Advertisement

*13*

உன்னை எனக்கு பிடிக்கும், அதை சொல்வதில் தானே தயக்கம்!

நீயே சொல்லும்வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்!

ரெஜிஸ்டர் ஆபிசில் ‘அவள் பறந்து போனாளே’ என சோக கீதம் வாசித்து அதற்குள் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டதா என காலை எழுந்து காலண்டரில் தேதியை கிழிக்கும் போது ஆச்சர்யப்பட்டுபோனான் இனியன்.  சோம்பல் முறித்து, ‘இன்னைக்கு எக்ஸர்சைஸ்க்கு லீவு விட்டுடுவோம்’ என முடிவு செய்து அவன் வெளியே வர, ஹாலில் டிவி பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நிலா.

“குட் மார்னிங்! ஆபிஸ் கிளம்பலையா?” இனியன் சற்று வியப்பாய் கேட்டான்.

“வீக் ஆப்” என்றவளின் பார்வை கூட அவன் மீது திரும்பவில்லை. ‘ஓ! மேடம்க்கு வாரக்கடைசில லீவ் போல!’ அவனே எண்ணிக்கொண்டு அங்கிருந்த தினசரியை எடுத்து படிக்க தொடங்கினான். அவன் கவனம் சில நிமிடங்களிலேயே செய்தித்தாளில் மூழ்கிவிட, நிலாவின் கள்ளபார்வை இனியனை மொய்த்தது. முட்டி வரை ஷார்ட்ஸ், கையில்லாத டீஷர்ட்டுடன் அவன் அமர்ந்திருந்ததை தலைமுடி முதல் கால்விரல் நகம் வரை ஆராய்ந்தாள் நிலா.

இனியன் அருகே இருக்கும்போது அவனை விட்டு சில நிமிடங்கள் கூட பிரிந்திராத தன்னால் இத்தனை நாள் அவனிடம் இருந்து விலகி இருக்க முடிவதை நினைத்து அவளே ஆச்சர்யமடைந்தாள், அதில் கவலை தான் அதிகம் இருந்தது.  

இருகைகளையும் காலில் ஊன்றி தலை குனிந்தபடி அவன் செய்திதாளில் மூழ்கியிருக்க, அந்த காகிதத்திற்கு பதில் அவள் இருக்க வேண்டும் என ஆசை பிறந்தது. அவனை நெருங்கி போக சொல்லி உள்மனம் அவளிடம் மன்றாடியது.

‘எல்லாம் சுமூகமாய் நடந்திருக்க கூடாதா? தன் ‘அத்து’வுடனான திருமணத்தை எண்ணி அவள் கனவு கண்ட காலங்கள் அப்படியே நீண்டிருக்க கூடாதா? அந்த ஒரு நாள் வராமலே இருந்திருக்க கூடாதா? அன்று அவன் என்னோடு இருந்திருக்க கூடாதா?’ நடந்ததை நினைத்து அவள் கண்கள் பனிதிரையிட்டது. அவன் உருவம் தன் கண்களில் மங்கலாக தொடங்கவும், மெதுவாய் தன் கண்ணை சிமிட்டி சரிசெய்துக்கொண்டாள். தேங்கி நின்ற கண்ணீரில் ஒரு துளி அவள் சிமிட்டுகையில் விழி தாண்டி கீழிறங்கியது.

படித்துக்கொண்டிருந்த தினசரியை படக்கென மடக்கி வைத்தான் இனியன். அந்த சத்தத்தில் வேகமாய் தன் கண்ணை துடைத்துக்கொண்டு கவனத்தை டிவியில் இருப்பதாய் காட்டிக்கொண்டாள் நிலா. இனியன் ஒன்றும் பேசாமல் எழுந்து கிட்செனுக்குள் சென்றான். கண்மூடி நின்று தன் உணர்வுகளை அடக்க பெரும்பாடுப்பட்டான். ‘உன்னை இப்படி கஷ்டப்பட வைக்குறேனே’ குற்றவுணர்வு அவனை எப்போதும் போல தாக்கியது. நொடியில் தன்னை சரி செய்தவன், “மார்னிங் என்ன சமைக்கலாம் நிலா?” என்ற கேள்வியோடு வெளியே வந்தான்.

