Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 39

                       பரமேஸ்வரன் இரவு வீடு திரும்ப தாமதமாகும் என்று மாலையே அழைத்து சொல்லி இருந்தாலும், அவருக்காக காத்திருந்தார் ரேகா. இது வழக்கமாக நடப்பதுதான். ரேகா உறங்கமாட்டார் என்பதால் பொதுவாகவே இது போன்ற பார்ட்டிகளை தவிர்த்து விடுவார் பரமேஸ்வரன். ஆனால், இது மறுக்க முடியாததாக இருக்க அவரும் ரகுவும் தான் சென்றிருந்தனர்.

                        பார்ட்டி முடிந்து ரகுவை அவர் வீட்டில் விட்டு, தன் வீட்டை அடைந்தார் பரமேஸ்வரன். மனைவி ஹாலில் அமர்ந்திருக்க கண்டவர், சற்றே பெரிதான புன்னகையுடன் அவரை நெருங்கினார். ரேகா எழுந்து நிற்க, அவரை இடையோடு அணைத்தவர் ரேகாவின் நெற்றியில் முத்தமிட்டார் ஆதுரமாக.

                        ரேகா அவர் முத்தமிட்ட மறுகணம் விலகிக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்து, தன் கணவரையும் முறைத்து வைத்தார். ரேகாவின் இதழ்களை லேசாக சுண்டி விட்டவர் “சாப்பிட்டாயா..” என்று கேட்க

                     “ம்ம்.. நீங்க..” என்ற ரேகாவிற்கு,

                    “அங்கேயே சாப்பிட்டேன் ரேகா.. பால் மட்டும் கொண்டு வா..” என்று விட்டு அறைக்கு சென்றார்.

                    பரமேஸ்வரன் குளித்து வருவதற்கும், ரேகா பாலை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைவதற்கும் சரியாக இருக்க,  பால் டம்ளரை வாங்கி கொண்டு கட்டிலில் அமர்ந்தார் பரமேஸ்வரன். மனைவியின் யோசனையான முகம் பார்த்தவர் “என்ன ரேகாம்மா.. என்ன சொல்லணும்..” என்று மனைவியைப் பார்க்க

                   “சர்வா லவ் பண்றானாம்…” என்றார் மனைவி.

                  பரமேஸ்வரனுக்கு குடித்துக் கொண்டிருந்த பால் புரையேறியது. அவர் அதிர்ச்சியாக மனைவியைப் பார்க்க, “உங்களுக்கு நிஜமா தெரியாது..” என்று சந்தேகமாகப் பார்த்தார் மனைவி.

                  பரமேஸ்வரன்  “ரேகா.. எனக்கு தெரிந்தால் உன்கிட்ட சொல்லாம இருப்பேனா…” என்று மனைவியைத் திருப்பிக் கேட்க

                         “இந்த ஸ்டேட்மென்ட் மற்ற விஷயத்துல ஓகே தான்..ஆனா, உங்க பிள்ளைங்க விஷயத்துல நம்ப முடியல..” என்று இழுத்தார் ரேகா.

                பரமேஸ்வரன் அவரை பாவமாக பார்க்க, “உங்களை அப்புறம் கவனிச்சுக்கறேன்.. உங்க மகனுக்கு போன் போடுங்க.” என்றார் அந்த நேரத்தில்.

                 “அதெல்லாம் தூங்கி இருக்கமாட்டான் போடுங்க..” என்று அவர் கூறவும், பரமேஸ்வரன் சர்வாவை அழைக்க, இரண்டாம் ரிங்கிலேய அழைப்பை  ஏற்றான் மகன்.

                   “அப்பா.. என்னப்பா இந்த நேரத்துல.. அம்மா எங்கே..” என்று அவன் பதட்டத்துடன் வினவ

                   “அம்மா இங்கேதான் இருக்கா சர்வா. உன்கிட்ட பேசணுமாம்..” என்று பரமேஸ்வரன் அலைபேசியை மனைவியிடம் நீட்ட, “வீட்டுக்கு வா சர்வா..” என்றார் அன்னை.

                   “அம்மா.. இங்கே வேலை..” என்று மகன் இழுக்க

                 

                   “நாளைக்கு பார்க்கலாம் கிளம்பி வா..” என்றவர் அழைப்பை துண்டித்து விட்டார்.

