Advertisement

உன் உள்ளம் நான் கண்டு, என் உள்ளம் நீ கண்டு..,

உனக்காக நான் உண்டு! என்று வாழும் காதல் தானே காதல்!!!

ஏர்போர்ட் சென்றடையும்போதே மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. “சீக்கிரம் வா வா!! பிளைட் வந்துருக்கும் இந்நேரம்!” நிலாவின் கையை பிடித்துக்கொண்டே உள்ளே சென்றான் இனியன். நள்ளிரவு நேரமும் அங்கு போடப்பட்டிருந்த செயற்கை ஒளியில் பட்டபகலென நம்ப வைத்தது.

அறிவிப்பு ஒலியில், அழகிய தமிழில் ‘விமானம் சிறிது காலதாமதமாக தரையிறங்கும்’ என அறிவிக்கப்பட்டதும், ஆசுவாசமாய் அங்கிருந்த கதிரைகளில் அமர்ந்தனர் இருவரும். நிலா முதன்முறையாய் விமானநிலையத்தை பார்ப்பதால், வேடிக்கை பார்ப்பதிலேயே அவளுக்கு நேரம் போனது தெரியவில்லை. 

இனியன் தனக்குள் சிந்தனையில் இருந்தான்! அப்போதிருந்து இப்போது வரை இனியன் அமைதியாய் இருந்தாலே, அவன் மூளைக்குள் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை எளிதில் கண்டுக்கொள்ளலாம்! 

அடுத்த அறிவிப்பு ஒலித்தது, விமானம் தரையிறங்கியதாக சொல்லப்பட, நிலா “அப்பா இதுல தானே வராங்க? வந்துட்டாங்களா?” என இனியனை நச்சரிக்க தொடங்கினாள். நகரும் படிகட்டுகளை அவள் பார்த்தவாக்கில் நிற்க, இனியனின் கண்களுக்கு வேறொருவர் பளிச்சென தெரிந்தார். 

“ஹேய்! அப்பாஆஆஆ!!! அப்பா வந்துட்டாங்க!!!” நிலா போட்ட சத்தத்தில் இனியன் கவனம் கலைந்து எதிரே வந்துக்கொண்டிருக்கும் தன் வருங்கால மாமனார் சுந்தரத்தை கண்டான்.  

“மாமா? வாங்க!!”

“அப்பாஆஆ” நிலா ஆசையாய் அருகே வர, அவள் கையில் நீண்ட சாக்லேட் ஒன்றை தந்து, “ஹேப்பி பர்த்டே நிலாம்மா” அவள் தலை மீது ஆதூரமாய் கைவைத்து வருடினார் சுந்தரம்.

நிலா, “உங்களை நான் ரொம்ப மிஸ் பண்னேன்ப்பா” தன் தந்தையின் தோளில் சலுகையாய் அவள் சாய்ந்துக்கொண்டு பேச, ‘இந்த கழுதை என்ன மிஸ் பண்ணேன்னு சொல்லல, அப்பாவை பார்த்ததும் குழையுது பாரு!! ஹும்ம்! புருஷன் என்னதான் தாங்குனாலும், பொண்ணுங்களுக்கு அப்பாதான் உசத்தி!’ உள்ளுக்குள் பொருமிக்கொண்டான் இனியன்.

“இந்த அம்மா வேணாம்ப்பா! என்னை திட்டிட்டே இருக்காங்க தெரியுமா?” தன் புகார்பட்டியலை நிலா அங்கேயே துவங்கியதும், “இங்கயே ஆரம்பிக்காத, வீட்டுக்கு கிளம்பலாம்” என்றான் இனியன்.

செக்கிங் முடிந்து உடமைகளை சேகரித்துக்கொண்டு கிளம்பும்போது இனியன் சற்று முன்பு கண்ட ‘அந்த ஒருவர்’ அவர்களை தாண்டி செல்ல, நொடியில் முடிவு செய்தவன், “மாமா, நீங்க இப்டியே வீட்டுக்கு கிளம்புங்க, நான் அப்புறமா வரேன்” என்றான் அவசரமாய்.

அவரோ ‘ஏன்?’ என்று கேட்காமல், “வேணாம் இனியா, விடு” என்றார். நிலா தான் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தாள்.

“என்ன அத்தூ நீ? எங்களை இப்டியே அம்போன்னு விட்டுட்டு கிளம்புறேன்னு சொல்ற? அறிவிருக்கா உனக்கு?” 

“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நிலா”

சுந்தரம், “சொன்னா கேளு இனியா, வேணாம்” 

“அத்தூ! நீ செய்யுறது சரியே இல்ல! இப்டி நடுராத்திரில எங்களை ரெண்டு மணி நேரம் பஸ்ல போக சொன்னா எப்டி தனியா போவோம்?” 

இனியனின் கவனம் முழுக்க வேறிடத்தில் இருந்தது.  “அதான் உனக்கு துணையா மாமா இருக்காங்கள்ள?”

நிலா, “எனக்கு அப்பா துணை, அப்பாக்கு யாரு துணையா இருப்பா!? அதெல்லாம் முடியாது, நீ எங்களோடதா வரணும்!” 

“சொன்னா புரிஞ்சுக்கோ நிலா, நான் இப்போவே போகணும்!!”

தான் சொல்வது அவனிடம் பலிக்கவில்லை என்றதும் தன் தந்தையிடம், “அப்பா நீங்களாது சொல்லுங்கப்பா, இனியன் எங்கயும் போக கூடாதுன்னு!” என்றாள்.

“சொல்றதை கேளேன் இனியா! ரெண்டு நாளா அலைஞ்சுட்டு தானே இருக்க! போதும் விடு, நம்மளே பார்த்துக்கலாம்!” சுந்தரம் சொல்ல, “கடைசி முயற்சியா பேசிபார்க்குறேன் மாமா! நீங்க இவளை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்புங்க! நான் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்!!” அவன் நகர, தன் தந்தையும் தடுக்காமல் இருப்பதை கண்ட நிலா கோவத்துடன், “எங்களை இப்படி அம்போன்னு விட்டுட்டு சொல்ல சொல்ல கேக்காம போறீல்ல? பின்னாடி ரொம்ப வருத்தப்படுவடா!! எங்களுக்கு ஏதாது ஆச்சுன்னா அதுக்கு நீதான் காரணம், எழுதி வச்சுக்கோ” நடக்கபோவதை முன்னமே கணித்து எச்சரிக்கை விடுக்கும் அசரிரி போல் அந்நேரம் ஒலித்தது நிலாவின் வார்த்தைகள். 

அவளை அசட்டை செய்தபடி வெளியேறியவன், வாயுவேகத்தில் அங்கிருந்த பார்கிங் ஏரியாவை அடைந்தான். நல்லவேளையாய் அவன் தேடி வந்த ஒருவர் போனில் யாரிடமோ பேசியபடி காரில் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்தார். நேரே அவரிடம் சென்றவன், சைகையில் ‘ஹலோ’ என்றான். அவன் தன்னிடம் பேச வேண்டி நிற்பதை உணர்ந்துக்கொண்டவர் தன் உரையாடலை சற்று சீக்கிரமாய் முடித்துக்கொண்டு, “சொல்லுங்க, உங்களை எனக்கு யாருன்னு தெரியலையே?” என்று தொடங்கினார். 

“நம்ம சந்திப்பு இதான் முதல் முறை சார்! நான் இனியன் இளஞ்செழியன், சிபிஐ-ல சப் இன்ஸ்பெக்டரா இருக்கேன்!!” தன் அடையாள அட்டையை எடுத்து காட்ட அதை வாங்கி பார்த்தவர், அவன் பெயரை உச்சரித்தார். 

