Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 44

 

                ஸ்ரீகா அவளது ஜெய்யின் அருகில் சோர்ந்து கிடக்க, அவளைப் பார்க்கும்படி திரும்பி படுத்தான் அமைச்சன். இடது கையை தலைக்கு கொடுத்து அவன் ஸ்ரீகாவின் முகம் பார்க்க, “என்ன..” என்றாள் நாட்டியக்காரி.

                “உனக்கு தனியா போகணுமா.. அப்படி ஒரு தாட்

இருக்கா..” என்று ஜெய் அவள் கண்களை கூர்ந்தான்.

                ஸ்ரீகா நக்கலாகச் சிரித்தாள் இப்போது. ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் “நிஜமா கேட்கிறேன்டா.. நான் மாசத்துல பாதி நாள் டெல்லில தான் இருக்கேன். மீதி இருக்க நாள் மொத்தமும் நீ அந்த வீட்ல தான் இருக்க வேண்டி இருக்கும். உனக்கு அம்மாவோட ஒத்துப்போகாம, ரெண்டு பேரும் முட்டிட்டே இருந்தா உன்னால நிம்மதியா உன் வேலைகளை பார்க்க முடியாது..”

                “நாம தனியா இருந்துப்போம் ஸ்ரீகா… நான் இங்கே வர்ற நாட்கள்ல அங்கே அம்மா வீட்டுக்கு போயிடுவோம்..” என்று ஸ்ரீகாவை யோசித்தேப் பேசினான் அவன்.

                 ஆனால், அவன் முடிக்கவும் ஸ்ரீகா அவனை முறைக்க, “எதுக்கு முறைக்கிறா..” என்று குழம்பினான் அமைச்சன்.

                  “என்னடா..” என்று அவளிடமே கேட்க,

                  “அதெப்படி எனக்கு உங்க அம்மாவோட ஒத்து வரலையா.. ஒரு பேச்சுக்கு பேசும்போது கூட உங்க அம்மாவுக்கு பிள்ளையா தான் பேசுவீங்களா…” என்று அவனிடம் இருந்து விலகி எழுந்து அமர்ந்தாள் ஸ்ரீகா..

                  ஜெய் அவள் பேச்சில் அதிர்ந்து “ஸ்ரீ இப்போ விஷயம் இது இல்ல.. சும்மா நான் பேசுற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் சொல்லாத. உங்க ரெண்டு பேருக்குமே அடுத்தவங்களோட ஒத்துப் போகலை.. போதுமா.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.” என்றான் அவளிடம்.

                  ஸ்ரீகாவுக்கு அப்போதும் முழுதிருப்தி என்பது இல்லை. என்னதான் கணவன் காதலில் கரைய வைத்தாலும், அவன் அன்னை என்று வரும்போது தான் தூரமாய்ப் போகிறோமோ என்று முள்ளாக ஏதோ குத்தத்தான் செய்தது பெண்ணவளை.

                  அதை அப்படியே அவள் முகத்தில் பிரதிபலிக்க, அவள் இரண்டு கன்னங்களையும் பற்றிக் கொண்டவன் அவளை தன்னருகில் இழுத்துக் கொண்டான் மெல்ல. ஸ்ரீகா மறுக்காமல் அவன் அருகில் வந்துவிட்டாலும் கண்கள் கலங்கியது அவளுக்கு.

                   ஆனால், அழுவதெல்லாம் பழக்கம் இல்லையே.. எனவே மௌனித்துக் கொண்டாள் அவள்.

                  ஜெய் அவளைப் புரிந்தவனாக அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு அவள் உச்சியில் இதழ்பதித்தான். “எனக்கு என் அம்மாவை நல்லா தெரியும் ஸ்ரீகா. அவங்க குணம் தெரியும்… எப்பவும் அவங்க முழுசா உன்னை புரிஞ்சிக்க மாட்டாங்க. அவங்ககிட்ட என்னால புரியவைக்க முடியாது ஸ்ரீமா.. ஆனா, என் பொண்டாட்டி அப்படி இல்லையே.. என்னை முழுசா புரியும் அவளுக்கு.”

