Advertisement

*17*

நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை,

நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடலில்லை,

வண்ணப்பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு, தென்றலை!!!

“எதுக்காக இனியன் இப்படி ஒரு காரியம் செஞ்சுருக்கீங்க?” கேட்டவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

‘CENTRAL BUREAU OF INVESTIGATION’ என்று தங்க நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த முகப்பு வளையத்தை தாண்டி, உள்ளிருந்த பன்மாடி கட்டிடத்தின் மத்தியில் செயற்கை குளிரூட்டப்பட்ட ஒரு நீண்ட அறையின் உள்ளே இருந்தான் இனியன் இளஞ்செழியன்.

அது ஒரு நீள்வட்ட மேசை. அதன் ஒரு முனையில் நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் இருக்க, அவருக்கு இருபுறமும் இருவர் மத்திய வயதில் இருந்தனர். மேசையில் மற்றொரு முனையில் அவர்களை பார்க்கும்படி அந்த ரோலிங் சேரில் வலப்புறம் நன்றாய் சாய்ந்து விரல்களுக்கிடையே பேப்பர் வெயிட்டை வைத்து உருட்டிக்கொண்டிருந்தான் இனியன். அவன் பார்வை முழுக்க அதிலேயே இருந்தது.

“நான் பேசிட்டே இருக்கேன், நீங்க பதில் சொல்லாமையே இருந்தா என்ன அர்த்தம்?” நடுவில் இருந்தவருக்கு மறுபுறம் இருந்த பெண்மணி எழுப்பிய குரல் தான் அது. அப்போதும் இனியனிடம் இருந்து பதில் இல்லை.

“யூ ஆர் இன்சல்டிங் மீ” வெறுப்படைந்த அவர் கோவமாய் முடிக்க, நடுநாயகமாய் இருந்த அசோக் தான் அவரை அமைதிபடுத்த வேண்டியதாய் ஆயிற்று.

அப்பெண்மணிக்கு எதிர்புறம் இருந்த சுதீப், “அவங்க கேக்குறதுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணலாமே இனியன்? எதுக்காக அமைதியா இருந்து அவமானப்படுத்துறீங்க?” என்றதும், அமைதியாய் இருந்தவன் உடனே பதில் சொன்னான்.

“என்னோட ஹெட் அசோக் சார் தானே! அவர் கேட்டா எவ்வளவு பதில் வேணாலும் சொல்லுவேன்! ஆனா, அவங்க அஸிஸ்டன்டுக்கு எல்லாம் ம்ம்ஹும்ம்!!!” தலையை இடவலமாய் அவன் ஆட்ட,

முன்பே கோவத்தில் இருந்த அந்த பெண்மணி அதீத கோவத்துடன் அவனிடம் பேச போக, “ஷீலா? காம் டவும்!” என்ற  அசோக், “மிஸ்டர் இனியன், இனி நம்ம பேசலாமா?” என்று ஆரம்பித்தார்.

“அமைச்சரோட மாஸ் சூசைட் கேஸ் சிபிஐக்கு வந்தப்போ நான் அதை யார்கிட்ட கொடுக்குறதுன்னு ஒரு செகண்ட் கூட யோசிக்கல! இது ரொம்ப சென்சேஷனல் கேஸ், அதுமட்டுமில்லாம இதுக்கு பின்னாடி பெரிய அரசியலே இருக்குன்னு தோணுச்சு! இதை ஹேண்டில் பண்றதுக்கு அனுபவம் அதிகமா இருக்குற ஆளை விட, சாதூர்யமா காய் நகர்துறவர் தான் சரிவருவார்ன்னு முடிவு செஞ்சு பலரோட எதிர்ப்பையும் மீறி உங்களுக்கு இந்த பொறுப்பை குடுத்தேன், ஏன்னா உங்கமேல எனக்கு அவ்ளோ நம்பிக்கை இருந்துச்சு!!” அசோக் சொல்லி முடிக்க,

“அந்த நம்பிக்கை என்னைக்கும் குறையுற மாறி நடந்துக்க மாட்டேன்” என்றான் இனியன். அவனது நிமிர்ந்த தோற்றம், நேர்கொண்ட பார்வை அசோக்கை நிதானிக்க வைத்தது.