“ஏதாது சிம்பிளா!” பட்டும்படாமல் அவள் பதில் சொல்ல, “வும்ம்!! சரி நான் சமைக்குறேன்!” என்று மீண்டும் கிட்சனுள் சென்றான்.  அவன் சென்றதும் நிலாவுக்கு ஒரு யோசனை வர, “ஒரு நிமிஷம்!?” என்று அவனை அழைத்தாள்.

“கூப்பிட்டியா?” அவன் வெளியே எட்டிப்பார்க்க, “டெய்லி நீதானே சமைக்குற! இன்னைக்கு ஒரு நாள் நான் சமைக்குறேன்!” என்றாள் சோபாவில் இருந்து எழுந்து நின்றபடி.

அவள் சொன்னதும் இனியனுக்கு ஜர்க்கானது. சந்தேகமாய், “உனக்கு சமைக்க தெரியுமா?” என கேட்க, “ஏன் நீ சமைக்கும்போது என்னால சமைக்க முடியாதா?” வீம்பு பேசியவள் அவன் அருகே வந்து, “நான் சமைக்க தான் போறேன்! அதைதான் நீ சாப்டனும்” என்றாள்.

“சனி யாரை விட்டுச்சு!?” இனியன் முனக, “என்ன சொன்ன?” என்று எகிறினாள் நிலா.

“சனிக்கிழமை ஒன்பது டு பத்தரை ராகுகாலம், பர்ஸ்ட் டைம் சமைக்க போற, நல்ல நேரமா பார்த்து ஆரம்பிக்கலாமேன்னு சொன்னேன்!!”

“ராகுகாலம் எமகண்டம் எல்லாம் சாப்பிடுறவங்களுக்கு தான்!!” நிலா சொல்ல, ‘சரிதான்!’ என்று சிரித்தான் இனியன். கிட்சனுக்கு எதிரே சேரை போட்டு அமர்ந்தவன், “என்ன சமைக்க போற?” என்றான்.

“அதான் யோசிக்குறேன்!!” நிலா குழப்பமாய் நிற்ப்பதை பார்த்த இனியன், அவளுக்கு சிரமம் குடுக்க கூடாதென முடிவு செய்தவனாய், “உப்புமா செஞ்சுடேன்!” என்றான். அவளும், ‘அதானே! ஓகே!’ என்றாள்.

அவள் சமையலில் இறங்கிவிட, இனியன் தன் மொபைலை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான்.   ரிங்க்டோன் ஒலிக்க, தன் அன்னையிடம் இருந்து வந்த அழைப்பில், முகமலர்ந்து “ம்மா?” என்றான் சந்தோசமாய்.

“என்ன கண்ணா செய்யுற?” பிள்ளையை பிரிந்திருப்பது புதிதில்லை என்றாலும், தற்போதைய பிரிவில், வேணிக்கு அவன் மீது பாசம் மிகுந்தது.

“சும்மாதான்ம்மா! மொபைல் பார்த்துட்டு இருந்தேன்!” அவன் சொல்ல, “என்ன சமைச்ச இன்னைக்கு?” என்றார், தாய் திருமணமான தன் மகளிடம் கேட்பதை போல.

“இன்னைக்கு உங்க மருமக சமையல்!” அவள் ஏதோ சாதனை செய்வதை போல பெருமிதமாய் தன் அன்னையிடம் சொன்னான் இனியன். கேட்டுக்கொண்டிருந்த நிலாவுக்கு புன்முறுவல் பூத்தது.

வேணி, “ஏன்டா வேலைக்கு போற புள்ளைய வேலை வாங்குற?” மாமியாராய் அக்கறை கொள்ள, “என் பொண்ணு சமைக்குதா? மாப்பிளை பத்திரமா இருங்க” என்று இனியனின் மாமியார் அவன் மீது அக்கறை கொண்டார். சிரித்தவன், “சனி, ஞாயிறு லீவும்மா” என்றான்.

