Advertisement

மேலும் சிறிது நேரம் பேச்சில் கழிய, ரேகாவின் வற்புறுத்தலில் காலை உணவை அங்கேயே முடித்துக் கொண்டு மகள் வீட்டிற்கு கிளம்பினர் மது தம்பதி. ஜெய் ஸ்ரீகாவை மாலை வந்து அழைத்துக் கொள்வதாய் கூறிவிட்டு, அவனும் வெளியில் கிளம்ப, வாசல்வரை அவனுடன் நடந்தாள் மனைவி.

               ஜெய்யின் பார்வை அவளிடம் ஏதோ ஒன்றை கூற விழைய, அதன்பொருட்டே அவன் பின்னே நடந்தாள் அவள். காரின் அருகே வரவும் மனைவியின் கைபிடித்து தன்னிடம் இழுத்தவன் பட்டென அவள் கன்னத்தில் முத்தமிட, “ராம்..” என்று அலறியவளாக சுற்றிலும் பார்வையை ஒட்டினாள் ஸ்ரீகா.

                 ஜெய் முன்பே சுற்றத்தை கவனித்து இருந்ததால் இலகுவாகவே இருக்க, ஸ்ரீகா முறைக்கவும் “தேங்க்ஸ்டி என் பொண்டாட்டி..” என்று இருகைகளாலும் அவள் கன்னங்களை கிள்ளி வைத்தவன் வேகமாக காரில் ஏறி கிளம்பியிருந்தான்.

                   அப்போதுதான் எழுந்து தன் அறையின் பால்கனிக்கு வந்த அறிவனின் கண்களில் இந்த காட்சி விழ, ஸ்ரீகாவைப் பார்த்து நக்கலாக சிறிது வெறுப்பேற்றினான் அறிவன். ஸ்ரீகா அவனை முறைத்தவள் “போடா..” என்று வீட்டிற்குள் நுழைய, அதன்பின்னும் தொடர்ந்தது அவர்களின் அரட்டை கச்சேரி.

                   சர்வாவும், தீக்ஷியும் சீதா கிளம்பவும் இங்கே வந்துவிட, பரமேஸ்வரனும் மதியமே வீடு திரும்பியிருந்தார். மாலை ஸ்ரீகா வீட்டிற்கு கிளம்பிவிடுவாள் என்பதால் மொத்த குடும்பமும் ஒரே இடத்தில் குழுமியிருந்தது அங்கே. தீக்ஷியின் அழைப்பின் பெயரில் சந்தோஷியும் கல்லூரி முடித்து நேராக இங்கே வந்திருந்தாள்.

                   வீட்டிற்கு வந்து விட்டாலும், அங்கே யார் முகத்தைப் பார்க்கவும் தயக்கமாக இருந்தது சந்தோஷிக்கு. அவள் அன்னையின் செயல்கள் அப்படியாகிற்றே. தீக்ஷியின் அருகில் அத்தனை அமைதியாக அவள் அமர்ந்து கொள்ள, ஸ்ரீகா பெரிதாக கண்டுகொள்ளவில்லை அவளை.

                  சர்வனும் அவளிடம் அத்தனை நெருக்கம் இல்லையே.. இன்னும் பேச்சுக்களே எண்ணி எண்ணித்தான் என்பதால் தங்கையை வாவென்றும் அழைக்கவில்லை அவன். ரேகா சமையலறையில் இருந்து வெளியே வர, அவர்தான் “வாடா” என்று அத்தனை மகிழ்வைக் காட்டினார் முகத்தில்.

                 அவரின் அந்த மலர்ந்த முகத்தில் சந்தோஷியின் முகம் தானாக மலர்ந்துவிட, “ரேகாம்மா..” என்று என்று அவருடன் ஒட்டிக்கொண்டாள் சந்தோஷி. ஸ்ரீகா அவளை கண்டுகொள்ளாமல் அறிவனுடன் அரட்டையை தொடர, மாலை ஜெய் வரவும் அவனுடன் மாமியார் வீட்டுக்கு கிளம்பியிருந்தாள்.