                   “நான் எது செய்தாலும் அவளையும் யோசிச்சுதான் செய்வேன். அவளுக்கு தெரியும். நம்ம கல்யாணம் முடியவுமே, தனியா வீடு பார்க்கிற பிளான்ல தான் இருந்தேன். நீ “நான் ஏன் தனிக்குடித்தனம் போகணும்னு ஒருநாள் விளையாட்டுக்கு கேட்ட..” சரி.. உங்கிட்ட பேசிட்டு முடிவு செய்வோம்னு தான் வெய்ட் பண்ணேன்.”

                  “ஆனா, இனி அப்படி வெய்ட் பண்ண தேவையில்லை. நாம தனியா இருப்போம். உனக்கும் பழகணும் இல்லையா… இங்கே சர்வா வீடு பக்கத்திலேயே நமக்கு வீடு பார்க்க சொல்லி இருக்கேன்..” என்று பேசிக் கொண்டிருக்க,

                 “அதெல்லாம் வேண்டாம்..” என்று உடனடியாக மறுத்தாள் மனைவி.

                 “ஏன்..” என ஜெய் ஏறிட,

                 “என்னால தனியா எல்லாம் இருக்க முடியாது ஜெய். நீங்களும் பாதிநாள் இங்கே இருக்கமாட்டிங்க.. அப்புறம் தனியா நான் என்ன செய்ய… அங்கே இருந்தாலும் உங்க அம்மாவோட சண்டை போட்டு அப்படியே பொழுது போகும்..” என்றாள் மெல்லியச் சிரிப்புடன்.

                  ஜெய் இப்போது முறைக்க “நிஜம்மா.. என்னால தனியா இருக்க முடியாது..” என்று சிணுங்கியது அவன் குழந்தை.

                   ஜெய் அலுப்புடன் அவளை நோக்க “நான் உங்கம்மாவோட சண்டை போடமாட்டேன்.. அப்படியே அவங்க வம்புக்கு வந்தாலும், உங்க பையனை கூட்டிட்டு தனியா போய்டுவேன்னு சொல்றேன்.. உங்க அம்மா ஆப் ஆகிடுவாங்க..” என்று கண்சிமிட்டினாள் ஸ்ரீகா.

                     ஜெய் “நீ நினைக்கிற அளவுக்கு அம்மா ஈஸி கிடையாது. அவங்க அப்படியே பழகிட்டாங்க.. யோசிச்சுக்கோ..” என்று மீண்டும் எடுத்துரைக்க,

                     “முன்னாடி எப்படியோ, ஆனா, நிச்சயமா இப்போ சேஞ்சஸ் இருக்கு. நாம தனியா போய்டுவோம்ன்னு ஒரு பயம் இருக்கு.. அவங்களால உங்களை விட்டு இருக்கமுடியாது. அதுவுமில்லாம தீக்ஷி விஷயத்துல ஓரளவு நம்மை புரிஞ்சிக்கிட்டாங்க.. கண்டிப்பா இனி பெருசா எதுவும் செய்யமாட்டாங்க..” என்று நம்பிக்கையுடன் கூறினாள் ஸ்ரீகா.

                  ஆனால், அவளின் இந்த நம்பிக்கையை அம்மா காப்பாற்ற வேண்டுமே என்று உள்ளூர நினைத்துக் கொண்டான் ஜெய். ஸ்ரீகாவுக்கும் பதில் என்று எதுவும் கூறாமல் அவன் மௌனமாக ஸ்ரீகா இப்போது அவன் முகம் நோக்கினாள்.

                   மென்மையாக சிரித்தவன் “உன் நம்பிக்கையை என் அம்மா காப்பாத்தினா நல்லா இருக்கும்..” என்றான்.

                   ஸ்ரீகா அவன் கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டவள் “நான் அவங்ககிட்டே எதையும் இனி எதிர்பார்க்கமாட்டேன் ஜெய். எனக்கு ஜெய் போதும். நீங்க நிம்மதியா இருங்க.” என்று எப்போதும்போல் ஜெய்யை மட்டும் மனதில் ஏற்றிக்கொண்டு கூறிவிட்டாள் ஸ்ரீகா.

                 ஜெய் அவளின் இந்த காதலில் “சாரிடி.. ரொம்ப கஷ்டப்படுத்திட்டு இருக்கேன் உன்னை..” என்று உணர்ந்து கூறியவன் தன் கைகளின் இறுக்கம் கூட்ட, “விடுங்க அமைச்சரே..” என்று தானும் அவனைக் கட்டிக்கொண்டாள் ஸ்ரீகா.

