Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 08

                                        அபிநந்தன் -ஆர்த்தியின் திருமண நிகழ்ச்சிக்கு தயாராக நின்றது அந்த மண்டபம். திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில பல நிமிடங்கள் மட்டுமே இருந்தது. பரமேஸ்வரன் குடும்பம் வீட்டிலிருந்து ஏற்கனவே கிளம்பி இருக்க, அறிவனும், ஸ்ரீகாவும் மட்டும் ஏதோ வேலை என்று கழன்று கொண்டிருந்தனர்.

                                   அந்த திருமண மண்டபம் அலங்கார விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்க,     மண்டபத்தின் ஒவ்வொரு இடமும் அவர்களின் பணத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தது. பெண் வீட்டில் ஒரே பெண்ணின் திருமணம், இங்கு பரமேஸ்வரனுக்கோ தன் முதல் மகனின் திருமணம். ஏற்பாடுகளுக்கு சொல்லவா வேண்டும்…

                                மணப்பெண்ணின் தந்தை மண்டப வாசலில் மாப்பிள்ளைக்காக காத்திருக்க, பரமேஸ்வரனின் கார் கம்பீரமாக உள்ளே நுழைந்தது. ஓட்டுநர் இருக்கையிலிருந்து துருவன் இறங்க, அவனின் மறுபுறம் அபிநந்தன். இயல்பிலேயே வசீகரமானவன் தன் என்பதோடு திருமணமும் சேர்ந்து கொள்ள, ரசிக்கும்படி தான் இருந்தான் அவன்.

                           அவர்களுக்கு பின்னால் சர்வானந்த், பரமேஸ்வரன், ரேகா மூவரும் இறங்க, வாசலில் தயாராக நின்றிருந்த கெண்டைமேளம் பிரம்மாண்டமாக முழங்கியது. அபிநந்தனை நகர விடாமல் அவனை சூழ்ந்து கொண்டு அவர்கள் வாசிக்க, துருவன் அவர்களில் ஒருவனிடம் இருந்த குச்சியை வாங்கி கொண்டு தானும் இசைக்க தொடங்கிவிட்டான்.

                             பத்து நிமிடங்கள் தொடர்ந்த அவர்களின் வரவேற்பு முடிந்து அபிநந்தன் மண்டபத்திற்குள் நுழைய, ஆரத்தி எடுத்து முடிக்கவும், பின்னணியில் டிஜே இசை மண்டபத்தை அதிர வைப்பது போல முழங்கியது. அடுத்த நிமிடம் ஒரு வெண்புகை மண்டபத்தை மொத்தமாக சூழ்ந்து கொள்ள, அருகில் இருப்பவர் யார் என்பதைக் கூட அறிய முடியாத அளவிற்கு இருநிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றனர் அங்கிருந்தவர்கள்.

  அம்மி மிதிச்சாச்சு

அருந்ததிய பார்த்தாச்சு ஏ

ஏ ஏ பின்னி பூ முடிச்சு

புருஷன் கைய

கோர்த்தாச்சு

எட்டூரு எட்டும் படி

தட்டுங்கடா மத்தளத்த பாச

மழை பெஞ்சு வந்து

தோற்கடிக்கும் குத்தாலத்த

பாச மழை பெஞ்சு வந்து

தோற்கடிக்கும் குத்தாலத்த….. என்று பாடல் ஒலிக்க, வேட்டி சட்டை, தலையில் முண்டாசு என அசத்தலாக களமிறங்கினான் அறிவன். “வாத்தி கமிங்.. ஒத்து..” என்று பாடல் மாற, அவனுடன் இப்போது சர்வாவும் சேர்ந்து கொள்ள அலறவிட்டனர் மண்டபத்தை.