ஆழ மூச்செடுத்தவர், “இந்த கேஸ் உங்க தலைமைல நடக்குதுன்னு யாருக்கும் தெரியக்கூடாதுன்னு முன்னாடியே சொல்லிருந்தேனே மிஸ்டர் இனியன்!!” அவன் செய்த தவறாய் அவர் நினைப்பதை கேட்க,

“நான் யாருக்கும் வெளிப்படுத்தலையே?” என்றான் இனியன்.

அவனிடம் எப்படி விஷயத்தை வாங்குவந்து என தெரியாமல், அமைதியானார் அசோக். அருகே இருந்த சுதீப், “இப்போதானே இனியன் சொன்னீங்க, ஜெயானந்தன் போன் பண்ணப்போ நீங்க யாருன்குறத சொல்லிட்டதா?” என்றார். இனியன் செய்தால் சரியாய் தான் இருக்கும் என நம்புகிறவர்கள் தான் அசோக்கும் சுதீப்பும். ஆனால் அவர்கள் தலைமையிடம் தெளிவான பதில் கொடுக்க வேண்டுமே!? அந்த கட்டாயத்திலே தான் அவனை கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது.

ஓரிடத்தில் பத்து பேருக்கு நம்மை பிடித்தால், அங்கே காரணமின்றி நம்மிடம் வெறுப்பை காட்ட இருவரேனும் கட்டாயம் இருப்பர். ஷீலா அந்த ரகம் தான்! படிப்படியாய் முட்டி மோதி பெரிய பதவிக்கு வந்தவருக்கு, சப் இன்ஸ்பெக்டராய் தனக்கு கீழே இருந்தவன், கிடுகிடுவென உயர்பதவியில் அவருக்கு சமமாய் ஆனது கொஞ்சமும் இஷ்டமில்லை. அவனை தூக்கி வைத்து கொண்டாடும் ஆட்களே அவனை மட்டம் தட்ட வேண்டும் என பல நாட்களாய் கனவு கண்டுக்கொண்டிருப்பவர்.  வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவனை சறுக்கி விடவே பார்ப்பார்.

“மத்தவங்களுக்கு தானே சார் தெரிய கூடாது, அக்யூஸ்டுக்கு தெரிஞ்சா நல்லதுதானே! தன்னை காப்பாத்திக்க அவன் செய்ய போற தப்புல கையும் களவுமா மாட்டப்போறான்!!” இனியன் திட்டவட்டமாய் சொல்ல, அசோக் சார், “அப்போ ஜெயானந்தன் தான் அமைச்சரையும் அவர் குடும்பத்தை கொலை செய்ததா சொல்றீங்களா?” என்று கேட்க, ‘ஆம்’ என்றான் இனியன்.

அசோக், “எந்த ஆதாரத்தோட அடிப்படைல அவர்மேல குற்றம் சாட்டுறீங்க?”   

“தப்பு செய்யாதவனா இருந்தா எதுக்காக இந்த கேஸ் பத்தி ஆர்டிகிள் எழுதுறவங்களை மிரட்டணும், கொலை முயற்சி செய்யணும்? மத்த பத்திரிக்கைகளுக்கும் நியூஸ் சேனல்க்கும் இந்த செய்தி வராம இருக்க பணம் குடுக்கபட்டுருக்குறதா விசாரிச்சப்போ தெரிஞ்சுது!  தப்பு செய்யாதவனா இருந்தா எதுக்கு இதெல்லாம் செய்யணும்?”

சுதீப், “இனியன், நம்ம வெறும் யூகத்தை வச்சு இந்த கேஸை முடிக்க முடியாது. நீங்க சொல்றதை நாங்க நம்பலாம், ஆனா கோர்டுக்கு வலுவான ஆதாரம் வேணும், அதுவும் நீங்க குற்றம் சாட்டுறது அமைச்சர் பதவிக்கு நாமினேட் ஆகிருக்க செல்வாக்கான ஒருத்தரை.  தன் குடும்பத்தையே பரிகொடுத்தவர்ன்னு ஜெயானந்தன் மேல மக்களுக்கு பரிதாபம் இருக்கு! இந்த நேரத்துல சரியான ஆதாரம் இல்லாம நம்ம அவரை குற்றவாளின்னு சொன்னா……!!!!” அவர் இழுக்க,

“ஐ க்நொவ் சார்!! ஆதாரம் இல்லாம கோர்டுக்கு போற அளவுக்கு நான் முட்டாள் இல்ல! கேஸ் நிலவரம் கேட்டதால தான் இதெல்லாம் சொன்னேன்! அடுத்து எவிடென்ஸ் ரெடி பண்ணிட்டு வந்து ரிப்போர்ட் பண்றேன்!!” என்றவன் அவ்வளவு தான் பேச்சு என எழுந்துக்கொண்டான்.

