Advertisement

*12*

எதுக்கிந்த கோவம்? நடிச்சது போதும்!

மறைச்சு நீ பார்த்தும் வெளுக்குது சாயம்!

குளித்து முடித்து வெளியே வந்த நிலா குனிந்த தலை நிமிராமல் தன் பொருட்களை ஹேன்ட்பேக்கிற்குள் சேகரித்துக்கொண்டிருந்தாள். இனியனுக்கு அவளை காண காண சிரிப்பாய் இருந்தது. தன் முகத்தை நேர்கொண்டு பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டே இவ்வாறு செய்கிறாள் என்றாலும், அதை அவள் மறைக்கும் அழகை கண்டு புன்னகையோடு ரசித்துக்கொண்டிருந்தான்.

அவள் கிளம்பி வாசலுக்கு செல்லும்போது தான் கவனித்தான், நெற்றி வகிட்டில் குங்குமம் இல்லையென்று. வேகமாக பூஜையறையில் இருந்து குங்குமத்தை எடுத்து வந்து அவள் நெற்றியில் வைத்ததும், “இப்போ எதுக்கு இதை வைக்குற?” என்ற அவள் கேள்வியில் ‘இதென்ன கேள்வி?’ என்பது போல புரியாமல் பார்த்தான் இனியன்.

“இப்போ எதுக்கு இதை என் நெத்தில வைக்குற?” மீண்டும் அவள் கேட்க, “வகிட்டுல குங்குமம் வச்சாதானே கல்யாணம் ஆச்சுன்னு தெரியும்?” என்றான் இனியன்.

“யாருக்கு தெரியும்?”

“பார்க்குறவங்களுக்கு”

“அவங்களுக்கு தெரிஞ்சா என்ன? தெரியலன்னா என்ன?” இடக்காக கேட்டாள் நிலா.

“கல்யாணம் ஆச்சுன்னு தெரிஞ்சா தான் மற்ற ஆம்பளைங்களோட அனாவசியமான பார்வைகள், தப்பான எண்ணங்கள் உன்மேல பெரும்பாலும் படாம இருக்கும்!!” காலாகாலமாய் சொல்லப்படும் கதையை இனியனும் சொல்ல, “ஹோ! சிம்பிளா தாலி ஒரு வேலின்னு சொல்ற!?” என யோசனையாய் கேட்டாள் நிலா.

அவள் கேட்ட தினுசிலேயே இனியனுக்கு தெரிந்துவிட்டது, ‘என்னவோ ப்ளான் போடுறா’ என்று. இருப்பினும் ‘ஆமா’ என்று சொல்லி வைத்தான்.   

“அப்போ உனக்கு வேலி வேணாமா?” நிலா கேட்க, “நான் ஆம்பளை நிலாக்குட்டி! எனக்கு இதெல்லாம் வேணாம்!” அசட்டையாய் அவன் சொல்ல அவனை முறைத்தாள் நிலா.

“ஹோ! அப்போ ஆம்பளைங்களுக்கு வேலி போட தேவை இல்லை! பொம்பளைங்க மட்டும் வேலி தாண்டி போய்டுவோம்ன்னு பயந்து இதெல்லாம் இத்தனை காலம் பண்ணிருக்கீங்க!” சண்டைக்கு தயாராகுபவளை போல அவள் பேச, ‘உஷார் மணி’ அடித்தது இனியனுக்குள்.

“அய்யயோ இல்ல கண்ணு, நான் அப்படி சொல்லல!!” இனியன் சொல்வதற்குள், “அப்போ ஆம்பளைங்களுக்கும் வேலி தேவை தானே?” தன் பாயின்ட்டுக்கே வந்து நின்றாள் நிலா.

எதற்கிந்த பீடிகை என தெரியாவிட்டாலும், ‘ஆமா, ஆமா’ என தலையாட்டினான் இனியன். “குட்! நான் சீக்கிராமே உனக்கொரு வேலி ரெடி பண்றேன்! அதுவரைக்கும் பி கேர்புல்!” என்று அவன் கன்னத்தை தட்டிவிட்டு வெளியே சென்றாள் நிலா. அவள் முகத்தில் குறும்பின் சாயல்.

