Advertisement

*10*

பொட்டைகோழி புடிக்கவா? முறைப்படி சமைக்கவா?

எலும்புதான் கடிக்கையில் என்னைக்கொஞ்சம் நினைக்கவா?

“அண்ணனுக்கு அவரோட அரசியல் வாரிசா என்னை ஆக்கனும்ன்னு ரொம்ப நாள் ஆசை. வர தேர்தல்ல எனக்கு சீட் வாங்கி தரதா சொல்லிருந்தாரு. அது விஷயமா தலைவரை நான் ஒருமுறை நேர்ல சந்திச்சா நல்லா இருக்கும்ன்னு அவர் பிரியப்படவும், நான் டெல்லி கிளம்பி போனேன்! ஆனா திரும்பி வரதுக்குள்ள?” பேசிக்கொண்டிருந்தவர் மைக்கை விட்டு நகர்ந்து கண்ணை துடைத்தார்.

மீண்டும், “எல்லாரும் என்னை ஒரே நாள்ல அனாதை ஆக்கிட்டு போய்ட்டாங்க! இனிமே எனக்குன்னு யாரு இருக்கா? எனக்கு அரசியலும் வேணாம் ஒன்னும் வேணாம்!!” அவர் அழுகையை அடக்க முடியாமல் கதறி அழ, வீடியோ அதோடு நிறுத்தப்பட்டு, “அமைச்சர் சதாசிவத்தின் சகோதரர் திரு. ஜெயானந்தன் உருக்கமாக பேசிய இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது” என்றார் செய்தி வாசிப்பாளர். மதிய நேர செய்தி வேளையில் விசில் சத்தம் இனியனை தொந்தரவு செய்தது.

டிவியை ஆப் செய்துவிட்டு எழுந்து கிட்செனுக்குள் புகுந்தான். சூடான சாதம், முள்ளங்கி சாம்பார், கேரெட் பொரியல் என சமையல் மேடை கமகமத்தது. காலை வரை பேச்சும் சத்தமுமாய் இருந்த வீடு இப்போது பின் டிராப் சைலென்சில் நல்ல பிள்ளையாய் இருந்தது. தட்டில் வேண்டியது எடுத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்த இனியனுக்கு காலை உணவு நேரம் நியாபகம் வந்தது.

“நீ மட்டும் ஏன் நிக்குற? வந்து சாப்பிட உட்காரு இனியா” வேணி சொன்னதும், அதியன் அருகே வந்து அமர்ந்தான் இனியன். அவனுக்கு வேண்டிய பதார்த்தங்களை பரிமாறிய தேவி, “இன்னும் ஒரு வாரம் உனக்கு லீவுன்னு குரு அண்ணா சொன்னாரே!” என்றார் எங்கோ பார்த்தபடி.

கேள்வி தன்னிடம் தான் என புரிந்த நிலா, “நான் லீவே கேக்கலையே?!” என்றாள். தேவி சங்கடமாய் முழிக்க, “ஏன் கண்ணு, இந்த ஒரு வாரம் லீவு இருந்தா நீங்க தேனிலவு போக வசதியா இருக்குமுல்ல?” என்றார் வேணி.

இனியன் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கிகொண்டான். தேனிலவு என சொன்னதும் நிலாவின் கண்கள் இனியனை தான் சந்தித்தன. அவன் சிரிப்பை அடக்குவதை கண்டு முறைத்த நிலா, “அதெல்லாம் வேணாம்!” என்றாள் வேணியிடம்.

“புதுசா கல்யாணம் ஆன எல்லோரும் போறது தானே?” வேணி விடாமல் கேட்க, “விருப்பப்பட்டவங்க போவாங்க! எனக்கு விருப்பம் இல்ல! வேணுனா இனியனை போயிட்டு வர சொல்லுங்க!” என்றாள்.

கோகுல், “திருமண வரலாற்றில் முதன் முறையாக தன் தேனிலவுக்கு தான் மட்டுமே சோலோவாக போக போகும் அரியவகை உயிரினம் இனியன் இளஞ்செழியன்” சொல்லிவிட்டு சிரிக்க, அதியனும் சிரிக்க, இருவரும் ஹைபை கொடுத்துக்கொண்டனர்.

அதை கண்டுக்கொள்ளாத வேணி, ஆழ்ந்த யோசனைக்கு போனார். நிலா தன் ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு கோகுலுடன் கிளம்பி வாசலுக்கு சென்றபோது, “ஒரு நிமிஷம் நில்லுமா!” என்று அவளை நிறுத்தினார் கிருஷ்ணவேணி.

