Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09

                              ஒருவாரம் கழித்து அன்று தன் வழக்கமான வேலைகளுக்கு திரும்பி இருந்தாள் ஸ்ரீகா. அன்று காலையில் பாடல் ஒன்றிற்கான நடன ஒத்திகை இருக்க, அதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தாள். அன்று இரவில் அந்த பாடல் காட்சியை படமாக்க இருக்க, அதில் ஆடும் பெண்ணுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.

                             வணிகரீதியாக படத்தில் கட்டாயமாக திணிக்கப்பட்டிருந்தது அந்தப் பாடல். கவர்ச்சிநாயகி ஒருத்தி அரைகுறையாக கதாநாயகனுடன் நடனமாடுவது போல அமைந்தது அந்தப் பாடல். ஸ்ரீகாவுக்கு இந்த வகை நடனங்களோ, பாடல்களோ பிடிப்பதில்லை என்றாலும், வெளிப்படையாக எதுவும் சொல்லமாட்டாள்.

                         ஆடையே இல்லாமல் ஆடச் சொன்னாலும் கூட, பணத்திற்காக அதையும் செய்ய ஒரு கூட்டம் இருக்கையில், தனக்கு மட்டும் என்ன வந்தது. அவளை அரைகுறையாக நான் ஆடச் சொல்லவில்லையே என்று தனக்குத்தானே கூறிக் கொள்வாள்.

                        இப்போதும் அப்படி எண்ணிக் கொண்டு அந்த நடனக்காட்சியை வடிவமைத்துக் கொடுத்திருந்தாள். நடன அசைவுகளும் சற்று கவர்ச்சியாக, கதாநாயகனை தொட்டு உரசிக் கொண்டு ஆடுவது போலவே அமைந்திருந்தது. இது இயக்குனரின் விருப்பம். இதற்குமேல் இதில் தான் செய்ய எதுவுமில்லை என்ற எண்ணம் தான் அவளிடம்.

                     அந்த நாயகி ஒத்திகையை முடித்து வெளியேற, அடுத்த வாரம் நடக்கவிருந்த திரைப்பட விருது விழாவுக்கான ஒத்திகைகளை பார்வையிட சென்றுவிட்டாள் ஸ்ரீகா. அந்த விருது விழாவில் இவள் நடனமும் இடம்பெறுவதாக இருந்தது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ஒரு வரவேற்பு நடனம் ஒன்றிற்கு ஒப்புக் கொண்டிருந்தாள் அவள்.

                   இருக்கும் வேலைகளுக்கு நடுவே அதையும் பார்த்தாக வேண்டுமே. அதுவும் தமிழ்நாட்டின் முக்கிய சேனல் ஒன்று நடத்தும் விழா அது. விருதுகளும் நேர்மையாகவே இருக்கும் என்பதால் தவிர்க்க முடியாமல் ஒப்புக் கொண்டிருந்தாள் ஸ்ரீகா.

                  அந்த விழாவில் துருவனும் பதினைந்து நிமிடங்கள் மெட்லி வகையில் ஒரு இசைவிருந்து கொடுப்பதாக இருக்க, அவனும் அதில் கொஞ்சம் பிசியாக இருந்தான். ஸ்ரீகா மாலைநேரம் வரை தனக்கான பயிற்சியில் இருந்தவள் மாலை ஏழு மணி அளவில் அந்த பாடல் காட்சி படமாக்க இருந்த படப்பிடிப்பு தளத்தை வந்து அடைந்தாள்.

                   இவள் சென்று அரைமணி நேரம் கழிந்த பிறகே அந்த நாயகி அவளுக்கான ஒப்பனையை முடித்து வெளியே வர, வெகுவாக சிரமப்பட்ட முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள் ஸ்ரீகா. குட்டைப்பாவாடை, அநியாயத்திற்கு மார்பு பிளவுகளை எடுத்துக் காட்டும் அளவுக்கான ஒரு மேலாடை..

                     கொஞ்சமும் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் அவள் தயாராக வந்து நிற்க, படப்பிடிப்பு தொடங்கியது. அங்கே இருந்த அந்த ஹீரோ சித்தார்த் வர்மா ஏற்கனவே ஸ்ரீகாவுக்கு பழக்கமானவனாக இருக்க, ஒரு இலகுத்தன்மையுடன் அவளிடம் வாயடித்துக் கொண்டே நின்றான் அவன்.