‘என்ன திட்டம் தீட்டிருக்கான்னு தெரியலையே’ உள்மனம் யோசித்தாலும் வெளியே, “பார்த்து போயிட்டு வா நிலா, வெயில் வேற ‘அதிக்க்கமா’ இருக்கு” அவளை சீண்டுவதை போல அழுத்தி சொன்னான் இனியன்.

அதை புரிந்துக்கொண்ட நிலா, “ம்ம்! இன்னும் பைத்தியம் பிடிக்கல எனக்கு! யூ டோன்ட் வொரி! ஹும்ம்” என உதட்டை சுளித்துக்கொண்டு லிப்டுக்குள் புகுந்தாள். சிரித்தபடி தன் காலை உணவை முடித்தான் இனியன்.

கமிஷ்னர் ஆபிஸ் என்ட்ரன்ஸில் வாசலையும் கடிகாரத்தையும் பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தான் கோகுல். அவனை அதிகமாக காக்க வைக்காமல் தன் ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு அவனை நோக்கி வந்தாள் இன்பநிலா.

“லேட் பண்ணிடுவியோன்னு நினச்சேன்!” கோகுல் நிம்மதியாய் மூச்சு விட, “கமிஷ்னர் வந்தாச்சா?” என விசாரித்தாள் நிலா.

“வந்தாச்சு! பர்ஸ்ட் அப்பாயின்மென்டே நமக்கு தான்! அதனால எப்போ வேணாலும் கூப்டலாம்!” கோகுல் சொல்லி வாயை முடிவதற்குள் அவர்களை உள்ளே அழைத்தார் கமிஷ்னர்.

ஐம்பதை கடந்த வயதில் கம்பீரமாய் தெரிந்த அவருக்கு மரியாதையாய் வணக்கம் செலுத்திவிட்டு அவருக்கெதிரே இருந்த கதிரைகளில் அமர்ந்தனர் நிலாவும் கோகுலும்.

“பொதுவா நான் பத்திரிக்கைகாரங்க யாருக்கும் அப்பாயின்மென்ட் குடுக்குறது இல்லை! குருநாதன் எனக்கு நல்ல பழக்கம். அவர் ரெக்குவஸ்ட் பண்ணதாலதான் உங்களை சந்திக்க ஒத்துக்கிட்டேன்!” அவர்களை சந்தித்ததில் தனக்கு பெரிய அபிப்பராயம் இல்லை என்பதை மறைமுகமாக அவர் சொல்ல, நேரத்தை வீணடிக்காமல் வேண்டியதை கேட்டுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தாள் நிலா.

“சர், நான் நேரே விஷயத்துக்கே வரேன்! அமைச்சர் சதாசிவம் வீட்ல எல்லோரும் ஒரே நேரத்துல தற்கொலை செய்துருக்காங்க! இது கொலையா இருக்கலாம்ன்னு உங்களுக்கு சந்தேங்கம் வரலையா?” வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்துவிட்டு தன் கேள்வியாய் கேட்டாள் நிலா.

“ஒரு சாமானிய மனிதனா எனக்கு சந்தேகம் வலுவா வந்துச்சு! ஆனா ஒரு போலிஸ் அதிகாரியா எந்த ஒரு விஷயத்தையும் நிரூபிக்குறதும் ஆதாரம் காட்டுறதும் ரொம்ப முக்கியம். வெறும் வாய் வார்த்தையா எதையும் முடிவு செஞ்சுட முடியாது!” என்றார் கமிஷ்னர்.

“அப்படி சந்தேகம் இருக்குங்குற அடிப்படைல இது கொலையா இருக்கலாம்ன்னு கருதி உங்க விசாரணை தொடருதா?” மறுகேள்வி கேட்ட நிலாவிற்கு, “எந்த வழக்கா இருந்தாலும் அதோட எல்லா கோணத்துளையும் விசாரிக்கிறது தான் போலீசோட வழக்கம்! அதேதான் இப்போவும்!” என்றார்.

“ஒருவேளை இது தற்கொலையாக இருக்கும் பட்சத்தில, அமைச்சர் அவர்கள் குடும்பத்தோட தற்கொலை செய்துக்கொள்ள காரணம் என்னவா இருக்கும்ன்னு நினைக்குறீங்க?”