வேணி, “ஊருல மாடு கோழி எல்லாம் பக்கத்து வீட்டுக்காரங்களை பார்த்துக்க சொல்லிட்டு வந்துருக்கேன், அடுத்தவங்களுக்கு ரொம்ப சிரமம் குடுக்க கூடாது இல்லையா? அதனால இன்னைக்கு மதிய ட்ரெயினுக்கே கிளம்புறோம்!” என்றார். தேவி, “ஏன் அதுக்குள்ள?” என்றிட, நிலாவோ, “டிக்கெட் புக் பண்ணித்தரட்டா?” என்றாள்.

வேணி, “ம்ம்! போட்டுக்குடேன்!” என்றதும் தன் மொபைலை கையில் எடுத்தாள் நிலா. தேவி சைகையாலே ‘ஏன்? என்ன?’ என்று வினவ, கண்களாலேயே அவரை ‘அமைதியாய் இரு’ என அதட்டினார் வேணி.   

பின், “பேரு சொல்லவா கண்ணு? நானு, கிருஷ்ணவேணி வயசு 48, இவன் அதியன் நெடுமாறன் வயசு 27. போட்டுகிட்டியா? அடுத்து தேவிபாலா வயசு 45” அவர் முடிக்க, அதுவரை வரிசையாய் பதிவு செய்துக்கொண்டு இருந்தவள் திடுகிட்டாள். சட்டென நிமிர்ந்து, “என் அம்மா பேரு எதுக்கு?” என்றாள்.

“உன் அம்மா தான் நேத்து நைட்டெல்லாம் ஒரே பொலம்பல். இந்த ஊரே பிடிக்கல, ஜனங்களே பிடிக்கலன்னு. அதான் கொஞ்ச நாள் ஊருக்கு கூட்டிட்டு போய் வச்சுக்கலாம்ன்னு!” என்றதும், ‘அப்படியா?’ என்பது போல தேவியை பார்த்தாள் நிலா. வேணியின் விழி மொழியை புரிந்துக்கொண்ட தேவி, ‘ஆமா ஆமா’ என மண்டையை நாலாப்பக்கமும் உருட்ட, வேறுவழியின்றி அவருக்கும் சேர்த்து டிக்கெட்டை போட்டாள் நிலா.

வேணி, “அப்பறம் ஒரு விஷயம்! உங்க கல்யாணம் காதும் காதும் வச்சமாறி கமுக்கமா நடந்துடுச்சு! ஊரு வாயில அவலா நம்ம சிக்குறதுக்குள்ள நம்மலே ஒரு வரவேற்ப்பு வச்சு கல்யாணத்தை பகிரங்கப்படுத்திகிட்டா நல்லதுன்னு நினைக்குறேன்! நீ என்ன சொல்ற தேவி?” என்றதும், தேவியின் கண்கள் நிலாவை நோக்கின.

“இனியன் என் புருஷன், நான் அவன் பொண்டாட்டி எங்களுக்கு தெரிஞ்சா போதாதா? ஊருக்கே எதுக்கு காட்டிக்கனும்?” கடுப்பாய் அவள் கேட்க, “ஊருக்கே சொல்லனும்ன்னு தேவை இல்லைதான் கண்ணு! ஆனா நீ ஒரு ஆம்பளையோட வீட்ல ஒண்ணா இருக்கன்னு மூக்கு வாய் வச்சு நாலு பேரு பேசுனா அந்த அவமானம் உன்னோட போய்டாது! எங்களையும் அது சாரும்! அதுக்காக தான் எல்லோரும் கல்யாணத்தை ஊரை கூட்டி ஜாம் ஜாம்ன்னு நடத்துறாங்க!!” என்றார்.

வழமைபோல அவர் பேச்சில் இருந்த நிதர்சம் புரிய, “இப்போ ஒரு புது ப்ராஜெக்ட் எடுத்துருக்கேன்! அது முடிக்குறவரைக்கும் நான் பிசி! அதுக்குபிறகு வேணுன்னா பார்த்துக்கலாம்!!” என்றாள் நிலா.  

“உன் வேலையும் முக்கியம் தான்! சரி, அதிகபட்சம் ரெண்டு மாசம் எடுத்துக்கோ! அதுக்குள்ள ஒரு நாள் முடிவு பண்ணி சொல்லு! அன்னைக்கே சென்னைல வரவேற்ப்பு வச்சுடலாம்!” என்றதும், “நான் ஒரு நாள் சொல்லுவேன், நீங்க நல்ல நேரம் இல்ல, நல்ல நாளு இல்லன்னு அதை மாத்துவீங்க” என்றாள் திருமண தேதியை அவர் மாற்றியதை மனதில் வைத்து.

