Advertisement

*16*

உனக்காக பொறந்தேனே எனதழகா!!

பிரியாம இருப்பேனே பகலிரவா!!

நிலா அரைமயக்க நிலையில் மெதுமெதுவாய் கண் இமைகளை திறந்து பார்த்தபோது அவள் முன்னே ஜுசரில் சாத்துக்குடியை நிலாவென நினைத்து கோவத்தை காட்டி பிழிந்துக்கொண்டிருந்த இனியன் தெரிந்தான். பார்த்த கணத்தில் அவள் இதழ்கள் சிரிப்பில் வளைந்தது. எழுந்து அமர வேண்டி அவள் கடினப்பட்டு தன் உடலை அசைக்க, அந்த அரவத்தில் திரும்பி பார்த்தான் இனியன்.

அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. ஒருவேளை, ‘முறைக்கிறானோ?’ என்று எண்ணினாள் நிலா. பழரசத்தை கிளாசில் ஊற்றில் அவளருகில் இருந்த சிறு டேபிளில் வைத்தவன், வெளியே சென்றான். முடிந்தவரை, எங்கே போகிறான் என எக்கி பார்க்க முயன்றாள். போனவன் அடுத்த நிமிடமே உள்ளே வர, அவன் பின்னே தேவியும் வேணியும் வேகமாய் வந்தனர்.

வேணி அவளை தலை முதல் கால் வரை நிதானமாய் ஆராய்ந்தார். தேவியோ, “பொட்டபுள்ள மாறியா நடந்துக்குற நீ? எத்தன தடவ சொல்லிருக்கேன், ராத்திரி நேரம் வெளில தங்காத, வண்டியை வேகம் ஓட்டாதன்னு!!” திருமணமான பெண்ணை புகுந்த வீட்டினர் கோவித்துக்கொல்வரோ என்ற பயம் அவருக்கு. அவர்களை முந்திக்கொண்டு தானே திட்டிவிட்டார். மகள் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என்ற பதைப்பு இல்லாமல் இல்லை.

நிலா, “இனி இப்படி பண்ண மாட்டேன்!” என்று சொல்லிவிட, மயங்கி விழாத குறைதான்! இனியனுக்கும் நிலாவின் இந்த பதில் வியப்பாய் கொடுத்தது. அதற்குமேல் தேவி ஒரு வார்த்தையும் பேசவில்லை. நிலாவின் கையை பிடித்து வருடிகொடுத்தபடி உட்கார்ந்திருந்தார்.

வேணி, “அடி ஒன்னும் பலமா இல்ல தானே செழியா? டாக்டர கேட்டியா நல்லா?”

இனியன், “லாரி அடிச்ச வேகத்துக்கு இந்நேரம் போஸ்ட்மார்ட்டம் நடந்துருக்கணும்! அவ நல்ல நேரம், பாலம் கட்டுற வேலைக்காக கொட்டி வச்சுருந்த மணல் மேடு மேல விழுந்துட்டா! உடம்பு முழுக்க சிராய்ப்பு! மேடம் காலைல இருந்து ஒண்ணுமே சாப்டல! எல்லாம் சேர்ந்து மயக்கம் தெளிய இவ்ளோ நேரம் ஆகிடுச்சு!” என்றான் அவளை பாராமல்.

“புள்ள சாப்டுச்சா இல்லையான்னு கூட கவனிக்காம உனகென்னடா வேலை?” வேணி தன் மகனை கடிந்துகொள்ள, அவனை முந்திக்கொண்டு, “அவர் இன்னைக்கு யாரோ ஐஷூவ பார்க்கனும்ன்னு நேரமே போயிட்டாரு அத்தே” நேரம் பார்த்து போட்டு விட்டாள் நிலா.

“யாருடா அந்த ஐஷூ?” வேணி கேட்க, அவன் பதில் சொல்லும்முன் உள்ளே வந்தான் கோகுல் ‘நிலாஆஆ’ என கூவிக்கொண்டு.

“எப்படிமா இருக்க? எப்படி இருக்க? புள்ளிமானாட்டம் துள்ளிக்கிட்டு இருந்த புள்ளையை இப்படி சீக்கு வந்து கோழி மாறி படுக்க வச்சுட்டானுன்களே? ‘குயில புடிச்சு கூண்டிலடைச்சு கூவ சொல்லுகிற உலகம், மயில பிடிச்சு காலை உடைச்சு ஆட சொல்லுகிற உலகம், அது எப்படி பாடுமையா? அது எப்டி ஆடுமையா? ஓ..ஓஓ..ஓ..ஓஒ…” அவன் ராகம் போட்டு இழுக்க, “ஏங்க ஹாஸ்பிடல்ல இப்டியெல்லாம் கண்டமேனிக்கு கத்த கூடாதுங்க!!” போறபோக்கில் நர்ஸ் திட்டிவிட்டு சென்றார்.