“லீவு விடுறதே ரெஸ்ட் எடுத்துக்க தான், அப்பகூட நிலாவ தொல்லை செய்றியேடா” வேணி விடாமல் நிலாவுக்கு சப்போர்ட் செய்ய, “நீ எவ்ளோ ஸீன் போட்டாலும் உனக்கு பெஸ்ட் மாமியார் அவார்டு குடுக்க மாட்டாங்கம்மா புரிஞ்சுகோ!” அதியன் வேணியை கலாய்க்க அவன் முதுகில் அவர் டின்னு கட்டுவதும், அதை கண்டு தேவி சிரிப்பதும் அச்சரம் பிசகாமல் இவன் காதில் விழுந்து சிரிப்பை பலப்படுத்தியது.

இனியன் சத்தம் போட்டு சிரித்ததில் நிலா வெளியே வந்து, ‘என்னாச்சு’ என விசாரித்தாள்.  சிரிப்பை நிறுத்தாமல் மொபைலை ஸ்பீக்கரில் போட்டான் இனியன்.

அதியனை அடித்து முடித்த வேணி, “இவன் தொல்லை தாங்க முடிலடா இனியா! என் மருமகளை கொஞ்சுனாலே இவனுக்கு வயிறு எரியுது!” பேசிக்கொண்டே அவன் தலையில் ‘நங்’கென கொட்டினார் போலும். நிலாவுக்கும் சிரிப்பு வந்தது. சமையலை கவனிக்க உள்ளே சென்றுவிட்டாள்.

“ஏன்டா கண்ணா? நிலாவுக்கு தான் ரெண்டு நாள் லீவு இருக்கே! இங்க வந்துட்டு போலாம்ல?” தன் ஆசையை சொல்ல ஆரம்பித்தார் வேணி.

வேணி சட்டென கேட்டதும் என்ன சொல்வதென தெரியாமல் நிலாவை எட்டி பார்த்தான். அவள் மும்மரமாய் எதையோ தேடிக்கொண்டிருக்க, “ம்மா!! அது!! அடுத்த வாரம் வரோமே?!” நிலாவிடம் கேட்காமல் எப்படி சொல்வதென தயங்கினான் இனியன்.

“லீவு இருக்கும்போதே வந்துட்டா நல்லா இருக்குமேன்னு பாத்தேன்! எல்லோருக்கும் நாளைக்கு கறிவிருந்து போட்டுடலாம் பாரு! கல்யாணம் ஆச்சுன்னு தெரிஞ்சதுல இருந்து தினம் யாராது வந்து வந்து கேட்டுட்டே இருக்காங்க, புள்ளைங்க எப்போ வரும்ன்னு!” தன் சங்கடத்தை எடுத்து சொன்னார் வேணி.

“இல்லம்மா! நெக்ஸ்ட் டைம் வரோம்!” இனியன் தயங்க, அவனை மேலும் வற்புறுத்தாமல், “சரிப்பா, உங்க சௌகர்யம் போல வாங்க!!” என்றுவிட்டு, “என் மருமக கிட்ட குடுப்பா” என்றார்.

கிச்சனை எட்டிப்பார்த்தான் இனியன். கையில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து அதை பாத்திரத்தில் போடும் நேரம் அவளுக்கு தும்மல் வர, அத்தனை மஞ்சளும் அவள் முகத்தில் தெறித்து விட்டது. அப்படியே சிலையென அவள் நின்ற கோலம் கண்டு இனியனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. பெரும்பாடுபட்டு கட்டுப்படுத்தியவன், “அவ பிசியா சமைக்குறா! அப்றமா பேச சொல்றேனம்மா” என்று அழைப்பை துண்டித்தான்.