அதை புரிந்தகொண்ட வேணி, சிரித்துக்கொண்டே, “வரவேற்ப்பை சாயங்காலமா தான் வைப்போம்! பொழுது சாஞ்சு ஆறு மணி கடந்துட்டா நல்ல நேரம், கெட்ட நேரம்ன்னு ஒன்னு கிடையாது! அதனால நீ ஒரு தேதி சொல்லு! அன்னைக்கே வச்சுக்கலாம்!” என்றார்.

எந்த கேட்டை மூடினாலும், சாவியே இல்லாமல் திறக்கும் தன் அத்தையின் வார்த்தை திறனை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள் நிலா. பின்னர் அவரே, “எங்க ஊர்காரங்களுக்கு ஒரு நாள் கறிவிருந்து மாறி வச்சு விஷயத்தை சொல்லிக்கலாம்! அது பிரச்சனையில்லை!” அவள் அடுத்து கேட்கபோவதர்க்கும் சேர்த்து பதில் சொல்லிவிட்டார்.       

இதற்குமேல் மறுக்க ஒன்றும் இல்லாததால், “சரி நான் கிளம்புறேன்” என்ற பொதுவான விடைபெருதளோடு அவள் மறைந்துவிட, “என்கிட்ட சொல்லவே இல்லையே அம்மா, கிளம்புரீங்கன்னு” என முகம் சுருக்கினான் இனியன்.

தேவி அதற்குள், “எதுக்கு என்னையும் வர சொல்லுற?” என்றார். அங்கிருந்த சோபாவில் அமர்ந்து ஒரு பாட்டில் தண்ணீரை அவர் காலி செய்யும் வரை, அவர் முகத்தையே பார்த்திருந்தனர் மூவரும்.

பின், “புதுசா கல்யாணமானவங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க, பழகிக்க தனிமை அவசியம். அதுக்காக தான் தேனிலவு அனுப்புறது. நிலா நான் எங்கயும் போக மாட்டேன்னு சொல்லிட்டா!! அப்போ வீட்லயே அவங்களுக்கு தனிமை கொடுத்துட வேண்டியது தான்!! நீ இருந்தன்னா, அவ எது வேணுன்னாலும் உன்னையே தான் கேட்பா! இப்போ ரெண்டு பேரு மட்டும் வீட்ல இருந்தா வேற வழியே இல்ல, ரெண்டு பேரும் பேசியே ஆகணும்! ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து தான் இருக்கணும்!” வேணி சொல்லிமுடிக்க, இனியனை தள்ளிவிட்டுகொண்டு ஓடிவந்து வேணியை கட்டிக்கொண்டான் அதியன்.

“அம்மா அம்மா!! நீ வேற லெவல் பண்றம்மா!! எல்லா ஐடியாவும் அண்ணனுக்கே யூஸ் பண்ணிடாத! எனக்கும் இதுமாறி விதவிதம்மா யோசிச்சு வை!!” அதியன் கட்டிக்கொண்டே கொஞ்ச, அவனை நகர்த்திவிட்டவர், “ போடா படவா! பெட்டி எடுத்து வை, சாப்டுட்டு ரெயில்வே ஸ்டேஷன் போனா சரியா இருக்கும்!” என்றார். மூவரும் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிட, இனியன் அந்த ஹாலில் தனித்து விடப்பட்டான்.  

காலையில் நடந்ததை சாப்பாட்டோடு சேர்த்து அசைபோட்டு முடித்தவன், சிங்கில் இருந்த பாத்திரங்களை கழுவலானான். வேலை முடிந்ததும், வீட்டை சுற்றி சுற்றி நடந்து பொழுதை தள்ள, அவன் கண்களில் பட்டது அந்த அழுக்கு கூடை. திறந்து பார்த்தான். ஒரு மாச துணியையும் அதில் அடைத்து வைத்திருந்தாள் நிலா. அப்போது ‘வாசிங் மெசின் ரிப்பேரா இருக்குப்பா’ என்ற தேவியின் குரல் நியாபகம் வந்தது.

