Advertisement

*1*

 

            ‘தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சதாசிவம் தன் குடும்பத்தினருடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது’

 

            ‘ஆளும் கட்சியான ம.ஆ.க-வின் மூத்த செயல் உறுப்பினரும் சுகாதாரத்துறை அமைச்சருமான  திரு. சதாசிவம்  இன்று காலை அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அவருடன் சேர்த்து குடும்பத்தின் மற்ற ஏழு பேரும், இரு குழந்தைகள் உட்பட தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.’

 

            ‘போலீஸ் தரப்பில் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அமைச்சர் கைப்பட எழுதிய துண்டு காகிதம் கிடைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.  இது “தற்கொலையா? அல்லது திட்டமிட்ட கொலையா?” என பலரும் சந்தேகித்தவண்ணம் இருக்கும் நிலையில் சிறப்பு போலீஸ் குழு இதை தொடர்ந்து விசாரணை நடத்த இருக்கிறது. இந்நிலையில் இந்த விசாரணை “சி.பி.ஐ” கைக்கு இடம் மாறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.’

 

            சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் டிவியில் மூழ்கிபோய் அமர்ந்திருந்தான். அவன் கவனம் முழுக்க அதிலேயே இருக்க அருகில் ஆள் வரும் அரவம் கூட அவனுக்கு தெரியவில்லை. தீவிர சிந்தனையில் இருந்தான்.

 

அவன் அருகில் இங்கும் அங்கும் சென்று ஜாடை பார்த்தவர், அவன் கண்டுக்கொள்ளாதது தெரிந்ததும் வேறு வழியின்றி தரையில் சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்டார்.

 

“ஊரு உலகத்துல எவன் எவனுக்கோ சாவு வருது, இந்த பாழா போன கட்டைக்கு ஒரு சாவு வர மாட்டேங்குதே!” வராத அழுகையை வந்தது போல படம் காட்டி முந்தானையில் மூக்கை கசக்கினார் கிருஷ்ணவேணி.  

 

கவனம் கலைந்த அவன், “ஏங்கம்மா இப்படி பேசுறீங்க?” என்றதோடு டிவியை நிறுத்திவிட்டு தன் அன்னையின் அருகே சென்று அமர்ந்துக்கொண்டான்.

 

வராத அழுகை மேலும் அதிகமாக, “பெத்தவ ஒரு வாரமா கண்ணால தண்ணி விட்டுட்டு இருக்கேன்.. ஏன் எதுக்குன்னு தெரிஞ்சும் கல்லாட்டம் இருக்கன்னா இனி உனக்கு எனக்கும் என்ன இருக்கு?” என்றார் விரக்தியாய்.

 

“நீங்க சொல்லி கேக்காம எதுவும் இல்லீகம்மா.. என்னை உடனே கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க.. நான் ஒரு வருஷம் மட்டும் போகட்டும்ன்னு சொல்றேன் அவ்ளோதானே!” முகத்தில் கோவமோ எரிச்சலோ சலிப்போ எதுவும் இன்றி அமைதியாக பேசினான். அவனிடம் அனைவரும் மெச்சும் விடயமே அவனது இந்த பொறுமையும் நிதானமும் தான்.

 

“பெத்தவளுக்கு தெரியாதா புள்ளைக்கு எப்போ எது செய்யணும்ன்னு? இதே உன் அப்பன் உயிரோட இருந்து அவர் சொல்லிருந்தா உடனே செய்வ தானே? நாங்றதால தானே இத்தன அலச்சியம் உனக்கு?” பிரேமுக்குள் சிரித்தபடி இருக்கும் தன் கணவனை பார்த்து கை கூப்பி அழ தொடங்கினார் வேணி. அவர் அழுகையை எப்படி நிறுத்தவென புரியாமல் திணறிக்கொண்டிருந்தான்.

 

“ம்மா.. நீங்க அழுதா என்னால பாக்க முடில, மனசு வலிக்குது.. இதுவரைக்கும் நீங்க சொல்லி நான் எதையும் மாட்டேன்னு சொல்லல, இத ஒன்ன மட்டும் சொல்றேன்னா ஏதாது காரணம் இருக்கும்ல? புரிஞ்சுக்கோங்கம்மா..” முடிந்தமட்டும் கெஞ்சினான்.