அதுவரை அமைதியாய் இருந்த ஷீலா, “கிடைக்குற எவிடென்ஸ் வச்சு தான் குற்றவாளியை தீர்மானிப்பாங்க, ஆனா இவரு குற்றவாளி யாருன்னு முடிவு பண்ணிட்டு அதற்கேத்த மாறி ஆதாரம் தேடுறாரு!” இளக்காரமாய் சொல்ல, அதைகண்டுகொள்ளாத மற்றிருவரும், “இன்னும் பத்து நாள்ல கேஸ் ஹியரிங் இருக்கு! அதுக்குள்ள முடிஞ்சவரைக்கும் எவிடென்ஸ் ரெடி பண்ணுங்க! இந்த கேஸை சீக்கிரம் முடிக்கணும்!!” என்றதும் சுதீபிற்கும் அசோகிற்க்கும் ஒரு சல்யூட் வைத்துவிட்டு வெளியேறினான் இனியன்.

‘இனியன் இளஞ்செழியன் DSP’ என பெயர்பலகை தாங்கியிருந்த கதவை திறந்து அவன் உள்செல்ல, அவனை எதிர்ப்பார்த்தே காத்திருந்தனர் நால்வர். அவன் தலைமையில் இயங்கும் குழுவின் அங்கங்கள். மொபைலை மேசை மீது வீசிவிட்டு, தன் சுழல்நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

நால்வரும் அவனுக்கு மரியாதை நிமித்தமாய் சல்யூட் வைக்க, சிறு தலையசைப்போடு அதை ஏற்றவன் முகத்தை இருகைகளால் அழுந்த துடைத்தான். நிலா அடிபட்டது தெரிந்ததும் நேரே அவளை பார்க்க வந்தவனுக்கு அந்த இரவு பகலானது. நேற்று இரவு முழுவதும் மருத்துவனையில் நிலாவோடு இருந்ததில் சரியான தூக்கம் இல்லை.  இரண்டு நாள் உறக்கமில்லாத கண்கள் அவனை தூங்க சொல்லி கெஞ்சியது.

அவனாக ஏதேனும் சொல்லுவான் என அவர்கள் காத்திருக்க இனியன் அமைதியாய் இருக்கவே, நால்வரில் ஒருவனான சிவா, “சர்! ரிபோர்ட் பண்ணிட்டீங்களா?” என்று ஆரம்பித்தான். சட்டென நிமிர்ந்து உட்காந்த இனியன், நால்வரும் தன் முன் நிற்ப்பதை கண்டு, “சிட் டவுன் பர்ஸ்ட்” என்றான்.

அவர்கள் அமர்ந்ததும், மீடிங்கில் நடந்ததை சுருக்கமாய் சொல்லி முடிக்க, “நம்மகிட்டதான் ஒரு ஸ்ட்ராங் விட்ன்ஸ் இருக்காரே சர், அதை சொல்லிருக்கலாமே!” என்றான் ஆர்வத்துடன் முஸ்தபா.

அவனை சிறிது முறைத்த இனியன், “இந்த விஷயம் வெளில போக கூடாதுன்னு எத்தனை முறை உனக்கு சொல்லிருக்கேன்!?” என்றான். “இல்ல சர், நமக்குள்ள தானே!!!!” என்று அவன் இழுக்க, “சுவருக்கும் காது இருக்கும்!” என்றான்.

இனியன் கண்ணை தேய்த்துக்கொண்டே “இன்னும் பத்து நாள்ல ஹியரிங் இருக்கு, அதுக்குள்ள நம்ம பக்காவா எவிடென்ஸ் கலெக்ட் பண்ணனும்… காட் இட்!?” என்று முடிக்கையில் அவனைமீறி இரண்டு கொட்டாவிகள் வெளிவந்தது. ‘சாரி’ என முனுமுனுத்துக்கொண்டான்.

