Advertisement

                          

                          விலகிடாது நகிலா…

 

மாலைச் சிவப்பை பூசிக்கொண்டிருந்த அந்த வானத்திற்கு நேரெதிராக…பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும்…செடிகளும்…அடர்ந்திருந்தது அந்த பூங்காவில்…!

 

விடுவிடுவென வேர்க்க விறுவிறுக்க உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிலரின் நடை…!

சறுக்கு மரத்தில் ஏறிக்கொண்டு அம்மாவை பாவமாக விளையாடச் சொல்லி கேட்கும் திராட்சை விழிகள்…!

 

உடன் வந்தவர்களின் நாக்கு தள்ளும் அளவிற்கு அங்குமிங்கும் ஓடி ஆட்டம் காட்டும் சில்வண்டுகளென திரும்பிய இடமெல்லாம் சந்தோஷப் பூக்கள்…!

 

கடகடவென ஓடிவந்து தன்மேல் இடித்துவிட்டு ஒரு “சாரிக்கா!” உடன் ஓடிய பையனைப் பார்த்துப் புன்னகைத்தவள்…அங்கிருந்த ஒரு கல் பெஞ்சை நோக்கி தன் நடையை கட்டினாள்.

 

அவளது வழக்கமான இடமது…!

 

அதை நெருங்கியவளுக்கோ முகத்தில் சந்தோஷச் சாயல்.

 

“என்ன சார் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டாரு!!!” என்று அவள் வம்பிழுக்க அவனோ

 

“அதுசரி…வந்தாலும் தப்பு வராட்டியும் தப்பா…?”

 

“ரொம்ப நேரமாச்சா…?”

 

“இல்லப்பா இப்பதான் வந்தேன்…”

“ஓ…”

 

“சரி எப்படிபோச்சு இன்னைக்கு…?”

 

“அதையேன் கேக்கற நிது…”என்று பெறுமூச்சுவிட்ட முகிலினியைப் பார்த்து

 

“ஏன்டா…எனி ப்ராப்ளம்…?” என்று வினவினான் அந்த ‘நிது’ வாகப்பட்ட நித்யன்.

 

“ப்ராப்ளம்லாம் இல்ல நிது…பட் என்னவோ எப்போ சாயந்திரம் ஆகும்னு இருந்தது” என்று அவள் சொல்லியதிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது பெரிய கதை ஏதோ வைத்திருக்கிறாளென்று.

 

அவளுக்கோ அவள் மனம் ‘சொல்லிரு முகி…இன்னைக்காவது சொல்லிரு’ என்று வற்புறுத்த அதை புறந்தள்ளியவளாக அவனிடம் அன்றைய தினத்தைப் பற்றி ஆரம்பித்தாள்.

 

காலையில் என்ன சாப்பிட்டாள் என்பதில் ஆரம்பித்து இப்பொழுது கொஞ்ச நேரத்துக்கு முன் இடித்துச் சென்ற சிறுவன் வரை ஒன்று விடாமல் அவனிடம் கொட்டியிருந்தாள்.

 

மூச்சு விடாமல் பேசியவளையே சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 

“சத்யா சரியில்ல நிது…” என்று மொட்டை கட்டையாக ஆரம்பிக்க அவனோ அதைக் கண்டுக் கொள்ளாது

 

“ஏன்டா…?” என்றிருந்தான் என்னவோ தெரிந்தாற்போல.

 

“அவ மத்தவங்கள பத்தி தப்பா பேசறாபா…அது தப்பில்லையா…ஒருதங்களோட கேரக்டர அஸாஸினேட் பண்றது…?”

 

“ஆமா முகி தப்புதான் ஆனா…நீ என்னதான் சொன்னாலும் சிலருக்கு புரியாதுடா…சோ நீ ரொம்ப டென்ஷன் எடுத்துக்காத…ஜஸ்ட் இக்னோர் சச் பீபிள்!”

 

“நீ எப்படி நிது இவ்ளோ ஈசியா சொல்யூஷன் சொல்ற…?” என்று ஆச்சர்யமாக வினவினாள்.

 

“அதுவா சிம்பில்டா…நீ ப்ரச்சனைக்கு உள்ள இருந்து பாத்த…நான் தள்ளி வச்சு பாத்தேன்!”.

