Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 07

                                சென்னை பூந்தமல்லியில் அமைந்திருந்த EVP பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்க, செயற்கையாக அமைக்கப்பட்டு  நீர்வீழ்ச்சியின் கீழ் படத்தின் கதாநாயகி ஆடிக் கொண்டிருந்தாள். அந்த திரைப்படம் கதாநாயகியை முன்னிலைப்படுத்துவதாக இருக்க, அவளுக்கான தொடக்கப் பாடலின் காட்சியமைப்புகள் தான் அங்கே நடந்து கொண்டிருந்தது.

                             மழையில் ஆடிக் கொண்டே அவள் பாடுவது போல, இயக்குனரின் கற்பனை விரிந்திருக்க, அதை நடனத்தின் மூலம் காட்சிப் படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருந்தாள் ஸ்ரீகா. ஈரம் சொட்டும் அளவிற்கு நனைந்து போயிருந்த பாவாடைத் தாவணி அணிந்து அந்த செயற்கை நீரூற்றின் கீழ் நின்று கொண்டு ஸ்ரீகாவின் அசைவுகளை கவனித்துக் கொண்டிருந்தாள் சாஷா.

                           அவளை விடவும் சிறியவளாகத் தான் இருப்பாள் ஸ்ரீகா. ஆனால், அவளின் திறமை முறையாக நடனப்பயிற்சி பெற்றிருந்த சாஷாவே அசந்து போகும்படி தான் இருந்தது. அவளைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தாலும், அவளுடன் பணியாற்றுவது இதுவே முதல்முறை.

                          மற்றவர்களைப் போல, அதிகப்படியான ஆர்வமோ, இல்லை தேவையற்ற அலட்டலோ எதுவும் இன்றி அமைதியாக அவள் வேலையை செய்து அடுத்தவர்களை கண்ணசைவில் வேலை வாங்கி கொண்டிருந்தாள் அவள். இவள் அவளைப் பற்றிய ஆராய்ச்சியில் இருக்க, அதே நேரம் “சாஷா..” என்று மைக்கில் கத்தினாள் ஸ்ரீகா..

                           சாஷாவின் கவனம் அவளிடம் திரும்பவும், கையை உயர்த்தி சைகை செய்தவள், இயக்குனரை பார்த்துவிட்டு, சாஷாவைப் பார்க்க சாஷா தன் இருகைகளையும் உயர்த்திக் காட்டவும் “டேக்.. ஆக்ஷன்..” என்று அவள் கூறவும், கேமராவும், பாடலும் ஒரே நேரத்தில் தன் இயக்கத்தை தொடங்கி இருந்தது.

                            சாஷா ஸ்ரீகா என்ன நினைத்தாளோ அதை அப்படியே கண்முன் கொண்டு வர, ஒரே டேக்கில் முடிந்தது அந்த ஷாட். அடுத்தடுத்து காட்சிகளும் அதே வேகத்தில் படமாக்கப்பட, மதியம் மூன்று மணிக்கெல்லாம் பாடல் முடிந்து போயிருந்தது. சாஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெறவும் தான் அவள் பீஷ்மனுக்கு அழைத்தது.

                           அவன் வர நேரமாகும் என்பதால் கேரவனுக்கு வந்து விட்டவள் உடையை மாற்றிக் கொண்டு அமர்ந்துவிட, வெளியே மேலும் சில காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தனர். ஸ்ரீகா அந்த வேலையில் தீவிரமாக இருக்க, செயற்கையாக பெய்து கொண்டிருந்த மழை பாதிக்கும் மேலாக அவளையும் நனைத்து இருந்தது.

                         அதை எல்லாம் கண்டு கொள்ளாதவளாக அவள் தன் வேலையில் தீவிரமாக இருக்க, அப்போது தான் அந்த படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் பீஷ்மன். அவன் பார்வை பொதுவாக அந்த இடத்தை வலம்வர, சாஷா அங்கு இல்லை எனவும், வேறு எதுவும் கவனத்தில் இல்லை.

