Advertisement

*20*

உன்னிடம் சொல்வதற்கு, என் கதை பல காத்திருக்கு!

இரு கண்களின் தந்திகளால், அதை கடந்திட சொல் எனக்கு!!

மறுநாள் பொழுது விடிந்தபோது வீடே அமைதியாய் இருந்தது. கடந்த காலத்தின் தாக்கத்தில் வேணியின் தோள் சாய்ந்து, தேவி மௌனமாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். நேரம் நகர, தன்னறையில் இருந்து வெளியே வந்த நிலா, இனியனை காணாது, “அத்தே, இனியா எங்க? என்றாள். 

“நான் உன்கூட இருக்கான்னு நினைச்சேனே? நான் எழுந்ததுல இருந்து இன்னும் அவனை பார்க்கல வேணி சொல்லிட, ‘உம்மமென்ற முகத்துடன் வந்து சோபாவில் அமர்ந்தாள் நிலா.

வேணி, “காபி குடிக்குறியா நிலா?

நிலா, “ப்ச், எனக்கு ஏதும் வேணாம் போங்க!!

வேணி, “ஏன்டா கண்ணு?

நிலா, “இன்னைக்கு என் பர்த்டே! யாருக்காது நியாபகம் இருக்கா? மிட்நைட் விஷ் பண்ணலன்னா கூட பரவால்ல, காலைல எழுந்ததுமாவது பண்ணிருக்கலாம்ல? ஏதாது சர்ப்ரைஸ் வச்சுருப்பான்னு பார்த்தா, வீட்ல ஆளே காணோம்!!! முகத்தை சுருக்கி கொள்ள ‘தேவிக்கு இது தன் மகளா? என்று இருந்தது. அவள் தந்தையின் இறப்புக்கு பிந்தைய ஒரு பிறந்தநாளையும் அவள் கொண்டாடியது இல்லை. ஆசையாய் வாழ்த்து சொன்னாலோ, இனிப்பு கொடுத்தாலோ எரிந்து விழுந்தவள், இன்று அவளே வாய்விட்டு கேட்கிறாள் எனில், அது இனியனின் அன்பால் விளைந்த மாற்றம் என உணர்ந்தார் தேவி.

வேணி, “அட, என் மருமவளுக்கு பொறந்தநாளா இன்னைக்கு!! உங்கம்மா கூட சொல்லல பாரேன்!! எழுந்து அவளருகே சென்றவர், திருஷ்டி வழித்து, “நல்லா இருடி என் தங்கம்!! பொறந்தநாள் வாழ்த்துக்கள் என்றார். அவர் செய்கையில் மெலிதாய் வெட்கம் வந்தது நிலாவுக்கு. 

வேணி, “இனிப்பு செய்யுறேன் இரு அவர் நகர,

தேவி தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு,  “இனிப்பு என்ன, விருந்தே வைக்குறேன்!! என்றார். அவருக்கு அத்தனை சந்தோஷம்!! 

நிலாவும் குளித்து முடித்து வழமைப்போல் ஒரு சுடிதாரை கையில் எடுக்க, அவள் கண்ணில் பட்டது ஒரு கவர். உள்ளுக்குள் குதூகலிப்பு, இனியன் தனக்காக வாங்கி வைத்திருப்பான் என அவள் மனம் சொன்னது. ‘திருடன்! கைல குடுத்தா என்னவாம்!? வாங்கி ஒளிச்சு வச்சுருக்கான்!! திட்டுவது போல தன்னவனை கொஞ்சிக்கொண்டாள் பெண்ணவள். 

கவரை எடுத்து திறந்து பார்க்குமளவு கூட அவளுக்கு பொறுமை இல்லை. ‘சுடிதாரா இருக்குமா இல்ல, சாரீயா இருக்குமா? அவனுக்கு சாரீ தானே பிடிக்கும்! கண்டிப்பா சாரீ தான் வாங்கிருப்பான்!! 

“சாரீ கட்டுறதுன்னா என்ன ஜுவல்ஸ் போட்டுக்குறது? லாக்கரை திறந்து தன் நகைகளை முதன்முதலாய் வெளியே எடுத்தாள். திருமணத்தன்று கூட அவள் தன் நகைகளை அணியவில்லை. அதிகம் வேண்டாம் என எண்ணியவள், அவனுக்கு பிடிக்குமென ஜிமிக்கி, கல்பதித்த இரு வளையல்கள், ஹாரம், கழுத்துக்கு சற்று கீழே இருக்கும்படி ஒற்றை செயின் என எடுத்துக்கொண்டாள். மீதமுள்ளதை உள்ளே எடுத்து வைக்கும்போது அவள் கண்ணில் பட்டது அந்த மோதிரபெட்டகம். 

‘என் நிலாகுட்டிக்கு என்னோட குட்டி கிப்ட், இதை நானே உன் கைல போட்டு விடுறேன்! இப்போ இருந்து நீ என்னோட பொண்டாட்டி! 

மனம் பாரமாய் அழுத்தியது. தொண்டைக்குள் வலி இறுக்கமாய் நிற்க, பின்னோக்கி செல்லும் மனதை கடிவாளமிட்டு நிறுத்தினாள் நிலா. பழையதை நினைத்து இந்நாளின் இதத்தை கெடுத்துக்கொள்ள கூடாதென முன்னமே தெளியுற முடிவேடுத்திருந்ததால் இனியன் கொடுத்த மோதிரத்தை தன் விரலில் அணிந்துக்கொண்டு, மியுசிக் ப்ளேயரை இயக்கினாள்.

அடிக்கடி அதில் பாடல் கேட்கும் பழக்கம் இனியனுக்கே உண்டு. அவனுக்கு பிடித்த பாடல்கள் யாவும் அதில் அணிவகுத்து நிற்கும். இவள் ஆன் செய்ததும், 

‘அனுபவம் புதுமை….

