Advertisement

*4*

கொஞ்சம் சிரித்தாய்!

கொஞ்சம் முறைத்தாய்!

வெட்கக்கவிதை நீ!

 

“யாரும் உள்ளே போக கூடாதாம்!!” இறந்து போன அமைச்சர் சதாசிவத்தின் வீட்டுக்கு சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்தான் கோகுல். அவன் அருகே தன் ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த நிலா, “சுடரொளி பத்திரிக்கை ரிப்போர்டர்ன்னு சொன்னியா?” என்றதும், “பத்திரிக்கைகாரன்ன்னு சொன்னதும் தான் அடிக்காத குறையா துரத்திவிட்டாங்க” சலிப்பாய் சொன்னான்.

 

“வீட்டோட அவுட்லுக்க மட்டும் தான் காட்டிட்டு இருக்காங்க!! உள்ள எப்படி இருக்குன்னு யாருக்கும் தெரியல!! அதை நம்ம போட்டோ எடுத்து போட்டா சேல்ஸ் எகிறிடும்ல?” நிலாவின் முகம் விபரீத ஒளியில் மின்னியது.

 

அதை கண்ட கோகுல், “ஏய் ஆர்வக்கோளாறு! கொஞ்சம் சும்மா இரு! ஏதாது எடக்கு மடக்கா யோசிக்காத!” என எச்சரித்தான். பிறர் சொல் கேளா பிறவி அவள் என தெரிந்த கோகுலுக்கு அவள் மீது தன் இரு கண்கள் போதாது, நெற்றிகண்ணையும் திறந்து வைத்து கண்காணிக்க வேண்டும் என்று தோன்றியது.     

 

“சரி வா கிளம்பலாம்! இங்க நின்னு என்ன செய்யபோறோம்!” அவளை அங்கிருந்து நகர்த்திக்கொண்டு கிளம்பினான் கோகுல்.

 

சென்னை ட்ராபிக்யில் நீந்தி இருவரும் ஆபீசுக்குள் நுழைய, சீப் எடிட்டரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் கேபினுக்கு சென்ற இருவரையும், “இந்த வீகென்ட் போட வேண்டிய ஆர்டிகிள் எப்போ ரெடி பண்ணுவீங்க?” என கேட்டார்.

 

“திஸ் பிரைடே எவனிங் சப்மிட் பண்ணிடுவேன் எடிட் ஜி!” நிலா நல்ல மூடில் இருந்தால் தான் தன்னை விளையாட்டாய் ‘எடிட்ஜி’ என சொல்லுவாள் என்று இத்தனை நாள் பழக்கத்தில் அறிந்திருந்த அவர், “என்ன சுடும் நிலவு, குளிர் நிலவா இருக்கு? என்றார்.

 

டேபிளில் இருந்த பேப்பர் வெய்ட்டை பந்து போல் தூக்கி போட்டு பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள் இன்பநிலா. எடிட்டர் கேட்டது காதில் விழுந்தும் அவள் கவனிக்காதது போல இருக்கவே, கோகுலிடம் கண்களால் விசாரித்தார் அவர்.

 

உடனே கோகுல், “இனிமே எப்பவும் குளிர் நிலவு தான் சர், ஏன்னா இன்னும் மூணு நாள்ல அவளுக்கு டும் டும் டும்” கைகளை மோளம் போல அடித்து சொன்னதும் “ஹே ஜோக் பண்ணாத கோகுல்? என்றார் அவர் நம்பாமல்.

 

“அட நிஜமா தான் சர்!! நீங்க வேணுனா அவளையே கேளுங்க!!”

 

இப்போதும் பேச்சை கவனிக்காதது போல விளையாடும் நிலாவை, “கோகுல் சொல்றது உண்மையா நிலா?” என கேட்டார் எடிட்டர். விளையாடிக்கொண்டே, “கோகுல் பொய் சொல்லமாட்டானே!!” என்றாள் நிலா.  

