Advertisement

*11*

தேடி சேர்த்த காசப்போல் காதல் இருக்குதா?

கொஞ்சமாக எடுக்குற! கஞ்சம் தடுக்குதா?

மசாலா வாசனையில் சொக்கி நின்ற நிலாவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் கோகுல். “கான்ட் வெயிட், வோன்ட் வெயிட்” கத்திக்கொண்டே அவன் டைனிங் டேபிளை அடைய, சத்தம் கேட்டு கிட்செனில் இருந்து வெளியே வந்தான் இனியன். வெகு நேரமாய் அவன் அடுப்பருகே நிற்ப்பது வியர்வை பூத்திருந்த அவன் முகத்தில் இருந்து தெரிந்தது. நிலா ஒருவித ஆச்சர்யத்தோடு உள்ளே வந்தாள். அவளை தொடர்ந்து வந்த நிவேதா, “ஹய் மாமா! நான் நிவேதா, லாயர்!” என்றதும், “அடே, வாங்க வாங்க! எடிட்டர் பொண்ணுன்னு தான் நிலா சொன்னா, இவ்ளோ பெரிய பொண்ணுன்னு சொல்லல! நான் ஏதோ ஸ்கூல் படிக்குற பொண்ணு வரும்னு நினச்சேன்!!” என்றான் இனியன் இன்முகமாய்.

“நான் இப்போவும் ஸ்கூல் கேர்ல் மாறிதான் இருக்கேன்னு என் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்வாங்க!” என்றாள் நிவேதா மெலிதான வெட்கத்தோடு. கோகுல் தன் வாய்க்குள்ளே, “காமாலை வந்த கண்ணுக்கு காக்கா கூட மஞ்சளாத்தான் தெரியும்!” என்று முனகிக்கொண்டான்.  

இனியன், “100% உண்மை. யங் அண்ட் க்யூட்டா இருக்க நிவேதா!” மறுமொழி சொல்ல, நிலாவின் சுடு பார்வையோடு அனல் காற்றும் சேர்ந்து வீசவே, கப்பென வாயை மூடிக்கொண்டான்.

“பாஸ்! வெட்டி பேச்சு எதுக்கு? வாசமே ஆளை தூக்குது! கொஞ்சம் விட்டா நான் எல்லாத்தையும் மூக்காலையே தின்னுடுவேன்!” கோகுல் பறந்ததும் தான், அத்தனை பதார்த்ததையும் மேஜை மீது கொண்டு வந்து அடுக்கினான் இனியன். நிலா உண்மையிலேயே அசந்து விட்டாள்.

“சிக்கன் பிரியாணி, தயிர் பச்சடி, இறால் கிரேவி, ஆலு பரோட்டா, பன்னீர் பட்டர் மசாலா, கர்ட் ரைஸ் அண்ட் அட்லாஸ்ட் மின்ட் ஜூஸ்!” ஒவ்வொன்றாய் சொல்லியபடி மூவருக்கும் பரிமாறிவிட்டு நிமிர்ந்தான் இனியன்.

கோகுல் உற்சாகமாய், “பளபளக்குற பகலா நீ, பத்தாங்கிளாசு பெயிலா நீ, நிலா வூட்டு பிரியாணி, துன்ன வரியா நீ?” பாடிக்கொண்டே முதல் வாய் பிரியாணியை ஆசையாய் அள்ளினான்.

“இத்தனையும் நீங்களே செஞ்சீங்களா மாமா?” நம்பமுடியாமல் நிவேதா கேட்க, “ஆமா கண்ணு!” என்றான் இனியன். “நீங்க சூப்பர் மாமா!” நிவே சொன்னதும்,  உடனே அவன் மூளை, ‘உன் பொண்டாட்டியை பாருடா’ என சொல்ல, அதை செய்தான். அவள் முகத்தில் எப்போதுமே கோவம், முறைப்பு தான் இருக்கும் என்றாலும் இம்முறை வேறு ஏதோ புதியதாய் தெரிந்தது. சில நொடிகளிலேயே ‘அது’ என்ன என்பதை புரிந்துக்கொண்டவன், உடனே சமயோஜிதமாய், “நிவேதா, எனக்கு சின்ன வயசுல இருந்தே தங்கச்சி இல்லன்னு ஒரு குறை இருக்கு! என்னவோ தெரியல உன்னை பார்த்ததுல இருந்து உன்ன தங்கச்சியா ஏத்துக்கனும்ன்னு என் அடி மனசு பிராண்டுது. இனி என்னை ‘அண்ணன்’னு கூப்புடுரியா?” என்றான்.