‘மேடம்க்கு துவைக்க கூட நேரம் இல்லப்போலருக்கு’ மொத்த துணியையும் சிறு மூட்டை போல கட்டிகொண்டவன், வாசிங் சோப்போடு வீட்டை பூட்டிவிட்டு மாடி ஏறினான். மொட்டை மாடியில் இருந்த சலவை கல்லில் துணியை எடுத்து துவைக்க ஆரம்பித்தான் இனியன். மதிய வெயிலில் அவன் மாங்கு மாங்கென துவைக்க, அதை எதேச்சையாய் தன் வீட்டு பால்கனியில் இருந்து மாமி பார்க்க, அடுத்த ஐந்தாவது நிமிடம் மகளிர் அணி மொட்டைமாடியில் மீட்டிங் போட்டது.       

வந்தவர்களை கவனிக்காமல் கருமமே கண்ணாய் துவைதுக்கொண்டிருந்தான் இனியன். அவர்களும் ஜாடை மாடையாய் ஏதேதோ பேச, பலன் பூஜ்யம்! கடைசியில் நேரிடையாகவே, “ஏன்டா அம்பி, நீ எந்த ப்ளாட்டு?” என்றார் மாமி.

“இந்த பிளாட்டு தான்!” என்றுவிட்டு வேலையை தொடர்ந்தான். ‘குசும்ப பார்த்தியா?’ என கண்களால் பேசிக்கொண்ட பெண்கள், “இந்த பிளாட்டுதானுட்டு தெரியர்து! பின்ன, பக்கத்து பிளாட்டு காரனா வந்து நம்ம மொட்டை மாடில துணி துவைப்பான்? நான் கேட்டது, பிளாட் நம்பர்!” என்றதும், “நம்பர்? தெரியலையே?” என்றான் இனியன்.

“தெரியலையா? சரி யார் ஆத்துக்கு வந்துருக்கே?”

“நிலா வீட்டுக்கு!” அவன் சொன்னதும், அவர்களுக்குள் குசுகுசுவென பேச்சுக்கள் தொடர்ந்தது. அரசல்புரசலாய் சில விஷயங்கள் கேள்விபட்டிருந்தாலும் அதை நேரிடையாக தெரிந்துகொள்ளும் பொருட்டு, “கெஸ்ட்டா வந்துருக்கேளா?” என்றான் மாமி.

“இல்ல” தயங்கியவன், “நான் நிலாவோட ஹஸ்பென்ட்” என்றான். அவர்கள் ஆச்சர்யபடுவதை போல காட்டிக்கொண்டு, “அவளுக்கு கல்யாணம் ஆச்சா? எங்க யாருக்குமே சொல்லலியே” என்றார்.

“இது அவசரமா நடந்தது, முக்கியமானவங்களுக்கு மட்டும் சொல்லி பண்ணுனோம்!” என்றதும், ‘பாத்தியா? அப்போ நம்ம முக்கியமானவங்க இல்லன்னு சொல்லாம சொல்றாரு! அந்த ராங்கிக்கு ஏத்தவன் தான்’ தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இனியனை பற்றிய விவரங்களை கேட்க சொல்லி பட்டாளம் மாமியை தூண்டியது.

“என்ன வேலை பண்றேள்?” என்ற மாமியின் கேள்விக்கு, “துணி துவைக்குறேன்!” என்றான் இனியன். “ஹும்! நான் அதை கேட்கலை! என்னை உத்யோகம் பார்க்குறேள்ன்னு கேட்டேன்!” தெளிவாய் மறுபடி கேட்க, “ஏன் துணி துவைக்குறது நல்ல உத்யோகம் இல்லையா?” அவரையே திருப்பி கேட்டான் இனியன் சிரியாமல்.

‘இந்த கேள்வியே வேணாம்!’ என முடிவு செய்த மாமி, அவனை கலாய்க்க எண்ணி, “யார் துணி இதெல்லாம்?” என்றார்.

“என் பொண்டாட்டியோடது!” கொஞ்சமும் கூச்சமின்றி சொல்லிக்கொண்டே துவைப்பதை தொடர்ந்தான்.

“பொம்மனாட்டி துணியெல்லாம் இப்டி யாராது துவைப்பாலா?” என்றிட, “ஹோ! அப்போ நீங்கெல்லாம் துவைக்காம தான் தினமும் புடவை கட்டுறீங்களா? எலி செத்த வாடை வரும்போதே நினச்சேன்!” என்றான் சீண்டும்படி சிரித்துக்கொண்டு.

