Advertisement

*14*

உன் கண்ணில் உண்டான காதலிது! மூடிவிடும் எண்ணமோ?

என் நெஞ்சில் உண்டான காதலிது! நெஞ்சை விட்டு போகுமோ!?

சென்னையில் இருந்து கோயம்புத்தூரை தாண்டி இருக்கும் குட்டி கிராமத்துக்கு மிதமான வேகத்தில் கார் சீறி பாய்ந்தது.  டிரைவர் சீட்டில் இருந்த இனியன் சாலையில் கவனமாய் இருந்தாலும் அவன் கண்கள் அலைப்புறுதலோடு தன்னவளிடமே நொடிகொரு முறை சென்றது.

அவன் பார்வையை உணர்ந்தாலும் வலுகட்டாயமாக பார்வையையும் கவனத்தையும் வெளியே வேடிக்கை பார்ப்பதில் செலுத்தியிருந்தாள் நிலா.  கண்ணாமூச்சி ஆட்டம் போல் பல நிமிடங்களாய் இவர்கள் விளையாட்டு தொடர்ந்தது.

“என் இதழியோட அடையாளமே அவளோட இந்த பொஸசிவ்னஸ் தான்!!” என்ற இனியன் அவளை நெருங்கி நிற்க, அவன் அருகாமையில் தன்னிலை மறந்து நின்றிருந்தாள் நிலா. அவளது மோன நிலை, மயக்கத்தோடு அவள் நின்ற அந்த நொடி, இனியனுக்குள் மின்னல் வேகத்தில் ரசாயன மாற்றங்களை உண்டு பண்ணியது.

இத்தனை வருடங்கள் காத்து வந்த விரதமும், கட்டுப்பாடும் டாட்டா சொல்லி ஓடிவிட, அவன் இதழியும் அவள் கழுத்தில் மின்னும் இனியன் கட்டிய பொன்தாலியும் மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தன.   

‘என் உரிமையானவள்’ என அடிமனதில் பதிந்திருந்த வார்த்தைகள் உருக்கொண்டு எழ, அவள் கண்ணோடு கண் கலந்தான் இனியன்.  மொத்தமாய் அவன் அவளை நெருங்கி நிற்க, அவன் நெருக்கத்தில் விலகாமல் நெகிழ்ந்து நின்றாள் நிலா. அவசரமாய் அவள் இதழ் நோக்கி குனிந்த இனியன், அவசரமின்றி மென்மையாய் இதழியின் இதழ்களை கொள்ளையிட்டான். அவள் இதழ்கள் அவனுக்குள் மூழ்க மூழ்க, காற்றுக்கூட அவர்களிடையே நுழைய ‘எக்ஸ்யூஸ் மீ’ கேட்குமளவு நெருக்கமாய் பிணைந்திருந்தனர் இருவரும்.

நேரமுள்ளும் ஓடாமல் நின்று இவர்களை வேடிக்கை பார்த்தது.  முதலில் சுயவுணர்வுக்கு வந்த இனியன் மெல்ல கண் திறந்து பார்க்க, இமைக்காத அவள் விழி அவனையே வெறித்தது. நொடியில் அவனது உணர்வுகள் வடிந்திட, அவள் இதழ்களுக்கு விடுதலை கொடுத்தான்.

பதட்டம் எட்டி பார்க்க, அவள் முகத்தில் இருந்த அப்போதைய உணர்களை இவனால் மொழிபெயர்க்க முடியவில்லை. ‘அவசரப்பட்டுடோமே!!’ இது மட்டுமே அவனை அந்நேரம் போட்டு வாட்டியது.

‘என்ன பார்வைன்னே புரிலயே! கோவமா இருக்காளோ? என்னை அம்மா வீட்டுக்கு துரத்தி விட்டுருவாளோ?’ தான் வாழாவெட்டியாய் பெட்டி படுக்கையோடு தாய் வீடு திரும்பும் நிலை வருமோ என பயந்தான் இனியன். ஏனெனில் நிலாவின் பார்வை அவனை அப்படி தடுமாற செய்தது.

‘சரி கால்ல விழுந்துடுவோம்! நம்ம பொண்டாட்டி தானே!!?’ அவன் முடிவெடுக்க, அதை அவன் முகத்தில் இருந்தே அறிந்தவளாய், “கிளம்பு, நேரமாச்சு!!” என்றாள் சாதாரணமாய்.

குழம்பி போய் நின்றான் இனியன். ‘அவளுக்கு பிடிச்சுருக்கா? பிடிக்கலையா?’ யோசனையில் நின்றவனை உரசும்படி அருகே வந்தவள், வேண்டுமென்றே இடித்துக்கொண்டு தன் அறைக்கு சென்றாள். அவள் இடித்ததில் அவன் உடலில் கெமிகல் பார்முலா வேலை செய்ய, அவள் பின்னே போகும்படி சொன்ன மனதை திட்டி அடக்கியது மூளை.  அதன் பின்னே இருவரிடமும் பேச்சே இல்லை. கார் தயாராய் இருப்பதாய் சொல்லி இனியன் அழைக்கவும் அவனோடு வந்தவள், அடிக்கடி அவனை பார்வையால் தின்றாள்.