“இவ்ளோ அழகான ஒரு அண்ணன்னா எனக்கு!! ஹும்ம் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு! இருந்தாலும் உங்களுக்காக இனி ‘அண்ணன்’ன்னு கூப்புடுறேன்!” யார் மனதும் கோணாமல் கச்சிதமாய் காரியத்தை முடித்தான் இனியன். ‘எப்பூடி?’ என்பது போல நிலாவை பார்க்க, அவள் அவனை கண்டேகொள்ளாமல் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தாள்.

“பாஸ்! கொஞ்சமா அந்த பிரியாணியை அள்ளி வைங்க!” கோகுல் தன் எம்டி தட்டை நீட்ட, “அதுக்குள்ள சாப்டியா?” என வாயை பிளந்தாள் நிவேதா.

“பின்ன? நீங்க மொக்க போட்டு முடிக்குற வரைக்கும் திங்காம வச்சுட்டு இருப்பாங்களா? என்னைக்குமே அன்னலெட்சுமையை காக்க வைக்க கூடாது!” சீரியசாய் கோகுல் சொல்ல, அவன் தட்டில் கொஞ்சமாய் பிரியாணியை வைத்தான் இனியன்.

“ஹூஸ் தட் அன்னலக்ஸ்மி?” நிவி கேட்டதும், கோகுல், “ஆமா இவ பெரிய பிரிட்டிஷ் மகாராணி!! ஒண்ணுமே தெரியாது! பேசாம, வந்த வேலையை பாரு!!” என்றுவிட,  ‘ச்சீ போடா’ என முறுக்கிக்கொண்டு சாப்பிட தொடங்கினாள் நிவேதா.

“நீங்க சாப்டுங்க! நான் கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன், வியர்வையா இருக்கு!” இனியன் தன் அறைக்குள் புக, நிலாவும் அவன் பின்னே எழுந்து சென்றாள். தன் டிஷர்ட்டை கலட்டி அவன் ஓரமாய் வைக்க, நிலா தன் பின்னால் நிற்ப்பது தெரிந்தது. திரும்பி அவளை பார்த்து புன்னகித்தான். நிலாவின் கண்கள் அவன் வெற்று மார்பில் வலம் வந்தது. அதில் சாய்ந்துக்கொள்ள சொல்லி அவள் உள்மனம் ஆணையிட்டது. இன்னும் சில நிமிடங்கள் இதே நிலையில் விட்டிருந்தால் அவள் முகம் இனியனின் மார்பில் தஞ்சம் புகுந்திருக்கும்.

ஆனால், “என்னை இப்படி பார்க்க தான் என் பின்னாடியே ஓடி வந்தியா?” என அவள் மோனநிலையை கலைத்தான் இனியன்.

சட்டென தெளிந்தவள், “ஹும்ம்!! இதெல்லாம் எந்த ஹோட்டல்ல வாங்கினன்னு கேக்கலாம்ன்னு வந்தேன்!” என்றாள்.   

“ஹோட்டல்லயா? அம்புட்டும் நானே சமைச்சதாக்கும்!” என்றான் வீராப்பாய். ‘ஓஹோ!’ அவள் மௌனமாய் நிற்க, “லஞ்சக்கு சொல்லிருந்தா இன்னும் நிறைய ஐடம்ஸ் பண்ணிருப்பேன்! டின்னர்ன்னு சொல்லவும் சிம்பிளா பண்ண வேண்டியதா போச்சு!” மேலும் அவன் பீத்திக்கொள்ள, “போதும்! சீக்கிரம் வந்து சாப்புடு!” என சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள் நிலா.

