்பமும் பின்பு கோவமும் போட்டிபோட்டது. 

கடுமையான குரலில், “இந்த ரிபோர்டை சப்மிட் செய்த முட்டாள் யார்?” என கத்தினார்.    

“புலனாய்வு அதிகாரி திருமதி.ஷீலாவின் தலைமையிலான குழு” அரசுதரப்பு வக்கீல் சொல்ல, “என்ன ஒரு பொறுப்பில்லாததனம்? கோர்ட்டுல சமர்பிக்கப்படும் அறிக்கை முழுதும் சாயம் படிந்துருக்கு, இதுதான் நீங்க நீதிமன்றத்துக்கும் அரசுக்கும் செலுத்துற மரியாதையா?” என்று குரல் எழுப்பினார் நீதிபதி.

சிவாவும், மதனும் திடுக்கிட்டு போக, “நீங்கதானே சப்மிட் பண்ணீங்க?” என்று முறைத்தாள் ஐஷூ! 

“எப்டி நடந்துச்சுன்னு தெரியலையே?” மதன் கையை விரிக்க, முஸ்தபா, “நம்ம சிஸ்டம்ல தான் இருக்கு, மறுபடியும் போய் எடுத்து வாங்க சீக்கிரம்” என அவர்களை அனுப்பி வைத்தான்.

“கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பது தான் பொறுப்புள்ள சிபிஐ-யின் நோக்கமா?” மேலும் அவர் கேள்வி சூடாய் விழ, ஷீலா எழுந்தார்.

“எதிர்பாராத இந்த தவறுதலுக்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்” 

நீதிபதி, “உங்க மன்னிப்பை இப்போது ஆதாரமாய் எடுத்துக்கொள்ள முடியுமா?” கோவமாய் கேட்க, “ஆவணங்கள் இல்லையெனினும், சாட்சி உண்டு” என்றார் ஷீலா. 

மூன்று முறை ‘ஷங்கர்’ என சொல்லப்பட்டதும், அதியன் தான் பத்திரமாய் அழைத்து வந்த அவர்களது சாட்சியை விசாரணை கூண்டில் நிறுத்தினான். 

“நீங்கள் தான் ஷங்கரா?” 

“ஆமாம்!! நான் அமைச்சர் சதாசிவத்தோட குடும்ப வக்கீல்!!”  

“நடந்ததை சொல்லலாம்” பேச அனுமதி கிடைத்தது.

ஷங்கர் அறுவது வயதை கடந்தவர். நடையிலும் பேச்சிலும் வயதை தாண்டிய சிறு தடுமாற்றம் இயல்பிலேயே அவருக்கு இருக்கும் எனினும், இப்போது அது அதிகமாக இருப்பது போல தோன்றியது இனியனுக்கு! அடித்துக்கொள்ளும் அவன் மனது அடித்து சொன்னது இன்று அவனுக்கான நாள் இல்லை என்று!! எது வந்தாலும் அயர்ந்து போகாமல் எதிர்கொள்ளும் முடிவோடு இருந்தான்.  

“சதாசிவம் சார் ஒருநாள் எல்லா சொத்தையும் அவர் தம்பி ஜெயானந்தன் பேருக்கு மாற்ற சொன்னாரு. குடும்பத்தோட கையெழுத்து போட்டு கொடுத்துட்டு அதை ரெஜிஸ்டர் பண்ணவும் சொன்னாரு! அவர் கேட்டபடி செஞ்சுட்டு அவரை பார்க்க போன அன்னைக்கு தான் அவர் குடும்பத்தோட தற்கொலை செஞ்சுகிட்டாருன்னு தெரிஞ்சுது!!” நிமிர்ந்தும் பாராமல் குனிந்தே பதில் சொன்னார்.   