“அழகான தமிழ் பெயர்! வித்தியாசமா இருக்கு!” கேட்டவுடன் அவன் பெயர் மனதில் நின்றதால் தான் நிலா அவரை பேட்டி எடுக்க சென்றபோது தன் கணவன் பெயரை சொன்னதும், அது தனக்கு தெரிந்த ‘இந்த’ இனியனாக இருக்குமோ என்று எண்ணி விசிட்டிங் கார்டை கொடுத்தது. 

(ஆம்! அவர்தான் நிலாவும் கோகுலும் அமைச்சரின் தற்கொலை வழக்கு சம்பந்தமாக நேர்காணல் செய்த தற்போதைய சென்னை மாகாண கமிஷ்னர் தேவசகாயம்! அப்போதைய எஸ்.பி)

“சொல்லுங்க! எதுக்காக என்னை பார்க்கனும்ன்னு வந்தீங்க? பர்சனலா இருந்தா இங்கயே சொல்லுங்க, அபீசியல் மேட்டர்ன்னா ஸ்டேஷன் வந்து பாருங்க”  என்றிட, “அபீசியல் தான் சார்! ஆனா பர்சனலா பேசணும்” என்ற பீடிகையோடு தொடங்கினான் இனியன்.

“சர், என்னோட மாமா, சுடரொளி பத்திரிகைல ரிப்போர்டர்” அவன் தொடங்கவே, “யூ மீன், மிஸ்டர் சுந்தரம்?” என சரியாய் சொன்னார் தேவசகாயம்.

“எஸ் சர்! எம்.எல்.ஏ சதாசிவம் எலெக்ஷன்ல ஜெய்க்குறதுக்காக யாரோ ஒரு சாமியார் பேச்சை கேட்டு பதினேழு குழந்தைகளை நரபலி கொடுத்துருக்காருன்னு எங்க மாமா ஆதாரத்தோட இங்க நிரூபிச்சாரு! ஆனாலும் அவன் மேல்முறையீடு கேட்டு மும்பை கோர்ட்ல கேஸ் போட்டான்! ஆதாரங்களை மும்பை கோர்ட்ல ஒப்படைச்சா உன் குடும்பத்தையே கொன்னுடுவேன்னு மிரட்டுனாங்க சர்! அப்பவும் பயப்படாம அவர் தன் வேலைல சரியா செஞ்சாரு!  

ஆனா ரெண்டு நாள் முன்ன, அடையாளம் தெரியாத நாலு பேரு அவரை மும்பைல கொலை செய்யுற நோக்கத்தோட விரட்டிருக்காங்க, நல்ல வேளையா அதில் இருந்து தப்பிச்சுட்டாரு! வேற ஊருல இருக்கும்போதே தைரியமா ஆள் வச்சு கொல்ல நினைச்சவங்க, அவரு ஆதாரத்தை எல்லாம் சொல்ல சொல்ல கேட்காம கோர்ட்ல குடுத்துட்ட கோவத்துல இந்த ஊருல வச்சு என்ன வேணாலும் செய்ய நினைக்கலாம் இல்லையா?” என்று நிறுத்தினான்.

“நீங்க இது விஷயமா பேசுறதா இருந்தா நேரா என் ஆபிஸ்க்கே வந்துருக்கலாமே? ஒரு கம்ப்ளைன்ட் குடுத்தா இந்த கேஸ் முடியுற வரைக்கும் உங்களுக்கு பாதுகாப்பு தரசொல்லி எங்க ஆளுங்களே ஏற்பாடு பண்ணுவாங்களே?” என்றார் தேவசகாயம்.

“நான் ரெண்டு நாளா உங்க ‘எஸ்.பி’ ஆபிஸ்லயே தான் சார் இருக்கேன்!! என் கம்ப்ளைன்ட்ட யாருமே வாங்கிக்க மாட்டேங்குறாங்க! நானும் போலிஸ் தான்னு சொல்லியும் கேக்கல! அப்போ நீயே பாதுகாப்பு குடுத்துக்கோன்னு பொறுப்பில்லாம பேசுறாங்க சர்!! நான் வேலை செய்யுறது குஜராத்ல, இந்த ஊருல நான் இருந்தா அவரை நானே பார்த்துக்குவேன்!” தன் இயலாமையுடன் சேர்த்து அவன் சொல்ல, 

“என்னை சந்திக்கனும்ன்னு சொல்லி பார்த்தீங்களா?” என்றார்.

இனியன், “எஸ்.பியை பார்த்து அவர்கிட்டயே கம்ப்ளைன்ட் குடுத்துக்குறேன்னு சொன்னதும், என் புகாரை வாங்கி வச்சுகிட்டவங்க, நான் அங்கிருந்து நகர்ந்ததுமே அதை குப்பைல வீசிட்டாங்க”  

எஸ்.பி தேவசகாயம், “எல்லாம் காசுக்கும் அரசியல் பலத்துக்கும் விலை போய்ட்டாங்க!! ஹும்ம்! நான் இன்னைக்கு பத்து மணிக்கு ஆபிஸ் வந்துடுவேன்! நீ நேரா என்னை வந்து பாரு” 

“சர், என் மாமாக்கு எதுவும் ஆகிட கூடாது! உங்க வார்த்தையை நம்பிதான் இருக்கேன்! கண்டிப்பா நீங்களும் அரசியல் லாபத்துக்கு துணை போகமாட்டீங்கன்னு நம்புறேன்!!” என்ற இனியனிடம், தன் பர்சனல் விசிட்டிங் கார்டை தந்துவிட்டு “என்னை நம்பலாம் இனியன்! தைரியமா போயிட்டு வாங்க!” என்றுவிட்டு அங்கிருந்து சென்றார்.

நன்றிக்காக, “சர், நான் டிரைவ் பண்றேன் உங்களுக்கு” அவர் மறுக்க மறுக்க கேட்காமல் தேவசாகாயத்தின் காரை ஓட்டிக்கொண்டு அவர் இருப்பிடத்திற்கு சென்றான் இனியன் இளஞ்செழியன்.

“பாருங்கப்பா! நம்மள இப்படி தனியா விட்டுட்டு அவன் வேலையை பார்க்க போய்ட்டான்!!” விமான நிலையத்தின் வெளியே வந்தவர்கள் பேருந்திற்காக காத்திருந்தார்கள்.   

“விடும்மா! இப்படி அவசரமா போறான்னா ஏதாது முக்கியமான வேலையா தானே இருக்கும்!?” 

“நம்மளை விட அப்டி என்னப்பா முக்கியமான வேலை அவனுக்கு?” அவன் மேல் எதற்கென்றே தெரியாமல் கோவம் வளர்ந்தது நிலாவுக்கு.

“அட விடும்மா! அதான் அப்பா உன்கூட இருக்கேன்ல?” நிலாவை சமாதானம் செய்யும் சுந்தரம் ஒருமுறையும் இனியனை குறை சொல்லவில்லை. அவருக்கு இனியன் என்றால் அத்தனை பிரியம்! தனக்கு என்ன இடர் என்றாலும் இன்பம் என்றாலும் மனைவிக்கு பின் முதலில் அவர் நாடுவது இனியனை தான்! சில நேரம் மனைவியை விட இனியனிடம் சொன்னால் தேவலாம் என்றும் அவருக்கு தோன்றுவதுண்டு!

இனியனும் அதேபோல் தான்! தன் தந்தையின் இழப்புக்கு பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்பிய சுந்தரத்தின் மீது அலாதி பிரியம். தனக்கு வேலை கிடைத்ததை முதன்முதலில் அவன் சொன்னது அவரிடம் தான்!! இப்போது அவரை தாக்க சில ஆட்கள் முயன்றது தெரிந்ததும் பணிக்கு விடுப்பு சொல்லிவிட்டு இருநாட்களாய் எஸ்.பி ஆபிஸ் வாசலிலேயே தவம் கிடக்கிறான்! எதேச்சையாய் எஸ்.பியை ஏர்போர்டில் கண்டதும் அவரிடம் உதவி கேட்கதான் செல்கிறான் என புரிந்துக்கொண்ட சுந்தரம், ‘வேண்டாம் இனியா, விடு!’ என்றுவிட, அதை கேட்காமல் அவர் நலனில் அக்கறைகொண்டு அவரை விட்டு சென்றான் இனியன். 

