Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 08-2

                          தீக்ஷி இதழ்களில் உறைந்த மெல்லிய புன்னகையுடன் கைகளைக் கழுவி கொண்டு வர, அவளை முறைத்துக் கொண்டே சற்று தள்ளி நின்றிருந்தான் சர்வா. அவன் கையில் இருந்த தன் அலைபேசியையும், பர்சையும் பார்த்தவள் அவன் அருகே சென்று கையை நீட்ட, “நான் என்ன உன் வேலைக்காரனா…” என்று சர்வா கோபத்தைக் காட்ட

                        “வேலைக்காரன்கிட்டஎல்லாம்  என் பொருளை கொடுக்கமாட்டேன். வீட்டுக்காரனாகப் போறவர் தானே.. நீங்க சுமக்கலாம்…” என்றாள் சிறு சிரிப்புடன்

                         “வீட்டுக்காரனா.. இப்படியே பகல் கனவு கண்டுட்டு இரு…” என்று அவன் நக்கலாக கூற

                         “கனவுதான் சர்வா.. தினம் தினம் கனவு காண்கிறேன்… உங்க முகம் மட்டும்தான் தெரியுது எனக்கு. உங்க முன்னாடி  வரவே வேண்டாம் ன்னு சொல்லிட்டு, ஏன் என் கனவுல வந்து தொல்லை பண்றிங்க..” என்றாள் அவள்.

                          “உனக்கு பைத்தியம் எதுவும் பிடிச்சிருக்கா..”

                         “சர்வா பைத்தியம்… சர்வமும் சர்வானந்த் மயமா இருக்கு.. என்ன பண்ணலாம்..” என்றாள் அலட்டிக்கொள்ளாமல்.

                         இதற்குமேல் அவளிடம் பேசுவது ஆபத்து என்று உணர்ந்தவன், தன் கையில் இருந்த அவள் பொருட்களை அவளது கையில் திணித்து விட்டு அந்த இடத்தை விட்டே விலகிச் சென்றான். அவன் நகர்ந்த அடுத்த நிமிடம் ஸ்ரீகா பின்னிருந்து அவள் தோள் தட்டினாள்.

                         “என்னம்மா… ” என்று தீக்ஷி அமைதியாக அவளிடம் கேட்க

                          “இங்கே புதுசா வெள்ளம் ஏதோ வந்திருக்காமே தீ..  மொத்த பெரும் மிதந்துட்டு இருக்காங்களாம்…” என்று ஸ்ரீகா சிரிக்க

                            “உன் அண்ணனை பார்த்து நான் விட்ட ஜொள்ளு, கொஞ்சம் ஓவர்லோட் ஆகியிருக்கும் ஸ்ரீகா..” என்றாள் தீக்ஷி.  கொஞ்சம் கூட வெட்கமோ, தயக்கமோ இல்லை அவளிடம்.

                            “உனக்கெல்லாம்..” என்று ஸ்ரீகா தொடங்கும்போதே, “உன் அண்ணன் விஷயத்துல எனக்கு வெ மா சூ சொ எதுவுமே இல்ல..” என்று முடித்தாள் தீக்ஷி.

                           “இப்படி அவன் பின்னாடி அலையணுமா.. அப்படி என்னடி  அவன்மேல லவ்வு..” என்று ஸ்ரீகா சலிக்க

                          “நான் இப்படி லவ் பண்ணியும், திரும்பிக்கூட பார்க்கமாட்டேன் ன்னு நிற்கிறார் இல்ல.. அதுகூட காரணமா இருக்கலாம்..” என்று சிரித்தாள் தீக்ஷி..         

                           “திருத்த முடியாதுடி.. உங்களை எல்லாம் திருத்தவே முடியாது…” என்று பருத்திவீரன் மாடுலேஷனில் சொன்னவள் “இப்போ என்ன வீட்டுக்கு கிளம்புற ஐடியா இருக்கா..இல்ல.. இங்கேயே அவன் பின்னாடி சுத்திட்டு இருக்க பிளான் பண்றியா..” என்று ஸ்ரீகா நக்கலடிக்க

                         அப்போதுதான் நேரத்தைப் பார்த்தாள் தீக்ஷி… “அச்சோ… டைம் ஆச்சு ஸ்ரீகா.. அண்ணன் வெய்ட் பண்ணுவாங்க… நல்லா வாங்கப் போறேன் நான்… பை..” என்றவள் அவசரஅவசரமாக கிளம்பி காருக்கு வந்தாள். காருக்கு அருகில் நின்றவள் ஒருநிமிடம் தன் கண்களை சுழலவிட, அந்த திருமண மண்டபத்தின் வாயிலில் நின்று அவளை பார்த்திருந்தான் சர்வா.

