Advertisement

*22*

ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா,

 மறுகணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்!!

நீ உறுதியானவன், என் உரிமையானவன், 

பசி ருசியை பகலிரவை பகிர்ந்துகொள்ளும் தலைவன்!

காலையில் கண் விழிக்கையில் உடல் அதிகமாய் அசதியுற்றதை போல் உணர்ந்தாள் நிலா. தலை சற்று பாரமாய் தோன்றியது. உடலில் சக்தியின்றி துவண்டு கிடப்பதை போல இருக்க, மெல்ல எழுந்து அமர எத்தனித்தாள். அவள் கரத்தை பற்றிக்கொண்டபடி தரையில் அமர்ந்து மெத்தையில் தலை மட்டும் வைத்து அப்படியே உறங்கி போயிருந்தான் இனியன். 

அவன் சிகையை உறக்கம் கலையா வண்ணம் ஆதூரமாய் கலைத்துவிட்டவள், குளியறைக்குள் புகுந்தாள். சூடான நீர் உடலில் படும்போது தொலைந்த புத்துணர்ச்சி மீண்டும் கிடைப்பதை போல இருந்தது. உடை மாற்றி வெளியே வரும்வரையிலும் அவன் உறக்கம் கலையவில்லை. இரவு வெகு நேரம் சென்று உறங்கியிருப்பான் போலும் என எண்ணிக்கொண்டாள். கதவை திறந்து வெளியே செல்கையில் ஒரு நொடி அப்படியே நின்றாள். 

தேவியும் வேணியும் அமர்ந்தவாக்கில் அப்படியே உறங்கியிருக்க, அதியன் பால்கனியின் கம்பி மீது சாய்ந்து கண்மூடியிருந்தான். தோள்பட்டையில் பெரிய கட்டுடன் சோபாவில் ஒரு பக்கமாய் அவன் ஆறடி உடலை குறுக்கி படுத்திருந்தான் கோகுல். குருநாதன் சேரில் சாய்ந்து டீப்பாயில் கால் நீட்டிகொண்டு அயர்ந்திருக்க, நிவேதா வாசல் கதவின் அருகே தரையில் படுத்திருந்தாள். 

‘என் ஒருத்திக்காக அக்கறைப்பட இத்தனை பேரா?’ தன் அன்னையை தாண்டி அங்கிருக்கும் ஒருவரும் தனக்கு ரத்த சொந்தமில்லை என்றபோது எதையும் எதிர்பாரா இவ்வன்பு கிடைக்க, தான் எத்தனை பேறு செய்திருக்க வேண்டும் என அந்நொடி பூரித்து போனாள்.  சத்தமெழுப்பாமல் அடுக்களைக்குள் சென்றவள் அனைவருக்கும் தேநீர் கலந்தாள். அதை சிறு சிறு கப்புகளில் மாற்றியவள், ட்ரேவில் அடுக்கும்போது அங்கே வந்தான் இனியன். 

“எதுக்கு நீ இதெல்லாம் செய்யுற? இன்னும் கொஞ்சம் தூங்கிருக்கலாம்ல?” உரிமையாய் கடிந்து கொண்ட கணவனை நெருங்கி தன் கைகளை மாலையாக்கி அவன் கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டவள், “இன்னும் உப்புமா பயம் தெளியலையா?” என்றாள் கண்சிமிட்டியபடி.

அவள் விளையாடுகிறாள் என தெரிந்ததும், அவள் இடையோடு அணைத்துக்கொண்டவன், “அவ்ளோ சீக்கிரம் பயம் போய்டுமா? மரண பயத்தையே காட்டிட்டியே!” என்று சிரிக்க, அவனை முறைக்க முயன்று தோற்று போனவள் அவள் தோள்களில் சாய்ந்து நிம்மதியாய் சிரித்தாள்.

பேச்சு சத்தத்தில் கண்விழித்த குருநாதன், மெல்லமாய், “இனியா?” என்று குரல் கொடுக்க, அவரிடம் சென்றவன், “சொல்லுங்க சார்” என்றான்.

“ஏதாது உதவி வேணும்ன்னா கேளு, நான் இப்போ கிளம்புறேன்” என்றார். இனியனுக்கு முன், “எதுக்கு இப்பவே கிளம்பனும்? அங்க வீட்ல வெட்டி முறிக்குற வேலை ஏதாது இருக்கா என்ன? ஆபிஸ்க்கு லேட்டா போய்க்கலாம்! முதல்ல ப்ரெஷ் பண்ணிட்டு வந்து டீ குடிங்க!” என்றாள் நிலா. 

இனியனும் அதை ஆமோதிப்பதை போல அமைதியாய் இருக்க, அவனுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில், “நிலா இப்படி உரிமையாய் பேசுறதை கேட்கவே மனசு நிறைஞ்சு போது! இதுவரைக்கும் யாரோ ஒருத்தர் மாறி தான் என்னை ட்ரீட் பண்ணிருக்கா!! சந்தோசமா இருக்குப்பா!!” என்றார்.