‘நான்  பாடுறது, கத்துற மாறி இருக்கா!?’ நர்சை முறைத்துவிட்டு திரும்ப நிலா, “ஊருல இருக்கவன்களே என்னை பார்க்க வந்துட்டாங்க, நீ வரதுக்கு இவ்ளோ நேரமா?” என்று முறைக்க, “சொல்லுவம்மா சொல்லுவ! உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்ததே நான்தான்!! பால் வாங்கிட்டு வர போயிருந்த கேப்ல முழிச்சுபுட்டு பேசுறியா நீ!!” என்றான் கோகுல்.

“நீதான் என்னை அட்மிட் பண்ணியா?” என்று கேட்க, “ரோட்ல பப்பரப்பான்னு விழுந்து கடந்துருக்க, அந்த வழியா போனவங்க உன் போன்ல ரிசென்ட் கால் லிஸ்ட் பார்த்து எனக்கு கூப்ட்டு விஷயம் சொன்னாங்க! நான் அங்க வரவும், ஆம்புலன்ஸ் வரவும்  சரியா இருந்துச்சு! உன்னை இங்க சேர்த்துட்டு தான் நான் எல்லாருக்கும் போன் பண்ணேன்!” என்றிட, “அப்போ நீ என்னை தேடவே இல்லையா?” என இனியனை பார்த்தாள் நிலா, கண்களில் ஆதங்கமும் கோவமும் போட்டிபோட!

“நான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கும்போது தான் கோகுல் போன் பண்ணான்” மெல்லிய குரலில் அவன் சொல்ல, ‘இவ்ளோ நேரம் அவகூட உனக்கென்ன வேலை?’ என்று கண்களால் அவள் கேட்டதை வேண்டுமென தவிர்த்தான் பதிலின்றி.

“யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல, இப்படி உடம்பு முழுக்க சிராய்ச்சு கடக்கு” என தேவி சொன்னதும் தான் தன் உடலை பார்த்தாள் நிலா. பெரிதான அடி இல்லையென்றாலும், ஏகப்பட்ட சிராய்ப்புகள். ‘அத்தனையும் காய்ந்து தோல் சுருங்கும்போது வலி பின்னியெடுக்குமே!’ கவலையோடு தன்னை ஆராய்ந்துகொண்டிருந்தாள்.

“ஆமா, மிஸ்டர் அன்புசெல்வன் ஐ.பி.எஸ் வரலையா?” கோகுல் கிண்டலாய் கேட்க, ‘யாரென’ தெரியாமல் விழித்தனர் வேணியும் தேவியும்.

“அதியனை சொல்றான் அத்தே” நிலா மொழிபெயர்த்ததும், “அவன் நேத்தே இங்க வரதா சொல்லி கிளம்பினானே? என்ன செழியா? நீதான் வர சொன்னதா சொன்னான்? இப்போ அவன் எங்கன்னு என்கிட்ட கேக்குறீங்க?” வேணி பதறிப்போனார்.  

நேற்று காலை இனியன் அதியனை தொடர்பு கொன்ன்டிருந்தான்.

“சொல்லுங்க அண்ணா?”

“எனக்காக ஒரு உதவி செய்யணும்!” இனியன் சொல்ல, “உத்தரவிட்டுங்கள் அண்ணா!” என்று சிரித்தான் அதியன்.

“கொஞ்சம் சீரியசான விஷயம், நேர்ல பேசணும்!” என இனியன் சொன்னதும் மறுமொழி பேசாமல் உடனே சென்னைக்கு கிளம்பியிருந்தான்.

“ஆமாம்மா! நாந்தான் வர சொல்லியிருந்தேன்! பெங்களூர்ல என் பிரன்ட் ஐஷு போட்டிதேர்வுக்கான கோச்சிங் கிளாஸ் வச்சு நடத்துறா! அதியனுக்கு வேலை கிடைச்சது தெரிஞ்சதும், அங்க வந்து கொஞ்ச நாள் அவன் எக்ஸாம் டிப்ஸ் சொன்னா எல்லாருக்கும் யூஸ்புல்லா இருக்குமே கேட்டா! அதான் அவனை அங்க அனுப்பிருக்கேன்!” இனியன் சிறு தடுமாற்றத்தோடு சொல்லி முடிக்க, ‘இதை நான் நம்பணுமா?’ என அவனை பார்த்திருந்தாள் நிலா.

“நல்லது தான்! எல்லா புள்ளைகளுக்கும் உதவியா இருக்கும்! அவனுக்கு ட்ரைனிங் அடுத்த மாசத்துல இருந்து இருக்கே!  அதுக்குள்ள வந்துடுவானா?” வேணி கேட்க, “வேலையை சரியா முடிச்சுட்டு உடனே வந்துடுவான்” என்ற இனியனை நிலா கூர் பார்வை பார்க்க, “கிளாஸ் எடுக்குறதை சொன்னேன்!” என்றான் அவள் கேளாமலே!