                        சிரிப்புடன் மெல்ல தலையசைத்து அவனிடம் விடைபெற்றவள் மனமே இல்லாமல்தான் அங்கிருந்து கிளம்பினாள். அவள் கிளம்பிய சில நொடிகளில் அறிவன் சர்வாவின் அருகில் வந்து நின்றான். சர்வா “என்ன இப்போ…” என்பது போல் கெத்தாக ஒரு பார்வை பார்க்க

                         “என்ன இப்போ… என்னவாம்.. ஏதாச்சும் நடந்ததா இங்கே..” என்று புருவத்தை ஏற்றி இறக்கி அவனிடம் வாயடித்தான் அறிவன்.

                         சர்வா அவன் பேச்சில் வரவிருந்த சிரிப்பை அடக்கியவன் “அடி வாங்காம ஓடிடு அறிவா… எல்லாம் கூட்டு களவாணிங்க தானே..” என்றான் முறைப்பாக

                        “நாங்க கூட்டு களவாணிங்க தான் சாமி… ஆனா, நீங்கதான் ரொம்ப நல்லவங்க ஆச்சே… நீ ஏண்டா அவ பர்ஸை தூக்கிட்டு பின்னாடியே போன…” என்று நக்கலாக அறிவன் பார்க்க, அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த துருவனும் சர்வாவைப் பார்த்து சிரித்து வைத்தான்..

                       “டேய் நீயுமாடா..” என்று சர்வா பாவமாக பார்க்க,

                       “மொத்த மண்படத்துக்கும் படம் காட்டிட்டு என்னை கேள்வி கேட்கறியா நீ..” என்று வயிற்றில் குத்தினான் துருவன்.

                       “பிடிச்சா, பிடிக்குது ன்னு சொல்றதுக்கென்னடா… ஏன் அவளை அலையவிடற..” என்று கண்டிப்புடன் அவன் கேட்க

                      “பார்க்கலாம்டா…” என்றதோடு முடித்துக் கொண்டான் சர்வா.

                      அவர்களை அதற்குமேல் பேச விடாமல் ஸ்ரீகா வந்து அழைக்க, அவளுடன் உள்ளே சென்றனர் மூவரும். விருந்தினர்களின் வருகை முற்றிலும் குறைந்து விட்டிருக்க,  அபியும், ஆர்த்தியும் சோர்ந்து போயிருந்தனர்.

                       ரேகா அவர்களை சாப்பிட அழைத்துச்செல்லும் பொறுப்பை நால்வர் குழுவிடம் ஒப்படைக்க, “இதுங்க கூடவா..” என்று உள்ளுக்குள் அலறினான் அபிநந்தன்.

                       ஆனாலும், நால்வரும் பாசமாக இருவரையும் அழைத்து செல்ல, அவர்களை அமரவைத்து பரிமாறும் வரை எல்லாம் நன்றாகத் தான் சென்றது. அபி முதல் வாய் உணவை எடுத்து வாயில் வைக்கும் நேரம், “அபிண்ணா.. அண்ணிக்கு ஊட்டிவிடு..” என்றாள் ஸ்ரீகா.

                      அபிக்கும் ஆசைதான். ஆனால், தங்கை அருகில் இருக்க, அவளின் முன்னால் ஆர்த்தியைப் பார்த்து வைக்கவே தயக்கமாக இருந்தது அவனுக்கு. பிறகெங்கே ஊட்டிவிடுவது. ஐந்து பேருமே நண்பர்கள் போல பழகி  இருந்தாலும், மூத்தவன் என்ற பொறுப்போடு வளர்க்கப்பட்டவன் அல்லவா…

                        என்னவோ தடுமாறினான் அவன். இயல்பாகவே வரவில்லை. ஸ்ரீகா மீண்டும் “ஊட்டி விடுண்ணா..” என்று மிரட்ட

                        “அதெல்லாம் வேண்டாம் ஸ்ரீ.. அமைதியா இரு..” என்றான் அதட்டலாக

                        ஸ்ரீகா மீண்டும், “ஏன் வேண்டாம்.. ஊட்டுண்ணா..” என்று நிற்க, சங்கடத்துடன் ஒரு வாய் உணவை எடுத்து அவன் ஆர்த்தியின் பக்கம் திரும்ப, ஆர்வமாக வாயைத் திறந்தாள் அவள்.

