Advertisement

*21*

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்? 

பூமாலை செய்தேன் வாடுதே!!

என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ? 

வாராதோ அந்நாளும் இன்றே!!

பத்து வருடங்களுக்கு முன் இனியனும் நிலாவும் பிரிய காரணமாய் இருந்த அந்த நாள், நிலாவின் பதினெட்டாவது பிறந்தநாள்!!!

அதற்க்கு முந்தைய நாளில் சென்னையின் கடைகோடியில் வாகனநெரிசலும், ஜனக்கூட்டமும் அதிகம் இல்லாத அந்த ஏரியாவில் ஒற்றை படுக்கையறை கொண்ட அவ்வீட்டில் ஒன்றாய் அமர்ந்திருந்தனர் வேணியும் தேவியும்…

வேணி, “இதுவும் நம்ம ஊரு மாறி மரம் செடியோட நல்லா இருக்குல்ல?” சாம்பாருக்கு வெங்காயம் உரித்துக்கொண்டே சொல்ல,   

தேவி, “அடப்போ வேணி, என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாறி வருமா? இங்க எப்பபாரு வண்டிசத்தமும், புகையும்..!! நம்ம ஊருக்கு வெளில இருக்கோம், அதனால உனக்கு தெரியல! உள்ள போனா, சேர்ந்தாப்புல ரெண்டு மரம் பார்க்குறதே கஷ்டம்! ரோடு போடுறேன், பாலம் கட்டுறேன்னு எல்லாத்தையும் வெட்டிகிட்டு இருக்கானுங்க!!” என்றார் கத்திரிக்கையாய் நீட்டவாக்கில் அறிந்தபடி!

“மரத்தை வெட்டுரானுன்களா? அப்போ மழைக்கு எங்க போவாங்க? குடிதண்ணிக்கு என்ன பண்ணுவாங்க? இதெல்லாம் யோசிக்கமாட்டாங்களா?” பசுமை சூழ் இடத்திலேயே வாழ்ந்தவருக்கு தேவி சொன்னது வியப்பாய் இருந்தது.

“காசு குடுத்தா கடைல தண்ணீ கிடைக்கும்ன்னு நினைக்குறவங்களுக்கு மரத்தோட அருமை எங்கன புரியபோவுது! புரியுற நாள் கூடிய சீக்கிரம் வரும், அப்போ அடிச்சுக்குவாங்க பாரு!!” வெட்டிய காய்களோடு முற்றத்தின் ஒரு பகுதியில் சுவர் தடுத்து இருந்த அடுக்களைக்குள் சென்றார் தேவி. 

வெளிர்நிற பாவாடை தாவணியில் சலங்கை கொலுசு சத்தமெழுப்ப, ‘டங்கு டங்கு’கென வீட்டிற்க்குள் நடந்து வந்தாள் பள்ளிப்படிப்பை முடித்து விடுமுறையில் இருக்கும் இன்பநிலா. 

இரு பெண்களும் அடுக்களையில் நின்று பேசிசிரிக்க, தனக்கு துணையில்லாததால் உம்மென இருந்தாள். 

அவளை கவனித்த தேவி, “காலைல இருந்து வாசலுக்கு வீட்டுக்கும் மாறி மாறி நீ நடந்ததை ரோட்ல நடந்துருந்தாலும், இந்நேரம் குஜராத்து போயி உன் பத்துவை கையோட கூட்டிட்டு வந்துருக்கலாம்!” கிண்டலடிக்க, 

“அம்மாஆஆ! அது பத்து இல்ல ‘அத்தூ’” பல்லை கடித்தாள் நிலா.

“அதென்னடி அத்து, பொத்துன்னு! அழகா அத்தான்னு சொல்லி பழகு!! கல்யாணம் ஆனபின்னாடியும் இப்படியே சொல்லிக்கிட்டு சுத்துனா நல்லாவா இருக்கும்?” தாயாய் அவர் கண்டிக்க, “நான் ஏன் கல்யாணம் ஆச்சுன்னா அத்தூன்னு சொல்ல போறேன்!! டேய் இனியா, இங்க வாடா இனியா, சாப்பாடு ரெடியாடா இனியான்னு அதட்டி தான் சொல்லுவேன்!!” அவள் சொல்லி முடிக்கும் முன்னரே தலைமுடியை அள்ளிக்கட்டிய தேவி, “எடு வெளக்கமாத்த! கட்டிக்க போறவன மாமியா இருக்கபோவே மரியாதையில்லாம பேசுறியா?” அவர் துடைப்பத்தை எடுக்க, ஓடியே விட்டாள் நிலா.

வேணி, “விடு தேவி, சின்னபுள்ள தானே!?” தன் வருங்கால மருமகளுக்கு சப்போர்ட்டுக்கு வந்தார்.