கோகுல், “உங்களுக்கு அவன் போஸ்டிங் பத்தி தெரியுமா அம்மா? சர்ப்ரைஸ் குடுக்க போறேன்னு சொல்லிட்டு இருந்தானே?” என்று ஆச்சர்யமாக, “ஹும்! போஸ்டிங் லெட்டரை வாங்கி வச்சதே நாந்தான்! எனக்கு தெரியாதுன்னு அவனா நினச்சுட்டு இருந்தா நான் என்னத்த பண்ண முடியும்!” அசால்ட்டாய் சொன்னார் வேணி.

இனியன் சிரிப்போடு, “உங்ககிட்ட எதையுமே மறைக்க முடியாதுங்கம்மா” என்றான் பெருமிதமாய்.

“அதியன் மாறி நானும் ‘திடீர் போலிஸ்’ ஆகலாம்ன்னு இருக்கேன்!” கோகுல் சிரிக்க, “அவன் திடீர்ன்னு போலிஸ் ஆகல கோகுல். இது அவனோட ஐஞ்சு வருஷ உழைப்பு! கை நிறைய சம்பளம் வாங்குன வேலையை விட்டுட்டு வந்து ராத்திரி பகலா படிச்சு இந்த போஸ்டிங் வாங்கிருக்கான்! இது ஒன்னும் ஈசி கிடையாது!” தன் தம்பியை விட்டுக்கொடுக்காமல் இனியன் பேச,  இந்த பரிட்சையில் தேர்வாக எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை இனியன் மூலம் மேலும் கேட்டு தெரிந்து மலைத்து போனான் கோகுல்.

சிறிது நேர அமைதிக்கு பின், “செழியா, நாங்க வீட்டுக்கு போய் சமைச்சு குடுத்தனுப்புறோம்! நிலாவை பார்த்துக்கோ!” என்ற வேணி, தேவியை அழைக்க, அவரும் கிளம்பினார்.

வேணி, “கோகுல், நீயும் எங்களோட வா! சமைச்சதும், சாப்பாடு கொண்டு வந்து குடுப்பியாம்!” என்றழைக்க, தேவி, “நம்மலே கொண்டு வந்து கொடுத்துடலாமே வேணி” என்று தேவியும், “சமைச்சுட்டு போன் பண்ணுங்கம்மா, அப்புறம் வரேன்” என கோகுலும் சொல்ல, ‘சிறுசுக்கும் அறிவில்ல, பெருசுக்கும் அறிவில்ல’ மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்ட வேணி, “வெளில வாங்க சொல்றேன்!” முறைப்புடன் அழைத்து சென்றார்.

“நம்ம இருந்தா அதுங்க எப்படி ஒன்னுக்கொன்னு நெருக்கமாகுங்க!? நிலாவை செழியனே கவனிக்கட்டும்! அதுதான் சரி” என்று புத்தி சொல்லி தன்னுடன் இருவரையும் கிளப்பி விட்டிருந்தார்.

அறையில் இருவர் மட்டுமே இருக்க யார் முதலில் பேசுவது என தயங்கி இருவருமே அமைதியாய் இருந்தனர். இனியன் தன் இறுக்கத்தை விட்டுவிட கூடாதென உறுதியெடுத்து நிலாவின் கண்களை காணாமல் சுற்றிலும் வேடிக்கை பார்க்க, எத்தனை நேரம் பார்த்தாலும் ஐந்து நிமிடத்திற்கு மேல் பார்க்க அந்த பத்துக்கு பத்து அறையில் ஒன்றுமே இல்லை. வேறுவழியின்றி தன் பார்வையை பட்டும் படாமல் அவள் மீது திருப்ப, நேர்குத்தியாய் அவனையே வட்டமிட்டுக்கொண்டிருந்தன அவள் விழிகள்.

‘என்னையே தான் பார்க்குறாளா?! இனியா! ஸ்டெடியா இருடா!’ உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன், அந்த அறையிலேயே அங்கும் இங்கும் மெதுவாய் நடந்தான். அதையும் விடாமல் சிரிப்போடு பார்த்துகொண்டிருந்தாள் நிலா. அவன் ஸ்டெடியாய் இருக்க மிகவும் பிரயத்தனப்படுவது தெரிய, தானே இறங்கி வரலாம் என முடிவெடுத்தவள், “நடைபயிற்சி முடிஞ்சுதா?” என்றாள் நக்கலாய்.

“ம்ம் ம்ம்” என்ற இனியன், “அந்த ஜூஸ் எடுத்து குடி” என்றான் எங்கோ பார்த்தபடி.

அதை எடுப்பது போல பாசாங்கு செய்தவள், “அத்து!! எனக்கு எட்ட மாட்டுது, எடுத்து குடேன்” என்றாள் சிணுங்கலாய். திரும்பி அவளை பார்த்தான். அவள் கைக்கு அருகிலேயே இருந்த கிளாசை எடுக்க முடியவில்லையென சொன்னதும், ‘உர்’ரென்ற முகத்துடன், “பக்கத்துல தானே இருக்கு, எடு!” என்றான்.