“அந்த கோணத்துல தான் தற்போதைய விசாரணை போய்கிட்டிருக்கு! நம்பும்படியான காரணங்கள் எதுவும் இதுவரை கிடைக்கலை” அடுத்த கேள்விக்கு நிலா ஆயத்தமாக இடைபுகுந்த கோகுல், “எதற்க்காக இன்னமும் அமைச்சரோட வீட்டை மக்களுக்கு காட்டாம இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சர்?” என்றான்.

“இது கொலையா தற்கொலையான்னு இப்போவரைக்கும் ஒரு தெளிவு கிடைக்கலை. அந்த வீட்ல நிறைய ஆதாரங்கள் ஒளிஞ்சு இருக்கலாம்ன்னு எங்களுக்கு வலுவான சந்தேகம் இருக்கு! இரண்டாம் கட்ட பாரன்சிக் சோதனை நடத்த அரசு ஆணை பிறப்பிக்க வாய்பிருக்கு. அதுனாலதான் நாங்க மீடியா ஆளுங்களை இப்போவரைக்கும் உள்ளே அலோவ் பண்ணாம இருக்கோம்!!”

நிலா, “போலிஸ் விசாரணை இப்போ புலனாய்வுக்கு மாற்றப்பட்டுருக்குறதா ஒரு தகவல் கசிஞ்சுருக்கே! அது உண்மையா?” என்றதும், மெலிதாய் சிரித்தவர், “தகவல் யார் மூலியமா கசிஞ்சுதோ அவங்ககிட்ட தான் நீங்க, இதை கேட்கணும்!” என்றார்.

நிலா அதோடு “ரொம்ப தேங்க்ஸ் சர்! குருநாத் சொன்னதுக்காக எங்களுக்கு நேரம் ஒதுக்கி பொறுமையா பதில் சொன்னதுக்கு!” என்றிட, “மை ப்ளஷர்! நீங்க என் பேட்டியை பிரசூரிச்சதும், மத்த பத்திரிக்கைல இருந்தும் பேட்டி கேட்டு வருவாங்க, அதுதான் கொஞ்சம் ட்ரபுளா இருக்கும்! தட்ஸ் ஓகே!” என்றார்.

“யூ டோன்ட் நீட் டு வொரி சர், உங்க பெயரையோ பதவியையோ நாங்க பகிரங்கபடுத்த மாட்டோம்! ‘குற்ற விசாரணை அதிகாரியின் பேட்டி’ன்னு மட்டும் தான் போடுவோம்!” என கோகுல் சொன்னதும், “தென் ஐயம் சோ ரிலாக்ஸ்டு!” என்றார் கமிஷ்னர் நிம்மதியாய்.

“ஓகே சர், வி ஆர் லீவிங்” நிலா எழுந்துக்கொள்ள, “வந்தீங்க, கேள்விகேட்டீங்க, இப்போ கிளம்புறீங்க! நீங்க யாரு, என்ன பேருன்னு ஒண்ணுமே சொல்லல என்கிட்ட!” குற்றம் சாட்டுவதை போல அவர் சொல்ல, தவறை உணர்ந்து அசடு வழிந்தான் கோகுல். முகத்தில் காட்டாவிட்டாலும் நிலாவுக்கும் ‘ஐயோ’ என்றுதானிருந்தது.

கோகுல், “ஐயம் கோகுல் சர், சுடரொளி பத்திரிக்கையோட சீப் போட்டோகிராபர்” என அறிமுகம் செய்துக்கொண்டான்.  நிலா, “நான் இன்பநிலா, ரிபோர்டர்” என்றதும், கமிஷ்னர் “ஆர்டிகிள் யார் எழுதுறா?” என்றார்.

நிலா, ‘நான்தான்’ என சொல்ல, “ஆனா நான் இதழி-ன்னு யாரோ எழுதுறதா கேள்விபட்டேனே?” குறுக்கு விசாரணை செய்ய, “அது என்னோட புனைபெயர் சர்” என அவர் சந்தேகத்தை தீர்த்துவைத்தாள் நிலா.

அவர் கண்கள் நிலாவின் நெற்றி வகிட்டில் பளிச்சென இருந்த குங்குமத்தின் மீது  பதிந்தது. “நியூலி மேரீட் ஆ?” பார்த்தவுடன் தோன்றியதை கேட்டார்.