அவன் போனை வைத்ததும், நிலா தன் வியர்வையை துடைத்தபடி வந்து சோர்வாய் சோபாவில் அமர்ந்தாள்.  அவளை கண்டு ஆச்சர்யமாய், “அதுக்குள்ள சமைச்சிட்டியா?” என்றான்.

“ஹ்ம்ம்! குக்கர்ல இருக்கு!” அசால்ட்டாய் அவள் சொல்ல, “எது?” என்றான் புரியாமல்.

“உப்புமா தான்!” என்றவளை கண்டு படுமோசமாய் அதிர்ந்து போனான் இனியன்.   “உப்புமாவை குக்கர்லையா?” அதிர்ந்து போய் அவன் எழுந்தே நின்றுவிட, “பின்ன, வேறேதுல வைப்பாங்க?” என்றாள் அவள்.

அவளிடம் பதில் சொல்லாமல் கிச்சனுக்குள் அவன் ஓட, அதற்குள் ஒரு விசில் வந்திருந்தது. அடுப்பை நிறுத்திவிட்டு அவன் தலையில் அடித்துக்கொண்டான். அவனை பின்தொடர்ந்து வந்த நிலா, “இன்னும் ரெண்டு விசில் வந்ததும் நிறுத்திருக்கலாம்ல? வெந்துச்சா இல்லையான்னு கூட தெரில?” என்று சலித்துக்கொண்டாள். அவனுக்கு சிரிப்பதா? நொந்துக்கொல்வதா? என்றே தெரியவில்லை.      

“உப்புமாவ குக்கர்ல வைக்கணும்ன்னு யாருமா சொன்னது?” நொந்து போய் அவன் கேட்க, “யாரும் சொல்லல, நானே தான் வைச்சேன்!” என்றவளை ‘ஏன் இப்டி?’ என பார்த்தான் இனியன்.

நிலா, “இப்போ……! சாதம் வைக்கணும்ன்னா என்ன செய்றோம்? அரிசியை கழுவி, குக்கர்ல போட்டு தண்ணீ ஊத்தி நாலு விசில் விடுறது இல்ல? அதுமாறி தானே ரவையும்!? அதான் ரெண்டு டம்ளர் ரவை எடுத்து கழுவி…!” நிலா மேற்கொண்டு சொல்ல, பதறி இடைமறித்தான் இனியன்.

“ரவையை கழுவுனியா?” சிங்கில் எட்டி பார்த்த இனியன், தலையில் நன்றாகவே அடித்துக்கொண்டான். ஏனெனில் அவள் சொன்ன அளவில் பாதிக்கு மேல் சிங்கில் கிடந்தது.

“அது, நான் வாஷ் பண்றப்போ ஸ்லிப் ஆகி விழுந்துடுச்சு!” அதற்க்கு ஒரு காரணமும் சொன்னாள் நிலா. இனியன் எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்துவிட்டான். ‘உப்புமா இப்படி செய்யக்கூடாதோ?’ நிலா ஆராய்ச்சி செய்துக்கொண்டிருக்கும்போது, எழுந்து வந்த இனியன், குக்கர் மூடியை திறந்தான். ரவை துகளெல்லாம் மூடியிலும், குக்கரின் வாய்பகுதியிலும் ஒட்டி இருக்க, வெறும் தண்ணீர் மட்டும் அடியில் நின்றது.

அதை பார்த்ததும் தான், நிலாவுக்கு ‘ஹைய்யோ’ என்று சிறு பதட்டம் வந்தது. இனியன், திரும்பி அவளை முறைக்க, எப்போதும் போல வெளியே கெத்தாக காட்டிக்கொண்டு, “ஆட்சுவலா, ஒரு பாத்திரத்துல வச்சு குக்கர்ல வச்சுருக்கனும், டேரக்டா குக்கர்ல வச்சதால தான் இப்படி ஆகிடுச்சு!” தனது ஆராய்ச்சி முடிவை அவளை வெளியிட்டாள். அவள் தலையில் நங் நங்கென கொட்டலாமா என்று தோன்றியது இனியனுக்கு.

