Advertisement

மின்னல்-18

 

இரவு வெகு நேரம் சென்று உறங்கியதலோ…இல்லை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டதாலோ என்னவோ… நிம்மதியான… ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள்…குறிஞ்சி!

 

கதிரவன் சோம்பலாக எழுந்துக் கொண்டிருந்தான்… இலைகளின் மீது இன்னும் பனித்துளி உறங்கிக் கொண்டுதானிருந்தது! இதம் தரும் காலைநேர கதிரொளி இன்னும் அவளறை பக்கம் வரவில்லை போலும் குளிரில் சற்று குறுகி படுத்திருந்தாள். ஆதவன் எழுந்துவரும் அதிகாலை நேரமது!

 

ஐந்து அல்லது ஐந்தேகால் இருக்கலாம்… மெது மெதுவாக அவளது தூக்கம் கரைந்துக் கொண்டிருக்க அவள் நெற்றியில் பதிந்து சென்ற இதழ் அத்தனை தூக்கத்திலும் தித்திக்கத்தான் செய்தது அவளுக்கு!

பதித்தது அஷ்மியல்லவா!

 

நேரம் செல்ல செல்ல கதிரொளி அவள் முகத்தில் முத்தமிட  எழுந்துக் கொண்டவள் பக்கத்தில் பார்த்தாள் அஷ்மி இல்லை… ஏன் அந்த அறையிலேயே அவள் இருப்பதற்கான அறிகுறி ஏதுமின்றி அமைதியாய் காட்சியளித்தது.

புறுவ சுருக்கத்துடன் எழுந்தவளுக்கு அப்பொழுதுதான் பொறிதட்டியது! அஷ்மி காலையிலேயே முத்தமிட்டுச் சென்றது. இது இப்பொழுது கொஞ்ச நாளாக வழமையாய் நடக்கும் ஒன்றுதான்.   விடுமுறைக்காலம் வேறு… அந்த நேரத்தை வீணடிக்க மனமில்லாது அஷ்மி CS (company secretaryship) coaching சேர்ந்திருந்தாள்.

 

காலை ஆறு மணி பாட்ச்சும் மாலை ஆறு மணி பாட்ச்ச் என்று இரண்டு இருக்க இவள் காலைநேர வகுப்புகளுக்கு சென்றுக் கொண்டிருந்தாள்… அதிகாலையிலேயே கிளம்பிவிடுவதாலோ என்னவோ தூங்கிக் கொண்டிருந்தாலும் விடாது இவளின் நெற்றியில் தன் இதழ் பதித்தே செல்வாள்… என்னதான் தூக்கத்தில் இருந்தாலும்… அது ஆழ்ந்த உறக்கமே என்றாலும் இவள் இதழ் பதிக்கும்பொழுது குறிஞ்சியின் இதழில் தானாக புன்னகை பூக்கும்… அதையே சற்று நேரம் பார்ப்பவள் பின் கிளம்பிவிடுவாள்.

இன்றும் அப்படிதான் கிளம்பியிருக்கிறாள் போலும்.

ஏனோ அந்த காலை நேரத்திலேயே குறிஞ்சியின் மனதில் தென்றல் காற்று வீச மெத்தையை விட்டிறங்கியவள்  வழமைபோல் காஃபிதான் முதலில் என்றில்லாமல் இன்று பல்துழக்கி முகம் கழுவி வந்தாள்.

 

ஹாலிற்குள் அவள் நுழையும் பொழுதே அவள் நாசியை ஃபில்டர் காஃபியின் நறுமணம் தீண்டியதென்றால் செவிகளை தீண்டியது ஜிதேந்திரனின் பாடல்.

 

தனக்கு படித்த பாடலை முணுமுணுத்தவாறு  அவர்தான் காஃபி தயாரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது இவளுக்கு நிச்சயம்.

 

சத்தம் அடுக்களை பக்கமிருந்துவர  மெல்லமாக நடந்துச் சென்று அறை வாயிலிலேயே வலது  கையை கழுத்துக்கு கொடுத்து முழங்கையை  நடையில் ஊன்றியவாறு நின்றவள் அவர் அந்த முனுமுனுப்புடனே காஃபி கலப்பதை ரசித்தவாறு நின்றாள்.