இது ஏதும் தெரியாத நிலா, இனியன் தங்களை விட்டு சென்றுவிட்டான் என்றதில் கோவம் கொண்டு அவனை அர்ச்சனை செய்துக்கொண்டிருந்தாள். ஏர்போர்டில் இருந்து வெளிவந்தவர்களில் முக்கால்வாசியினர் சொந்த வாகனங்களில் சென்றுவிட, மீதமிருந்தோரும் ஆட்டோ, டேக்சி என சென்றுவிட்டனர். சொற்பத்தில் உடன் நின்றிருந்தோரும் வெவ்வேறு இடங்களுக்கு செல்வோறாய் இருக்க, இத்தனை நேரத்திற்கும் வராத பேருந்திற்க்காக காத்திருக்க வேண்டாமென முடிவு செய்த சுந்தரம், ஆட்டோ பிடிக்க சென்றார்.

அதற்குள், “பிறந்தநாளு அதுவுமா, என் பொண்ணு பூ வைக்காம இருக்கே!!” என்று ஆசையோடு அதிகாலையிலேயே சுறுசுறுப்பாய் பூ கட்டிக்கொண்டு அங்கே ஓரமாய் அமர்ந்திருந்த பாட்டியிடம், முதல் போனி என்றதால் பேரம் பேசாமல் பணத்தை கொடுத்துவிட்டு தன் மகளுக்கு பூவை கொடுத்தார் சுந்தரம். தலையில் வைத்துக்கொண்ட நிலா, “அம்மாக்கு வாங்கிகொடுத்துடுங்கப்பா! இல்லனா போனதும் ராமாயணம் தான்!” என்று விளையாட்டாய் சிரித்தாள். 

“அப்பா, பசிக்குது!!”

சுற்றிலும் பார்க்க அதிகாலை டீக்கடை அவர்களை வரவேற்தது. அவளுக்கு வேண்டியதை வாங்கி தந்தவர், “நீ குடிச்சுட்டு இரு, எதிர்ல நிக்குற ஆட்டோல நம்ம ஏரியாக்கு போக விலை பேசிட்டு வரேன்” என நகர்ந்தார் சுந்தரம். 

காலை நேர தென்றலாய் ஒலித்த இளையராஜாவின் பாடலை ரசித்தபடி சூடான தேநீர் அவள் தொண்டையில் இறங்க, அதேநேரம் ‘ஆஆஆஆ’ என்ற அலறலோடு துடித்து தரையில் விழுந்தார் சுந்தரம். திரும்பி பார்த்த நிலாவின் கண்களில் சட்டை முழுதும் ரத்தக்கரையோடு கீழே விழும் அவள் தந்தையும், எதிரே பட்டை தீட்டிய கத்தியில் சொட்டும் ரத்தத்தோடு அதை ஏந்தி நிற்கும் ஒரு அரக்கனுமே தெரிந்தனர்.   

மறுபடியும் அந்த அரக்கன் கத்தியை ஓங்க, “அப்பாஆஆஆ” என அலறிக்கொண்டு ஓடினாள் நிலா. இனியனை வெட்ட வரும்போது அவள் அதிர்ச்சியில் கத்திய ‘அப்பாஆஆ’வை விட இது பன்மடங்கு அதிர்ச்சியோடும், சத்தத்தோடும் ஒலித்தது. 

ஓங்கிய கையை பின்வாங்காமல் சுந்தரத்தின் கைகளில் இறக்கினான் அவன். கை இரண்டு துண்டாய் போகாவிடினும், சதை கிழிந்து ரத்தம் கொப்பளித்தது. தரையில் கிடந்த சுந்தரம் தன் பார உடலை நகர்த்திக்கொண்டு அவனிடம் இருந்து தள்ளிப்போக முயன்றார். எழுந்து ஓட கூட திடம் இல்லை! கத்தி அத்தனை ஆழமாய் அவர் மேனியில் இறங்கியிருந்தது. 

ஓடி வந்து தன் தந்தையை மடியில் ஏந்திக்கொண்ட நிலா, “ஐயோ அப்பா, ரத்தமா வருதே! வாங்கப்பா போய்டலாம்!!” அழுகையோடு அவரை தூக்க முயன்றாள். 

“யாருடா இந்த பச்சக்கிளி?” அவர்களில் ஒருவன். 

“இந்தாளோட புள்ளையா இருப்பா!!”

“ஆளு பாக்க நல்லா இருக்காளேடா!!!” இன்னொருவன்.

அத்தனை வலியிலும் அவர்கள் பேசுவதை கேட்ட சுந்தரம், தன் மகளை தள்ளிவிட முயன்றார். வாயில் வார்த்தை வராவிடினும், ‘போ போ’ என்ற சைகையில் அவளை அங்கிருந்து கிளம்ப சொல்லுகிறார் என்பது தெளிவாய் புரிந்தது. 

டீக்கடையில் இருந்தவர்கள், பேருந்திற்க்காக காத்திருந்தவர்கள், பூக்கடை பாட்டி, முச்சந்தி பிள்ளையார் கோவில் பூசாரி, ஆட்டோ ஸ்டேண்டில் இருந்த அத்தனை டிரைவர்கள் என கூட்டம் கூடியது. 

“அண்ணா, யாராது வாங்கண்ணா! எங்க அப்பாக்கு முடில, ஆஸ்பிடல் கொண்டு போனும், எனக்கு பயமா இருக்குண்ணா, வாங்கண்ணா யாராது!! உதவி செய்ங்கண்ணா!!” அவள் கைகூப்பி கதறி அழ, ஓரடியும் முன்வைத்தோர் யாருமில்லை!!

“அண்ணா, கெஞ்சி கேக்குறேண்ணா! பாட்டி நீங்களாது உதவுங்க பாட்டி…” சுந்தரத்தின் மூச்சு வேகமாய் ஏறி இறங்கியது. அதை கண்டு பயந்து போனவள் எழுந்து ஆட்டோகாரர்களிடம் ஓடினாள்.

“அண்ணா, ஆஸ்பிடல் கொண்டு போனும்ன்னா, மூச்சு இழுத்து இழுத்து விடுறாரு, உடம்பெல்லாம் ரத்தம்! ரொம்ப பயமா இருக்கு! யாராது உதவிக்கு வாங்கண்ணா! உங்க கால்ல கூட விழுறேன்னா” சொன்னது போல அவர்கள் காலில் நிலா விழ, நகர்ந்துக்கொண்டனரே தவிர, உதவ யாரும் வரவில்லை!

“ஐயோஓ! நான் யார்கிட்டன்னு போவேன்!! என்னால எதுவுமே பண்ண முடிலையே!! அப்பாஆஆ, என்னை விட்டு போய்டாதப்பா!!” அங்கேயே விழுந்து அவள் கதற, அரக்க கும்பல் சத்தம் போட்டு சிரித்தது. இதெல்லாம் அவர்களுக்கு வேடிக்கை தானே!!

“டேய் புள்ள ரொம்ப அழுவுதுடா! பாவம் முடிச்சுவிட்ரு!” சிரித்தான் ஒருவன்.

துடித்துக்கொண்டிருந்த சுந்தரத்தை  நெருங்கியவன், தன் பூட்சு காலை கொண்டு அவர் கழுத்தில் வைக்க, வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து ஓடியவள், அவன் காலை இருக்க பற்றிக்கொண்டு, “அண்ணா, வேணான்னா, விட்ருங்கன்னா! அப்பா பாவம்ன்னா!!” என கதற தொடங்கினாள்.  