“இப்படி செல்லம் குடுத்து குடுத்து தான் அவளை கெடுத்து வச்சுருக்கீங்க! ஹும்ம்” எடுத்த துடைப்பத்தை தூர வீசியவர் வேலையை பார்க்க சென்றார். வேணி, நிலாவை தேடி வெளியே செல்ல, காலியான அந்த சிறு வீதியையே ஆவலுடன் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் நிலாவை கண்டு அவர் மனம் இளகியது.

அருகே சென்று அவள் சிகை கோதியவர், “அவன் வரதுக்கு ராத்திரி ஆகிடும் கண்ணு, எதுக்கு வெயில்ல உட்காந்துருக்கவ?” என்றார் வேணி. இனியன் வர தாமதமாகும் என நிலாவுக்கும் தெரியும். ஆனாலும் அவளால் பொறுமையாய் இருக்க முடியவில்லை. அவனை காண போகும் ஆவலில் அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டிருந்தாள்.

“உள்ளே வந்தாலும் போர் அடிக்கும் ஆன்ட்டி! நான் இங்கயே இருக்கேனே ப்ளீஸ்” நிலா சொல்ல, “அவ கருவாடா காயட்டும், விடு வேணி! இங்க வந்து அடுப்பை கவனி!” உள்ளிருந்து தேவி கத்த, உதட்டை சுளித்தாள் நிலா. சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார் வேணி.

“செழியன் மேல என் குட்டி மருமவளுக்கு எவ்ளோ பாசம் பாரு!!” வேணிக்கு பெருமிதம்!!

“சின்ன வயசுல இருந்தே ஒன்னு மேல ஒன்னு ஆசையா இருக்குறதை தான் பார்க்குறோமே வேணி! இன்னும் ஒரு வருஷம் போட்டும், கல்யாணத்தை முடிச்சு விட்டுருவோம்! அதுக்கு பிறகு படிக்குறதுன்னா கழுதை படிச்சுகட்டும்!!” 

வெளியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த நிலாவுக்கு எழுந்து குத்தாட்டம் போட வேண்டும் போல இருந்தது சந்தோசத்தில்!

“செழியன் ஒரு வேலைல நிக்கட்டும் தேவி, இப்போதான் ஏதோ பரிட்சைல பாசாயிருக்கேன்னு சொன்னான்! பாப்போம்!! இப்போ நிலாக்கு கல்யாணம் பண்ற வயசும் இல்ல, குடும்ப வாழ்க்கையை தாங்குற பக்குவமும் இல்ல!!” வேணி முடிக்க, ‘டேய் இனியா, உங்கம்மா என் ஆசைல அரளிவிதையை அறைச்சு ஊத்துராங்கடா!!’ காண்டானாள் நிலா. 

சிறிது நேரத்தில் பேச்சு திசை மாறியது. “அதியனும் வீட்டுக்கு வந்துருந்தா நல்லா இருக்கும்!!” தேவி கவலையாய் சொல்ல, “அவனுக்கும் ஆசை தான், ஒரே ஊருல இருந்துகிட்டு வீட்டுக்கு வர முடியலயேன்னு! இப்பதானே வேலைல சேர்ந்துருக்கான், நைட் டியூட்டி தான் போடுறாங்க போல! பாவம் புள்ள சாப்பாட்டுக்கு என்ன செய்யுரானோ?! ருசியா கிடைக்குதோ இல்லையோ? ஹும்ம்! அவன் ஏரியால இருந்து இங்க வந்து போகவே அவனுக்கு நாலஞ்சு மணி நேரம் ஆகுமாம்! அதான் வாரக்கடைசில வாடான்னு சொல்லிட்டேன்” என்றார் வேணி இளையமகனின் நினைவில்.

நிலா மனதுக்குள், ‘நைட் டியூட்டி பார்க்க அவன் என்ன வாட்ச்மேனா? ஏ.சி ரூம்ல ஜம்முன்னு உட்காந்து சீட்டை தேய்க்குற ஐ.டி வேலைதானே பார்க்குறான்! அதுக்கே இத்தனை கவலை! நம்மாளு ஊரு ஊரா சுத்துறான், அவனை யாரும் கண்டுக்குறது இல்ல! ஹும்ம்’ என பொருமினாள்.

தேவி, “புள்ளைங்க எல்லாம் மடமடன்னு வளர்ந்து நிக்குதுங்க! கூட இருந்து கண்ணார பார்க்க அண்ணனுக்கு குடுத்து வைக்காம போச்சே!!” சில வருடங்கள் முன்பு மாரடைப்பால் இறந்துபோன வேணியின் கணவனை நினைத்து தேவி வருத்தமடைய, வேணியோ திடமாய், “அவர் ஆயுசு முடிஞ்சுது போயிட்டாரு! நம்ம என்ன செய்ய முடியும் சொல்லு!? அவர் எங்களுக்குன்னு வச்சுட்டு போனதே என் ஆயுசுக்கும் போதும், புள்ளைங்களும் தலையெடுத்துடுச்சு, இனி அதுங்க என்னை பார்த்துக்க போதுங்க!” வேணி என்னதான் லேசில் சொன்னாலும் இளம்வயதில் தன்னை விட்டு சென்ற கணவரை நினைக்கும்போதெல்லாம் அவர் சக்தியற்று போய்விடுவார்.  