                     இவர்களின் நாட்கள் ஒருவித மகிழ்வுடனே கழிய, மூன்று மாதங்கள் கடந்திருந்தது இடையில்… ஆர்த்தி அவர்கள் குடும்பத்தின் முதல் வாரிசை சுமந்திருக்க, துருவனின் திருமணத்திற்கு நாள் குறித்திருந்தனர்.

                  அந்தநேரம் தான் பீஷ்மன் ரேகாவைத் தேடி அவர் இல்லத்திற்கே வந்து நின்றான். பீஷ்மனை அங்கே எதிர்பாராமல் ரேகா அதிர்ச்சியடைய, பீஷ்மன் வந்த விஷயம் கூறவும் சின்ன நிம்மதி அவரிடம்.

                   பலமுறை யோசித்தபின்பே தன் கணவர் மற்றும் மருமகனின் ஆலோசனைகளின் பெயரில் அவனுக்கு சம்மதம் தெரிவித்து இருந்தார் ரேகா.

            ஆனால், அதற்கும் ஸ்ரீகா ஆடித்தீர்க்க, வழக்கம் போல் ஜெய் சமாளித்து இருந்தான் அவளை. அதில் ரேகாவின் மீது கோபத்தில் இருந்தாள் மகள்.

                    பொறுப்பெடுத்துக் கொண்டபின் சோம்பியிருப்பது ரேகாவின் வழக்கம் இல்லையே. அவர் செய்வன திருந்த செய்வதற்காக தன் வழியில் ஓடிக் கொண்டிருந்தார்…

                   குடும்பம், நடனம், சமூகத்திற்கான பணிகள் என்று அத்தனையிலும் அவர் முக்கிய பங்காற்ற, அவரின் பிள்ளைகளும் அவர் பெயரை நிலைநிறுத்தும் படி வளர்த்தது அந்த தாயின் சாதனையாகிப் போனது.

                               எதையுமே எதிர்பாராமல் அன்பு ஒன்றையே ஆதாரமாக்கி அவர் வாழ்வை ரேகா வாழ்ந்து முடித்திருக்க, இந்த நீண்ட நெடிய வாழ்வில் அவருக்கு கிடைத்தது அத்தனையும் வைரங்கள் தான்.

                இன்னும் அவரின் காலம் உள்ளவரை இதே நல்ல உள்ளத்தோடு இன்னும் இன்னும் மானிடம் வாழ வழி செய்வார் அவர்.

                அன்று காலை வேளையில் அவர் தன் வீட்டு பூஜையறையில் அமர்ந்திருந்த நேரம் சர்வா வந்திருந்தான் அவரைத்தேடி. வந்தவன் “ம்மா..” என்று அவரைக் கட்டிக்கொள்ள, அவர் பூஜையில் இருப்பதெல்லாம் அவன் கவனத்தில் விழவே இல்லை.

                 மகனின் இந்த அர்ப்பரிப்பில் “என்னடா சர்வா..” என்று அன்னை பதறிப்போக, அவன் கண்களில் வழியும் கண்ணீருடனும் இதழில் நிறைந்த சிரிப்புடனும் மீண்டும் தன் அன்னையைக் கட்டிக்கொண்டான். ரேகா ஒன்றும் புரியாதவராக நிமிர, வாசலில் அவனையே காதலுடன் பார்த்து நின்றாள் அவன் மனைவி.

                 ரேகா அவளிடம் “என்ன தீக்ஷிமா.. நீயாவது சொல்லேன்..” என்று அவளைக் கேட்க, அமைதியாக அவர் அருகில் வந்து அமர்ந்து அவரின் தோளில் சாய்ந்து கண்ணீர்வடித்தாள் தீக்ஷி.

                  “தேங்க்யூ ரேகாம்மா.. இவரை என்கிட்டே கொடுத்ததுக்கு..” என்று அவர் கன்னத்தில் அவள் முத்தமிட, “என்னடா பண்றிங்க ரெண்டு பேரும்.. என்ன விஷயம்..” என்று அவர் மீண்டும் வினவ, “ரேகாம்மா.. ரேகா பாட்டி ஆகப்போறிங்கம்மா..” என்று சிரித்தான் மகன்.