 

என்று சிரித்தவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் உள் மனம் “சொல்லிவிடு’ என்று குரலெழுப்ப…பாவம் அவளுக்குதான் நாவெழவில்லை…

 

“சாப்டியா முகி…?” என்றவன் அவள் விழிப்பதைப் பார்த்துவிட்டு

 

“எத்தன தடவை சொல்றது உனக்கு…? நேரத்துக்கு சாப்பிடுடா…அப்டி என்ன பெரிய வேலை…?” என்று அவன் கடிய…அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்.

 

“நீ ஏன் நிது இவ்ளோ பாசமாயிருக்க…?” என்று வினவ…அவனுக்கோ அதிர்ச்சி…அவன் கேள்விக்கு இது பதிலல்லவே…!

 

அவன் அவளையே பார்க்க அவளே தொடர்ந்தாள்.

 

“இவ்ளோ பாசம் வேண்டாம்பா…இதுதான் நம்மள பிரிச்சுது!!!” என்றவள் சொல்லிக் கொண்டேப் போக நித்யனோ

 

“ப்ளீஸ் முகி…வேண்டாமே!!!” என்றான்.

 

அவளுக்குள்ளோ பல எரிமலைகள் வெடித்துச் சிதற காத்துக் கொண்டிருந்தன.

 

“ஏன் அன்னைக்கு அப்படி பண்ண நிது…?” என்று அவள் திரும்ப அவனோ தூரத்தில் சிறு கோடாகி மறைந்திருந்தான்.

 

“சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக

காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்

ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்

எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ? ஒ.. ஹோ..”

 

வீட்டினுள் நுழையும்பொழுதே “எங்கடா போன…? சித்தி வந்து வெய்ட் பண்றாங்க…” என்று உரைத்த அண்ணனை ஒரு வெற்று பார்வை பார்த்தவள் தலையை மட்டும் ஆட்டிவிட்டு

 

“வரேண்ணா…” என்று உள்ளேச் சென்றுவிட்டாள்.

 

கலங்கிய கண்களுடன் நின்ற அன்னையிடம் வந்தவனோ

“எல்லாம் சரியாகிடும் மா…” என்க அவரோ

 

“எப்படிடா…? அவன் இறந்து ஆறு மாசமாகுது…இன்னும் இவ இப்படியே இருக்காளேடா…எனக்கு பயமாயிருக்கே!!!” என்று வருந்திய அன்னையை தோளோடு சேர்த்தனைத்தவன்

 

“அம்மா…அந்த ஆக்ஸிடென்ட்ல இருந்து அவள் காப்பாத்தினதே நிது தானேமா…அவ நிலைமைல இருந்து யோசிச்சுப் பாருமா…அதுவும் எப்படிப்பட்ட சூழ்நிலைல…” என்றவனுக்கே கண் கலங்கியது…அவனுக்கோ ‘இப்படியா நடக்கவேண்டும்’ என்றிருந்தது.

 

“என்னபா பண்றது…?” என்று அப்பாவியாய் கேட்ட அன்னையிடம்…

 

“இல்லம்மா…முன்னைக்கு இப்போ பரவால்ல…சரியாகிடும் நம்ம அவளுக்கு இருக்கோம்னு தெரிஞ்சாலே போதும்மா..” என்று அவருக்கு ஆறுதல் கூறியவன் மனதில் வந்தாடியது அந்த கடிதம்…இரண்டு நாட்களுக்குமுன் அவள் மேசையில் அவன் கண்டது…

 

         “உன்கிட்ட சொல்லனும் சொல்லனும்னு நினைப்பேன்…ஆனா சொன்னது இல்ல…இப்ப நான் சொல்றேன் ஆனா கேக்கறதுக்கு நீயில்ல…”

 

வாழ்க்கையில் நாம் அப்புறம் என்று தள்ளி போடும் சில விஷயங்களுண்டு…ஆனால் அந்த அப்புறம் வந்ததா…என்றால் சத்தியமாக வராது…அப்படிப்பட்ட நிலையில் தான் முகிலினியும்…!

 

மகளைப் பற்றிய கவலையில் அன்னையும்…எப்படியாவது இந்த சூழ்நிலை மாறும் என்ற நம்பிக்கையில் அவனும்…!

 

                             *********

 

அந்த மை பூசினாற்போலிருந்த வானில் சினுங்கிய நட்சத்திரங்களையே தன் அறையிலிருந்த யன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தவள் மனதிலோ….’எப்படியாவது நாளைக்கு சொல்லிரனும்…’ என்றே நினைத்திருந்தாள்.

 

அவளது ஃபோன் சினுங்க அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்தவளோ முகம் மலர அதையெடுத்து.

 

“சொல்லு நிது…” என்றாள்…

Advertisement