Advertisement

*3*

இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை

முதல் முறை என் இளமையின் சுகம் உணர்கிறேன், நான் தூங்கவில்லை!

 

இதழ்க்கடையில் கீற்று புன்னகையோடு கண்மூடி அவள் நின்ற கோலம் கண்டு கோகுல் மனது சிறிதே துணுக்குற, அடுத்த நொடியே தன் நிலையை மாற்றிக்கொண்டு, “அவனை விட்டா வேற இளிச்சவாயன் எனக்கு கிடைக்க மாட்டான், அதான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்…” என்று தன் மடிகணினியை எடுக்க அறைக்குள் புகுந்தாள் நிலா.

 

“அதென்ன பேரு கே.பி சுந்தராம்பாள் காலத்துல வச்சமாறி இருக்கு?”

 

“அவன் அப்பா தமிழ் வாத்தியாரு. எனக்கும் அவர்தான் பேரு வச்சாரு!! அவன் தம்பி பேரு கூட அதியன்நெடுமாறன்”

 

“ஓஓ! அப்போ பொண்ணு பொறந்துருந்தா காரைக்கால் அம்மையார்ன்னு வச்சுருப்பாருன்னு நினைக்குறேன்!” கோகுல் சொல்ல, அவனை முறைத்தாள் நிலா.

 

“பாவம் அந்த இனியன் இளஞ்செழியன்… உன்கிட்ட சிக்கி என்ன பாடு படபோறாறோ தெரியல!” வருத்தப்பட்ட கோகுல் தலையில் ஒரு தட்டு தட்டியவள், “அவனுக்காக அப்புறம் வருத்தபடலாம்.. இப்போ நம்ம வேலைய ஆரம்பிப்போம் வா..” என்றுவிட்டு ஸ்கெட்ச் போர்டை நெருங்கினாள். அதில் “அமைச்சர் சதாசிவம்” என எழுதி பெரிய வட்டமிட்டவள், “காஞ்சிபுரம் பக்கம் ஒரு சின்ன கிராமம் தான் அவருடையது. பரம்பரை சொத்துன்னு சொல்லிக்க ஒண்ணுமே இல்ல. இவரோட அப்பா, அம்மா, தம்பி யாருமே மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் போகாதவங்க. கட்சில ஒரு அடிமட்ட தொண்டனா சேர்ந்து படிப்படியா முன்னுக்கு வந்தவர்” என்றாள் நிலா.

 

“இதெல்லாம் ஊருக்கே தெரியும்!! அவர் செத்ததுல இருந்து இதை தானே டிவில சொல்லிகிட்டே இருக்காங்க?” கோகுல் இடைபுக, “எஸ்!! ஆனா நம்ம ஒருமுறை எல்லாத்தையும் ரிகலைட் பண்ணிக்கலாம் தப்பில்லை!!” என்றவள் மேலும் அமைச்சர் சதாசிவத்தை பற்றிய தகவல்களை சொல்ல துவங்கினாள். நேரம் போனது தெரியாமல் இருவரும் வேலையில் மூழ்கியிருக்க, தேவி வந்து சாப்பிட அழைக்கும் வரையில் அவர்கள் பேச்சு ஓயவில்லை.

 

தேவி, “வேலை பார்த்தது போதும், ஒழுங்கா சாப்டுட்டு நேரமே தூங்குங்க!” என்றவர், “இன்னைக்கு இங்கயே தூங்கேன் கோகுல்?” என்றதும், “இல்ல அம்மா! ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு, அதனால அங்க போகணும்!!” என்றான்.

 

“எப்போ கேட்டாலும் இப்டியே ஏதாது சொல்லு” தேவி சொல்ல, பதில் சொல்லாமல் சிரித்தான் கோகுல். நிலா இதில் கலந்துக்கொள்ளாமல் சாப்பாட்டில் கவனம் வைக்க, “அந்த புள்ள என்ன அழகு, கம்பீரம் தெரியுமா? சின்ன வயசுல பார்த்தது! இப்போ ஆளே அடையாளம் தெரியல எனக்கு!!” என்றார் தேவி தன்போக்கில்.

 

இட்லியை வாயில் வைத்துக்கொண்டே கோகுல், “யாரம்மா சொல்றீங்க?” என கேட்க, “என் மாப்பிளைய தான் சொல்றேன்!! ஊருக்கு போயிருந்தப்போ ‘இதான் என் புள்ள’ன்னு வேணி காட்டுனா பாரு! நான் திறந்த வாய மூடல!” என்றார். கேட்டுகொண்டிருந்த நிலா கொஞ்சமும் சிரிக்காமல், “பல் டாக்டரா அவன்?” என்றாள். தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த கோகுலுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் புரை ஏற, தேவியோ அவளை முறைக்க முடியாமல் ‘புசுபுசுவென’ மூச்சுவிட்டார்.