“ஹும்ம்! நானே சமைச்சுருப்பேன்! உனக்கு தெரியாததை எல்லாம் எதுக்கு பாப்பூ ட்ரை பண்ற?” குக்கரை சிங்கில் போட்டுக்கொண்டே அவன் கேட்க, “ஹே! நானே கஷ்டப்பட்டு முதல் முறையா சமைச்சது, டேஸ்ட்டு கூட பார்க்காம தூக்கி போடுற?” மனசாட்சியே இல்லாமல் கேட்டாள் நிலா.

குக்கரையும் அவளையும் இருமுறை மாற்றி மாற்றி பார்த்தவன், “ஹும்ம்!!” தன்னையே நொந்தபடி, விளிம்புகளில் ஒட்டியிருந்த அந்த ‘சோ கால்டு  உப்புமாவை’ கொஞ்சம் தொட்டு நாவில் வைத்தான். அடுத்த நொடியில்லாமல், “த்தூ” என துப்பிவிட்டு, ‘வ்வாக்’ என குமட்டிக்கொண்டிருந்தான் இனியன்.

நிலாவுக்கு அவன் வேண்டுமென்றே செய்கிறான் என கோவம் வந்தது. தண்ணீரால் வாயை கொப்பளித்தவன், “என்னத்தடி போட்ட இதுல?” என்றான் குமட்டல் நிற்காமல்.

“இதோ இதை தான்!” அலமாரியில் இருந்த பாட்டிலை எடுத்து நிலா நீட்ட, அதை வாங்கி பார்த்த இனியன் மண்டையை பிய்த்துகொண்டு நின்றுவிட்டான்.

“அடியே!! இது ரவை இல்லடி! கசகசா!” முற்றிலும் நொந்துபோன குரலில் இனியன் சொல்ல, “அப்படின்னா என்ன?” என்று அசராமல் கேட்டாள் நிலா.

“உப்புமா ரொம்ப தப்புமா?” தன் சோகத்தை தனக்குள்ளே புதைத்துக்கொண்டு “நிலாக்குட்டி, எனக்கொரு சத்தியம் பண்ணித்தரியா?” என்றான்.

“இனிமே நான் சமைக்கவே கூடாது அதானே?” நிலா முறுக்கிக்கொண்டாள்.

இனியன், “இல்ல! இனிமே கிட்சனுக்குள்ளேயே ஜென்மத்துக்கு வரமாட்டேன்னு சத்தியம் பண்ணு!” என்றான்.

அவனை செல்லமாக முறைத்தவள், அசடு வழிய, “போ அத்து” என ஓடிவிட்டாள்.

இனியனுக்கு தான் அந்த உப்புமா நிகழ்வில் இருந்து மீள சில நிமிடங்கள் பிடித்தது. பிறகு, பிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து தோசை ஊற்றி, பொடி தொட்டு இருவரின் காலை உணவு எந்த சேதாரமும் இன்றி கழிந்தது. சாப்பிட்டு முடித்ததும், “ஆண்ட்டி என்ன சொன்னாங்க?” என்றாள் நிலா.     

“லீவ் தானே? ஊருக்கு வரலாம்லன்னு கேட்டாங்க! நான் இன்னொரு முறை வரோம்ன்னு சொல்லிட்டேன்” என்றான்.

“ஹோ! எப்படி ரெண்டு நாள்ல போயிட்டு வர முடியும்?”

“இப்போ கிளம்புனா கூட எவனிங் ஊருக்கு போய்டுவோம்! நாளைக்கு லஞ்ச் வரைக்கும் அங்க இருந்துட்டு எவனிங் கிளம்புனா நைட்டுக்கு இங்க வந்துடலாம்” இனியன் சொல்லி முடிக்க, “அப்போ ஓகே, கிளம்பலாம்” என்றாள் நிலா.

இனியன் நம்பமுடியாமல், “போலாமா?” என்றிட, “ஆமா! கிளம்பு போலாம்!” என்றாள் நிலா.   