அங்கே டைனிங் டேபிளில், “செம்ம டேஸ்டா இருக்கு” சொல்லிக்கொண்டே சிக்கனை ஒரு கடி கடித்தாள் நிவேதா.

“ஓசி சாப்பாடு எப்பவும் ருசியா தான் இருக்கும்!” கோகுல் சொல்ல, அவன் தோளில் சுள்ளென அடித்தாள் நிவேதா. அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவன் சாப்பாட்டை தொடர, “ஏய்! அண்ணா, என்ன வேலை பார்க்குறாங்க?” என கேட்டாள் நிவேதா.

“ஹி ஹி ஹாஹா” என சத்தமாய் சிரித்தான் கோகுல். நிவி, “ஹே லூசு, சிரிக்காம சொல்லு!!” என்றதும், “நான் சொல்ல மாட்டேன்! நீயே கண்டுபுடி!” என்றான் நக்கலாய்.

“ஹும்ம்!!” என சலித்துகொண்டவள், வேகமாய், “ஏதாது ஸ்டார் ஹோட்டல்ல செஃப்-பா இருக்காங்களா?” என்றாள். அவன் ‘இல்லை’ என மறுப்பாய் தலையாட்டினாள்.

அதற்குள் நிலா வந்துவிட, அவர்கள் பேச்சு நின்றது. இனியனும் சாப்பிட வந்து அமர்ந்தான். கோகுல், “ஏன் பாஸ் பிரியாணி மட்டும் இவ்ளோ கம்மியா இருக்கு!!” என்று குறைபட, “நைட் டைம்ல ஹெவியா சாப்பிட கூடாது கோகுல், டைஜெஸ்டிவ் ப்ரோப்ளம் வரும்! இன்னைக்கு ருசிக்காக கொஞ்சமா சாப்பிடுங்க, இன்னொரு நாள் லஞ்சுக்கு புல் கட்டு கட்டிடலாம்!!” சமாதானம் சொல்ல, இப்போதே வர போகும் நாளை நினைத்து கோகுல் நாவில் எச்சில் சுரந்தது.

அப்போது பிறர் கவனம் கலையாதபடி, கோகுலின் காலை சுரண்டினாள் நிவேதா.  “ஏய் எதுக்கு என் காலை….?” அவன் கத்தும்முன் குறுக்கிட்ட நிவேதா, “கோழி கால் வேணுன்னா எடுத்துக்கோ, நான் தொடல!” என்று சமாளிக்க, கண்களால் ‘வாயை மூடு’ என எச்சரித்தாள்.

பின்னே மெல்லிய குரலில், “எதுக்குடா கத்திதொலைக்குற?” என்றாள் கடுப்பாய். “இதே நான் உன் காலை சுரண்டிருந்தா கம்முன்னு இருந்துருப்பியா? மாட்ட தானே?” என்றான். அவன் சொல்வது உண்மை என்பதால் அவள் பதில் பேசாது இருக்க, “எதுக்கு சுரண்டுன சொல்லு!” என்றான் கோகுல்.   

“அண்ணா டாக்டரா?” என்றதும், பொங்கிய சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிய கோகுல், “எப்படி கண்டுபிடிச்ச?” என்றான்.  “டைஜெஷன் பத்தி சொன்னாரே! அதவச்சு கண்டுபிடிச்சேன்!!” என்று சொன்னாள் நிவேதா.