நிலா, “என்னால முடியலன்னு தானே சொல்றேன்!” இன்னும் சிணுங்கலாய்.

கடமையே என வருபவன் போல அவள் அருகே வந்தவன், கிளாசை எடுத்து அவள் முன் நீட்ட, கை தூங்கி வாங்க முயன்றவள், ‘ஆஆஆ’ என்ற சத்தத்தோடு முகம் சுருக்கி, “கை தூக்க முடியல அத்து” என்றாள் பாவமாய்.

இம்முறை நன்றாகவே முறைத்தான். “ப்ளீஸ் அத்து, ஊட்டி விடேன்” முகம் சுருக்கி கொஞ்சளோடு கெஞ்சலும் சேர்த்து சொல்லும் அவன் இதழியை முறைக்க முயன்று தோற்று போனான். இறுக்கம் போய் கனிவு வந்தது அவன் முகத்தில். அவளை நெருங்கி தோளோடு தன் கையை படரவிட்டவன், அவள் முகத்தை தன் வயிறோடு சாய்த்தபடி பழரசத்தை புகட்டினான்.  சொட்டு விடாமல் முடித்து முடித்தவள் நிமிர்ந்து அவனை பார்த்து சிரிக்க, மேலுதட்டின் மேலே கோடாய் ஒட்டியிருந்தது ஜூஸின் மிச்சம். அதை உடனே துடைக்க சொல்லி அவன் உதடுகள் அவளிடம் வேகமெடுத்தது. மிகசிரமமப்பட்டு அதை இழுத்துபிடித்து வைத்தான்.

அவள் இதழ்களில் குவிந்த தன் கவனத்தை திருப்ப முடியவில்லை அவனால்.  அதையே ஒரு ஏக்கத்தோடு அவன் பார்த்தபடி நிற்க, அவன் முகத்தில் தெரிந்த மாறுதலை சரியாய் புரிந்துக்கொண்டாள் நிலா. அவன் சட்டையை கொத்தாய் பிடித்திழுத்து தன் முகத்தருகே வைத்தவள், அவளுக்கே கேட்காத மெல்லிய குரலில், “இன்னமும் என் உதட்டுல மயங்கி போறியா அத்து?” என்றாள்.

“எப்பவும் உன் இதழழகுல சொக்கி தான் போவேன்!” அவன் குரலே குழைந்து ஒலித்தது. இருவிரலால் அவள் இதழை அவளுக்கு வலிக்காமல் கிள்ளியவன், “என் இதழி” என்றான் மயக்கமாய்.

அந்த ஒரு வார்த்தை அவளை எங்கோ கொண்டு சேர்த்தது. அவன் மயக்கத்தில் அவளும் தொலைந்தாள். பதின்வயதில் அவன் கொடுத்த முதல் முத்தத்தின் தித்திப்பு அவள் இதழ்களில் இப்போது வழிந்தது. அப்பொழுது அவள் காதோரம் அவன் முதன்முதலாய் சொன்ன ‘என் இதழி’ என்ற சொல்லில் மண்டி கிடந்த காதலும் அவள் மீதான மயக்கமும் இன்னமும் அவனிடம் குறைவின்றி இருப்பதில் அவன் மீது பித்தாகி போனாள் நிலா.          
  

“நம்ம முதல் முத்தத்தப்போ நீ எனக்கு வச்ச பேரு!!” நிலா சொல்ல, “உன்னை நினைக்கும்போதும் கொஞ்சும்போதும் என் மனசுக்குள்ள கேக்குற ஒரே பேரு” அவள் நெற்றிமுட்டியபடி இனியன் சொல்ல, “இன்னமுமா?” என்றாள் அவள். அதில் சந்தேகம் இல்லை, அவன் வாய்மொழியாய் அவள் மீதான காதலை சொல்ல கேட்க வேண்டுமே என்ற ஆசை மட்டுமே!

“எப்பவும்!!” என்ற இனியன் மீண்டும் ஒருமுறை அவள் உதட்டை கிள்ளிவிட்டு நிமிர்ந்தான். இம்முறை வன்மையாய். அவள் ‘ஸ்ஸ்ஸ்’ என்ற முனகலோடு, ‘கைல கிள்ளி என்ன பிரயோஜனம்?’ என்று சத்தமாய் சலித்துக்கொள்ள, “இது சரிவராது, நான் போறேன்” என நகர்ந்தவனை வேகமாய் கை பிடித்து நிறுத்தினாள் நிலா.

“போகாத அத்து!!!”

‘போ’ன்னு சொன்னாலே போகமாட்டான், இதுல போகாதன்னு சொன்ன எங்கேருந்து போவான்!?’ அப்படியே நின்றுவிட்டான் இனியன்.