 

“கூட வேலைசெய்யுற ஆளுக்கு சொல்லனும்னு அவசியம் இல்ல! ஆனா உன்னோட கார்டியனுங்கற முறைக்கு என்கிட்ட சொல்லிருக்கலாம்ல?” வருத்தத்தோடு அவர் கேட்க, பட்டென, “சென்டி எல்லாம் வேணாம் ஜி, நேத்து தான் பிக்ஸ் ஆச்சு! அம்மா வந்து உங்களை பார்க்குறேன்னு சொன்னாங்க! நான் என் கேபினுக்கு போறேன்!!” என்றுவிட்டு கையில் இருந்த குண்டை கோகுலின் மீது வீசிவிட்டு சென்றாள் நிலா.

 

அதை கோகுல் அலேக்காக கேட்ச் பிடித்து டேபிளில் வைக்க, “இந்த பொண்ணு ஏன் இப்டி இருக்கா? என்றார் எடிட்டர். அவர் வருத்தம் புரிந்த கோகுல், “நமக்கு தெரியாதா சர் இவ இப்படிதான்னு!! ஆனா எதுவுமே தெரியாம இவளை ஒருத்தன் கட்டிக்க போறான் பாருங்க!! அவனை நினைச்சா தான் எனக்கு தூக்கத்துல கூட சிரிப்பு சிரிப்பா வருது!” கண்ணை மூடிக்கொண்டு அவன் சிரிக்க, எடிட்டரும், சிரிக்க தொடங்கினார்.

 

கணினி திரையில் அமைச்சரின் குடும்ப பின்னணி பற்றிய ஆர்டிக்கிளை படித்துக்கொண்டிருந்தாள் நிலா.  அதில் அவர் தம்பி பிள்ளைகள் இருவர் பத்து வயதிலும், ஏழு வயதிலும் இருந்தனர். அதை கண்டு துணுக்குற்ற நிலா, ‘குழந்தைங்க எப்படி தூக்கு போட்டுக்க முடியும்?’ என சிந்தித்தாள். மேலும், குடும்பத்தின் அத்தனை உறுப்பினரும் மாண்டிருக்க, அமைச்சரின் தம்பி ஜெயானந்தன் மட்டும் கட்சி விஷயமாய் டெல்லி சென்றிருந்ததால் உயிர் பிழைத்திருக்கிறார் என்ற செய்தி அவளை யோசிக்க வைத்தது. அதேநேரம், அரசியலில் சதாசிவத்தின் ஊரறிந்த எதிரி வேணுகோபால் மீது அத்தனை பேரின் சந்தேகமும் திரும்பியிருந்தது.

 

யோசிக்க யோசிக்க புருவ முடிச்சுகள் வலிக்க ஆரம்பித்தது. இதை தற்கொலையல்ல என்று சொல்வதற்கு ஒரு நுனி கிடைத்தாலும் அதை பற்றிக்கொண்டு மேலேறிவிடலாம் என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினாள் இன்பநிலா. இதுவரை சந்தித்த குற்ற பின்னணி, பார்த்த படங்கள், கேட்ட சம்பவங்கள் என அணிவகுத்து ஒரு கற்பனை கதைகளத்தை அவளே உருவாக்கிக்கொண்டிருந்த சமயம், மூடிய விழிகளுக்குள் மின்னல் அடித்ததை போல ஒரு உணர்வு எழ கண் திறந்தாள்.   

 

கையில் இருந்த கேமெராவில் அவளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான் கோகுல். எரிச்சலோடு அதை பிடுங்கி பக்கத்தில் இருந்த சேரில் அவள் எறிய, கோகுல், “அடியேய்!! லட்ச ரூவா கேமரா அது!” பாய்ந்து சென்று எடுத்தான்.