“புருஷனை பறிகுடுக்குற வயசா வேணி உனக்கு? என்னதான் நீ திடமா பேசுனாலும், உன் வெறும் நெத்தியை பார்க்குறப்போ எல்லாம் என் மனசு கணக்குது!” தன் தோழிக்காக உண்மையாய் வருந்தும் தேவியின் நெற்றியில் இருக்கும் குங்குமமும் கழுத்தில் தொங்கும் தாலியும் பொழுது விடியும் வரை கூட தனக்கு சொந்தமாய் இருக்க போவதில்லை என்பதை அவர் அறியார்!

கேட்டுக்கொண்டிருந்த நிலா, பேச்சு வருத்தமாய் சென்றுக்கொண்டிருப்பதை கண்டு உள்ளே வந்து, “ம்மா!! அப்பா எப்போ வருவாங்க?” என்றாள்.

“நாந்தான் பொட்டலம் கட்டி வச்சுருக்கேன் உங்கப்பனை! என்கிட்ட வந்து கேளு, போடி அங்குட்டு!” தேவி எரிந்து விழ, முகம் விழுந்து போனது நிலாவுக்கு.

“எதுக்கு சின்ன புள்ளையை திட்டுற தேவி?” வேணி அவரை அதட்டினார்.

“எனக்கு மட்டும் என்னன்னு தெரியுமாம்!? பெரிய ஆபிஸ்ல கூப்பிட்டாங்கன்னு பம்பாயி கிளம்பி போனவரு, பத்து நாளா ஆளே காணோம்! ஊருல இருந்த உங்களை எனக்கு துணைக்கு வரவழைச்சுட்டு மனுஷன் அங்க நிம்மதியா ஊரை சுத்தி பார்க்குறாரு போல!” இரண்டு நாட்களாய் அவரிடம் இருந்து போன் வராத கடுப்பில் பேசினார் தேவி. 

“செழியன் வரட்டும், போன் போட சொல்லுவோம்!!” அது கைபேசி அதிகமாய் புழக்கத்தில் இல்லாத காலகட்டம். லேண்ட்லைன் மட்டுமே அரிதாக சிலர் வீட்டில் இருக்கும்! தேவியின் வீட்டிலும் அது இருந்தது, ஆனால், மும்பை சென்றிருந்த அவர் கணவரை எப்படி தொடர்பு கொள்வது என அவருக்கு தெரியவில்லை! அவராகவே அழைத்தால் உண்டு. போனதில் இருந்து தினம் ஒருமுறை பேசியவர், இரண்டுநாட்களாய் தொடர்பே இல்லை!

அந்நேரம் பக்கத்து வீட்டு பெண்மனி சத்தமாய் குரல் கொடுத்தார். “தேவிக்கோவ்! ஓடிவாங்க! உங்க புருஷனை டிவில காட்டுறாங்க!!” போட்டது போட்டபட்டி மூவரும் பக்கத்து வீட்டிற்க்கு ஓடி சென்றனர். தலைப்புசெய்திகள் முடிந்து விரிவான செய்திகள் ஆரம்பித்திருந்தது.

“எங்கடி அவரு? காட்டுறாங்கன்னு கூப்புட்ட, ஒண்ணுத்தையும் காணோம்!” தேவி சொன்னதும், “செய்தில தான் காட்டுனாங்க பொறுங்க, அவர் நியூஸ் வரும்” என்றார் அந்த பெண்மணி.

“தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று மக்கள் ஆட்சி கழகத்தின் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றிருக்கும் திரு.சதாசிவம் அவர்கள், தன் அரசியல் வாழ்கையின் வெற்றிக்காக பதினேழு குழந்தைகளை நரபலி கொடுத்தது தொடர்பான விசாரணையில், உண்மை வெளிவந்துள்ளது. 

அவருக்கு சொந்தமான பண்ணைவீட்டின் தோட்டத்தில் பதினேழு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேல்முறையீட்டு விசாரணைக்காக திரு.சதாசிவம் நேற்று முன்தினம் மும்பை சென்றிருந்த நிலையில், வழக்கு வரும் இருபதாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

நரபலி நடந்ததற்காக சாட்சிகள், ஆவணங்கள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும், நீதியின் கைகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும், சுடரொளி பத்திரிக்கை நிருபர் திரு.சுந்தரம் அவர்கள் மும்பையில் இருந்து நம்மிடம் சொன்னது!

‘நான் எதுக்கும், யாருக்கும் பயப்படல! அவங்ககிட்ட அதிகாரம் இருக்குதுன்னா, என்கிட்ட உண்மை இருக்கு!   வழக்கு எத்தனை நாள் தள்ளி போனாலும் சரி, உண்மை ஒருபோதும் மாறபோறது கிடையாது

நிலா, “அம்மா, அப்பா பேசுறாரும்மா! ஹே எங்கப்பாவ பாருங்கடி” சுற்றி இருந்த தன் தோழிகளிடம் சொல்லி சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தாள். தன் தந்தையை தொலைகாட்சியில் பார்த்ததும் அவளுக்கு இருப்பே கொள்ளவில்லை.