                        பாடலின் முடிவில் அபிநந்தனையும் ஆட வைத்தபிறகே ஓய்ந்தனர் இருவரும். மாப்பிளை அவன் அறைக்கு செல்ல, அடுத்து மணமகள் அழைப்பு தொடங்கியது. ஆர்த்தியின் கார் வந்து நிற்கவும், ஸ்ரீகா எங்கிருந்தோ ஓடி வந்தவள் தன் அண்ணிக்கு ஆரத்தி எடுக்க, அவள் முடித்த நிமிடம்

கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு

பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு

பாருங்கடி பொண்ண பாருங்கடி

வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு

அரைச்ச சந்தனமும் மணக்க

மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ

செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு

ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு

மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு

மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

                           என்று பாடல் ஓலிக்க, அதற்கேற்ப தனியாளாக நின்று ஆடினாள் ஸ்ரீகா… அவள் பாடலை முடிக்கும் நேரம், யாரும் எதிர்பாராத விதமாக

மலையூறு நாட்டாம

மனச காட்டு பூட்டாம

உன்னை போல யாரும் இல்ல மாமா….. என்று பாடல் தொடங்க, மேலே முதல் தளத்தில் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருந்த அபிநந்தனை பார்த்துக் கொண்டே ஆடத் தொடங்கினாள் ஆர்த்தி… அவளுக்கு பின்னணியாக ஸ்ரீகா, அபியின் நான்கு சகோதரர்களும் இணைந்து கொள்ள, பாடல் தொடர்ந்தது.

தஞ்சாவூரு ராசாவ

தாராளமா தந்தாங்க

மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா….  

                             என்று அவள் முடிக்க நினைக்க, இதற்குள் அபி கீழே இறங்கி இருந்தான். அவனும் உடன் சேர்ந்து கொள்ள, ஸ்ரீகாவின் நடனக்குழுவினர் “ஓஓ….” என்ற சத்ததுடன் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.

நான் மின்னால பிடிக்க தானே

ஒரு வலைய கொண்டு போறேன்

அடி மீன் புடிக்க மான் புடிக்க

மனசு இல்ல போடி

நான் வேட்டையாட தானே

ஒரு வேல கொண்டு போறேன்

அடி பூ பறிக்க தேன் எடுக்க

பொழுது இல்ல போடி… என்று அபி தொடர, முழுப்பாடலும் முடியும் வரை ஆடித் தீர்த்தபிறகே ஓய்ந்தனர் அந்த ஐவர் படை. ஆர்த்தியும் சளைக்காமல் ஸ்ரீகாவை அப்படியே தொடர, அலட்டிக் கொள்ளாமல் தன் அண்ணிக்கு தோள் கொடுத்தாள் தோழியாக.

                       பாடல் முடிந்த நேரம் ரேகா நால்வரையும் அதட்டிவிட்டு, மணமக்களை அழைத்து செல்ல, அவர் கையில் சிக்கினால் தொலைந்தோம் என்று அவர் கண்ணில் படாமல் தப்பித்து ஓடினாள் ஸ்ரீகா.

                       மணமகனுக்கு நலங்கு வைக்க வேண்டியிருக்க, ரேகா அந்த வேலையில்இறங்கி இருந்தார். ஸ்ரீகா இதற்குள் தன் உடையை மாற்றி அவளுக்கென தைக்கப்பட்டிருந்த அடர்சிவப்பு நிற லெஹங்காவில் தேவதையாக வந்து நின்றாள். துருவன், அறிவன், சர்வா என்று அத்தனைப் பபேரும் கண்ணை கவரும்படி அசத்தலாக வந்து நிற்கவும், வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.

                        ரேகா தன் கணவருடன் வரவேற்பில் நின்றவர் மகளை மருமகளுக்கு துணையாக மேடையில் நிறுத்தி விட்டார். மகன்கள் ஆளுக்கொரு வேலையை கவனித்துக் கொண்டாலும், அடிக்கடி பெற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டனர்.

                        காலை திருமணத்திற்கு உறவுகளை மட்டுமே அழைத்திருக்க, இப்போது திரை உலகின் மொத்தக் கூட்டமும் மண்டபத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. அபிநந்தனுக்கும் திரைத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், அத்தனைப் பேரும் பரமேஸ்வரன் என்ற தனி மனிதருக்காக வந்து நிகழ்வை சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.

                        இப்போது துருவன்,ஸ்ரீகா, சர்வா, அறிவன் என்று நால்வரும் திரையுலகில் பரிட்சையமானவர்களாக இருக்க, அவர்களின் தொழில் தொடர்புகள், நட்புகள் என்று இந்த தலைமுறையும் சேர்ந்து கொண்டது. வந்திருப்பவர்கள் அத்தனைப் பேரும் விவிஐபி வகையை சேர்ந்தவர்களாக இருக்க, அத்தனையையும் அழகாக சமாளித்துக் கொண்டிருந்தனர் ரேகாவின் பிள்ளைகள்.