 

“எதுக்கு என் மூஞ்சில வந்து லைட் அடிக்குற?” எரிச்சலாய் அவள் கேட்க, தன் கேமராவிற்கு ஏதும் ஆகிவிட்டதா என பார்த்துக்கொண்டே, “தவயோகி மாறி சாந்தமா உட்காந்துருந்த! இதெல்லாம் வரலாறுல முக்கியமாச்சேன்னு போட்டோ எடுத்தேன்!!” என்றான் கோகுல்.

 

“உன் மூஞ்சி!! என்னை கொஞ்ச நேரம் அப்படியே விட்டுருந்தனா இந்த கேஸையே சால்வ் பண்ணிருப்பேன்!!” அவள் சொல்ல, அவளை மேலும் கீழும் பார்த்தான் கோகுல்.

 

“என்னடா நக்கலா பார்க்குற மாறி இருக்கு?” மிரட்டலான அவள் குரலில், “உனக்கு ஒன்ன நியாபகப்படுத்த வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்!!” தீவிரமான குரலில் அவள் அருகே சென்றான் கோகுல். நிலாவும், அவன் சொல்ல வருவதை கேட்க அருகே வர, “நீ வெறும் ரிபோர்ட்டர் நிலா தான்!! சிபிசிஐடி நிலா இல்ல! குடுக்குற காசுக்கு மட்டும் வேலையை பாரும்மா!!” என்றதும், அவள் தலைக்கு பின்னே சிவப்பு நிற பலப் எரிந்து தலை முடி எட்டுத்திக்கும் பறப்பதை போல தோன்றியது.

 

‘சும்மா கிடந்த சங்க ஊதிட்டியேடா!’ அலார்ட்டானவன், “ஹஹா அப்டியெல்லாம் சொல்லுவேன்னு நினைக்காத!! நீ மட்டும் மனசு வச்சா சிபிஐ-கே சவால் விடுவன்னு எனக்கு தெரியாதா!!” சமாளிக்கவும், நிலாவின் சீற்றம் சற்று மட்டுப்பட்டது. அவள் தன் புருவங்களை நீவி விடுவதை பார்த்தவன், “தலை வலிக்குதா நிலா? நான் காபி வாங்கிட்டு வரவா?” என்றான்.

 

“இங்க காபி மெசின் வொர்க் ஆகல?” என்ற பதிலில் அவளுக்கு இப்போது காபி தேவை என உணர்ந்தவன், “சோ வாட்!? பக்கதுல தானே கடை இருக்கு!! நான் வாங்கிட்டு வரேன்!!” மூடியோடு அமைந்த காபி மக்கை எடுத்துக்கொண்டு நகர்ந்தான் கோகுல்.

 

காலை உணவை தவிர்த்துவிட்டு வந்தது வேற அவள் தலை வலியை அதிகரிக்க செய்த்தது. கோகுல் வரும்வரை ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று மேசை மீதே அவள் தலை சாய்க்க, அது பொறுக்காமல் அவள் கைபேசி சத்தம் போட்டது.

“ப்ச்!” சலிப்போடு கைப்பையில் இருந்து போனை எடுத்து காதுக்கு கொடுத்தாள்.  

 

“ஹலோ? இன்பநிலா ஹியர்!!”

 

மறுமுனையில், “இதழி?” என்றதும் விருட்டென எழுந்து அம்ர்ந்தாள். செல்போன் திரையில் தன் முகத்தை பார்த்து சரிசெய்துக்கொண்டவள், சேரில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு “யாரு?” என்றாள் வேண்டுமென்றே.

 

“என்னை தவிர வேற யாரும் உன்னை இப்படி கூப்பிடமாட்டாங்கன்னு நினைக்குறேன்!” என்றான் சீண்டலாய்.

 

“ஹோ நீயா?” அப்போது தான் கண்டுக்கொன்டதை போல நடித்தவள், “நான் உன்னை எப்போ கூப்பிட சொன்னேன்?” என்றாள் அதிகாரமாய்.