அவருக்கு தேவையானதை எடுத்து கொடுத்துவிட்டு ஹாலுக்கு வர, கோகுல் எழுந்து அமர்ந்திருந்தான். “வலி எப்டி இருக்கு? அதிகமா இருந்தா சொல்லு, டாக்டரை கூப்புடுறேன்!” இனியன் அவன் அருகே செல்ல, ‘வேண்டாம்’ என தலையசைத்தான் கோகுல். இரவு கேட்ட நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அவனிடம் மிச்சம் இருப்பதை உணர்ந்தான் இனியன். 

அவன் ரெப்ரெஷாக இனியன் உதவ, உறக்கம் கலைந்தான் அதியன். பால்கனியில் இருந்ததால் சூரியன் தன் கதிர்வீச்சுகளை அவன் முகத்தில் தெளித்து எழுப்பிவிட்டார். சோம்பல் முறித்து எழுந்து நின்றவனுக்கு, ஒரு புறமாய் சாய்ந்து கிடந்ததில் கழுத்து வலித்தது. அங்கேயே இருந்த வாஷ்பேசினில் முகம் கழுவிக்கொண்டு வீட்டிற்க்குள் வருகையில், “அதி….!!” என்ற நிலாவின் குரல் கேட்டு கிட்செனுக்குள் சென்றான். 

“சொல்லுங்க அண்ணி!” என்று வந்து நின்றவனை முறைத்தாள் நிலா. “எப்பவும் போல பேசேன்டா, சும்மா அண்ணி பன்னின்னு! என்னை தூர நிறுத்துறமாறி இருக்கு!” நிலா சொல்ல, “எனக்குமே கஷ்டமா தான் இருக்கு! உனக்குல்லாம் மரியாதை குடுக்க வேண்டியதா இருக்கேன்னு!!” தன் அண்ணன் மனைவியாய் இல்லாமல் சிறுப்பிராய தோழியிடம் வம்பு செய்தான் அதியன். 

அவன் அப்படி சொன்னதும் கோவம் வந்தது அவளுக்கு! அருகில் இருந்த கூடையை எடுத்து அவன் மீது வீசியவள், “உனக்கு நான் போட்ட டீயை குடுக்கலாம்ன்னு நினச்சேன்! இப்போ அதுவும் கட்! போய் வெங்காயம், தக்காளி வாங்கிட்டு வா!!” என்றாள் அண்ணியாய் மாறி உத்தரவிட்டு!

“தாயே, பெரிய நல்லது பண்ணிருக்க!! நான் நாயர் கடையில போயே டீ குடிச்சுகுறேன்!!” கூடையை தூக்கி போட்டு பிடித்தபடி வாசலருகே சென்றால், குறுக்கே தன் ஐந்தடி உடலை குறுக்கிக்கொண்டு நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள் நிவேதா!

‘இப்படி படுத்துருக்காங்களே! கதவை எப்படி திறக்க முடியும்!?’ யோசனையோடு அவன் நிற்க, அந்நேரம் மெதுவாய் மறுபக்கம் திரும்பி படுத்தாள் நிவேதா.

‘வேற வழி இல்ல, எழுப்பிட வேண்டியது தான்!’ 

அவள் அருகே அமர்ந்து, “ஏங்க? கொஞ்சம் எழுந்துக்கோங்களேன்!” அதியன் பேச்சு அவளை தீண்டவில்லை.

அவள் காதருகே மெதுவாய் கைத்தட்டி, “ஹலோ, மேடம்? எழுந்துகோங்க!!” என்றான். அதற்க்கும் பதில்வினை இல்லை!!

‘சரியான கும்பகர்ணியா இருப்பா போலயே’ நொந்தவன், தட்டியே எழுப்புவோம் என முடிவு செய்து அவள் கையை தொட்டு இருமுறை தட்ட, மெலிதாய் முண்டியவள், “இன்னும் டூ மினிட்ஸ்ப்பா” என்றதோடு அவன் கையை இழுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள். 

அதியனுக்கு உட்சிமுடி நட்டுக்கொள்ளும் அளவுக்கு உடல் புல்லரித்து போனது. அவள் கன்னத்தில் சிக்கிக்கொண்ட அவன் கையை வெளியே எடுக்க முடியாமல் அவஸ்தையில் நெளிந்தான். 