“ஏன் அத்து தள்ளி தள்ளி போற?” தான் நெருங்கி வருகையில் அவன் தள்ளி போவதால் கேட்டே விட்டாள் நிலா.

“நெருங்கி வந்தா நான் நொறுங்கி போற மாறி பேசுற! நானும் எவ்ளோதான் தாங்குவேன்!?” அவள் புறம் திரும்பாமலே பதில் சொன்னான்!

முந்தைய நாளிரவு, அவன் நெருங்கி வந்தபோது அவள் பேசியதை சொல்கிறான் என புரிந்தபோதும், லவ் ட்ராக்கை மாற்ற விருப்பமில்லாது, “அடடா! நெருங்கி, நொறுங்கி! என்னா ரைமிங் இனியா” என பரிகாசம் செய்தாள். அவனுக்குமே சிரிப்பு வந்தது.  

அவன் சிரிப்பு மறையாமலே அவள் தலையில் செல்லமாய் கொட்ட, “என் பக்கத்துல உட்காரு அத்து!!” என இழுத்துக்கொண்டாள் அவனை. மறுக்காமல் அவளை ஒட்டியே அமர்ந்துக்கொண்டவன் தோளில் தலை சாய்த்தாள் நிலா.

“உன்னை ரொம்ப தவிக்க விட்டுட்டேன்ல அத்து?” கோர்த்திருந்த இருவரின் கைகளையும் பார்த்துக்கொண்டே அவள் கேட்க அவனிடம் பதில் இல்லை. நிலா நிமிர்ந்து அவன் முகம் பார்த்ததும், “இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன்” என்றான் அவள் கண்களை நேராய் பார்த்து. அவளுக்கு அடுத்து என்ன சொல்வதென தெரியவில்லை. தாழ்ந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தியவன், அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு, “ஐ லவ் யூ” என்றான்.

கண்கள் பளபளக்க, “ஐ லவ் யூ டூஊஊ அத்து” என்றாள் அழுத்தமாய்,  அவனை கைகளால் சிறைபிடித்தபடி.  

“ஏய் ஒரே நாள்ல இவ்ளோ மாறாதடி! ஷாக்லையே போயிருவேன் போல!” அவள் மாற்றத்தை, நம்பமுடியாத சந்தோஷத்தை இப்படி வெளியிட்டான் இனியன் சிரிப்பும் கலந்து. தன் இதழி திரும்ப கிடைத்த மகிழ்ச்சியை அவன் மனதால் தாங்கமுடியவில்லை. கண்கள் கலங்குவதை போல இருந்தது. நிலாவுக்கும் அதே நிலைதான். கூடு தேடி பல வருடங்களாய் சுற்றி திருந்த பறவை தாய்மடியை சேர்ந்த நிம்மதி அவளுக்கு.  

“என்னை மன்னிச்சுடு அத்து! இவ்ளோ நாள் உன்னை தவிக்க விட்டுட்டேன்!” மனதார அவள் மன்னிப்பு கேட்க, “மன்னிப்பா? முழுசா பத்து வருஷம்! பத்து வருஷத்துக்கு எத்தனை மாசம் எத்தனை வாரம் எத்தனை நாள் எத்தனை நிமிஷம்ன்னு தெரியுமா உனக்கு? ஒவ்வொரு நொடியும் உன்னை இழந்து உனக்காக ஏங்கிருக்கேன்! அத்தனை நாளையும் ஈடு கட்டுற அளவுக்கு நீ எனக்கு ஏதாது குடுக்கணும், அப்போதான் உன்னை மன்னிக்குறதா வேண்டாமான்னு என்னால கன்சிடர் பண்ண முடியும்!!” என்றவனை கள்ளப்பார்வை பார்த்தவள், அடுத்த நொடியே, “குடுத்துட்டா போச்சு!!” என்றாள்.

அவன் முகத்தில் வியப்பும் ஆசையும் அந்த நொடி போட்டியிட்டது. பின், “வேணாம் நிலா, ஒரே நாள்ல இத்தனை சந்தோசத்தை என்னால தாங்க முடியாது. நடக்குறதெல்லாம் கனவோன்னு கூட பயமா இருக்கு!!” அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னத்தை எச்சில் படுத்தியவள், “நிஜம் தான் அத்து! கனவில்ல” என்றாள்.

அவனோ மூச்சு முட்டும் அளவுக்கு போனான். மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரமெல்லாம் வடிந்து அதில் நிம்மதியும் சந்தோஷமும் குடியேறிட, அதன் கனத்தை தாங்க முடியாமல் தினறிப்போயிருந்தான். அவனை மேலும் நெருங்கி அமர்ந்த நிலா, “இப்போவே வீட்டுக்கு போலாமா?” என்றாள். அதன் அர்த்தம் அவனுக்கு புரியாமல் இல்லை.