                       அடுத்து அவளையும் ஊட்ட சொல்ல, தன் இலையில் இருந்து அவளும் எடுத்து ஊட்டிவிட்டாள். முகம் முழுவதும் சிரிப்புடன் ஆர்த்தி அபிநந்தனை நோக்க “ஒரு மார்க்கமாதான் இருக்கா இன்னிக்கு..” என்று எண்ணிக் கொண்டே உணவை முடித்து எழுந்தான் அபிநந்தன்.

                       ஸ்ரீகா அவள் அன்னை, இன்னும் சில உறவுகளோடு ஒரு அறையில் தங்கி கொள்ள, பரமேஸ்வரன் பிள்ளைகளுடன் இருந்து கொண்டார். அடுத்தநாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமண சடங்குகள் தொடங்கிவிட, ரேகாவும், பரமேஸ்வரனும் மணமேடையில் கம்பீரமாக நிற்க, ஸ்ரீகா அழகாக பட்டுடுத்தி இப்போது அண்ணியின் அருகில் நின்றிருந்தாள். மெஜந்தா கலர் பட்டுடுத்தி இருந்தவள் அதற்குரிய டிசைனர் பிளவுஸ், தங்க நகைகள் என்று மின்னிக் கொண்டிருக்க, அவள்மீது இருந்து பார்வையை எடுக்க முடியாமல் திணறி நின்றான் பீஷ்மன்.

                      ஆம்.. ஆளுக்கு முன்னதாக காலைத் திருமணத்திற்கும் தன் வருகையை பதிவு செய்திருந்தான் அவன். அன்னை தந்தை மட்டுமே செல்வதாக இருக்க, கடைசி நேரத்தில் தந்தைக்கு ஏதோ ஒரு முக்கிய வேலை வந்துவிட, அன்னையை அழைத்துக் கொண்டு வந்திருந்தான் பீஷ்மன்.

                      இப்போதும் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தவன் பொதுவாக திருமணத்தை பார்த்துக் கொண்டிருப்பது போல் வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும், மொத்தமாக அவன் பார்வை மொய்த்து கொண்டிருந்தது ஸ்ரீகாவை தான். 

                      அத்தனை ஆளுமையுடன் கம்பீரமாக முதல் வரிசையில் அமர்ந்து இருந்தவனை இன்னமும் ஒருமுறைக் கூட திரும்பி பார்க்கவில்லை ஸ்ரீகா. அவள் கவனம் முழுவதும் அண்ணனின் திருமணத்தின் மீதே இருக்க, அண்ணன் திருமாங்கல்யம் பொருந்திய மஞ்சள் கயிற்றை ஆர்த்தியின் கழுத்தில் கட்டவும், பொறுப்பாக மூன்றாவது முடிச்சிட்டு தன் உறவை பலப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருந்தாள் அவள்.

                      முகத்தில் அப்படி ஒரு புன்னகை. திருமணம் முடியவுமே, ஆர்த்தியை அணைத்து முத்தமிட்டவள் “வெல்கம் அண்ணி..”என்று கட்டிக் கொள்ள, இங்கு சகோதரர்கள் மூவரும் அபியை அணைத்து வாழ்த்துக் கூறிக் கொண்டிருந்தனர்.

                        அடுத்தடுத்து சடங்குகள் தொடர, எத்தனைப் பேர் இருந்தாலும், ஆளுக்கு ஒரு வேலை தயாராக இருந்தது. விருந்தினர்களை சமாளிப்பது, மேடையில் இருக்கும் உறவுகளை மரியாதைப்படுத்துவது, வந்தவர்களை உணவுண்ண அழைத்து செல்வது, அவர்களை வழியனுப்பி வைப்பது என்று நண்பகல் பன்னிரண்டு மணிவரை நீண்டது திருமணம்.