 

“அப்போ என் பேச்சுக்கு இந்த வீட்ல மரியாத இல்ல.. ஹும்ம்? பண்ணு.. உன் இஷ்டத்துக்கு பண்ணு… நானும், அதோ! அந்த மினிஸ்டர் மாறி நடு வீட்ல உத்தரத்துல தொங்குறேன்..” சரியாய் அந்நேரம் வேணியின் இளைய மகன் வீட்டுனுள் பிரவேசிக்க, அவனையும் கைக்காட்டி, “என் வயித்துல பொறந்த பாவத்துக்கு சின்னாளும் என்னோடவே தூக்குல தொங்குவான். மறுநாளு பேப்பர் டிவில எல்லாம் எங்கள காட்டுவாக, நீ மவராசனா உட்காந்து பார்த்துக்கிட்டு இரு..” என்றார்.

 

பாதி பேச்சில் உள்ளே நுழைந்த இளையவனுக்கு முழு பேச்சும் புரியாவிட்டாலும் அதன் சாராம்சம் உடனே விளங்கியது. ஏனெனில் ஒரு வாரமாய் தங்கள் வீட்டில் நடக்கும் கூத்தை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான்.

 

“இங்க பாரு அண்ணே! எங்களோட சேர்ந்து நீயும் தூக்குலயே தொங்கிடு.. ஏன்னா? நீ சாவுறதும் அந்த பஜாரிய கல்யாணம் பண்றதும் ஒண்ணுதான்..” இதுவரை தான் ஓட்டிய படத்தை பாழாக்குவதை போல இளையவன் பேசவும் கோவம் கிளர்ந்தது வேணிக்கு.

 

“அடேய், உனக்கும் உன் அண்ணனுக்கும் என்னை பார்த்தா இளப்பமா இருக்கா? நான் உசுரோட இருக்க போயி தானே இப்படி தெனாவட்டா பேசிட்டு திரியுறீய? இப்போவே நான் போறேன்டா… இருங்க..” களைந்து கிடக்கும் முடியை அள்ளி சுருட்டிக்கொண்டு கோவமாய் எழுந்து கிணற்றடிக்கு பாய்ந்தார் வேணி.

 

பதறி எழுந்த மூத்தவன், “ம்மா, ம்மா, அவன் ஏதோ விளையாட்டுக்கு பேசிட்டான்ம்மா… போகாதீங்க அம்மா!!” கெஞ்சிக்கொண்டே பின்னால் சென்றான். அவனை தள்ளி விட்டுக்கொண்டே இலக்கை நோக்கி சென்றார் வேணி.

 

“டேய், அது சும்மா புருடா தான்.. அது போடுற சீன நம்பி வாழ்க்கையை விட்டுடாத!!” அப்போதும் இறங்காமல் இளையவன் பேச வேணிக்கு வீம்பாகி போனது.

 

“இப்படி பேசக்கூடாது சின்னா! தப்பு” அந்நேரத்திலும் அவனை கடிந்துக்கொள்ளாமல் எடுத்து சொன்னான் மூத்தவன்.

 

“என்னை என்ன கிறுக்கச்சின்னு நினச்சுட்டானுங்களா?” வேணியின் கோவம் நடையில் வேகத்தை கொடுத்தது.

 

கிணறு வரைக்கும் சென்றவர் சீனை கொஞ்சம் சீரியசாக்க எண்ணி ஒரு வேகத்தில் சுற்று சுவர் மீது தம் கட்டி ஏறிவிட இளையவனுக்கு அப்போதுதான் மெலிதாய் பயம் வந்தது.

 

நெருங்கி வந்த மூத்தவன் அவரை கீழே இறக்க எத்தனிக்க, “கிட்ட வராத! ஒழுங்கா தள்ளி போய்டு.. என்னை காப்பாத்தணும்ன்னு ட்ரை பண்ணுன அப்படியே உள்ளே குதிச்சுடுவேன் பார்த்துக்கோ” என்றதும் வேணியை விட்டு சற்றே தள்ளி நின்றான். இருந்தாலும் அவன் மனம் ‘பட் பட்’ என அடித்துக்கொள்ள, ‘அம்மா கேக்குறத செஞ்சுடலாம்’ என்ற முடிவுக்கே வந்துவிட்டான்.

 

தான் நின்ற இடத்தில இருந்து எதேச்சையாய் வேணி கிழே பார்க்க அந்த நூறடி கிணறின் ஆழம் அவருக்கு கண்ணையே கட்டியது.