                       தன் அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டே அவன் நகர, “1..2..3..4.. 1234..” என்று சத்தமாக ஒலித்து தன் இருப்பை உணர்த்தியது அழகான ஒரு பெண்குரல். பீஷ்மனின் வேகநடை சட்டென நிதானிக்க, அவன் தலை மெல்ல குரல் வந்த திசையை நோக்கியது.

                      நனைந்தும், நனையாத கருப்புநிற அரைக்கை டாப், வெள்ளைநிற தொளதொள பேன்ட் அணிந்து அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு நின்றிருந்தாள் அவள். அவளின் தூக்கி கட்டிய கூந்தல் இடையை தொட்டுக் கொண்டிருக்க, அவளின் வரிவடிவம் கவர்ந்திழுத்தது அவனை.

                     ” யார் இவ..” என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தவன் கால்கள் அவள் இருந்த திசையை நோக்கி நகர, இவன் தூரத்தில் வரும்போதே கண்டு கொண்ட இயக்குனர் “கட்..” என்றுவிட்டு இவனிடம் விரைய, வேலை தடைப்பட்டதில் லேசான கோபத்தோடு திரும்பினாள் அவள்.

                       அவளைப் பார்த்த நொடி “ப்பா..” என்ற உணர்வுதான் பீஷ்மனிடம். ஆனால், அப்படியே வெளிக் காட்டினால் அவன் பீஷ்மன் இல்லையே. சாதாரணமாக கூட, அவளை கவனிக்காதவன் போல் அவன் இயக்குனரிடம் தன் கையை நீட்டி இருந்தான். அடுத்த பத்து நிமிடங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தவன் அவரிடம் விடைபெற்றுக் கிளம்ப, சாஷா அவனுடன் இணைந்து கொண்டாள்.

                          காரில் சாஷா அருகில் இருந்தும் அவளைக் கண்டுகொள்ளாமல் தன் போக்கில் அவன் சிந்தனையில் இருக்க, சாஷாவும் அவனை இடையிடாமல் அமைதி காத்தாள். அவள் காரின் கண்ணாடி வழியாக தெரிந்த காட்சிகளில் மனதை செலுத்த, பீஷ்மன் அந்த மீன்விழியாளை தன் மனக்கண்ணில் நிறுத்திக் கொண்டிருந்தான்.

                          வழக்கமாக அவனைக் கண்டவுடன் பெண்களின் கண்களில் இயல்பாகவே வந்து போகும் அந்த மின்னல் வெளிச்சம்..ம்ஹும் வரவேயில்லை அவளிடம். அந்த லேசான புருவ சுழிப்பு தான் அவள் வெளிப்படுத்திய அதிகபட்ச உணர்வு. அதற்குமேல் அவர்கள் பக்கம் கூட அவள் பார்வை திரும்பவில்லை. அங்கிருந்த மற்றவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டவள் ஏதோ பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருக்க, அவளது கவனம் மொத்தமும் அவளை சூழ்ந்து கொண்டிருந்த அவள் குழுவினரிடம் தான் இருந்தது.

                          அவளுடன் இருந்த ஒருவனை  அடித்து வேறு வைத்தவள் அவன் கையில் கிள்ளி வைக்க, அவன் வலி தாங்காதவன் போல குதிக்கவும், அவன் கையை தேய்த்துவிட்டு அவனை சமாதானம் செய்ததும் அவன் கண்ணில் விழுந்திருந்தது. அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பே அவளை பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு, முகிலனிடம் தெரிவித்து இருந்தவன் இப்போதும் அவளைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தான்.

