Advertisement

*15*

என் ஜீவன் ஜீவன் நீதானே! எனத்தோன்றும் நேரம் இதுதானே!

நீ இல்லை இல்லை என்றாலே, என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!

ஊரிலிருந்து திரும்பி சென்னைக்கு போகும்போது இனியனும் நிலாவும் பெரிதாய் பேசிக்கொள்ளவில்லை. நடு இரவை தாண்டிய நேரத்தில் வீட்டினை அடைந்தவர்கள் அசந்து தூங்கி போயினர். காலையில் எழுந்ததும் நிலா ஆபிசுக்கு கிளம்ப, அணைத்து வைத்திருந்த தன் மொபைலை ஆன் செய்து கைப்பைக்குள் போட்டாள். இனியனும் எங்கோ வெளியில் கிளம்புவதை போல் இருந்தது. வாய் விட்டு கேட்க முடியாமல் அவனா சொல்வானா என காத்திருந்தாள்.

அவள் அலைபேசியை ஆன் செய்த மாத்திரத்தில் அது ஒலிக்க தொடங்க, பதட்டமாய் அதை எடுத்தவள் அதில் தெரிந்த எண்ணை கண்டதும் அதிவேகமாய் துண்டித்தாள். மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வர, ‘என்ன செய்ய’ என்பது போல பார்த்திருந்தவளை உற்று பார்த்தான் இனியன்.

அவன் பார்வையில் தன்னை இயல்பாய் காட்டிக்கொண்ட நிலா, அழைப்பை இயக்கி காதில் வைத்தாள். மறுபுறம் பேசியவருக்கு ஒரு பதிலும் சொல்லாமல் இவள் அமைதியாய் இருக்க, மறுமொழி எல்லாம் பலவித உணர்வுகளாய் மாறி அவள் முகம் காட்டியது.   

அவள் முகம் காட்டியதில் இருந்தே எதுவோ சரியில்லை என யூகித்தவன், ‘நேற்றும் இப்படிதானே அழைப்பு வந்தது?’ என யோசிக்கலானான். நிலா பதிலே பேசாமல் அழைப்பை துண்டித்ததும், “யாரு?” என்றான் இனியன், கேட்பது அநாகரீகம் என்று தெரிந்த போதும்.

அவனிடம் உண்மையை சொல்ல பயந்தவள், சிறிது தடுமாற்றத்துடன், “யார்ரா இருந்தா உனக்கென்ன?” என்றாள் கோவம் போல. அவன் பதில் ஏதும் சொல்லுவான் என அவள் நினைக்க, ‘போடி’ என போய்விட்டான் நிற்காமல் தன் வேலையை பார்க்க.

காலை உணவை இரு தட்டுகளில் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு அதில் ஒன்றை தன் பக்கம் நகர்த்திக்கொண்டு உண்ண ஆரம்பித்தான். அதை கண்ட நிலாவுக்கு ‘என்னை சாப்பிட கூப்பிட்டா என்னவாம்!?’ என்று தோன்றியது. சிறிது நேரம் அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவனோ அப்படி ஒருத்தி இந்த வீட்டிலேயே இல்லை என்பதை போல ‘இட்டிலியே கண்ணென’ உண்டுக்கொண்டிருக்க, அவனை அழைக்கலாம் என தொண்டையை  கனைத்துக்கொண்டு ‘இனியா!!!’ என அவள் அழைத்த நேரம், அவள் குரலை தன் கணீர் குரலால் மறைய செய்தது அவன் கைபேசி.

சார்ஜில் போட்டிருந்த போனை வேகமாய் எழுந்து சென்று எடுத்து வந்தான் இனியன். அழைப்பை இயக்கி காதுக்கு கொடுத்தவன்,  “இயா ஐஷு, கிளம்பிட்டேன்! வன் ஹார்ல மீட் பண்ணலாம்! ஓகே பை” போனை வைத்துக்கொண்டு உணவை தொடர்ந்தான்.

நிலாவுக்கு, ‘ஐஷூவா? யார் அவ எனக்கு தெரியாம? செல்லமா கூப்ட்டு பேசுறான், மீட் வேற பண்ண போறானாமே!!’ உள்ளுக்குள் புகைய, பொறுமையாய் இருக்க முடியாமல், சாப்பிட்டு முடித்து எழுந்தவனின் முன் சென்று வழி மறித்தவள், “யார் அவ ஐஷு?” என்றாள் முகத்தை சுருக்கி.

முகத்தை இறுக்கமாய் வைத்து, “யார்ரா இருந்தா உனக்கென்ன?” அவளை போலவே சொல்லி விட்டு அவன் நகர, தான் எரிந்து விழுந்த போதெல்லாம் இதமாய் பேசும் இனியனையே பார்த்து பழகி இருந்தவளுக்கு அவன் பாராமுகத்தில் அழுகை வரும்போல் இருந்தது. வெடுக்கென திரும்பி தன் பேகை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டாள். அவளுக்கான காலை உணவு அனாதையாய் கிடந்தது.