கோகுல் நிலாவை முந்திக்கொண்டு, “ஆமா சர், மூணு நாள் ஆச்சு!” என்றதும், ‘மூணு நாள்லயே வொர்க் ஜாயின் பண்ணிடுசே இந்த பொண்ணு’ என்று அவருக்கு நன்விதமாய் தோன்றியது.

புன்சிரிப்புடன், “ஹஸ்பென்ட் என்ன பண்றார்?” என்றதும், கொஞ்சமும் தயங்காமல் “யூபிஎஸ்ஈ எக்ஸாம்க்கு ப்ரீபேர் பண்றாரு” என்றாள்.

கமிஷ்னர், “வெரி குட்! எந்த உதவி வேணுன்னாலும் தயங்காம என்னை கேக்க சொல்லுமா! அவர் பேரென்ன?” என்று கேட்க, “மிஸ்டர் இனியன் இளஞ்செழியன்” என மென்னகையோடு சொன்னாள் நிலா.

ஆனால் அந்த பெயரை கேட்ட கமிஷ்னரின் புன்சிரிப்பு தான் பனி மூடிய சூரியனை போல மறைந்தது. அவர் சட்டென யோசனையில் ஆழ்ந்துவிட, அவரை குரலெழுப்பி கலைத்தாள் நிலா.

“நாங்க கிளம்புறோம் சர்” என்று கிளம்ப, அவசரமாய் தன் பிசினஸ் கார்டை எடுத்து அவளிடம் கொடுத்தார் கமிஷ்னர்.

“என் நம்பர் இருக்கு இதுல! உங்க ஹஸ்பண்டை என்கிட்ட மறக்காம பேச சொல்லுங்க!” அவர் சொல்லவே சந்தேகமாய் பார்த்தாள் நிலா.

“அவருக்கு என் உதவி தேவைப்படலாம் இல்லையா? யூ.பி.எஸ்.ஈ ப்ரீபரேஷனுக்கு” என்றதும், சரியென அதை வாங்கி தன் கைப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டாள் நிலா.

வெளியே வந்ததும் வாகனம் நிறுத்துமிடத்துக்கு இருவரும் செல்ல, கோகுல், “வேலைல இருக்குறவனை ஒருத்தனும் மதிக்க மாட்றான், வேலையே இல்லாதவருக்கு கமிஷ்னரோட விசிட்டிங் கார்டு!” அலுத்துக்கொள்ள, “பொறாமைல எரியாம வண்டியை எடு!” என்றாள் நிலா.

“எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்ல! எப்படி வேலை இல்லாதவருக்கு நீ ஓகே சொல்லி கல்யாணம் செஞ்சுக்கிட்ட?” கோகுல் இந்த வாரத்தின் நூற்றி ஒன்பதாவது முறையாக இந்த கேள்வியை கேட்க, “அவனுக்கு இருக்க டேலன்ட் என்னனு எனக்கு தெரியும்! சீக்கிரமே நீங்கல்லாம் மூக்கு மேல விரல் வைக்குற மாறி ஒரு வேலைக்கு போக தான் போறான்!” நிலா திடமாய் சொல்ல,

“ஏன் ட்ரைன்னேஜ் கிளீன் பண்ண போறாரா?” கோகுல் கேட்டுவிட, அவனை படு மோசமாய் முறைத்தாள் நிலா.

“இல்ல, ஒரு நகைச்சுவை சொல்லலாமேன்னு!” அவன் பம்ம, அவள் முறைப்பு கூடியதை கண்டதும், பைக்கை தள்ளிக்கொண்டு அங்கிருந்து ஓடியே விட்டான் கோகுல்.

அந்த வார ஆர்டிகிள் தயார் செய்ய வேண்டி ஆபீசுக்கு வண்டியை விட்டாள் நிலா.  சென்னையின் சிக்னலில் நிலாவின் வண்டியும் தப்பாமல் சிக்கியது. இரண்டு நிமிட காத்திருப்பு உறுதியானதால் சாவியை முடுக்கி வண்டியை ஆப் செய்தாள். சுற்றிலும் இருந்த ஜனநெருக்கடியை பார்க்க, ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக ஓரிடத்தில் இருந்து புறப்பட்டு இந்த சிக்னலில் சிக்கிக்கொண்டு நிற்பது கவனம் ஈர்த்தது.