“இதுதான் உங்கள் சாட்சியா?” நீதிபதி எரிச்சலுடன் மொழிய, ஷீலா, “நாங்க விசாரிச்சபோது  அவர் சொன்னது வேறு, இப்போ அவர் பேசுறது வேறு! எதற்க்காக மாற்றி பேசுறாருன்னு தெரியல” என சொல்ல, ஒரு க்ளாஸ் தண்ணீரை முழுக்க குடித்தார் நீதிபதி.

பின்னே, “எந்தவித காரணமும் இன்றி அமைச்சர் சதாசிவம் தன் குடும்பத்தினரோடு தற்கொலை செய்துக்கொண்ட வழக்கை திறம்பட விசாரித்து உண்மைநிலையை வெளிகொனரவே நீதிமன்றம், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி பரிந்துரை செய்தது. ஆனால் பொறுப்பற்ற தலைமையும், அதன் குழுவும், நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்ததோடு, சமூகத்தில் பெரும் மதிப்பில் இருக்கும் திரு.ஜெயானந்தனின் மீதும் வீண் பழி சுமத்தி அவருக்கு அவபெயரை உண்டு பண்ண முயற்சித்துள்ளது.

புலனாய்வு துறையின் பொறுபற்றதன்மையையும் மெத்தனப்போக்கையும் இந்நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது.  எதிர்க்காலத்தில் இதுபோன்ற நிலை தொடரக்கூடாது என்ற எச்சரிக்கையும் சிபிஐ-க்கு நீதிமன்றம் அளிக்கிறது. 

அமைச்சரது இறப்பின் மூல காரணத்தை கண்டறிய வேண்டி அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு தன் கடமையில் இருந்து தவறியதோடு, சம்பந்தமில்லாத ஒரு தனிநபரையும் காரணமேயின்றி அலைகழித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட திரு.ஜெயானந்தனை எந்தவித விசாரணையும் இன்றி இவ்வழக்கில் இருந்து விடுவிப்பதோடு, இந்த வழக்கை எந்தவித மேல்முறையீடும் இன்றி இந்நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.” நீதிபதி தன் முடிவை அறிவித்ததும் ஜெயானந்தனின் ஆதரவாளர்கள் அங்கேயே, “வருங்கால அமைச்சர் வாழ்க, ஜெய்க்க பொறந்த ஜெயானந்தன் வாழ்க” என ஆர்ப்பரிக்க தொடங்கினர்.

வெளியே பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் பேட்டி எடுக்க காத்திருக்க, வெளியே வந்த ஜெயானந்தன், “தர்மமே வெல்லும்” என்ற ஒரே வரியில் தன் பேட்டியை முடித்துவிட்டார்.  நீதிமன்ற உள்வளாகத்தை விட்டு வெளியே வந்தும், அவர்கள் சத்தம் அதிகம் ஆனதே ஒழிய, குறையவில்லை. இனியன் இதை ஒருவாறாய் எதிர்பார்த்திருந்தாலும், ‘அடுத்து என்ன?’ என்பது கேள்விக்குறியாய் அவன் மனதை வளைத்தது. அதியன் பொய் சாட்சி சொல்லிய ஷங்கரை நேருக்கு நேர்  நிறுத்தி கேள்வி கேட்க வேண்டி அவரை தேட, அவரோ ஜெயானந்தனின் பின்னால் தொங்கிய தலையோடு நின்றுக்கொண்டிருந்தார். 

அதியன், “அண்ணா, அந்த ஆளு இத்தனை நாளா நம்பவச்சு நம்மளை ஏமாத்தி அசிங்கபடுத்திட்டான்! அவன சும்மா விடக்கூடாது” அவன் கோவம் நியாயம் என்றாலும், அப்போதைய சூழலில் அது வீண் என்று இனியன் அவனை அடக்கினான். 

“அவர் என்ன செய்வார்? மிரட்டலுக்கு பயந்தவர், விடு” இனியன் சொல்ல, ஆரவாரத்துடன் அவர்களை நெருங்கி வந்தான் ஜெயானந்தன்.

அதியன், “ஐயோ இவன் வேற நக்கலா பேசுவானே” சத்தமாகவே சலித்துக்கொண்டான்.

