Advertisement

  மின்னல்-15

 

“அஷ்மீ!!!!” என்றவள் தொண்டை தண்ணி வற்ற கத்திக் கொண்டிருந்தாள்.

“என்ன இஞ்சி?”

“இன்னும் எவ்வளவு நேரம்?”

“கொஞ்சம் டைமாகும்டா…”என்றவள் மறுபடியும் அந்த லாப்டாப்பிற்குள் ஆழ்ந்துவிட… அதில் கடுப்பாகிப் போனவள்…

 

“சரி அப்போ நான் ரேவ்ஸ் பார்க்கப் போறேன்” என்றாள்.

பின்னே அவளும் எவ்வளவு நேரம்தான் சமாளிப்பாள்.

ரெஸ்டாரன்டிலிருந்து  கிளம்பியவர்கள்… வீட்டகனுள் நுழையும் முன்னரே அஷ்மிக்கு அழைப்பு வந்திருந்தது… ஒரு நல்லுள்ளம் செய்த வேலை… அப்பொழுது அமர்ந்தவள்தான்… இவ்வளவு நேரமாகியும் கண்களை கணினியகலிருந்து  எடுக்கவில்லை…!

 

அவளும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து விட்டாள்.

 

ஆனால் அஷ்மிக்கும் அதுவே சரியாகப் பட “சரிடா பாத்து போய்ட்டுவா” என்றுவிட்டாள்.

 

கதைவை பூட்டிக் கொள்ளும்படி சொன்னவள் … அணிந்திருந்த டீ ஷர்டின் மேல் ஒரு புல்லோவரை மட்டும் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டாள்….ஆராவையும் அழைத்துக் கொண்டுதான்..!!

 

பத்தே நிமிடத்தில் அவனிருந்த அப்பார்ட்மெண்ட அடைந்திருந்தவள்… பின் பக்கமாக பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்திவிட்டு…லிஃப்டை தவிர்த்தவள்…இரண்டிரண்டு படிகளாக ஏறினாள்(தாவினாள் என்பதே சரியாகும்:p).

 

‘என்னடா இது கதவு திறந்தே கிடக்குது??? இந்த நரிக்கு பொறுப்பேயில்ல…ஹ்ம்ம்’ என்றெண்ணியவள்… ஒரு பெருமூச்சுடன் உள்ளே செல்ல எத்தனிக்க அப்பொழுதுதான் கவனிக்க நேர்ந்தது அவர்கள் இருவரின் உரையாடலை!

 

‘போகலாமா…? வேணாமா?…’ என்ற சந்தேகத்தில் இருந்தவள் ஏதோ  ஒரு உந்துதலில் உள்ளே சென்றுவிட்டாள்.

உள்ளே வந்தவளை ஒரு நிமிடம் அதிர வைத்தது ரேவதியின் விசும்பல் சத்தமும்!… நரேனின் குரலில் இருந்த கலக்கமும்.

 

அப்பொழுதுதான் அவன் ஏதோ சத்தியம் வாங்கிக் கொண்டிருந்தான்…

 

“அதுவரைக்கும்… இத பத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாது!” என்றவன் கேட்க

 

ரேவதியும் “சரி இத பத்தி யார்ட்டயும் வாய திறக்க மாட்டேன்…மூச்!”

 

“குட் கர்ள்!” என்க அவள் சிரித்துவிட்டாள்.

 

ஏனோ இந்த வார்த்தைகள் மட்டும் அவள் காதில் தெளிவாக வந்து விழ அவளும் சற்றும் யோசியாமல்  கேட்டிருந்தாள்…

 

“எத பத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாது நரேன்???” என்ற குரலில் இருவரும் திகைத்தனர்…

 

அங்கு அவளை எதிர்ப் பார்த்திராத அதிர்ச்சி அது!

 

ஆனால்….அந்த அதிர்ச்சியைத் தாண்டி வேறென்னவோ…இருந்ததோ ரேவதியின் கண்களில்…?

 

குறிஞ்சி முட்டாளல்லவே…! வயதில் சிறியவளாக இருக்கலாம் ஆனால் வயதிற்கும் புத்தி கூர்மைக்கும் சம்பந்தமில்லையல்லவா…!