இவள் பக்கம்கூட திரும்பாமல் “என்னடாமா சீக்கிரமா எழுந்துட்ட இன்னைக்கு???” என்று அவர் வினவ மனதுக்குள் மெச்சிக் கொண்டவள் வெளியில்

“எப்படி???” என்றிருந்தாள் ஒற்றை வார்த்தையாக

 

“இதுல என்னடா இருக்கு? எல்லாம் ஒரு உணர்வு தான் யாழி வந்து பக்கத்துல நின்னா அதக்கூடவா ஜிதேனுக்கு தெரியாது?” என்றவர் இலகுவாக முடிக்க  அவர் கழுத்தை பின்னிருந்து கட்டிக் கொண்டவள் அப்படியே எக்கி முத்தமிட முயற்சிக்க பாவம் அவளது உயரம் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை

 

“அப்பூ! கொஞ்சம் குனி” என்க அவரும் பின்னிருந்து அணைத்திருந்தவளுக்கு வசதியாக குனிந்தார். அதற்காகவே காத்திருந்தது போல் அவர் கன்னத்தில் அவள் அழுந்த முத்தமிட அவரும் லேசாக தலையை திருப்பி அவள்  நெற்றியில் முத்தமிட்டுவிட்டு

 

“இப்போ எப்படிடா இருக்கு தலைவலி?”

“ம்ம்ம் பரவால்ல” என்றவள் அந்த சமையல் மேடைமேல் இருந்த சாமான்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

 

“லீல் எங்க?”

“இன்னும் எழுந்துக்கலைடா… பாவம் ட்ராவல் ஒத்துக்கலை போல டயர்டாகிட்டா…தூங்கறா”

“ஓஓஓ அஷ்மி எப்போ கிளம்புனா?”

“கொஞ்ச நேரத்துக்கு முந்திதான்” என்று அவர் வாய் பேசினாலும் கைகளிரண்டும் தானாக தன் வேலையை செய்தது.

 

இரண்டு மக்கில் காஃபியை ஊற்றப் போனவர் ஒரு நொடி நிதானித்து பின் உள்ளிருந்து இரண்டு டபரா செட்டை எடுத்து அதில் விட்டு ஆத்த அவரையே பார்த்துக் கொண்டிருந்தவளோ

“ஏன் ப்பூ மக்ல விடாம இதுல விடற???”

“இதுல விட்டு ஆத்தி நொரை தளும்ப தளும்ப குடிச்சா இன்னும் நல்லாருக்கும்டா…ஃபில்டர் காஃபிக்கு இதான் பெஸ்ட்!” என்றவர்  இரண்டையும் ஹாலிற்கு எடுத்துச் செல்ல அவளும் பின் தொடர்ந்தாள்.

 

இது வழமையான ஒன்றுதான் யார் சமைத்தாலும் அதை பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டிருப்பாள் குறிஞ்சி! கேட்டால் “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கு  அதுவும் ரசிச்சு சமைச்சா அது அவங்க சமைக்கும்போதே அப்படியே கவிதையா இருக்கும் பாரு…” என்பாள். அவள் எல்லாவற்றிலும் ஏதோ ஒன்றை தேடுபவள்… எல்லாவற்றையும் ரசிப்பாள்…அதை சொல்லியும் விடுவாள்!

 

ஹாலிற்கு வந்தவளிடம் அவர் ஒரு தம்ளரை நீட்ட அதை வாங்கிக் கொண்வள் அவர் தரையில் அமர்வதைக் கண்டு அவர் பக்கத்திலேயே அமர்ந்துக் கொண்டாள்.

 

என்ன பேசினார்கள் ஏது பேசினார்கள் என்றால் அது அவர்களுக்கே தெரியாது… ஆனால் பேசினார்கள் காஃபி தம்ளர்கள் காய்ந்துப் போகும்வரை பேசினார்களிருவரும்.

மண்வாசத்தில் ஆரம்பித்து மல்ட்டிநேஷனல் கம்பனிவரை எல்லாத்தையும் அலசினார்கள்.

வானம் சிவந்து இப்பொழுது வெளுத்துவிடவே ஜிதேந்திரன் அலுவலகம் கிளம்புவதற்காக எழுந்துக் கொண்டார்…

“சரிடா லேட்டாச்சு நான் இன்னைக்கு சீக்கிரமா வரப் பாக்கறேன்” என்றவர் எழுந்துக் கொள்ள அவளும் தலையாட்டியவளாக தங்களறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

தங்களறைக்குள் வந்தவள் முதல் வேளையாக ஃபோனை தேடி எடுத்து நரேந்திரனுக்கு அழைத்திருந்தாள்.

 

அந்த காலை நேரத்தில் அவளது அழைப்பை எதிர்ப் பார்த்திருக்கவில்லை என்பது அவனது குரலிலேயே தெரிந்தது

 

“சொல்லு யாழி!”

 

“நான் ஊருக்கு போகனும்.”

 

“என்னது????” என்றவர் ஒரு நொடி ஃபோனையே வெறித்துவிட்டு மறுபடியும் காதில் வைக்க அவளோ

“ஆமா நான் ஊருக்கு போறேன். பீ ரெடி கொஞ்ச நேரத்துல அங்க வரேன்!” என்றவளின் குரலில் இம்முறை ‘நீ வந்தால் வா வராட்டி போ ஆனால் நான் போகத்தான் போகிறேன்’ என்ற உறுதி… அந்த உறிதியில் அதிர்ந்தவனாக

 

“லூசுத்தனமா பேசாத யாழி!!” என்றவன் எப்படியாவது அவள் முடிவை மாற்றிவிடும் முயற்சியில் கத்த அவளோ தான் சொன்னதுதான் கடைசி என்பது போல் ஃபோனை அணைத்திருந்தாள்.