 

“பதினொரு மணிக்கு..! இப்போகூட மணி பதினொன்னு தான்!” என்றான். அவன் சொன்னதும் தன் கைகடிகாரத்தை திருப்பி அவள் நேரம் பார்க்க, “வாட்ச் கரெக்டா ஓடுதா?” என்றான்.

 

‘நான் டைம் பாக்குறேன்னு இவனுக்கு எப்படி தெரியும்?’ என துணுக்குற்றவள், “எனக்கு அதுகெல்லாம் நேரமில்ல! தலைக்கு மேல வேலை இருக்கு!! இன்னும் பைவ் மினிட்ஸ்ல ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணனும்! என் முன்னாடி இருவது பேரு என்னையே பார்த்துட்டு உட்காந்து இருக்காங்க!! நீ கால் பண்ணியேன்னு தான் மரியாதை குடுத்து பேசிட்டு இருக்கேன்!!” அடுக்கிக்கொண்டே போக, அவன் சிரிப்பதை போல தோன்றியது நிலாவுக்கு.

 

“ஹலோ மிஸ்டர்? என்ன சிரிக்குறீங்களா?” அவள் கோவமாய் கேட்க, “நான் உன் பின்னாடி தான் நிக்குறேன்!!” என அசராமல் அவளை அசர வைத்தான் இனியன்.

 

உள்ளுக்குள் ‘திக்’கென்று இருந்தது. அணைந்துகிடந்த கணினி திரையை திருப்பி பின்னால் அவன் இருக்கிறானா என அவள் தேட, சக ஊழியர்களை தவிர ஒருத்தரும் இல்லை. ‘உப்ப்’ என மூச்சுவிட்டாள் நிலா.

 

“என்னை தேடுறியா?” அவன் கேட்க, “நான் ஏன் தேடப்போறேன்?” என்றவளின் கண்கள் அந்த தளத்தையே சல்லடை போட்டது.  அவன், “சும்மாதான் சொன்னேன்!” என்றதும், “ஓகே நான் பிஸியா இருக்கேன்! அப்பறமா பேசுறேன்!!” என்று அழைப்பை துண்டித்தாள் நிலா.   

 

‘அவன் இங்கே இருப்பதாய் சொன்ன நிமிடம், உள்ளுக்குள் என்னவோ செய்ததே அது என்னவாய் இருக்கும்?’ நேரே ரெஸ்ட் ரூமுக்குள் சென்றவள் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். தன் உதட்டின் மீது விரல் வைத்து கிள்ளியவள், மனதுக்குள் அவன் குரலில் “இதழி” என சொல்லிப்பார்த்தாள். முகத்தில் தானாக புன்னகை வந்து அமர்ந்தது.  தலை வெடிக்கும் அளவு இருந்த வலி, இப்போது எங்கே போனதென்றே அவளுக்கு தெரியவில்லை.

 

புன்னகை மறையாமல் தன் கேபினை நோக்கி அவள் நடக்க, எதேச்சையாய் தன் வலப்பக்கம் திரும்பி பார்த்தவள் திடுக்கிட்டு நின்றாள். கை கட்டி சுவரில் சாய்ந்துக்கொண்டு சிரிப்போடு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் இனியன்.

 

அவள் கால்கள் நகர மறுத்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சென்று அவனை பார்க்கிறாள். ஆனாலும் பார்த்தவுடன் அவனை கண்டுக்கொண்டது அவள் கண்கள். கிளீன் ஷேவ் செய்த முகத்தில் முறுக்கி நின்ற மீசை அவனுக்கு வெகு பொருத்தமாய் இருந்தது.

 

‘உனக்கு தாடி நல்லாவே இல்ல’ என்றோ தன் குரலில் அவனிடம் சொன்னது போல நியாபகம் வந்தது.

