Advertisement

                             “ஸ்ரீகுட்டி ஏண்டா அம்மாவை டென்சன் பண்ற… அறிவன் எங்கே.. உன்னோட தானே வந்தான்..” என்று பாசமாக தந்தை வினவ

                             “என்னோடதான் வந்தான். ஆனா, அவன் ப்ரெண்ட் கூப்பிடவும், என்னை அம்போ ன்னு விட்டுட்டு போயாச்சு.” என்று பாவமாக சொன்னவள் “அந்த ப்ரெண்ட் பொண்ணா இருக்குமோ ன்னு ஒரு டவுட் இருக்குப்பா எனக்கு..” என்று சத்தமில்லாமல் அறிவனுக்கு வெடி வைக்க

                          அவள் எதிர்பார்த்தது போலவே, “என்னடா சொல்ற..” என்று ஆர்வமான தந்தை.

                          “நிஜம்ப்பா.. ஹீரோயின் என்னை ஹக் பண்ணாக்கூட,சாருக்கு வருத்தமா இருக்கு.. கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சுப்பா…” என்றவள் தன் அன்னையை எகத்தாளமாக பார்க்க

                           நீ என்னவும் சொல்லிக்கோ என்ற பாவனையைக் காட்டினார் அவர். அந்த நேரம் அவரின் அலைபேசி இசைக்க, அழைப்பு அறிவனிடம் இருந்து தான். ரேகா புன்னகையோடு “சொல்லுடா..” என்றார் பாசமாக

                      “அம்மா.. சர்வாவோட இன்விடேஷன் வாங்க வந்திருக்கேன்மா.. கலெக்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வரணுமா.. இல்ல, கோவிலுக்கு வரவா..” என்று அவன் பொறுப்பானவனாக கேட்க

                       “வீட்டுக்கு வந்திடு அறிவா.. இங்கே வச்சு கும்பிட்டுட்டு கோவிலுக்கு போவோம்..” என்றார் அன்னை. அறிவன் அழைப்பை துண்டித்துவிட, இப்போது மகளை முறைத்தார் ரேகா.

           “எனக்கு தூக்கம் வருதுப்பா.. நான் ரூமுக்கு போறேன்..” என்றவள் எழுந்து கொள்ள, செல்லும் அவளின் முதுகைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் ரேகா.

              அடுத்த சில நிமிடங்களில் அறிவனும், சர்வாவும் வீட்டிற்குள் நுழைய, கையில் திருமணப் பத்திரிக்கைகள். அவர்களின் முதல்வன் அபிநந்தனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதற்கான அழைப்பிதழ்கள் தான் இப்போது தயாராகி வந்திருந்தது.

                ரேகா, பரமேஸ்வரன் மற்றும் அபிநந்தனை அழைத்துக் கொண்டு அன்று மாலையே  குலதெய்வத் கோவிலுக்கு சென்றவர் அழைப்பிதழை வைத்து வணங்கிவிட்டு வீடு திரும்ப, வீட்டில் அவர்களுக்காக காத்திருந்தனர் பிள்ளைகள்.

                     ரேகா வீட்டிற்குள் நுழைந்த நிமிடம் “என்னம்மா முகத்துல ஒரு தேஜஸ் தெரியுதே..” என்று தொடங்கினான் அறிவன்.

                      “எங்க ரேகாம்மா எப்பவுமே தேஜஸோட தான் இருக்காங்கடா..உனக்கு இன்னிக்கு தான் கண்ணு தெரியுது.” என்றான் சர்வா.

                         ரேகா இருவரையும் மிரட்டுவது போல் பார்க்க, அடுத்து அபியிடம் திரும்பினர் அறிவனும், சர்வாவும். “எப்போ ட்ரீட் கொடுக்க போறீங்க அபிண்ணா…   நாங்களும் மூணு மாசமா இருக்கோம்..” என்று சர்வா தொடங்க

                         “அபிண்ணா.. எனக்கு ஸ்பெஷல் ட்ரீட்..” என்றாள் ஸ்ரீகா.