 

கண்டுக்கொண்டாள்! ரேவதியின்.பார்வை மாற்றத்தையும்…நரேந்திரனின் தடுமாற்றத்தையும்..!

 

சில நொடிகளே என்றாலும் அது அவளுக்கு உரைக்காமல் இல்லை!

 

“ஹே!….நீ…எங்க இங்க…? அஷ்மி வரலையா?” என்று முதலில் சற்று தடுமாறியவன் பின் சுதாரித்துக் கொண்டு சமாளித்தான்.

 

‘இவர்கள் தன்னிடம் இருந்து எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள்…அதில் தனக்கு ஏதோ சம்பந்தமிருக்கிறது…’ என்றுணர்ந்தவளின் பார்வை இப்பொழுது கூர்மையானது!

 

அவள் நரேனின் கண்களையே உற்று நோக்கியவாறு

 

“என்ன நரேன்?” என்றாள்.

 

“ஒன்னுமில்லையே! இது ஊர்ல… அதான் பேசிட்டிருந்தோம்” என்றவன் அவள் கண்களை பாராமல் கூற  ‘நான் நம்பவில்லை!’ என்பதாக ஒரு பக்க தோளை குழுக்கியவள்  கைகளிரண்டையும் கட்டிக் கொண்டு “ஏன் நரேன் பொய் சொல்ற?” என்க அதில் விசுக்கென்று நிமிர்ந்தவன்  ஏதோ சொல்ல வர அவனை தடுத்தவள்…

 

“நீ எதையோ மறைக்கற நரேன்… இப்போ இல்ல ரொம்ப நாளாவே…” என்றவளை அதிர்ந்து நோக்கினான்.

 

‘இவளுக்குத் தெரியுமா!???’ என்று உள்ளம் பதற அப்படியில்லை என்று அவளே தொடர்ந்தாள்…

“ஆனா என்னன்னு தான் தெரியல… எனக்கு தெரியக்கூடாதுனு நினைக்கிறல…” என்று முடித்தவளின் குரலில் வருத்தம் தொனித்ததோ?

 

“அப்படியில்லடா…” என்று ஆரம்பித்தவனுக்கு அதற்குமேல் என்ன சொல்லவென்று தெரியாமல் விழிக்க

 

“சொல்லமாட்ட…ஹ்ம் சரி ஓகே” என்றவள் என்ன சொல்லியிருப்பாளோ ரேவதியின் குரலில் தடையானது

 

“நான் சொல்றேன்!” என்றவள் நரேனை ஒரு முறை பார்த்து பின் ஒருவித உறுதியுடன்

 

“என் மாமா பேரு ஜிதேந்திரன்!” என்றாள்.

 

“வாட்!???” என்று இவள் புரியாமல் விழிக்க ரேவதியோ

 

“யெஸ்!!! யாழி என் தாய்மாமா…அதாவது என் அம்மாவோட அண்ணா… ஜிதேந்திரன்!”

 

அவளுக்கு அதை க்ரஹித்துக் கொள்ளவே சில மணித்துளிகள் எடுத்தது… அவளது புரியாத பார்வையை பார்த்த ரேவதி… அவள் கையைப் பற்றி அங்கிருந்த லாப்டாப்பின் திரையை உயிர்ப்பித்து காண்பிக்க  அதில் ஒளிர்ந்த படத்தைப் பார்த்தவளுள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் போட்டி போட்டுக் கொண்டு எட்டிப் பார்த்தது அவள் விழிகளில்…!

எதிலோ ஏமாற்றப்பட்ட உணர்வு! எவ்வளவு நெருக்கமான உறவு அவர்களுடையது… ஏன் இப்படியொன்று இருப்பதாக அவள் அப்பூ அவளிடம் சொல்லவில்லை…? ஏனோ காரணமில்லாமல் கால்கள் வலுவிழந்து போனது… அவளை உணர்ந்தவன் போல அவள் தோள்களில் படிந்தது நரேந்திரனின் கை…

 

அந்த  திரையில் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது  குறிஞ்சியின் குடும்பப் படம் ஒரு புறமும்… இன்னொரு புறம்… பழைய கருப்பு வெள்ளை குடும்ப படமொன்றும்! அதில் நட்ட நடுவில் அமர்ந்து ஒரு கையை தாத்தாவின் தோள்மேலும் இன்னொன்றை பாட்டியின் தோளிலுமாக அமர்ந்திருந்தது…இருபது வயது மதிக்கத்தக்க ஜிதேந்திரனே தான்! அதில் அவளுக்கு துளியளவும் சந்தேகமில்லை.

