Advertisement

ஸ்ரீகாவை ஒருவழியாக மலையிறக்கி அவளையும் சாப்பிட வைத்து அந்த குடும்பம் உறங்க சென்றுவிட, அடுத்தநாள் ஸ்ரீகா கிளம்பும் நேரம், அவளுடன் கிளம்பும் எண்ணமே இல்லாதவன் போல் நிச்சலனமாக அமர்ந்திருந்தான் அறிவன்.

ஸ்ரீகா “வரலையா நீ..” என்பது போல் பார்க்க, அவளை புரிந்தவனாக “எங்கப்பா ரௌடி பேபீஸ் கூட சேர வேண்டாம் ன்னு சொல்லிட்டாரு ஸ்ரீகா…” என்று பாவமான முகத்தோடு கூற

சத்தம் வராமல் “த்தூ..” என்று துப்பிக் காட்டியவள் தான் மட்டும் வெளியே வர, வாசலில் காருடன் வந்து நின்றது சர்வா. ஸ்ரீகா அவன் காரில் ஏறாமல் கேள்வியாக அவனைப் பார்க்க “நான் ட்ராப் பண்றேன் ஸ்ரீகா..” என்றான் சர்வானந்த்.

“எத்தனை நாளைக்கு… ” என்று அவனை முறைத்தவள் “வழியை விடு.. எனக்கு தெரியும்..” என்று தன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் அவள். அடுத்த சில நாட்கள் அதன் போக்கில் நகர, தனது வேலைகளில் முழுமையாக ஆழ்ந்து போனாள் அவள்.

அறிவனைப் பற்றி முதல்நாள் கோபத்தோடு எண்ணமிட்டது தான். ஆனால், அவன் தந்தையை மீறமாட்டான் என்பது நினைவு வர, அவனையும் அவன் போக்கில் விட்டு விட்டு தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் ஸ்ரீகா.

இதோ இன்று மாலையில் அந்த விருது வழங்கும் விழா நடப்பதாக இருக்க, நிற்கக்கூட நேரமில்லாமல் தான் சுழன்று கொண்டிருந்தாள். அவளுக்கான பயிற்சியை விட, அவள் பொறுப்பெடுத்துக் கொண்டிருந்த மற்ற நடிகைகளின் நிகழ்ச்சிகளை முறைப்படுத்துவது தான் பெரிய சவாலாக இருந்தது அவளுக்கு.

இத்தனைக்கும் நேற்று காலையில் இருந்தே இங்கே தான் பழியாக கிடக்கிறாள். தனது அறிவனை இந்த இரண்டு நாட்களில் இன்னும் அதிகமாக தேடினாள் ஸ்ரீகா. ஆனாலும், அவனை தள்ளி வைத்து தன் வேலைகளை பிடிவாதமாக பார்த்துக் கொண்டிருந்தாள். தான் தந்தையிடம் பேசினால், நிச்சயம் அறிவனை அனுப்பி வைப்பார் என்பதும் புரிந்தாலும், கேட்பதற்கு தயாராக இல்லை அவள்.

இதோ விழாவிற்கு இன்னும் ஒருமணி நேரம் இருக்க, தனக்கான உடைகளை அணிந்து ஒப்பனை முடித்து அமர்ந்து இருந்தாள். மொத்த குடும்பமும் வருவார்கள் என்றும் தெரியும். இப்போ மட்டும் எப்படி வருவான் எரும??… என்று மனதிற்குள் அப்போதும் அறிவனை அர்ச்சித்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள் ஸ்ரீகா.

அவள் தன் சிந்தனையில் அமர்ந்திருக்கும் நேரம் தான் அவளைத் தேடி அங்கே வந்தான் துருவன். ஸ்ரீகாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தவன் அவள் தலையில் கையை வைத்து ஆட்டிவிட்டு அருகிலமர, “என்ன..” என்பதாக ஒரு பார்வை பார்த்தாள் ஸ்ரீகா.