“நிலா, எனக்கு மூச்சு முட்டுது! போதும்!” வாய்வழியே அதிர்ச்சியை காற்றாய் ஊதிதள்ள முயன்றான். வியர்த்து கொட்டியது அவனுக்கு. சொர்க்கம் கிட்டும் உவகையால் உண்டான உணர்விது. அவனால் அந்த உணர்வை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நிலா அவன் இதழியாய் மாறுவாள் என அவனுக்கு தெரியும். அதற்க்கான முயற்சிகள் அத்தனையிலும் அவன் ஈடுப்பட்டிருந்தான். ஆனால் அதற்குமுன்பே எதிர்பாராத அவள் மாற்றம் அவனை திக்குமுக்காட செய்தது.

“நான் பார்மசி வரைக்கும் போயிட்டு வரேன்!!” தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவனுக்கு நேரம் தேவைப்பட்டது.

“முடியாது முடியாது” அவன் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டாள். “புரிஞ்சுக்கோடி” அவன் கெஞ்சும் நிலைக்கு போய்விட்டான். அவள் கையை விட்டதும் அவன் நகர்ந்து சென்றிட, “ஒதுங்காத தொட்டு, உசுப்பேத்தி விட்டு, உன்னைத்தான் ஒவ்வொருமாதுரி நாக்குல நெஞ்சுல பச்சையும் குத்தி வச்சேன்! மெலிதாய் பாடத்தொடங்கினாள். குரலில் தாபமும், கண்களில் ஆசையும், உடல் மொழியில் நெளிவும் கூட்டி அவள் பாட, அவன் கால்கள் அசைய மறுத்தது.

“நீ வேணுன்னே தானே பண்ற?” அவன் கேட்க, ‘ஆம்’ என அவள் கண்கள் சிரித்தது. அவன் தலையை பிய்த்துக்கொண்டான்.

அவளோ, “உன்னோட நான் சேர தின்னேனே மண்சோறு, நேந்து தான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு!  மீண்டும் பாட, “கிழிச்ச!!” என்றான் சிறிது கோவமாய்.

அவன் சிறு கோவமும் மறையும்படி, “நாம கட்டிக்கொள்ளும் நாளை எண்ணி ஏங்குது என் தோளும்! கடைசி வரியை சற்று மாற்றி பாடியதோடு, அவனுக்கு பிரியமான தன் இதழ் குவித்து ஒரு முத்தத்தையும் பறக்கவிட, மொத்தமாய் தொலைந்து போனான் இனியன்.

அதற்குமேல் தாங்காமல் ஓடிவந்து அவளை இருக்க அணைத்தபடி, “உசுர எடுக்குறடி நீ” என்றவன் முகம் முழுக்க முத்தமிட தொடங்கினான் ஒருவித வேகத்துடன்.  சிராய்ந்து போயிருந்த இடங்களில் அவன் உதடு ஊர்வலம் வந்தபோது அவளுக்கு வலித்தாலும், அவன் முத்தமே அதற்க்கு மருந்தாகவும் மாறியது.  பல நிமிடங்களுக்கு பின்னர் முத்த ஊர்வலத்தின் வேகம் வலுவிழக்க, அவளை தன் நெஞ்சோடு அணைத்தவன், “வீட்டுக்கு போலாமா?” என்றான். முன்பு அவள் கேட்டதை போல.

நிலா, “வீட்ல உங்கம்மாவும், எங்கம்மாவும் இருப்பாங்க!”  

“நீ ‘ம்ம்’ன்னு இப்பயே துரத்தி விட்டுடுறேன்” என்றவனை கண்டு மலர்ந்து சிரித்தவள், “அடப்பாவி” என்று அவன் முதுகில் செல்லமாய் அடித்தாள். ஆனாலும், “இன்னைக்கு வேணாம், நாளைக்கு துரத்தி விடு” என சொல்லாமல் இல்லை.

“ஏன் அத்து, இப்படி புண்ணு புண்ணா இருக்கே! நான் அசிங்கமா இருக்கேனா?” மூக்கு சுருங்கி போனது அவளுக்கு.

அவன் சிரிக்காமல், ‘ம்ம்ம்’ ‘ம்ஹும்ம்’ ‘ம்ம்ம்’ என மாற்றி மாற்றி தலையசைக்க “அத்து…..!!!!!!” என அழுவதை சிணுங்கினாள் நிலா.

சிரித்துக்கொண்டே அவளை இழுத்தணைத்தான் இனியன். “எங்க போயிருந்த நேத்து?” அவன் கேட்க, “அமைச்சர் கேஸ் விஷயமா தான்! அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது! செம்ம மேட்டர் ஒன்னு சிக்கிருக்கு, நாளைக்கு அந்த கோகுல் பயகிட்ட சொல்லி இந்த வார ஆர்டிகிள் ரெடி பண்ணனும்” என்றாள் சீரியசாய்.

“அந்த கேஸ் விஷயம் எனக்கு புரியாதா? சரிதான்!” என்றான் இனியன்.   