                    துருவனுக்கும் அவன் நண்பன் என்பதோடு அனாவசியமான வழிசல்கள் எதுவும் அவன் பேச்சில் இருக்காது என்பதால் ஸ்ரீகாவுக்கும் நல்ல நண்பன்தான் அவன். எனவே ஒருவரை ஒருவர் பேச்சில் கிண்டலடித்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் வேலையை பார்க்க, எல்லாம் நன்றாகவே சென்றது.

                   ஒரு காட்சியில் ஹீரோவின் தோள்மீது ஏறி அமர்ந்து ஆடிய நாயகி உடலை வளைத்து கீழே இறங்க வேண்டிய நிலையில், வலது பக்கம் என்று கூறியதை மறந்து வர்மாவின் இடது பக்கம் இறங்க முற்பட்டவள் அத்தனை பேர் முன்பும் கீழே விழுந்து வைத்திருப்பாள். ஆனால், அருகே நின்றிருந்த அறிவன் அவளை கீழே விழாமல் தாங்கிப் பிடித்து நிறுத்த, அவன் கைகள் அவள் இடையிலும், முதுகிலும் சற்று அழுத்தமாக பதிந்து விட்டிருந்தது.

                   சரியாக நிற்க முடியாமல் தடுமாறியவள் நிதானத்திற்கு வரவும், தன்னை பிடித்திருந்த அறிவனை ஓங்கி அறைந்து இருந்தாள். அறிவன் சட்டென அவள் அறைந்ததில் ஒன்றும் புரியாமல் நிற்க, அவள் விழும்போதே தன் இடத்திலிருந்து எழுந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் ஸ்ரீகா.

                   இப்போது அறிவனை அவள் அடித்து விடவும்,வேகமாக ஓடி வந்தவள் அவள் சுதாரிக்கும் முன்பே அவள் கன்னத்தில் அறைந்திருந்தாள். அவள் கோபமாக ஸ்ரீகாவை ஏறிடும்போதே மீண்டும் ஒரு அறை வைத்தவள் தன் கையில் இருந்த மைக்கை தூக்கி அடிக்க, பலத்த சத்ததுடன் தூர சென்று விழுந்தது அந்த மைக்.

                  அத்துடன் நிற்காமல் மீண்டும் ஸ்ரீகா அவளை நெருங்க, இம்முறை அவள் கையை பிடித்து தடுத்து, தன்னுடன் இழுத்து நிறுத்திக் கொண்டான் அறிவன். அவனை முறைத்தவள் அந்த நாயகியிடம் “யார் மேல கையை வைக்கிற… யாரு ன்னு நெனைச்ச நீ..” என்று கோபத்துடன் இரைய

                   “நீ தப்பு பண்ணிட்ட ஸ்ரீகா.. கேவலம் ஒரு டான்சர் நீ.. என்மேல கை வைப்பாயா…” என்று அவளும் கொதிக்க

“என்ன சொன்ன.. திரும்ப சொல்லு.. கேவலம் ஒரு டான்சரா…” என்று கேட்டுக் கொண்டே கோபத்துடன் அவள் முன்னேற, அவளை விடாமல் இழுத்துப் பிடித்தான் அறிவன்.

                 “அடிக்கமாட்டேன் கையை விடுடா…” என்று அவனிடம் கத்தியவள் “ஹேய்.. நீ என்ன சொன்ன திரும்ப சொல்லு… ” என்று மிரட்டலுடன் அந்த நடிகையை நெருங்கிவிட, இப்போது சித்தார்த் இருவருக்கும் இடையில்  நின்றான்.

                  “ஸ்ரீகா ப்ளீஸ்.. கொஞ்சம் கூலாகு… பேசுவோம்.. இவ்ளோ கோபம் வேண்டாம்..” என்று பொறுமையாக அவன் கூற, தன் பொறுமையை இழுத்துப் பிடிப்பதே பெரும்பாடாக இருந்தது ஸ்ரீகாவுக்கு.