‘கடவுளே, இதை யாராது பார்த்தா என்ன நினைப்பாங்க?’ பதட்டத்துடன், “ஏங்க, எழுந்துரிங்க! இது உங்க வீடும் இல்ல, நான் உங்க அப்பாவும் இல்ல!!” என்றான் சற்றே குரல் உயர்த்தி. அவன் சத்தத்தில் மெல்ல விழித்தவள், அவன் கையை விலக்கிவிட்டு கண்ணை கசக்கினாள். உடலை முறுக்கி நெட்டி எடுத்துவிட்டு நன்றாய் கண் திறக்க, அவள் முன்னே அவஸ்தையான முகத்துடன் இருக்கும் அதியனை கண்டதும், திடுக்கென நொடியில் எழுந்து அமர்ந்தாள் நிவேதா. அவள் மனது ‘திக் திக்’கென அடித்துகொண்டது. 

“எ…துக்..கு என் பக்கத்துல இருக்..கீங்க?” வக்கீலுக்கே வார்த்தை திக்கியது.

“ஆங்!! வேண்டுதல்!!!” கடுப்புடன் மொழிந்த அதியன், “நகரும்மா! கதவை திறக்கனும்!!” என்றான்.

‘அதை கொஞ்சம் சிரிச்சுட்டே சொன்னாதான் என்னவாம்! இப்படி முறைக்குறான்!!’ உள்ளுக்குள் திட்டிக்கொண்டே அவனுக்கு வழிவிட்டாள் நிவேதா.

வேணியும் தேவியும் எழுந்துகொண்டதும்  காலை உணவு துரிதமாய் தயாரிக்கப்பட, ஒன்றாய் அமர்ந்து உணவு வேளையை கடந்தனர். யாரும் யாரோடும் மெத்த பேசிக்கொள்ளவில்லை. தட்டில் வைத்ததை வீண் செய்ய வேண்டாம் என்ற நோக்கத்துடனே தண்ணீரை குடித்து உணவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர். பின், மௌனமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்துக்கொள்ள, நிலா பேச்சை தொடங்கினாள்.

“நேத்து ரொம்ப ரூடா பீகேவ் பண்ணிட்டேன்னு நினைக்குறேன்! எல்லாரும் பயந்துருப்பீங்க! ரொம்ப சாரி!!” என்றாள் இலகுவான முகத்துடன். மறுத்து சிலர் பேச முற்பட, கை நீட்டி தடுத்தவள், “எனக்கு ஆறுதலோ, சமாதானமோ தேவையில்லை இப்போ! ஐயம் ஆல்ரைட்!! எனக்கு இப்போ கொஞ்சம் பேசணும்! ப்ளீஸ்” என்றதும் அவள் பேசபோவதை கேட்க தயாராகினர். 

நிலா, “எல்லா பொண்ணுங்களுக்குமே தன்னோட அப்பாதான் ரோல்மாடல், ஹீரோ, சூப்பர்மேன் எல்லாம்! என்னோட அப்பாவும் எனக்கு சூப்பர்ஹீரோ தான்! தப்பு செய்யுற ஒருத்தன் எவ்ளோ பெரிய உயரத்துல இருந்தாலும், நம்மகிட்ட உண்மை இருக்கும் பட்சத்துல அவனை பார்த்து பயப்படாம எதிர்த்து நிக்கணும்ன்னு சொல்லி குடுத்தவரு! அதேபோல வாழ்ந்தும் காட்டுனவரு! 

அவரோட இழப்பு எனக்கு பெருசுன்னாலும், அவர் இறப்புக்கு நியாயம் கிடைக்காம போனது என்னால ஜீரணிக்கவே முடியாத ஒரு விஷயம்! பல ராத்திரி தூங்காம இருந்துருக்கேன்! நான் ஒரு பையனா இருந்துருந்தா அவனுங்க கால்ல விழுந்து கெஞ்சுன நேரத்துக்கு அவனுங்களை அடிச்சு போட்டு என் அப்பாவை காப்பாத்திருக்கலாமோன்னு தோணும்… சில நேரம், கொலை செஞ்சவங்களை தேடி கொன்னுடலாமான்னு தோணும்! ஆனா நான் பொண்ணா போயிட்டேனே! என்னால அழுறதை தவிர எதையும் செய்ய முடியாதுன்னு இந்த சமூகம் சொல்லி குடுத்துச்சு! என் அம்மாகூட என்னை பைத்தியம்ன்னு தான் நினைச்சாங்க, என் வார்த்தையை நம்பல!!”

“எல்லா பொண்ணுங்களுக்கும் வரபோற புருஷன் அவங்க அப்பாமாறி இருக்கனும்ன்னு ஒரு ஆசை இருக்கும், எல்லாருக்கும் அப்டி அமையாது! ஆனா அந்த விஷயத்துல நான் ரொம்ப குடுத்து வச்சவ! நான் ரொம்ப நம்பிக்கை வச்ச என்னோட இனியன், ஒரு இக்கட்டான நேரத்துல என்கூட இல்லாம போனது என்னை ரொம்ப பாதிச்சது, சாட்சி சொல்ல யாரும் இல்லாம நான் துடிச்சுட்டு இருந்தப்போ இனியன் என்னோட இருந்துருந்தா நான் ஏன் அடுத்தவங்ககிட்ட போய் கெஞ்சனும்ன்னு அவன்மேல கோவம்!!