                         “நைட் குல்பி விற்கிறவன் கிட்ட, ரெண்டு ஐஸ் வாங்கி கொடுங்க இவளுக்கு.. இவை ட்ரீட் அந்த லெவல் தான்..” என்றான் அறிவா.

                          அபி “என்ன ட்ரீட் வேணும் உனக்கு..” என்று ஸ்ரீகாவை கேட்க

                          “டின்னர் வித் ஐஸ்கிரீம்..” என்றாள் வேகமாக

                          “உங்களுக்கு என்னடா..” என்று அவன் மற்ற மூவரையும் பார்க்க

                           “என்ன கேட்டாலும், கடைசியில அந்த வானரம் சொல்றது தான் வாங்கி கொடுக்க போற… அப்புறம் எதுக்கு தனியா சொல்லிட்டு…” என்று சலித்தான் சர்வா.

                           “நீதான்டா வானரம்.. வாலில்லாத வானரம்.. ” என்று ஸ்ரீ குறுக்கிட

                           “உன்கூட சேர்ந்து இருக்கேனே.. வேற எப்படி இருப்பேன்..” என்று திருப்பினான் சர்வா.

                           அபி இவர்களுக்குள் இடையிட்டு “நாளைக்கு நைட் டின்னருக்கு வெளியே போவோம்…” என்று முடித்துவிட

                            “ஓகே டன்..” என்று ஸ்ரீகா ஒப்புதல் கொடுக்க,  அத்துடன் அந்த பேச்சு வார்த்தை முடிவுற்றது.

                       சொன்னது போலவே, அபி அடுத்தநாள் மாலை ஏழு மணி அளவில் அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு பெரிய ஹோட்டல் ஒன்றிற்கு செல்ல, அப்படி ஒரு ஆட்டம் ஸ்ரீகாவும், அறிவனும். அந்த ஹோட்டலின் தோட்டத்தில் ஒரு பகுதியை டின்னர் ஹால் போல தயார் செய்திருக்க, மொத்தமாக புக் செய்திருந்தான் அபி.

                            இவர்கள் அந்த இடத்திற்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் அபிக்கு பார்த்திருக்கும் பெண் ஆர்த்தி ஸ்ரீகாவுக்கு அழைத்தாள். ஸ்ரீகாவின் அழைப்பின் பெயரில் கிளம்பி வந்திருந்தாள் அவள். ஆனால், இங்கே இவர்கள் குடும்பமாக வந்திருக்க, அவர்களுக்கு மத்தியில் செல்வதற்கு சங்கோஜமாக இருக்கவும், அப்படியே கிளம்பி விடுவதாக சொல்லத்தான் அழைத்தாள் ஸ்ரீகாவை.

                             ஆனால், ஸ்ரீகா எடுத்ததுமே “எங்கே இருக்கீங்க அண்ணி.. வந்தாச்சா..” என்று கேட்க

                             “ஹோட்டலுக்கு வெளியே தான் இருக்கேன் ஸ்ரீகா.. நான் இப்படியே கிளம்பவா.. ப்ளீஸ்.. கொஞ்சம் பயமா இருக்குடா..” என்று பாவமாக உரைக்க

                         “பயமா இருக்கா.. நாங்க என்ன புலி சிங்கமா…அங்கேயே இருங்க..” என்றவள் அறிவனை அழைத்துக் கொண்டு அவள் இருந்த இடத்திற்கு விரைய, அங்கே உண்மையிலேயே பயந்த பாவத்தோடு தான் நின்றிருந்தாள் புதுப்பெண். அவளைக் காணவும் ஸ்ரீகா வேகமாக கையை அசைக்க, அவள் கவனிப்பதற்குள்ளாகவே தன் காரை உள்ளே செலுத்திக் கொண்டிருந்த பீஷ்மன் அவளைக் கவனித்துவிட்டான்.