அந்நேரம் நிலா, “என் துணியெல்லாம் எங்க? அந்த கூடைல இருந்துச்சே!!” என்றாள். “எல்லாம் துவச்சு, ஐயர்ன் செஞ்சு பீரோல அடுக்கிட்டேன்!” என்ற இனியனை மூவரும் ஆச்சர்யமாய் பார்த்தனர். நிவேதாவிடம், “இப்போ என்ன தோணுது?” கோகுல் மெதுவாய் கேட்க, “சம் டெக்ஸ்டைல் பிசினெஸ்!?” என்றிட, “ம்ச்! பிரிலியன்ட்” என புகழ்ந்தான் கோகுல். தான் சரியாய் கண்டுபிடித்துவிட்டதாய் நிவேதா நினைத்துக்கொண்டு ஹேண்ட் வாஷ் செய்ய நகர்ந்தாள்.

நிலா இனியனிடம் “வாஷிங் மெசின் ரிப்பேர் செய்யணும்! அதான் துவைக்கல!” என்றதும், “மெஷின் நல்லாதான் இருக்கு! சுவிட்ச் போர்ட்ல தான் லூஸ் கனெக்ஷன்! நானே சரி பண்ணிட்டேன்!!” என்றான் இனியன்.

‘மறுபடியுமா?’ என்று பார்த்தாள் நிவேதா. கோகுலுக்கு நல்ல டைம் பாஸானது.  எழுந்து அவளருகே சென்றான். நிவேதா, “ஒரு வேளை, ஏதாது பெரிய கம்பெனில சீனியர் மெக்கானிக்கா இருப்பாரோ?” தன் சந்தேகத்தை அவனிடமே கேட்க, “லூசான வொயரை முறுக்கி விடுறதுக்கு சீனியர் மெக்கானிக்கா இருக்கணுமா? ஹும்ம் எல்லாம் நேரம்!!” என்று புலம்பினான் கோகுல்.

முடிவில் சலித்து போனவள், “என்னால கண்டுபிடிக்க முடில, நீயே சொல்லு!” என்று இறங்கி வந்தாள். “அப்போ நான் தோத்துட்டேன்! ஐயம் அ லூசர்ன்னு மூணு முறை சொல்லு!!” என்றான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி. முதலில் ‘முடியாது’ என மறுத்தவள், பின்னே, ‘சொல்லி தொலைப்போம்’ என்று முடிவு செய்து அதே போல் சொன்னாள்.

“இப்போ சொல்லு, அண்ணா என்ன வேலை பார்க்குறாங்க?” ஆர்வமாய் அவள் கேட்டதும் பதிலை பாட்டாகவே பாடினான் கோகுல்.

“வேலை இல்லாஆஆஆ!! பட்டதாரிஈஈ!! தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறீஈஈ!!” என்றதும், “வாட் டூ யூ மீன்!!??” என அதிர்ந்து கேட்க, “ஐ மீன் வாட் ஐ மீன்” என்று சொல்லி சிரித்தான் கோகுல்.

இனியன், “என்ன உங்களுக்குள்ள பேசி சிரிக்குறீங்க? சொன்னா நாங்களும் சிரிப்போமே!?” என கேட்க, சிரித்துக்கொண்டே, “நீங்க என்ன வேலை பார்குரீங்கன்னு மேடம் இவ்ளோ நேரமா கெஸ் பண்ணிட்டு இருந்தாங்க! வேலைன்னு ஏதாது இருந்தா தானே கண்டுபிடிக்க முடியும்” சொல்லிவிட்டு கோகுல் மேலும் சிரிக்க, “ஹோ!” என்ற இனியன், முகம் மாறாது மௌனமாய் சிரித்தான்.

ஆனால் இதை கேட்ட நிலாவுக்கு தான் கோவம் மூக்கின் மேல் வந்தது. “கோகுல்??” அவள் தன் பெயரை உச்சரித்த விதத்திலேயே அவளது கோவம் தெரிந்துவிட கப்சிப்பென வாயை மூடிக்கொண்டான்.