 

அவள் தோளை பற்றியவன் அங்கிருந்த இருக்கையில் அமர வைக்க கையில் ஒரு டம்ளர் தண்ணியுடன் வந்தாள் ரேவதி.

 

அது அவளுக்கு அந்த சமயம் தேவையாய் இருந்தது போலும் ஒரே மடக்கில் குடித்திருந்தாள்.

 

அவள் தலையை பரிவாக தடவியது ரேவதியின் கரம்.

 

அந்த ஸ்பரிசத்தில் சற்று நிதானித்தவள் நரேனையே கேள்வியாக நோக்க அவனோ “ஆம்” என்பதாக கண்களை மூடித்திறந்தான்.

 

அவளுக்கோ உள்ளுக்குள் ‘தான் நினைத்தது சரிதான்… நரேன் ஜிதேந்திரனிடம் காட்டும் அந்த அதிகப்படியான அன்பு… அடிக்கடி அவரை தொட்டுச் செல்லும் இவனது பார்வை… எல்லாம் அவளை யோசிக்க வைத்திருந்தது… ஆனால் இவ்வளவு பெரிய விஷயமாக இருக்கக்கூடும் என்று அவள் எதிர்ப் பார்த்திருக்கவில்லை…

 

இப்பொழுது… இந்த நொடி… அவளை குடையும் கேள்வி…

 

ஏன்…ஏன்…ஏன்!?

 

எதற்காக இப்படி!?

சொந்த மகளிடம் மறைக்குமளவிற்கு… அப்படி என்ன!?

 

அவள் ஞாபக அடுக்குகளை தேடினால்…. இப்படியொரு குடும்பம் இருப்பதாக ஜிதேந்திரன் வாய்த்தவறிக்கூட சொன்னதில்லை…

 

ஏன் அவளும் சரி…அஷ்மிதாவும் சரி… இதுவரை  சொந்த பந்தமென்று ஒருவர் வீட்டிற்கும் சென்றதில்லை!

 

ஏன் சில விஷயங்களை பேசினால் யாரும் காயப்பட்டு விடுவார்களோ என்று வாய்க்கூடத் திறந்தது கேட்டதில்லை மகள்களிருவரும்… அப்படியிருக்கையில் இது என்ன புது கதை!?

 

அவளது எண்ணவோட்டத்தின் நடுவில் கண்முன் வந்து  ஒற்றை கண்ணை சிமிட்டி யாழிமா! என்றார் ஜிதேந்திரன்!

‘இல்ல அப்பூ கிட்ட ரீசன் இருக்கும்… அப்பூ எத செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்… நான் நம்பறேன்!!!’  என்று அவளுள்ளம் அடித்துச் சொல்லியது.

 

எதுவாக இருந்தாலும் தன் அப்பூவுடன் நின்று ஒரு கை பார்த்துவிடலாம்… என்றுத் தோன்ற முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

 

அவளது முக மாற்றத்திலேயே அவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள் என்பதை காட்டிவிட…

 

நரேனின் மனமோ ‘மை சொர்ணாக்கா இஸ் பேக்!’ என்றது.

 

அவன் இத்தனை நாள் பழக்கத்தில் அவளைப் பற்றி அறிந்து வைத்திருந்ததில் ஒன்றுதான்.

 

உடைந்துவிடுவாள்… ஆனால் அவளே சற்று நேரத்தில் அவளை ஒட்ட வைத்து விடுவாள்… அதற்கு மற்றவர் அவளுக்கு குடுக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்… தனிமை! அது கிடைத்தால் சீக்கிரத்தில் சரியாகிவிடுவாள் அந்த சொர்ணாக்கா!

 

ஆனால்… அதை கொடுக்கவில்லையென்றால்….காளியாட்டம்தான்!