மாமி ‘புசுபுசுவென’ மூச்சுவிட்டார். இதற்குமேல் எந்த கேள்வி கேட்டாலும் குசும்பாகதான் பதில் வரும் என அவன் முகத்தை கண்டே உணர்ந்தபடியால் தன் கெத்தை காப்பார்த்திக்கொள்ள வேண்டி தன் படையோடு அங்கிருந்து ஓடியே விட்டார் மாமி. அவர்கள் சென்றதும் அலசிய துணியை பிழிந்து காயப்போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றான் இனியன். ஒரு குட்டி தூக்கம் போடலாமா? என்று நினைத்தவன் அதை செயல்படுத்த தன் அறைக்குள் நுழைந்தான்.

“ஹே புதுபொண்ணு? என்ன அதுக்குள்ள ஆபிஸ் வந்துட்டீங்க?” இம்ரான் நிலாவை கண்டதும் உற்சாகமாய் கேட்க, “நான் வந்ததுல ஏதாது ப்ரோப்ளமா? இல்லல? உங்க வேலையை பாருங்க சர்!!” என அவர் பேச்சை கட் செய்தாள் நிலா.

கோகுல் வேறொரு ஆர்டிகிளுக்காக போட்டோஷூட்க்கு சென்றிருக்க, நிலா மட்டுமே ஆபிசுக்கு வந்துருந்தாள். அவள் வந்து சீட்டில் அமர்ந்ததும், எடிட்டர் குருநாதரிடம் இருந்து அழைப்பு வந்தது. கதவை இருமுறை தட்டிவிட்டு அவர் அறைக்குள் செல்ல, “ஹல்லோ நிலா அக்கா!! நான் ஒரு வாரம் ஊருல இல்ல! அந்த கேப்ல நீங்க கல்யாணமே பண்ணிட்டீங்கள்ள? என்னை கூப்பிட கூட இல்ல?” படுஉற்சாகமாய் அவளை வரவேற்றாள் எடிட்டரின் மகள் நிவேதா. அவள் உற்சாகம் சிரிப்பாய் நிலாவின் முகத்தை ஆட்கொண்டது. நிலா இயல்பாய் பேசும் ஒரே ஜீவன் நிவேதா தான்.

“லாயர்க்கு நிறைய வேலை இருக்கும்! என்னமாறி ரிபோர்ட்டர் கல்யாணத்துக்கு எல்லாம் டைம் ஒதுக்கி வருவாங்களா? அதான் டிஸ்டர்ப் பண்ணல!!”  சிரிப்போடு நிலா சொல்ல, “அக்கா!! கிண்டல் பண்ணாதீங்க!” என சலுகையாய் அவள் தோளில் சாய்ந்துக்கொண்டாள் நிவேதா.

குருநாதன், “இவ்ளோ நேரமும் உன்னை பார்க்கனும்ன்னு ஒரே அடம்! உன் வீட்டுக்கு வரலாம்ன்னு கிளம்புனப்போ தான் நீயே வந்துட்ட!” என்றிட, “நான் அக்காவ மட்டும் தானே பாத்தேன்! இன்னும் மாமாவ பார்க்கலையே! அதும் இல்லாம கல்யாண விருந்தும் எனக்கு கிடைக்கல! சோ இன்னைக்கு டின்னர் அக்கா மாமா கூட தான்!!” என்றாள் நிவி.

“நிவி, அவங்களை தொல்லை பண்ண கூடாது! நம்ம இன்னொரு நாள் பார்த்துக்கலாம்!” எடிட்டர் கண்டுக்கும் போதே, “எடிட்ஜி! எனக்கு ஒரு தொல்லையும் இல்ல! நானே இவளை கூட்டிட்டு போறேன்!!” என்றாள் நிலா.

“மை ஸ்வீட் டார்லிங்” நீவி நிலாவின் கன்னம் கிள்ளி கொஞ்ச, “அவ உனக்கு மட்டும் தான் ஸ்வீட்! எங்களுக்கெல்லாம் காரம்” என்று சிரித்தார் எடிட்டர் குருநாதன்.

தன் கேபினுக்கு சென்று செய்யவேண்டிய வேலையை பற்றிய குறிப்புகளை தயார் செய்து முடித்தாள் நிலா. பின்னர் அமைச்சரின் சகோதரர் ஜெயானந்தன் போலீசிடம் கொடுத்த பேட்டியை பலமுறை ரீவைன்டு செய்து பார்த்து அடுத்த ஆர்டிக்கிளுக்கான யோசனையில் ஆழந்துபோனாள்.