                     “சர்வா..” என்று அகமகிழ்ந்தவர் இருவரையும் அணைத்துகொள்ள, உணர்ச்சிகரமான சில நொடிகள். ரேகாவிற்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டது. ஐந்து வயதில் தன்னிடம் வந்து ஒட்டிக்கொண்ட அந்த குட்டி சர்வாவே அவர் கண்முன் இருக்க, இன்று அவனே ஒரு குழந்தைக்கு தந்தையாகப் போகிறான் என்ற செய்தி பூரிக்க வைத்தது அவரை.

                 இருவரையும் அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவர் அத்தனைப் பேரிடமும் தானே விஷயத்தை தெரிவித்தார். பின்னே, சம்பந்தப்பட்ட இருவருமே விஷயம் தெரிந்த நொடி ரேகாவைத் தேடி வந்திருந்தனரே.. பிறகெங்கே அவர்கள் மற்றவர்களுக்கு தகவல் சொல்வது.

                   பரமேஸ்வரன், அபி, ஆர்த்தி, அறிவன், துருவன் என்று அத்தனைப் பேரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ஓர் ஆனந்த தருணம் அழகாக உருவானது அங்கே.

                  அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ரீகா தன் குடும்பத்துடன் வந்துவிட, சீதா மகளை அணைத்து விடுவிக்க, ஸ்ரீகா கட்டிக்கொண்டாள் தன் தோழியை. சர்வாவையும் அணைத்து அவள் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அவளிடம் சற்று அதிகமாகவே நெகிழ்ந்து நின்றான் சர்வானந்த்.

                 ஸ்ரீகா “சர்வா..” என்று அதட்ட, அறிவனும், த்ருவனும் அவனுக்கு இருபுறமும் வந்து அணைத்து கொண்டனர் அவனை. சர்வா ஸ்ரீகாவின் இருகைகளையும் பற்றிக்கொண்டு “உன் பிரென்ட்கிட்ட சொல்லு.. எனக்கு குட்டி ஸ்ரீகா தான் வேணும்.. எனக்கு வாழ்க்கை கொடுத்த, வாழணும்ங்கிற ஆசையைக் கொடுத்த என் ஸ்ரீகா தான் எனக்கு மகளா பிறக்கணும்..” என்று கண்ணீருடன் அவன் உரைக்க, ஸ்ரீகாவுக்கும் கண்களில் கண்ணீர்தடங்கள்..

                   ஜெய் சூழ்நிலையை இலகுவாக்க “ஏன் உன் ரேகாம்மா வேண்டாமா..” என்று கேலியாக கேட்க,

                 “என் ரேகாம்மாவையே எனக்கு கொடுத்தது என் ஸ்ரீ தான். இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட, இவ எங்க நாலு பேரையும் பிரிச்சுப் பார்த்ததில்லை.. ஏன் அவளோட அம்மா, அப்பாவையே மொத்தமா எங்களுக்கு கொடுத்திருக்காளே..  யார் செய்வா??” என்று கேட்டான் சர்வா..

                   “எனக்கு இவ தேவதை.. எங்களோட குட்டி தேவதை.. என்னை மாதிரியே என் மகளையும் வளர்த்துக் கொடு.. உன்னைபோலவே வளர்த்துக் கொடு..” என்று சர்வா ஏகத்திற்கும் கலங்கியவனாக பேசிக்கொண்டே செல்ல, ஸ்ரீகா அவன் பேசி முடிக்கவும், அங்கு நின்றிருந்த தன் உடன்பிறப்புகளைக் கட்டிக்கொண்டாள்.

                 அபி பாவமாக தூர நின்றவன் என்ன நினைத்தானோ “டேய்.. என்னையும் சேர்த்துக்கோங்கடா..” என்று அவனும் வீம்புக்கென அணைப்பில் இணைய, அத்த்னை மகிழ்வு அவர்களிடம்.

                 இவர்கள் எப்போதும் இப்படியே இருக்க கடவுளை பிரார்த்திப்போம் நாமும்….

Advertisement