சிகப்பு வெளிச்சம், மஞ்சளாய் மாறும்போதே பல வண்டிகள் உறுமதொடங்கிவிடும், பச்சை வந்ததோ இல்லையோ வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல சீறிப்பாய்ந்து பறந்துவிடுவர் என நினைத்தபோது நிலாவுக்கு சிரிப்பு வந்தது.  

“ஹே அந்த மூவி வேணாம்டா! செம்ம போர்! நம்ம எங்கயாது ஷாப்பிங் போலாமா?” முகத்தை மூடிய துப்பட்டாவில் இருந்து பெசுகுரல் வெளியே வந்தது. ஹெல்மேட் பெட்ரோல் டேங்கில் ஒய்யாரமாய் உட்காந்திருக்க, அந்த வாலிபனோ, “ஷாப்பிங் போற அளவுக்கெல்லாம் என்னாண்ட துட்டு இல்ல” என சிறிது எரிச்சலாய் சொன்னான்.

அதுவரை அவன் தோளில் பல்லிபோல் ஒட்டிக்கொண்டிருந்தவள் ‘ஹும்ம்’ என சலிப்போடு ஓரடி பின்னால் தள்ளிப்போக, “சரி சரி, உடனே மூஞ்ச தூக்காத! இருக்குற காசுல கொஞ்சமா வாங்கிக்க” என்றான். பல்லி மீண்டும் சுவரில் ஒட்டிகொண்டது.

மஞ்சள் பச்சையாய் மாறும் முன் வாகனங்கள் சீற தொடங்கியது. நிலாவும் தன் வண்டியை இயக்கி முன்னால் சென்றாள், அவள் நினைவுகளோ அவள் அனுமதியின்றி பின்னால் சென்றது.

“ஹும்ம்!! ஹும்!” பைக் ஓட்டிகொண்டிருந்த இனியனின் முதுகில் முகத்தை முட்டிக்கொண்டு முனகிகொண்டிருந்தாள் பதினாறு வயது நிலா.

“ஏய் மூஞ்ச வச்சு தேய்க்காத! கூசுது!!” இனியன் மெல்லமாய் அதட்ட, பின் வேண்டுமென்றே முதுகு முழுக்க தன் முகத்தை வாயது தேக்க ஆரம்பித்தாள் குறும்பு நிலா. அவன் கூச்சத்தால் நெளிய வண்டி அங்கும் இங்கும் தடுமாறியது. அவன் சொல்ல சொல்ல கேட்காமல், நிலா அவனுக்கு குறுகுறுப்பு மூட்ட,

“இப்போ நீ நிறுத்தலன்னா, நான் வண்டியை நிறுத்திடுவேன்! அப்புறம் நேரே வீட்டுக்கு தான் போகணும்!” இனியனின் மிரட்டல் வேலை செய்தது.

சலித்துக்கொண்டாலும் அமைதியாய் வந்தாள் நிலா. “என்ன நிலாக்குட்டி எதுமே பேச மாட்டேங்குறாங்க?” இனியனே ஆரம்பித்தான்.

“நான் உன்னை கட்டிபிடிச்சுகிட்டு வரவா?” அவள் ஆசையாய் கேட்டாள். “நான் சொல்ல சொல்ல கேட்காம இப்போவே என்னை கட்டிபிடிச்சுகிட்டு தானே வர?” பசை போல ஒட்டாமல் சற்று இடைவெளிவிட்டே அவன் இடையில் கைவைத்து அமர்ந்திருந்தாள் நிலா. அதற்கே இனியன் அத்தனை அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தான். இப்போதும் அதையே சொல்ல கடுப்பானாள் நிலா.

“நான் உன்மேல கை வச்சுருக்கேன், அவ்ளோதான்! கட்டிபிடிக்குறதுன்னா இப்படி இல்ல, இப்ப்ப்படி!” சொன்னவள், அவனை நெருங்கி இறுக்கி பிடித்துக்கொள்ள, படக்கென சடன் ப்ரேக் போட்டான் இனியன்.

“என்னாச்சு அத்து?”