அவனிடம் கண்டேன்… 

அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே..! மயக்கும் குரலில் சுசீலாம்மா பாட, நொடியில் இளகியது மனம்.  இசையோடு இசைந்து தன்னை தயார் செய்தவள், சிகையலங்காரத்தை முடித்துக்கொண்டு புடவை கட்டலாம் என அவன் ஒளித்து வைத்திருந்த கவரை எடுக்க, அதிலிருந்து வழுக்கிக்கொண்டு விழுந்து டாலர் பிக்பாஸ் பனியனின் அட்டைடப்பா!!!!!!!!   

அந்நாளின் உச்சகட்ட கடுப்பில் நின்றாள் நிலா. தனக்காக புடவை வாங்கி வைத்திருப்பதாய் எண்ணி அவள் எடுத்து வைத்த நகைகளெல்லாம் இப்போது அவளிடம் பழித்து காட்டுவதை போல இருந்தது. 

‘இந்த அவமானம் உனக்கு தேவையா? தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். மனம் சுணங்கினாலும், திருமணத்திற்க்காக அவன் எடுத்துக்கொடுத்திருந்த வேறொரு புடவையை எடுத்துக்கொண்டாள். சில நிமிடங்கள் ஓட, ஒருவழியாய் கட்டிமுடித்து தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு, ‘அழகாதான் இருக்கோம் என்று தோன்றியது.

‘புடவைல நம்மல பார்த்ததும், அத்து அப்படியே அசந்துடனும்!!! சொல்லிக்கொண்டவள் மேலும் சிரத்தையாய் தன்னை தயார் செய்துக்கொண்டாள்,  அந்நாளின் முடிவு தெரியாமல்!!    

நிலாவுக்கு பிடித்த பதார்த்தங்களாய் பார்த்து பார்த்து சமைத்துக்கொண்டிருந்த தாய்மார்களை கலைத்தது வீட்டின் அழைப்புமணி. வேணி சென்று கதவை திறக்க, வாடிய முகத்துடன் நின்றிருந்தான் இனியன். இயந்திரமாய் உள்ளே நுழைந்தவனை “எங்கடா போன? என்றார் வேணி.

ஓய்ந்து போய் சோபாவில் சரிந்தான். தேவியும் அங்கே வந்துவிட, “சொல்லிட்டு போயிருக்கலாமே தம்பி, நிலா எழுந்ததுமே உங்களை தான் தேடுனா! என்றார்.

வேணி மீண்டும், “எங்கடா போயிட்டு வர! என்றிட, “மாமாக்கு திதி குடுத்துட்டு வரேன்கம்மா என்றான் கண்களை திறவாமல். இரு பெண்மனிகளிடமும் பேச்சே இல்லை. தேவிக்கு ‘தனக்கொரு பிள்ளை இருந்தால் இதெல்லாம் செய்வானே! என்ற பலவருட ஏக்கம் நொடியில் மறைவதை போல தோன்றியது. கண்களில் ஆனந்தமாய் நீர் வடிந்திட, மானசீகமாக தன் மணவாளனுக்கு நன்றி சொல்லிகொண்டிருந்தார்.

வேணி சூழலை மாற்ற, “நிலாக்கு இன்னைக்கு பிறந்தநாளு! வாழ்த்து கூட சொல்லாம போயிட்டான்னு வருத்தப்பட்டா! இனிப்பு குடுக்குறேன், உன் கையால ஊட்டி விடு! அடுக்களைக்குள் பேசிக்கொண்டே செல்ல, “நிலா பிறந்தநாள் கொண்டாடுராலா? என்று வியந்து அதிர்ந்து போனான் இனியன்.

இத்தனை வருடங்கள் அவள் கண்முன்னே இனியன் வராவிடினும், அவள் செய்கைகள், விருப்பு வெறுப்புகள் அனைத்தையும் மறைமுகமாய் கவனித்துக்கொண்டிருந்ததில் பிறந்தநாளன்று அவள் மிகவும் மோசமான மனநிலையிலேயே இருப்பாள் என்பது அவன் அறிந்தது. 

வேணி நெய் மிதக்க முந்திரி, பாதாம் மற்றும் உலர்திராட்சையோடு கிண்டிய கேசரியை சிறு கிண்ணத்தில் போட்டு அவனிடம் கொடுக்க, தயக்கத்துடனே அறைக்குள் சென்றான். அவனவளோ அழகு பதுமையாய் கண்ணாடியின் முன் நின்று தன்னையே முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டிருக்க, அவன் மனக்கலக்கம் ஓரளவு வெளியோடியது. 

அவனை கண்டதும் முகம் மலர்ந்தவள், சடுதியில் முகம் சுருக்கிக்கொள்ள, அவளருகே சென்ற இனியன், பின்னிருந்து இடையோடு அழுந்த அணைத்து அவள் இடத்தோளில் முகம் புதைத்தான். 

“நிலாகுட்டி எங்க கிளம்பிட்டாங்க? சீண்டும்படி அவன் கேட்க, தன் கைவிரல்களை பார்த்துக்கொண்டு கோவம் போல் நின்றிருந்தாள் நிலா.

“புடவைல கும்முன்னு இருக்கீங்க!!! அவள் வெட்கம் கொள்வதை பார்க்க வேண்டி அவன் சொல்ல, அவனை ஏமாற்றாமல் வெட்கத்தில் நெளிந்தாள் நிலா. அவன் கையை விட்டு விலகி ஓட பார்க்க, விடாமல் இறுக்கி பிடித்துக்கொண்டான் இனியன். 

“அங்க கண்ணாடி பாரேன்!! யாரோ புதுசா புடவை எல்லாம் கட்டிட்டு பெரிய பொண்ணாட்டம் நிக்குறாங்க! அது யாருன்னு பார்த்து சொல்லேன்!! நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடி நெளியும் நிலாவை மேலும் அவன் சீண்ட, “ம்ம்ம் ஹும் ஹும் ஹும் சிணுங்கினாள்.