“அவர் ரொம்ப நல்லவருன்னா! கெஞ்சி கேக்குறேன்னா, எதுவும் பண்ணிடாதன்னா!!” தந்தையின் வேதனையோடு தன் கையாலாகாத தனமும் சேர்ந்துகொள்ள அழுகை ஆறாய் கிளம்பியது அவளுக்கு!

“எதுக்குண்ணா இப்டி பண்றீங்க? என் அம்மா பாவம், நாங்க வருவோம்ன்னு வீட்ல காத்துட்டு இருப்பாங்க! எங்க அப்பாவை இப்டி பார்த்தா செத்தே போயடுவாங்கன்னா” கதறலோடு அவள் கெஞ்ச, கூட்டமாய் பார்த்துக்கொண்டு நின்றவர்களுக்கு அனுதாபத்தில் கண்ணீர் சுரந்தது.    

“இதெல்லாம் என் அண்ணனை பத்தி பத்திரிக்கைல எழுதுறதுக்கு முன்னாடி இந்தாளு யோசிச்சுருக்கணும்” தன் காரில் இருந்து இறங்கி வந்தான் ஜெயானந்தன்! 

“ஏதோ தெரியாம செஞ்சுட்டாரு! மன்னிச்சு விட்டுடுங்க! இதுக்குமேல அவர் எதுவும் செய்யாம நான் பார்த்துக்குறேன்!” நிலா அவர்கள் மனம் இறங்கி விட்டால் போதுமென பேச, இன்னும் சிரித்தனர் அவர்கள்.

“ஹாஹா! நீ பார்த்துக்குறியா? உன்னால ஒன்னும் புடுங்க முடியாது! உங்கப்பன் எங்களைபத்தி எழுதுனதே தப்பு, இதுல துப்பு கண்டுபிடிச்சு கோர்ட்டுல குடுக்குறானாம்” வக்கிரமான முகத்தோடு சுந்தரத்தின் அருகே அமர்ந்த ஜெயானந்தன், அவர் உயிரை பிடித்துக்கொண்டு இருப்பது தெரிய, “அடிபட்ட பாம்பு கம்முன்னு இருக்காது!” என்றான்.

“இங்க நின்னு அழுது ஒரு பிரயோஜனமும் இல்ல, நீ உன் சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லிவிடு!!” என்றான் ஜெயானந்தான் இரக்கமின்றி.

தன் தந்தையை இறுக்க பிடித்துகொண்டவள், “இல்ல இல்ல, என் அப்பாக்கு ஒன்னும் ஆவாது” என்றாள். அவள் உடல் நடுநடுங்கியது. 

அவர்களின் கேலி சிரிப்பு அவளுக்கு பயத்தை அதிகரிக்க, “யாராது போலிஸ்க்காது சொல்லுங்களேன், பார்த்துட்டே நிக்குறீங்க! எல்லாம் உங்களுக்கு நடந்தா தானா? யாராது ஹெல்ப் பண்ணலாம்ல! கண்ணு முன்னாடி தப்பு நடக்குது, அப்படியே நிக்குறீங்களே” யாராது உதவ வர மாட்டார்களா என ஏங்கினாள்.

“இனியாஆஆ! பாருடா விட்டுட்டு போவாதன்னு கெஞ்சுனேனே! இப்போ பார்த்தியா என் நிலமைய!” இல்லாத இனியனிடம் வாய்விட்டு கத்தினாள் நிலா.

“அண்ணே! கட்சி பொதுகூட்டம் வேற இருக்கு, லேட்டா போனா அண்ணாத்த திட்டும், சீக்கிரம் முடிச்சுட்டு வா, கிளம்பலாம்!” என்றான் ஒருவர்.

“ஐயோஓஓஓ! டேய் எங்கள விட்..டு..டுங்..க..டா!! காலை பிடிச்சு கெஞ்சி கேக்குறேன்! நாங்க எங்கயாது போயிடுறோம்! விட்டுடுங்க” அவள் கதறலில் கல் கூட கரைந்திருக்கும். ஆனால் இவர்கள், “அண்ணனை எதிர்த்தவனை உயிரோட விட்டா, நாளைக்கு இன்னொருத்தன் தைரியமா கிளம்புவான், உன் அப்பன் சாவு எங்களுக்கு ப்ரீ விளம்பரம்! இனி எவனும் எங்களை எதிர்த்து வரக்கூடாது!!” என்ற ஜெயானந்தன் இமைக்கு நொடியில் கத்தியை துடித்துக்கொண்டிருந்த சுந்தரத்தில் தொண்டையில் இறக்கினான். முடிந்தது எல்லாம் முடிந்தது!!!!

நிலாவுக்கு தான் நெஞ்சு வெடித்து அப்பொழுதே சாக கூடாதா என்றிருந்தது. மடியில் கிடக்கும் தன் தந்தையின் கண்கள் அவளையே வெறித்தன. நீர் ததும்பி நின்ற அந்த கண்களில் அத்தனை வேதனை. 

“ப்பா!! ப்பாஆ!!” அவர் கன்னத்தை தட்டினாள். 

“அப்…பா…ஆஆ” வார்த்தை திக்கியது.

“எழுந்துரிபா, வீட்டுக்கு போலாம்!!” அவர் சட்டையை பிடித்து உலுக்கினாள்.

“அப்பா!! அப்பாஆ!! அப்ப்பா!! பேசுப்பா” நடுரோட்டில் அமர்ந்து உயிர் பிரிந்த தன் தந்தையின் கூட்டை உலுக்கொண்டிருந்தாள். 

அதை கண்ட யாராயினும் தன் வாழ்நாளில் அந்நிகழ்வை மறக்க முடியாது. 

சிறிது நேரத்திற்குள்ளாக போலிஸ் அவ்விடம் வர, அவர்களை கண்டதும் விருட்டென எழுந்து ஓடிய நிலா, “சார் சார், எங்..கப்பா!!  கொன்னுட்டா…ங்க சார்” கதற, “ஆம்புலன்ஸ் வரசொல்லுங்க” என்றார் இன்ஸ்பெக்டர். 

“அவனுங்க தான் சர் கொன்னானுங்க! அர்ரெஸ்ட் பண்ணுங்க” அவள் கத்த,  

அவளை சட்டை செய்யாதபடி நேரே அந்த அரக்கர்களிடம் சென்றவர், ஜெயானன்தனை நோக்கி, “நீங்க ஏன் சார் டைரெக்ட்டா இன்வால்வ் ஆகுறீங்க? இவனுங்க செய்ய மாட்டானுங்களா?” என்றார்.

“வீட்ல சும்மா இருந்தேன், அதான் அப்டியே ஒரு ரவுண்ட்! கேஸ நீ பார்த்துக்கோ என்ன?” என்றிட, “அதெல்லாம் நீங்க சொல்லனுமா சார்!” என்றுவிட்டு, “என் ட்ரான்ஸ்பர்?” தலை சொரிந்தார் அந்த நேர்மையான இன்ஸ்பெக்டர்.

“ட்ரான்ஸ்பர் என்ன ப்ரோமொஷனே போட சொல்றேன் போ” என்றதும் அவருக்கு கூழை கும்பிடு போட்டான் அவன்.

ஓடி வந்த நிலா, “சர் சர், இவனுங்க சார் எங்கப்பாவை கொன்னுட்டாங்க, அர்ரெஸ்ட் பண்ணுங்க சர்” என்றாள் கெஞ்சும் குரலில்.

“இங்கப்பாரும்மா! இது டெத் கேஸ், நான் ரவுண்ட்ஸ்ல இருந்த போலிஸ், நான் இந்த கேஸை எடுக்க முடியாது, நீ இந்த ஏரியா ஸ்டேஷன்ல புகார் குடு, அவங்க குற்றவாளியை கண்டுபிடிப்பாங்க!!” பொறுப்பாய் பதில் சொன்னார் இன்ஸ்பெக்டர்.