 

‘ஹையோ! ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணிட்டோமோ?’ தன் காலை திடமாய் வைத்துக்கொள்ள எண்ணி அவர் சற்று நகர்த்த, முன்னமே நடுங்கிக்கொண்டிருந்த அவர் கால்கள் இப்போது ஒத்துழைக்காமல் தடம் பிசகி கிணற்றுக்குள் விழவே போனார்.

 

“ம்மாஆஆஆ” அவர் ஆட தொடங்கியதை பார்த்ததுமே இளையவன் அருகில் வந்துவிட, இருவரும் சேர்ந்து அவர் விழுவதற்கு முன்பே குண்டுகட்டாக தூக்கி வெளியில் கிடத்தினர்.

 

பயத்தில் உறைந்து போயி அமர்ந்திருந்த தன் அன்னையை முறைத்துக்கொண்டு இருந்தான் சின்னவன். மூத்தவனோ, “ம்மா.. ஏன்ம்மா இப்படி? உள்ளே விழுந்துருந்தா என்ன ஆகிருக்கும்? ரொம்ப பயந்துட்டேன்ம்மா! சரிங்க அம்மா! கல்யாணம் தானே? பண்ணிக்குறேன்.. நீங்க யார சொல்றீங்களோ அவங்களையே பண்ணிக்குறேன்.. இன்னைக்கே கூட பண்ணிக்குறேன்…” சொல்லிமுடித்ததும் வெயில் பட்ட கண்ணாடியாய் பளபளத்தது வேணியின் முகம். உள்ளுக்குள் பல குத்து பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது.

 

“என் தங்கமம்ம்ம்ம்” நெட்டி முறித்தார் வேணி.

 

அதற்க்கு எதிர்மாறாய், எண்ணையில் பொறிந்த பரோட்டா போல சிவந்து போனான் சின்னவன். ஒரே வார்த்தையில், “போடாஆஆஆங்…” என்றுவிட்டு கோவமாய் வீட்டை விட்டு வெளியேற, “சின்னா!! இருடா!!” இவனும் அவன் பின்னூடே ஓடினான்.   

 

குஷி குறையாமலே ‘வேணி கைய வச்சா, அது ராங்கா போனதில்ல..’ மெலிதாய் ஆடிக்கொண்டே தன் கைபேசியில் இருந்த ‘தேவி’ என்ற எண்ணுக்கு அழைத்தார் வேணி.

‘சீக்கிரம் எடுடி’ அவர் முனகிக்கொண்டே இருக்க கடைசி நொடிகளில் அழைப்பு எடுக்கப்பட்டது.

 

“ஹல்லோ.. ஏய் போன் போட்டா எடுக்க இவ்ளோ நேரமா?” படபடத்தார் வேணி.

 

“என்ன வேணி, குரலே துள்ளலா இருக்கு.. என்ன விஷயம்?” பாய்ண்டை பிடித்தார் தேவி.

 

“டாஸ்க் கம்ப்புலீட்டு..” மிதப்பாய் வேணி சொல்ல, “புரியல வேணி?” என்றவருக்கு அடுத்த நொடியே என்னவென்று விளங்க அதை நம்ப முடியாமல், “நிஜமா சொல்றியா வேணி? தம்பி கல்யாணத்துக்கு ஒத்துகிச்சா?” என்றார் அளவு கடந்த மகிழ்ச்சியில்.

 

“எஷ்ஷு..! வேணியா கொக்கா!! சொன்ன மாறியே பண்ணிட்டேன் பார்த்தியா? சரி அந்த பக்கம் என்னாச்சு? என் மருமவ ஒத்துகிச்சா?”

 

“ஹும்ம்ம்ம்” மறுபக்கம் தேவியிடம் இருந்து வெறும் பெருமூச்சே பதிலாய் வந்தது.

 

“என்னாச்சு தேவி..”

 

“பாறைல இருந்து கூட பால் கரந்துடுவேன், ஆனா என் பொண்ணு கிட்ட இருந்து ஒரு வார்த்தை வாங்குறதுக்குள்ள… ஹும்ம்!!” அவர் குரலே அவரின் அயர்வை சொன்னது.

 

“கவலைய விடு, இருக்கவே இருக்கு நம்ம பிரம்மஸ்த்ரம்..! சாவ போறேன்னு சொல்லு.. எல்லாம் ஓகே ஆகிடும்” இலகுவாய் ஐடியா வழங்கினார் வேணி.

 

“அத நேத்தே சொல்லிட்டேன்.. சொன்னதோட மட்டும் இல்ல, நாலு தூக்க மாத்திரையை போட்டுட்டு படுத்துட்டேன்..” என்றார் சலிப்பாய்.