இனியனுக்கு இது இன்ப அவஸ்தையாக இருந்தது. அவள் பார்வையை நம்பி அருகே செல்லலாமா வேண்டாமா என குழம்பியிருந்தான். ‘சேதாரம் இல்லாம போயிட்டு வரணும்! கடவுளே!’ என்ற வேண்டுதலோடு அவன் இருக்க, அவனை சோதிக்கவென்றே அவள் பார்வை அம்புகள் அவனை முறுக்கேற செய்தது. அவள் காந்த பார்வை வீச்சு நெடு நேரம் தொடராமல் கனல் வீச்சாய் மாறியது, காருக்குள் இருந்த கோகுலை பார்த்ததும். அப்போது இருந்து இனியன் பக்கம் அவள் திரும்பவேயில்லை.

இனியன் தான் தவிப்போடு அவளையும் ரோட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு காரை செலுத்துக்கொண்டிருந்தான்.

‘க்கும் க்கும்’ என்று தொண்டையை செருமி தன் இருப்பை நியாபகபடுத்த முயன்றான் கோகுல். பலனோ பூஜ்யம். மீண்டும் ‘க்கும் க்கும்’ என செரும, முன் பக்கம் அமர்ந்திருந்த இருவரும் இவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

‘என்னடா இது!? தமிழ்நாட்டோட லீடிங் போட்டோக்ராபர் ஒருத்தன் இங்க உட்காந்துருக்கேன்! ஒருத்தரும் மதிக்க காணோம்!!’ என்று புசு புசுவென மூச்சு விட்டான் கோகுல். பின்னர், சத்தமாக ‘க்க்க்கும் க்க்க்கக்கும்’ என இழுத்து செரும, அவனை திரும்பியும் பார்க்காமல் தண்ணீர் பாட்டிலை குறிப்பார்க்காமலே அவன் நெற்றிபொட்டில் விசிறினாள் நிலா.  

‘அம்மே!!’ விழுந்த பாட்டிலை கேட்ச் பிடித்தாலும் அடி பட்ட இடம் வலியெடுக்க நன்றாக தேய்த்துவிட்டான் கோகுல்.

‘பிசாசு!!’ அவன் வாய் முனுமுனுக்க, கண்ணாடி வழியே அவனை கண்ட இனியன், “என்ன சொல்ற கோகுல்?” என்றான் சிரிப்பை அடக்கிய பாவனையில்.

“ஐயோ நான் ஒன்னும் சொல்லல!!” அவன் பதற, அவனை நன்றாய் திரும்பி முறைத்தாள் நிலா.

“கறிவிருந்துன்னு தெரிஞ்சு என்னையும் அண்ணன் மறக்காம கூப்டுருக்காறேன்னு நன்றி சொன்னேன் நிலா!!” தன்னை காப்பாற்றிக்கொள்ள கோகுல் சொன்னது இனியனுக்கு ஆப்பாகியது.

‘ஹோ! அப்போ இவனா வரல? நீ கூப்பிட்டு தான் வந்துருக்கான்! அப்டிதானே!?’ என்ற கேள்வி தொங்கிய விழிகளால் அவனை நிலா முறைக்க, இனியன் வேண்டுமென்றே மிக கவனமாய் சாலையை பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஏன் பாஸ்! கறிவிருந்துக்கு ஒரேயொரு ஆட்டை மட்டும் மர்கையா சாலா பண்ணிடுவீங்களா? இல்ல துணைக்கு ரெண்டு மூணு கோழி, நாலஞ்சு காடை, கவுதாரி எல்லாம் போடுவீங்களா?” தனக்கு தேவையான சந்தேகத்தை கோகுல் முன் வைக்க, ‘பதில் சொல்லலாமா? வேணாமா?’ என தடுமாறிக்கொண்டு அமர்ந்திருந்தான் இனியன்.

நிலா, “உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கம் மானம் ரோஷம் எதுமே கிடையாதா?” எரிச்சலான அவள் கேள்வி அவனை இம்மியும் அசைக்கவில்லை. “அதெல்லாம் இருந்தா உன்கூட இத்தனை வருஷம் ட்ராவல் பண்ண முடியுமா?” மறுகேள்வி கேட்டுவிட, இனியன் அந்த உண்மையில் சத்தமாய் சிரித்து நிலாவின் முறைப்பை வாங்கி கட்டிக்கொண்டான்.

கார் ஊருக்குள் நுழைய, கண்ணாடி கதவை முழுக்க இறக்கிவிட்டுக்கொண்டாள் நிலா. சிறுவயது முதல் தான் சந்தோசமாய் ஆடி ஓடி விளையாடிய இடங்களை கடந்து செல்கையில் அங்கிருந்து செல்லாமலே இருந்துருக்கலாமே என்ற ஏக்கம் அதிகமாய் எட்டி பார்த்தது.

“இங்க இருந்த மரம் எங்க?” சிறுவயதில் ஊஞ்சல் கட்டி விளையாடிய மரத்தை நியாபகமாய் அவள் கேட்க, மெலிதாய் சிரித்தவன், “ரோடு போடுறப்போ இடைஞ்சலா இருக்குன்னு வெட்டிட்டாங்க!” என்றான்.

சிறிது தூரத்தில் தெரிந்த பழைய கட்டிடம் ஒன்றை கோகுலிடம் காட்டி, “இதுதான்டா நாங்க படிச்ச ஸ்கூலு!” என்றாள் துள்ளலாய். அவனும் அதை ஆர்வமாய் பார்க்க, “அத்து, அங்க போலாமா?” என்றாள் தன்னை மறந்த ஆர்வத்தில்.

இனியனோ, “இல்லடா, இப்போ லீவ்ன்னு பூட்டி வச்சுருக்காங்க! நான் நாளைக்கு சாவி வாங்கிட்டு உன்னை அழைச்சுட்டு போறேன்!!” என்றிட, அவள் முகத்தில் மெல்லிய வாட்டம்.