                         அவள் முகம் அவனை இம்சிக்க, வெகுநேர முயற்சிக்கு பிறகு முயன்று தன் கவனத்தை அருகில் இருந்தவளிடம் திருப்பினான் பீஷ்மன். சாஷா வெளியே வேடிக்கையில் இருந்தவள் அவனை கவனிக்காமல் விட, “வெளியே சீனரி அவ்ளோ நல்லா இருக்கா சாஷா..” என்றான் அழுத்தமாக

                         அவன் குரலில் அதிர்ந்து திரும்பியவள் “ம்ம்..”இல்லை.. ஜஸ்ட் பார்த்தேன்…” என்றதோடு அமைதியாக

                       “என்ன ஆழ்ந்த சிந்தனை… என்ன யோசிக்கிற..” என்றான் பீஷ்மன் மீண்டும்.

                      “ஹ்ம்ம்… சிந்தனை தான். இன்னிக்கு நடந்த ஷூட்டிங்கை பற்றி தான்.” என்று அவள் முடிக்கும் முன்பே

                      “ஏன்.. எதுவும் ப்ராப்ளமா..” என்றவன் பார்வை அவளை அவசரமாக ஆராய

                      “ச்சே சே.. அதெல்லாம் எதுவும் இல்ல. இன்னிக்கு ஒரு சாங் ஷூட் பண்ணோம். அந்த டான்ஸ் மாஸ்டர் பத்திதான் யோசிச்சுட்டு இருந்தேன் பீம்.” என்றாள் சாஷா.

                        அவள் இப்படி பேசுவதெல்லாம் அரிதிலும் அரிது என்பதால், “ஏன் என்ன அந்த மாஸ்டருக்கு..” என்று பீஷ்மன் தூண்டில் போட

                        “அவளுக்கு ஒண்ணுமில்ல… நல்ல துடிப்பான பொண்ணு… திறமையும் ரொம்ப அதிகம். சும்மா, கெத்தா அங்கே இருக்க அத்தனை பேரையும் எப்படி வேலை வாங்கினா தெரியுமா…. சான்ஸே இல்ல பீம்..” என்று ஸ்ரீகாவை சிலாகித்துக் கொண்டிருந்தாள் சாஷா.

                        “ஏன்… உனக்கும் தான் திறமை இருக்கு.. அவங்கவங்க துறையில அவங்கவங்க பெஸ்ட்..” என்று பீஷ்மன் இடையிட

                       “நிச்சயமா நானும் அவளும் ஒன்னில்ல பீம். அவளோட அந்த  தைரியம், எனக்கெல்லாம் வரவே வராது…அப்படி ஒரு கம்பீரமும் கூட.. லைக் எ குயின்..” என்று அவள் முடிக்க

                        “நிஜமாவே நீ அதிசயம் தான். ஒரு பெண்.. ஹீரோயின்,… இன்னொரு பொண்ணை இப்படி புகழ்ந்து தள்ளிட்டு இருக்கியே..” என்று பீஷ்மன் ஆர்வமில்லாதவன் போல் கூற

                         “அதுல தப்பு எதுவும் இல்லையே.. அவ வேற பீம்.. நிச்சயமா என்னோட அவளை ஒப்பிட முடியாது…”

                         “ஏன் அப்படி என்ன வித்யாசம் அவகிட்ட..”

                        “அவ வானத்துல பறக்கிற பட்டுப்பூச்சி போல.. நான் கூட்டுப்புழு..” என்றவள் எப்போதும் போலவே மெல்லியதாக புன்னகைக்க

                         “கூட்டுப்புழுவோட பரிணாம வளர்ச்சி தான் பட்டுப்பூச்சி.. தெரியும் தானே…” என்று பீஷ்மன் புன்னகை பூக்க, அதற்கு பதில் வரவில்லை அவளிடம்.

                        சட்டென மௌனமானவள் மனம், “நான் புழுவினும் கீழ் அல்லவா..” என்று வேதனையுடன் எண்ணிக் கொண்டது.

             பீஷ்மன் அவளை வீட்டில் விடாமல் தனக்கு சொந்தமான திரையரங்கிற்கு அழைத்து செல்ல, அவனுக்கான தனிப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் சென்று நின்றது கார். அந்த பார்க்கிங் ஏரியா சுரங்கப்பாதையை போல் அமைக்கப்பட்டு இருக்க, அங்கிருந்து நேராக திரையரங்கின் அலுவல் அறைக்கு வருவதற்கு வழி இருந்தது.