போனவளை ‘வா’ என அழைக்காது தன் பொருட்களை சேகரித்து கொண்டு கிளம்பினான் இனியன். அவள் விட்டு சென்ற உணவை மூடி பத்திரமாய் எடுத்து வைக்கவும் மறக்கவில்லை.

அப்பார்ட்மென்ட் கீழே வந்தவன், வாட்ச்மேனிடம் “என்ன ஐயா, சாப்பிட்டாச்சா?” என்றான் சிரித்த முகமாய். அவனுக்கு முன் இறங்கி சென்ற நிலா, ஒரு தூணுக்கு பின்னே தன்னை மறைத்துக்கொண்டு இனியனையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

‘கட்டுன பொண்டாட்டி சாப்புடாம கிளம்பிட்டாளேன்னு கவலை இல்லை, வாட்ச்மேன்கிட்ட குசலம் விசாரிக்குற!!” அவள் காதில் இருந்து புகையே வந்தது. அவள் கோவமாய் போகவும், அவன் பின்னாலே வந்து சமாதானம் செய்து சாப்பிட வைப்பான் என அவள் நினைத்து செல்ல, அவன் சுவாதீனமாய் கிளம்பி வெளியே வந்தால் கடுப்பு ஆகதானே செய்யும்!    

“ஆச்சு தம்பி, என்ன இன்னைக்கு நேரமே கிளம்பிட்டீங்க?” அவர் கேட்டதும் தான் நிலாவுக்கு பொறி தட்டியது. ‘அப்போ இவன் தினமும் அவளை பார்க்க போறானோ?’ என்று.

“இன்னைக்கு நேரமே போனும் ஐயா!” என்ற இனியன் பார்கிங்கில் ஓரமாய் கவர் போட்டு மூடப்பட்டிருக்கும் தன் காரை நோக்கி சென்றான். பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்தவன் காரை ரிவர்ஸ் எடுத்து வெளியே வர, ‘யார் வீட்டு காருடா இது? நீ பாட்டுக்கு எடுத்து ஓட்டுற?’ வாய்விட்டே வியப்பாய் சொன்னாள் நிலா.

வாட்மேனிடம், ‘பை’ சொல்லிவிட்டு அவன் கார் காம்பவுண்டை கடந்ததும், குடுகுடுவென ஓடிய நிலா, தன் வெஸ்பாவை இயக்கி பறக்க தயாரானாள். காலை ட்ராபிக்கில் அவன் கார் லாவகமாய் நகர்ந்து செல்ல, அவனுக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்தாள் நிலா.

‘இன்னைக்கு யாராந்த ஐஷூன்னு கண்டுபுடிக்குறேன்!’ கருவிகொண்டவள், அவன் பார்க்காதவண்ணம் பாலோ செய்ய, அவள் வண்டி காம்பவுண்டை தாண்டிவுடனே இனியன் கண்ணில் அவள் பட்டுவிட்டாள்.

‘பெரிய ஜேம்ஸ் பாண்டுன்னு நினைப்பு!’ என்று சிரித்துக்கொண்டவன், ‘எவ்வளவு தூரம் வருவாள்?’ என பார்ப்போம் என்றே மெதுவாய் சென்றுக்கொண்டிருந்தான். அது தெரியாத நிலா தன்னை ஒரு டிடெக்டிவ் போல எண்ணிக்கொண்டு அவனை பின்தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவனுக்கு மீண்டும் ஐஷுவிடம் இருந்து அழைப்பு வந்தது. கார் இறக்கை கட்டிகொண்டது. ஐந்து கிலோமீட்டர் வரையிலும் அவனை பின்தொடர்ந்த நிலா, அதற்க்கு மேல் அவன் கார் திடீரென வேகம் எடுக்க, ஒரு திருப்பத்தில் வளைந்த கார் கண்ணை விட்டு மறைந்தது. இன்னோவாவின் வேகத்திற்கு வெஸ்பாவால் ஈடு கொடுக்க முடியாமல் தோற்றது.

‘ச்சா!!!’ தன் வண்டியை ஓங்கி அடித்தாள் நிலா. அது கோவமாய் முகத்தை திருப்பியது. ‘எங்க போனான்னு தெரிலையே’ சாலை ஓரமாய் அவள் நிற்க, அவளை போனில் அழைத்தான் கோகுல்.

“இன்னும் ஆபிஸ் வரலையா நீ?” எப்போதும் அவள் வரும் நேரம் தாண்டியதால் அவன் கேட்க, “எனக்கு வேலை இருக்கு வரமாட்டேன்!” என்றாள் நிலா.