இனியன், “நிலா, முடியை சரி பண்ணிக்கோ, கலஞ்சு இருக்கு! எல்லாரும் வாசல்லையே நிப்பாங்க!” என்றதும், “ஏன் யாருக்கும் வீடு இல்லையா?” என்ற கோகுலை இருவரும் ஒருசேர முறைத்தனர்.

“ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பாக்க போறாங்க நிலாவ! அதும், என்னோட மனைவியா!” என்ற இனியனின் முகத்தில் பெருமிதமே இருந்தது.

அவன் சொல்லியதை போல அவன் வீட்டு வாசலில் ஊரின் ஜனங்கள் பாதி கூட்டம் நிற்க, நிலாவுக்கு சங்கோஜமாய் இருந்தது. அதை புரிந்துக்கொண்ட இனியன், “நீ ஜஸ்ட் சிரிச்சுட்டே மட்டும் இரு! மத்ததை நான் பார்த்துக்குறேன்!” அவள் கை அழுத்தி சொன்னவன், கார் கதவை திறந்து இறங்கினான்.    

கையில் ஆரத்தி தட்டோடு நாலைந்து பெண்கள் ரெடியாய் நின்றனர். இனியனின் வயதையொத்த நண்பர்கள் ‘மச்சி, சொல்லவே இல்ல’ என பிடித்துக்கொள்ள, நிலாவை பார்த்ததும், ‘கண்ணு, மூக்கு, வாயி’ என ஆசையாய் சூழ்ந்துக்கொண்டனர் பெருசுகள்.  

அவர்கள் மாத்தி மாத்தி அவளிடம் கேள்வி கேட்டு தாடை கன்னம் என வாஞ்சையாய் வருடிக்கொடுக்க, நிலாவுக்கு புயலில் சிக்கிய பலூனின் நிலைமை. தன் நண்பர்களின் கேள்விக்கு சரியாய் பதில் சொல்ல முடியாமல் கவனம் நிலாவிடமே சென்றது இனியனுக்கு.

இந்த சீனுக்கு ஒரு எண்டு கார்டை போட உள்ளிருந்து வேகமாய் வந்தார் கிருஷ்ணவேணி.

“ஏலேய், கல்யாணம் முடிச்சு மொதோ முறை புள்ளைங்க வந்துருக்கு, வீட்டுக்குள்ள கூப்புடாமா, ஊரு கண்ணு படட்டும்ன்னு முச்சந்தில நிக்க வக்கீயளோ!!” கோவமாய் ஒரு அதட்டல் போட இனியனையும் நிலாவையும் விடுவித்தனர். ஆரத்தி எடுத்து நிலாவை வலது காலை வைத்து உள்ளே அனுப்பிய பின்னரே கூட்டம் சற்று குறைந்தது. அதிலும் சில வெள்ளை தலை குமரிகள் நடு வீட்டில் கால் நீட்டி அமர்ந்துவிட நிலாவுக்கு மூச்சு முட்டும் நிலைமை.

ஜில்லென முலாம் பழ ஜூஸ் தொண்டைக்குள் சரிய, உடலின் வெப்பம் சற்று தணிவதை போல உணர்ந்தனர். “வரமுடியாதுன்னு சொன்னவன், உடனே போனை போட்டு வரோம்ன்னு சொன்னதும் எனக்கு இருப்பு கொள்ளலை!!” காலி டம்ப்ளரை கையில் வாங்கிக்கொண்ட வேணி சந்தோசமாய் சொன்னார்.

“நீங்க இப்படி சிரிக்குறதை பார்க்கலாம்ன்னு தான் உடனே கிளம்பிட்டோம்!” உடனே நிலா சொன்னதில் இனியனுக்கு தன் காதையும் கண்ணையுமே நம்ப முடியாத நிலை. ‘நீயா பேசியது என் அன்பே! நீயா பேசியது!! பின்னனியில் பாடல் ஓட, திறந்த வாய் மூடாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

நிலா சொன்ன மறுமொழியில் நெகிழ்ந்து போன வேணி, “அட என் கண்ணு…!!!” உட்காந்திருந்தவளை தன் வயிறோடு அணைத்து உச்சி முகர்ந்தார்.

சமையலறையில் இருந்து தடல்புடலாய் சத்தம் வர “என்ன ஆன்ட்டி, கிட்சென்ல ஏதோ பூனை உருட்டுது போல!!” நிலா கிண்டல் செய்ய அதை புரிந்துகொண்ட வேணி சிரிக்க, சாம்பார் கரண்டியோடு வெளியே வந்தார் தேவி.

“சொல்லுவடி சொல்லுவ! நீ வரன்னு வித விதமா சமைச்சு வச்சுட்டு இருக்கேன்ல, என்னை இன்னும் சொல்லுவ நீ!” என்றார் விளையாட்டு கோவமாய்.    

“சமைச்சா மட்டும் போதுமா? வந்தவங்களை ‘வாங்க’ன்னு வரவேற்க வேணாமா?” நிலா சொன்னதும், “நான் கூப்பிட்டா தான் உன் மாமியார் வீட்டுக்குள்ள நீ வருவியாக்கும்” என நொடித்துக்கொண்டார் தேவி.

“என்னை கூப்பிட சொல்லல! உன் மருமகன் வந்துருக்காருல? அவரை கூப்பிட வேணாமா? அவ்ளோதானா மரியாதை?” நிலா சொன்னதுமே தான் தன் தவறை உணர்ந்தார் தேவி.  