                    இதில் வந்தவர்களில் பாதிப் பேர், “அடுத்து நீதானா ஸ்ரீகா..” என்று அவளிடமும் கேட்டு விட்டே நகர, வெட்கப்படுவது போல் சிரித்தே அவர்களை சமாளித்து அனுப்பினாள் ஸ்ரீகா. அவள் ஆர்த்தியிடம் எதையோ சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் தான் மண்டபத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த அவள் தோழி தீக்ஷிதா அவள் கண்ணில்பட்டாள். தீக்ஷிதாவைக் கண்ட நிமிடம், ஸ்ரீகாவின் பார்வை சர்வாவைத் தேட, தூரத்தில் நின்றிருந்த அவனும் அப்போது தீக்ஷியைத் தான் பார்த்திருந்தான். ஏதோ தெரியாத இடத்தில தொலைந்து விட்ட குழந்தையைப் போல், திருதிருத்த பார்வையோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் மத்திய அமைச்சரின் தங்கை.

                       உண்மையில் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை அவளுக்கு போனில் மட்டுமே அனுப்பி இருந்தாள் ஸ்ரீகா. அவளும் வரமாட்டேன் என்று அப்போதே மறுத்து விட்டாலும், ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் கிளம்பி வந்துவிட்டிருந்தாள். ஓட்டுநர் மட்டுமே அவளுடன் வந்திருக்க, தனியாகவே மண்டபத்திற்குள் நுழைந்து இருந்தாள் தீக்ஷிதா.

                        சர்வாவின் கண்கள் அவளின் முகத்தில் இருந்த உணர்வுகளை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருக்க, அறிமுகமற்ற முகங்களுக்கு இடையே தனக்கானவர்களைத் தேடி களைத்து அவள் ஓயும் சமயம் அவள் கண்ணில் சர்வானந்த் பட்டுவிட, எண்ணியது ஈடேறிய நிறைவு தீக்ஷிதாவிடம்.

                       சுற்றம் மறந்து, நொடியில் அவள் முகம் பூவைப் போல் மலர்ந்துவிட, இதழ்களில் ஒரு விரிந்த புன்னகை. சுற்றி இருக்கும் ஆட்கள், கேமராக்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் வாய்த்த கண் எடுக்காமல் அவள் சர்வாவைக் பார்வையிட, அவள் கண்களை சந்திக்க முடியாமல் தலையைக் கோதுவது போல், பார்வையைத் திருப்பிக் கொண்டான் சர்வா.

                      கூடவே, தன் உணர்வுகளையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட “இவளை யாரு இங்கே வர சொன்னா..” என்று பொய்யாக கோபப்பட்டது அவன் மனது. சட்டென ஸ்ரீகாவின் முகம் கண்ணில் மின்ன, விழிகள் கூர்மையாக அவளைத் தேடியது.

                       ஸ்ரீகா சர்வாவை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. வேகமாக மேடையில் இருந்து இறங்கியவள் தன் தோழியிடம் ஓடிவர, தீக்ஷியின் முகமும் மலர்ந்து சிரித்தது. தீக்ஷி வேகமாக நெருங்கிய தன் தோழியை நோக்கி தன் கைகளை விரிக்க, மண்டபம் என்பதெல்லாம் கருத்திலேயே இல்லை அவர்களுக்கு.

                      வேகமாக அணைத்து கொண்டு ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்ள, அங்கிருந்த பலரின் கண்கள் ஆர்வமாகவும், பொறாமையாகவும் அவர்கள் மீது படிந்தது. அறிவன் இவர்களைக் காணவும் புன்னகையுடன் அருகில் வர, துருவன் தூரத்தில் நின்று தீக்ஷியை நோக்கி கையசைத்ததோடு சரி.

                     அறிவன் தீக்ஷியை லேசாக தோளோடு அணைத்து விடுவிக்க, இப்போது சர்வா மட்டுமல்லாமல் இன்னொருவனும் முறைத்து வைத்தான் அவனை. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இவர்கள் அரட்டையில் இறங்கிவிட, வெகுநேரம் அங்கே நிற்க முடியாதே.