“ஏன் வாயைத் திறந்து பேசமாட்டியா..” என்று துருவன் கேட்க

“அதான் நீ நினைச்ச மாதிரியே எல்லாம் முடிஞ்சுது இல்ல.. அப்புறம் என்ன.. போடா..” என்றாள் கடுப்பாக

“என்ன நடந்தது… நீங்க ரெண்டு பேரும் போட்ட ஆட்டத்துக்கு எண்டு கார்ட் போட்டது அப்பாடி.. நான் என்ன செஞ்சேன்..” என்று அவன் முறைக்க

“உனக்கு குளு குளு ன்னு இருக்குமே..” என்றாள் அப்போதும்..

“உனக்கு நடந்தது எதுவும் முழுசாத் தெரியாது ஸ்ரீகா. அந்த திஷா உங்கமேல கம்ப்ளெயிண்ட் கொடுக்கற முடிவுல இருந்தா.. அப்பா தான் ப்ரொடியூசர் கவுன்சில் வழியா, பேசி பிரச்சனையை முடிச்சு வச்சாரு.. அதோட அறிவனுக்கு நம்ம பீல்ட் ஒத்துவராது. அவன் அப்பாவோட பிசினெஸ்ஸை பார்க்கணும்ன்னு அப்பா விரும்பறாங்க..”

“சோ, வாய்ப்பு கிடைக்கவும், யூஸ் பண்ணிட்டீங்க..” என்று ஸ்ரீகா பதிலுக்கு கேட்க

“இது மொத்தமா அப்பாவோட முடிவு..” என்றான் துருவன்.

“அப்போ நீ இங்கே என்ன பண்ற.. கிளம்புடா..” என்று அவனை ஸ்ரீகா துரத்த, அவள் மண்டையில் வலிக்காமல் குட்டியவன் “ஆல் தி பெஸ்ட்.. ஒழுங்கா ஆடு..” என்று அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு நகர, “வெவ்வவா…”என்று அவன் தலையின் பின்னால் பழிப்புக் காட்டினாள் ஸ்ரீகா.

அவன் சொல்வது அவளுக்கே தெரிந்திருந்தாலும், குழந்தைத்தனமாக ஒரு கோபம் வரத்தான் செய்தது அந்த வளர்ந்த குழந்தைக்கு. துருவன் பேசியதில் சற்று நல்ல மனநிலையில் இருந்தவள் அதே அமைதியான மனதோடு மேடையேறி இருந்தாள்.

மன்னவன் வந்தானடி தோழி

மன்னவன் வந்தானடி தோழி

மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த

மன்னவன் வந்தானடி தோழி

மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த

மன்னவன் வந்தானடி

மாயவனோ தூயவனோ

நாயகனோ நான் அறியேன்

மாயவனோ தூயவனோ

நாயகனோ நான் அறியேன்

மன்னவன் வந்தானடி தோழி… என்று பாடல் தொடங்க செமி கிளாசிக்கல் வகையாக தன் நடனத்தை தொடங்கி இருந்தாள் அவள்… பெண்குரலுக்கு மட்டும் இவள் அபிநயம் பிடிக்க, இடையிடையே வந்த குழுவினரின் குரலுக்கு இவள் குழுவின் பெண்கள் மூன்று பேர் இவளோடு சேர்ந்து அபியும் பிடித்தார்கள்.

தூவிய பூவினில் மேனிகள் ஆடிட

நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்

மன்னவன் வந்தானடி… என்ற வரிகளில் இவள் சிலையாக நின்றுவிட, அவள் குழுவினர் தொடர்ந்தார்கள்.

தத்தித் தாங்கிட தக தரிகிடதோம்

தித் தாங்கிட தக தரிகிடதோம்

தகதித் தாங்கிட தக தரிகிடதோம்

தித் தாங்கிட தக தரிகிடதோம்

தக தரிகிடதோம் தக தரிகிடதோம்

தக தரிகிடதோம் தக தரிகிடதோம்

தரிகிடதோம் தரிகிடதோம்

தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா… என்ற ஜாதிக்கு மட்டும் அவர்கள் ஆடி முடிக்க,அடுத்து

ஸா ரீ கா மா பா தா நீ

ஸரிகம பதநீ சுரமோடு ஜதியொடு

நாத கீத ராக பாவம் தான் பெறவே

மன்னவன் வந்தானடி… என்ற வரிகளுக்கு ஸ்ரீகா தன் திறமையைக் காட்டினாள். மேடையில் இருந்த வண்ண விளக்குகள் பாடலுக்கேற்றபடி ஒளிர்ந்தும்,அணைந்தும் தங்கள் வேலையை சரிவர செய்ய, மொத்தத்தில் கண்கவர் விருந்து தான் ஸ்ரீகா மற்றும் அவள் குழுவினரின் நடனம்.