அவள் அழகை ஆடியின் (கண்ணாடி) வழியே அளந்தவன், சிவந்திருந்த அவன் கன்னத்தில் அழுத்தமான ஒரு முத்திரையை பதித்தான். நிலாவுக்கு தலை முதல் கால் வரை ஜிவ்வென்று இருந்தது அந்நேரத்து எதிர்பாரா முத்தம். மேலும் நெருங்கியவன் அவள் மணிகழுத்தில் குறுகுறுப்பு மூட்ட, தாளாமல் அவன் முன்னே திரும்பி நின்றாள் நிலா. 

தாழ்ந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் ஒரு முத்தம் வைக்க, அதில் கண் திறந்து அவனை பார்த்தாள் நிலா. இருவர் கண்களும் வார்த்தையின்றி பலநூறு கதைகள் பேசின. அவள் கண்களில் வந்து போன வலி, அவனை சென்று சேர அதை பொறுக்காதவள், “ஏதாது சொல்லு அத்து!!! என்றாள்.

அவன், “மணி பத்து!! என்றிட, மயக்கம் தெளிந்து உர்ரேனே அவனை முறைத்தாள் நிலா. சத்தமாய் சிரித்த இனியன், அவள் இரு கன்னங்களையும் பிடித்து இருபுறமும் ஆட்டியபடி “எனக்குன்னே பொறந்த என் கோவக்கார குடைமிளகாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவன் மூக்கோடு தன் மூக்கை உரசி நிறுத்தினான்.

அவள், “அவ்ளோதானா? என்றதும், “அம்மா கேசரி குடுத்தாங்க! கொண்டுவந்ததை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட, மறுப்பின்றி அதை காலி செய்தவள், மீண்டும், “அவ்ளோதானா? என்று கேட்க, “என் இதழிக்கு இன்னும் என்ன வேணுமாம்!!? என்றான் சரசமாய்.

“ஹும்ம்! இந்த பேருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!! உதட்டை அவள் சுளிக்க, “நான் எப்போ இதழி சொல்லுவேன், எப்போ நிலாகுட்டி சொல்லுவேன்னு பாப்பாக்கு நல்லா தெரியுமே!! என்றான் அவளை தன்னோடு இறுக்கிகொண்டபடி!

“ஆமா ஆமா! சலித்துக்கொன்டவள், “இன்னைக்கு புல்லா நீ என்னோடவே இருக்கனும் அத்து! நம்ம எங்கயாவது ஜாலியா வெளில போலாம்!! என்றாள் கண்கள் மின்ன!

அவள் கேட்டு இனியன் மாட்டேன்னு என்று சொன்னால் அது அதிசயமே!! இருவரும் தயாராகி வந்தபோது உணவுமேசை மீது பலவித வாசனைகளோடு அவர்களை வரவேற்றது பதார்த்தங்கள். ஒவ்வொன்றாய் ரசித்து ரசித்து உண்டாள் நிலா. இனியன், “அம்மா, நாங்க வெளில போறோம்! நைட் தான் வருவோம்! என்றிட, ‘எங்கே?ஏன்? என்றுக்கூட கேட்காத நல்ல மாமியாராய், “சந்தோஷமா போயிட்டு வாங்க என்றார் வேணி.

நிலா, “போயிட்டு வாங்கவா? நீங்க ரெண்டு பேரும்தான் வரணும் என்றதும், இனியனே அவளை வியப்பாய் பார்த்தான். அவனை பார்த்தவள், மெதுவான குரலில், “நம்மல போட்டோ எடுக்க, பொருட்களை பார்த்துக்க ஆள் வேணும்ல என்று கண்ணடிக்க வேணியின் காது கூர்மையால் நிலாவின் கன்னம் கிள்ளுப்பட்டது.

வேணி, “உனக்கு எடுபுடி வேலை பார்க்க நாங்களா? மாமியார் இறங்கி போனா மருமக மண்ட மேல நின்னு விளையாடு மங்காத்தான்னு ஆட்டம் போடுவாளாம்!! என்ன முயன்றும் முறைக்க முடியாமல் அவர் சிரித்துவிட நால்வரும் சிரிப்புடனே கிளம்பி சென்றனர். 

“டேக்சி புடிக்கனுமா தம்பி? தேவி கேட்டதும், இனியனை முந்திக்கொண்டு, “எதுக்கு டேக்சி? என் புருஷனோட கார் இருக்கு, அதுலையே போலாம் என்றிட, தேவி ஆச்சர்யமானார் என்றால், வேணி ‘எனக்கு தெரியாம இது எப்போ? என முறைக்க தொடங்கினார்.

சத்தமின்றி நகர்ந்து போனவன் காரை எடுத்துக்கொண்டு வர, காரை இருமுறை சுற்றிப்பார்த்த வேணி, டிரைவர் சீட்டில் இருந்த இனியனிடம் வந்து முறைத்தபடி நின்றார். அவன் சங்கடமாய் பார்க்க, ‘உங்ககிட்ட எதையுமே மறைக்க முடியாதுங்கம்மா! ஹாஹா முன்பொருமுறை அவன் சொல்லி சிரித்தது இப்போது நியாபகம் வந்தது அவருக்கு.

“அன்னைக்கு பெருமையா சொன்னன்னு நினச்சேன், இப்போதேன் தெரியுது பரிகாசம் பண்ணிருக்கனு! இத்தா பெரிய காரை என் கண்ணுல இருந்து மறைசுட்டால்ல? என்று கேட்டவர், “இன்னைக்கு வேணாம், உன்ன நாளைக்கு கவனிச்சுக்குறேன் என்றுவிட்டு பின் சீட்டில் தேவியோடு அமர்ந்துக்கொண்டார்.  