                          ஒருவழியாக அனைத்தையும் முடித்துக் கொண்டு, பரமேஸ்வரன் குடும்பம் வீடு வந்து சேர, பெற்றவர்களை பிரியும் ஏக்கத்தில் அழுதழுது கண்களே சிவந்து விட்டது ஆர்த்திக்கு. கடைசியில் “உன்னை என்ன கடத்திட்டா போறோம்.. இல்ல, அமெரிக்காக்கு போக போறியா..” என்று அபி அதட்டவும் தான் அழுகை நின்றது.

                         ஆனால், அவனின் அதட்டலில் ஆர்த்தியின் முகம் சுருங்கிவிட, ஓட்டுனரை வைத்துக் கொண்டு எதுவும் பேச முடியாமல் அமைதியானான் அவன்.  ரேகா மருமகளை பாசமாக வரவேற்க, அவரின் அன்பில் அவளின் முகசுணக்கம் சற்றே சீரானது.

                           ரேகா ஸ்ரீகாவுடன் ஆர்த்தியை அபியின் அறைக்கு அனுப்பி வைத்தவர் அதன்பிறகே சற்று ஓய்வாக அமர்ந்தார். உறவுகள் எல்லாம் மண்டபத்தோடே கிளம்பி இருக்க, வீட்டில் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். அவ்வளவாக யாரிடமும் ஓட்டுதல் இல்லையே.  இப்போது அவர்களாக நெருங்க முற்பட்டாலும், ரேகா விலகியே நிற்பதால் நெருக்கமான உறவு என்று ஏதுமில்லை.

                          ரேகாவும், பரமேஸ்வரனும் சற்றே ஓய்வாக ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருக்க, அப்போதுதான் வந்தார் ரகுவரன். உடன் அவரது மகள் சந்தோஷி. ரேகா சந்தோஷியை முறைத்தவர் இருந்த இடத்தில இருந்து எழுந்து விட, “ஆன்ட்டி..” என்று ஓடி வந்து அவர் கையை பற்றிக் கொண்டாள் சந்தோஷி.

                         ரேகா “என்கிட்டே பேசாத.. அபி கல்யாணத்துக்கு கூட வர முடியாத அளவுக்கு என்ன வேலை உனக்கு. ஏன் உன் அப்பா இல்லாம வந்தா, உன்னை உள்ளே சேர்க்க மாட்டோமா..” என்று அவர் கடிந்து கொள்ள

                         “அம்மாவுக்கு கொஞ்சம் முடியல ஆன்டி.. அவங்களை தனியாவிட்டுட்டு வர முடியாதே.. அதோட அண்ணாவுக்கும் நான் வர்றது பிடிக்காது.. எதுக்கு எல்லாரையும் சங்கடப்படுத்தனும்…” என்று அவள் மெல்லியதாக புன்னகைக்க

                         அவள் சர்வாவைக் குறிப்பிடுவது புரிந்தது அவருக்கு. அதோடு யமுனாவின் உடல்நிலை மீது சொல்லும் காரணமும் ஏற்புடையதாக இல்லை. சந்தோஷியை செல்லவிடாமல் தடுப்பதற்காகவே கூட செய்திருப்பாள் என்ற எண்ணம் தான் ரேகாவுக்கு.

                   ஆனால், அதையெல்லாம் கூறி எதிரில் நிற்கும் கள்ளமில்லாத பெண்ணை சங்கடப்படுத்துவதில் விருப்பமில்லை அவருக்கு. எனவே அவள் அன்னையை பற்றிய பேச்சை தவிர்த்துவிட்டவர் “இந்த வீட்டுக்கு சர்வா எப்படியோ அப்படிதான் நீயும் சந்தோஷி… அவன் எதுவும் சொல்வானோ ன்னு எல்லாம் யோசிக்க வேண்டாம். நீ நினைச்ச நேரம் இங்கே வந்து போகலாம்.” என்று மட்டுமே கூறினார் ரேகா.

                     ரகுவரன் “அபி எங்கேடா..” என்று பரமேஸ்வரனிடம் கேட்க, பரமேஸ்வரன் ரகுவரனை அமர சொன்னவர் “அபியை கூப்பிடு ரேகா..”என்று மனைவியை அனுப்பி வைத்தார். ரேகா அபிக்கு அழைத்து கீழே வர சொன்னவர், வந்தவர்களுக்கு குடிப்பதற்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்ததோடு சரி.