நிவேதா, “நீங்க வேலைக்கு போகலையா அண்ணா?” என்றதும் இனியன் பதில் சொல்லும்முன், “அவர் யூ.பி.எஸ்.ஈ எக்ஸ்சாம்க்கு ப்ரிபேர் ஆகிட்டு இருக்காரு! சீக்கிரமே ஒரு குட் நியூஸ் சொல்லுவாரு!!” என்றாள். அதற்கு மேல் பேசாதே என்பது போல இருந்தது அவள் பதில். இனியனுக்கு உள்ளுக்குள் குற்றால அருவியில் குளித்தது போல அப்படி ஒரு இதம், தனக்காக நிலா பேசியதில்.

அதன் பின்னே சிறு சிறு பேச்சுக்களுடன் நேரம் ஓடிட, விடைபெற்று கிளம்பினர் நிவேதாவும் கோகுலும். அதன் பின் தன் மடிக்கணினியில் சிறிது நேரம் வேலைசெய்துக்கொண்டிருந்தாள் நிலா. பாத்திரங்களை ஒழுங்கு படுத்தி சுத்தம் செய்து வைத்துவிட்டு நிலாவின் அருகே வந்து உட்காந்தான் இனியன்.

அவள் மும்மரமாய் வேலை செய்யும் அழகை பார்த்துக்கொண்டே அவன் அமர்ந்திருக்க, “என்ன லுக்கு?” அவனை பார்க்காமலே கண்டுபிடித்தாள் நிலா. உரக்க சிரித்தவன், “உனக்கு காதுலையும் கண்ணு இருக்குன்னு தெரியாம போச்சே!” என்றான். லேப்டாப்பை மூடிவிட்டு அவனை பார்க்கும்படி திரும்பி அமர்ந்துக்கொண்ட நிலா, அவனையே பார்த்தாள்.

ஒரு நிமிடம் வரை பொறுத்த இனியன், அவள் பார்வை விலகாததால், “என்ன நிலா?” என்றான். பதில் சொல்லாமல் பார்வை தொடரவே, அவள் கண்களை உற்று பார்த்தவன், “உன் கண்ணு என்கிட்ட ஆயிரம் கேள்வி கேக்குது!” என்றான் அவள் கண்களை ஆழமாய் பார்த்தபடி.

“அப்போ பதில் சொல்லு!!” என்றாள் நிலா. “ஹாஹா!!” சிரிக்க மட்டுமே செய்தான். நிலாவின் பார்வை கணைகள் முடிவின்றி அவனை தொடர, “ஏன் இத்தனை வருஷமா வேலைக்கு போகலன்னு கேக்குற? அதானே!!” என்றுவிட்டு, எழுந்துக்கொண்டான். சில அடிகள் நடந்து சென்று தன் பின்னே கைகளை கட்டிக்கொண்டு விட்டத்தை வெறித்தான்.  பின் ஆழ மூச்செடுத்து தன்னை திடப்படுத்திகொண்டவன், “கிடைக்கல! அதான் போகல!” என்று சொன்னதும் என்னவோ வரும் என எதிர்ப்பர்த்தவளுக்கு சப்பென்று ஆனது. சின்ன கோவத்தில் சோபாவில் இருந்த குட்டி தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள். அதை கைகொண்டு அவன் தட்டிவிட, நிலாவின் முகத்திலேயே மோதி கீழே விழுந்தது. இதை கண்டு இனியன் சத்தமாய் சிரிக்க, முறைக்க முயன்று தோன்ற நிலா, வாய்விட்டு சிரித்தாள். அவள் சிரிக்கும் அழகை தன் அகப்பெட்டியில் பொதித்துக்கொண்டான் இனியன். தன்னால் மறைந்துபோன இந்த சிரிப்பு, இனி ஒருநாளும் மறைய கூடாது என அவன் மனம் உறுதிப்பூண்டது.

அன்றைய இரவு இருவருக்கும் நிம்மதியான உறக்கத்தை கொடுத்தது. காலையில் நிலா எழுந்திருக்கும்போது இனியன் அவள் அருகில் இல்லை. பல் துலக்கிவிட்டு அவள் கிட்செனுக்குள் சென்றாள். அங்கும் இனியனை காணவில்லை.  ‘எங்க போனான்?’ காய்ச்சி இருந்த பாலில் போன்விட்டாவை கலந்து எடுத்துக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். பால்கனியின் ஓரம் அரவம் தெரியவே அங்கே செல்ல, வியர்வையில் குளித்தபடி மாங்கு மாங்கென தண்டால் எடுத்துக்கொண்டிருந்தான் இனியன்.