                  அவளை அழைத்துக் கொண்டு அவன் அந்த அறைக்குள்நுழைய “இங்கே எதுக்காக வந்திருக்கோம்…” என்றவள் அவன் பார்வையில் சட்டென மௌனமானாள்.

                      அவன் கண்களால் எதிரில் இருந்த  இருக்கையை காண்பிக்க, அடுத்து எதுவும் பேச வழியில்லாமல் அதில் அமர்ந்து கொண்டாள் அவள். அரைமணி நேரம் அப்படியே கழிய, தன் வேலையை முடித்து எழுந்தவன் அவளை அழைத்துக் கொண்டு அந்த வளாகத்தில் இருந்த ஒரு அரங்கிற்குள் நுழைய, அந்த மொத்த அரங்கமும் காலியாக இருந்தது.

                        சாஷா அவனைப் பார்க்க, எதுவும் பேசாமல் அவளை அழைத்து சென்று பால்கனி இருக்கை ஒன்றில்  அமர்த்தி தானும் அருகில் அமர்ந்தான். பட விநியோகமும் அவன் தொழில்களில் ஒன்றாக இருக்க, இன்னும் திரைக்கே வந்திராத ஒரு புதிய திரைப்படம் தான் காட்சியிடப்பட்டது அங்கே.

                       படத்தின் முதல்காட்சி தொடங்கவுமே,  அவனுள் இருந்த வியாபாரி விழித்துக் கொள்ள, அத்தனை கூர்மையாய் கவனித்து இருந்தான் அந்த திரைப்படத்தை. அந்த மூன்று மணி நேரமும் சாஷாவை கூட நெருங்கவில்லை. அவளுக்கும் இது பழக்கம் தான் என்பதால், அவளும் திரையில் மூழ்கிப் போனாள்.

                  படம் முடிந்த நிமிடம் கைகளை உயர்த்தி அவன் நெட்டி முறிக்க, சாஷாவும் அப்போதுதான் அவனிடம் திரும்பினாள். “எப்படி இருக்கு படம்..” என்றவன் கேள்வியாக அவளை நோக்க

                   “நல்ல படம் தான்.  நல்ல கதை, வசனங்கள்… அதோட நடிகர்களும் பரிட்சயமானவர்கள்.. வணிக ரீதியா வெற்றிப்படம் தான்.. நம்பலாம்..” என்றாள் அவள். அவளின் கூற்றை தலையசைத்து ஆமோதித்தவன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

—————————————-

                                  ரேகாவும், பரமேஸ்வரனும் அவர்கள் வீட்டின் ஹாலில் அமர்ந்திருக்க, படப்பிடிப்பு முடிந்து ஓய்ந்து போனவளாக வீட்டினுள் நுழைந்தாள் ஸ்ரீகா. மகளின் களைத்த முகம் பார்த்தவர் அவளை குளிக்க அனுப்பி விட்டு, அவள் வருவதற்குள் அவளுக்கு பிடித்தமான சீதாப்பழ ஜூஸை தயார் செய்து வைத்தார்.

                             ஸ்ரீகா கீழே இறங்கியவள் அன்னையின் கையில் இருந்த கண்ணாடிக் குவளையைப் பார்க்கவும், சிரிப்போடு கையில் வாங்கி கொண்டு தந்தையின் அருகில் அமர்ந்துவிட்டாள். பரமேஸ்வரன் தன்மீது சாய்ந்து அமர்ந்திருந்த மகளின் தலையைக் கோத “அறிவா எங்கேடி..” என்றார் ரேகா.

                              “என் பாக்கெட் குள்ள இல்ல..” என்றவள் தன் தந்தையின் சட்டைப்பையை ஆராய்ந்து “இங்கேயும் இல்ல..” என்று அறிவிக்க

                              “கொழுப்பு தானே இவளுக்கு..” என்று கணவனிடம் காய்ந்தார் மனைவி.

Advertisement