“நம்ம இன்னும் கொஞ்சம் க்ரவுண்ட் வொர்க் பண்ணுனா சீக்கிரமே இந்த கேஸ சால்வ் பண்ணிடலாம் சர்” மதன் சொல்ல, “இது ஆல்ரெடி சால்வ் ஆன கேஸ் தானேடா” என்றான் சிவா மெல்லமாய். முஸ்தபாவும் சிவாவும் சிரித்துக்கொள்ள, அவர்கள் சம்பாஷனை காதில் விழுந்தாலும் அதில் கலந்துகொள்ளாமல் இருந்தான் இனியன்.

“ஐஷு எங்க போனா?” அதுவரை அங்கு இருந்தவளை காணாததால் அவன் கேட்க, அவர்கள் பதில் சொல்லும் முன் கையில் ஆவி பறக்கும் காபியோடு வந்தாள் ஐஸ்வர்யா.

“சர் காபி! ரொம்ப டயர்டா இருந்தீங்க அதான்!” அவள் கொடுக்க, ‘நான் உன்கிட்ட கேட்டேனா?!’ என ஒரு பார்வை பார்த்தவன், “திஸ் ஸ் தி லாஸ்ட் டைம், என்னை கேட்காம இனி ஏதும் செய்யாத!” என்றான் கண்டிப்பாய்.  

“உன்கிட்ட ஒரு வொர்க் குடுத்தேனே என்னாச்சு?” அவன் கேட்டதும், வேகமாக தன் கோப்பை எடுத்து வந்து நீட்டியவள், “சார், அமைச்சர் வீட்ல உடைஞ்சு கிடந்த பிளவர்வாஸ்ல இருந்த ரத்தம், அமைச்சரோட ப்ளட் குரூப் தான்!! அதுமட்டுமில்லாம, அதிலிருந்த கைரேகை ஜெயானந்தன் கைரேகையோட 100% மேட்ச் ஆகுது!!” என்றதும், “அஸ் ஐ எக்ஸ்பெக்டடு(expected)” என்றான் சாதாரணமாய்.

மற்ற மூவரோ உவகையுடன், “சார், சிம்பிள், இது போதாதா? ஜெயானந்தான் தான் குற்றவாளின்னு ப்ரூப் பண்ண?!” மதன் கேட்க, “போதாது!! இதெல்லாம் ஸ்ட்ராங் எவிடென்ஸ் இல்லை, அவன் ஒரு அரசியல்வாதி, சாட்சியையும் ஆதாரத்தையும் கலைக்க எவ்ளோ நேரம் ஆகும்? அவன் விட்டெரியுற காசுக்கு வேலை செய்ய நம்ம டிபார்ட்மென்ட்லையே நிறைய பேரு இருக்காங்க!!!” என்றதும் அங்கு அமைதி நிலவியது.

ஐஷு, “வாட்டிஸ் ஆர் நெக்ஸ்ட் மூவ் சர்!”  

“ஜெயானந்தன்!!!” என நிறுத்தினான் இனியன்.

*** வருங்கால அமைச்சர் தன் கட்சி தலைவரை பார்த்துவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். வரபோகும் தேர்தலில் எம்.பி சீட் கன்பாம் என அவர் சொல்லியதும், அவர் குதித்து கும்மாலமடித்திருக்க வேண்டும். மாறாக அவருக்கு பதட்டமும் பயமுமே அதிகமானது. அவர் முகத்தில் முட்டையை அடித்தால் அது அடுத்த நொடி ஆம்புலைட்டாவிடும், அத்தனை கொதிநிலையில் இருந்தார்.  வியர்த்து வியர்த்து வழிய, “ஏசியை போட்டு தொலைங்கடா” என கத்தியதும், முன் சீட்டில் இருந்த அவர் பி.ஏ அதை செய்வதற்குள் டிரைவர் ஏ.சியை ஆன் செய்தான்.

“அண்ணே, சீட் தான் கன்பாம் ஆகிடுச்சே! அப்புறம் எதுக்கு டென்ஷனா இருக்கீங்க?” பி.ஏ கேட்க,

“****ல ஆச்சு! நானே என்ன நடந்து தொலையுமோன்னு கடுப்புல இருக்கேன்!!” ஜெயானந்தான் பொரிய, “அட, அந்த சிபிஐயை சொல்றீங்களா? அவனுங்க கடக்குறானுங்க அண்ணே! இந்தமாறி எத்தனை பார்த்துருப்போம்!” என்று பி.ஏ. ஆறுதல் சொல்ல, “மத்த நேரமா இருந்த எதுக்கும் கவலை படமாட்டேன்! ஆனா இப்போ தலைவரே மனசு வந்த சீட்டு குடுத்துருக்காரு! இந்த நேரத்துல என்மேல கேசு, விசாரணைன்னு வந்தா அவரு யோசிப்பாரு! எப்படா விழுவான்னு வேற கட்சில எல்லாரும் காவ காத்துட்டு இருக்கானுங்க!!” இன்னும் எக்கசக்கமாய் புலம்ப, பி.ஏவும் அதே யோசனையில் ஆழ்ந்தான்.