“எங்க போலாம் நிலா? 

“மூவி? 

வேணியும் தேவியும், “படத்துக்கு நாங்க எதுக்குப்பா? என்று கேட்க, “ஒரு நாள் தானே, எனக்காக வாங்க!! என்று நிலா சொன்னதும் சரியேன்றுவிட்டனர். மூன்று மணி நேரங்கள் நிமிடம் போல கடந்துவிட்டது. படமும் குடும்பமாய் பார்க்கும்படி இருந்ததால், முகம் சுளிக்காமல் பார்த்துவிட்டு வெளியே வந்தனர். 

“வாட் நெக்ஸ்ட்? இனியன் கேட்க, “ஹோட்டல்… என்றாள் நிலா. நேரே பளபளக்கும் ஷாப்பிங் மாலுக்கு அழைத்து சென்றவன், பஃன்(FUN) ஸோனுக்குள் புகுந்தான். தேவியும் வேணியும் அமைதியாய் அமர்ந்து அங்கு விளையாடுபவர்களை வேடிக்கை பார்க்க, நிலாவுக்கு தானும் விளையாட ஆசை வந்தது. இனியனும் நிலாவும் முடிந்தவரை அங்கிருந்த ஒன்றையும் விடாமல் விளையாடி தீர்த்தனர். இரண்டு மணி நேரம் நெருங்கும் வரை இருவரும் நிறுத்தவில்லை. அதன்பின்னே விளையாடிய களைப்பில் பசியெடுக்க, அங்கேயே இருந்த மல்டிகுசைன் உணவகத்திற்கு அழைத்து சென்றான்.

நடப்பது, பறப்பது ஊர்வது அனைத்தும் அவர்கள் மேசையில் அடுக்கப்பட்டது. ‘வெளுத்துக்கட்டு, வெளுத்துக்கட்டு, வெளுத்துக்கட்டு நிலா சத்தமாய் பாட, அங்கிருந்த சிலர் சிரித்துவிட்டனர். அதையேதையுமே பொருட்படுத்தாமல் ஜாலியாய் சிறிது பேசிக்கொண்டு உணவு வேளையை கடந்தனர். 

அடுத்த சில மணி நேரங்களில் அந்த மாலில் ஷாப்பிங் செய்யும் பேரில் கழிய, அடுத்து, “பீச் என்றாள் நிலா. ‘விடு ஜூட் என கார் பெசன்ட் நகர் கடற்கரையை அடைந்தது. தண்ணீரை கண்டால் தடம்புரளா மனம் இங்கு உண்டோ?! நால்வரும் சலிக்க சலிக்க நீரில் ஆடினர். வாழ்கையில் இருக்கும், இருந்த கஷ்டங்கள், வேதனைகள் அனைத்தும் நீரில் விளையாடும் நேரம் மாயமாய் போய்விட்டதை போல, மனம் இலகுவாகி போனது அவர்களுக்கு.  சிறிது நேரத்தில் பெரியவர்கள் கரையோடு அமர்ந்துவிட, இனியனும், நிலாவும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

தன் மகளை இத்தனை சந்தோசமாய் பார்க்க தேவிக்கு இரு கண்கள் போதவில்லை. காணாமல் போன மகள் முழுதாய் கிடைத்துவிட்டதாய் உணர்ந்தார். வேணியோ, இனி தன் பிள்ளைகள் நிம்மதியாய் வாழவேண்டும் என வேண்டிக்கொண்டார். அவர்களை நிம்மதியை குலைக்கவென பல ஜோடி கண்கள் இனியனை மொய்த்தன. அதை அறியாதவர்கள் ஒருவர் மீது ஒருவர் நீரை வாரியடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். 

அவர்களை வெறித்துக்கொண்டிருந்த கண்களில் ஒரு ஜோடி கண்கள் அலைபேசியில் ஒருவரை அழைத்தது. 

“நிம்மதியா தண்ணீல பொண்டாட்டி கூட விலாண்டுட்டு இருக்கான் தலீவா!

“ஹாஹா! விளையாடட்டும் விடு!! நான் சொன்னதை மட்டும் பண்ணு! அதிகபிரங்கியா ஏதும் பண்ணிடாத! ஜெயானந்தனின் குரல் தான் அது!

“சர்தான் தலீவா

வேணியும் தேவியும், “போதும், இருட்டுது, வாங்க என்று பலமுறை கத்தியதும் மனமேயின்றி கரைக்கு வந்தனர் இருவரும். அவர்களின் தோற்றமே ஓய்ந்து போய் இருந்தது. 

இனியன், “வீட்டுக்கு போலாமா? என்று கேட்க, தலையசைப்பிலேயே ‘ம்ம் என்றாள் நிலா. வேணியோ, “வீட்டுக்கு போறதா? முதல்ல போக வேண்டிய இடத்துக்கே நம்ம இன்னும் போகல!! என்றிட, “எங்க? என்றனர் இருவரும்.

“கோவிலுக்கு!!!

“தாயேனும் தெய்வத்தை விடவா கோவில் தெய்வம் உசத்தி, ஐயகோ!! ப்ளாக் அண்ட் ஒயிட் ஹீரோயின் போல அபிநயம் பிடித்து சொன்னது நிலா தான்… அவள் விளையாட்டுத்தனம் முழுதாய் வெளிவந்தது.

“கறி சாப்பிட்டுருகோமே வேணி தேவி சொல்ல, “உள்ள போக வேணாம், வெளி பிரகாரத்தை மட்டும் சும்மா சுத்திட்டு கிளம்புவோம்!! என்றிட, அங்கிருந்த அஷ்டலக்ஷ்மி கோவிலை அடைந்தனர் நால்வரும்.  