பின், “இனி வண்டி ஓட்டும் போது பாத்து ஓட்டனும்!! ஹெல்மெட் போட்டுருந்ததால தலைக்கு எந்த பாதிப்பும் இல்லை, அதனால வண்டி ஓட்டும்போது எப்பவும் ஹெல்மெட் போட்டே இருக்கனும்! சரியா?” என்றதும் நல்லபிள்ளையாய் தலையாட்டினாள்.

ஒரு நீண்ட நிமிட அமைதிக்கு பின், “அத்து, ஒரு வேளை இந்த ஆக்ஸிடென்ட்ல நான் செத்து போயிருந்தா என்ன ஆகிருக்கும்?” என்றாள் அவனை சீண்டும்பொருட்டு.

அவனோ யோசிக்காமல், “என்ன ஆகிருக்கும்? கொஞ்ச நாள்ல இன்னொரு அழகான பொண்ணு என் லைப்ல வந்துருக்கும், கதை செகண்ட் பார்ட் போயிருக்கும், நீதான் பொழச்சு வந்து எல்லாத்தையும் கெடுத்துட்ட!” என்றிட, ‘உனக்கு இன்னொருத்தி கேக்குதாடா?’ அவனை மொத்தி எடுத்துவிட்டாள் நிலா.

அவன் சொல்வது விளையாட்டுக்கு என புரிந்தாலும் எப்படி சொல்லலாம் என அடியோ அடி என்று அடிக்க, அவனுக்கு சிரிப்பு அதிகமானது. சத்தமாய் சிரித்துக்கொண்டிருந்தனின் அசைபேசி ஒலித்து அவனை திசை திருப்ப, நிலா ஓய்ந்தபாடில்லை.

“குருநாதன் சார் கூப்புடுறாரு” என்று சொல்லியும் அவள் அடிப்பத நிறுத்தவில்லை. ஒரு கையால் அவள் அடிகளை தடுத்தபடியே, “சொல்லுங்க சார்” என்றான் இனியன். அவனை பேசவே விடாமல் அவள் அடித்துக்கொண்டிருக்க, “ஒரு நிமிஷம்” என்று அவரிடம் சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியே ஓடிவிட்டான்.

‘திரும்பி உள்ள தானே வரணும், வச்சுக்குறேன்’ நிலா கத்துவது காதில் விழுந்து புன்னகையை வரவழைத்தது. அதோடு, “இப்போ சொல்லுங்க சர்” என்றான் இனியன்.

நிலாவின் உடல்நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்தவர், நேரில் வருவதாக சொல்ல, ஆபிஸ் முடிந்த பின்னே வந்தால் போதும் அலைய வேண்டாம் என உரிமையாய் சொல்லிவிட்டான். அடுத்ததாய் அவர் பேச்சு சற்று தயங்கி வந்தது.

“ஏதாது சொல்லனுமா சார்” சரியாய் அவன் கேட்க, “ஆமா இனியா” என்றார் குருநாத்.

“அமைச்சர் கேஸ் ஆர்டிகிள் ஆரம்பிச்சதுல இருந்தே நிறைய திரட்டன் கால்ஸ் எனக்கு வந்துட்டே இருந்துச்சு, இந்த ஆர்டிகிள டிராப் பண்ண சொல்லி! எப்பவும் இந்தமாறி நடக்கிறது தான்னு நினச்சு நான் கண்டுக்கல! பட் லாஸ்ட் வீக், ஒருத்தன் போன் பண்ணி, இந்த ஆர்டிகிளை நிறுத்தலன்னா உன்னை கொன்னுடுவேன்னு மிரட்டுனான்!” என்றார்.

“பேசுனது யாருன்னு சொன்னான்னா சார்?” இனியன் கேட்க, “இல்லப்பா! அவன் பண்ற நம்பரை ட்ரேஸ் பண்ணவும் முடில! இந்த ஆர்டிகிள் ஆரம்பிக்கும்போதே எனக்கு தெரியும், இந்தமாறி எல்லாம் நடக்கும்ன்னு! அதுக்கெல்லாம் நான் பயப்படல! எனக்கு வந்தமாறி திரட்டன் கால்ஸ் நிலாவுக்கும் வந்துருக்கான்னு தான் தெரியல, அவன் கேட்டாலும் சொல்ல மாட்டா!” என்று அவர் இழுக்க,

“அவளோட இந்த விபத்துக்கும் போன் பண்ற ஆளுங்களுக்கும் தொடர்பு இருக்கும்ன்னு சந்தேகப்படுறீங்களா?” நேரே பாய்ண்டை பிடித்தான் இனியன். அவர் ‘ஆம்’மென ஒத்துகொள்ள, “இனி கால்ஸ் வந்தா அதை ரெகார்ட் பண்ணுங்க, மத்ததை நான் பார்த்துக்குறேன்” என்று அழைப்பை துண்டித்தான்.