“என்ன சர் பேசுறீங்க?” அதிர்ந்து போனாள் நிலா. “கண்ணு முன்னாடி கொன்னவங்க நிக்குறாங்க! அர்ரெஸ்ட் பண்ணாம ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் குடுக்க சொல்றீங்க?” என்றிட, “எல்லாம் சட்டபடி தான்ம்மா செய்ய முடியும்” என்றார் அரசியல்வாதிகளின் காசில் புது சட்டம் பயிலும் அவர்!

“அதே சட்டத்துல ஒரு பொண்ணு கம்ப்ளைன்ட் குடுத்தா, நேரம் காலம் ஏரியா இது எதுமே பார்க்காம உடனே அந்த புகாரை ஏத்துகிட்டு ஆக்ஷன் எடுக்கணும்ன்னு இருக்கு! அது தெரியாதா?” அழுகை குறைந்து தைரியமாய் எதிர்த்து நின்றாள் நிலா. 

‘பாக்க பொடுசா இருக்கு, சமாளிச்சுடலாம்ன்னு பார்த்தா விவரமா சட்டம் எல்லாம் பேசுதே’ உள்ளுக்குள் ஜர்க்கானது இன்ஸ்பெக்டருக்கு.  

ஜெயானந்தன், “அவரு ஆக்ஷன் எடுப்பாரு! ஆனா அதுக்கு சாட்சி வேணுமே!? அதுக்கு எங்க போவ?” என்றார் நக்கலாய்.

“அதான் இத்தனை பேரு நேர்ல பார்த்த சாட்சியே இருக்கே!!” அதே தைரியத்துடன் அவனிடமும் பேசினாள்.

பலமாய் சிரித்தான். “சாட்சி சொல்ற அவனுக்கும் இதே நிலைமை தான்னு தெரியாத அளவுக்கா இவனுங்க எல்லாம் முட்டாள்!!” சாட்சி சொன்னால் உயிர் இருக்காது என மறைமுகமாய் சொன்னான் ஜெயானந்தன்.

“உங்க முன்னாடியே மிரட்டிட்டு இருக்கான்! உங்க கண்ணுக்கு இதெல்லாம் தெரியாதா?” இன்ஸ்பெக்டரை அவள் சத்தம் போட, “சாட்சி இருந்தா தான்ம்மா செல்லும்” என்றுவிட்டார் அவர்.

அதற்குள் ஆம்புலன்ஸ் கிளம்ப, “கூட நீயும் ஏறிக்கோம்மா, இல்லனா அனாதை பொணம்ன்னு கேஸை முடிச்சுடுவானுங்க! கெட்டப்பசங்க!” ஜெயானந்தன் பெரிய ஜோக் சொன்னதை போல சிரித்தான், உடன் சேர்ந்துக்கொண்டு அவன் ஆட்களும் சிரித்தனர் இன்ஸ்பெக்டர் உட்பட!

நிலா ஆம்புலன்சில் ஏறிக்கொண்டாள். வண்டி அரசு மருத்துவமனையை நோக்கி சென்றது. செல்லும் வழியெல்லாம் தன் தந்தையை நினைத்து கதறிக்கொண்டே வந்தாள் நிலா. இன்றைய பொழுது விடிந்தபோது இப்படி ஆகும் என துளியளவும் அவள் நினைத்திருக்கவில்லை. 

அப்போதும் அவள் மனம், “இனியா, நீ இருந்துருந்தா என் அப்பாவை காப்பாத்திருக்கலாமேடா!” என்றுதான் அலட்றியது.

தன் அன்னைக்கு தகவல் சொல்லவேண்டும் என்றுக்கூட தோன்றவில்லை. அழுதபடியே மருத்துவமனையை அடைய, அங்கு வந்து சேர்ந்த ஊழியர்கள் உடல்கூராய்வுக்கு கையொப்பம் வேண்டி அவளிடம் தகவல் வாங்கி தேவிக்கு செய்தியனுப்பினர். பதினெட்டு வயது பூர்த்தியடையாததால் நிலாவால் போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் கையெழுத்து போட இயவில்லை. 

தேவசகாயத்தை அவர் வீட்டில் விட்டு ‘தயவுசெய்து உதவ வேண்டும்’ என அவரிடம் பலமுறை கேட்டுக்கொண்ட இனியன், அப்போதுதான் வீட்டிற்க்குள் நுழைய, “எஞ்சா…ஆஆ…மீஈஈஈ” கதறலோடு நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்தார் தேவி. ஒருவாறாய் விஷயத்தை அவரிடம் இருந்து வாங்கியவன், சமைந்து நின்றான். 

“மாமா?” அதோடு அவன் மூளை நின்றது.

வேணி தான் அவனை உலுக்கி, “என்னடா அப்படியே நிக்குற? பத்திரமா கூட்டிட்டு வரேன்னு போனியேடா, இப்படி மனுஷன காவு குடுத்துட்டு வந்து நிக்குறியே?” அவன் மாரில் அடித்து அடித்து அவர் கதற, அதிர்ச்சியில் இருந்து ஒருவாறாய் மீண்டும் இருவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

நடுவில் அதியனுக்கு விஷயம் சொல்லப்பட, ஆபிஸில் இருந்து வேகமாய் தன் மாமனின் உடலை காண ஓடினான். அங்கே சுவரில் சாய்ந்து தன் திறனெல்லாம் வடிந்து வதங்கிய பூவாய் இருந்த நிலாவை கண்டதும் அதியனின் மனது துடித்தது. 

“நி…லா…..?” அருகே சென்றான். அவள் பெயரை உச்சரிக்கும்போதே அவனுக்கு அழுகை வந்தது. வார்த்தை திக்கியது. அவனை நிமிர்ந்து ஓர் உணர்ச்சியற்ற பார்வை பார்த்தாள் நிலா. 

அவள் தலைமேல் கரம் வைத்து “தைரியமா இரு” என்று அதியன் சொல்ல, அவள் கண்களில் இருந்து சூடான அவள் கண்ணீர் இறங்கியது. கதறலோ புலம்பலோ அவளிடம் இல்லை. அதியனுக்குமே இது தாங்கமுடியாத அதிர்ச்சியானதால் அதற்குமேல் ஆறுதல் சொல்ல அவனுக்கு வரவில்லை.

தேவி “ஐயாஆஆஆ! எங்கய்யா இருக்க?” தலைவிரி கோலமாய் ஓடிவர, அவர் பின்னூடே வேணியும் இனியனும் வர, நிலாவை கண்டதும், “அம்..மா…டி! உன் அப்பாக்கு ஒன்னும் இல்லைதானே? நம்மள எல்லாம் தவிக்க விட்டுட்டு போகல தானே? சொல்லுமா, நான் கேட்டதெல்லாம் பொய்ன்னு சொல்லுமா” கதற, நிலாவுக்கு விசும்பல் அதிகரித்து கண்ணீர் கொட்டியது.

“யாருங்க சுந்தரத்தோட சொந்தக்காரங்க” ஒருவன் உரக்க கத்தினான்.  இனியன் ஓடிசென்று அவனிடம் பதில் சொல்ல, போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர், “போலீஸ்க்கு சொல்லியாச்சா?” என்றார். 

நிலா ‘ஆம்’ என தலையசைத்தாள். 