                      ஸ்ரீகா தீக்ஷியை இருக்கையில் அமர வைத்தவள் மீண்டும் மேடையேற, அறிவன் அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிட்டான். தீக்ஷி மேடையை வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்துவிட, அப்போதுதான் மேடையில் மணமக்களோடு நின்றிருந்த பீஷ்மன் அவள் கண்ணில் பட்டான்.

                      அவனைக் கண்டதுமே தீக்ஷியின் முகம் மாறிவிட, அவன் கண்கள் ஆர்வமாக ஸ்ரீகாவை நோக்கியது அவள் வயிற்றில் புளியைக் கரைத்தது. அதற்குள் துருவன் ஸ்ரீகாவை அழைக்க, அவள் வேகமாக கீழே இறங்கிவிட்டாள். அதன்பின் அவன் மேடையில் இருக்கும்வரை ஸ்ரீகாவை எங்கும் நகரவிடாமல் துருவன் தன்னுடன் இருத்திக் கொள்ள, மணமக்களை வாழ்த்தி முடித்து சட்டமாக முதல் வரிசையில் அமர்ந்து கொண்டான் பீஷ்மன்.

                    அவனையே கவனித்துக் கொண்டிருந்த தீக்ஷியின் தோளில் சட்டென ஒரு கரம் படிய, அவளுக்கு பின்னால் நின்றிருந்தது அவளின் தாய்மாமன். அவரை கண்டதும் மரியாதையாக அவள் எழுந்து நிற்க, “எப்படி இருக்க தீக்ஷி…” என்று பாசமாக வினவினார் சங்கர நாராயணன் பீஷ்மனின் தந்தை.

                   “நல்லா இருக்கேன் மாமா.. நீங்க எப்படி இருக்கீங்க..” என்று புன்னகையுடன் தீக்ஷியும் அவரை நலம் விசாரிக்க

                    “நல்லா இருக்கேண்டா.. அம்மா எங்கே..” என்றார் மனிதர்.

                   “இல்ல மாமா.. தனியா தான் வந்தேன். பிரெண்டோட அண்ணா மேரேஜ்…” என்று அவள் இழுக்க

                  “யார் உன்னோட பிரெண்ட்..”

                    “மாப்பிளையோட தங்கச்சி மாமா.. ஸ்ரீகா.. டான்ஸ் மாஸ்டர்..” என்று அவள் அடையாளம் கூற, தெரியுமென்பதாய் தலையசைத்தார் சங்கரநாராயணன். அதற்குள் அவர் மனைவி பார்கவி இவர்கள் அருகில் வர, அவரும் எடுத்த எடுப்பில் “எப்படி இருக்கா உன் அம்மா..” என்றுதான் விசாரித்தார்.

                     “நல்லா இருக்காங்க அத்தை..” என்றதோடு அவள் முடித்துக் கொள்ள

                     “கிளம்புவோமா..” என்றார் பார்கவி. சங்கரநாராயணன் மருமகளிடம் தலையசைத்து விடைபெற, அவளும் லேசாக தலையசைத்து தன்னிடத்தில் அமர்ந்து கொண்டாள் மீண்டும்.

                  சங்கரநாராயணனும், பார்கவியும் மகனிடம் சென்று நிற்க, பார்கவி தீக்ஷியை சுட்டிக் காட்டவும், அதுவரை அவர்களை பார்த்திருந்தவள் வேகமாக வேறு புறம் திரும்பிக் கொண்டாள். பீஷ்மன் அவளைப் பார்த்து நக்கலாக சிரித்து விட்டு, அங்கிருந்து கிளம்பினான்.

                  பரமேஸ்வரன் தன் நண்பன் குடும்பத்தை கூடவே இருந்து கவனித்து வழியனுப்ப, துருவனுக்குத் தான் பற்றிக் கொண்டு வந்தது. ஆனாலும், எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தான் அவன். நேரம் எட்டு மணியைக் கடந்திருக்க, தீக்ஷி இருந்த இடத்திலிருந்து எழுந்தவள் ஸ்ரீகாவை நோக்கி கையசைக்க, “வருகிறேன்..” என்பதாக கையசைத்தாளே தவிர, இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை ஸ்ரீகா.