அந்நேரம் அவனிடம் வந்த செவிலியர்,  ஒரு பேகை அவனிடம் கொடுத்து, “இது பேஷன்ட்டோடது! அவங்களுக்கு இன்ஜெக்ஷன் போடணும், கொஞ்சம் வெளிலயே நில்லுங்க” என்றுவிட்டு அறையினுள் சென்றார்.

அங்கு போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தவன், நிலாவின் பேகை திறந்து துலாவினான். அவன் எதிர்ப்பார்த்த மொபைளோடு வேறு ஒரு மொபைலும் சிக்க, அணைந்திருந்த அவள் அலைபேசியை மட்டும் இயக்கினான். ஒரே எண்ணில் இருந்த பல தவறிய அழைப்புகள் வந்திருப்பது தெரிந்தது. சில நாட்களாய் நிலாவுக்கு பல ராங்கால்கள் வருவது நியாபகம் வந்தது அவனுக்கு.

அந்த எண்ணிற்கு மீண்டும் அழைக்கலாமா என அவன் யோசித்த நேரம், அதே எண்ணில் இருந்து மொபைல் அதிர அழைப்பு வந்தது.  

அழைப்பை இயக்கியவன் அமைதியாய் காதில் வைத்தான். மறுபுறம், இடியென சிரிப்பு சத்தம். பேசுவது ஆண் என தெரிந்தது.

“என்னமா நிலா பொண்ணு, விழுந்த அடில போன் எடுக்கவே உனக்கு இவ்ளோ நேரமாகிடுச்சா? ஹாஹஹஹா ஆகத்தானே செய்யும்! அடிச்சது  ஜெயானந்தனாச்சே!!!” கடைசி வார்த்தைகள் வன்மமாய் ஒலித்தது.

“இந்த கேஸ கிளராதன்னு என் ஆளுங்க சொன்னபோதே கேட்டுருக்கணும்! போலீசே துட்ட வாங்கிட்டு மூடிட்டு இருக்கப்போ பொட்ட கழுத உனக்கென்ன இத்தன ஆர்வம்? இன்னொரு வாட்டி என் லைன்ல குறுக்க வந்த….??? உடம்புல ஒட்டியிருக்க உசுரும் மிச்சம் இருக்காது, வலிச்செடுத்துட்டு போயிட்டே இருப்பான் இந்த ஜெயானந்தன்!!!” குரல் உறுமலாய் வர,

“ஆஹான்!!!!!!” நிதானமாய் அழுத்தமாய் அசால்ட்டாய் வெளிவந்தது இனியனின் ஆஹான். மறுபக்கம் திடீரென கேட்ட ஆண்குரலில் ஒரு நொடி சத்தம் இல்லை. மறுநொடியோ, “யார்டா நீ? குறுக்க வந்து உசுர விட போறியா?” கர்ஜனையாய் வந்த வார்த்தைகளில் வேறோருவராய் இருந்தால் நடுங்கியிருப்பர். ஆனால் இவனோ இனியன் இளஞ்செழியனாயிற்றே!

“உசுர விடுறேனா உசுர எடுக்குறேனான்னு பார்ப்போமா?” என்றான் இவனும் கர்ஜனையாய்.

மறுபுறம் இடியென சிரிப்பு, “நான் யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்க நீ!!!” யாரென்று தெரிந்தால் பயந்துவிடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு.

“யாருன்னு சொன்னா இன்னும் வசதியா இருக்கும்!!!” குரலில் சிறிது நக்கல்.

“செத்துப்போன அமைச்சர் சதாசிவத்தோட ஒரே தம்பி ஜெயானந்தன்டா! இக்கால எம்.எல்.ஏ! வருங்கால அமைச்சர்!!!” பெருமிதமாய் சொல்லிமுடித்து இனியனின் கெஞ்சல் மொழிக்காக காத்திருந்தார் அவர்.

“அய்யோ!!!!!!! நான் யாருன்னு தெரியாம என்கிட்டேயே வந்து சிக்கிட்டியேடா ஜெயானந்தா!! ஹாஹாஹா” அவன் குரலில் அத்தனை எகத்தாளம், நக்கல். அதை கேட்ட ஜெயனந்தனின் நரம்புகள் இறுக, “யார்லே நீ!!!?” என்றார் பல்லை கடித்துக்கொண்டு!!

“உன் அண்ணன் கொலை கேஸை நோண்டி நொங்கெடுக்க வந்தவன்டா! இனியன் இளஞ்செழியன்!! டெபுட்டி சுபெரிண்டேன்ட் ஆப் சி……பி……ஐ……!!! இனி உன் குடுமி என் கைல!!!! களி திங்க தயாராயிரு! ஜஸ் கவுன்ட் யுவர் டேஸ்!”

சி.பி.ஐ ஆபிசர் இனியன் இஸ் இன் ஆக்ஷன்!!!!!  


-தொடரும்…..

Advertisement