 

“அட லூசே!! அப்புறம் என்னாச்சு?”

 

“அப்பறம் என்ன? என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு அவ ஆபிஸ் போயிட்டா!! நான் பில்ல கட்டிட்டு, இப்போ ஆட்டோக்கு ரோட்ல நிக்குறேன்…”

 

‘அடிபாவி! நம்ம புள்ள சொக்க தங்கம்’ என நினைத்தவருக்கு ஒரு ஓரமாய், ‘இப்டி ஒருத்திகிட்ட நம்ம பையன் மாட்டுனா அவன் கதி என்ன?’ என்றும் தோன்றி கிலியை கொடுத்தது.

 

வேணியிடம் இருந்து பதில் இல்லாமல் போக, “என்ன வேணி? இந்த மாறி பொண்ண எப்டி நம்ம பையன்னுக்கு கட்டி வைக்குறதுன்னு யோசிக்குறியா?” சரியாய் கணித்தார் தேவி.

 

“ஹே ச்சே ச்சே..” இல்லை என வாய் சொன்னாலும் உள்ளுக்குள் இது அவரை கொஞ்சம் குடைந்தது.

 

“விடு வேணி.. நடக்குறது நடக்கட்டும்!!”

 

“இப்போ உன் பொண்ணு எங்க இருக்கா?”

 

 

“சுடரொளி நிலையம்”

நம்பர் 1 வார இதழ். உண்மை செய்தி, உள்ளபடி, உங்கள் முன்..

 

“ஹாய் பிரண்ட்ஸ்”

குட் நூன்..

ஹய் டா..

ஹய் மச்சி..” உற்சாகமான பல வணக்கங்களுடன் அந்த நீண்ட இடத்தை கடந்து சென்றான் கோகுல். ‘சுடரொளி’ பத்திரிக்கையின் முக்கியமான புகைப்பட கலைஞர்களுள் அவனும் ஒருவன். வேலை விஷயமாய் வெகு காலையில் வெளியே சென்றவன், இப்போது தான் அலுவலகத்திற்க்கே வருகிறான். துள்ளலான நடையுடன் தனது கேபினை அடைந்தவன், ஒரு பாட்டில் குளிர் நீரை தன் தொண்டைக்குள் சரித்தான். தன் குஷன் சேரில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு தான் எடுத்த புகைப்படங்களை நோட்டமிட தொடங்கினான்.

 

வேலையில் ஒரு கண் இருந்தாலும் மறுகண்ணோ தனக்கு எதிரில் இருக்கும் காலி சேர்ரையே அடிக்கடி பார்த்து மீண்டது. ஐந்து நிமிடம் கூட பொறுக்க முடியாதவனாய், “இம்ரான் சார், நிலா எங்க?” என்றான்.

 

இம்ரானோ, “அது ராத்திரி தானே வரும்!.. ஹாஹாஹா” மொக்கையாய் காமெடி சொல்லி சிரிக்க தொடங்கினான். கோகுல் முறைத்த முறைப்பில் அவன் சிரிப்பு அடங்கிவிட, “வன் ஆர் முன்ன சீப் எடிட்டர் ரூம் பக்கமா போனாங்க.. அதுக்கு அப்புறம் நான் பாக்கல..” என்றுவிட்டு தன் வேலைக்கு திரும்பிவிட்டான்.

 

தன் இருக்கையில் இருந்தே ‘சீப் எடிட்டர்’ அறையை சற்று எட்டி பார்த்தவன் பின் அமைதியாய் தன் வேலையை தொடர்ந்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம் கையில் காமெராவுடன் எடிட்டர் அறையின் கதவை தட்டியிருந்தான் கோகுல்.

 

“சர், உள்ள வரவா?”

 

“ம்ம்ம்” குரல் மட்டுமே வந்தது. டேபிள் மேல் தலையை கவிழ்த்துக்கொண்டு இருந்தவரை விட்டு, அவருக்கு எதிரில் நிமிர்வாய் அமர்ந்திருந்த நிலாவையே உற்று நோக்கின அவன் கண்கள்.

 

அவன் வந்து நிற்ப்பது தெரிந்தும் அவளின் கண்கள் எடிட்டரை விட்டு நகரவில்லை. கவிழ்ந்து படுத்திருந்தவர் தளர்வாய் நிமிர்ந்து, “என்ன கோகுல்?” என்றார்.