அங்கிருந்த ஊரார் முன் அவள் அப்படி கேட்டுவிட, “அப்படி கேளு கண்ணு, தான் பார்த்து வளர்ந்த புள்ளைன்னா மரியாதை குடுக்க கூடாதா என்ன?” பொழுதுபோக்காய் வம்பு பேச தயாராக, இனியன் அவன் அத்தைக்காக சப்போர்ட் செய்து பேசியது யார் காதிலும் விழவில்லை.

தேவி, “வந்ததும் சாப்ட வைக்கணும்ன்னு வேலையை வேகவேகமாய் செஞ்சுட்டு இருந்துட்டேன் செழியா! வாங்க கூப்புடாதது தப்புதான்!!” அவர் சங்கடபடுவது பொறுக்காமல், “அத்தே நிலா விளையாட்டுக்கு பேசிட்டு இருக்கா! நீ சமையலை கவனிங்க, எனக்கு பயங்கரமா பசிக்குது!!” என்று அந்த பேச்சை அதோடு நிறுத்துவிட்டு, “அதியன் எங்கம்மா?” என்றான் இனியன்.

வேணி, “நாளைக்கு விருந்து போடனும்ல! அதான் கறிக்கடை அண்ணன் கிட்ட வெள்ளனவே கறி வேணும்னு சொல்லிட்டு, சில சாமான் வாங்க போயிருக்கான்!” என்றிட, “சரிதான்! ஆடோட மட்டும் நிறுத்திடாதீங்கம்மா, கோழிக்கும் காடைக்கும் சொல்லிவைங்க! ஒருத்தன் கறிசோறுன்னு சொன்னதுமே கிளம்பி வந்துட்டான்!” என்று சிரித்தான் இனியன்.

உள்ளிருந்த தேவி வேகமாய் வந்து, “யாரு கோகுலா?” என்றிட ‘ஆம்’ என்ற இனியனுக்கு அப்போது தான் அவன் தங்களோடு இல்லாதது நினைவு வர, “கோகுலை காணோமே!?” என்றான்.

“வெளில நின்னு வெட்டி கதை பேசிட்டு இருப்பான்” என சரியாய் சொன்னாள் நிலா.

பெண்கள் கூட்டத்தை பார்த்ததுமே தன் பேக்கில் வைத்திருந்த நூறு ரூபாய் சன் கிளாசை எடுத்து மாட்டிக்கொண்டான் கோகுல். இருவரும் தன்னை அழைப்பார்கள் என அவன் காருக்குள்ளே காத்திருக்க, அவனை மதியாமல் எல்லோரும் உள்ளே சென்றுவிட, ‘கிரேட் இன்சல்ட்’ என்று வராத போனை வந்தபடி காட்டிக்கொண்டு காரை விட்டு இறங்கினான் கோகுல்.

“ரியலி ஹாட் மச்சி! ஐ டோன்ட் க்நொவ் ஹொவ் கேன் ஐ பி ஹியர்” பீட்டரோடு போனில் பேசுவதை போல அவன் வீட்டு வாசலுக்கு நடந்து வர, சில பெண்கள் அவனை கண்டு அவர்களுக்கு பேசி சிரித்துக்கொண்டனர். ‘இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா?’ என சிலாகித்து கொண்ட கோகுலை, அங்கிருந்த இனியனின் நண்பர்கள் ‘இனியன் சிநேகிதனோ?’ என்று யூகித்து விசாரிக்க வந்தனர். அவர்களை கண்டதும், மேலும் சில ஆங்கில படத்தின் சப் டைட்டில்களை அவன் எடுத்து விட, “நீங்க உள்ள இருந்ததை கவனிக்கலை, இல்லனா முன்னமே அழைச்சுருப்போம்!” என்றனர் மரியாதை நிமித்தமாய்.

அவர்களிடம் ஆங்கிலம் பேசி ஸீன் போட்டு பெண்களிடம் ஹீரோவாகலாம் என எண்ணியவன், “தட்ஸ் ஒகே மேன்!” பெரியமனதாய் சொல்லிவிட்டு “ஹொவ் யூ டூயிங்?” என விசாரிக்க, “வி ஆல் ஆர் கிரேட்! வாட் அபவுட் யூ? என ஒருவன் கேட்டதில் கொஞ்சம் எட்டிப்பார்த்த ஆங்கிலமும் ஓடியே விட்டது.  

அவன் அதிர்ச்சியில் நிற்ப்பதை பார்த்தவன், “நாங்க எல்லோருமே எஞ்சினியர் தானுங்க! ஊர விட்டு போக வேணாமேன்னு உள்ளூருலையே வேலை பார்த்துகிட்டு திரியுறோம்! நீங்க என்ன வேலை பாக்குறீங்க?” என்று கேட்க, பெண்கள் கிண்டலாய் சிரிப்பதை போல இருந்தது அவனுக்கு.

“நான், ஒரு லீடிங் மேகசின்ல போட்டோக்ராபரா இருக்கேன்!” அவன் சொல்லி முடிக்க, “அட போட்டா புடிக்குற வேலையா? எம் பேரன் கூட அந்த வேலை தான் பாக்கான்! இந்த ஊருல சாவு, காதுகுத்துன்னு எது நடந்தாலும் அவந்தேன் போட்டா புடிப்பான்!” நரைத்த மீசை ஒன்று அவன் பேச்சை கேட்டுவிட்டு பதில் சொல்ல பெண்கள் கூடம் ‘க்ளிக்’ என சிரித்தது.