 

மின்னல்-16

 

அழகும் தமிழும் கொஞ்சி விளையாடும் ஊர்…திருநெல்வேலி.. மாஞ்சோலையலிருந்து மணிமுத்தாறுவரை தன்னுள் அடக்கம் என்ற தோரணையுடன் இருக்கும் அந்த ஊரின் கம்பீரத்திற்கு சற்றும் சளைக்காமல் நின்றுக் கொண்டிருந்தது அந்த “பூஞ்சோலை”.

 

பூஞ்சோலை… சோலை வீடு என்றும்…பெரிய வீடு என்றும் பலரால் அழைக்கப்படும் ஒரு அன்பாலயம்!

 

ஆம் அன்பாலையமேதான்! யதீந்திரன் பானுமதியம்மாளின் அன்பால் உருவான குடும்பம். அந்த ஊரின் பெரியக் குடும்பம்… வசதியில் மட்டுமில்லாமல்… அளவிலும் பெரியதே… கூட்டுக் குடும்பம் அவர்களது.

 

அவர்களது தொழில் அந்த காலத்திலேயே  நல்ல பொருள் ஈட்டி தந்ததால் பிற மாவட்டங்களிலும் அவர்களது இந்திரன் & கோ பிரபலமாகிக் கொண்டிருந்த காலம்… காலாகாலமாக விவசாயத்தை போற்றி வந்த குடும்பம் அன்று அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருந்தது.

 

யதீந்திரனின்  மூத்த மகனான தேவேந்திரன்  பொறுப்பேற்று  நடத்திக் கொண்டிருக்க தம்பிகளான மஹேந்திரனும் , விஜயேந்திரனும் அண்ணனுக்கு உறுதுணையாக நின்றனர் என்றால் அவர்களது மனைவிமார்கள் அந்த குடும்பத்தின் சீராக நடத்திச் சென்றனர்… அவ்வளவு ஒற்றுமை!

 

ஒருவர்மேல் மற்றவர் கொண்டிருந்த அன்பு அவர்களை கட்டி வைத்திருந்தது என்பதுதான் உண்மை.

அப்படிப்பட்ட அன்பையும் உடைத்தெரிந்தது ஒரு சம்பவம்!

 

ஆம்…எல்லாம் மஹேந்திரனின் மகனான ஜிதேந்திரன் காதலென்று வந்து நிற்கும்வரைதான்.

 

அவர்கள் காதலுக்கு எதிரானவர்கள் அல்ல! ஆனால் ஏனோ ஜிதேந்திரனின் காதலை மட்டும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை…

 

அவர் லீலாமதியின் கம்பீரத்தில் விழ லீலாவோ இவரின் தூய அன்பினில் விழுந்திருந்தார்… சிறுவயதிலிருந்து ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்கு… ஜிதேந்திரனின் கூட்டு குடும்பத்தில் ஒருத்தியாகப் போகிறோம்… என்னும்போதே மனதுக்குள் சாரலடித்தது!

 

பாவம் அவள் ஏங்கியது உறவுக்காக…. அது இன்று இவ்வளவு பெரியளவில் கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் தரையில் கால் பாவவில்லை.

 

“ஹே!! பொருமையா லீலா…” என்றவனிடம்கூட

 

“ஏன் ஜிதேன்… ஒருவேளை இவ்வளவு பெரிய குடும்பத்த குடுக்கறதுக்காகத்தான் கடவுள் சின்ன வயசிலையே என்ன தனியா விட்டாரோ???” என்றவளின் கண்களோரம் மின்னியது!

“ஹே…அப்படியெல்லாம் இல்லடா” என்றவர் லேசாக அனைத்து விடுவித்தவர்.

 

“இனிமே இப்படிலாம் பேசக்கூடாது!”என்று அன்பான கட்டளையுடனே முடிப்பார்.

 

அப்படியிருக்கையில் இங்கே அனைவரும் முதலில் திகைத்து பின் அவர்களது காதலை மறுக்க அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை!

 

ஆனால் அந்த நிலையிலும் அண்ணனுக்காக பேசி  வசவுகளை தன் பக்கம் திருப்பிக் கொண்டது வளர்மதியே!