                         “யாரைப் பார்த்து கையசைக்கிறா..” என்று யோசனையுடன் அவன் ஹோட்டலின் முன் நிறுத்த, அதற்குள் அவன் காரை தாண்டி ஓடியிருந்தாள் ஸ்ரீகா. சற்று தள்ளி நின்றிருந்த ஆர்த்தியை கட்டி அணைத்து விடுவித்தவள் “எதுக்கு பயம் அண்ணி.. இன்னும் ஒரே மாசம் தான் இருக்கு கல்யாணத்துக்கு.. அதுக்குள்ள எங்க ஜோதில ஐக்கியமாக வேண்டாமா நீங்க.. வாங்க..” என்று அவளை பேசவே விடாமல் ஸ்ரீகா பேச

                          அறிவா “ஏன் அண்ணி இவ்ளோ டென்சன்.. அம்மா, அப்பா எதுவும் நினைக்க மாட்டாங்க.. அதுவும் அம்மா ரொம்ப ஜாலி டைப் தான்.உங்களை பார்த்தால் நிச்சயம் சந்தோஷமா தான்  பண்ணுவாங்க.. ஈஸி அண்ணி..” என்று பொறுமையாக கூற, அவள் முகம் சற்றே தெளிந்தது.

                         “இல்ல அறிவன். நான் உங்க அண்ணன் கிட்ட கூட சொல்லல.. இங்கே வர்றதை பத்தி. இவளோட பேச்சைக் கேட்டு கிளம்பிட்டேன். இப்போ பயமா இருக்கு..” என்று அவள் கூற

                        “அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி.. பார்த்துக்கலாம் வாங்க..” என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். 

                          

                                 ஆர்த்தியைக் கண்டதும் தன் இடத்தில இருந்து எழுந்த ரேகா “வா ஆர்த்தி..” என்று அவளை அணைத்து விடுவிக்க, பரமேஸ்வரன் “வாம்மா..” என்று சிரிப்போடு அழைத்து அமரச்சொன்னார்.

                             அபி அதே இடத்தில இருந்தாலும், எதுவும் பேசாமல் பார்வையை மட்டும் தன்னவள் மீது செலுத்த, கண்களால் மன்னிப்பை வேண்டிக் கொண்டிருந்தாள் அவள். அதில் அபி இன்னும் முறுக்க, “நீங்க என்னோட உட்காருங்க அண்ணி..” என்று அபியின் அருகில் அவளை அமர்த்தி அவளுக்கு அருகில் தான் அமர்ந்த்து கொண்டாள் ஸ்ரீகா.

                             உணவைத் தவிர மற்ற அணைத்து விஷயங்களும் அங்கே பரிமாறப்பட, பேச்சுக்களும், சிரிப்புமாக கலகலத்தது அந்த இடம். அபி அவ்வபோது தன் அருகில் அமர்ந்திருந்தவளை அவ்வபோது பார்வையால் சீண்டிக் கொண்டிருக்க, அவனின் அந்த பார்வைக்கே சிவந்து விட்டவள் முயன்று ஸ்ரீகாவின் பேச்சில் கவனத்தை செலுத்தினாள். துருவன், அறிவன், சர்வா என்று அத்தனை பேருமே அவளிடம் அன்பாக பேச முற்பட, அரைமணி நேரத்தில் இயல்பாகவே தானும் அவர்களுடன் அரட்டையில் இறங்கிவிட்டாள் ஆர்த்தி.

                     ஒற்றைப்பிள்ளையாக தனித்து வளர்ந்து இருந்தவளுக்கு இந்த கூட்டமும், கூச்சலும்,சிரிப்பும் மிகவும் புதிதாக இருந்தது. அது பிடித்தும் இருக்க, அவர்களை அப்படியே அவர்களாவே ஏற்றுக் கொள்ள நினைத்தாள் ஆர்த்தி. தானும் அவர்களில் ஒருத்தி எனும் உணர்வு சொல்ல முடியாத ஒரு நிறைவைக் கொடுத்தது.

                     இவர்கள் உணவை முடித்து கிளம்பும் நேரம் எதேச்சையாக அந்த வழியே வந்த பீஷ்மனைக் கண்டு விட்டார் பரமேஸ்வரன். அவனைக் காணவும் “பீஷ்மா..” என்று கையை உயர்த்தியவரை, தானும் அப்போது தான் கவனிப்பது போல காட்டிக் கொண்டே அருகில் வந்தான் பீஷ்மன்.