                     ரகுவரனிடம் இப்போது வரை ஒரு வார்த்தைக் கூட பேசமாட்டார் ரேகா. ஏனோ இன்னமும் அவர் சர்வாவுக்கு நியாயம் செய்யவில்லை என்ற எண்ணம் எப்போதுமே உண்டு ரேகாவுக்கு. ரகுவரன் யமுனா நடந்து கொள்வதில் அதீதமான அதிருப்தியும் கூட. சர்வாவை முன்னிட்டே எப்போதும் அவர்களுடன் அதிகம் பட்டுக் கொள்வதில்லை ரேகா.

                     இப்போதும் அதையே கடைபிடிப்பவராக அவர் ஜூஸ் கொடுத்ததோடு ஒதுங்கி கொள்ள, அபி ஆர்த்தியோடு இறங்கி வந்தான். ரகுவரன் இருவரையும் ஆசிர்வதிக்க, சந்தோஷி தன் கையில் இருந்த பரிசுப் பொருளை அபிநந்தனிடம் நீட்டினாள். அபி புன்னகையோடு வாங்கி கொள்ள, சந்தோஷிக்கு அதுவே போதுமாக இருந்தது.

                      அதற்குமேல் அங்கே தாமதிக்காமல் விரைவிலேயே கிளம்பி இருந்தனர் ரகுவரனும், சந்தோஷியும். தான் இருக்கும் வரை மகன் வெளியில் வரமாட்டான் என்று தெரியுமே ரகுவரனுக்கு. அதனைக் கொண்டே விரைவாக கிளம்பிவிட்டார் அவர்.

                           உண்மையில் அவர் கணித்தபடிதான் இருந்தான் சர்வா.

                        அவன் சூடுபட்ட அந்த தினத்திற்கு பிறகு பெரும்பாலும் அவன் ரேகாவின் கைகளில் தான். வளர்ந்து ஓரளவு பக்குவப்பட்டு விட்டபோதும் கூட, ரேகாவின் வற்புறுத்தலின் பேரில் அவ்வபோது சென்று வருவது மட்டுமே. மற்றபடி உணவு, உறக்கம், கொண்டாட்டங்கள் என்று அனைத்துமே இந்த வீட்டில் தான்.

                         எப்போதாவது ரகுவரன் இந்த வீட்டிற்கு வந்தாலும், இன்று போலவே ஸ்ரீகாவின் அறையிலோ, இல்லை துருவனின் அறையிலோ முடங்கி கொள்வான். அவர் வெளியேறும் வரை யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி கொள்வான் சர்வானந்த். இந்த ஒரு விஷயத்தில் ரேகாவின் பேச்சுகூட எடுபடவில்லை அவனிடம்.

                         ரேகா ரகுவரனைப் பற்றியோ,அவன் வீட்டைப் பற்றியோ ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே, அவர் மடியில் தலைவைத்துக் கொள்பவன் “என்னோட அம்மாவும், அப்பாவும் இங்கே தான இருக்கீங்க ரேகாம்மா.. என்னை ஏன் அங்கே போக சொல்றிங்க..” என்பவனிடம் ரேகா வேறு என்ன பேச முடியும்.

                        இப்போதும் அப்படியே ஸ்ரீகாவின் அறையில் கையை தலைக்கு வைத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்து அவன் படுத்து விட்டிருக்க, ஸ்ரீகா அந்த அறைக்குள் நுழைந்தாள். சர்வா தனியாக படுத்து இருப்பதைக் காணவும் “நீ ஏண்டா ஓடி ஒளியுற… ஒளிய வேண்டியவர்களே தைரியமா நெஞ்சை நிமிர்த்திட்டு திரியுறாங்க.. ” என்று அவனை முறைத்தாள் ஸ்ரீகா.