 

“ஏன் எல்லாரும் அண்ணன திட்டுதீய அப்படி என்ன பண்ணிருச்சு???” என்று தன் பெரியப்பாவிடம் கேட்க அவருக்கு முந்திக் கொண்டு அவள் கையை பற்றி உலுக்கி இருந்தார் செல்வி

 

“ஏட்டி என்ன பேச்சு பேசுத பெரியப்பா முன்னாடியே…”

 

“சித்தி அவள விடுங்க!!!” என்ற ஜிதேந்திரன் தன் அன்னையை நோக்க  கோமதியோ  ஒரு ஓரத்தில் கண்களில் நீர் திரள நின்றுக் கொண்டிருந்தார்.

 

அவருக்கு மகனா குடும்பமா…? என்ற போராட்டம் அதை உணர்ந்தவர் போல நேராக தாத்தாவிடம் சென்ற ஜிதேந்திரன் அவர் காலடியில் அமர்ந்து அவர் கைகளை பற்றிக் கொண்டு மெல்லிய குரலில் அவரிடம்

 

“தாத்தா… நீயாவது என்ன நம்பு தாத்தா… அவ ரொம்ப நல்ல பொண்ணு… அப்பாம்மா கிடையாது உங்களலாம் பாக்கவே அவ்ளோ ஆசையா வந்தா… என்னைய நம்பி வந்துருக்கா தாத்தா..” என்க

 

அவர் தலையை தடவிய யதீந்திரனோ “இந்தப் புள்ள நமக்கு வேண்டா கண்ணு” என்று அதிலேயே நிற்க வெறுத்து விட்டது அவருக்கு… அவர் சத்தியமாக இதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை… ஏன் வேண்டாம் என்கிறார்கள்… என்று புரியாமல் குழம்பி நின்றவரிடம்  எல்லோரும் வேண்டாமென்றனரே தவிர ஏன் என்று சொல்லவில்லை… தலையே வெடித்து விடும்போல் இருக்க

 

“அய்யோ!!! வேணாம் வேணாங்கரீங்களே ஏன் வேணாம்???” என்று கத்திவிட்டார் ஜிதேந்திரன்… முதல் முறை ஜிதேந்திரன் கத்தியதை கண்ட லீலா முதலில் அதிர்ந்து பின் அவரிடம் வந்தவர் அவர் கையை தடவிக் கொடுக்க… ஏனோ அந்த நேரத்திலும் அவருக்கு அது இனிமையாகத்தான் இருத்தது… அவள் கண்களில் கொஞ்சமும் வெறுப்பில்லை… தன்னை வேண்டாமென்று தன் முன்னிலையிலேயே சொல்கிறார்களே என்ற கோபமில்லை… மாறாக ஏன்!? என்ற கேள்வி மட்டுமே…

 

இம்முறை கோமதியின் முகத்தில் சற்று நிம்மதி… லீலாவின் மேல் வந்த நம்பிக்கை போலும்…

 

நிசப்த்தத்தை கிழித்துக் கொண்டு வந்தது மஹேந்திரனின் குரல்!

 

“ஊர்பேர் தெரியாதவளை நம்ம வீட்டு மறுமகளா ஏத்துக்க முடியாது!!!”

 

அவரது கேள்வியில் சட்டென லீலாவைப் பார்க்க அவள் கண்களிலோ அடிவாங்கிய உணர்வு!

 

மறுவார்த்தை பேசவில்லை அவர் அப்படியே லீலாவின் கையை பற்றிக் கொண்டு சிலையென உறைந்து நின்றவளை வெளியே அழைத்துச் சென்றார் மறந்தும்கூட யாருடைய முகத்தையும் பார்க்கவில்லை!

 

தன்னை நம்பி வந்தவள் என்ற பின்னும் எப்படி இவர்களால் காயப்படுத்த முடிந்தது? என்று கேள்வி ஒரு புறமும்… தான் பெருமை பட்ட குடும்பமா இன்று ஒருத்தியின் மனதை இப்படி அடித்து நொறுக்கியது? என்ற வருத்தம் மறுபுறமுமாக வேதனையில் இருக்க லீலாயதியோ இந்த தாக்குதலில் பேச்சற்றவளாகிப் போனாள்.