பேசி சிரித்தபடி கோவிலை சுற்றி வருகையில், ஒரு குரல் பலமாய் கேட்டது. “இதைக்கூட ஒழுங்கா எடுக்க தெரியல! நீ எதுக்கு மேன் இந்த வேலைல இருக்க? முதல்ல குருகிட்ட சொல்லி உனக்கு ட்ரைனிங் குடுக்கணும்!!! பரிட்சயமான குரலானதால் நிலா சற்று தேங்கி நிற்க, “பி.சி.ஸ்ரீராமே வந்தாலும் இருட்டுல சூரியன் தெரியுறமாறி எடுக்க முடியாது சர்! எனக்கு மட்டும் எங்கிருந்து தான் வரீங்களோ?!! தன் பைக்கில் அமர்ந்துக்கொண்டு புலம்பியவன் கோகுலே தான்!!!!

“என்னமோ போ!! என்று அவர் சென்றுவிட, பின்னிருந்து வந்து அவன் தலையில் தட்டினாள் நிலா. 

“எவ அவ? என்று எகிறி திரும்பிய கோகுல், நிலாவையும் மற்றவரையும் கண்டதும், இன்முகமாய், “அட, என்ன எல்லோரும் ஒன்னா இருக்கீங்க!? என்றான்.

“உன்னையும் தான் கூப்டோம்! நீதான் கடமை எருமை கருமைன்னு சொல்லிட்டு வரலை!! நிலா சொன்னாள்.

“லீவு போட வேணாமேன்னு நினச்சேன்! சும்மா உட்காந்துருந்தவனை ரெண்டு போட்டோ எடுக்கணும் வாப்பான்னு கூப்ட்டிடு வந்து சாவடிசுட்டாரு!! சற்று முன் கிளம்பி சென்றவரை திட்டினான் கோகுல்.

நிலா, “அவர்தான் ஆன்மீக தொடராச்சே! அவரோட போடோக்ராபார் எங்க?

கோகுல், “இவர் தொல்லை தாங்கமா அவன் எந்த நாட்டுக்கு கள்ள ட்ரெயின் பிடிச்சு ஓடுனானோ?! அவன் சொன்னதில் அனைவரும் சிரிக்க, பின் இரவு உணவையும் முடித்துக்கொண்டே வீட்டிற்க்கு செல்லலாம் என முடிவானது.

அருகே இருந்த சிறிய உணவகத்தில் ஐவரும் அமர்ந்து அரட்டைக்கு நடுவே சிறிது உணவையும் உள்ளே தள்ளிக்கொண்டிருந்த நேரம், பல ஜோடி கண்கள் அவங்கள் இருந்த இடத்தை நோட்டமிட்டன. அவை இரைதேடும் பருந்தின் பார்வையை ஒத்தது. இனியனின் அலைபேசி மௌனமாய் உறும, அதை வெளியே எடுத்து பார்த்தான். ஒற்றை சொல்லில், ‘அலெர்ட் என்ற குறுஞ்செய்தி வந்த்திருக்க, அவன் ஐம்புலனும் அதிக்கூர்மையானது. சுற்றிலும் கண்களை சுழலவிட்டான். கண்ணில் படும் அனைத்தையும் அல்ட்ரா ஜூம் செய்து பார்த்தது அவன் கூர்விழிகள். 

நிமிடத்திற்குள்ளாகவே நடக்கபோவது அவனுக்கு படம் போல கண்ணில் விரிந்துவிட, பெண்களை எப்படி பாதுகாப்பது என்ற யோசனை மட்டுமே அவனை நிறைத்தது. அவசரகால பாதுகாப்பு பிரிவிற்கு தாங்கள் இருக்கும் லொகேஷனை ‘எமர்ஜென்சி என்ற செய்தியோடு அனுப்பிவிட்டு “ரொம்ப இருட்டிடுச்சு, கிளம்பலாமா? என்றான்.

நிலா, “மணி எட்டு தானே ஆகுது அத்து? அவசரம் புரியாமல் அவள் முகம் தூக்க, இனியனின் முகமே அவன் உறுதியான முடிவை சொன்னது. பின் ஐவரும் எழுந்து வெளி வருகையில் கோகுலின் கையை அழுத்திய இனியன், “கவனமா இரு!! என்று சொல்லி முடிப்பதற்குள் பின்னிருந்து ஒருவன் இரும்பு சம்பட்டியால் அடிக்க தடுமாறி விழுந்தான் கோகுல்.

என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள் அடுத்த அடி இனியனின் மீது! அங்கிருந்த மகாஜனம் சண்டை என்றதும் நூறடிகள் விலகி ஓடியது. அடியை எதிர்பார்த்திருந்ததால் இனியன் தடுமாறவில்லை. அவன் கவனம் மூன்று பெண்களை பாதுகாப்பதிலே இருந்தது. 

“என்னப்பா நடக்குது? வேணி தேவி பதற, எழுந்து நின்ற கோகுலிடம், “எல்லாரையும் காருக்கு கூட்டிட்டு போ என்றான்.

தேவி, “தம்பி இத்தனை பேரு நிக்குறாங்கலேப்பா?! 

இனியன், “போங்கன்னு சொன்னேன் அவன் குரல் பிரமாண்டமாய் ஒலிக்க, அவன் சொல்லை கேட்டு நகர்ந்தனர் நால்வரும். 

“எங்க தலீவனையே எதுக்குறியா நீ? அடிங்கடா அவன் குடும்பத்த!! என்றான் ஒருவன். குறி தனக்கு என நினைத்த இனியனை அதிர வைத்தன எதிராளியின் வார்த்தைகள்.