 

அதன் பின்னர் அவர் சாப்பிட மட்டுமே வாயை திறந்தார். கோகுலும் நேரமானதால் கிளம்பிவிட, தன்னறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள் இன்பநிலா. அந்த வீட்டில் ஒரு எழுதப்படாத சட்டம் யாதெனில், நிலா அவலறையில் சென்று கதவை மூடிவிட்டால், எக்காரணம் கொண்டும் அவளை தொந்தரவு செய்ய கூடாது என்பதே!!

 

“மாப்பிளைகிட்ட இவ நம்பர கொடுத்துருக்கேன்னு சொல்ல மறந்துட்டேனே? இப்போ கூப்பிட்டா திட்டுவா! சரி காலைல சொல்லிக்குவோம்!” தேவி நிம்மதியாய் உறங்க சென்றுவிட, உறக்கம் தொலைத்த இனியன் தன் வீட்டு மொட்டைமாடியில் நின்று இலக்கின்றி பார்த்துகொண்டிருந்தான்.

 

அவனை தேடி வந்த இளையவன், “வானத்துல இருக்க நிலாவ பார்த்து உன் நிலாகூட டூயட் ஆடுறியா?” கிண்டலாய் கேட்டுகொண்டே அவன் அருகே வந்து நின்றான்.

 

மோனலிசா ஓவியம் போல சிரித்தான் இனியன். பதில் சொல்லாமல் அவன் சிரிக்க, “கல்யாணம் வேண்டாம்ன்னு தோணுதா? எதுவா இருந்தாலும் சொல்லு, அம்மாகிட்ட பேசிக்கலாம்” என்றான் அதியன். மீண்டும் அதே புன்னகையை உதிர்த்தவன், “நான் எப்டி உணருறேன்னே சொல்ல தெரியல சின்னா! காலைல கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னேன்! இன்னும் அஞ்சு நாள்ல கல்யாணம்ன்னு சாயங்காலம் சொல்றாங்க!! கல்யாணம் முடிச்சு அவங்க வீட்டோட நான் போய்டனுமாம்!” இனியன் குரல் மெலிதாய் கமர, “செழியா?” என தோளோடு அணைத்துக்கொண்டான் அதியன்.

 

அதியன், “கல்யாணத்தை தள்ளி வைக்க சொல்லவா?” என்றிட, “இல்லடா! கல்யாணம் செய்யுறதுன்னு முடிவாகிடுச்சு அது எப்போ நடந்தா என்ன?” என்றான் இனியன்.

 

“வேற என்ன? பொண்ணை புடிக்கலையா? நாந்தான் சொல்லிட்டே இருக்கேனே நிலா உனக்கு சரி வர மாட்டான்னு! நீ இன்னும் அவளை நேர்ல பாக்கல! சின்ன வயசுல பார்த்த அந்த க்யூட்டான நிலா இல்ல, இப்ப செம்ம டெரர் அவ!” அதியன் சொல்ல, சிரித்தான் இனியன்.

 

அவன் சிரிக்கவே, “அப்போ இதுவும் காரணம் இல்ல?” அதியன் கேட்க, ‘இல்லை’யென மறுத்தான் இனியன் இளஞ்செழியன்.

 

“எனக்கு இந்த கல்யாணத்துல எந்த பிரச்சனையும் இல்ல! அவங்க வீட்டோட இருக்க சொன்னதுல தான் கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. இத்தனை நாள் இருந்த ஊரு, வீடு, அம்மா, உன்னை எல்லாம் விட்டுட்டு அங்க போய் இருக்கனுமேன்னு!!” இனியன் சொன்னதும், “ப்பூ!! இவ்ளோதானா? இரு இப்போவே பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்!!” நகர்ந்த அதியின் சட்டையை பிடித்து இழுத்தான் இளஞ்செழியன்.

 

“முழுசா கேக்காம ஓடாத!” என்றவன், “வீட்ல நான் இருந்ததே ரொம்ப கம்மி, எப்பவும் ஹாஸ்டல், இல்லனா வெளியூர்ல கோச்சிங், எக்சாம்ன்னு சுத்திட்டு இருப்பேன்! அப்டிபட்ட எனக்கே இனி என் வீடு இது இல்ல, என் சொந்தம் இவங்க இல்லன்னு தோணுறப்போ உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுது!! அப்போ பொண்ணுங்களுக்கு எப்படி இருக்கும்? நிஜமாவே அவங்க எல்லாம் கிரேட்டா! யாருன்னே தெரியாத ஒருத்தனை கட்டிக்கிட்டு அவன் சொந்தம் எல்லாம் தன் சொந்தம்ன்னு எப்படிடா அப்படியே மாறிக்குறாங்க?!” இனியன் கேட்க, கடுப்புடன் முறைத்தான் அதியன்.