                      பரமேஸ்வரனிடம் “என்ன அங்கிள்.. எப்படி இருக்கீங்க.” என்றவன் “ஓஹ்.. பாமிலியோட வந்து இருக்கீங்களா..  என்ஜாய் அங்கிள்..” என்று விடைபெறுவது போல் சிரிக்க

                    “அட இருப்பா.. எப்படி இருக்க நீ.. பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு.” என்றார் பரமேஸ்வரன்.

                   “சூப்பரா இருக்கேன் அங்கிள். நீங்கதான் பைனான்ஸ் கம்பெனியை நம்புறதே இல்லையே.. அப்புறம் எப்படி என்னை பார்க்க வருவீங்க..” என்று கிண்டலாக அவன் கேட்க

                     பரமேஸ்வரன் தானும் சிரித்தவர் “இவங்க என் வைப் ரேகா.. இவங்க நாலு பெரும் என் பசங்க… அபி..துருவன்…..”என்று வரிசையாக தன் மக்களையும், மருமகளையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைக்க, ஒரு அளவான புன்னகையோடு அனைவரிடமும் “ஹலோ..” என்றான் பீஷ்மன்.

                    ஆர்த்திக்கும், அபிக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டவன் “ஓகே அங்கிள்.. யூ கேரி ஆன்..” என்றதோடு நகர்ந்து விட்டான். ஸ்ரீகா அவன் நகர்ந்ததும் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவள் “எங்கே போனாலும் அங்கே ரெண்டு ப்ரெண்ட்ஸ்… எப்படிப்பா முடியுது உங்களால..” என்று சலித்துக் கொள்ள

                   துருவன் ‘அவன் எல்லாம் அப்பாவுக்கு ப்ரெண்டா…வாயை மூடு ஸ்ரீகா..” என்று அதட்டினான் அவளை.

                 ஸ்ரீகா அவனை புரியாமல் பார்க்க, “இவனோட எல்லாம் ஏன்ப்பா பேசறீங்க நீங்க… அவன் அப்பா உங்க நண்பரா இருந்தா அவரோட முடியட்டும்.. இவன்கிட்ட எல்லாம் பேசாதீங்க.. உங்க தகுதிக்கு அவனை கூப்பிட்டு பேசிட்டு இருக்கீங்க..” என்று தந்தையிடமும் தன் கண்டனத்தை தெரிவித்தான் அப்போதே.

                   ரேகா மகனைப் பார்த்தவர் தன் கணவரை கேள்வியாக பார்க்க, பிறகு சொல்வதாக கண்ணைக் காட்டியவர் “விடு துருவா.. எங்கே எப்படியோ நம்மகிட்ட ஒழுங்கா நடக்கிறான் இல்லையா. அப்போ அவனுக்கான மரியாதையை கொடுக்கறதுல என்ன தப்பு.. விடு..” என்று முடித்தார்.

                    துருவன் தந்தையை திருப்தியாக பார்த்தாலும், அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அபிநந்தன் தம்பியின் முகத்தில் இருந்த ரௌத்திரத்தை வைத்தே, எதையோ உணர்ந்தவனாக தம்பியிடம் பேச வேண்டும் என்று குறித்துக் கொண்டான்.

                      அறிவனுக்கும், சர்வாவுக்கும் துருவனின் எண்ணம்தான் என்றாலும், துருவன் ஏற்கனவே பேசி விட்டதால் இவர்கள் அமைதி காத்தனர். ஸ்ரீகா அவனைப் பற்றி ஏற்கனவே கேள்வியுற்று இருந்தாலும், இன்றுதான் முதல்முறையாக பார்க்கிறாள் பீஷ்மனை.

                      தந்தை அறிமுகம் செய்யவும், ஒரு நூலளவு புன்னகை. அவ்வளவே.. அதற்குமேல் அவனைப்பற்றி எதுவுமே சிந்திக்க வில்லை அவள். அவள் எண்ணமெல்லாம் அடுத்து என்ன ஐஸ்கிரீம் எடுக்க வேண்டும் என்பதிலேயே இருக்க, அவள் எங்கே பீஷ்மனை யோசிப்பது.

Advertisement