வேணி, “அண்ணே என்னமா பேசுது பாரு!!”

சுற்றியிருந்தோரும் “நீதி நேர்மைன்னு வெட்டி நியாயம் பேசிட்டு இருக்காருன்னு பார்த்தா டிவி பொட்டிலையே வந்துட்டாரே! இனி தேவியை கைல பிடிக்க முடியாது” கலகலவென சிரிக்க, தேவிக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாய் இருந்தாலும், மனம் திடீரென பிசைவதை போல இருந்தது. தன் கணவரை உடனே காண வேண்டும் போல ஓர் உணர்வு! 

தங்கள் வீட்டிற்க்கு வந்தபின்னரும் வேணியும் நிலாவும் சுந்தரத்தை பெருமையாய் பேசிக்கொண்டிருக்க, தேவி மட்டும் மௌனமாய் இருந்தார். ‘இந்த மனுஷனுக்கு எதுக்கு இந்த வேலை? எவன் எப்டி போனா என்னனு இருக்க வேண்டியது தானே!?’ என்று தோன்றியது. 

வீட்டின் அலைபேசி ஒலிக்க, அது தன் கணவராக மட்டுமே இருக்கும் என அறிந்த தேவி ஓடி சென்று எடுத்தார். 

“என்னங்க??”

“ஹாஹா!! கோவமா இருப்பன்னு பார்த்தா ஆசையா கூப்புடுற?” சுந்தரம் தான் பேசினார்.

“கோவம் தான்! நேர்ல வாங்க மூக்குல மொளகா வச்சு தேய்க்குறேன்” இரண்டு நாட்கள் சென்று அவர் குரல் கேட்டதிலேயே கோவம் பறந்துவிட்டது தேவிக்கு!

“அம்மாடியோ! அப்போ நான் வீட்டுக்கே வரல! இப்டியே எங்கயாது போய்டுறேன்! ஹாஹா” சிரிப்பு மறையாமல் பேசினார் சுந்தரம்.

“ஆங்! போவீங்க போவீங்க! உங்கள அப்டியே விட்டுடுவேன் பாருங்க!!” தேவியும் விளையாட்டாய் பேச, பதின்வயது பிள்ளைக்கு பெற்றோர் என்பதையே மறந்து தங்கள் உலகில் லயித்திருந்தனர். 

“எப்போங்க வரீங்க? உங்கள பார்க்கணும் போல இருக்கு?”

“விடியகாலைல ரெண்டு மணிக்கு ப்ளைட்டு, அதுக்கு முன்ன எதுவும் இல்லை! ரெண்டுக்கு ஏறுனா எப்டியும் நாலு மணிக்கு எறங்கிடுவேன், வீட்டுக்கு வர ஆறு ஏழு ஆகிடும்ன்னு நினைக்குறேன்!!” என்றதும், தேவிக்கு அவரை காணபோவதில் அத்தனை உவகை!

“பாத்து பத்திரமா வந்து சேருங்க!!” தேவி சொன்னதும் சத்தமாய் சிரித்த சுந்தரம் “நான் என்ன குழந்தையா? என்னை யாராது கடத்திட்டு போக?” என்றார். 

பின், “தேவிம்மா! இந்த பத்து நாள்ல உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா? உன் சமையல, உன் அருகாமைய, என் பேச்சை!! எல்லாத்தையும்!! எப்போடா உன்கிட்ட வருவோம்ன்னு இருக்கு” மிருதுவாய் போனது அவர் குரல்.

தேவிக்கும் அதே நிலைதான்! வாய்விட்டு சொல்ல வெட்கம் தடுக்க, “விவஸ்த்த கெட்ட மனுஷன்யா நீ!” செல்லமாய் அலுத்துக்கொண்டார்.

“நிலாகுட்டி எங்க?” சுந்தரம் கேட்க, “அவ வாசலையே கதின்னு காலைல இருந்து தேவுடு காத்துட்டு இருக்கா! இனியன் வந்தாதான் உள்ளே வருவா” என்றிட, “இனியன் சென்னை வந்து ரெண்டு நாள் ஆச்சே! இன்னுமா வீட்டுக்கு வரல?” என குண்டை தூக்கி போட்டார் சுந்தரம்.

“அப்டியா? தம்பி இன்னும் வீட்டுக்கு வரலையேங்க!” கவலை தொத்திக்கொண்டது அவர் குரலில்! 

இனியனை பற்றி நன்கு அறிந்தவரானதால், “ஏதாது வேலையா போயிருப்பான், நீ எதுவும் சொல்லி வேணியை கலவரப்படுத்தாத! நாளைக்கு காலைல வரைக்கும் பாரு, அப்பவும் வரலன்னா நான் வந்து பார்த்துக்குறேன்” என்றார் சுந்தரம். இன்னும் சில பேச்சுகளுக்கு பின் அழைப்பு துண்டிக்கப்பட்டது. 