அவனும் என் அப்பாவோட பாதுகாப்ப்புக்காக தான் அவனால முடிஞ்சதை செய்துருக்கான்னு தெரிஞ்சப்போ குறைய ஆரம்பிச்ச கோவம், என்னை ஒரு வருஷம் வரைக்கும் அவன் பார்க்க வராம இருந்ததுல அதிகமாகிடுச்சு! ஒருவேள நான் பைத்தியம்ன்னு முடிவு பண்ணிட்டு தான் அவன் வரலையோன்னு நினைச்சுட்டேன்!!” அதை சொல்லும்போது அவள் கண்கள் கலங்க,  கலங்கிபோனான் இனியன்.        

“மூணு மாச ட்ரீட்மென்ட்ல நிஜமாவே பைத்தியம் பிடிச்சுடுமோன்னு பயப்பட வச்சுட்டாங்க! ஒருவழியா அங்கிருந்து வெளில வந்தா என்னை சந்தேகக்கண்னோடவே பார்க்குற அக்கம்பக்கத்து ஆளுங்க, என்ன செஞ்சாலும் என்னையே கவனிச்சுட்டு இருக்க என் அம்மான்னு நான் ரொம்ப நொந்துட்டேன்! காலேஜ்ல லேட் என்ட்ரி! யார்கூடவும் ஒட்ட முடில! யார் என்கிட்ட பேசுனாலும் கடுப்பா இருக்கும்! இனியன் வருவானா பேசுவானான்னு எதிர்பார்த்தே எனக்குள்ள இறுகி போயிட்டேன்!!

அப்போதான் கோகுல் கிடைச்சான்! எட்டி எட்டி உதைச்சாலும் என்னையே தான் சுத்தி வருவான்! பேசுனாலே எரிஞ்சி விழுவேன், அவன் முகமே சுண்டி போய்டும், ஆனாலும் எல்லாத்தையும் மறந்துட்டு உடனே சிரிச்ச முகமா என்கூட பேசுவான்! அவன் மட்டும்தான் அப்போதைக்கு எனக்கு இருந்த ஆறுதல். என்னை உயிர்ப்பா வச்சுருந்ததே அவனோட நட்பு மட்டும் தான்!!!” கோகுல் கண்மூடி மனதை ‘அழுது விடாதே’ என்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.  

“அப்படியே ஒரு வருஷம் போச்சு!! திடீர்ன்னு ஒருநாள் காலேஜ் வாசல்ல இனியனை பார்த்தேன்! அவனை பார்த்த பின்னாடி நெஞ்சுக்கூடு அத்தனை வேகமாய் துடிச்சுது! துடிப்பே நின்னுமோன்னு பயம் வந்துடுச்சு!! என்னால அவன்கிட்ட போகவே முடில!! முழுசா ஒரு வருஷத்துக்கு பின்னாடி பார்க்குறேன்! ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டான்!! முகம் முழுக்க தாடி, உடம்பே மெலிஞ்சு, கண்ணை சுத்தி கருவளையம் வந்து……!!! என் கண்ணுலையே இருக்கு அந்த உருவம்!!” என்ற நிலா இனியனை பார்த்து, “சுருக்கமா சொல்லணுனா, பஞ்சத்துல அடிபட்ட பரதேசி மாறி இருந்தான்!!” என்றிட, 

அந்நிலையிலும் அதியன் கோகுல் நிவேதாவுக்கு சிரிப்பு வந்தது. இனியன் அவளை முறைத்துக்கொண்டிருக்க, “என்னால அவனை அப்டி பார்க்கவே முடில, என் கண்ணை பார்த்து பேசுற ஆளு, என்கிட்ட நிக்குறதுக்கு கூட அவ்ளோ தயங்குனான்! எனக்கு நல்லா புரிஞ்சுது, குற்றவுணர்ச்சி தான் அவன் இவ்ளோ தடுமாறுறதுக்கு காரணம்ன்னு! என்னால அவன்கிட்ட எதுமே பேசமுடில, ஏன்னா அவன் இருந்த கோலம் அப்டி!! ரொம்ப நொந்துபோயிருக்கான்னு தெரிஞ்சுது!! அதுக்காக என் மனசை என்னால மாத்திக்க முடில!!

‘நம்ம ஒருத்தரை ஒருத்தர் விரும்புனது உண்மையா இருந்தா நானா உன்னை தேடி வரவரைக்கும் நீ என் மூஞ்சிலையே முழிக்காதன்னு சொல்லிட்டேன்!!’ அவனும் மறுபேச்சில்லாம போய்ட்டான்!!” என்று நிறுத்த, “இதுமட்டுமா சொன்ன? அதையும் சொல்லு!” என எடுத்துகொடுத்தான் இனியன்.