                  “நீ வழியை விடு சித்.. அவங்க எனக்கு பதில் சொல்லியாகனும்.. அதென்ன கேவலம் ஒரு டான்சர். எந்தவகையில இவங்களுக்கு நாங்க குறைஞ்சிருக்கோம்.. தெரியணும் எனக்கு.. ‘என்றவள் ரௌத்திரமாக அவனுக்கு பின்னால் நின்றிருந்தவளை முறைக்க

                   இதற்குள் இவர்கள் அருகில் வந்திருந்த இயக்குனர் “என்ன பண்ணி வச்சிருக்கீங்க திஷா நீங்க…எதுக்காக அவரை அடிச்சீங்க.. நீங்க கீழே விழாம பிடிச்சதுதான் அவன் செஞ்ச தப்பு… செட்ல இத்தனைப் பேர் முன்னாடி எப்படி நீங்க இப்படி நடக்கலாம்..” என்று அவரும் கத்திவிட

                  அவரை பகைத்துக் கொள்ள முடியாதே. சட்டென சரணடைபவளாக “சாரி சார்..” என்றவள் “அந்த நேர பதட்டத்துல ஏதோ செஞ்சுட்டேன்.. அதுக்காக இவ என்னை எப்படி அடிக்கலாம்..” என்று நியாயம் கேட்க

                  “என்கிட்டே  கேளு.. நான் பதில் கொடுக்கறேன்..” என்று அப்போதும் ஸ்ரீகா முன்னால் வர, “ஸ்ரீகா ப்ளீஸ்..” என்று அவளை அமைதிப்படுத்தினார் இயக்குனர்.

                  “நீங்க அறிவனை எப்படி கையை நீட்டலாம். அவங்களோட அசிஸ்டன்ட் அவர். அவங்களோட ப்ரதரும் கூட. அவங்ககிட்ட மன்னிப்பு கேளுங்க.” என்று அவர் பிரச்சனையை முடிக்கப் பார்க்க, அந்த நாயகியும் நிலைமை புரிந்தவளாக “சாரி..” என்று அறிவனிடம் மெல்லிய குரலில் அவன் முகத்தைப் பார்க்காமல் கூறிவிட்டாள்.

                   ஆனால், ஸ்ரீகாவுக்கு அதற்குமேல் அங்கே இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அவள் மன்னிப்பு கேட்டதையும் மீறி, தனக்கு கீழ் உள்ள உதவியாளர்களில் ஒருவனை அழைத்து, “இந்த சாங்கை முடிச்சு கொடுத்திடு ஜாக்..” என்று விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

                 அந்த இயக்குனர், சித்தார்த், அறிவன் என்று அத்தனைப் பேரும் எடுத்துக் கூறியும் சட்டையே செய்யாமல் “என்னால இனி ஒரு நிமிஷம் கூட இந்த செட்ல இருக்க முடியாது.. ப்ளீஸ்..” என்றதோடு கிளம்பிவிட்டாள்.

                  அறிவன் “இதை மட்டும் முடிச்சு கொடுத்திட்டு போவோம் ஸ்ரீகா..” என்றபோது அவனை ஒரு பார்வை மட்டும்தான் பார்த்தாள். அதற்குமேல் ஏன் பேசினான் அவன்.???

                    இருவரும் வீடு வந்து சேர, வாசலில் காலணிகளை திசைக்கு ஒன்றாக வீசியவள் நேராக தனது அறைக்கு சென்று விட்டாள். அறிவன் ஹாலில் இருந்த ரேகா அருகில் அமர, “என்னடா நடந்தது??… ஏன் இத்தனை கோபமா போறா…” என்றார் ரேகா.

                   அறிவன் தயங்கியபடியே நடந்ததை அவரிடம் கூற, “அவ அடிச்சது தப்பு ன்னு நான் சொல்லமாட்டேன் அறிவா. ஆனா, நீ ஏன் சும்மா இருந்த. உன்மேல கை வைக்கிற அளவுக்கு விடுவியா..” என்று அவரும் திட்டினார் அறிவனை.

                 இதற்குள் துருவனும், சர்வாவும் வந்துவிட, சர்வா உள்ளே நுழையும்போதே “எரும எரும.. அறிவில்ல.. அவ அடிக்க வந்தா கன்னத்தை காட்டிட்டு நின்றாயா.. திருப்பி ஒரு அடி வைக்க வேண்டாம்..” என்று கத்த

 துருவன் எதுவும் பேசாமல் அறிவனை முறைத்து கொண்டே நின்றான். அறிவன் அத்தனைப் பேரையும் நிதானமாக பார்த்தவன் “ம்மா… நான் என்ன ன்னு சுதாரிக்கும் முன்னமே அவ அடிச்சுட்டாம்மா.. நம்ம வீட்டு குட்டிப்பிசாசு அதுக்கும் மேல.. அவ ஒரு அறை விட்டதுக்கு இவை ரெண்டா திரும்ப கொடுத்திட்டா.. அதுக்குமேல என்ன செய்ய சொல்றிங்க..” என்று அவன் அவனுடைய நீயாயத்தை பேச, கேட்பதற்குதான் யாரும் தயாராக இல்லை.