                “என்னோட பதவிக்காலம் இன்னும் 3 வருஷம் இருக்கு ஸ்ரீ.. அது முடியட்டும்.. அப்புறம் எல்லாமே உன் விருப்பம் தான். எப்பவும் நான் உன்னோட இருக்கேன்..” என்றான் உறுதியாக.

                   “அதெல்லாம் நடக்கும்போது பார்க்கலாம்… இப்போ ரொம்ப அதிகமா யோசிக்காதிங்க.. தூக்கம் வந்தா மறுபடியும் தூங்குங்க.. நான் குளிச்சுட்டு கீழேப் போகணும். அம்மா சத்தம் போடுவாங்க..” என்று ஸ்ரீகா விலக, அவள் நெற்றியில் முத்தமிட்டவன் “தேங்க்ஸ்.” என்றான் நிறைவுடன்.

                    ஸ்ரீகா முறைக்க “சொல்லணும்… வாழ்க்கை முழுக்க சொல்லிட்டே இருக்கணும்.. என்னோட காதலிக்கு..” என்று காதலாக அவன் உரைக்க, அவன் காதலில் அதிராமல் சிரித்து அவனை ரசித்தாள் அவள்.

                    “போதும் போப்பா..” என்றவள் அவனை கட்டிலில் தள்ளி, குளியலறைக்குள் நுழைந்து வெளியே வர, அதற்குள் அவள் அறையின் கதவைத் தட்டினாள் ஆர்த்தி.

                     ஸ்ரீகாவின் குளித்து முடித்த தோற்றம் கண்டவள் நிம்மதி பெருமூச்சொன்றை வெளியேற்றிக் கொண்டாள். “சாரி ஸ்ரீ.. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..” எனும்போதே, “அண்ணி..” என்று அதட்டினாள் ஸ்ரீகா.

                     “கீழே ஜெய் அண்ணாவோட அம்மா வந்திருக்காங்க ஸ்ரீ.. பத்து நிமிஷத்துக்கு மேல ஆச்சு.. சீக்கிரம் வா, ஏதாவது சொல்லிடப் போறாங்க..” என்று அவள் பதற, அவள் பதட்டத்தில் சிரிப்பு வந்தது ஸ்ரீகாவுக்கு.

                      “என்னைதான் சொல்வாங்க அண்ணி.. நீங்க ஏன் இப்படி பயப்படறீங்க.. அவங்க உங்களுக்கு மாமியார் இல்ல.. எதுவும் கேட்டா, தைரியமா பதில் சொல்லுங்க.. நான் அவரை எழுப்பிட்டு வரேன்..” என்று தைரியமாக ஸ்ரீகா சொல்லிச் செல்ல, ஆர்த்தி அப்போதும் பதட்டத்துடனே தான் கீழே சென்றாள்.

               ஸ்ரீகா ஆர்த்தியிடம் பேசிமுடித்து அறைக்குள் வர, ஜெய் விழித்திருந்தான். அதுவும் பார்வை ஸ்ரீகாவை கண்டிக்க “என்ன இப்போ.. என் அண்ணி ஏன் பயப்படணும்.. அவங்க எனக்குத்தானே மாமியார், அவங்களுக்கு இல்லையே.” என்று அவனுக்கும் பதில் கொடுத்தவள் நிலைக்கண்ணாடியின் முன்னே சென்று நின்றாள்.

                 கூந்தலை பிரித்துவிட்டவள் ஒரு கிளிப்பை எடுத்து மாட்டிக்கொண்டு கீழே இறங்க, இங்கே ஜெய் சிரித்துக் கொண்டிருந்தான் அவளை நினைத்து. “எதற்குமே அலட்டிக் கொள்ள மாட்டாள்.. என் வாயாடி..” என்று மனைவியை சீராட்டிக் கொண்டவன் தானும் பத்து நிமிடங்களில் குளித்து கீழிறங்கினான்.