நேரம் செல்ல, “ராத்திரி சாப்பாடு வீட்லையா இல்ல அதையும் ரோட்ல உட்காந்து திங்கபோறியா?” தேவி கேட்ட தொனியே, ‘இப்போது வீட்டிற்க்குள் வரவில்லையேன்றால் அடி எதால் விழும் என தெரியாது’ என்று நிலாக்கு மொழிபெயர்ப்பாக்கி ஒலிக்க, மனமேயின்றி அந்த தெருவை எட்டி எட்டி பலமுறை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். 

தட்டில் சாதமும் சாம்பாரும் இடம் பெற்றிருக்க, நிலாவின் தலை தட்டை நோக்கி குனிந்திருந்தாலும், கண்கள் வாசல்படியையே ஆவலாய் பார்த்தது. இரண்டு கவளம் அவள் உள்ளே தள்ளும்போது வாசலில் பைக் சத்தம் கேட்க, எச்சில் கையோடு குடுகுடுவென வாசலுக்கு ஓடினாள் நிலா.

தேவி, “பட்டாசு கட்டிவிட்ட மாடாட்டம் ஓடுறதை பாரு!” அவர் கத்தியதெல்லாம் அவள் செவியை எட்டவில்லை. வாசலில் ஆவலாய் அவள் நிற்க, பைக்கை ஸ்டேன்ட் போட்டு நிதானமாய் நிறுத்திவிட்டு அவளை பார்த்து சிரித்தார் எதிர்வீட்டு கிட்டு மாமா!

மின்னல் வேகத்தில் மலர்ந்த முகத்தோடு சென்றவள், ஆமை வேகத்தில் வதங்கிய முகத்துடன் உள்ளே வந்தாள்.

“வாசல் வரைக்கும் வரவனுக்கு வீட்டுக்குள்ள  வர வழி தெரியாமா போய்டுமா? நீ ஏன் இப்படி அங்கயும் இங்கயும் உருண்டுட்டு இருக்க?” மனம் கேளாமல் வேணியும் கேட்டுவிட அவளுக்கு கண்கள் கரித்தது. காலையில் இருந்து அவனை காண காத்திருந்த ஏமாற்றம் அவளுக்கு அழுகையாய் மாற, பதிலின்றி உணவை முடித்துக்கொண்டு படுக்கைக்கு சென்றுவிட்டாள். 

அந்த வீதியே நிசப்தத்தை தத்தெடுத்தது போல இருக்க, வீட்டின் முற்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த நிலாவின் காதுகளில் மெல்லிய சிலிர்ப்பு. லேசாக முண்டினாள். சில வினாடி இடைவெளியில் காதின் புறமடலில் இதமான குறுகுறுப்பு, நிற்காமல் தொடர்ந்தது. கையால் தட்டிவிடபோக, யாரோ அவள் கையை அழுந்த பற்றியதை போல உணர்வு. வெடுக்கென கண் திறந்தாள். 

அரையிருட்டிலும் அழகான புன்னகையோடு தெள்ளத்தெளிவாய் அவள் கண்களுக்கு தெரிந்தான் இனியன் இளஞ்செழியன்.  உவகைமிகுதியில் அவள் “அத்தூஊஊஊ” என்று அவன் மேல் தாவிக்கொள்ள பார்த்தவளின் வாயை வேகமாய் போத்தி அடக்கினான் இனியன். பின், நொடியில் அவளை தூக்கிக்கொண்டு சத்தமின்றி அங்கிருந்த சிறு அறைக்குள் சென்றவன் இறக்கிவிட்டான்.

இறக்கிவிட்ட மறுநொடி அவன்மீது தாவியிருந்தாள் நிலா. சில நேரம் அப்படியே அணைத்தபடி இருவரும் நிற்க, நிலாவின் விசும்பல் சத்தத்தில் அவளை தன்னிடம் இருந்து பிரித்தான் இனியன். 

நிலா, “ஏன் நீ வரதுக்கு இவ்ளோ லேட்டு?” கண்ணை கசக்கிக்கொண்டே கேட்டதும், அவள் தலையில் செல்லமாய் கொட்டியவன், “நான் வர நைட்டாகும்ன்னு சொல்லியும், உன்னை யாரு பகலெல்லாம் வெயிட் பண்ண சொன்னா?” என்றான் இனியன்.

“ப்ச்! போ!!” உரிமையாய் முகத்தை தூக்கிகொண்டாள். அவளை சமாதானம் செய்யாமல் தன் கைகடிகாரத்தை இருட்டில் உற்று பார்த்தவன், “பூம்!! டுமீல்!!!” அவளுக்கு மட்டும் கேட்கும்படி விதவிதமாய் ஆர்பரித்து, “என் நிலாகுட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹேய்ய்ய்” என்று மெதுவாய் கைதட்டினான்.