                ஆர்த்தி அவனுக்கு காஃபி கொண்டு வந்து கொடுத்தவள் “ஸ்ரீகா அடிக்காம விட்டு இருந்தா, நீ அடிச்சிருப்ப இல்ல அறிவா..” என்று சிரிப்போடு கேட்க, திருதிருவென விழித்து பின் சிரித்து விட்டான் அறிவன்.

                       “நீங்களுமா அண்ணி..” என்று அவன் பாவமாக அவன் கேட்க

                 “சும்மா… சும்மா.. ” என்று சிரித்தாள் ஆர்த்தி. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அபிநந்தனும், பரமேஸ்வரனும் வந்து சேர்ந்துவிட, பரமேஸ்வரன் மகனைத் தான் முறைத்தார். அபி “என்னடா நடந்தது…” என்று தம்பியின் அருகில் அமர்ந்து கேட்க

                   “ஒண்ணுமே நடக்கல அபிண்ணா… ஸ்ரீ ஏற்கனவே சம்பவத்தை முடிச்சுட்டா… இதோட விடுங்க எல்லாரும்..” என்றவன் ரேகாவிடம் “ம்மா பசிக்குதும்மா..” என்று எழுந்து கொள்ள,

                   பரமேஸ்வரன் “யார் எங்கே இருந்து விழுந்தா உனக்கென்ன.. நீ ஏண்டா அவளை பிடிச்ச… இது தேவையா உனக்கு..” என்று முறைத்தவர் “ஒழுங்கா நாளையில் இருந்து என்னோட ப்ரொடக்ஷன் கம்பெனிக்கு வர்ற வழியைப் பாரு… ஷூட்டிங், டான்ஸ் ன்னு இனி எங்கேயும் போகக்கூடாது நீ..” என்றார் அவர்.

                 “அப்பா.. இதெல்லாம் அநியாயம்.. நான் என்ன தப்பு செய்தேன். ஒரு அடி வாங்கினதுக்கு, டான்ஸ் வேண்டாம் ன்னு சொல்லிட்டு உங்ககூட கம்பெனிக்கு வரணுமா…” என்று அறிவன் நிற்க

                 “அடி வாங்கினது உன் தப்பு இல்ல சரி…. ஆனா, அடி வாங்கிட்டு என்ன பண்ண. என் மகளை மாதிரி திரும்பி ஒண்ணுக்கு ரெண்டா கொடுத்திருக்கணுமா வேண்டாமா???… செய்தியா நீ…” என்று முறைத்தவர்

                “உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீ நம்ம கம்பெனிக்கு வா.” என்று கட்டளையாக சொன்னவர் எழுந்து சென்றுவிட, அவரை மறுத்துப் பேச முடியாமல் நின்றான் அறிவன்.

                துருவன் “அப்பா சொல்றது தான் சரி. நீ அவரோட கம்பெனிக்கு போ. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தாம இருந்தாலே பாதி பிரச்சனை சரியாகிடும்” என்றான்.

                 அறிவன் அவனை முறைக்க “விடுடா பார்த்துக்கலாம்.. அப்பாவோட போக முடியாது ன்னு தோணினா, என்னோட வா கொஞ்ச நாளைக்கு.. விடு..” என்று அவனை சமாதானப்படுத்தினான் அபிநந்தன்.

                “உன்கூடவா… அதுக்கு நான் அவரோடவே போவேன். அவர் சும்மா கூட கூட்டிட்டு போவாரு.. நீ வேலை சொல்லியே சாகடிப்ப.. என்று அறிவன் சலித்துக் கொள்ள, துருவனும், சர்வாவும் இப்போது அபியைப் பார்த்து சிரித்து வைத்தனர். அபி தனது இளையவனை கொலைவெறியோடு முறைக்க “பசிக்குதுப்பா.. வாங்க முதல்ல..” என்று இடத்தை காலி செய்தான் அறிவன்.

Advertisement