பின்னர் மதிய உணவு நேரம் கடந்து போய்விட, இனியனின் நினைவு வந்தது. உடனே அலைபேசியில் அவனை தொடர்புகொண்டாள். அந்நேரம் தான் இனியன் வேலையெல்லாம் முடிந்து தூங்கலாம் என அறைக்குள் புகுந்தது. நிலாவின் அழைப்பு என்றதுமே உடனே இயக்கி காதில் வைத்தான்.

“நான் எடிட்டர் பொண்ண டின்னர்க்கு கூட்டிட்டு போனும்! எங்ககூட நீயும் வரணும்.. எட்டு மணிக்கு ரெடியா இரு, நாங்க வீட்டுக்கு வரோம், தென் நான் ரெப்ரெஷ் ஆனதும் கிளம்பலாம்!” முன்னுரை முடிவுரை இன்றி அவள் சொல்லிமுடிக்க, அவனால் ‘சரி’ என்று மட்டுமே சொல்ல முடிந்தது.

வேண்டாவெறுப்பாய் கேட்பதை போல, “சாப்டியா?” என்றாள். ஆனால் அதுவே அவனுக்கு குதூகலத்தை கொடுத்தது.

“சாப்டேன்! நீ சாப்டியா?”      

“இல்ல, இனிமேதான்”

“ஏன் இன்னும் சாப்டல?”

“சாப்பிட தோணல”

“முள்ளங்கி சாம்பார்ன்னு சாப்படாம இருக்கியா?” கரெக்டாக பாய்ண்டை பிடித்தான் இனியன். அவள் ‘ம்ம்’ என முனகுவது கேட்டது.

“டிபன் பாக்ஸ் திறந்து பாரு!!” அவன் சொன்னதை அவள் செய்ய, அதில் இன்முகம் காட்டி வரவேற்றது வெஜிடபில் புலாவ். அவள் சிரிக்கிறாள் என்பதை சத்தம் கேட்காதபோதும் உணர்ந்துக்கொண்டான் இனியன். அவன் முகத்திலும் மென்னகை ஒட்டிக்கொண்டது.

“சாப்டுட்டு வேலையை பாரு!! நான் எட்டு மணிக்கு ரெடியா இருப்பேன்!” அவன் சொன்னதும் மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. சாப்பிட்டு முடிக்கும் வர நிலா முகத்தில் இருந்த மென்னகை குன்றவேயில்லை.

இரவு சரியாய் எட்டு மணிக்கு தன் வீட்டு அபார்ட்மென்ட் பார்கிங்கில் நின்றிருந்தாள் நிலா. கூடவே நிவேதா இருக்க, தன் பைக்கில் அங்கே வந்து சேர்ந்தான் கோகுல்.

நிவியை கண்டதும், “ஹே ஹாய்?” என கைதூக்கினான் கோகுல்.

நிவி, ‘சோறுன்னு சொன்னா மட்டும் ஓடி வந்துடுவானே’ சிரித்துக்கொண்டே முனகியவள், ‘ஹாய்’ என்றாள் மறுமொழியாய்.    

மூவரும் லிப்டுக்குள் செல்ல, இம்முறை மின்தூக்கி வேலை செய்தது. தன் தளத்திற்கான பொத்தானை அழுத்திவிட்டு நின்றாள் நிலா. கோகுல், “எந்த ஹோட்டல் போக போறோம் நிலா?” தனக்கு வேண்டிய முக்கியமான கேள்வியாய் கேட்டான்.

“பக்கத்துல, COME IN(N) ரெஸ்டாரென்ட்” பதில் சொல்லிமுடிக்கும்போது அவர்கள் தளம் வந்துவிட்டது. வீட்டை நெருங்கும்போதே கோகுலின் மூக்குக்குள் பலவித நறுமண கலவைகள் கிச்சுகிச்சு மூட்ட, ‘இருக்கு! இன்னைக்கு யார் வீட்லயோ கறி சோறு இருக்கு!’ டிடெக்டிவ் மூக்கு உண்மையை உரக்க சொன்னது.

நிலா தன் வீட்டின் கதவை திறந்ததும், ஒட்டுமொத்த வாசனையும் போட்டிபோட்டுக்கொண்டு அவ மூக்குக்குள் நுழைய, அப்படியே நின்றாள். கோகுலோ, ‘மூக்குக்கு எட்டியது, வாய்க்கும் கிடைக்க போவதில் பரவசமானான். நிவி மட்டுமே வார்த்தை வடிவில், “வாவ்வ்வவ்வ்வ்” என்றாள்.

-தொடரும்…

Advertisement