                        சர்வா அடுத்த ஒருமணி நேரத்தில் அவர் முன் நிற்க, ரேகா மகனை கூர்மையாகப் பார்க்க, அவரின் பார்வையின் வீரியம் தாங்காமல் அவரை நெருங்கி கட்டிக் கொண்டான் மகன். அவர் இடையைக் கட்டிக் கொண்டு, அவரது மடியில் அவன் முகம் புதைத்து இருக்க, அவன் தலையை தடவிக் கொடுத்தது ரேகாவின் கரங்கள்.

                        அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் அவன் திண்டாட, கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து அவனை மடிதாங்கி கொண்டார் ரேகா. அன்னையின் மடியில் படுத்து கொண்டவன் எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டு நேரம் கடத்த, ரேகாவிற்கு அவன் வேதனை தாளவே முடியாமல் போனது.

                     அவர் பரமேஸ்வரனைப் பார்க்க, “என்னடா கண்ணா.. ஏன் இப்படி இருக்க..” என்று ஒன்றுமே தெரியாதவர் போல் விசாரித்தார் தந்தை.

                      “அம்மா.. உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் இந்நேரம்… “என்றான் மகன். கூடவே “இது சரியா வராதும்மா… நீங்க என்கூட இருக்கும்போது எதையும் நினைச்சு நான் ஏங்கமாட்டேன்ம்மா. கொஞ்சநாள்ல சரியாகிடுவேன்.” என்றான்.

                     “ஏன் சரியாகணும்… தீக்ஷிக்கு என்ன.. நாம பேசலாமே சர்வா.” என்று அன்னை குறுக்கிட

                      “வேண்டாம்மா.. நீங்க என்னோட இருக்கும்போது நான் அம்மாவை அதிகமா நினைச்சது கூட இல்ல. ஆனால், உங்களை பார்க்கும் முன்ன ரொம்ப தேடி இருக்கேன்ம்மா…  அம்மா இல்லாம போனால், அந்த வலி எப்படி இருக்கும்ன்னு புரியும் எனக்கு..”

                     “அவளுக்கு அந்த வலி வேண்டாம். சீதா ஆண்ட்டிக்கு விருப்பம் இல்லாம இது நடக்க வேண்டாம்மா. அவளும் அவங்க உயிருக்கு பயந்து தான் சத்தியம் செய்து கொடுத்திருக்கா.. அவங்க இந்த அளவுக்கு துணிந்த பிறகு நாம எப்படிம்மா இதை யோசிக்க முடியும்..”

                     “தீக்ஷி ரொம்ப நல்ல பொண்ணு.. என்னைவிட ஒரு நல்ல லைப் அவளுக்கு கிடைக்கும்மா.. நீங்க இதை நினைச்சு வருத்தப்படாதிங்க…” என்றவன் அன்னையைப் பார்க்க

                     “தீக்ஷிக்கு நல்ல லைப் கிடைக்கும். என் மகனுக்கு..” என்றார் ரேகா.

                      “அதுதான் நீங்க இருக்கீங்களே.. நீங்க கடைசி வரைக்கும் என்னோட இருங்க. என் லைப் சூப்பரா இருக்கும்..” என்று அன்னையின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தான் சர்வா.

                      ரேகா அவன் செய்கையில் சிரித்தாலும், உள்ளே மகனின் வாழ்வை நினைத்து ஒரு பயம் ஊசலாடியது. அவர் “ஏதாவது செய்..” என்று கணவரைப் பார்க்க, தான் பார்த்துக் கொள்வதாக கண்ணைக் காட்டினார் பரமேஸ்வரன்.

                      அவரின் கண்பார்வை ரேகாவை நிமிரச் செய்ய, மகனின் தலையை தடவிக் கொடுத்து அவனை உறங்கச் செய்தார் அன்னை. அந்த கட்டில் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு சர்வா படுத்திருக்க, அவன் உறக்கத்தை கலைக்க விரும்பாமல், அங்கிருந்த சோஃபாவில் படுத்துக் கொண்டார் அவர்.

                      ரேகா கட்டிலில் சாய்ந்தபடியே உறக்கத்தை தழுவ, அடுத்தநாள் சர்வா கண்விழிக்கும் போது அவன் அருகில் இருவருமே இல்லை. பரமேஸ்வரன் காலையிலேயே மதுவை அழைத்து பேசி இருக்க, மதுபாலகிருஷ்ணனுக்கு என்ன சொல்வதென தெரியாமல் ஒரு தடுமாற்றம்.