 

அவள் என்ன செய்தாள்???… இதில் அவள் தவறென்ன???… அவள் ஏன் தண்டணை அனுபவிக்க வேண்டும்??? தன்னை பற்றி ஒன்றும் தெரியாமல்… இந்த ஒன்றை மட்டும் வைத்து அவர்கள் ஏன் மறுக்கிறார்கள்??? மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் குத்தீட்டியாய் நிற்க எங்கே ஜிதேந்திரன் வருந்துவாரோ என்று மௌனியாகி இருந்தாள்.

 

அவள் பேச்சற்று நிற்க முதலில் சுதாரித்துக் கொண்ட ஜிதேந்திரனோ தன் வருத்தங்களனைத்தையும் ஒதுக்கியவராக… அவளை தோளோடு சேர்த்தனைத்து நெற்றியில் இதழ் பதித்தவர்… அவளது குழமாகியிருந்த கண்களைப் பார்த்து  கண் சிமிட்டினார்.

 

உனக்கு நான் எனக்கு நீ! என்பதை அவர் வார்த்தையால் சொல்லாவிடினும் செயல்களால் காட்டினார்.

 

அன்று பற்றி கையை இன்றும் விடாமல் அவளை தன் கண்களுக்குள் வைத்துப் பாதுகாத்தார் என்றுதான்  சொல்ல வேண்டும். அவளுக்கு எல்லாமுமாக அவரும் அவருக்கு உலமாக அவளும் மாறியிருந்தனர்…

 

முதலில் அந்த ஊரைவிட்டே வந்தவர் பின்னாலில் வேறு வழியின்றி அந்த மாநிலத்தை விட்டே வெளியேறியிருந்தார்.

 

                                            **********

 

“இப்போ சொல்லு யாழி!  மாமாவ பார்த்த அன்னைக்கே எனக்கு என்னவோ வித்யாசமா பட்டுச்சு… அன்னைக்கே பழைய ஃபேமிலி ஃபோட்டோஸெல்லாம் எடுத்துப் பார்த்தேன்…” என்று இழுத்தவனை அவள் கேள்வியாக நோக்க அவனே தொடர்ந்தான்

 

“ஆனா… உண்மை தெரிஞ்சி என்கிட்ட பேசாம போயிட்டா??? எனக்கு குடும்பம் ஒன்னு சேரனும் யாழி…”என்க ரேவதியோ அவளது கைகளை பற்றியிருந்தாள்

 

“ப்ளீஸ் யாழி! நான் என் மாமாவ பார்த்ததே இல்ல தெரியுமா??? அம்மா சொல்லித்தான் தெரியும்… அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடியும் அண்ணனுக்காக நின்னவங்க… இன்னைக்கு வரையிலும்… தன் அண்ணன் என்னைக்காவது வருவான்னு நம்பறாங்க… என் அம்மாக்கு நான் ஒன்னும் பெருசா செஞ்சதில்லை யாழி… அவங்க அண்ணனையாவது நான் அவங்களுக்கு திருப்பி குடுக்கறேனே…” என்றவளின் குரல் உடைய குறிஞ்சிக்கோ நம்பமுடியாத ஆச்சர்யம்…

 

பார்த்திராத ஒரு மாமனின் மீது இவ்வளவு ப்ரியமா…அதுவும் கண்ணீர் சிந்துமளவு??? என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் புரிந்தது… இது அவளது அன்னையினால்… அவள் அன்னையின் அண்ணன் பாசத்தை பார்த்து வளர்ந்தவள்… ஆனால் நரேந்திரன்? அவனுக்கென்ன வந்தது அவர் தூரத்து உறவுதானே வரும்??? என்று பார்த்தவளுக்கு பாவம்  புரியவில்லை தூரம் உறவுகளினிடையே அல்ல மனங்களினிடையேதான் வருகிறதென்று!

 

ரேவதியையே சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் பின் அவளது கண்ணீரை துடைத்துவிட்டு எழுந்துக் கொண்டாள்.

 

அவள் வார்த்தை ஏதுமின்றி கதவு வரைச் சென்றவள் ஒரு நொடி நின்று இவர்களை திரும்பி பார்த்தவள் அவர்களது கலக்கத்தை உணர்ந்தவளாக சிறு புன்னகை ஒன்றை சிந்திச் சென்றாள்.

 

Advertisement