அவன் சிரிக்கும்போது கன்னத்தில் லேசான குழி விழுந்து அவன் வசீகரத்தை அதிகரிக்க, அதில் ‘விழவா? விழவா?’ என கேட்ட மனதை அடித்து அடக்கினாள் நிலா.  பாறாங்கல்லாய் கணக்கும் காலை நகர்த்தி அவன் அருகே செல்ல, அவன் கண்கள் மேலும் சிரித்தது. சட்டென தெளிந்தவள், தன் பார்வையை மாற்றி எப்போதும் போல திமிருடன் அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.  

 

“எப்படி இருக்கன்னு கேக்க மாட்டேன்!” என்ற இனியன் அவளை தலை முதல் கால் வரை பொறுமையாய் பார்த்துவிட்டு, “நல்லாவே இருக்க!!” என்றான்.

அவன் பார்வையில் தினறியவள், “ஹலோ?” குரலில் கோவம் காட்ட, “அழகா இருக்கன்னு சொன்னேன்!!” என்றான் இனியன்.

 

“இப்படி ஃப்லர்ட்(FLIRT) பண்ணதான் ஊருல இருந்து வந்தியா?” என்றாள். முகத்தில் அதிர்ச்சி காட்டியவன், “ஃப்லர்டா? நானா? என்னை பார்த்தா அப்டியா தெரியுது?” என கேட்டதும் அவனை இன்னும் உற்று நோக்கியவள், ‘நீ தான் பத்து பேர ஃப்லர்ட் பண்ண வைப்ப!’ எண்ணத்தை வெளியே சொல்லாமல், “எதுக்கு வந்த?” என்றாள்.

 

“சனிகிழமை நாள் நல்லா இல்லையாம்! அதான் வெள்ளிகிழமையே கல்யாணத்தை வச்சுக்கலாம்ன்னு நினைக்குறாங்க!!” அவன் சொன்னது தான் தாமதம், “யார கேட்டு முடிவு பண்றீங்க? உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ண, நான் ஓகே சொல்லனுமா?” என அபாண்டமாய் கத்தினாள்.

 

அவளது அலறல்கள் அந்த ஆபிசுக்கு பழக்கப்பட்ட ஒன்றானதால் ஒருவரும் அவளை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் இனியனுக்கு தான் சங்கடமாய் போனது.

 

“நல்ல நாள்ல நல்ல நேரத்துல கல்யாணம் நடக்கணும்ன்னு விரும்புறாங்க! அவ்ளோதான்! மத்தபடி உன் இஷ்டம்!!” அமைதியாய் சொன்னவனின் முகம் சோர்ந்து போய்விட, அவளுக்கு கஷ்டமாய் போனது.

 

நேற்றிலிருந்து தன் அன்னை கெஞ்சிக்கொண்டிருந்த விஷயம் தான் என்றாலும், அப்போது இறங்காத மனது, இனியன் முகத்தை பார்த்ததும் சரிய தொடங்கியது.

 

“நல்ல நேரம் எப்போ?” அவள் கேட்க, அவன் முகம் பளிச்சென ஆனது. “காலைல நைன் டு டென்!” என்றதும், “ஓகே நான் பேசிக்குறேன், நீ கிளம்பு” என்றாள்.

 

“இவ்ளோ தூரம் வந்துருக்கேன், ஒரு காஃபி??” தயக்கத்தோடு அவன் நிற்க,  மெலிதாய் முறைத்தவள், “எனக்கு வேலை இருக்கு” என்றாள்.  அவனோ அங்கு போடப்பட்டிருந்த விசிட்டர் சேரில் சௌகர்யமாய் அமர்ந்துக்கொண்டு, “முடிச்சுட்டு வா, வெயிட் பண்றேன்” என்றான்.

 

‘இம்சை’ என்று அவள் நினைக்க, அந்த வழியே வந்த இம்ரான், “என்ன நிலா? கல்யாணமாமே!? யாரு மாப்ள?” என்றான். நிலாவை முந்திய இனியன், “நான்தான் சர்!” என பேச தொடங்கினான்.