மென்னகையோடு, “தாடியோட உன் மூஞ்சி பாக்க சகிக்கல, அடுத்த முறை உன்னை நான் பார்க்குறப்போ இப்படி நீ இருக்க கூடாதுன்னு சொன்னேன்! அதுல இருந்து சார் தாடியே வைக்கிறது இல்ல! பத்து வருஷம் கழிச்சு பார்க்கும்போது, சிங்கம் சூர்யா மாறி சிக்ஸ் பேக்கோட நிக்குறான், பார்த்ததுமே நான் பிளாட் ஆகிட்டேன்!!” வெட்கம் எட்டிப்பார்த்தது. 

இதெல்லாம் அனைவருக்கும் புதிய கதை என்பதால் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்தனர். 

“கல்யாணபேச்சை அம்மா எடுக்கும்போதெல்லாம் பிடிவாதமா வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருந்தேன்! கடைசில தற்கொலை ப்ளாக்மெயில்ன்னு காமெடி பண்ண ஸ்டார்ட் பண்ணதும் வேற வழி இல்லாம சரின்னு சொல்லிட்டேன்!!! என்னதான் அவன்மேல கோவம் இருக்குறமாறி நான் வெளில காட்டிகிட்டாலும், அவன் பக்கத்துல இருக்கும்போது என்னால கோவத்தை இழுத்து பிடிச்சு வைக்க முடில!! கப்பல் கவிழ்ந்துடுச்சு!! அவ்ளோதான்!!” சிரிப்போடு சொல்லி முடித்தாள் இன்பநிலா.    

அவள் சிரிப்பை ஆசையாய் பார்த்த வேணி, “நீ இப்படி சிரிச்சுட்டே இரு கண்ணு! அதுவே போதும்!!” என்றார் கலங்கிய கண்களோடு!

“நிலா எவ்ளோ பிரகாசமா இருந்தாலும், அதோட மறுபக்கம் இருண்டு தான் இருக்கும்! என்னோட இருண்ட பக்கத்தை இனியும் நான் திரும்பி பார்க்க போறது இல்ல அத்தே! எனக்காக இத்தனை பேரு இருக்குறப்போ, போன ஒருத்தருக்காக உங்க எல்லாரையும் இனியும் நான் வதைக்க தயாரா இல்லை! இனி நான் எப்பவும் ‘இன்ப’நிலா தான்!!” என்று முடிக்கையில் எல்லாரும் சந்தோசமாய் ‘ஹேய்ய்ய்ய்’ என ஆர்பரித்தனர்.

இனியன் அவள் அருகே வந்து எதுவோ பேச முயல, அவன் உதட்டின் மீது விரல் வைத்தவள், “நீ என்னை எவ்ளோ காதலிக்குறன்னு நீ சொல்லிதான் எனக்கு தெரியணும்ன்னு இல்ல! அதை நீ நிரூபிக்கனுங்குற அவசியமும் இல்ல அத்தூ!! யாரோட காதல் பெருசுன்னு தராசு வச்சு அளக்க இது ஒன்னும் வியாபாரம் இல்ல! என் மனசுக்கு தெரியும், என் அத்தூ எனக்காக என்ன வேணாலும் செய்வான்னு!! அவனோட வாழ்கையே நான்தான்னு எனக்கு தெரியும்! நான் சொன்ன வார்த்தைக்காக பத்து வருஷம் என் கண்ணுல படாம ஒளிஞ்சு ஒளிஞ்சு என்னை நீ பார்க்குறப்போ எல்லாம் உன்கிட்ட ஓடி வந்து கட்டிக்கனும்ன்னு தோணும்… எனக்காக இத்தனை வருஷம் காத்திருந்த உன்னை விட எனக்கு யாரு அத்தூ பெஸ்ட்டா இருக்க முடியும்?” நிலா சொல்ல சந்தோஷத்தில் கண்கள் பனிக்க அவளை அணைத்துக்கொண்டான் இனியன். 

பெரியவர்கள் சந்தோசமாய் அவர்களை மனதாரா வாழ்த்த, அதியனும் கோகுலும் கோரசாய் ‘க்கும் க்கும்’ என கனைத்து அவர்களை தள்ளி போக செய்தனர்.

நிலா நினைவு வந்தவளாய், அதியனிடம் “ஏய், நீ எப்டி சரியா அந்த நேரம் சண்டைக்கு நடுல வந்த?” என்றதும், “ஷ்ஷப்பா!! இப்பவாது கேட்கணும்ன்னு தோனுச்சே!!” என்றான் அதியன். 

வேணி, “அட ஆமா!! நீ எங்க இருந்துடா ஜங்குன்னு குதிச்ச?” என்றார்.