கார் போகும் பாதையை சிறிது நேரத்துக்கு பின்னே கவனித்த ஜெயானந்தன், “ஏய் கோவளம் போக சொன்னா, எந்த ரூட்ல போய்கிட்டு இருக்க?” என கத்தினார். அப்போதுதான் அதை கவனித்த பி.ஏ “வழி தெரியன்னா கேட்கலாம்ல?” என்றார்.

டிரைவர், “நீங்க பேசிட்டு இருந்ததால குறுக்க பேசலைங்க!” பயந்து சொல்ல, “யாரிவன் புதுசா இருக்கான்?” என்றார் ஜெயானந்தான்.

“அந்த கஞ்சாகுடி நாயி சொல்லிக்காம ஓடி போயிருச்சு! இவனை நேத்து தான் நான் வேலைக்கு சேத்தேன்! வேலை தேடி இங்க வந்தவன் பர்ஸை திருட்டு கொடுத்துபோட்டு கமிஷ்னர் ஆபிஸ்ல அழுதுகிட்டே நின்னுகிட்டிருந்தான், நாந்தான் விசாரிச்சுட்டு கூட்டிட்டு வந்தேன்!” என்றதும், அவனை மிரர் மூலம் பார்த்தவர், “எந்த ஊரு?” என்றார்.

“எனக்கு தூத்துகுடிங்க ஐயா!!” பயம் விலகாமல் அவன் பதில் சொல்ல, “என்ன வேலை குடுத்தாலும் செய்வியா?” என்றார் யோசனையாய்.

“நீங்க சொன்னா எது வேணுன்னாலும் செய்வேனுங்க!” எள் என்றதும் அவன் எண்ணையாய் நிற்க, அவனை வைத்து மனதுக்குள் ஒரு திட்டம் போட்டார் ஜெயானந்தன். கார் அவர் கெஸ்ட் ஹவுசை அடைந்ததும், பி.ஏ கையில் இருந்த அலைபேசி சிணுங்கியது.     

“யாருடா?”

“தெரியலைண்ணே! புது நம்பரா இருக்கு!!!” பி.ஏ சொல்ல, “மேலிடத்துல இருந்து பேசுவாங்கன்னு தலைவர் சொன்னாரு! குடு குடு!!” வேகமாய் வாங்கி காதில் வைத்தவர், “ஹலோ, நான் ஜெயானந்தன் எம்.எல்.ஏ பேசுறேன்!!” என்று சொல்ல, மறுபுறம், “நான் நோண்டி நொங்கெடுக்குறவன் பேசுறேன்!” என்றதும்,, அந்தநொடியே புரிந்தது அவன் யாரென்று. நான்கைந்து பேரின் சத்தமான நகையொலி வேறு மறுபுறமிருந்து கேட்க, ஜெயானந்தனின் நராம்புகள் கோவத்தில் புடைத்தது.  

“என்ன சைலெண்ட்டா இருக்க? இவன் எதுக்கு இப்போ கூப்புடுரான்னு யோசிக்குறியோ? உனக்கு நல்லது சொல்லலாம்ன்னு தான் கூப்ட்டேன்! என்னதுன்னா…. இப்போயிருந்தே களி தின்னு பழகிக்க! திடீர்ன்னு ஒருநாள் ஜெயில உட்காந்து சாப்ட சொன்னா, ‘எனக்கு பழக்கம் இல்ல’ன்னு நீ சொல்ல கூடாது பாரு அதுக்கு தான்!!” இனியன் கிண்டலாய் சொல்ல, இங்கே ஜெயானந்தனுக்கு கோவம் எகிறியது.

“ஹோ, ஒருவேளை உள்ளே போயிட்டு வி.ஐ.பி செல் வாங்கிகிட்டு ஜாலியா இருக்கலாம்ன்னு திட்டமோ?” இனியன் அவன் போக்கில் பேசிக்கொண்டே போக, “நான் ஒரு போன் போட்டா போதும், நீ உன் வேலைலையே இருக்க முடியாது!!!” மிரட்டலாய் வந்தது அவர் குரல்.