சட்டென அவளின் சிறுவயது நியாபகம் வந்து நிழலாடியது. அதுபோலவே இப்போதும் செய்ய சொல்லி அவள் உள்ளம் பரபரக்க, அவன் கேப் விட்ட சமயம் அவன் முதுகின் மீது  தாவி சம்மணமிட்டு உட்கர்ந்துக்கொண்டாள் நிலா. அவளது அதிரடி செயலில் திடுகிட்ட இனியனுக்கும் அடுத்த சில நொடிகளிலேயே அவர்களின் சிறுவயது விளையாட்டு நியாபகம் வந்தது.

இருப்பினும் வெளியில், “இப்படி அரிசி மூட்டை மாறி முதுகுல உட்காந்தா எப்படி என் முதுகெலும்பு தாங்கும்?” என்றான் விளையாட்டாய்.

காலை நேர புத்துணர்ச்சியில், சிறுபிராய நினைவும் சேர்ந்து நிலாவுக்கு சந்தோஷ மனநிலையை கொடுத்தது. அவன் விளையாட்டு பேச்சுக்கு, “அவனவன் பொண்டாட்டியை  கண்ணுல வச்சு தாங்குரானுங்க! உன்னால என்னை முதுகுல வச்சு தாங்க முடியாதா?” அவளும் விளையாட்டாய் பதில் சொல்ல, “தாங்கிட்டா போச்சு!!” என்ற இனியன், தம்கட்டி அவளை முதுகில் வைத்துக்கொண்டு தண்டால் எடுக்க தொடங்கினான்.

“ஒன்னு, இரண்டு, மூணு…” நிலா ஒவ்வொன்றாய் எண்ண, எட்டுக்கு மேல் செல்லும்போது இனியனுக்கு நாக்கு தள்ளியது. நிலாவுக்கு குஷி தாளவில்லை. “ஆம்பளை சிங்கத்துக்கு என்னாச்சு!! பத்து கூட இன்னும் வரல, அதுக்குள்ள நாக்கு தள்ளுது போல!” பரிகாசமாய் அவள் சிரிக்க, “சிரி..க்கா…த நிலா!” இனியன் எச்சரிக்க, வேண்டுமென்றே சத்தமாய் சிரித்தாள் நிலா.

அவள் சிரிப்பு நொடிக்கு நொடி எக்காளமாய் கேட்க, குனிந்து தண்டால் எடுத்துக்கொண்டிருந்த இனியன், படக்கென முன்பக்கமாய் திரும்பினான். அவன் அப்படி செய்வான் என எதிர்பார்த்திராத நிலா, பேலன்ஸ் இன்றி அவன் மீதே விழுந்தாள். விழுந்தவளை தன்னோடு இறுக்க அணைத்துக்கொண்ட இனியன், அவள் வெளிறிய முகத்தை ரசித்தபடி, “தண்டால இப்போ எடுக்குறேன், பாரு!?” என்றுவிட்டு அவளை கீழே கிடத்தினான்.

அவள் இருபுறமும் கையை ஊன்றியவன், அவன் முகத்தை உரசியபடியே தண்டால் எடுத்தான். குனியும்போது அவன் மீசை அவள் உதட்டை உரச, கூச்சம் எடுத்தது. முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள் நிலா. இப்போது மீசை அவள் கழுத்தை உரச, அது அதிக கூச்சத்தை கொடுத்தது. ஒவ்வொருமுறை குனியும்போதும் அவன் முழு உடலும் தன் மேல் உரசுவதை போல உணர்வை கொண்டாள் நிலா. எழுந்து செல்லலாம் என்றாலும், முழுதாக அவன் மீது உரசிய பின்னரே செல்ல முடியும் என்றதால் வழின்றி அசையாமல் படுத்திருந்தாள். மேலும் அவளுக்கு எழுந்துக்கொள்ள மனம் வரவில்லை, அவனை திட்ட சொல்லி மூளை சொன்னாலும், பேச வார்த்தையும் வரவில்லை.       