பாய சென்ற ஆட்கள் முன்பு தடை போல நின்றவன், “பிரச்சனை எனக்கும் உன் தலைவனுக்கும் தானே, அவங்ககிட்ட ஏன் போறீங்க? என்றிட, “என்னங்கடா அவன்ட பேச்சு? அடிச்சு கொல்லுங்கடா!!! என சீறினான் தள்ளி நின்றிருந்த ஒருவன். எகிறி ஓட போனவர்கள் முன், “சொல்றதை கேளுங்க, எதுவா இருந்தாலும் நமக்குள்ள  முடிச்சுக்கலாம் இனியன் சொல்ல அதை கேட்காத ஒருவன் கையில் கத்தியுடன் ஓட, ஓடியவனின் பின்னகாலை தன் ஒரு கையால் இழுத்து தள்ளினான் இனியன். ஓடியவன் சுருண்டு விழுந்தான். மற்ற இருவரும் அவன் அதிரடியில் அதிர்ந்து நின்றனர்.

“அடிங்கடா அவனை… அடுத்த ஆட்கள் திரண்டு அவனை நோக்கி வர, தற்காப்பு பயிற்சியும், போலிஸ் உடம்பும் அவர்களை பந்தாட போதுமானதாய் இருந்தது. எதிர்வரும் கத்தி வீச்சுகளை லாவகமாய் கடந்தவன், அவர்களின் வேகம் அதிகரிக்க தொடங்கவே, “எல்லோரும் போங்க என்று தன் குடும்பத்தை பார்த்து கத்தினான். 

அடித்ததில் கோகுலின் தோள்பட்டையில் இருந்து தசைகிழிந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. தன் சுயத்தில் முழுதும் இல்லாமல் மெதுவாய் தள்ளாட தொடங்கினான். அந்நிலையிலும், “வாங்க, வாங்க என்று மூன்று பெண்களையும் அழைத்துக்கொண்டு அவன் வேகமாய் நகர, நிலா இனியனை பார்த்துக்கொண்டே சென்றாள். திடீரென நடக்கும் இச்சம்பவம் அவளை பேச்சிழக்க செய்தது.

தன்னை நோக்கி வரும் அத்தனை தாக்குதலில் இருந்தும் தன்னை தற்காத்துகொள்ள மட்டுமே முடிந்தவரை முயன்ற இனியன், எந்நிலையிலும் அவர்களை பதிலுக்கு காயப்படுத்தவில்லை.  இனியனை தாக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்த அவர்களில் சிலரை, “அவன் பொண்டாட்டியை அடிங்கடா என ஏவினான் ஒருவன்.

இனியனின் செவிகளில் அச்செய்தி விழுந்த நொடி அவன் செல்கள் படபடத்தது. திரும்பி தன்னவளை அவன் பார்க்க, அவள் மட்டும் தூரத்தில் தனியே நின்றிருந்தாள். உடன் இருந்தவர்கள் இவன் சொல்லுக்கு பணிந்து தங்கள் காரை நோக்கி வேக எட்டுகளில் சென்றுக்கொண்டிருந்தனர். 

இனியனின் கவனம் சிதறியதை கண்ட ஒருவன் அவன் கழுத்தை நோக்கி கத்தியை நீட்ட, அதை கண்ட நொடியில் ஸ்தம்பித்து போன நிலா, கண்கள் சிவக்க, “அப்ப்பாஆஆஆ என்று அலட்றினாள்.

இனியன் இறுதி நொடியில் உடலை பின்பக்கம் சாய்த்து அதில் இருந்து தப்பித்தாலும், தன் மனைவியை மட்டுமே அவன் கண்கள் தேடியது. கோகுல் பின்னிருந்து அவளை அழைப்பதெல்லாம் அவள் காதில் விழுந்தது போல் கூட இல்லை. இனியனையே பார்த்துக்கொண்டு அசையாது நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓட எத்தனித்த இனியனை தலையில் அடித்தனர்.

நிலாவை கத்தியோடு நெருங்கியவன் அவள் வயிற்றில் குத்த ஓங்கியபோதும் அவள் அசையவில்லை. கத்திக்கும் அவளுக்கும் ஓரடி தொலைவிருக்கையில் குத்த வந்தவனின் மீது வேகமாய் வந்து மோதியது ஒரு இருசக்கர வாகனம்.  மோதிய வேகத்தில் வண்டியில் இருந்தவனும் சறுக்கி விழ, அவன் எழுந்து தன் தலைகவசத்தை கலட்டியபோது இனியனை தாண்டிய அனைவருக்கும் அதிர்ச்சி!!

நிலாவை அழைத்துசென்று காரில் விட்டவன் “யாரும் வெளில வராதீங்க! என்றான். அடிபட்டவன் அவனை அடிக்க ஓடி வர, அவன் இடக்கையை மடக்கி பின்னால் பிடித்தவன் ஆத்திரத்துடன் அவன் முகத்திலேயே தன் முறுக்கிய கைகளால் ஓங்கி ஓங்கி குத்தினான்.

பத்திரிக்கையாளர்கள் சாரைசாரையாய் சூழ்ந்துவிட்டனர். நடப்பதை நேரலையில் ஒளிபரப்புவதில் குறியாய் இருந்தவர்கள் யாரும் அவர்களும் உதவ முன்வரவில்லை.

இனியன் பதட்டம் விலகிட, எதிராளிகளின் தாக்குதலை கையாள, உடன் அவனும் தோள் கொடுத்தான். திடீரென புதியவனை சூழ்ந்த நால்வர் அவன் கை கால்களை நகர முடியாதபடி இறுக பற்ற, இனியனையும் சூழ்ந்து கொண்டனர் மூவர். அவன் அவர்களிடம் இருந்து தன்னை பிரித்தெடுக்க பிரயத்தனப்பட, அந்நேரம் புதியவனை குறி வைத்தான் ஒருவன் தன் கைதுப்பாக்கியோடு! இதை இனியன் சற்றும் எதிர்பார்க்கவில்லை!