“யப்பா! அதை செய்பா முதல்ல! ஏ.சி ரூம்ல உட்காந்து மண்டைய பிச்சுகிட்டு வேலை செய்யுறதுக்கு, எங்க வயல்ல இறங்கி நிம்மதியா வேலை செய்யலாம்!”  அவன் சொல்ல, ஜெயானந்தன் பேச்சிழந்தார்.

“அடுத்து என்ன சொல்லி இவனை பயம் காட்டலான்னு யோசிக்குறியா?” என்று சத்தம் வர சிரித்த இனியன், “நீ மிரண்டு போறமாறி கைவசம் ஒரு மேட்டர் இருக்கு, அத சொல்லட்டா?” என்றான்.

என்னதான் வெளியே தைரியமாய் காட்டிகொன்டாலும் உள்ளுக்குள் உதறியது அவருக்கு. பதவி கிடைத்த பின் எத்தனை பிரச்சனை வந்தாலும் தூசியென தட்டிவிடலாம்! அதற்குமுன்னே கிளம்புவது வெளியே போய்விட்டால் தேவையில்லாத குழப்பம் வருமே, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ? என்ற பயமே அவரை வாட்டியது.

“உங்க அண்ணனை பிளவர்வாசால அடிச்சு மண்டையை கிழிச்சு தூக்குல தொங்க விட்டு தற்கொலைமாறியே பக்காவா செட் பண்ணுன உனக்கு, அதுல கைரேகை பதிஞ்சுருக்குங்குற காமன் சென்ஸ் கூட இல்ல பாத்தியா??” அவன் சொல்லி முடிப்பதற்குள் ஜெயானந்தனுக்கு தலையே சுற்றும் போல் இருந்தது. வியர்வை அருவியாய் கொட்ட, அருகே இருந்த பி.ஏ பதறி “ஐயா என்னாச்சுங்க?” என்றிட, அழைப்பை சத்தமின்றி துண்டித்தான் இனியன்.

இத்தனை நேரம் இனியன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த நால்வரும் அவனை வியப்பாய் பார்த்தனர். “சர், என்ன சர் இப்படி கலாய்க்குறீங்க? பாவம் அந்த ஆளு?” மதன் சிரிக்க, “நீங்க இப்படியெல்லாம் கூட பேசுவீங்கன்னு இன்னைக்கு தான் சர் தெரிஞ்சுது, எப்பவும் சிரிக்க கூட மாட்டீங்க எங்ககிட்ட!!” என்று சேர்ந்துக்கொண்டான் முஸ்தபா.   

வேலை நேரத்தில் மட்டுமே அவனை பார்த்து பழகியிருந்தவர்களுக்கு அவன் இயல்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தான் வகிக்கும் பதவியின் மதிப்பறிந்து நடந்துகொள்வான் இனியன். கேலி, குறும்பு, விளையாட்டு இதையெல்லாம் நிலா அவன் வாழ்வில் தேய்பிறை ஆனபோது முழுதாய் தொலைத்திருந்தான். மீண்டும் அவள் பௌர்ணமியாய் ஒளிவீச, தன்னியல்பு மீண்டு வந்துவிட்டது.

சிறுமுறுவலை மட்டுமே அதற்கெல்லாம் பதிலாய் அளித்தான் இனியன். ஐஷூ மட்டும், “உங்க ப்ளான் எனக்கு ஓரளவுக்கு புரியுது சர்!!” என்றிட, “ஓரளவு தான் புரியுதா? நீங்க எல்லாம் இப்டியே இருந்தா எப்போ எஸ்.ஐ ல இருந்து ப்ரொமோட் ஆகுறது?” இனியன் விளையாட்டாய் ஆச்சர்யம் காட்ட, ரோஷம் வந்ததை போல அவர்களும் முறுக்கிகொண்டனர் விளையாட்டாய்.

சிவா, “நீங்க சொல்லிகுடுங்க சர், கற்பூரம் மாறி பிடிசுக்குறோம்!” என்றிட, “சிம்பிள் டெக்னிக் தான்! ஜெயானந்தன் பண்ணுன தப்பை அவன் மூலியமாவே நிரூபிக்க போறோம்!!” என்றான் இனியன்.