                          “நான் ஒளியல ஸ்ரீகா.. ஒதுங்கிப் போறேன்.. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு… “என்றான்

                           “அதுதான் ஏன் என்று கேட்கிறேன்.. நீ ஏன் ஒதுங்கிப் போகணும்… அவர் உன்னோட அப்பா சர்வா. உனக்குப்பிறகு தான் அந்தம்மா, அவங்க பொண்ணு எல்லாமே..” என்று எப்போதும் இருக்கும் கோபத்துடன் அவள் கூற

                         “இது எதுவுமே உன் ரகு அங்கிளுக்கு தெரியாதா… எல்லாம் தெரிஞ்சு தானே நடக்குது. அவர் பாவமா முகத்தை வச்சுட்டு இங்கே வந்து நின்றால், அவருக்கு ஒண்ணுமே தெரியாது அப்படி அர்த்தம் கிடையாது. இதைப் பற்றி நாம நிறைய பேசியாச்சு.. இப்போ நல்ல மூட்ல இருக்கேன்.. வேண்டாம் விடு..” என்றவன் “நான் கொஞ்சநேரம் தூங்கப் போறேன்… நீ கிளம்பு..” என்று அவளையும் துரத்தவேப் பார்த்தான்.

                        அவனை முறைத்துவிட்டு, அறையின் கதவை மூடி கீழே வந்தாள் ஸ்ரீகா. அன்றைய தினம் அப்படியே நகர, மாலை முடிந்து, இரவு தொடங்கும் நேரத்திலேயே, பிள்ளைகளை அவரவர் அறைக்கு துரத்தி விட்டிருந்தார் ரேகா.

                        ஆர்த்தியும் ரேகாவின் உதவியோடு தயாரானவள் அபிநந்தனின் அறைக்குள் நுழைய, முதல்முறையாக வெட்கம் வந்து தொலைத்தது அவளுக்கு. நேற்று ஆடியது, அதன்பிறகு அவனோடு கைகோர்த்து நின்றது, அவனுக்கு ஊட்டிவிட்டது என்று எங்குமே அவளின் வெட்கம் வெளிப்படவே இல்லையே… நமக்கு இந்த வெட்கமெல்லாம் வரவே வராதா என்று கூட யோசித்து இருந்தாள் ஆர்த்தி.

                        இதோ அபிநந்தனின் அறைக்குள்ளும் வந்துவிட, தலையை நிமிர்த்தும் தைரியம் மட்டும் வரவே இல்லை. வந்து ஐந்து நிமிடங்கள் ஆகியும், அபிநந்தன் தன்னை நெருங்காமல் போனதில் குழம்பியவளாக அவள் தலையை நிமிர்த்த, அபிநந்தன் அறையிலேயே இல்லை.

                       ஆர்த்தி பார்வையால் அந்த அறையை வலம் வர, வலதுபுறம் இருந்த பால்கனியில் நின்று அவளையே பார்த்திருந்தான் கணவன். அவன் பார்வையில் மெல்லியதாக கோபம் வர, சட்டென முறுக்கி கொண்டவளாக அவள் கட்டிலை நோக்கி நகர, “டட்ட டட்ட டடக்கு டடக்கு மம்பட்டியான்…அட மம்பட்டியான்..” என்று பாடல் ஒலித்தது.

                       ஆர்த்தி பதறிப் போனவளாக அபிநந்தனை திரும்பிப் பார்க்க, அவளை கொள்ளை கொள்ளும் புன்னகையோடு நின்றான் அபிநந்தன். அவன் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் அவனிடமே சரண் புகுந்தவள் அவன் மார்பில் புதைந்து கொண்டு, அலைபேசியை அவன் கையிலிருந்து வாங்க முற்பட, கையை மேலும் கீழும் ஆட்டி ஆட்டம் காண்பித்தான் அவன்.

                      “அச்சோ.. மானம் போகுது அபி.. யாருக்கும் கேட்டுடப் போகுது. கொடுங்க..” என்று மீண்டும் முயல, அவள் வலது கையை பிடித்து இழுத்தவன் அவளை தன்மீது சாய்த்துக் கொள்ள, மொத்தமாக அவன்மீது மோதி நின்றாள் ஆர்த்தி. அவனின் திண்மையான உடலில் மோதிய இடங்கள் லேசான வலியைக் கொடுக்க “மோசம் நீங்க..” என்று முகம் சுழித்துக் கொண்டாள் அவள்.