போலிஸ் வண்டியின் சத்தம் கேட்டது. ஆனால் அவர்கள் வரும்வரை காத்திருக்க முடியாது. 

தன்னை விட்டு பல அடிகள் தள்ளி நிற்பவனை எங்கனம் காப்பாற்றுவது என சிந்தித்தான் இனியன். மூளை சிந்தனையில் இருந்தாலும், அவன் உடலோ தன்னை பிடித்து வைத்திருக்கும் கயவர்களிடம் இருந்து திமிறிக்கொண்டிருந்தது. எதிரில் இருந்தவன் புதியவனை சுட போக, தன் மீறி, “அதியாஆஆஆ என்ற அழைப்போடு திமிறி வெளியேறியவன், கணநேரத்தில் தன் பிஸ்டலை எடுத்து தன் தம்பியை குறிபார்க்கும் கயவன் மீது குறிவைத்தான். வைத்த குறி தப்பாமல் குண்டு அவன் காலை துளைக்க கீழே விழுந்தான். 

காவல்துறை தன் கடமையை செய்ய வரவும், இனியன் தன் துப்பாக்கியை உபயோகப்படுத்தவும் சரியாய் இருந்தது. நடந்த அத்தனையும் நேரலையில் போய்க்கொண்டிருந்தது. போலிசை கண்டதும் தெறித்து ஓடியவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர் காவலர்கள். 

ஓய்ந்து போய் நின்ற இனியனிடம் மொய்துக்கொண்டனர் டிவிக்காரார்கள். இன்ஸ்பெக்டர் சூழல் புரிந்து அவன் அருகே வந்து, “நீங்க வீட்டுக்கு போங்க, நாளைக்கு பேசிக்கலாம்! என்றார். அவனை பின்தொடர்ந்த ஆட்களை மறித்து, “எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம், நிலைமையை புரிஞ்சுக்கோங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

அதியன் தன் அண்ணனை அழைத்துக்கொண்டு செல்ல, டிரைவிங் சீட்டில் அதியனே அமர்ந்தான். காரில் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு அதிர்ச்சியில் இருந்தனர். அமைதியே அவ்விடத்தை ஆட்கொண்டது. அதியன் என்ன முயன்றும் மனம் கேளாமல், “எதுக்குண்ணா அவசரப்பட்டு பிஸ்டல் எடுத்த? என்றான் ஆற்றாமையுடன். 

இனியனும் அதையே நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறான் போலும் என எண்ணிக்கொண்டான். நடந்த கலவரம் டிவியில் ஒலிபரப்பானதை கண்ட எடிட்டர் குருநாத்தும், அவர் மகள் நிவேதாவும் அவர்களுக்கு முன் வீட்டின் வாசலில் காத்திருந்தனர். உள்ளே சென்ற அனைவரும் பேச்சின்றி அமர்ந்திருக்க,  நிவேதா அனைவருக்கும் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். வீட்டில் இருந்த முதலுதவி பொருட்களை கொண்டு கோகுலின் காயத்திற்கு தற்காலிகமாய் மருந்திட்டார் குருநாதன். 

நிவேதா நிலாவின் அருகே சென்று, “தண்ணீ எடுத்துக்கோங்க அக்கா எங்க, அவள் அசையவில்லை. கண்கள் ஓரிடத்திலேயே நிலைக்குத்தியிருந்தன. நிவேதா மீண்டும் மீண்டும் அவளை அழைக்க கவனம் கலைந்த இனியன், “நிலாம்மா! அருகே சென்றான்.

அவள் தோள் தொட்டு உலுக்கியபோதும் அவள் பிரம்மை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள். அங்கிருந்த எல்லோருக்கும் பயம் சூழ்ந்தது என்றாள் தேவிக்கு அடிவயிறு உருண்டது. ‘இனி என் மகள் வாழ்வில் எந்த குறையும் இல்லையென சிறிது நேரம் முன்தான் நினைத்து நிம்மதியானோம், அதற்குள் கண்பட்டார் போல ஆகிவிட்டதே என பதறிபோனார்.

நிவேதாவிடம் இருந்து தண்ணீர் வாங்கிய இனியன், அவள் முகத்தில் வேகமாய் சிலமுறை நீரை அடிக்க, சற்றே கலைந்தாள் நிலா. அவள் தோள் உலுக்கி, “நிலா என்னை பாரு!! பாரும்மா!! பலமுறை அவள் உலுக்கிய பின்னர் நிர்மலமாய் அவன் முகம் பார்த்த நிலாவின் முகம் மெல்ல மெல்ல ரௌத்திரம் கொண்டது. ரௌத்திரம் ஆத்திரமாய் மாறியது. ஆத்திரம் ஆக்ரோஷமாக, அவன் சட்டையை கொத்தாய் பிடித்து, “ஏண்டா இப்டி செஞ்ச? சொல்லுடா சொல்லுடா சொல்லுடா!!! என அலட்றினாள்.

அவனை தவிர அங்கிருந்தவர்களுக்கு அவள் நடவடிக்கை பிடிபடவில்லை. அதிர்ச்சியில் அவ்வாறு நடந்துக்கொல்வதாய் எண்ணி, அவளை அமைதிபடுத்த முயன்றனர். அருகில் வந்தவர்களை விரட்டி தள்ளியவள், தன் தலையிலேயே சரமாரியாய் அடித்துக்கொண்டாள். அவள் நடவடிக்கை விநோதமாய் போக, இனியன், “என்னை அடி நிலா, உன்னை காயப்படுத்திக்காத!! அவள் கையை பிடிக்க முயன்றான். அந்த சின்ன உடம்பில் எத்தனை வேகம்?! அவனையே உதறிதள்ளிவிட்டு தன்னை முன்விடவும் வேகமாய் தாக்கிக்கொண்டாள் நிலா. 