ஜெயானந்தன், “இன்னா இனியா? சிபிஐ வேலை போய்டுச்சாமே? புவ்வாக்கு என்ன செய்யுற?” நக்கலாய் கேட்க, அவன் ஆட்கள் கைதட்டி சிரித்தனர்.

“என்கிட்ட செக்யூரிட்டி வேலை காலியா இருக்கு, வேணுன்னா வரியா? ஹாஹா” சத்தம் போட்டு சிரிக்க, அங்கிருந்த பலரும் இவர்களை வேடிக்கை பார்த்தனர்.

“நீ போலீஸ்ன்னா நான் அரசியல் ரவுடிடா!! உன்னை விட என் மூளை கிரிமினலா தான் யோசிக்கும்!! நீ ஏற்பாடு பண்ண, உன்னோட பாதுகாப்புல இருந்த சாட்சியவே எனக்கு சாதகமா மாத்திட்டேன் பார்த்தியா!? அதான் ஜெயானந்தன்!!! ஹாஹா!! உன் பதவியை உன்னை வச்சே தூக்க முடிஞ்ச எனக்கு, உன் உயிரை எடுக்குறது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்ல, ஆனா நீ இருக்கணும்… என்னோட பதவியேர்ப்பு விழாவை நீ கண்ணார பார்க்கணும், நான் அமைச்சரா ஆள போறதை பார்க்கணும்! அதுக்கு பிறகு, உன்னை எப்படி கொல்றதுன்னு யோசிச்சு நான் ஒரு முடிவுக்கு வரேன்!!” என்று சொல்லி நகர்ந்தவன், மீண்டும் வேகமாய் அவன் அருகே வந்து, 

“அடிபட்ட பாம்பை எப்பவும் தப்ப விடக்கூடாதுன்னு சொல்லுவாங்க! ஒருமுறை அந்த தப்பை பண்ணிட்டேன்!! இனியும் பண்ண மாட்டேன்!! உன் பொண்டாட்டி யாருன்னு இப்பதான் கொஞ்ச நாள் முன்னாடி தெரிஞ்சுது!! அவ அப்பனை கொன்னப்போவே அவளையே கிள்ளி எரிஞ்சுருக்கணும்! தப்புதான்!! தப்பை சரி செஞ்சுக்குறேன்!!” இப்போது மீண்டும் ஆரவாரம் தொடங்கிட, தன் சொகுசு காரில் ஏறி சென்றார் ஜெயானந்தன்.   

அதியன், “என்ன அண்ணா இப்படி பேசிட்டு போறான் இந்தாளு” அவர் பேசியதில் மெலிதாய் விதிர்த்து போயிருந்தான்.

இனியன், “வில்லன்னா அப்டிதான் பேசணும்” இலகுவாய் சொன்ன இனியனை, ஜெயானந்தநனின் வார்த்தைகள் பாதிக்கவில்லை.

ஷீலாவை விட்டு இனியனிடம் வந்தனர் அவனது முன்னாள் குழு. 

சிவா, “சார், நாங்க ப்ரூப் சப்மிட் பண்ணும்போது எல்லாம் சரியா தான் இருந்துச்சு! இப்போ எப்படி கறை படிஞ்சுதுன்னு தெரியல, யாரோ வேணுன்னே பண்ணிருக்காங்க சார்” என்றான்.

இனியன் அவர்களின் பின் நின்ற ஷீலாவை கூர்மையாய் பார்த்து, “யாரோ வேணுன்னு தான் பண்ணிருக்காங்க” என்றான். அவன் பார்வை தன்னை அழுத்தமாய் குற்றம் சாட்டுவதை உணர்ந்த ஷீலா, நொடியும் நிற்காமல் அங்கிருந்து நழுவிவிட்டார்.