“இந்த ரிப்போர்ட்ல சைன் பண்ணிட்டு பாடியை வாங்கிக்கோங்க”

அதை கேட்டு தன் தலையில் அடித்துக்கொண்டு கதறினார் தேவி. “என்னை பாக்கணும் போல இருக்குன்னு சொன்னியே, இப்படி பாதில போகவா உன்னை கட்டிக்கிட்டு வந்தேன்! நீ இல்லாம என்னைய்யா பண்ணுவேன்? ஒத்த புள்ளைய வச்சுக்கிட்டு அதை கரை சேக்கும் முன்ன, நீ போய் சேர்ந்துட்டியே? போனவன் என்னையும் கூட்டிகிட்டு போயிருக்க கூடாதா?” அவர் மனதில் இருந்ததை எல்லாம் சொல்லி சொல்லி புலம்பினார். 

‘போதும்’ என சொல்லுமளவு நிலா கதறி புலம்பி தீர்த்ததால் இப்போது மௌனமாய் கண்ணீர் சிந்தினாள்.

இனியனுக்கு யாரிடம் விவரம் கேட்பது என்றே தெரியவில்லை. டாக்டரிடம், “எப்படி ஆச்சு?” என்றான்.

“வயித்துலயும், கையுலையும் மேஜர் இஞ்சுரி. கழுத்துல இருக்க நரம்பு அறுந்து உயிர் போயிருக்கு! லாரி வேகமா மோதுனதுல ஏதோ கூர்மையான பொருள் அவரை தாக்கிருக்கலாம்” என்றவுடன், விருட்டென எழுந்தாள் நிலா.

“லாரி மோதுச்சா? யார் சொன்னது லாரி மோதுசுன்னு?” கோவமாய் அதிர்வோடு அவள் கேட்க, திடீரென வந்த கேள்வியில் தடுமாறினார் டாக்டர். பின் ஒருவாராய் சமாளித்து “நீங்க தானே சொன்னீங்க?” என்று அவள் மீதே பழி போட்டார்.

“நானா? நானா சொன்னேன்? நான் சொன்னேனா?” கோவம் அதிகரிக்க, எகிறிக்கொண்டு அவரிடம் செல்ல இருந்தவளை தடுத்து பிடித்தான் இனியன். 

“என்னை ஏன் தடுக்குற? அவன் பொய் சொல்றான், அவனை கேளு!!” இனியனை கண்டதில் இருந்து முதல்முறையாய் பேசுகிறாள். கோவத்தோடு!!

“மிஸ்டர், இவங்க ஏதோ உளருறாங்க! நீங்க மேற்கொண்டு போலிஸ் கிட்ட பேசிக்கோங்க” டாக்டர் தடுமாறியபடி சொல்லிமுடிக்க, அங்கு வந்து சேர்ந்தார் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர். 

“ரவுண்ட்ஸ் இன்ஸ்பெக்டர் எல்லாம் சொன்னாரு! பார்ம்ல கையெழுத்து போட்டுட்டு பாடியை கொண்டு போங்க! அப்றமா ஸ்டேஷனுக்கு வந்து பார்மாலிட்டி முடிச்சு குடுங்க” என்றார் அவர் இனியனிடம்.

“சர்! இது ஆக்சிடென்ட் இல்ல, டாக்டர் விபத்துன்னு பொய் சொல்றாரு!!” நிலா பேச, “டாக்டரு பொய் சொல்றாருன்னா, நேர்ல பார்த்து ரிப்போர்ட் பண்ண இன்ஸ்பெக்டரும் பொய் சொல்றாரா?” என்று கேட்க, “ஆமா சார்” என்றாள் நிலா. இனியன் அதியன் தேவி வேணி என அனைவரும் அதிர்ந்து போய் பார்த்தனர்.

“அவரும் பொய் தான் சொல்றாரு!! என் அப்பா கூட நானும் தான் இருந்தேன், எங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகல! எங்க அப்பாவை கொன்னுட்டாங்க சார்” சொல்லும்போதே அவளுக்கு உதடு துடித்து அழுகை பிறந்தது.

“கொன்னுட்டாங்கன்னா? யாரு கொன்னா?” இன்ஸ்பெக்டர்.

“எம்.எல்.ஏ சதாசிவத்தோட தம்பி தான் சார்! எங்கப்பா அவங்களுக்கு எதிரா கோர்ட்ல சாட்சி சொன்னதால நடுரோட்ல வெட்டி கொன்னுட்டாங்க சார்” 

இனியனுக்கு இதயமே ஒரு நொடி நின்றது போல இருந்தது. யாருடைய பாதுகாப்புக்காக அவர்களை அவசரமாய் விட்டு சென்றானோ, தான் விட்டு சென்றதே அவர்கள் உயிர்க்கு எமனாய் போனதை புரிந்து சமைந்து போனான். 

தேவி, “என்னடி சொல்லிக்கிட்டு இருக்க, எனக்கு தலையே சுத்துதே” தலையை பிடித்துக்கொண்டு தரையில் சரிந்துவிட்டார். 

“என்னமா பைத்தியம் மாறி பேசிட்டு இருக்க? நீ கை காட்டுறது எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? சாட்சி இல்லாம எதையும் பண்ண முடியாது எங்களால!” என்றிட, “கொலை நடந்த இடத்துக்கு வாங்க சார், அங்க இருக்கவங்களை கேளுங்க, அப்போ தெரியும் உண்மை” என்றாள் அழுகையூடே!!

இன்ஸ்பெக்டர் யோசிக்க, இனியன், “சர், அவதான் நிரூபிக்குறேன்னு சொல்றாளே! இன்னும் ஏன் தயங்குறீங்க?” என்றான். இனியனும் நிலாவும் போலிஸ் ஜீப்பிலேயே சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். 

“இங்கதான் சார், என் அப்பாவை வெட்டுனாங்க! நான் அந்த டீக்கடைல நின்னுட்டு இருந்தேன்” என்றவள் ஓட்டமாய் டீக்கடைக்கு ஓடினாள். 

“அண்ணே! காலைல நடந்ததை பார்த்தீங்க தானே? எங்க அப்பாவை அவனுங்க வெட்டும்போது நீங்களும் தானே பார்த்தீங்க? சொல்லுங்க அண்ணே போலிஸ் கிட்ட” சிறிது தைரியத்துடனே கேட்டாள். 

“நான் எதுவும் பாக்கலையேம்மா! நீ என்ன சொல்றன்னே தெரியல!!” டீக்கடைக்காரர் சொன்னதில் ஆடிபோனாள் நிலா.

“அண்ணே, கொஞ்ச நேரம் முன்னாடி இங்க என் அப்பாவை வெட்டி கொன்னாங்களே! நீங்க பார்த்தீங்களே?” மீண்டும் அவள் அவருக்கு நினைவூட்ட, “நான் இப்போதான் கடையே திறந்துருக்கேன்! நான் எதுவுமே பாக்கல!” என்றார் அவர்.

“எதுக்குன்னே பொய் சொல்றீங்க? உங்க கடைல தானே டீ குடிச்சேன்! நீங்க பார்த்ததை மட்டும் சொல்லுங்கண்ணே!” என்று இறுதியாய் அவள் இறைஞ்ச “யார் சர் இது லூசுமாறி பேசிட்டு இருக்கு, போனி பார்க்கணும் கூட்டிட்டு போங்க சர்” என்றார் அவர். 

அதிர்ந்து போய் நின்றாள் நிலா.

இன்ஸ்பெக்டர், “போதுமா? சாட்சி அவ்ளோதானா?” என்றார். குரலில் நக்கல் தொனி. சுற்றும் முற்றும் பார்த்தவள், திடீரென ஓடினாள். 

“இங்க இருந்த பூக்கார பாட்டி எங்க?” அருகே பழக்கடை போட்டிருந்தவரிடம் கேட்க, “பூக்கார பாட்டியா? இங்க பூக்காரங்க யாரும் கடை போடுறது இல்லையே?” என்றார் அந்த கடைக்காரர்.