“என்ன வேலை? கேஸ் விஷயமா போறியா? நானும் வரேன் இரு!!” கோகுல் அவசரப்பட, “பர்சனல் விஷயமா போறேன்டா இம்ச! லீவ் சொல்லிடு!!” என்று கடுப்பாய் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

“இவளுக்கு ஏது பர்சனல்?” என்று எண்ணிய கோகுல் தன் வேலையை அன்று முழுதும் நிம்மதியாய் கவனித்தான்.

நிலாவுக்கு இருப்பே கொள்ளவில்லை. ‘அவன் எங்கே போயிருப்பான்? அவளை பார்த்திருப்பானா? அவளை எதுக்கு பார்க்கணும்? ஒருவேளை நான் சரியில்லன்னு அவன் மாறிட்டானோ? அவகிட்ட அவன் எண்ணம் போயிடுச்சா?’ தான் பேசாமல் இருந்த பத்து வருடங்களில் மாறாதவன் இந்த ஒரு மாதத்திலா மாறியிருப்பான்? என அவள் அறிவாய் யோசித்தாலும் மனம் ‘ஆம்பளைங்களை நம்பக்கூடாதுடி’ என ஏற்றிவிட்டது.

‘இப்படி பொலம்ப விட்டுட்டியேடா இனியா!?’ தன்னையே நொந்துக்கொண்ட நிலா, ‘அவன் வரட்டும், இன்னைக்கு ஒரு பஞ்சாயத்தை கூட்டிடலாம்!’ என முடிவாய் தனக்கு சொல்லிக்கொண்டு வண்டியை கிளப்பினாள். ‘எங்கே செல்லும் இந்த பாதை?’ மனதில் பாடல் ஓட, எங்கே போவது என தெரியாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்தாள்.

‘லீவு சொல்லிட்டு ஆபிசுக்கு போனா, ஆளாளுக்கு கேள்வி கேப்பானுங்க!” நொந்தபடி வண்டி போன போக்கில் அவள் செல்ல, அது அமைச்சர் சதாசிவத்தின் ஏரியாவில் வலம் வந்தது. ‘சரி வேலையாது பாப்போம், அந்த கோகுல் கொரங்கோட தொல்லையும் இருக்காது’ என்று அவர் வீட்டின் தெரு பக்கம் போக, அங்கே ஒரு சிறு கும்பல் குழுமி நின்றிருந்தது.

அவள் வண்டியை நிறுத்திவிட்டு, ‘என்ன கும்பல்?’ என பார்க்க அருகே போக, அக்கூட்டத்தின் நடுவே நின்ற ஒருவனை சிலர் போட்டு மொத்திக்கொண்டிருன்தனர். அங்கிருந்தவரிடம், “என்னாச்சு?” என விசாரித்தாள் நிலா.

“இது ஒரு குடிகார மொள்ளமாறிம்மா!! அடிக்கடி இந்த ஏரியால சின்ன சின்னதா திருட்டு நடந்துட்டே இருந்துச்சு! இன்னைக்கு தான் இவனை கையும் வடையுமா பிடிச்சோம்!” அவர் சீரியசாய் சொல்ல, “வடையா?” என முகம் சுருக்கினாள் நிலா.

“ஆமா, இந்த அண்ணே கடைல டீ குடிக்க வந்தவன், யாரும் பார்க்காத கேப்ல பத்து வடைக்கு மேல உள்ள தள்ளிருக்கான்? அதான் போட்டு மொத்திட்டு இருக்கோம்!” என்று அவர் சொன்னதும், ‘இதுக்கெல்லாம் அடிங்க, கோடி கோடியா சுருட்டிட்டு நாட்டை விட்டு ஓடுறவனுக்கு டாட்டா காட்டுங்க!’ என சலித்துக்கொண்டாள் மனதில்.

ஒருவாறாய் எல்லோரும் அடித்து முடித்து ஓய்ந்ததும் கூட்டம் கலைய, இவளும் வேடிக்கை பார்த்தது போதும் என நகர போன போது, இத்தனை அடிக்கும் சத்தம் போடாமல் அமைதியாய் அதை அனுபவித்துக்கொண்டிருந்த ஜீவனை  ஒருமுறை பார்க்க வேண்டுமென தோன்றியது.

அவள் பின்தங்கி நின்று பார்க்க, குப்புற விழுந்திருந்தவன், மெல்ல எழுந்து கிழிந்து போன தன் சட்டையை தொட்டு பார்த்தவன் முகத்தில், ‘சட்டை போச்சே!’ என்ற வேதனை மட்டுமே வந்து போனது. அடி வாங்கிய வலி தெரியவே இல்லை. அதுவே சொன்னது அவன் பல இடத்தில் அடி வாங்குவதையே பிழைப்பாய் வைத்திருக்கிறான் என்று.