அவள் மனம் மாறுவதற்குள் கிளம்பிவிடலாம் என எண்ணி, குளிப்பதற்காக ஓடினான் இனியன். நிலாவும் இரண்டு நாட்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பி நிற்க, அவள் அலைபேசி அலறியது.

அழைப்பது ‘கோகுல்’ என பார்த்ததும், “சொல்லு” என்றாள் நிலா. “நிலா, இன்னைக்கு லஞ்சுக்கு அங்க வரேன். பாஸ் கிட்ட சொல்லி சூப்பரா பிரியாணி செய்ய சொல்லு” என்றான் கோகுல்.

நிலாவுக்கு அவன் சொன்னதில் கோவம் வர, “ஏய் என் புருஷன் என்ன தாஜ் ஹோட்டல் செஃப்பா? உன் இஷ்டத்துக்கு ஆர்டர் பண்ற? பிரியாணி வேணுன்னா காசு கொடுத்து வாங்கி தின்னு! வந்துட்டான் பெரிய இவனாட்டம்!!” பொரிந்து தள்ளினாள்.

கோகுலோ, “சாரிங்க! நம்பர் மாத்தி கூப்ட்டுட்டேன் போல?” என்றதும், “கரெக்டா தான் கூப்பிடுருக்கடா முண்டம்” என்றாள் நிலா கோவம் குறையாமல்.

“அடிப்பாவி! நீதானா அது? திடீர்ன்னு ‘என் புருஷன் எனக்கு மட்டும் தான்’ன்னு பேசவும் வேற யாருக்கோ கூப்பிட்டுடேனோன்னு பயந்துட்டேன்! ஆமா எப்போ இருந்து இந்த புருஷன் பாசம்?” கோகுல் கிண்டல் செய்ய, “அதெல்லாம் எப்பவும் இருக்கு” என்ற நிலா, “நான் என் மாமியார் ஊருக்கு போறேன்! நாளைக்கு நைட்டு தான் வருவேன்!” என தகவள் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

எதேச்சையாய் அவள் பின்னால் திரும்ப, கண்களில் காதல் மின்ன, குறும்பாய் சிரித்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இனியன். அவன் குளித்துக்கொண்டிருப்பதாய் எண்ணி அவள் கோகுலிடம் சத்தமாய் பேசியிருக்க, ‘கேட்டுருப்பானோ?’ என ஜர்க்கானாள் நிலா.

அவன் எதுமே பேசாமல் அவளையே குறும்பாய் பார்த்துக்கொண்டு நிற்க, முகத்தை விறைப்பாய் வைத்துக்கொண்ட நிலா, “என்ன லுக்கு? கிளம்பலையா?” என்றாள்.

குறும்பு சிரிப்போடு காதல் பார்வையும் கூட, அவளை பார்த்து சிரித்தான் இனியன். கன்னக்குழி விழ அவன் சிரித்த அழகில் மொத்தமாய் தொலைந்தாள் நிலா. தன் முகமே அதை காட்டிகொடுத்துவிடும் என அஞ்சி, ‘கிளம்பு’ என சொல்லிவிட்டு அவள் அவசரமாய் நகர, “நான் பார்த்துட்டேன்” என்றான் இனியன் அதே பார்வையில்.

இனிய படபடப்புடன், “எ..ன்..ன? என்ன பார்த்த?” என்றாள் நிலா.

“என் இதழியை! இப்போதான் ஐஞ்சு நிமிஷம் முன்னாடி!” அவன் அவளை நெருங்க, “நீ எனக்கு மட்டும் வேலைகாரனா இருந்தா போதும்ன்னு தான் அப்டி சொன்னேன்” என்றாள் அவனுக்கு கோவம் வரட்டும் என எண்ணி!

அவனோ அவளை மேலும் நெருங்கி, “என் இதழியோட அடையாளமே இந்த பொசஸிவ்னஸ் தான்!” ஹஸ்கி வாய்சும் அவனின் அதீத நெருக்கமும் நிலாவை தன் நிலை மறந்து நின்ற வைத்தது.

-தொடரும்…

Advertisement