                        மனைவியின் மனமாற்றம் புரிந்தாலும், மகள் விஷயத்தில் என்ன முடிவெடுப்பாளோ தெரியாதே என்று மண்டை காய்ந்தது அவருக்கு. பரமேஸ்வரன் என்பதால் தன் மனதில் இருப்பதை மறைக்காமல் அவரிடம் பகிர்ந்து கொண்டார் மது.

                        “உங்களுக்கு என்ன பதில் சொல்றது தெரியல பரமேஸ்வர். சீதா இப்போ கொஞ்சம் நார்மலா இருக்கா. ஆனால்,இந்த கல்யாண விஷயம் எப்படி எடுத்துப்பா தெரியாது.” என்று அவர் தயங்க

                      “உங்க முடிவு என்ன மது..”

                      “சர்வாவை மறுக்க என்கிட்டே எந்த காரணமும் இல்லையே பரமேஸ்வர். என் மகள் வாழ்க்கை நல்லா இருக்கும் ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..” என்றார் வெளிப்படையாக

                       “உங்க மனைவிகிட்ட நான் நேர்ல பேசிப் பார்க்கிறேன் மது. நானும், ரேகாவும் இன்னும் ஒருமணி நேரத்துல உங்க வீட்டுக்கு வர்றோம்..” என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டவர், சொன்னது போலவே இதோ சீதாவின் முன் அமர்ந்திருந்தார். உடன் ரேகாவும்.

                        நேற்று ரேகாவின் நிலையில் இன்று சீதா இருந்தார். அவருக்கு இவர்களின் திடீர் வருகைக்கான காரணம் புரியவே இல்லை. அவர் விழிப்பதை பார்த்த ரேகா

                           “என் மகனுக்கு உங்க மகளை பெண் கேட்டு வந்திருக்கோம்..” என்றார் முறையாக

                           சீதா மெல்லிய அதிர்ச்சியை முகத்தில் காட்ட, “உங்களுக்கு எந்த பயமும் வேண்டாம். நான் உயிரோட இருக்கும் வரை சர்வா என்னோட மகனாகவே தான் இருப்பான். அவனோட பழக்கவழக்கங்கள், நடவடிக்கைகள் எல்லாமே எங்களை சார்ந்து தான் இருக்கும்.”

                        “நீங்க தைரியமா தீக்ஷியை எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.” என்றார்.

                        சீதா அப்போதும் தெளியாமல், “இல்ல ரேகா.. எனக்கு என்ன சொல்றது தெரியல. ஆனா, என்னவோ பயம். நீங்க அவரை வளர்த்து இருந்தாலும், சர்வாவோட குடும்பம்.. அவரோட சித்தி.. இதையெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கே… தீக்ஷி ரொம்ப பயந்த சுபாவம் ரேகா…”

                          “ஏன் நானே அதைத்தானே எனக்கு சாதகமா பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அப்படியிருக்க, அந்தம்மா ஏதாவது தொந்தரவு கொடுத்தால்…” என்று இழுக்க

                     “சர்வாவுக்கும் அந்த குடும்பத்துக்கும் இருக்கும் ஒரே தொடர்பு ரகுவரன் மட்டும்தான் சீதா. மற்றபடி அந்தக்குடும்பத்தை சேர்ந்த யாரையும் நினைச்சு நீங்க கவலைப்படவே வேண்டாம்.  அவர்கள் தீக்ஷியை நெருங்க சர்வா எப்பவும் விடமாட்டான்.”

                     “அதோட கல்யாணம் முடிஞ்சு தீக்ஷி எங்க வீட்டுக்கு தான் மருமகளா வரப்போறா. உங்களுக்கு அது விருப்பம் இல்லேன்னா, என் வீட்டு பக்கத்துலேயே சர்வாக்கு இடம் இருக்கு.அங்கே புதுவீடு கட்டிகூட ரெண்டு பேரும் குடி போகட்டும். இதெல்லாம் விஷயமே இல்ல சீதா..”

                     “பிள்ளைங்க சந்தோஷத்தைப் பற்றி யோசிப்போமே…” என்று வேண்டுதலாக ரேகா கேட்க, மறுக்க முடியவில்லை சீதாவால்.

Advertisement