‘இந்த மூஞ்சியை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்துருக்கோமே?’ நிலாவுக்கு சந்தேகம் வர, ரொம்ப யோசிக்க அவசியமில்லாமல் சட்டென நினைவில் வந்தது. ‘அட! நம்ம கோவிந்தசாமி!’

அவனை கண்டு சிரிப்புதான் வந்தது அவளுக்கு. நேரே அவனிடம் சென்றவள், “ஹலோ?” என அழைத்தாள்.

“யாருமே அது என் காதாண்ட வந்து போன் பேசுறது?” அரை போதையில் அவன் அவள் முகத்தை பார்க்க, “ஐயோ மேடாம்! நீங்களா?” என்றான் பவ்வியமாய்.

“ஒஹ்! என்னை நியாபகம் இருக்கா?” சிறு வியப்பாய் கேட்டாள்.

“எப்புடி மேடாம் மறக்க முடியும்!” என அதிசயித்தவன், விரல் மடித்து எண்ணிக்கொண்டே, “என் பொண்டாட்டி, மாமியா, தங்கச்சி, கொழுந்தியா, பக்கத்து வூட்டு ராசாத்திக்கு அப்புறம் என்னை அடிச்ச மொதோ பொம்பளை நீங்கதான் மேடோம்! இன்னா அடிங்குரீங்கோ? மூக்கு ரெண்டும் கோய்யினுச்சு!” என்றிட, அவளுக்கு சிரிப்பு இன்னும் அதிகமாய் வந்தது. சிரமபட்டு அடக்கிக்கொண்டாள்.

நிலா, “எதுக்கு திருடனும்? உழைச்சு சம்பாதிக்கலாம்ல? இப்படி காலைலயே குடிச்சு உடம்பையும் கெடுத்துகிட்டு இதெல்லாம் தேவையா?” இரண்டு நாட்கள் முன்னால்  இருந்த நிலாவானால் அங்கு நின்றிருக்க கூட மாட்டாள். வேணியின் பேச்சு அவளை நன்கு மாற்றியிருந்தது. கொஞ்சகொஞ்சமாய் பழைய நிலா ஒளிர்விட தொடங்கி இருந்தாள்.

“மேடோம்! இன்னா இவ்ளோ அசால்ட்டா சொல்லிகிநீங்கோ? திருடுறதுக்கு எவ்ளோ உலீக்கனும் தெரியுமா?” அவன் நியாயம் பேச தொடங்க, ‘இது சரிவராது!’ என எண்ணியவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

போனவளை, “இந்த ஏரியால தான் இருக்கியா மேடோம்!” என்றான் கோவிந்தசாமி.

வண்டியை ஸ்டார்ட் செய்தபடி, “இல்ல, இங்க ஒரு வேலையா வந்தேன்!” என்றிட, “நான் ஏதும் எல்பிங் பண்ணவா?” என வாலண்டியறாய் முன் வந்தான் கோவிந்தன்.

‘நம் விஷயத்தில் இவன் என்ன உதவி செய்ய முடியும்?’ என இளப்பமாய் எண்ணியவள், “இது போலிஸ் கேஸ், உன்னால ஒன்னும் பண்ண முடியாது!” என்றாள். போலிஸ் என்றதும் அவன் பயந்து விடுவான் என எண்ணி.

“இன்னா மாடம்! புருசனோட தகறாரா? சொல்லு, பூந்து வூடு கட்டிடலாம்” அவன் லுங்கியை மடித்து கட்ட,  ‘இது என்னடா கொடுமையா இருக்கு?’ என எண்ணிய நிலா அவசரமாய், “நான் ஒரு ஜர்னலிஸ்ட், மினிஸ்டர் டெத் பத்தி நியூஸ் கலேக்ட் பண்ணிட்டு இருக்கேன், அது விஷயமா தான் வந்தேன்!!” என்றாள். அவனிடம் தன் விவரத்தை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபோதிலும் ஏனோ அப்போது யோசிக்காமல் சொல்லிவிட்டாள்.

அவள் சொன்ன மாத்திரத்தில், போதையில் கசங்கி இருந்த அவன் முகம் பேயறைந்ததை போல மாறியது. சுற்றும் முற்றும் பார்த்தான். பின் அவளை சற்று நெருங்கி, “நான் பாத்த ஒன்ன உங்களாண்ட சொல்லணும் மேடாம்! கொஞ்சம் தனியா பேசலாமா?” என்றான். இவனை நம்பி பேசலாமா என யோசித்தாலும், அவனிடம் ‘ம்ம்ம்’ என்றாள்.       