“ஒரு வயசான பாட்டிண்ணே! இங்கதான் பூ-கட்டிகிட்டு இருந்தாங்க, அவங்ககிட்ட தான் என் அப்பா பூ வாங்கி கொடுத்தாங்க, என் தலைல இருக்கு பாருங்க” சிறிது நேரம் முன்பு புத்தம்புதிதாய் சூடியிருந்த மல்லிகை சரத்தை தொட்டு காட்டினாள் நிலா.    

“அதெல்லாம் தெரியாதும்மா!!” அவர் கைவிரித்துவிட்டார்.

போலீசின் சிரிப்பு இன்னும் அதிகமாக, இனியன், “நிலா, விடு நம்ம பார்த்துக்கலாம்” என்றான்.

“என்னடா பார்ப்ப? என்ன பார்ப்ப நீ? நானும் செத்து போனா நின்னு வேடிக்கை பார்ப்ப, அவ்ளோதான் நீ!!!” அவள் வார்த்தைகள் ஈட்டி கொண்டு தாக்கியது அவனை…!!

ஆட்டோ ஸ்டேண்டில் இருந்த ஆட்களிடம் சென்றவள் இறுதி முயற்சியாய், “நீங்களாது உண்மையை சொல்லுங்கண்ணே! எங்க அப்பா உயிர் தான் போய்டுச்சு, கொன்னவனுக்கு தண்டனையாது கிடைக்கணும், இல்லனா இனி இன்னும் தைரியமா தப்பு பண்ணுவானுங்க” ஓட்டுனர்களிடம் கெஞ்சினாள்.

பார்த்தவர்கள் பார்க்கவில்லை என பொய்யுரைக்க, இவர்கள் அதற்க்கும் ஒருபடி மேலே போய், “நான் பாத்தேன் சார், இதுவும் இது அப்பாவும் நடந்து போக சொல்ல, ஒரு லாரிக்காரன் வந்து மேல தட்டிட்டு போய்ட்டான் சர்! இந்த பொண்ணு அப்பால போய் விழுந்துடுச்சு, பாவம் அந்த ஆளு தான் ஸ்பாட்லயே நட்டுகினான்!” ஒருவன் கத்த, “ஏய்ய்ய்ய்ய்ய்……” அவன் சட்டை காலரை கொத்தாய் பிடித்திருந்தாள் நிலா.

“எதுக்குடா எல்லாரும் பொய் சொல்றீங்க? காலைல உங்க கால்ல விழுந்து கெஞ்சுனேன், உதவி செய்ய ஒருத்தனுக்கும் துப்பில்ல, இப்போ சாட்சி சொல்லவாது வருவீங்கன்னு பார்த்தா நீங்களும் இந்த போலிஸ் மாறி உண்மையை மறைக்க பாக்குறீங்களா?” என்று கத்தினாள். அவளை தள்ளி நிறுத்தவே கடினமாய் போனது.

“விடுமா நீ… என்னமோ நேருல பார்த்த சாட்சி இருக்குன்னு சொன்ன? ஒருத்தனும் கொலைன்னு சொல்லல, சரியான பைத்தியமா இருப்ப போல!!”  இன்ஸ்பெக்டர்.

“யாருடா பைத்தியம்? யார் பைத்தியம்? என் கண்ணு முன்னாடி என் அப்பாவை வெட்டி கொன்னுட்டு, அதை ஆக்சிடென்ட்ன்னு மூடி மறைக்க பாக்குறானுங்க, அவனுங்களுக்கு நீங்களும் துணை போறீங்க! உண்மையை பேசுற நான் உங்களுக்கெல்லாம் பைத்தியமா?” கத்தியவள், அந்த சாலையில் மடிந்து அமர்ந்தாள்.

“என் அப்பா சிந்துன ரத்தம் கூட இன்னும் இந்த ரோட்ல காயலடா! நான் அப்பா செத்துட்டாருன்னு அழுவேனா, இல்ல அவருக்கு நியாயம் கிடைக்க விடாம செய்யுரீங்கலேன்னு அழுவேனா? ஏண்டா எல்லாரும் இப்டி இருக்கீங்க?” கதறிக்கொண்டிருந்தவளை கண்டு துவண்டு போனான் இனியன். அவன் கண்களில் இருந்தும் நில்லாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. 

“வேற ஏதாது சாட்சி இருக்கா? உன்கூட இருந்த வேரயாரயாது சொல்ல சொல்லு, கேஸ் எடுத்துக்குறேன்” இன்ஸ்பெக்டர்.

அவர் சொல்ல, நிலாவின் கண்கள், இனியனை வெறித்தன. அவள் பார்வையில் தலைகுனிந்தான் இனியன். 

அழுகையில் நா வறண்டு திக்கி திக்கி, “போகாத போகாதன்னு சொன்னேனேடா!! இப்படி என்னை தனியா போராட விட்டுட்டியே? எங்ககூட நீ இருந்துருந்தா இந்நேரம் அப்பா உயிரோட கூட இருந்துருக்கலாம்! ஆனா இப்போ சாட்சி சொல்ல கூட நீ இல்லமா போயிட்டியே இனியா!! உன்னை எவ்ளோ நம்புனேன் இனியா!?”  கண்களில் மன்றாடளுடன் அவள் கேட்க, ‘அவள் சொல்வதும் நியாயம் தானே!! சாட்சி சொல்லக்கூட துணைக்கு இல்லாமல் போய்விட்டோமே’ என உள்ளுக்குள் அவள் நிலை கண்டு மருகிக்கொண்டிருந்தான் இனியன்.

மீண்டும் அவளை மருத்துவமனையில் விட்டவன், நேரே எஸ்.பி ஆபிசுக்கு விரைந்தான். மறுபடியும் அவளை தனித்து விட்டு தவறு செய்தான்.

அங்கே பாடியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு எடுத்து செல்ல தயாராகியிருக்க, “யார கேட்டு அப்பாவை வாங்குனீங்க?” என்று எகிறியவள், “ஒரு நியாயம் கிடைக்காம இங்கேருந்து போ கூடாது, எல்லாரும் உக்காருங்க” என்று கத்தினாள். 

“என் அப்பாவை கொன்னுட்டாங்க, அவர் சாவுக்கு காரணமானவங்க கைதாகுறவரைக்கும் நாங்க இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்!!” கூச்சலிட, கூட்டம் கூடியது. கேட்பவர்களிடம் எல்லாம் இவள் நடந்ததை எடுத்து சொல்ல, சிறிது நேரத்தில் இவ்விஷயம் காட்டுதீயென பரவியது. 

இன்ஸ்பெக்டர் இது போகும் போக்கு சரியில்லை என்பதை உணர்ந்து ஜெயனந்தனிடம் சொல்ல, “இது சப்ப மேட்டரு! நான் சொல்றமாறி ஏற்ப்பாடு பண்ணு!!” என்றான்  அவன்.

“நடந்த கொலையை விபத்துன்னு சொல்லி மூடி மறைக்க பார்க்குறாங்க, என் அப்பா சாவுக்கு ஒரு நியாயம் கிடைக்கணும்!” மருத்துவமனை வாயிலில் அமர்ந்து ‘தர்ணா’ செய்ய, கூட்டம் கொஞ்சகொஞ்சமாய் அதிகரித்தது. 

“இன்னைக்கு எங்களுக்கு நடந்தது தான் நாளைக்கு உங்களுக்கும் நடக்கும், எல்லாரும் எங்களுக்காக குரல் கொடுங்க” பார்த்துக்கொண்டு நின்றவர்களை நோக்கி சொன்னாள்.

அதற்குள் இன்ஸ்பெக்டர் பேச்சை கேட்டு அங்கு வந்த ஒரு மருத்துவர், “உங்க அப்பாக்கு நடந்தது விபத்து தான்! அதுக்கு சாட்சியும் இருக்கு, அந்த லாரி டிரைவரும் போலிஸ் ஸ்டேஷன்ல சரண்டர் ஆகிட்டான்! வீணா பிரச்சனை பண்ணாம கிளம்புங்க” என்றார். 