                அவன் வந்த நேரம் சீதா தன் மருமகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார். கூடவே அலங்கார காகிதம் சுற்றிய ஏதோ பரிசுப்பொருளையும் ஸ்ரீகாவிடம் அவர் கொடுக்க, இறங்கி வரும் கணவனை ஒரு பார்வை பார்த்தபடியே வாங்கி கொண்டாள் அவள்.

                “அப்படி என்னவா இருக்கும்..” என்று அவளின் மூளை வேகமாக வேலை செய்தாலும், முகத்தை அமைதியாக வைத்து அவள் நிற்க, மது இப்போது துருவனிடமும் ஒரு பார்சலை நீட்டினார். அவன் வியப்புடன் கைகளில் வாங்கி கொண்டே “தேங்க்யூ மாமா..” என்று சிரிக்க, “பிரிச்சு பாருங்க..” என்றார் மது.

                 ஸ்ரீகா அதற்கெனவே காத்திருந்தவள் போல் அந்த பார்சலைப் பிரிக்க, உள்ளே ஒரு நடராஜர் நெருப்பு வளையத்திற்குள் காலைத் தூக்கி நின்றிருந்தார். ஸ்ரீகாவுக்கு இதைவிட வேறென்ன மகிழ்ச்சி கொடுக்கும். அதுவும் தன் நாட்டியத்தை ஏளனமாக பேசிய ஒருவரிடம் இருந்து.

                அவள் அந்த நடராஜரிலேயே மூழ்கி நின்றுவிட, துருவனும் அவள் நிலையில் தான் இருந்தான். அவனுக்கு பரிசாக ஒரு மரவேலைப்பாடுகள் நிறைந்த ஒரு அழகிய குட்டி வீணையை பரிசளித்திருந்தார் மது.

                 சீதா மருமகள் முகத்தையே பார்த்திருக்க, ஜெய்யின் சுரண்டலில் தான் மாமியாரை கவனித்தாள் ஸ்ரீகா. ஸ்ரீகாவை தன்னருகில் அழைத்தவர் “உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்.. சாரி..” என்றார் உணர்ந்தவராக.

                 அத்தனைப் பேர் மத்தியில் அவர் அப்படிப் பேசுவார் என்று எதிர்பார்த்திருக்கவே இல்லை ஸ்ரீகா. அவரை மறுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் அவள் அதிர்ச்சியில் இருக்க, அவளுக்கு இன்னும் கோபம் குறையவில்லையோ என்று தன் கணவரின் முகம் பார்த்தார் சீதா.

                 “உன் மருமக அதிர்ச்சியில இருக்கா சீதா..” என்று சிரித்தவர் மருமகளிடம் “ஏதாவது பேசும்மா உன் மாமியார்கிட்ட..” என்று எடுத்துக் கொடுக்க,

                  “ம்ம்ம்ம்..” என்றவள் கொஞ்சமும் யோசிக்காமல் “இதெல்லாம் வேண்டாம் அத்தை.. எப்பவும் போலவே இருங்க… எல்லாத்தையும் மறக்க பாருங்க.. அதுதான் எல்லாமே சரியாகிடுச்சே.. இன்னும் ஏன் பழசை பேசி வருத்தப்படணும்..” என்றாள்

                  சீதா ஆமோதிப்பக தலையசைக்க, அவரைப் பார்த்து சிரித்தாள் மருமகள். அந்த நிமிடங்கள் இருவருக்குமே பிடித்திருக்க, மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டவர் “வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய சாதிக்கணும்..” என, அந்த வார்த்தைகளே அவரின் மாற்றத்தை எடுத்துக் காட்டியது ஜெய்க்கு.

                    இவள் மாயமோஹினி தானோ என்று மனைவியை ஆதுரமாக பார்த்தவன் தாயின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

                    ஸ்ரீகா சிரிப்புடன் தலையசைத்து கொள்ள, சீதா மாற்றத்திற்கான முதலடியை எடுத்து வைத்திருந்தார். தான் என்ன செய்திருந்தாலும், தன் மகளுக்கும், தன் குடும்பத்திற்கும் எப்போதும் நல்லதே நினைத்து துணை நிற்கும் அந்த சிறுபெண்ணை வாட்டி என்ன செய்ய போகிறோம் என்று அவருக்கே தோன்றிவிட, ஸ்ரீகாவுடன் நல்லுறவையே நாடினார் அவர்.

Advertisement