 

“அப்போ உனக்கு இந்த கல்யாணத்துல முழு விருப்பம்?” என கேட்க, “நம்ம அம்மாக்கு நீ இருக்க! தேவி அம்மாக்கு பையனா இனி நான் இருப்பேன்!!” தன் விருப்பத்தை மறைமுகமாய் சொன்னான் இனியன்.

 

கையில் இருந்த காகிதத்தை காட்டிய அதி, “ஹும்ம்! அந்த நிலா போன் நம்பர உன்கிட்ட குடுக்க சொல்லி அம்மா குடுத்துச்சு! கசக்கி தூக்கி போட்டுடலாம்ன்னு தான் நினச்சேன்!! இனி கஷ்டம்!!” அவன் கையில் திணித்துவிட்டு, “இந்தா என் ‘அண்ணி’ நம்பரு! கல்யாணத்துக்கு முன்ன பேசியாச்சு பாரு!” சொன்னதோடு கீழிறங்கி சென்றுவிட்டான் அதியன்.

 

கையில் இருந்த காகிதத்தை விரித்து அதில் இருந்த எண்ணை வாசித்தான் இனியன். காகிதத்தில் அவள் முகம் தெரிவதை போல மாயம் தோன்றியது. அவள் புகைப்படத்தை அம்மா காண்பிக்கையில் சில நொடி கூட சரியாய் பார்க்கவில்லை என அவன் நினைக்க, இப்போது அவள் நுனி மூக்கு மச்சம் கூட கிரிஸ்டல் கிளியராய் அவன் நினைவில் வந்தது.

 

‘பேசலாமா? வேணாமா?’ அவன் மனமும் மூளையும் மாறி மாறி பட்டிமன்றம் நடத்தியதில் மனது வெற்றிவாகை சூடிவிட, தன் அலைபேசியில் அவள் எண்ணை பதிந்தான். அழைப்பு சென்றதும் காதில் அவன் வைக்க, இதயம் படபடவென துடித்தது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, வலுக்கொண்டு பிரித்தான் அதை. ரிங் போய்க்கொண்டே இருக்க, அவள் எடுக்கவேயில்லை. இறுதி நொடி வரை காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காதில் இருந்து எடுத்தவன், எதேச்சையாய் நேரம் பார்க்க அது பதினொன்றை கடந்து ஓடிக்கொண்டிருந்தது.

 

‘ஹையோ’ என தலையில் அடித்துக்கொண்டான் இனியன். ‘ஒரு பொண்ணுக்க்கு இந்த நேரத்துல கால் பண்ணிருக்கியே! அவ உன்னை பத்தி என்னடா நினைப்பா? ச்ச!!’ இனியன் தனக்கு தானே புலம்பிக்கொண்டிருக்க, அவன் கைபேசி அதிர்ந்தது.

 

திரையில் மின்னிய எண் நிலாவினுடையது என பார்த்தவுடன் தெரிய, அவன் விரல்கள் அழைப்பை எடுக்க சொல்லி பரபரத்தது. ‘எதுக்கு கூப்பிட்டீங்கன்னு கேட்டா என்ன சொல்றது?’ அவன் யோசிக்கும் முன்னே அவன் விரல்கள் அழைப்பை இயக்கியிருக்க, மறுபுறம் ‘ஹலோ ஹலோ’ என்ற அவள் குரல் இவன் செவிகளை சேர்ந்தது.

 

“இந்த நேரத்துல யாரது?” மிரட்டலான அவள் குரலில், ‘வாய்ஸ் அப்டியே மாறிடுச்சுல?’ என நினைத்துக்கொண்டான் இனியன்.

 

‘ஹலோ போன் போட்டுட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” அவள் குரலில் கோவம் தெரிக்கவே, டீச்சருக்கு பயந்த மாணவன் போல, “நான் தான்” என்றான் இனியன்.

 

“நான்தான்னா? யாரு?” தூக்கம் கலைந்த கடுப்பில் பேசினாள் நிலா.

 

“நான் செழியன்!” என அவன் சொன்னதும், “ஏன் சர், உங்களுக்கு பேச வேற நேரம் இல்லையா? நைட்ல கூப்பிட்டா எனக்கு பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா?” நிலா கத்தவே, தன்னை அடையாளம் தெரியாமல் பேசுகிறாள் என புரிந்துக்கொண்ட இனியன், “நான் இனியன் இளஞ்செழியன் பேசுறேன்” என்றான்.