‘எங்க இருந்துடா எனக்குன்னு வரீங்க!!’ காண்டானவன், அவருக்கு தன் வேலையை புரிய வைத்துவிடும் எண்ணத்தில், “நான் அந்த மாறி போட்டோ புடிக்குறவன் இல்ல தாத்தா, நியூஸ் பேப்பர்ல எல்லாம் வருமே செய்தியோட போட்டோ? அந்தமாறி ப்ரோபெஷ்னல்லா எடுக்குறவன்” கெத்தாய் சொல்ல, “என்னத்த பரபிஸ்ஸா எடுக்குறீன்களோ! என் கொள்ளுபேராண்டி தம்மாத்தூண்டு போன்ல எடுக்குற போட்டா கிலீன்னா வருது! நீங்க அம்மாம்பெரிய காமரால எடுத்து போடுற போட்டா ஆதார்அட்டைல இருக்க மூஞ்சி மாறி கருகி கடக்கு! சத்தியராசுனும் தெரியல, சன்னி லியோனுனும் தெரியல!! ஹும்ம்!” அவன் இமேஜை மொத்தமாய் குழி தோண்டி புதைக்க, ‘சாவுற வயசுல உனக்கு சன்னி லியோன் தெரிஞ்சுருக்கா கிழவா!’ மனதுக்குள் அவரை கொஞ்ச மட்டுமே முடிந்தது. அவர் பேச்சில் அங்கிருந்த அனைவருமே சத்தம் போட்டு சிரிக்க, சன் கிளாசை கழட்டிவிட்டு வீட்டுக்குள் அவன் கோவமாய் நுழையவும், இனியன் எதிர்கொண்டு வரவும் சரியாயிருந்தது.

“உன்னை தான் காணோமேன்னு தேடி வந்தேன்!! என் பிரண்ட்ஸ் கிட்ட உன்னை அறிமுகபடுத்துறேன் வா!!” இனியன் அழைக்க, “ஆல்ரெடி டேமேஜ் ஆகிடுச்சு!! இதுக்குமேல தாங்காது!” என்ற கோகுல், “எனக்கு மட்டும் ஊருக்கு ஒருத்தன் கிளம்பிடுறான்!” சத்தமாய் முனகிவிட்டு உள்ளே சென்றான். இனியனும் என்ன நடந்திருக்கும் என யூகித்து சிரித்துக்கொண்டே பின்னால் சென்றான்.

“மாடில உங்க ரூம் இருக்கு! நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” வேணி தம்பதிகளுக்கு தனிமை கொடுக்க, கோகுலுக்கு அதியனின் அறையை காட்டினார் அவர்.  ஹாலில் இருந்த பெருசுகள் அந்த ‘வெங்காயத்தை குடு அறிவோம்’ என வேலையில் இறங்க அவர்கள் பொழுது மின்னலென ஓடியது.

அதியன் வந்ததும் நால்வரும் சேர்ந்து பலகதைகள் பேசினர். கோகுலுக்கு தங்கள் சிறுவயது கதைகளை மாறி மாறி இருவரும் எடுத்து சொல்ல, அதை நிலா மென்னகையோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.  பின்னே கோகுல் தங்கள் கல்லூரி கதைகளை பில்ட்அப்போடு சொல்லும்போது நிலாவால் அமைதியாய் இருக்க முடியவில்லை. ‘நீ யாருன்னு எனக்கு தெரியும், நான் யாருன்னு உனக்கு தெரியும்’ என்று மாற்றி மாற்றி இருவரும் தங்களை வாரிக்கொண்டனர். மொத்தத்தில் இன்பநிலா தன் கூட்டை விட்டு வெளியே வந்திருந்தாள்.

இனியன் சும்மா இருக்காமல், “ஏன்டா அதியா? நிலா நான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நம்ம அம்மா சொன்னபோ நீ வேணவே வேணாம்ன்னு சொன்னியே ஏன்?” நிலாவை வைத்துக்கொண்டே கேட்டிட, ஷாக் அடித்ததை போல முழித்தான் அதியன்.    

நிலாவோ, “அப்படியா சொன்ன?” ஒற்றை புருவம் உயர்த்தி கோவம் போல கேட்க, அதியன் திருதிருவென முழித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனை அப்போது பார்க்கவே பாவமாய் இருந்தாலும், “சொல்லுடா!!” நிலா கோபித்துக்கொள்ள மாட்டாள் என்ற எண்ணத்தில் இனியன் பேச்சை தொடர்ந்தான்.     

“கல்யாண விஷயமா அம்மாவும் தேவி அத்தையும் ரொம்ப நாளா பேசிகிட்டு இருந்தது எனக்கு தெரியும். அத்தை அண்ணியை பத்தி ஒவ்வொருமுறையும் போன்ல சொன்னதை வச்சு நானா ஒரு முடிவுக்கு வந்துட்டேன்! அதைதான் செழியன்கிட்டையும் சொன்னேன்!” அப்பாவியாய் சொல்லிவிட்டு ‘ஹிஹி’ என பல்லை காட்ட, ‘நீ தப்பிக்க என்னை மாட்டிவிட்டுடியேடா!’ என்று தேவி அங்கிருந்து நைசாக ஓடிவிட்டார்.

நிலாவின் கைபேசிக்கு அழைப்பு வர, அதை பார்த்தவள் வேகமாய் அதை துண்டித்தாள்.