“உங்ககிட்ட அண்ணன் கூப்புடுறான் சென்னைக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்புனேன்ல?” என்று அவன் இழுக்க, வேணி, “ஆமாம்” என்றார்.

“இங்க வந்ததும் அண்ணன் எனக்கொரு வேலை கொடுத்தாரு! அது என்னன்னா, ஜெயானந்தனை என் கண் பார்வைலையே வச்சுக்கணும், அவன் எங்க போனாலும் வந்தாலும் நான் அவனை பாலோ பண்ண்ணனும், அவன் நடவடிக்கைல தம்மாத்தூண்டு டவுட்டு வந்தாலும் அண்ணாகிட்ட சொல்லிடனும்!! இதெல்லாம் நான் அவன்கிட்ட மாட்டிக்காம பண்ணனும்!! அப்படி நான் பாலோ பண்ணும்போது தான் ரௌடிங்க மாறி இருந்த ஆளுங்க அவனை மீட் பண்ணிட்டு வெளில போறதை பார்த்தேன், லைட்டா டவுட்டு வரவும், அண்ணனுக்கு சொன்னேன்! வந்து பார்த்தா நான் நினச்சமாறியே நடந்துடுச்சு!!” என்றான்.

“எதுக்குடா எதையுமே எங்ககிட்ட சொல்லாம மறைச்சீங்க?” வேணிக்கு ஆதங்கமே! ஊர் மெச்சும் உயரத்தில் இருக்கும் தன் பிள்ளைகள் தன்னிடம் கூட தன் உயரத்தை பகிரவில்லையே என்று!!

“நீ போலிஸ் ஆகிட்டன்னு உன் அப்பாயின்மென்ட் ஆர்டர் பார்த்ததால தெரிஞ்சுது! உன் அண்ணனுக்கு என்கிட்ட அவன் வேலையை சொல்லனும்ன்னு கூட தோனல!!” ஆதங்கத்தை வெளிப்படுத்த, “மறைக்கணும்னு எல்லாம் அண்ணன் நினைக்கலம்மா!” என்றான் அதியன்.

இனியன், “நான் என்ன சொன்னாலும் உங்க மனசு அதை முழுமையா ஏத்துக்காது! இருந்தாலும் சொல்றேன்! நான் சப்-இன்ஸ்பெக்டரா செலெக்ட் ஆனதும் முதல்ல சுந்தரம் மாமாகிட்ட தான் சொன்னேன்! முதல் மாச சம்பளத்தோட அம்மாட்ட சொல்லு, வேணி பூரிச்சு போவான்னு சொன்னாரு! சம்பளம் வாங்கிட்டு நான் வந்தப்போ அதை உங்ககிட்ட சொல்ற நிலைமைல இல்ல! மாமாவோட இழப்பு, நிலாவோட நிலைமை எதுமே என்னை என் சந்தோசத்தை பகிர்ந்துக்க விடல! 

அடுத்து எனக்கு ப்ரோமோஷன் வந்தப்போ தான் அதியனுக்கு தெரியும்!” என்று சொல்ல, 

அதியன், “அண்ணன் இந்த வயசுலேயே டிஎஸ்பி ஆகிருக்கான்னு தெரிஞ்சதும் எனக்குள்ள இருந்த சிங்கம் பார்ட் 1 பார்ட் 2 பார்ட் 3 எல்லாம் முழிச்சுகிச்சு!! அவன்கிட்ட டிப்ஸ் கேட்டு வெறித்தனமா படிச்சேன்! ஆனா அப்பவும் கிளியர் பண்ண ஐஞ்சு வருஷம் ஆகிடுச்சு!!” என்றான் சோகமாய்.

நிவேதா அவன் பேச்சை, நடவடிக்கையை ரசிக்க ஆரம்பித்தாள். குருநாதனுக்கு அடக்கமான இனியன் பிடித்ததென்றால், அடாவடியான அதியனை இன்னும் பிடித்தது. 

வேணி, “எப்படியோ அண்ணனும் தம்பியும் என் தலைல நல்லா மொளகா அறைச்சுட்டீங்க!!” என்றார் விளையாட்டாய். அனைவரும் அவர்களை நினைத்து பெருமையாய் சிரிக்க, காலிங் பெல் சத்தம் அவர்களை திசை திருப்பியது.

அதியன் கதவை திறக்க, உள்ளே நுழைந்தது நால்வர் படை. 

வீட்டில் அத்தனை பேரை எதிர்ப்பார்க்காததால் சற்று திணறினர். நிலா அவர்களிடம் விளையாட வேண்டி, “ஹை ஐஷூ! கோச்சிங் கிளாஸ் எல்லாம் எப்டி போது?” என்றாள்.