“எப்டிடா வாய் கூசாம பொய் பேசுறீங்க? உங்களுக்கெல்லாம் நல்ல சாவு வருமா? குடும்பமே நாசமா தான் டா போகும், ரோட்ல அடிபட்டு தான் சாவீங்க! காசு குடுத்தா என்ன பொழப்பு வேணாலும் பாப்பியா நீ? ச்சீ!” நிலா பேசிக்கொண்டே போக, 

“இந்த பொண்ணுக்கு அவங்க அப்பா செத்து போனா அதிர்ச்சில பைத்தியம் பிடிச்சுருச்சுன்னு நினைக்குறேன்!!  எதுக்கும் டெஸ்ட் பண்ணி பார்த்துடுறது நல்லது!!” டாக்டர் சொன்ன மாத்திரமின்றி அவரிடம் எகிறி வந்தாள் நிலா.

“என்னடா சும்மா பைத்தியம் பைத்தியம்ன்னு சொல்லிட்டு இருக்கீங்க? நான் பைத்தியம் தாண்டா, இந்த ஊருல இன்னும் நீதி ஜெயக்கும்ன்னு நம்பிட்டு இருக்கேன் பாரு நான் பைத்தியம் தான்!!” என்ற நிலாவை, “பாருங்க எப்டி வைலன்ட்டா பீகேவ் பண்றாங்கன்னு !! யாருக்கு தெரியும், இவளே இவ அப்பாவை லாரி முன்ன தள்ளி விட்டுட்டு இங்க இப்டி ஸீன் போடுறாலோ என்னவோ!” என்றார்.

ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தவளுக்கு இத்தகைய குற்றசாட்டு அவளை எல்லை மீறிய கோவத்திற்கு கொண்டு சென்றது. கீழே கிடந்த ஒரு அரை செங்கல்லை கையில் எடுத்தவள், அந்த டாக்டர் மீது முழு பலம் கொண்டு விட்டெறிந்தாள். அடித்த வேகத்தில் ரத்தம் கொப்பளித்தது. 

“நான் பைத்தியம்டா!! பைத்தியம் இப்டிதானே செய்யும்? வாங்குங்க எல்லோரும், உங்களை எல்லாம் கல்லால அடிச்சு தாண்டா கொல்லனும்!!” சொல்லிக்கொண்டே கற்களை எடுத்து அங்கிருந்த எல்லோர் மீதிலும் அவள் வீச தொடங்க, தெறித்து ஓடினர். 

ஒருகட்டத்தில் தேவி, வேணி, அதியன் யாராலும் அவளை அடக்க முடியாமல் போக, செவிலியர்கள் பலர் வந்து அவளை வலுக்கட்டாயமாக பிடித்து மயக்க மருந்தை செலுத்தினர். புலம்பிக்கொண்டே துடித்துக்கொண்டிருந்த நிலா, மயங்கி சரிந்தாள்.

இனியன் சொல்லி முடிக்க கேட்டுக்கொண்டிருந்த கோகுல், நிவேதா, குருநாதன் மூவரும் பேச்சின்றி கல்லாகினர் என்றால், நடந்த நிகழ்வு நினைவுப்படுத்தப்பட்டதில் வேணி தேவி அதியன் மூவரும் அந்நாளிர்க்கே சென்று வருந்திக்கொண்டிருன்தனர். 

“நிலாக்கு அதிர்ச்சில மனநிலை பாதிக்கப்பட்டுருக்குறதா சொல்லி மூணு மாச கட்டாய சிகிச்சைக்கு மனநல காப்பகம் அனுப்பிவச்சாங்க! உதவி கிடைக்கும்ன்னு நம்பி எஸ்.பி ஆபிஸ் போன என்னை விரட்டி அடிச்சாங்க! ஆக்சிடென்ட்ன்னு போட்டு கேஸை முடிச்சுட்டாங்க!!

எனக்கு நிலா முகத்துல முழிக்கவே சங்கடமா இருந்துச்சு, எல்லாம் என்னாலதான்னு ஒரு குற்றவுணர்வு!! குஜராத் விட்டு ஒரு வருஷத்துக்கு நான் வரவே இல்ல! மனசை தேத்திகிட்டு நான் வந்தப்போ, நிலா பாறையா இறுகிபோயிருந்தா!  என்னை பார்க்க கூட அவ இஷ்டப்படல! அதுக்கு மேல நானும் அவளை தொல்லை செய்யல!” 

“பதில் சொல்ற இடத்துல நம்ம இருக்க கூடாது, கேள்வி கேக்குற இடத்துல இருந்தாதான் மதிப்புன்னு அப்போ புரிஞ்சுகிட்டேன்!! DySP எக்ஸாம் கிளியர் செஞ்சு டைரக்ட் ப்ரோமோஷன்ல டி.எஸ்.பி ஆனேன்! 

நிலாகிட்ட மன்னிச்சுடுன்னு வார்த்தையால மன்னிப்பு கேட்க எனக்கு விருப்பம் இல்ல, அவ மனசு அமைதியடையுரமாறி ஏதாது செஞ்சுட்டு அதுக்கு பிறகு என் மன்னிப்பை கேட்கணும்ன்னு காத்திருந்தேன்! தப்பு செய்யுறவன் எல்லா நாளும் தப்பிச்சுட்டே இருக்க மாட்டான், என்னைக்காது ஒரு நாள் கண்டிப்பா மாட்டுவான், அன்னைக்கு ஒட்டுமொத்தமா சேர்த்து வச்சு செய்யணும்ன்னு இருந்தேன், நான் எதிர்பார்த்தமாறியே நடந்துச்சு!!!

மாமா கொலை கேஸ்ல அவனை உள்ள தள்ளிருந்தா பத்து நாள்ல ஜாமீன் வாங்கிட்டு வெளில வந்துருப்பான்! எனக்கு அது போதாது, அதுக்கும் மேல செய்யணும் அவனை! இத்தனை வருஷம் காத்திருந்ததுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சுருக்கு! என் நிலாவை கதற விட்டவன், நல்லாவே இருக்க கூடாது!!!

அவ பட்ட கஷ்டத்துக்கும் என் மாமாவோட சாவுக்கும் கண்டிப்பா ஒரு நீதி கிடைக்கும்! என் நிலாக்காக நான் எது வேணாலும் செய்வேன்”

தன் பின்னால் நிழலாட திரும்பியவன் அரை மயக்க நிலையில் கண்களில் கண்ணீரோடு நின்றுக்கொண்டிருக்கும் நிலாவை கண்டதும், “ஏன் நிலாம்மா அதுக்குள்ள எழுந்துகிட்ட? இன்னும் கொஞ்சம் தூங்குடா!!” என்று அவளை கைபிடித்து அறைக்குள் அழைத்து சென்றான். அவள் இனியனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் ஏதோ பேச வர, ‘உஸ்ஸ்’ “எதுவும் பேச வேணாம், நீ தூங்கு நல்லா!!! நான் உன்கூடவே இருக்கேன்!! எப்பவும் இருப்பேன்!! அதை மனசுல வச்சுக்கோ!!” அவள் சிகையை வருடிக்கொடுத்தபடி அருகே இருந்த இனியனின் கரத்தை பற்றிக்கொண்டே கண் மூடினாள் நிலா.

கிடச்சதை இழக்குறதும், இழந்தது கிடைக்குறதும்

அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி

குடுத்ததை எடுக்குறதும், வேறவொன்ன குடுக்குறதும்,

நடந்ததை மறக்குறதும் வழக்கம்தானடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

என் உயிரோட ஆதாரம் நீதானடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

யார் போனா என்ன நான் இருப்பேனடி

Advertisement