                    அவள் சுழித்த இதழ்களை கையால் நெருக்கியவன் “நீ நினைக்கறதை விட மோசம் நான்.. பார்க்கத்தானே போற.. பழகிக்கோ..”என்று மறுகையால் அவளை வளைத்துக் கொண்டான். கூடவே “மதியம் முறைச்சதுக்கு கோபமா இருப்ப ன்னு நினைச்சேன்..” என்று அவனே எடுத்துக் கொடுக்க

                   “ஆமாப்பா.. மறந்தே போய்ட்டேன் நான்.. என்னை திட்டுனீங்க இல்ல.. போங்க..” என்று விலக

                  “நான் பக்கத்துல இருந்தா, நீ வேற எதையும் யோசிக்கறதே இல்லையே..” என்றான் இன்னதென்று விளக்கமுடியாத குரலில்.

                   “என்ன யோசிக்கல.. என்ன செஞ்சேன்..” என்று அவள் கணவன் முகம் பார்க்க, முகத்தில் மெல்லிய பதட்டம் தொற்றிக் கொண்டது ஆர்த்திக்கு.

                   “தப்பா எல்லாம் ஒன்னும் இல்லடா.. சொல்லப்போனா, என் பொண்டாட்டி என்னை இப்படி ரசிக்கிறது சந்தோஷம் தான் எனக்கு.. கொஞ்சம் கர்வமாக கூட இருக்கு.. ஆனா, இங்கே என் தம்பிங்க, ஸ்ரீகா எல்லாம் இருக்காங்க இல்லையா. சின்னப்பசங்க.. அவங்க முன்னாடி இப்படி பார்த்து வைக்காத…”

                   “நீ இப்படி நின்றால் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. இந்த ரூம்குள்ள நான் மொத்தமா உன் கன்ட்ரோல் தான். பட் வெளியே கவனமா இருக்கணும்..” என்றான் பொறுப்பாக

                   “ம்ம்ம்ம் ” என்று வேகமாக தலையாட்டினாள் ஆர்த்தி. அவளின் தலையாட்டலில் “சமத்து பாப்பாடி நீ..” என்று கொஞ்சிக் கொண்டவன் கைகள் இன்னும் இன்னும் அவளை தன்னோடு இறுக்க, இருக்குமிடம் உணர்ந்து அவன் கைகளை தடை செய்தாள் ஆர்த்தி.

                  அபிநந்தன் அவளை பார்க்க, “பால்கனியில் இருக்கோம் நாம..” என்றாள் சங்கடமாக

                   “ஏன்.. என் பொண்டாட்டியை நான் கட்டிப்பிடிக்கிறேன்… எங்கே இருந்தா என்ன??” என்றான் அபி.

                  அவன் விளக்கத்தில் அவன் நெஞ்சிலே அடித்தவள் “உங்க பொண்டாட்டி தான்.. இப்போ உள்ளே வாங்க..” என்று இழுத்து வந்தாள் அவனை.

                   அறைக்குள் வந்த நிமிடம் அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன் கட்டிலை நோக்கி நடக்க, மொத்தமாக அவனிடம் மயங்கி நின்றாள் ஆர்த்தி. அது என்னவோ பார்த்த முதல் பார்வையில் இருந்தே அவளை ஈர்த்தான் அபிநந்தன். வீட்டில் பேசி முடித்து இருந்தாலும், இந்த இடைப்பட்ட மூன்று மாதங்களில் அப்படி ஒரு காதல் அவன்மீது.

                    அந்த காதலுக்காக, அவள் அபிநந்தனுக்காக என்று மொத்தமாக தன்னை அந்தக் குடும்பத்தில் பொறுத்திக் கொள்ள நினைத்தாள் ஆர்த்தி. அபி முழுதாக அவளுக்கு துணை நிற்க, அவனின் பாடங்கள் அத்தனையும் அப்படியே பதிந்துவிடும் அவள் மனதில்.

                    திருமணம் முடிந்து அடுத்த ஒரு வாரம், மறுவீடு, திருமண விருந்துகள் என்று ஓடிவிட, இதற்குள் கணவனின் குணம் ஓரளவுக்கு பிடிபட்டு இருந்தது.ஆர்த்திக்கு.இதோ இப்போதும் திருமணம் முடிந்த மறுவாரம் அவன் அலுவலகம் கிளம்ப, ரேகா அளவுக்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆர்த்தி. சிரிப்புடன் கணவனை வழியனுப்பி வைத்தவள் மாமியாருடன் அமர்ந்து கொண்டாள்.

                   

Advertisement