 

“மார்னிங் எடுத்த போடோஸ் காட்டி செலக்ட் பண்ணிக்கலாம்ன்னு வந்தேன் சார்…” அப்போதைக்கு கிடைத்த காரணத்தை சொல்லிக்கொண்டு நின்றான் கோகுல்.

 

“ம்ச்.. நீயே பார்த்துக்கோ கோகுல்… ஐயம் அவுட் ஆப் மூட் நவ்..” நெற்றியை தேய்த்துக்கொண்டார்.

 

“ஏன் சார், என்னாச்சு?” நிலாவின் பார்வை ஒரு நொடியேனும் அவன் புறம் திரும்புமா என அவனிருக்க, அதற்க்கு வாய்ப்பே கொடுக்காமல் அமர்ந்திருந்தாள் நிலா என்கிற இன்பநிலா.

 

“நானும் ரொம்ப நேரமா நிலா கூட போராடிட்டு இருக்கேன்.. ஷிஸ் சோ அடமென்ட்.. அந்த மினிஸ்டர் மாஸ் சூசைட் கேஸ் நான் டீல் பண்றேன்னு கேக்குறாங்க..”

 

“அதுகென்ன சர், சென்சேஷேனல் நியூஸ்.. மத்த பத்திரிக்கைக்கு முன்னாடி நம்ம ஏதாது கண்டுபுடிச்சு போட்டா நமக்கு தானே சேல்ஸ் அதிகமாகும்?” எடிட்டரிடம் திருப்பி கேட்டான் கோகுல்.

 

“அப்கோர்ஸ் கோகுல், பட் நிலா இத மர்டர்ன்னு சந்தேகபடுறாங்க..  ஈவன் எனக்குமே அந்த டவுட் இருக்கு.. கண்டிப்பா இதுல பெரிய பெரிய ஆள் எல்லாம் இன்வால்வ் ஆகிருப்பாங்க.. எதையாது கண்டுபுடிக்குறேன்னு கிளம்பி போயி இவங்களுக்கு ஏதாது ஆச்சுன்னா யாரு பொறுப்பேற்குறது? வாழ வேண்டிய வயசு.. அதுலயும் பொண்ணு…” அவர் ஒரு தகப்பனாய் இருந்து கவலைகொள்ள,

 

“இந்த கேஸ் எனக்கு குடுக்குறதுன்னா நான் இங்க இருக்கேன், இல்லனா சாரி..!! நான் ரிசைன் பண்ணவேண்டியது வரும்..” வார்த்தைகளில் அத்தனை பிடிவாதம்.

 

‘இப்படி பேசுபவளை என்ன செய்ய?’ என்பது போல பார்த்தவர், “சரி ஆஸ் யுவர் விஷ்.. இத நீயே டீல் பண்ணிக்கோ.. வீக்லி டூ பேஜெஸ் வந்தாகணும்.. அண்ட் நீ இந்த கேஸ் விஷயமா எப்போ வெளில போனாலும் கோகுல் கூட தான் போகணும்..” மறுத்து பேச வாயெடுத்தவளை, “பிகாஸ் ஹீஸ் தி போடோக்ராபர் போர் திஸ் நியூஸ் ஆர்டிக்கிள்..” என சொல்லி அமைதியாக்கினார்.

 

“உனக்கு ஓகே தானே கோகுல்?”

 

“டபுள் ஓகே சர்..” என்றான் சிரித்த முகமாய்.

 

நிலா, “சர், ஐ நீட் சம் அதர் போடோக்ராபர்..” கோகுலை முறைத்துக்கொண்டே சொல்ல, “இந்த நியூஸ்க்கு இவர் மாறி ஒரு போடோக்ராபர் தான் சரியான ஆளு.. இவரோட வொர்க் பண்றதுன்னா பண்ணு.. இல்லனா இந்த கேஸ் வேற யாராது பார்த்துக்கட்டும்..” அவள் பாணியிலேயே அவளுக்கு எடிட்டர் பதில் சொல்ல, பல்லை கடித்துக்கொண்டு, “நாளைல இருந்து வொர்க் ஸ்டார்ட் பண்றேன்…” முறைப்போடு அறையை விட்டு வெளியே சென்றாள் இன்பநிலா.

 

சின்ன சிரிப்போடு, “தேன்க் யூ சர்.. நான் பார்த்துக்குறேன்.. யூ பி ரிலாக்ஸ்” என சொல்லிவிட்டு அவளை தேடி வெளியே வந்தான் கோகுல்.

-தொடரும்…

 

Advertisement