 

இருவரும் பேசிக்கொள்வதை பார்த்தவளுக்கு காதில் இருந்து புகை வந்தது. ஆபிசில் இன்னும் சிலரும் இவர்களை பார்த்துக்கொண்டிருப்பது தெரிய, “ஹான் இம்ரான்!? நாங்க காஃபி ப்ரேக் போறோம்!! கேட்ச் யூ லேட்டர்” என சொல்லிவிட்டு அவனை நகர்ந்துக்கொண்டு லிப்ட் அருகே வந்தாள் நிலா.

 

“சொல்லிட்டு வரலையா?” இனியன் கேட்க, “யார்கிட்ட?” என்றாள் நிலா. “உனக்கு முன்னாடி இருவது பேரு உட்காந்து உன்னையே பார்த்துட்டு இருக்காங்களே!! அவங்ககிட்ட!!” சிரிக்காமல் அவளை அவன் கலாய்க்க, பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டாள் நிலா. அவள் கோவம் கூட அவனுக்கு அழகாய் தெரிந்தது.

 

லிப்டின் கதவு திறந்ததும் அவன் உள்ளே போக எத்தனிக்க, அதன் உள்ளிருந்து வெளியே வந்தான் கோகுல். கையில் இருந்த சூடான காபியை டிஷர்ட்டால் தாங்கி பிடித்துக்கொண்டே வந்தவன் அங்கு நிலாவை பார்த்ததும், “ஏய் நீ ஏன் இங்க நிக்குற?” என்றான்.

 

வந்தவன் நிலாவுக்கு தெரிந்தவன் என தெரிந்ததும், “ஹாய்! ஐயம் இனியன் இளஞ்செழியன்!” என்றான். அந்த பேரை கேட்டதுமே, “அட! மாப்புளன்னு சொல்லுங்க! நீங்க வரதா சொல்லவே இல்லையே!! சும்மா சூப்பரா இருக்கீங்க பாஸ்” என்றான் கோகுல்.

 

அவன் பேச்சில் சிரித்த இனியன், “திடீர்னு தான் கிளம்புனோம்!! அதான் சொல்ல முடில!! உங்க பேரு?” என இழுக்க, “கோகுல்! அம்மா என்னை பத்தி நிறைய சொல்லிருப்பாங்களே!! அது நானே தான்!!” என்றிட, “ஒண்ணுமே சொல்லலையே” என்றான் இனியன்.

 

“ஒன்னும் சொல்லல?” என மீண்டும் கேட்க இனியன் மறுப்பாய் தலையாட்டினான். கிடைத்த பல்பை பத்திரப்படுத்திய கோகுல், “பரவால, இனிமே என் பேர சொல்லி கேளுங்க! பெருமையா சொல்லுவாங்க!!” என்றான்.

 

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நிலா பொறுமையிழந்து, “போலாமா?” என்றாள் இனியனிடம். அவன் ‘ம்ம்ம்’ என்றதும், “எங்க போறீங்க?” என்றான் கோகுல்.

 

இனியன், “காபி ஷாப்” என சொல்லும்போது நிலா லிப்டுக்குள் புகுந்திருந்தாள். தான் கையில் வைத்திருந்த காபியை பார்த்த கோகுல், “அப்போ இது?” என கேட்க, “நீயே குடிடா!!” அவள் சொல்லிமுடிக்கும் முன் லிப்டின் கதவுகள் மூடப்பட்டது.

 

காபியையும் லிப்டையும் மாறி மாறி பார்த்தவன், “முகநக நட்பது நட்பன்று, புருஷன் வந்ததும் பாய்பிரண்டை கலட்டி விடுவதே பெண்ணின் நட்பு” புது குரல் சொல்லிவிட்டு காபியை குடித்தான் கோகுல்.

-தொடரும்…    

 

Advertisement