கோகுல், “நான் ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்க மாட்டீங்களே?” என்ற பீடிகையோடு தொடங்கியவன், “புள்ளைங்க ரெண்டு பேருமே வேலைக்கு போகலன்னா வேணிம்மா எப்படி செலவை எல்லாம் சமாளிக்குறாங்க?” தயக்கத்தோடு கேட்டு முடித்தான்.

சகோதரர்கள் இருவரும் மெலிதாய் சிரித்தனர். இனியன் பதில் சொல்லாமல் இருக்க, “அப்பாக்கு பூர்வீக சொத்து நிறைய இருக்கு, தென்னந்தோப்பு வாழைத்தோப்பு எல்லாம் குத்தகைக்கு விட்டுருகோம்! அந்த காசே எங்களுக்கு தாராளமா போதும். வீட்ல நாலு கறவை மாடி இருக்குறதால பாலு, தயிர் நெய்ன்னு வீட்டுக்கே வந்து தினம் நிறைய பேரு வாங்கிட்டு போறாங்க.. அம்மா கை செலவுக்கு அது ஆகிடும்!” அதியன் சொல்ல, ‘ஆகமொத்தம் ஒருத்தனும் வேலைக்கு போக மாட்டீங்க!’ என கோகுல் நக்கலாய் முணுமுணுத்தது நிலா காதில் விழுந்திட, “ஏய்!!!” என முறைத்தாள் அவனை.

இனியன், “அதியன் ஐ.பி.எஸ் எக்ஸாம் கிளியர் பண்ணிருக்கான்!! கால் லெட்டர்க்காக வெய்ட்டிங்!!” சொன்னதை நம்பமுடியாத வியப்பில் இருவரும் அதியனை பார்க்க, “ஏன்னா இப்போவே சொன்ன?” செல்லமாய் தன் அண்ணனை முறைத்தான் அதியன்.

கோகுல், “ஏய் அதியா!! சொல்லவே இல்ல பாத்தியா? சூப்பர்டா சூப்பர்டா!!” தாவி வந்து கட்டிக்கொள்ள, “கால் லெட்டர் வந்ததும் சொல்லலாம்ன்னு இருந்தேன்!!” என்றான் அதியன் சிரிப்புடன்.

நிலா, “கங்ராட்ஸ் அதி! எப்போ ஜாயின் பண்ண போற?” உள்ளுக்குள் அவளுகிருந்த சந்தோஷம் அவள் முகத்திலும் தெரிய பூரிப்பாய் கேட்டாள்.

“தேங்க்ஸ் அண்ணி! எப்படியும் நெக்ஸ்ட் மந்த வந்துடும்! ஒரு வருஷம் நார்த்ல ட்ரைனிங், அப்புறம் போஸ்டிங்! அம்மாகிட்ட யாரும் சொல்லாதீங்க! நான் சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணிருக்கேன்!!” அதியன் சொன்னதற்கு சம்மதம் சொன்னனர் அனைவரும்.

நிலாவுக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருக்க அதை அவள் எடுக்காமல் துண்டித்துக்கொண்டே இருந்தாள். அதை கவனித்த இனியன், “யார் நிலா?” என்றிட, பதட்டமாய் ‘ராங் கால்’ என்றவள் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாள். தொடர் அழைப்புகளும், அவளது பதட்டமும் இயல்புக்கு மாறாய் இருக்க இனியனுக்கு துணுக்குற்றது.

கோகுல், “அதியா, கண்டிப்பா நீ இதுக்கு ட்ரீட் குடுத்தே ஆகணும்!!!” அவன் நச்சரிக்க தொடங்க, நைட் ஷோ படத்துக்கு அழைத்து செல்வதாய் ஒப்புக்கொண்டான் அதியன். இனியன் நிலாவிடம் அனுமதி கேட்க யோசிக்காமல் போய்வர சொன்னாள். மூவரும் சென்றதும், சிறிது நேரம் வீட்டை வலம் வந்தாள் நிலா. பின்கட்டில் இருந்த மாமரம் அவள் ‘வா’ என அழைக்க, அதன் கீழே போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்து கண்மூடி சாய்ந்துக்கொண்டாள்.

இரவின் நிசப்தமும் குளிர்ந்த இயற்கை காற்றும் நிம்மதியான உறக்கத்தை கொடுக்க கண்ணயர்ந்தாள் இன்பநிலா. சிறிது நேரத்தில் அவள் தலை அசைவதை போல இருக்க கண் திறந்தவள் அருகே வேணியை கண்டதும் எழுந்து அமரபோனாள்.

“ஏன் எழுந்துகுற கண்ணு? என் மடில படுத்துக்கோ!!” பரிவாய் அவர் சொன்னதில் மறுக்காமல் அவர் மடியில் படுத்துக்கொண்டவளை தட்டிகொடுத்தார் வேணி. நிலா இமைக்காமல் அவரையே பார்க்க, “ஏதாது கேட்கணுமா?” என்றார். அவள் தலை ‘ஆம்’ என அசைந்தது.

“கேளும்மா!”

“நீங்க ஏன் என்மேல இவ்ளோ பாசமா இருக்கீங்க!!” இந்த கேள்வியாய் அவளிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவில்லை. மெதுவாய் சிரித்தவர், “நான் தூக்கி வளர்த்த பொண்ணுடா நீ!! எப்டி பாசம் இல்லாம இருக்கும்?” பதில் கேட்டு கேட்டார்.