“ஹை!!!!” நின்ற இடத்திலேயே குதித்தாள் நிலா. “ஐ லவ் யூ அத்தூ” மீண்டும் அவன் மீது அவள் தாவிக்கொள்ள, “இனி வரபோற அத்தனை வருஷமும் நீ இதேபோல சந்தோசமா இருக்கனும் குட்டி! அடுத்த வருஷ பிறந்தநாள நீ என் பொண்டாட்டியா தான் கொண்டாடுவ!!” என்று ஆசையாய் அவள் நெற்றியில் முத்திரையிட்டான். 

அதை கேட்டு சந்தோஷப்பட வேண்டியவளோ, “போ அத்தூ! நமக்கு இப்போதைக்கு கல்யாணம் நடக்காது!” நல்ல நேரத்தில் அபஸ்வரமாய் அவள் வாயை விட இனியனின் ‘ஏன்’னென்ற கேள்விக்கு காலை வேணி பேசியதை சொன்னாள்.

கள்ளசிரிப்பு சிரித்தவன், “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றான். தான் சொன்னதற்கு பதில் சொல்லாமல் அவன் வேறு விசயத்திற்கு தாவுவதை கண்டவள், “என்ன சர்ப்ரைஸ்?” என்றாள் ஆர்வமின்றி!

தன் பாக்கெட்டில் இருந்து சிறு டப்பாவை வெளியே எடுத்த இனியன், அதை திறந்து அவள் முன் நீட்டியபடி, “டொன்டடொயிங்” என்றான் ராகமாய். அதில் இருந்ததை கண்டவளுக்கு கண்கள் மின்னியது. 

“ஹையோ அழகா இருக்கு அத்து!!!” அவன் கையில் இருந்து அதை வாங்கி அருகே வைத்து பார்த்தாள் நிலா.

“ஏய்! இருட்டுல நானே உனக்கு சரியா தெரிய மாட்டேன்! இதுல இந்த மோதிரம் தெரியுதா?” என்று வம்பிழுக்க, “நீ வாங்கி குடுக்குற எல்லாமே அழகா தான் இருக்கும்!” ஆசையுடன் தொட்டு பார்த்தாள்.

மோதிரத்தை எடுத்த இனியன், அவள் விரல் பிடித்து மெதுவாய் அணிவித்தான். “என் நிலாகுட்டிக்கு என்னோட குட்டி கிப்ட்! இப்போ இருந்து நீ என்னோட பொண்டாட்டி! கல்யாணம் நடக்கும்போது நடக்கட்டும்!!” என்று அவள் விரலில் அழுந்த முத்தமிட்டான். நிலாவுக்கு நாணத்தில் பேச்செழவில்லை.

“சர்ப்ரைஸ்ன்னு சொன்னேனே! என்னனு கேளு” அவளை அவன் தூண்ட, அவள் மோதிரத்தை காட்டினாள். ‘அது இல்லை’ என தலையசைத்த இனியன், “மோதிரம் சர்ப்ரைஸ் இல்ல, அதை என்னோட முதல் மாச சம்பளத்துல வாங்கிருக்கேன், அதுதான் சர்ப்ரைஸ்” என்றதும் அவளால் நம்பமுடியவில்லை!

“நீ வேலைக்கு போறியா?” நம்பாமல் அவள் கேட்க, “ஆம்..மா” என்றான் ஸ்டைலாய்.

“என்ன வேலை? எங்க இருக்க? எப்போ கிடைச்சுது? ஏன் என்கிட்ட சொல்லல?” நிலாவின் கேள்வி கணைகள் பாய்ந்துக்கொண்டே இருக்க அவள் இதழ்களை தன் விரல்களால் அடைத்தவன், “கேள்வி கேட்டே கொல்லுவியே நீ?” செல்லமாய் அலுத்துக்கொண்டு, “எல்லாமே சொல்றேன், ஆனா காலைல சொல்றேன்” என்றான். அவன் விரல்களை தட்டிவிட்டவள்,  “இப்போவே சொல்லு அத்தூ ப்ளீச்!!” இறைஞ்ச அவன் கவனம் சிதறியது. 

அவள் சிகைக்குள் நாவிரலை விட்டு காதோடு அழுந்த பிடித்து அவள் முகத்தை தன்னோடு இழுத்தவன் அவள் இதழ்களை கண்களால் பருகிக்கொண்டிருந்தான். அவன் சுவாசம் நெருக்கத்தில் தன்மீது வீச கண்களை இறுக்க மூடிக்கொண்டே எதையோ எதிர்பார்த்தபடி நின்றிருந்தாள் நிலா. 

நிமிடங்கள் கடந்தாலும் அவள் உணர்வுக்கு எதிர்வினை எதுவும் இல்லாமல் போக கண் திறந்து பார்த்தால், இன்னமும் அவன் பார்வை அவள் இதழ்களை விட்டு அகலவேயில்லை!

அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்ட நிலா, “சும்மா பாத்துட்டே நிக்கதான் இவ்ளோ பக்கமா வந்தியா? போடா தண்டம்!! நீ பார்த்துட்டு மட்டுமே இரு!!” கோவமாய் சொல்ல, தள்ளி போனதை விட வேகமாய் வந்து அவள் மீது மோதி நின்றான் இனியன். சுவரோடு சுவராய் அவள் ஒட்டிவிட, அவளையே சுவராக்கி சாய்ந்து நின்றான் அவன்.

“சின்ன பொண்ணாச்சேன்னு ஒதுங்கி நின்னா, என்னையே தண்டம்ன்னு சொல்றியா நீ?” கோவம் போல கேட்டான் இனியன்.

“யாரு சின்ன பொண்ணு? இப்போ எனக்கு ஓட்டு போடுற வயசாச்சு மிஸ்டர்!!” கெத்தாய் சொல்லிட, “ஹோ! அப்போ நீ பெரிய மனுஷியாகிட்ட?”

நிலா, “ம்ம்ம்”

“அப்போ ஏதாது பண்ணலாம்!!?” இன்னும் அவள்மீது நெருக்கமானான் இனியன். அத்தனை நெருக்கத்தில் முதன்முறையாய் அவன் நிற்க, அவள் பொன்னுடல் இன்பமாய் நடுங்கியது.  இதழ்களை மெல்ல வருடியவன் மெதுவாய் தனதிதழ்களை அவளோடு பொருத்தினான். 

இருவருக்குமான முதல் இதழ் முத்தம். மெல்ல தொடங்கியது மெல்ல மெல்ல வேகமெடுத்தது. தொடங்கியது அவனாயினும், தொடர்வது யாரென அறியமுடியவில்லை. முத்தம் யுத்தமாய் அங்கே நடந்தேற இதழ்கள் ஓய்வு வேண்டி கெஞ்சவே விருப்பமேயின்றி சிறு இடைவெளி விட்டனர் இருவரும்…

அந்த முத்தத்திற்கு பின் நிலாவின் மீதான இனியனின் பார்வை இதுவரை இல்லாதாது போல் புதுவிதமாய் மாறியது. ரசனையாய் அவளை பார்த்தான்.

“உன் உதட்டுல ஏதோ ஒன்னு இருக்கு!!” எப்போதும் சொல்லும் அதையே அந்நேரமும் அவன் சொல்ல, “இப்போகூடவா உனக்கு தெரியல?” அவனை குறும்பாய் பார்த்து கண்ணடித்தாள் நிலா.

“மறுபடியும் தேடி பார்க்கவா?” அவனும் சளைக்காமல் காதல் பேச, “போ அத்தூ, உதடு இப்போவே எரியுது!” என்றாள் நிலா.

“இதழி……!!”

“என்ன அத்தூ?”

“இ..த…ழி…”

“அது யாரு?” 

“நீதான்!! உனக்கு இந்த பேரு தான் அம்சமா இருக்கு!”

“அப்டியா? எப்போ வச்ச பேரு இது?”

“இப்போதான், உன் உதட்டுல இருந்து தேன் எடுக்கும்போது!”

“ப்ச்! போ அத்தூ!!” அவன் மீதே சாய்ந்துகொண்டாள். 

“அப்போ இனி என்னை இதழின்னு தான் கூப்புடுவியா?” 

“நம்ம இப்டி இருக்கும்போது கூப்புடுவேன்!” அவளை இறுக்கி அணைத்தபடி சொன்னான் இனியன்.

“இ..த…ழி..!!” சொல்லிபார்த்த நிலா, “அழகா இருக்கு” என்று சிரித்தாள்.

“எங்கே நீ ஒருமுறை சொல்லு!!”

“ஒன்னு என்ன? நூறுமுறை சொல்லுவேன், இதழி, இதழி இதழி இதழி!! என் இதழிகுட்டிடிஈஈஈஈ” ஆர்வமிகுதியில் வாய்விட்டு கத்திவிட்டான் இனியன். அவ்வளவு தான் முற்றத்தின் விளக்குகள் பளிச்சென எரிந்தன. 

வேணியும் தேவியும் அரக்க பறக்க அவர்கள் இருந்த இடத்திற்கு வர, சங்கோஜமாய் போனது இருவருக்கும். 

தேவி தன் மகளை முறைக்க, வேணி இனியனை எரிபார்வை பார்த்தார்.  

வேணி, “இது என்னடா திருட்டுத்தனமா வீட்டுக்குள்ள வர பழக்கம்?” அதற்க்கு மேல் என்ன சொல்லி வெளிப்படையாய் திட்டுவதென தெரியாமல் பல்லை கடித்தார்.

இனியன், “அது.. அதுங்கம்மா???” அவன் இழுக்க அவன் பின்னே ஒளிந்திருந்த நிலாவை, “வாடி இங்குட்டு” என கத்தினார் தேவி.

“மாட்டேன்! வந்தா அடிப்பீங்க!!” பயந்து போய் சொன்னாள் நிலா.  

