Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 42

                                ரேகாவின் வீட்டு ஹாலில் அவர் முன்பாக அமர்ந்திருந்தான் ஜெய். ரேகா முகம் இன்னமும் சற்று கோபத்தைக் காண்பிக்க, ஜெய் முகத்தில் புன்னகை தான். பரமேஸ்வரன் எதுவும் பேசாமல், பார்வையாளராக மாறியிருக்க, அறிவன் அன்னையின் அருகில் அமர்ந்திருந்தான்.

                               ஸ்ரீகா தன் தந்தையுடன் அமர்ந்திருக்க, அவள் பார்வை ரேகாவையும், ஜெய்யையும் மாறிமாறி தழுவிக் கொண்டிருந்தது. இரண்டுமே பிடித்தமான உறவுகள் ஆகிற்றே. இரண்டில் ஒன்று காயம் கண்டாலும் வலி என்னவோ அவளுக்குத்தான் அல்லவா.

                                ஜெய் கோபமாக இல்லை என்பது அவன் முகத்தில் தெரிய, தன் அன்னை அவனை எதுவும் காயப்படுத்திவிடுவாரோ என்று பதட்டமாகவே இருந்தாள் அவள். ரேகா எதுவும் பேசாமல் மௌனம் காக்க, ஜெய் தானாகவே துவக்கி வைத்தான்.

                           ‘என்ன ரேகாம்மா.. என்ன கோபம் என்மேல.” என்றான் இலகுவாக

                            ரேகா பதில் கூறாமல் மருமகனைப் பார்க்க, “அம்மா.. நான் இவளை அடிச்சது தப்புன்னு சொல்லாதீங்க… ஹாஸ்பிடல்ல வச்சு அவகிட்ட அப்படி நடந்தது தப்பா இருக்கலாம். ஆனா, அவளை நான் அடிச்சது தப்பு இல்ல. ” என்று அடித்துப் பேசினான் அப்போதும்.

                            “என் மகளை நாங்களே இதுவரைக்கும் அடிச்சது இல்லை ஜெய்.” என்ற ரேகா வருத்தத்தோடு மருமகனைப் பார்க்க

                            “அதுதான் தப்பாகிப் போச்சு ரேகாம்மா. இவளை நல்லா கொடுத்து வளர்த்திருக்கணும். “என்றான் அவன்.

                            ரேகா ஜெய்யை புரியாதவராகப் பார்க்க, “எனக்கு சர்வா-தீக்ஷி விஷயம் முன்னாடியே தெரியும் ரேகாம்மா. நானே நேரம் பார்த்து அம்மாகிட்ட பேசுறதா ஸ்ரீகா கிட்ட சொல்லி இருந்தேன். அதற்குள்ள வீட்ல ஏதோ பேச்சு. பீஷ்மன் -தீஷியை வச்சு பேசி இருக்காங்க.. அவ்ளோதான..”

                          “அந்த விஷயத்தை இன்னுமே கொஞ்சம் பொறுமையா ஹாண்டில் பண்ணி இருக்க முடியாதா… நான் திரும்பி வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணி இருக்கணும் இல்லையா. சரி.. அவளே இதை ஹாண்டில் பண்ண நினைச்சு தீக்ஷியை பாட்டியோட அனுப்பிட்டா… அப்போ அம்மாவை சமாளிச்சு இருக்கணும் இல்லையா..”

                          “நான் என் அம்மாவுக்கு சப்போர்ட் பண்றேன். அவங்களுக்காக பேசுறேன் எப்படி எடுத்தாலும் எனக்கு கவலை இல்லைம்மா.. ஆனா, என் அம்மாவுக்கு எதுவும் நடந்து இருந்தால், இவ என்ன ஆகி இருப்பா… “

                     “எனக்கு என் குடும்பத்தை இவளைவிட நல்லாத் தெரியும். இவ யாருக்காக இதையெல்லாம் செய்ய நினைச்சாளோ அந்த தீக்ஷியே இவகூட நிற்கலையே. அப்பா என்ன பேசினாலும், ஒருசில நேரங்கள் தவிர்த்து மீதி எல்லா நேரமும் அம்மாவோட தான் நிற்பாங்க.”

                      “அம்மா மேல தப்பே இருந்தாலும் கூட, சில நேரங்கள்ல அவங்களுக்கு புரிய வைக்க முடியாது. நாம எடுத்து சொல்ல சொல்ல, அவங்க இன்னுமே அழுத்தமா மறுக்க ஆரம்பிப்பாங்க. தீக்ஷி விஷயத்துல அதுதான் நடந்தது…”

                     “இதெல்லாம் நல்லாத் தெரியவும்தான் தீக்ஷி விஷயம் நான் பார்த்துக்கறேன் ன்னு சொல்லி இருந்தேன் இவகிட்ட. இதைப்பற்றி யார்கிட்டேயும் பேச வேண்டாம்ன்னு கூட சொல்லி இருந்தேன்.”