“என்னால தானே யாருக்கும் சொல்ல முடியாம அவசர அவசரமா நாள் நேரம் கூட பார்க்காம உங்க பையனுக்கு கல்யாணம் செய்ய வேண்டியதா போச்சு!!”  அவளையே வெகு நாட்களாய் இந்த கேள்வி குடைந்தது போலும்…

“ஒருத்தன் பொறக்கும்போதே அவன் வாழ்க்கைல எது எது எப்டி எப்டி நடக்கணும்ன்னு கடவுள் எழுதி வச்சுருப்பாரு! அதுப்படி தான் அவனுக்கு எல்லாம் நடக்கும்! இனியன் கல்யாணம் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல லஞ்ச் டைம்ல தான் நடக்கணும்ன்னு எழுதிருக்கு போல!!” ஹாஸ்யம் போல அவர் சொல்ல, “நீங்க எனக்காக தான் இப்படி சொல்றீங்க! உங்களுக்கு என்மேல கோவமே இல்லையா?” மீண்டும் கேட்டாள் நிலா.

தன் மடியில் கிடக்கும் நிலாவின் சிகை கோதியவர், “இல்லையே கண்ணு!! கோவம் எதுக்கு வரணும்?” என்றார். அப்போதும் அவள் முகம் தெளியாமல் இருக்க, “உனக்கு என் கல்யாணம் எப்படி நடந்துச்சு தெரியுமா?” என்றார் அவளிடம். அவள் ‘தெரியாது’ என சொல்ல, “எங்க அப்பாரு இந்த ஊரையே கூட்டி கல்யாணம் வச்சாரு. பத்திரிக்கை மட்டுமே மூவாயிரம் அடிச்சோம்!!” அவர் சொல்ல, அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

“வாழைமரம் என்ன, பூந்தோரணம் என்ன!! மாப்பிள்ளை அழைப்புக்கு எல்லோரும் குதிரை வச்சா, எங்கப்பா யானையை பிடிச்சாந்தாரு! ஊரே ஆஆன்னு பாத்துச்சு எங்க கல்யாணத்தை!!” கதை கேட்பவள் போல ஆர்வமாய் நிலா இருக்க, “நாளு கிழமை பார்த்து, நல்ல நேரம் குறிச்சு, அத்தனை பேரு ஆசிர்வாதத்தோட நடந்த எங்க கல்யாணம்  பன்னெண்டு வருஷம் தான் நிலைச்சுது! முப்பது வயசுல கைல ரெண்டு பிள்ளையோட தாலியிழந்து நின்னேன்!!” நிலாவின் மனம் அந்த வயதில் வேணியின் நிலை எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து கவலை கொண்டது.  

வேணி, “உங்கம்மாப்பா, காதலிச்சு ஊரைவிட்டு ஓடி வந்து ஏதோ ஒரு கோவில்ல எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டாங்க!! அவ நிலைமை என்னனு உனக்கே தெரியும்!!!” என நிறுத்திய வேணி, “இதெல்லாம் நான் இப்போ எதுக்கு சொல்றேன்னு பார்க்குறியா? ஜாதகம் பார்த்து, நல்ல நேரம் பார்த்து சொந்தபந்தத்தோட ஆசிர்வாதத்துல நடந்த என் கல்யாணமும் ரொம்ப நாள் நீடிக்கலை, நேரம்காலம் பார்க்காம, காதலை மட்டுமே நம்பி கல்யாணம் செஞ்ச தேவிக்கும் அது ரொம்ப நாள் நீடிக்கலை…!!” அவர் சொல்ல எழுந்து அமர்ந்துக்கொண்டாள் நிலா.

“எந்த நேரத்துல எப்படி கல்யாணம் செய்யுரோம்ங்கிறது முக்கியமே இல்ல கண்ணு!! அதுக்கு பிறகு எப்படி வாழுரோம்ங்கிறது தான் முக்கியம்!! எனக்கும் சரி, தேவிக்கும் சரி, நாங்க வாழ்ந்த வாழ்கை திருப்தியா தான் இருக்கு!! யாருக்கு எப்போ ஆயுசு முடியும்ன்னு யாருக்குமே தெரியாது!! கிடைக்குற ஒவ்வொரு நாளையும் முடிஞ்ச அளவு சந்தோசமா கடந்து போகணும்! இதை நான் அறிவுரையா சொல்லல, அன்பாதான் சொல்றேன்!!” என்றவரை தோளோடு கட்டிக்கொண்டாள் நிலா. அவளிடம் வார்த்தையில்லை.

“நீ எதனால இப்படி இருக்கன்னு எனக்கு முழுசா தெரியாதுன்னாலும், ஓரளவு தெரியும்!! சீக்கிரமே உன்னை நீ மீட்டு கொண்டு வரது தான் இனியனுக்கு நல்லது… உனக்கும் நல்லது..” அவரை பார்த்து மெல்லமாய் தலையசைத்த நிலா, “முயற்சி பண்றேன் ஆன்ட்டி!” என்றாள்.

“முதல்ல என்னை அத்தைன்னு கூப்பிட முயற்சி பண்ணு!!” என்று வேணி சிரிக்க அவளுக்குமே சிரிப்பு எட்டிப்பார்த்தது.

வேணி, “சரிடா கண்ணு, நீ போய் தூங்கு! நேரமாச்சு!!” அவளை அனுப்பிவைக்க இனியனின் அறைக்கு சென்ற நிலாவுக்கு வேணி பேசியதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

‘யாரோட ஆயுசு எப்போ முடியும்ன்னு யாருக்கும் தெரியாது! இருக்குற காலத்தை சந்தோசமா கடந்து போகணும்!!’ இந்த வரிகள் அவளை யோசிக்க வைத்தது.