இரு தாயாரும் தங்கள் பிள்ளைகளின் மீது கடுங்கோவத்தில் இருக்க, “இப்போ எதுக்கு ரெண்டு பேரும் முறைக்குறீங்க? நாங்க என்ன தப்பு பண்ணிட்டோம்?” என்றான் இனியன்.

“……..”

“நிலாக்கு இன்னைக்கு பிறந்தநாள், தனியா பேசனும்ன்னு இங்க கூட்டிட்டு வந்தேன்! என் மேல நம்பிக்கை இல்லனா சொல்லுங்க, நான் இப்போவே இந்த வீட்டை விட்டு போய்டுறேன்!!” இனியன் கோவமாய் பேசும் ரகம் இல்லையென்பதால் முதலில் அவன் பேச்சு வியப்பாய் இருந்தாலும், “நம்பிக்கை அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு தம்பி? திடீர்ன்னு சத்தம் கேட்டதும் கொஞ்சம் பயந்துட்டோம்” என சமாளித்தார் தேவி. என்ன இருந்தாலும் வருங்கால மருமகனாச்சே!

அதற்குமேல் அதைப்பற்றி பேசாமல், “நான் ஏர்போர்ட் போய் மாமாவ கூட்டிட்டு வரேன், இப்போ கிளம்புனா தான் நாலுக்குள்ள அங்க போக முடியும்!!” என்றான் பொதுவாய்.

வேணி, “மணி ஒன்னாக போகுதேடா? நடுராத்திரில நீ போணுமா?” என்றார். 

“போனும்” ஒரே வார்த்தையில் நிறுத்திக்கொண்டான். மகனுக்கு தன் மீது கோவம் என்பதை புரிந்துக்கொண்டார் வேணி, உடனே “சரி போயிட்டு வா” என்றுவிட்டார்.  

அவனை நகரவிடாமல் கையை அழுத்தி பிடித்துக்கொண்டிருந்தாள் நிலா. “போயிட்டு வந்துடுறேன் நிலாம்மா” இனியன் சொல்ல, அவளுக்கு தன் அன்னையை பார்க்கவே பயமாய் இருந்தது. வேணி விழபோகும் அடியில் இருந்து காப்பாத்துவார் என்றாலும், இனியன் உடன் இருப்பது போன்ற பயமின்மை அவரிடம் இராது.  அதுவுமின்றி அவனை விட்டு இருக்க அவளுக்கு மனமில்லை.

“நானும் உன்னோட வரேன்” 

தேவி, “நீ என்கிட்ட வகையா வாங்குவடி சொல்லிட்டேன்!! ஒழுங்கு மரியாதையா வீட்ல இரு”

“அத்தூ, விட்டுட்டு போகாத அத்தூ”

தேவி, “என்னை பார்த்தா அரக்கி கணக்கா இருக்கா? வெளுத்துடுவேன் பாரு”

“நீ இருக்கும்போதே எப்டி பேசுது பாரு அத்தூ”

தேவி, “இங்க வந்தியா இல்லையா நீ?”

அமைதியாய் இருந்த இனியன், “ராத்திரி நேரம் உன்னை எப்டி அழைச்சுட்டு போறது நிலா?” என்றான்.

“எனக்கு பர்த்டே தானே!? என்னை அழ வைக்காத இன்னைக்கு.. ப்ளீஸ்” என்றாள் விசும்பலோடே!

தேவி, “அடி விழாம நீ நகர மாட்டடி” ஆயுதத்தை எடுக்க அவர் விரைய, “நான் அவளை கூட்டிட்டு போறேன்!!” என்றான் இனியன்.

வேணி குறுக்கிட்டு, “அவதான் சின்ன பொண்ணு, புரியாம பேசுறா! நீயும் ஏண்டா இப்டி பண்ற?” 

அவள் கை இன்னும் அழுத்தமாய் அவனை இறுக்கியது. 

இனியன், “உங்களை விட அவ எனக்கு முக்கியம்! நான் பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வரேன்!!” 

தேவி, “உன்கூட அனுப்புறதுல எந்த கவலையும் இல்ல தம்பி, ஆனா ராத்திரி நேரமா இருக்கேன்னு தான் யோசிக்குறேன்”

“நான் பார்த்துக்குறேன்” என்ற இனியன், தாமதிக்காது வெளியேறினான். 

தன் பைக்கில் அவளை அமரவைத்து விமானநிலையத்துக்கு செல்ல, வழிமறித்த பாதுகாவலர்களிடம் தன் அடையாள அட்டையை காட்டியதும் உடனே அனுப்பிவிட்டனர். நிலா அதைஎதும் கவனிக்கவில்லை. நள்ளிரவு நேர பைக் பயணத்தை ரசித்துக்கொண்டு சென்றாள். 

“இப்போ சந்தோசமா?” அவன் கேட்க, “ரொம்….ம்ம்ம்…..ப” என்று மிகமகிழ்ச்சியாய் சொன்னவளின் உவகை உருத்தெரியாமல் போக இன்னும் சில மணி நேரங்களே மீதம்!!!

Advertisement