“தள்ளி உட்காரு நிலா! யாராது பார்த்தா தப்பா போய்டும்!” இனியன் வழக்கம் போல கண்டிப்புடன் அறிவுரை சொல்ல, உதட்டை சுளித்துக்கொண்டு ஓரடி பின்னால் நகர்ந்தாள் நிலா.

“நம்ம தானே கல்யாணம் செஞ்சுக்க போறோம்? அப்புறம் என்னவாம்?” மனது கேட்காமல் கேட்டுவிட்டாள் நிலா. மீண்டும் வண்டியை இயக்கிய இனியன், “உனக்கு இன்னும் வயசு வரல பாப்பூ” என்றான் பதமாய்.

“நாந்தான் எட்டாவதுபடிக்கும்போதே வயசுக்கு வந்துட்டேனே!!” நிலா விவரமாய் சொல்ல, ஒரு கையால் தன் தலையில் அடித்துக்கொண்டான் இனியன்.

பின் பொறுமையாய், “பாப்பூ! நீ இன்னும் ஸ்கூல் படிப்பே முடிக்கல! உனக்கு பதினெட்டு வயசு ஆனாதான் நீ பெரிய பொண்ணு! அப்புறம் தான் கிட்ட வரது, தொட்டு பேசுறது எல்லாம்!!” அவன் பேச, விரல் விட்டு இன்னும் பதினெட்டு ஆக எத்தனை மாதங்கள் மீதம் என கணக்கெடுத்தாள் நிலா.

அவளிடம் பதில் இல்லாததால், “என்ன மேடம், சத்தமே வரல!?” இனியன் கேட்க, “ஹான்? அப்போ முன்னாடி எல்லாம் முத்தா குடுப்பா, கட்டிபிடிப்ப? அதெல்லாம் ஏன் செஞ்ச?” நிலா கேட்டதும், இனியன் சலித்துக்கொண்டான்.

“நிலா, அதெல்லாம் ஒரு பாசத்துல அன்புல குடுத்தது. ஆனா நீ வயசுக்கு வந்த பின்னாடி என்னால அப்டி செய்ய முடியாது!” தெரிந்தவரை அவன் விளக்க, “ஹும்ம்! நான் வயசுக்கு வராமையே இருந்துருக்கலாம்!” என முனகினாள் நிலா.

ஆரம்பத்தில் நிலா மீது பாசத்தை பொலிந்த இனியன், அவள் பெரியவள் ஆக ஆக சற்று எட்டி நிற்க பழகினான். அவள் வயதுக்கு வந்ததும், என்னவோ அவனால் அதுவரை அவளை சிறு பெண்ணாய் பார்த்ததை போல பார்க்க முடியவில்லை.

‘என்னவள், எனக்கானவள்!’ என்ற எண்ணம் அவளை நினைக்கும்போதெல்லாம் அவனுள் விதையாய் தோன்றியது. ஆனால் அவள் வயதை காரணம் காட்டி இன்னும் விலகி சென்றான் இனியன். அது புரியாத நிலாவுக்கு அவன் தன்னிடம் காட்டும் ஒதுக்கம் சோர்வை கொடுக்க அவனை நெருங்கி வர தொடங்கினாள். அவள் நெருங்க, அவன் விலக, இருவருக்கும் தவிப்பான நாட்கள் அவை.

எப்போது பதினெட்டு வயது வரும் என காத்திருந்த நிலாவுக்கும், அவள் மேஜர் ஆகும் நாளை எண்ணி காத்திருந்த இனியனுக்கும் அது மறக்க முடியாத நாளாய், அவர்களை பிரிக்கும் நாளாய் அமையும் என அப்போது நினைத்திருக்கவே இல்லை.

இனியனோடு பைக்கில் சென்ற அந்த அழகிய தருணத்தை நினைவு கொண்டபடி, ஸ்கூட்டியை கற்பனா லோகத்தில் நிலா செலுத்தியிருக்க, பல வருடமாய் பழக்கப்பட்ட ஒன்றானதால் அது சரியாய் தன் ஆபிஸ் பார்கிங்க்ல் சென்று நின்றது.

‘இனியனை பார்க்க வேண்டும் போல் இருந்தது’ நிலாவுக்கு.