“நம்ம சிஸ்டம்ல இருந்த ரெக்கார்டையும் யாரோ அழுச்சுருகாங்க சார்!! ரெக்கவர் சாப்ட்வேர் போட்டு தான் இனி எடுக்கணும்!!” மதன் சோர்வாய் சொல்ல, “இட்ஸ் ஓகே, நீங்க வேலையை பாருங்க! நாங்க கிளம்புறோம்” என்றான் இனியன்.

வீட்டிக்கு வரும்வரை சகோதரர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஆளுக்கு ஒரு யோசனையில் இருந்தனர். உள்ளே எதிர்பட்ட இருவரையும் சோர்ந்த முகத்துடனே வரவேற்றனர். நேரலை ஒளிபரப்பில் வழக்கின் முடிவு தெரிவிக்கப்பட்டிருந்தது. நிலா இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, வேணியும் தேவியும் அமைதியாக இருந்தனர்.

அதியன் தான் முதலில் ஆரம்பித்தான். “அந்தாளு இப்படி நம்பவச்சு கழுத்தறுத்துட்டான்! ச்சை” மனம் கேளாமல் அவன் சொல்ல, “சாட்சி யார் பக்கம் இருக்குன்னு கூட கண்டுபுடிக்க முடியல, நீங்க எல்லாம் என்ன போலீசோ?” அவன் கோவத்தை கிளறுவதை போலவே பேசினாள் நிவேதா. 

“ஏய்! உன் வேலையை மட்டும் பாரு! வீட்டுல உட்காந்துகிட்டு நாட்டாமை செய்யுறது ஈசி” கடைசி வரியை முனகலாக சொன்னான் அதியன்.

நிவேதாவின் முகமும் கோவம் பூச, “நான் ஒன்னும் வெட்டியா வீட்டுல இருக்க ஆள் இல்ல, நீங்க போலிஸ்ன்னா, நான் லாயர்! எங்க சப்போர்ட் இல்லாம உங்க வேலை நடக்காது, மைன்ட் இட்” அவளும் சூடாகவே சொன்னாள்.

‘இப்போ இந்த பேச்சு தேவையா?’ என நினைத்தாள் நிலா. அதை மேலும் வளர விடாமல், “என்ன அத்தூ செய்யுறது இப்போ?” என்றாள்.

“ப்ச்!!” தலையை அழுந்த கோதியவன், “சிபிஐ-க்கு இது எவ்ளோ பெரிய தலையிறக்கம் தெரியுமா? இதுமாறி நடந்ததே இல்ல!! ப்ச்!!” என்றான் வருத்தமாய்!!

நிலா, “நம்ம என்ன செய்யுறதுன்னு இப்போ யோசி அத்தூ” அவன் அருகே அமர்ந்து மென்மையாய் அவள் சொல்ல, “கேஸ் முடிஞ்சுது இனி என்ன பண்ண முடியும்?” என்றான் அதியன்.

சற்றே யோசித்த இனியன், “அந்த கேஸ் போனா என்ன? புது கேஸ் போடுவோம்!” என்றான்.

வேணி, “புது கேஸா? யாரு போடுறது?” 

இனியன், “நம்ம நிலாகுட்டி தான்!!!” சற்றே உற்சாகமாய் சொன்னான்.

“நானா?” என கொஞ்சமே கொஞ்சம் தடுமாறிய நிலா, “என்னனு கேஸ் போடுறது?” என்றாள்.

இனியன், “ஹாஹா!! யாருக்கு தெரியும்? ஏதாது யோசிப்போம்!! நம்ம லாயர் கிட்ட டிஸ்கஸ் பண்ணுனா ஒரு ஐடியா கிடைக்கலாம்” என்றிட, அதியன், “யார்ன்னா நம்ம லாயர்?” என்றான் கேள்வியாய். 

“வேற யாரு? மிஸ்.நிவேதா எம்.ஏ பி.எல் தான்!!” சொன்னதும், “நானாஆஆஆஆஆ” என அதிர்ச்சியில் பூசணிக்காய் உள்ளே போகுமளவு வாயை பிளந்தாள் நிவேதா.    

Advertisement