அருகில் நடந்து செல்லும் தூரத்தில் இருந்த பூங்காக்கு சென்றவர்கள் நடுநாயகமாய் இருந்த கல் பெஞ்சில் எதிர் எதிரே அமர்ந்துக்கொண்டனர். கோடை விடுமுறையில் வெயில் என்றும் பாராது குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, ஏதோ ரகசியம் சொல்பவன் போல மெதுவாய் பேசினான் கோவிந்தன்.

“நான் பாத்ததை என் பொண்டாட்டி, தோஸ்துங்கோ, கடன்காரன் எல்லாரான்டையும் சொல்லிருக்கேன்! ஒரு கசுமாலம் கூட இதுவர நம்பல! என்னதான் மென்டலுன்னு சொல்லிசுங்கோ!” அவன் தொடங்க, “விஷயம் என்னன்னு சொல்லு, அவங்க சொன்னது உண்மையா பொய்யான்னு நான் சொல்றேன்!” என்றாள் மென்னகையுடன்.

“அதுக்குதானே மாடம் உன்னை இட்டான்டேன்! நான் சொல்றதை கேளு!” என்று சொன்னவன் அன்னாளுக்கே சென்றான்.

“அன்னைக்கு ராத்திரி பதினொன்னுக்கு மேல இருக்கும்! வலிக்கம்போல நம்ம பொலப்ப பாக்கலாம்ன்னு உசரமான ஒரு பில்டிங் மேல ஏறி குதிச்சேன். மொட்டை மாடில கிடந்த பொருளெல்லாம் வேணுங்கற அளிவு சுருட்டுகினு, திரும்பி பாத்தேன் மாடம்! அப்படியே ஸ்டன்னாயிட்டேன்!” என்றிட, “என்ன பார்த்த?” என்றாள் நிலா.

“அந்த வூட்டுக்கு எதிர் வூடு தான் நம்ம செத்துப்போன மினிஸ்டரு வூடு! காலு ரெண்டும் டண்டனக்கா, டண்டனக்கான்னு ஆடுது, காவலுக்கு நிக்குற போலிசான்ட சிக்குனா தூக்கி செல்லுல போட்டுடுவானுங்களே! இன்னாடா பண்றதுன்னு பேஜாராயிட்டேன்!” அவன் கதை சொல்ல, பொருமையிழந்தவள், “உன் வெட்டிகதையை பேச தான் என்னை கூப்டியா? நான் கிளம்புறேன்” அவள் எழுந்துக்கொள்ள, “மேடோம், அப்போதான் நான் மினிஸ்டர் வூட்டு கொலையை பார்த்தேன்” என்றான்.

அவன் சொன்ன ஒரு வரியில் வியப்பும் ஆர்வமும் கூட, வேகமாய் அமர்ந்தவள், “நீ நேர்ல பார்த்தியா? என்ன பார்த்தா? தற்கொலையை கொலைன்னு சொல்றியே? அங்க என்ன நடந்துச்சு?” என்றாள் பரபரப்பாய்.

“சொல்றேன் மாடோம்! அங்கேயே நின்னு அவர் வூட்ட உத்து பாத்தபோ மாடில இருக்க ஒரு ரூமோட ஜன்னலு வழியா உள்ள இருக்கவங்க கிளியரா தெரிஞ்சாங்கோ! அப்போ நான் பாத்ததை என்னாலேயே நம்ப முடில!  கொடில துணியை காயப்போடுற மாறி கிட்டத்தட்ட ஐஞ்சு பேரு கொத்தா தொங்கின்னு இருந்தாங்கோ!” என்றிட, “அப்போ மினிஸ்டர்?” என்றாள் நிலா.

“மினிஸ்டரு ஒரு சின்ன பொண்ணு கையை இறுக்கி பிடிச்சுகினு, இன்னாமோ கோவமா பேசினுருந்தாரு! அந்த புள்ள கதறி கதறி அழுதுனு இருந்துச்சு, அப்பால அதை ஓங்கி அறைஞ்சதும் மயங்கி விழுந்துச்சா, அலேக்கா அதை தூக்கி கயித்துல மாட்டி விட்டாரு! காலு இரண்டும் உதறிகினே இருந்த புள்ள, அப்படியே செத்துபோச்சு மாடம்! தொங்கினு இருந்த எல்லாரயும் பார்த்து சத்தம் போட்டு சிரிச்சவரு, அங்கிருந்து போயிட்டாரு!” அவன் முடிக்க பேசமுடியாத நிலையில் இருந்தாள் நிலா. அவ்வளவு அதிர்ச்சி. தன் குடும்பத்து ஆட்களையே இரக்கமின்றி கொன்றானா என்று!