“நல்லா போகுது மேடம்!! இன்னைக்கு கூட நாலு அட்மிஷன் வந்துச்சு!!” எதார்த்தமாய் பேசுவதாய் நினைத்து பேச, கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு சிரிப்பாய் இருந்தது.

“ஹோஓஓ!” கிண்டலாய் இழுத்த நிலா, “அப்புறம் என்ன இந்த பக்கம்?” என்றாள்.

முஸ்தபா, “சாரை பார்த்து பேசிட்டு போலாம்ன்னு தான்!! அவர் போன் சுவிச் ஆப்ன்னு வருது!!” 

நிலா, “ரொம்ப முக்கியமான விஷயமோ?”

சிவா, “ஆமா மேடம், சென்னைல பேசி வச்சுருந்த லேண்டு இன்னைக்கே ரெஜிஸ்டர் பண்ணியாகணும், அதான் சாரை கூட்டிட்டு போலாம்ன்னு!!”

என்ன பேச வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்துவிட்டு வந்தது தெளிவாய் புரிய, “எல்லாரும் பேசிவச்சுட்டு வந்தீங்களோ?” என்றாள் நிலா. நால்வரும் ‘ஹான்’ என தடுமாற, “எல்லாரும் ஒண்ணா வந்துருக்கீங்களே! பேசிவச்சுகிட்டு வந்தீங்கலோன்னு கேட்டேன்” என்றாள்.

மதன், ‘என்னடா இது, நம்ம இவ்ளோ சமாளிச்சுட்டு இருக்கோம், சார் அசையாம உட்காந்துருக்காரு? எழுந்து வரலாம்ல!?’ சிவாவின் காது கடித்தான். 

சிவா, ‘அதான்டா எனக்கு தெரியல!’

வேணி குறும்பு மேலாட, “இப்படி எல்லாரும் கிளம்பி கிளம்பி இங்க வந்துட்டா, பெங்களூருல இருக்க கிளாஸ யாரு கவனிப்பா?” என்றார்.

ஐஷூ மெலிதாய் தடுமாறி பின், “அதான் உங்க பையன் அங்க இருக்காரே அவரை தான் பார்த்துக்க சொல்லிட்டு வந்துருக்கேன்” என்றாள்.

அதியன் திடுக்கிட, முயன்றும் முடியாமல் அனைவருக்கும் முறுவல் பூத்தது. அதியனோ, “இந்த விஷயம் அந்த பையனுக்கு தெரியுமா?” என்றான்.

சிவா, “நான் சொன்னா அதுக்கு மறுபேச்சு பேசமாட்டான் சார், மரியாதையான பய!!” என சர்டிபிகேட் குடுக்க, நிலா வெளிப்படையாகவே சிரிக்க தொடங்கினாள். அவள் ஆரம்பித்ததும் ஒவ்வொருவராய் வாய்விட்டு சிரிக்க, அந்த நால்வருக்கு மட்டும் ஒன்றும் விளங்கவில்லை.

‘என்னடா நடக்குது இங்க?’ என முழித்துக்கொண்டு நிற்க, நிலாவே, “டிஎஸ்பி சார், உங்க அசிஸ்டென்ட்ஸ் எல்லாம் வேற லெவல்ல இருக்காங்க!” என்றுவிட்டு இன்னும் பலமாய் சிரிக்க, ‘ஐயையோ, எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு போலடா!?’ என்றான் மதன். 

சிவா, “அதான் டிவில நிமிஷத்துக்கு ஒருக்க சிபிஐ டிஎஸ்பி இனியன் இளஞ்செழியன்னு ஏலம் விடுறாங்க, விஷயம் இந்நேரம் வீட்டுக்கு தெரிஞ்சுருக்கும்ன்னு சொன்னேன்! எவன்டா கேட்டீங்க?” என்று சலித்துக்கொண்டான். பின் நால்வரும் சமாளிப்பாய் சிரித்து வைக்க, சிறிது நேரத்தில் சிரிப்பு மட்டுப்பட்டது. 

அதியன் முறைப்போடு இருப்பதை கண்ட சிவா, “இவரு மட்டும் ஏன் சர் முறைச்சுட்டே இருக்காரு?” என இனியனிடம் வினவ, “அவன்தான் நீ சொன்னா மறுவார்த்தை பேச மாட்டானே! மரியாதையான பயலாச்சே! நீயே என்னனு கேளு” என்று நக்கலாய் சிரிக்க அவன் யாரென்று சொல்லாமல் புரிந்து போனது நால்வருக்கும். அவனிடமும் அதே சமாளிப்பு சிரிப்பு!!

“சொல்லுங்க என்ன விஷயம்?” இனியன் கேட்க, “சர், நேத்து நைட் உங்களை சிலர் அட்டாக் பண்ண வந்ததா கேள்விப்பட்டோம், டிவில வேற விடாம போட்டுட்டே இருக்காங்க!!” என்றாள் ஐஷூ.