நாயகிகளை போல் கையை காலை அசைத்துவிட்டு நடனம் என்று பெயர் செய்யாமல், சற்றே மெனக்கெட்டு அவள் உழைத்திருக்க, அது நல்ல பலனைக் கொடுத்திருந்தது. அங்கு குட்டி குட்டி வட்ட மேசைகளின் முன்னால் அமர்ந்திருந்த கலைஞர்கள் அத்தனைப் பெரும் அவள் நடனத்தோடு ஒன்றிப் போயிருக்க, அவர்கள் முடிக்கவும் அப்படி ஒரு கரகோஷம் அந்த அரங்கத்தில்.

நடனம் முடிந்து அவள் ஓய்வறைக்கு சென்றுவிட, இன்னும் அவள் நிகழ்த்தி சென்றிருந்த மாயாஜாலத்தில் இருந்து வெளிவராமல் அமர்ந்திருந்தான் பீஷ்மன். அவள் “மன்னவன் வந்தானடி..” என்று தொடங்கும்போது தான் உள்ளே நுழைந்திருந்தான் அவன்.

என்னவோ மேடையில் நின்றவள் தனக்காகவே பாடியது போல ஒரு எண்ணம் அவனுக்கு. அதே பிரம்மையில் அவன் அமர்ந்திருக்க, அங்கே விருது விழா தொடர்ந்து கொண்டிருந்தது. நள்ளிரவைத் தாண்டியும் நிகழ்ச்சி தொடர, ஸ்ரீகா அங்கே இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

துருவனும், சர்வாவும் அங்கே இருப்பதால் ஸ்ரீகாவை விட்டு, அவள் குடும்பமும் கிளம்பி இருந்தது. ஸ்ரீகா தான் பொறுப்பேற்றுக் கொண்ட நடனங்கள் முடியவும் மேடைக்கு முன்னால் இருந்த இருக்கைகளில்  ஒன்றில் வந்து அமர்ந்து கொள்ள, அவளின் வழக்கமான உடைக்கு மாறி இருந்தாள். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் தொடர, கன்னத்தில் கையை ஊன்றிக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அடுத்ததாக துருவனின் இசை நிகழ்ச்சி தொடங்கியது. அவன் இசைப்புயலின் பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இருந்தான் அன்றைய நிகழ்ச்சிக்கு. “காட்டு வழியே கூவும் கரிச்சான் குருவிகளா…” என்று மெல்லிய பெண்குரலில் ஆரம்பித்த பாடல், அவன் குழுவினரால் வெகு வேகமாக நகர்த்தப்பட, அதற்கு இணையான வேகத்தில் பாடிக் கொண்டிருந்தனர் சர்வாவும், துருவனும்.

ஸ்ரீகா அமர்ந்த இடத்தில இருந்து கையை தட்டி ரசித்துக் கொண்டிருந்தவள் கூடவே முணுமுணுத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவளை கவனிப்பதை மட்டுமே முழுநேர வேலையாக கொண்டு, அவளை அளந்து கொண்டிருந்தான் பீஷ்மன்.

மேடையில் துருவனும், சர்வாவும் “ஊர்வசி ஊர்வசி…, முக்காலா முக்காபுல்லா, ரோமியோ ஆட்டம் போட்டால்” என்று தொடர்ந்தவர்கள் “காதல் யானை வருகிறான் ரெமோ..” என்று நிறுத்த, மொத்த பெண்கள் கூட்டமும் “ஓஹோ..” என்று என்று ஆரவாரித்தது.