“குபீர்ன்னு ஏறியிருந்த போதை டமால்ன்னு இறங்கி போச்சு மாடம்! நான் அப்டியே ஓடி வந்துட்டேன்! அடுத்த நா நியூஸ்ல பாத்தா, மினிஸ்டரும் சேந்து புட்டுகினாருன்னு சொன்னாங்கோ! என்னால எதையுமே நம்ப முடில! இப்பா சொல்லு மாடம், நான் மென்டலா?” என்றவனின் கேள்வியை ஒத்தி வைத்தவள், “நீ பொய் சொல்லலையே?” என்றாள் சந்தேகமாய்.

“இம்மாம் பெரீய மேட்டருல யாரானும் டுமீல் விடுவானுங்களா?” என்றதும்,  “அப்போ மினிஸ்டர் தான் அவங்க குடும்ப ஆட்களையே கொலை செஞ்சுருக்காரு! எல்லாரையும் அவர் கொன்னுருக்காருன்னா அவரை கொன்னது யாரா இருக்கும்?” நிலா யோசனைக்கு சென்றுவிட, “அத்த நீங்கதான் கண்டுக்கணும்” என்றான் கோவிந்தன்.

“உன்னை நம்புறதா வேணாமான்னு தெரியல” அப்பட்டமான சந்தேகம் அவள் முகத்தில் தெரிய, ரோஷம் வரபெற்ற கோவிந்தன், “டவுட்டா இருந்தா மினிஷ்டரு வூட்டுக்கு போலாம் மேடாம், இன்னா இன்னா எப்டி எப்டி நடந்துச்சுன்னு படம் போட்டு காட்றேன்!” என்றிட, நிலா, “வீட்டை சீல் போட்டு வச்சுருக்காங்க! அதுக்கும் மேல அங்க போலிஸ் காவலுக்கு இருக்கு, நம்மலால உள்ளே போறது என்ன? காம்பவுண்ட் கிட்ட நிக்குறது கூட கஷ்டம்!?” என்றாள்.

“அவுங்க, அவுங்க வேலையை பாக்கட்டும், நம்ம நம்ம வேலையை பாப்போம்! இருட்டி போன சொல்ல இங்க வந்து வெயிட் பண்ணு மாடம்! நான் வந்து உன்ன இட்டாந்து போறேன்! இப்போ கோவிந்தனுக்கு நிறைய மீட்டிங் இருக்கு, கிளம்புறேன்!” என்றவன், இடுப்பு பட்டியில் வைத்திருந்த குவாட்டரை வாயில் சரித்தபடி நகர்ந்துவிட்டான்.

நிலாவுக்கு இனியன் நினைவிலும் இல்லை. மனம் முழுக்க அமைச்சரின் மரணத்திலே இருந்தது. இவ்வளவு நாளும் இது கொலையாக தான் இருக்கும் என இவள் யூகித்திருந்தாலும், தன்னை தாண்டிய மற்றவர்களை கொன்றது அமைச்சராக இருக்கும் என அவள் கற்பனை கூட செய்திருக்கவில்லை. எதற்காக அவர் தன் குடும்பத்தையே கொல்லனும்? அவரை யார் கொன்னுருப்பா? எதற்க்காக இதை தற்கொலைன்னு நம்ப வைச்சாங்க! பலவித கேள்விகள் அவள் மனதையும் மூளையையும் ஆக்கிரமித்தது.   

நேரத்தை நெட்டித்தள்ளிகொண்டிருந்தாள். அவள் வேலை செய்யும் பொழுதெல்லாம் ரெக்கை கட்டி பறந்த நேரம், இன்று சும்மா உட்காந்திருக்கையில் அதுவும் நகராமல் உட்கார்ந்துக்கொண்டது போலும். தான் அறிந்ததை யாரிடமாவது சொல்லலாம் என்று நினைத்தாலும் கோவிந்தன் மீது முழு நம்பிக்கை வரவில்லை. ஒருவேளை பொய்யாய் இருந்தாலும், தனக்கு அவமானமே மிஞ்சும். ஏற்கனவே தனக்கு கிளம்பியிருக்கும் பிரச்சனை போதும் என்று எண்ணிக்கொண்டாள். கிளம்பிய பிரச்சனையை இனியனிடம் சொல்லியிருக்க வேண்டுமோ?!!

எப்படியோ நேரத்தை விரட்டியடித்து இரவு மணி ஒன்பதை நெருங்கியிருந்தது.  சாப்பிட கூட அவ்விடம் விட்டு அவள் செல்லவில்லை. பூங்கா மூடப்பட்டபின் அதன் வெளியே வந்து நின்றுக்கொண்டிருந்தாள். கோவிந்தம் வருவதன் சுவடே தெரியவில்லை. ‘ஒரு குடிகாரன நம்பி காத்துகிட்டு இருக்கியே நிலா!?’ தன்னையே திட்டிக்கொண்டாள்.  அவளை வெகு நேரம் காக்க வைத்து மணி பத்தை நெருங்கும்போதே வந்து சேர்ந்தான் கோவிந்தன் லேசாக தள்ளாடியபடி.