தன் கேபினுக்கு சென்றவளை அவள் சேரில் உட்கார்ந்தபடி வரவேற்றான் இனியன். அவனை அங்கு அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனை சுற்றிலும் ஆபிஸ் பட்டாளமே இருந்தது. ரொம்ப நேரமாய் பேசிக்கொண்டிருப்பார்கள் போலும் என எண்ணினாள் நிலா.

‘பேயை நினைச்சா, ‘பே’ன்னு வந்து நிக்குமாம் கண்ணுமுன்ன!’ என்று மனசுக்குள் இனியனை திட்டிக்கொண்டாள். செல்லமாய் தான்!!

அவள் வந்த சில நிமிடங்களில் கூட்டம் கலைந்தது. “எதுக்கு வந்த?”

“லஞ்ச எடுத்துட்டு போலயே நீ?” பேகை அவள் முன் நீட்டினான் இனியன்.

“புல் டைம் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆகிடலாம்ன்னு முடிவே பண்ணிட்டியா?” வியப்பும் குழப்பமுமாய் அவள் கேட்க, “ச்ச! ச்ச! சும்மா கொஞ்ச நாள் தான்! வேற நல்ல வேலை கிடைச்சதும் போய்டுவேன்” இனியன் சொன்னதும், “எது?” என அதிர்வோடு முறைத்தாள் நிலா.

“அட, ஹஸ்பண்ட் வேலைல இருந்து இல்லம்மா, வீட்டு வேலைல இருந்து மட்டும்!” என்று சொன்னதும், தன் கைபையை வைத்துவிட்டு தண்ணீரை அருந்தினாள் நிலா.

அவள் நின்றுக்கொண்டு தண்ணீர் குடிக்க, இவன் ஏதோ கேட்ச் பிடிப்பவன் போல அவளை கீழிருந்து பார்த்துக்கொண்டே இருந்தான்.  அதை கவனித்த நிலா, “என் வாயில இருந்து தண்ணீர் சிந்துசுன்னா, அதை உன் வாயால கேட்ச் பிடிச்சு ரொமேன்ஸ் பண்ணலாம்ன்னு திட்டமோ?” என்று கேட்டாள்.

ஆச்சர்யத்தை முகத்தில் காட்டியவன், “உனக்கு பேஸ் ரீடிங் தெரியுமா?” என்றான். முறைப்போடு லஞ்ச பேகை பிடுங்கிகொண்டு சேரில் அமர்ந்தாள் நிலா. அவன் கொண்டு வந்த முருங்கைக்காய் சாம்பார் உருளை வறுவலை அவனுக்கு தெரியாமல் வாசம் பிடித்தவள் சாப்பிட தொடங்க, “கோகுல் எங்க?” என்ற சந்தேகம் அவள் வாய் விட்டு வந்தது.

“அவனுக்கும் சேர்த்து தான் எடுத்து வந்தேன்! அவன் கேபினுக்கு சாப்பிட போய்ட்டான்”

நிலா பசியில் வேகமாய் சாப்பாடை வாயில் அடைக்க, விக்கி கொண்டது. அங்கிருந்த தண்ணீர் பாட்டில் காலியாய் இருக்கவே, எழுந்து செல்ல எத்தனித்த இனியனை தடுத்து தன் கைப்பையை காட்டினாள் நிலா. அதை வேகமாய் திறந்து தண்ணீர் பாட்டிலை அவன் எடுத்து கொடுக்கும்போது சில பேப்பர்கள் கீழே விழுந்தன. குனிந்து ஒவ்வொன்றாய் எடுத்து உள்ளே வைத்தான்.

அப்போது அதில் கமிஷ்னர் கொடுத்த விசிட்டிங் கார்டை பார்த்தவன், பார்த்துக்கொண்டே இருக்க, நிலா, “இன்னைக்கு கமிஷ்னரை தான் பேட்டி எடுத்தோம்! உன்னை பத்தி சொன்னதும், அவர் கார்டை குடுத்துட்டு, உன்னை மறக்காம பேச சொன்னாரு!” என்றாள்.

இனியன் ‘எதற்கு’ என்றுகூட கேட்கவில்லை. அவள் கவனம் அவன்மீது இல்லாத நொடி, அந்த கார்டை கசக்கி அங்கிருந்த குப்பை தொட்டியில் வீசினான் இனியன் இளஞ்செழியன்.

-தொடரும்…       

Advertisement