‘பழசையே நினச்சு இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி இருக்க போற நிலா!?’ அவள் மனம் கேள்விகேட்க, ‘உனக்காக ஒருத்தன் பத்து வருஷமா காத்திருக்கான்!! அவனை இதுக்கு மேலயும் நீ காக்க வைக்கிறது முறையில்லை! உனக்குள்ள மறைச்சு வச்சுருக்க அவனுக்கான அன்பை அவன்கிட்ட காட்டு!’ வழியும் அதுவே சொன்னது.

‘சொல்றது ஈசி, செய்யுறது கஷ்டம்’ என நினைத்தாலும், நிலாவின் மனதில் மாற்றத்தின் வேர் விட்டது.  

நைட்ஷோ முடித்து வந்தவன் நிலா இன்னும் உறங்காமல் இருப்பதை கண்டு, “புருஷனுக்காக தூங்காம காத்திருக்கியா நிலாகுட்டி” என்றான் சீண்டும்படி.

“ம்ம்ம்!! வந்ததும் இறுக்கி அணைச்சு உம்மா தரலாம்ன்னு தான்!!” அவளும் சீண்டலாய் பதில் சொல்ல, அவள் அருகே சென்றவன், “ஐயம் வெய்டிங்” என்றான் உற்சாகமாய்.

“கிஸ் பண்ணிட்டு பயந்துபோய் நான் அடிக்காம இருக்க துணைக்கு ஆள் கூப்டுறவன் தானே நீ!!” என்றாள் காலை நிகழ்வை மனதில் வைத்து.

“நீ கோவப்படுவன்னு நினச்சேன் தான்!! பட் பயம் ஒன்னும் இல்ல!! கோகுல் அவனா தான் வந்தான்!!” என்று சமாளித்தான்.

அவள் ‘வெவ்வவே’ என பழிப்பு காட்ட, “நீ ஏன் கிஸ் பண்ணதுக்கு முறைச்ச!?” என்றான்.

“எத்தனை தடவ கேட்ருக்கேன் கிஸ் பண்ணுனு! அப்போலாம் குடுக்காம இந்த தாலியை கட்டுனதும் தான் உனக்கு கிஸ் பண்ணவே தைரியம் வந்துருக்கு! அதுக்கு தான் முறைச்சேன்!!” என்றாள் நிலா.

“அப்போ நீ சின்ன பொண்ணுடி குட்டி!” என்றிட, ‘ஹும்ம்’ என சிலுப்பிக்கொண்டாள் நிலா. அவளை மேலும் நெருங்கி சென்ற இனியன், “இப்போ எதுவேணாலும் கேளு தரேன்!!” ஒரு மார்க்கமாய் சொல்ல, பேருக்கு அவனை தள்ளிவிடுவதை போல நடித்தாள் நிலா. அவன் இன்னும் பசைபோட்டதை போல அவள் மீது ஒட்டிக்கொண்டு நின்றான்.

“இதழி…!!!”  அந்த ஒரு சொல்லில் தேகம் சிலிர்த்தது அவளுக்கு.  அவள் உதட்டை தன்னொரு விரலால் மெல்ல அவன் வருட, அந்த சிறு தீண்டலில் தேகம் அப்படி சிலிர்த்து நெகிலுமா என வியந்தாள் நிலா. அவன் மூச்சுக்காற்று வெப்பமாய் வீசியது.

“உன் உதடு மட்டும் எப்படி செஞ்சு வச்சமாறி இவ்ளோ அழகா இருக்கு!! பார்த்ததுமே கடிக்கணும் போல தோணுது!” அவன் குரலே குழைந்து ஒலிக்க, அது அவளை இன்னும் கிறங்கடித்தது. அவள் கீழுதட்டை தாபமாய் பிடித்து இழுத்தவன், “என் இதழிகுட்டி” என்று சொல்லி, அழுந்த முத்தம் வைத்தான்.

அந்நிகழ்வு அப்படியே முன்னேறி அடுத்த கட்டத்திற்கு போயிருக்கலாம், ஆனால் இனியனுக்கு கட்டம் சரியில்லை.

“நம்ம இங்கயே இருந்துறலாம் இதழிம்மா! நீயும் இங்க வந்ததுல இருந்து நார்மலா இருக்க!! அந்த ஊரே நமக்கு வேணாம்! உங்க அப்பாவ பலி கொடுத்த அந்த ஊரு நமக்கு வேணாம்!!” அதுவரை பொறுமையாய் இருந்தவள், கடைசி வரியில் மோனநிலை களைந்து சுயத்திற்கு வந்தாள்.

அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவள், “அந்த ஊருதான் எங்க அப்பாவை பலி கொடுத்துச்சா?” கூரீட்டியாய் கேள்வியாய் முன்வைக்க, அந்த உண்மையில் திணறிய இனியன் பதில் சொல்ல முடியாமல் வெறுப்புடன் அங்கிருந்து மௌனமாய் நகர்ந்தான்.

மறுநாள் விருந்து முடித்து மூவரையும் மகிழ்வுடன் வழியனுப்பி வைத்த வேணிக்கும் தேவிக்கும் தெரியாது, அடுத்தநாளிரவே விபத்துக்குள்ளான நிலாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாய் இனியனிடம் இருந்து அழைப்பு வரும் என்று….

-தொடரும்…

Advertisement