“நீங்க போயிருப்பீங்கோன்னு நினச்சேன் மாடம்! ஈஈ” பல்லை பளிச்சென காட்டியவன், “போலாமா?” என்றாள். இருவரும் அவர் வீட்டை நோக்கி நகர, வாசலில் இருந்த இரண்டு காக்கி சட்டையை பார்த்து பம்மினான் கோவிந்தன். “மேடாம், நம்ம அடுத்த தெரு வழியா போவோம்!” என்று ஒரு சந்து வழியாக மறு தெருவை அடைந்தான். அமைச்சர் வீட்டின் பின்வாசலை அடைய, அங்கே ஒரு காக்கிசட்டை குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தது.

“மேடோம்! செவுரு ஏறி குதிப்பியா?” என்றவனை மேலும் கீழும் பார்த்தவள், “அந்த மாறி வேலை எல்லாம் எனக்கு தெரியாது” என்றாள்.

“இன்னா போங்கோ!” சலித்துக்கொண்டவன் “நான் குனிஞ்சுக்குறேன், என்மேல ஏறி அந்த பக்கம் குதிங்கோ!” என்றதும், அவள் ஏற தயாராக, “இருங்கோ இருங்கோ, இப்படியே ஏறுனா கை காலு கீஞ்சுரும்” என்ற கோவிந்தன் மடித்து கட்டிய லுங்கியில் இருந்து சில பொருட்களை எடுத்தான்.

தடிமனான பல சாக்கை மடித்து தைத்த கையுறை, தார் போடும்போது காலில் மாட்டியிருக்கும் உரையின் உள்ளே, தடிமனான பல உரைகளை வைத்து தைத்திருந்தான். அதை ஆச்சர்யமாய் பார்த்த நிலாவை கண்டவன், “ஹோம்மேட் கிளவுஸ் மேடாம்! காம்பவுண்ட்ல இருக்க கண்ணாடி தூளு கிழிக்காம இருக்கனும்ல? மொத்தோ இத போட்டு ஏறி குதிங்கோ!!” என்றான். அவன் சொன்னபடியே செய்தவள் சுவரின் உயரத்தில் ஏறி மறுபக்கம் குதிக்க முயல, “மேடோம் சத்தம் வராம குதிங்க” என்றான் அவன்.

“உள்ள டாக்ஸ் இருந்தா என்ன செய்யுறது?” குதிக்கும் முன் திடீரென சந்தேகம் வந்தது அவளுக்கு.

“அமைச்சர் நட்டுகினதுமே நாய் எல்லாம் சர்கார்ல கூட்டிகினாங்கோ! பேஜாராவாம குதி மாடம்” அவன் தைரியமா சொன்னதும் அவள் இடம் பார்த்து குதிக்க, மெத்தை போல புல்தரையானதாலும், கையிலும் காலும் தடிமனான கிளவுஸ் போட்டிருந்ததாலும் அடி பெரிதாய் படவில்லை. கிளவுஸை கலட்டி மறுபக்கம் வீசியதும், அதை மாட்டிக்கொண்டு கோவிந்தன் அடுத்து உள்ளே குதித்தான்.

காலடி சத்தம் கேட்காமல் மெதுவாய் இருவரும் நடந்து செல்ல, அரசாங்க சீல் வைத்திருந்த பின் பக்க கதவை திறக்க முயற்சி செய்தான் கோவிந்தன்.

“இந்த கதவை உன்னால திறக்க முடியுமா?” நிலா ஆச்சர்யமாக, “அலாவுதீன் குகையை கூட அலுங்காம தொரப்பான் மாடம் இந்த கோவிந்தன்” என்றான் பொறுமையாய். சொன்னது போலவே வெகு நேரம் எடுக்காமல்  எளிதில் கதவை திறந்தவன், கதவின் திருகில் தேங்காய் எண்ணையை ஊற்றினான். நிலா எதற்கு என கேட்க, “திறக்கும் போது கீச்சு கீச்சுன்னு சத்தம் வரக்கூடாதுல அதுக்குதான்” என்றவனை வியப்பாய் பார்த்தாள்.

‘இந்த மாறி வேலைக்கு யூஸ் பண்ற மூளைக்கு நல்ல விதமா யூஸ் பண்ணா உங்களமாறி ஆளுங்க எல்லாம் எங்கயோ போய்டுவீங்க!!’ மனதில் நினைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

“இவ்வளோ இருட்டா இருக்கே, எப்படி வீட்டை பாக்குறது?” என்றிட, “போன்ல டார்ச் அடிங்க மாடம், தூக்கி அடிக்காம, தரையோட அடிங்க, அப்போதான் வெளில இருக்கவங்களுக்கு வெளிச்சம் தெரியாது!” என்றான் கோவிந்தன் அவன் சொன்னது போலவே செய்தாள் நிலா.  அந்த மெல்லிய வெளிச்சமே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.