பெற்ற வயிறு கதறியது! இத்தனை வருடங்களுக்கு பிறகு மறுமுறையும் தன் மகளை இப்படி ஒரு கோலத்தில் பார்க்கிறார் தேவி! தலை சுற்றி அப்படியே மயங்கி விழுந்தார். 

இனியன் நிலாவின் கைகளை பிடித்து தன் மீது வைத்தான். “என்னை அடி, என்னை அடி என்று!!!

அவளோ குறையாத ஆத்திரத்துடன், “ஏன்டா என்னை விட்டு போன? ஏ..ன்..டா.. போ…….ன? என்று கதறினாள். ஆத்திரம் அழுகையாய் உருமாறியது.

கதறலோடே, “உன் தம்..பிக்..குன்னா….! என் அ…ப்..பாஆஆ….!! திக்கி திக்கி நிறுத்தினாள். புரியவேண்டியவனுக்கு புரிந்தது.

“நம்புனேனேடா! கதறலோடு இனியனின் காலில் விழுந்தாள் நிலா. அழுத்தமாய் வெளிவந்த அந்த ஒரு வார்த்தை! அதில் பொதிந்திருந்த ஆயிரம் அர்த்தங்கள் அவனை உயிரோடு புதைத்தது. விழுந்தவளை கரம் கொண்டும் தூக்காமல், தூக்கவும் தோன்றாமல் உயிரற்று நின்றான். 

இதில் மற்றவர்கள் பார்வையாளர்களாய் மாறி போயினர். இருவரையும் சுற்றியே நின்றாலும், நடப்பது எதுவும் புரியாத மனநிலை! அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சி!!

“நான் பைத்தியம், நான் பைத்தியம், நான் பைத்தியம்!!! யாரும் எதிர்ப்பார்க்காதபடி அந்த டைல்ஸ் தரையில் தன் தலையை வேகவேகமாய் மோதினாள் நிலா. மோதியபோது எழுந்த, ‘டம் டம் என்ற சத்தம் அனைவரையும் உள்ளுக்குள் உலுக்கியது. 

அவளை தூக்க இனியன் முயல, அவனால் ஓராளாய் முடியவில்லை. அத்தனை பலம் அவளுக்கு அந்நேரத்தில்…! குருநாதனும் அதியனும் உடன் சேர்ந்துக்கொள்ள, “நான் பைத்தியம் நான் பைத்தியம் என திமிறிகொண்டிருந்தவளை முடிந்தவரை அடக்கி அறைக்குள் அழைத்து சென்றனர். 

கோகுலுக்கு காண்பதெல்லாம் துர்சொப்பனமோ என்ற நிலை! திமிராய், தைரியமாய் நின்ற பெண், இன்று தன்னை மீறி நடந்துக்கொல்கிறாள் என்றால், எந்த அளவு அவள் மனம் புண்பட்டிருக்கும் என்பதை அவனால் கற்பனையும் செய்ய முடியவில்லை!

அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் மருத்துவர் ஒருவர் நேரத்திற்கு உதவ, அவள் திமிறுவதை கட்டுப்படுத்தமுடியாமல், “இப்டியே விட்டா அவங்களுக்கு வலிப்பு வந்துடும்! ஒரு ஸ்லீபிங் இன்ஜெக்ஷன் போடுறேன் என்று சொல்லி செய்தார். அடுத்த பத்து நிமிடங்கள் மருந்தின் வீரியத்தையும் தாண்டி துடித்துக்கொண்டிருந்தவள், வலுவிழந்து மெல்ல உறங்கினாள்.

மயக்கத்தில் இருந்த தேவிக்கும், முதலுதவி செய்யப்பட்டிருந்த கோகுலுக்கும் மருத்துவம் செய்தவர், இனியனிடம், “எதனால இப்டி பீகேவ் பண்றாங்கன்னு தெரியுமா? இதுக்கு முன்னாடி இப்டி வைலண்டா பீகேவ் பண்ணிருக்காங்களா? எதுக்காக கேக்குறேன்னா இது “சைக்கலாஜிகல் ப்ராப்லம்! நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்குறேன்!! என்று இழுத்தார்.

கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சி!   

வாடி வதங்கி நின்றிருந்த இனியன் உணர்ச்சி தொலைத்த முகத்துடன், “ஏற்கனவே மூணு மாசம் மனநலகாப்பகத்துல சிகிச்சை எடுத்துருக்கா டாக்டர்! நான் பார்த்துக்குறேன்!! என்றான்.

ஒருநாளில் சிலமணி நேரத்தில் இத்தனை அதிர்ச்சிகள் ஒருவனை தாக்குமா? என்ற நிலை…

அதியனுக்கும் வேணிக்கும் இந்த விவகாரம் தெரியும்! நேரிலேயே உடன் இருந்த பார்த்தவர்கள்! குருநாதனுக்கு தேவி சொல்லி சில விஷயங்கள் தெரியும்!! 

ஆனால், கோகுல்……!!!! உச்சந்தலையில் ஆணி அடித்ததை போல அடிமனது வரை வலித்தது. தன் தோழியின் வாழ்வில் இருக்கும் கருப்பு பக்கங்கள் இத்தனை நாள் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்டதா, அல்லது தான் அறிய முற்படவில்லையா? என தெரியாமல் ஸ்தம்பித்து நின்றான். 

அப்பக்கங்களை புரட்டக்கூடிய, முழு விவரமும் அறிந்த ஒரே ஆள் அவன் கண் முன்னே நிற்க, கோகுலின் பார்வை இனியனை ‘இனியும் மறைக்க போகிறாயா? என கேட்டது..! 

‘இதற்குமேல் என்னாலும் முடியாது! என்ற இனியனின் மனது கடந்த காலத்தை புரட்ட சொல்லி கதறி அழுதது!!!!    

Advertisement