இருபது நிமிடங்கள் தொடர்ந்த அவர்களின் இன்னிசை விருந்து “ஆளப்போறான் தமிழன்..” என்று பாடியபடியே முடிய, அரங்கத்தில் எழுந்த கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அதுவரை அமர்ந்திருந்த ஸ்ரீகா எழுந்து நின்று “ஓஓஓஓஓ..” என்று சத்தமிட, சர்வா கவனித்துவிட்டான் அவளை.

இருவரும் நிகழ்ச்சி முடிந்து மேடைக்கு பின்னால் சென்றுவிட, அதன்பிறகே தன்னிடத்தில் அமர்ந்தாள் ஸ்ரீகா. துருவனும், சர்வாவும் மேலும் அரைமணி நேரம் கழிந்த பிறகே ஸ்ரீகா இருந்த இடத்திற்கு வர, மேலும் சிறிது நேரம் அங்கே செலவழித்தவர்கள் அதன்பிறகே அந்த அரங்கத்தை விட்டு வெளியே வந்தனர்.

துருவன் காரை எடுக்க செல்ல, சர்வாவை எங்கிருந்தோ வந்த அவன் ரசிகைகள் சிலர் சூழ்ந்து கொண்டனர். ஸ்ரீகா சற்று தள்ளி நின்று புன்னகையோடு அவனைப் பார்த்திருக்க, அவளுக்கு பின்னால் வந்து நின்றிருந்தான் பீஷ்மன்.

இவர்கள் இருந்த இடம் அரங்கத்தின் வெளிவாயிலுக்கு அருகில் இருக்க, அதிலும் சற்று ஒதுக்கு  தான் ஸ்ரீகா நின்றிருந்தாள். பீஷ்மன் அவள் பின்னால் நின்றவன் “ஹாய் டார்லீ…” என்று விட, காதருகில் கேட்ட குரலில் திகைத்து திரும்பினாள் அவள்.

பீஷ்மனை அடையாளம் தெரிந்தது அவளுக்கு. ஆனால் அவனின் அழைப்பு வித்யாசமாக இருக்க, சட்டென்ற அதிர்ச்சியில் சில நொடிகள் நின்றுவிட்டாள். பீஷ்மன் அதைப் பயன்படுத்திக் கொண்டவனாக “வில் யூ மேரி மீ.. மை ஸ்வீட் ஹார்ட்…” என்று கேள்வியெழுப்ப, “எப்புட்றா…” என்பது போல் தான் பார்த்து நின்றாள் அவள்.

ஆனால், அதிர்ச்சி அவளுக்கு மட்டும்தான் போல. பீஷ்மனுக்கு பின்னால் வந்து நின்ற துருவன் தான் தெளிவாக “அதற்கு நீ வேறாளைப் பார்க்கணும் பீஷ்மா..” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்து இருந்தானே.

பீஷ்மன் சுழித்த புருவங்களோடு அவனிடம் திரும்ப, ஸ்ரீகாவை கையை நீட்டி தன்னிடம் அழைத்துக் கொண்டான் துருவன். பீஷ்மன் அப்போதும் சிரிப்புடன் “ஏன் டார்லீ.. நீ பேசமாட்டியா.” என்று ஸ்ரீகாவை கேட்டு நிற்க

துருவன் “கிளம்பலாம் ஸ்ரீகா.” என்று அவளை தோளோடு அணைத்தபடி வெளியேற முற்பட, அவள் கைகளை பற்றி இருந்தான் பீஷ்மன். துருவனின் நிதானம் தொலைந்துவிட, அடுத்தநொடி பீஷ்மனை கையை நீட்டி அறைந்திருந்தான் துருவன்.

அங்கிருந்த சிலர் இதை கவனித்துவிட, ஸ்ரீகா அவன் செயலில் முற்றிலுமாக அதிர்ந்து நின்றாள். பீஷ்மன் துருவனின் செயலில் கொதித்தாலும், வன்மத்தை தனக்குள் புதைத்துக் கொண்டு புன்னகையுடன் அவனை நெருங்கியவன் “இதுக்கு நிச்சயம் நீ அனுபவிப்ப துருவ்.. நீ போதும்ன்னு சொல்ற அளவுக்கு நான் திருப்பிக் கொடுப்பேன்… ” என்றவன் அதே நிதானத்தோடு “இவளும் எனக்குமட்டும்தான்….” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

Advertisement