இனியன், “சின்ன நியூஸ் கிடைச்சாலே விட மாட்டாங்க, இதை விடவா போறாங்க!?”  

சிவா, “இப்போ ப்ராப்ளம் அது இல்ல சர்! நீங்க உங்க பெர்சனல் பிஸ்டல யூஸ் பண்ணது, பப்ளிக் நியூசென்ஸ்ன்னு சொல்லிட்டு இருக்காங்க!!” என்றான்.

அதியன் இடைபுகுந்து, “பாரு, இதுக்குதான் பொறுமையா இருன்னு முன்னாடியே உன்கிட்ட சொன்னேன்!” என்றான் கடுமையாய்.

இனியன் பதிலேதும் சொல்லவில்லை, அமைதியாய் இருந்தான். 

மதன், “ஷீலா மேடம், இந்த சந்தர்பத்தை அவங்களுக்கு சாதகமா யூஸ் பண்ண பார்க்குறாங்க சார்!! காலைல இருந்து அசோக் சர் கிட்ட பேசிட்டு இருக்காங்க சீரியஸா” என்றான். அதற்க்கும் இனியன் அமைதியாய் இருக்க அவன் அலைபேசி ஒலியெழுப்பியது.

மறுமுனையில் அசோக் தான் பேசினார். அவர் பேசுவதற்கெல்லாம் ‘ம்ம்ம்’ ‘ஆமாம்’ என்று மட்டுமே பதில் சொல்லிக்கொண்டிருந்தான் இனியன். இறுதியாய், “நாளைக்கு வந்து சைன் பண்றேன் சர்” என்று கூறி அழைப்பை துண்டிக்க, அனைவரும் அவன் முகத்தையே பார்த்திருந்தனர். 

நிலா, “என்னாச்சு?” என்றாள்.

“நாளைக்கு ஆபிஸ் போனும்”

அதியன், “பிரச்சனையா?”

“பப்ளிக்ல பிஸ்டல் யூஸ் பண்ணதுன்னு தப்புன்னு மனித உரிமை ஆணையத்துல இருந்து என் மேல புகார் குடுத்துருக்காங்க!” 

கோகுல், “இப்போ என்ன பண்ண போறாங்க அதுக்கு?”

நிவேதா, “உங்க மேல விசாரணை கமிஷன் வைக்க போறாங்களா?” வக்கீல் அல்லவா, சரியாக கேட்டாள்.  ‘ஆம்’ என தலையசைத்தான் இனியன்.

சிறிது நேர அமைதிக்கு பின், “எதுக்கு சைன் பண்ணி தரேன்னு சொன்னீங்க சர்? முஸ்தபா கேட்க, “வழக்கு சிபிஐக்கு போயிருக்கு, அதை நாந்தான் விசாரிக்குறேன்னு இப்போ பகிரங்கமானதால, அதுக்கு முழு பொறுப்பேற்று இந்த வழக்குல இருந்து விலகனும்ன்னு சொன்னாங்க! நாளைக்கு வந்து கையெழுத்து போட்டு தரேன்னு சொல்லிட்டேன்!!” என்றான் இனியன்.

“என்ன? உன்னை இந்த கேஸ்ல இருந்து விலக்கிட்டாங்களா?” நிலா அதிர்ந்து போனாள். தந்தையின் இறப்புக்கு இந்த வழக்கின் மூலமாவது ஜெயானந்தனுக்கு தண்டனை பெற்று தந்துவிடலாம் என அவள் எண்ணியிருக்க, ஏன்? அனைவருமே எண்ணியிருக்க, இனியனது திடீர் ‘விலகல்’ அவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.

அதியன், “பாருடா இப்போ என்ன ஆச்சுன்னு!! என்னை வெட்டுனா என்னை செத்தா போயிருப்பேன்? அதுக்கு போய் அவசரப்பட்டு…!!!” தலையில் அடித்துக்கொண்டான் அதியன்.

“நான் இருக்குற வரைக்கும் இனியும் யாரையும் நான் இழக்க விரும்பல!! ஜெயானந்தன் எல்லாத்தையும் திட்டம் போட்டு பண்ணிட்டான்! அவனுக்கு மட்டும் தான் ப்ளான் போட தெரியுமா? நம்மளும் திட்டம் போட்டு தூக்குவோம்!!! பதவில இருந்துகிட்டு அவனை பழி வாங்குறதுல என்னடா கிக்கு? சாதாரண மனுஷனா நின்னு அவனை ஜெய்ப்போம்!! அதுதான் உண்மையான வெற்றி!!!” இனியன் சொல்ல, அவன் சொல்வது தான் சரி என அனைவரும் அடுத்த கட்டத்துக்கான யோசனையில் தங்களை செலுத்தினர். 

Advertisement