மாடி அறைக்கு அழைத்து சென்ற கோவிந்தன், தான் பார்த்ததை ஒன்று விடாமல் எடுத்து சொல்ல, அவ்விடத்தை சல்லடை போட்டாள் நிலா. அறையின் சீலிங்கில் குறுக்கே ஒரு நீண்ட இரும்பி கம்பி போடபட்டிருந்தது. அதில் தான் அனைவரும் தூக்கில் தொங்கியது.

அங்கிருந்து எதுவும் சிக்காததால் இருவரும் கீழே வர, சோப்பாவில் சில அழுத்தமான மார்க் போடபட்டிருந்தது. பால்க்காரன் சொன்னதில் இருந்து அமைச்சரின் அம்மா இங்கே இறந்து இடந்திருப்பார் என யூகித்தாள் நிலா. ஹாலில் ஒவ்வொரு இடமாய் அவள் சுற்றி வர, அங்கிருந்த பிளவர் கேஸ் சுக்குநூறாய் உடைந்து கிடந்தது. தன் போனில் அதை புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.  

அவள் மேலும் ஒவ்வொரு இடமாய் துலவ, சுவரோடு வைக்கப்பட்டிருந்த செல்பில் ஒரு போன் இருப்பது போல கண்ணாடி கதவு வழியே தெரிந்தது. கதவில் சாய்த்து நிற்க வைக்கப்பட்டிருந்தது அந்த போன். கிளவுஸ் உதவியுடன் கதவை திறந்து போனை எடுத்து தன் கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள்.

“மேடாம் போலாமா? ரொம்ப நேரம் இருக்க வேணாம்” கோவிந்தன் சொன்னதும் அவள் நகர, வெளிக்கதவின் அருகே செல்கையில் கால் கல்லில் மோதியதை போன்ற உணர்வு, வலியில் ‘ஸ்ஸ்ஸ்’ என்றாள் நிலா. வெளிச்சம் கொடுத்து பார்க்க, அங்கே சில செங்கற்கள் இருந்தது. அங்கிருந்த குட்டி டேபிளை மெதுவாய் நகர்த்தி பார்த்தால், அதனடியே பல செங்கற்கள் இருந்தது.  

“இன்னாமே இது, வூடு கட்டிட்டு மீதி செங்கலை இங்கயே வச்சுகினான்களா?”

அதையும் படம் பிடித்துக்கொண்டாள். “ஏதோ பூஜை நடந்திருக்கும்ன்னு நினைக்குறேன், யாகம் நடக்குறப்போ வச்ச செங்கல் மாறி இருக்கு!” அவள் யோசிக்க, ‘போலாம் போலாம்’ என பறந்தான் கோவிந்தன்.

முன்பிருந்ததை போலவே கதவை பூட்டி சீல் வைத்தவனை முறைப்பாய் பார்த்தாள் நிலா. “ஹிஹி!! இதெல்லாம் தொழில் நேர்த்தி” என்றவன் வந்தததை போலவே சுவடில்லாமல் அவளை மறுபுறம் இறக்கிவிட்டு தானும் இறங்கிக்கொண்டான்.

“ஏதோ என்னால முடிஞ்சா எல்பிங் உங்களுக்கு பண்ணிட்டேன் மாடம்! இதுக்குமேல எதுன்னா உதவி தேவைபட்டாலும் என்னான்ட தயங்காம கேளுங்கோ! ராயப்புரம் பக்கத்துல இருக்க குப்பம் தான் என்னுது, அங்க வந்து என் பேர சொன்னா எவனா இருந்தாலும் என் வூட்டாண்ட கரெகிட்டா இட்டண்டுடுவான்!”

அவனுக்கு பல நன்றிகளை சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டியை உயிர்பித்தவள், ஒருமுறை தன் மொபைலை எடுத்து பார்த்தாள். மணி பதின்னொன்னை கடந்துக்கொண்டிருன்தது. கோகுலிடம் இருந்து பல தவறிய அழைப்புகள் வந்திருக்க, இனியனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி கூட இல்லை. அவள் மனம் அப்படியே  சுணங்கி போனது. மனத்தாங்களுடனே வண்டியை ஓட்டியவள், பிரதான சாலையை அடைந்த சில நேரத்தில் மின்னலென வந்த டென்க்கர் லாரியால் அடித்து வீசப்பட்டாள்.

-தொடரும்…

Advertisement