 

இவனது கத்தலிலேயே அறையிலிருந்து வெளியே வந்திருந்தாள் ரேவதி… நேற்றிரவு தாமதமானாதால் நரேனுடனே தங்கிவிடுவதாக சொல்லி தங்கியிருந்தாள்.

 

“என்ன இந்திரா???” என்றாள் அவள் அதிர்ச்சியாக

அவளிடம் குறிஞ்சியின் முடிவைப் பற்றி கூறியவன் “அவ என்ன லூசா ரேவதி???” என்று கடுப்பில் கத்த அதற்கு ஆதரவாகவோ இல்லை எதிராகவோ எந்த பதிலையும் கொடுக்காமல் அவன தோளில் லேசாக தடவியவள் சென்றுவிட்டாள்.

 

அவனுக்குத்தான் தலையை பிய்த்துக் கொள்ளலாம்போல் இருந்தது. இப்படியொன்றை அவன் எதிர்ப் பார்த்திருக்கவில்லையல்லவா!

 

                                                 **********

 

அந்த அறையில் லேசாக சத்தம் எழுப்பிய வண்ணம் அந்த காத்தாடி சுற்றிக் கொண்டிருக்க மூவறும் அதற்கடியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தனர்.

குறிஞ்சி சற்று கால்களை அகட்டி முழங்கையால் தொடையில் முட்டுக் கொடுத்து தாடையை தாங்கியவாறு அமர்ந்திருக்க அவளுக்கு நேர் எதிர் வலதுபறத்தில் நரேனும் இடது புறத்தில் ரேவதியும் நின்று இவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்… இல்லை நரேன் மட்டும் முறைத்துக் கொண்டிருந்தான்.

 

“அப்போ நீ முடிவே பண்ணிட்ட???” என்ற நரேனின் குரலிலேயே அவனது அதிருப்தி தெரிய அதை கவனியாதவளாக

 

“ஆமா!” என்றிருந்தாள் ஒற்றை வார்த்தையாக

 

அவள் பக்கம் வந்த ரேவதி அவளை அப்படியே அணைத்துக் கொண்டு “தேங்க்யூ சோ மச் யாழி!!! பெஸ்ட் ஐடியா!!!” என்று பாராட்ட நரேனின் காதினில் புகை வராத குறைதான்.

 

“அவதான் லூசுத்தனமா பேசறான்னா நீ அவளுக்கு கம்பனி குடுக்கறீயா???” என்று பொரிந்து தள்ள ரேவதியோ

 

“இல்ல இந்திரா… அவ சொல்றதுதான் சரி… நல்ல ஐடியா “

 

“அறிவு கெட்டத்தனமா பேசாத ரேவதி! இது என்ன படமா???”

“படமில்லதான்… ஆனா இதவிட நல்ல ஐடியா வேற இப்போதைக்கு நம்மட்ட கிடையாது!”

“ஆனா…” என்று ஆரம்பித்தவனை

“இதுதான் ஒரு வழி இந்திரா… லாஸ்ட் ட்ரை!” என்க அதற்குமேல் அவனால் மறுத்து பேச இயலவில்லை

 

“அப்போ யாழி நம்மூரூக்கு வரப்போறா நாம சேரப்போறோம்!!!!” என்று குழந்தையாய் குதூகலித்தவள் குறிஞ்சியை கட்டிக் கொள்ள அவளையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டதோ என்னவோ

 

“யெஸ்!!!!” என்றாள் உற்சாகமாக ஆனால் திடீரென்று ஒரு சந்தேகம் எட்டிப் பார்க்க  ரேவதியைப் பார்த்தவள்…

 

“ஆமா மொதல்ல வீட்ல யார் யாரெல்லாம் இருக்காங்க????” என்றாள்

 

முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தவள் பின் அவள் தீவிரமான முகபாவத்துடன் எப்படி விளக்குவதென்று யோசித்துக் கொண்டிருக்க உள்ளே சென்ற நரேன்  அவன் ஸ்டடி ரூமில் இருந்து  வெள்ளை நிற போர்ட்டையும் மார்க்கரையும் எடுத்துவந்து எதையோ கிறுக்கி கொண்டிருக்க சில மணித்துளிகள் கரைந்திருக்கும் பின் அவனே

“இங்க வாங்க இரண்டுபேரும்” என்றழைத்தான்

 

வந்து பார்த்த ரேவதியின்.கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன… பின்னே மூன்று தலைமுறையையும் மிகத் தெளிவாக  வரைந்திருந்தான் மைன்ட் மேப்பாக.

 

மின்னுவாள்….

Advertisement