 

அவன் பெயர் சொன்னதும் மறுபக்கம் நிசப்த்தமானது. அவள் குரல் கேட்காமல் இருக்கவே, “இதழி?” என்றான் மென்மையாய். நிலா அந்த வார்த்தையை கண்மூடி தனக்குள் பொதித்துக்கொண்டாள். நொடியில் தன் இளவயது நினைவுகளுக்கு அது அழைத்து செல்லவே, அதன் இனிமையை ரசித்துக்கொண்டிருந்தாள்.

 

“இதழி? நான் உன் இனியன் பேசுறேன்!” வார்த்தை கோர்த்து அவன் சொல்லிவிட, “பேசுற நேரமா இது?” என்றாள் நிலா. குரல் சற்று குழைந்து போனது.

 

“சாரி! நேரம் பாக்காம பண்ணிட்டேன்!!” இனியன் மெதுவாய் சொல்ல, மௌனமாய் சிரித்துக்கொண்டாள் நிலா. “இதை சொல்ல தான் கூப்பிட்டியா?” என்றதும், “இல்ல, சும்மா பேசனும்ன்னு தோனுச்சு!” தயக்கத்தோடு அவன் பேசுவது நிலாவுக்கு சுவாரஸ்யத்தை கொடுத்தது.

 

“இத்தனை வருஷம் தோணலையா?” அவள் கேட்க, என்ன சொல்வதென தெரியாமல் அமைதியாய் இருந்தான் இனியன்.

 

“கேக்குறேன்ல? சொல்லு?” அவள் தூண்ட, “இப்போ நமக்கு கல்யாணம் ஆகபோதுல? அதான்!!” என இழுத்தான் இனியன். முகத்தில் புன்னகை கீற்றாய் வந்து ஒட்டிக்கொண்டது.

 

“ஹோ!!” என்றதோடு நிலா நிறுத்திக்கொள்ள, அதற்க்கு மேல் என்ன பேசுவது என இனியனுக்கும் தெரியவில்லை. இருபுறமும் அமைதியாகிவிட, “சரி நான் வைக்குறேன்” என்றாள் நிலா.

 

அவசரமாய், “நாளைக்கும் கூப்பிடவா?” என்றான் இனியன். இதழ்க்கடையில் புன்னகை அரும்ப, “எதுக்கு?” என்றாள் அவன் என்ன சொல்கிறான் என்று பார்க்க.  

 

அவன் “பேசலாம்ன்னு” என்று சொல்லவே, “ஹ்ம்ம்… சரி!” என்றாள் நிலா. அவள் அழைப்பை துண்டிக்க போக, “எப்போ கூப்புடட்டும்?” என்ற அவன் குரல் அவளுக்கு இன்னும் சிரிப்பை கொடுத்தது.

 

அவள் பதில் சொல்லாது இருக்க, “இல்ல, ஏதாது வேலை இருக்கும்ல உனக்கு? அதான்!!” என்றதும், “இதே நேரம் கூப்புடு!” என்றாள்.

 

இனியன், “பதினொரு மணிக்கா? நீ தூங்கிடமாட்ட!?”

“மாட்டேன்!” என்ற சொல்லோடு அழைப்பை துண்டித்தாள் நிலா. இனியன் வானத்தில் இருக்கும் நிலாவை கண்டு சிரித்துக்கொண்டே விசிலடிக்க, படிகட்டின் பக்கம் இத்தனை நேரம் ஒளிந்திருந்த வேணியும் அதியனும் கீழே இறங்கி சென்றனர்.

அதியன் முகத்தை ‘உம்மென’ வைத்திருக்க, “பாத்தியா? என் புள்ளைக்கு எது புடிக்கும்ன்னு எனக்கு தெரியாது!! வேணியா கொக்கா!” என நிம்மதியாய் ‘வேணி கைய வச்சா அது ராங்கா போனதில்ல’ என்று பாடிக்கொண்டே அவர் அறைக்கு சென்றார்.

 

அதியனோ, “நல்லது நடந்தா சரிதான்” என்ற எண்ணத்தோடு உறங்க சென்றுவிட்டான்.

 

இன்பநிலா மனதுக்குள் பல நினைவுகள் வந்து போனது. சிறு வயதில், “இதழி, இதழி” என இனியன் அழைத்த குரல் இப்போதும் அருகே கேட்பதை போல இருந்தது. கண்மூடி படுத்தவளுக்கு நிம்மதியான உறக்கம் பல நாட்களுக்கு பின் கிடைக்க, “உன்னை விடமாட்டேன்டா இனியா” சிரிப்போடு உறங்கினாள் இனியனின் இதழி.

-தொடரும்…

 

Advertisement