நேரம் கடக்க, அவன் உரசுவது மட்டும் அதிகரித்துக்கொண்டே போவது போல தோன்றியது நிலாவுக்கு. அவனது சூடான மூச்சுக்காற்று அவன் நெருங்கும்போது அவள் மீது பட்டு தீ மூட்டியது. அவள் உணர்வுகளும் தன் கட்டுப்பாட்டை இழந்து அவன் நெருக்கத்தில் கரைந்துக்கொண்டிருந்தது.

அப்போது எங்கிருந்தோ, “என்ன பண்ணின்டுறுக்கேள்?” என்ற பதட்டமான குரல் கேட்க இருவரின் உணர்வுகளும் சட்டென வடிந்தது. ‘யாரந்த கரடி?’ என இனியன் தேட, கிடைத்த இடைவெளியில் அவனை தள்ளிவிட்டுக்கொண்டு உள்ளே ஓடி மறைந்தாள் நிலா.

‘ஏய்!’ இனியனுக்கு சிரிப்பு வந்தது. இப்போது சுவாதீமாய் அந்த சிவபூஜை கரடியை அவன் தேட, கிளிக் கிளிக் என சிரித்து தன் இருப்பை காட்டினார் நேரெதிரே பால்கனியில் இருந்த மாமி.

“நீங்களா மாமி?” இனியன் கேட்க, “இப்படி காலங்காத்தால பால்கனில என்ன பண்ணின்டுருக்கேள்?” என்றார்.

“உடற்பயிற்சி உடல்நலனுக்கு உகந்ததுன்னு படிச்சதில்லையா?” என்றதும், “அது நன்னா தெரியும் நேக்கு! ஆனா நீங்க செஞ்சதா பார்த்தா எக்ஸ்சர்சைஸ் மாறி தெரியலை!” மாமி சொல்லவே, “புருஷன் பொண்டாட்டி சேர்ந்து பண்ற எக்ஸ்சர்சைஸ் இது! ஏன் உங்களுக்கு தெரியாதா?” என்றான் இனியன்.

“ஹும்ம்!! நேக்கு என்ன தெரியர்து?” அவர் சலித்துக்கொள்ளவே, “மாமா எங்க?” என்றான் இனியன். “அவர் எங்க வீட்ல தங்குறார்? எந்நேரமும் ஆபிஸ் தான்!!” அவர் சலிப்பு அதிகமானது.

“சரி, என் பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பனும், நான் போறேன்!!” மாமி நகர, “எத்தனை பசங்க மாமி?” என்றான்.

“அது இருக்கு, மூணு!” என்றதும், “அட! மாமா அவர் டியூட்டியை ஒழுங்கா முடிச்சுட்டு தானே ஆபிஸ் போயிருக்காரு!” இனியன் சொல்ல, “போடா அம்பி!” வெட்கத்தோடு விருட்டென உள்ளே ஓடிவிட்டார் மாமி.

சிரித்துக்கொண்டே உள்ளே சென்று காலை டிபன் வேலையை கவனித்தான் இனியன். நிலா அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காது உணவை வாய்க்குள்ளே தள்ளிக்கொண்டு கிளம்ப, கதவருகே சென்றவளை கைபிடித்து நிறுத்தினான் இனியன். அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிலா. இருவிரலில் பிடித்து வைத்திருந்த குங்குமத்தை அவள் நெற்றி வகிட்டில் அழுத்தமாய் வைத்துவிட்டான் இனியன்.

“இப்போ எதுக்கு இதை வைக்குற?” நிலா  சொர்ணாக்கா போல் மிரட்டினாள்.

-தொடரும்…      

Advertisement