சிறிது யோசித்த நால்வரும், நிமிடத்திற்குள்ளாகவே விஷயம் பிடிபட்டதில் பிரகாசமாக, மதன் “இப்போ எவிடென்ஸ அழிக்க அவன் ட்ரை பண்ணுவான், நம்மகிட்ட வகையா மாட்டுவான்! அதானே சார்!?” வாய்விட்டே கண்டுபிடிப்பை சொன்னான். அதை இனியன் ஆமோத்தித்ததும்,  ‘ஹேய்ய்ய்ய்’ ஹைபை அடித்துக்கொண்டனர்.

அவர்களை கண்ட இனியனுக்கு சிரிப்பு தான் வந்தது. மெரிட்டில் பாஸாகி வேலைக்கு வந்த பிள்ளைகளா இது! என பலநேரம் தோன்றியதுண்டு. வேலையில் மெருகேற மெருகேற சில வருடங்களில் ஆளே மாறிவிடுவர் என எண்ணிக்கொண்டான். அப்போது அவன் போன் உறும, அதில் ஒளிர்ந்த, ‘இதழி’ என்ற பெயரை கண்டதும், சத்தமாய், ‘உஸ்ஸ்ஸ்ஸ்’ என அவர்களை அடக்கினான் இனியன்.

என்னவோ ஏதோ என அனைவரும் ‘கப்சிப்’பாக “சொல்லு நிலாகுட்டி!” என்றான்.

மதன், “நிலா…..? குட்டியா!!” முனக, ‘உஸ்ஸ்ஸ்’ என அவன் இடுப்பில் இடித்தான் சிவா.

“எங்கடா இருக்க? நீ சாப்பாடு கொண்டு வந்து ஊட்டி விடுவன்னு பார்த்தா, இந்த எருமைமாடு எடுத்துட்டு வருது!!” கோகுலை முறைத்துக்கொண்டே மருத்துவமனையில் இருக்கும் நிலா கோவம் காட்ட, உடனே இருக்கையில் இருந்து எழுந்தான் இனியன்.

“இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல உன்முன்ன இருப்பேன்ம்மா” என்றவன் தன் உடமைகளை சேகரித்தான்.        

“எங்க போன நீ? அதை சொல்லு?” அவள் கத்த, இங்கே சைகையில் ‘நான் குடுத்த வேலையெல்லாம் முடிங்க, எதா இருந்தாலும் மெயில் பண்ணுங்க!!’ என்று முடிந்தவரை புரியும்படி சொல்லிவிட்டு, “அதான் வந்துடுறேன்னு சொல்றேனே குட்டி” என்று செல்லம் கொஞ்சினான்.

வெளியேற கதவை திறந்தவன், மீண்டும் அதை சாற்றும்போது, டேபிள் மீது அனாதையாய் கிடக்கும் கைரேகை நிபுணர்களின் அறிக்கை கண்ணில் பட, அதை எடுத்து வைக்க சொல்லி சைகை செய்தான். அதற்குள் அங்கிருந்த காபி மக்கை ஐஷூ எடுக்க போய் தவறவிட, அறிக்கை மேல் அது கொட்டிவிடுமோ என்ற பதட்டத்தில், “ஐஷூ ரிபோர்ட் எடு!!!” சத்தமாய் சொல்லிவிட்டான்.

ரிபோர்ட் தப்பித்தது, ஆனால் இவன் மாட்டிக்கொண்டான்.

“ஐஷூவா? அப்போ அவகூட தான் இருக்கியா நீ?” குளிர்நிலா சுடும்நிலாவாய் நொடியில் உருமாறியிருந்தாள்.

இனியன் கால் தரையில் படாமல் ஓடுவதை கண்ட அவன் டீம்மேட்ஸ், “மினிஸ்டருக்கு கூட பயப்படாத ஆளு, பொண்டாட்டி போன் வந்ததும் எப்படி பாய்ஞ்சு ஓடுறாரு பாரு!!!” என்று பெருமூச்சுவிட்டனர்.  

இந்த உலகத்துல பூனைக்கு பயப்படாத எலியும் இல்ல, பொண்டாட்டிக்கு பயப்படாத புருஷனும் இல்ல!!! சிலர் வெளிப்படையா இருப்பாங்க, பலர் வெளில காட்டிக்காம நடிப்பாங்க அவ்ளோதான்!!!

தொடரும்…     

Advertisement