                  மணி ஒன்பதை தொட, அவள் இன்னமும் கிளம்பாமல் இருப்பதைக் கண்டு அவளை நெருங்கினான் சர்வா. மண்டபத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து சில கண்கள் ஆவலுடன் அவர்களை கவனிக்க, உர்ரென்ற முகத்துடன் தீக்ஷியின் அருகில் வந்து நின்றான் சர்வா.

                  அவனைக் கண்ட நிமிடம் தானாகவே அவள் எழுந்து நிற்க, “கிளம்பலையா..” என்றான் மொத்தமாக

                    “போக சொல்றிங்களா இல்லை ஏன் வந்த ன்னு கேட்கறீங்களா…” என்று தீக்ஷி மெல்லிய குரலில் கேட்க

                  “ஏன் வந்த ன்னு நான் எப்படி கேட்க முடியும். உன்னை நான் கூப்பிடலையே…” என்று அவள் கண்களை கலங்க விட்டவன் “சுத்தி கேமரா இருக்கு.. எதையும் இழுத்து வைக்காத.” என்றான் அதட்டலாக

                  அவள் கண்ணீரை வெளியேற்றாமல் உள்ளிழுக்க, “சாப்பிட்டியா..” என்றான் அடுத்ததாக, அவள் மறுப்பாக தலையசைக்க  “வா என்னோட..” என்றவன் திரும்ப

                  “இல்ல.. நான் கிளம்புறேன்..” என்றாள் தீக்ஷி.

                 “ஏன் சாப்பிட என்ன??..” என்று அவன் முறைக்க, அவனுக்கு பதில் கூறாமல் நின்றாள் தீக்ஷி.

                 “வா..” என்று தலையசைத்து அவன் முன்னே நடக்க, அவன் தலை திரும்பவும், நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி மேடையைப் பார்த்தாள் அவள். ஸ்ரீகா தன் வலது கை கட்டைவிரலை உயர்த்திக் காட்ட, அவளை பார்த்து சிரித்தவள் ஒன்றுமறியாதவள் போல் சர்வாவின் பின் நடந்தாள்.

                 சர்வா அவளை இடம் பார்த்து அமர வைத்தவன், அவள் அருகில் நின்று கவனிக்க, அவள் கவனம் எங்கே உணவில் இருந்தது. அவன் அங்கே வரும் தெரிந்தவர்களிடம் பேசிக் கொண்டு நிற்கும் இடைவெளிகளில் அவன் முகத்தை கண்ணில் நிறைத்துக் கொள்பவள், அவன் அவள் புறம் திரும்பும் நேரம் கர்ம சிரத்தையாக இலையை நோக்கி தலையைக் குனிந்து கொள்வாள்.

                  சர்வா அவளின் இந்த விளையாட்டை அறிந்தே இருந்தாலும், காட்டிக் கொள்ளாமல் தான் தரிசனம் கொடுத்திருந்தான் தன்னவளுக்கு. அரைமணி நேரத்திற்கு மேல் ஆகியும் அவள் உணவை முடிக்காமல் அமர்ந்திருக்க, அவள் இருந்த வரிசையில் இதுவரை இரண்டு பந்திகள் முடிந்திருந்தது.

                 சர்வா பொறுமை இழந்தவனாக “சாப்பாடு பிடிக்கலைன்னா எழுந்துக்க வேண்டியது தானே..” என்று மெல்லிய குரலில் வார்த்தைகளை கடித்து துப்ப

               “எனக்கு சாப்பாட்டை விட உங்களை பிடிச்சிருக்கே…” என்று அவனை அதிர வைத்தாள் தீக்ஷி… சர்வா அதிர்ந்து தங்களை சுற்றி யார் இருக்கிறார்கள் என்று பார்க்க, “இதை வயிற்றில் நிறைப்பதை விட, உங்களை கண்கள்ல நிறைக்கறது தான் பிடிச்சிருக்கு..” என்றாள் மீண்டும்.

                 சர்வா அவளை அடித்து விடுவது போல் முறைக்க, அவனைப் பார்த்து கண்சிமிட்டியவள் தன் அலைபேசி, பர்ஸ் என்று எதையும் எடுக்காமல் கை கழுவ சென்றிருந்தாள். சர்வா அவளை முறைத்து நின்றவன் அவள் நகரவும் அவள் விட்டுச் சென்றதை தான் கையில் எடுத்துக் கொண்டு அவளை நோக்கி நடந்தான்.

                     

Advertisement