                       “ஒரு மூணு நாள் நான் ஊர்ல இல்ல. அத்தனையும் மறந்து அவ நினைச்சபடி எல்லாம் பண்ணி முடிச்சாச்சு. நினைச்ச உடனே வந்து பார்க்கிற தூரத்தில கூட இல்ல நான். அங்கே போன் வருது. உன் அம்மா  டேப்லெட் சாப்பிட்டாங்க ன்னு. “

                         “இந்த விஷயம் வெளியே மீடியாக்கு போயிருந்தால், இல்ல அம்மாவுக்கு ஏதாவது நடந்திருந்தா, என்ன பண்ணி இருக்க முடியும் நம்மால. இதையெல்லாம் யோசிச்சிருக்க வேண்டாமா இவ.”

                        “உங்க இடத்துல வேற யாரும் இருந்திருந்தா, இதையெல்லாம் பேசி இருப்பேனா தெரியாது எனக்கு. ஆனா, எனக்கு ரேகாம்மாவை தெரியும். என் இடத்துல இருந்து யோசிங்க. நான் அன்னைக்கு என்ன பண்ணி இருக்கணும்..”

                          “சரி.. நான் அடிச்சதே தப்பாக கூட இருக்கட்டும். அதற்காக என் சட்டையைப் பிடிப்பானா இவன்?? அதோட, என் பொண்டாட்டி கையை பிடிச்சு இழுத்துட்டு வேற போயாச்சு. அங்கேயே இவனை திருப்பி ரெண்டு வைக்க எவ்ளோ நேரம் ஆகும் எனக்கு..??”

                       “சரி.. ஏதோ கோபம் வீட்டுக்கு வருவாங்க ன்னு பார்த்தா, மேடம் கோவைக்கு போயாச்சு. அதற்குப்பிறகும் கொஞ்சம் கூட செய்த தப்பை உணரவே இல்லை. நான் கூப்பிடப் போனேன். அப்பவும் நிறையப் பேசினா…”

                       “அதனால தான் சென்னைக்கு கிளம்பி வந்துட்டேன். நான் கார்ல வர்றேன். மேடம் நான் புக் பண்ண பிளைட்டை பிடிச்சுட்டாங்க. நான் சென்னைக்கு வருமுன்னவே மேடம் வந்தாச்சு. அப்போ அறிவனை ஏர்போர்ட்டுக்கு அனுப்பாம வேற என்ன செஞ்சிருக்கணும் நான்..”

                     “மறுபடியும் அதற்கும் கோபம்.. இங்கே வந்து உட்கார்ந்தாச்சு… இதோ இப்பவும் நாந்தான் இவளைத் தேடி வந்திருக்கேன். இன்னும் என்ன செய்யட்டும் சொல்லுங்க..” என்றான் மத்தியமந்திரி.

                      ஸ்ரீகா அவன்பேச்சில் வாயில் கைவைக்காத குறையாக பார்த்தாள் என்றால், அறிவன் “நடுவுல என்னை ஏண்டா கோர்த்து விடுற..” என்று முழித்துக் கொண்டிருந்தான். பரமேஸ்வரன் ஜெய்யின் தந்திரம் புரிந்தவராக, சிரித்துக் கொண்டே அமர்ந்திருக்க, ரேகாவுக்கு ஜெய்யை நினைத்து வருத்தமாக இருந்தது.

                      ஸ்ரீகாவை அடித்தது தவறு என்றாலும், அவனுக்கும் அடுத்தடுத்து சங்கடங்கள்தானே. அவனின் இக்கட்டான நேரத்தில் அவனுடன் இருக்காமல், ஸ்ரீகா இங்கே வந்து அமர்ந்து கொண்டது இப்போது தவறாகப்பட்டது ரேகாவுக்கு.

                    அவர் கண்டனத்துடன் மகளைப் பார்க்க, “அம்மா.. அவர் உங்களை ஏமாத்திட்டு இருக்காரு.. அவர் சொல்றதை எல்லாம் நம்பாதீங்க.” என்று முறைப்புடன் எழுந்தாள் ஸ்ரீகா.

                    ஜெய் இப்போதும் அதே அப்பாவி முகத்துடன் அமர்ந்திருக்க, “அடப்பாவி மினிஸ்டர்..” என்று அவனை ஏகத்திற்கும் முறைத்து, ரேகாவிடம் மாட்டிக் கொண்டாள் ஸ்ரீகா.

                     ரேகா அவள் காது தீயும் அளவிற்கு அறிவுரை வழங்க, கிருஷ்ணன் மாயக்கண்ணனாக மாறி சிரிப்புடன் மனைவியின் அவஸ்தையை ரசித்துக் கொண்டிருந்தான்.

                      “அத்தனைக்கும் இருக்குடா உனக்கு..” என்று அவன் மனசாட்சி அதட்ட, ஒரே தட்டில் அதை அடக்கி அமர்த்தியவன் ஜாலியாக அமர்ந்து கொண்டிருந்தான்.

                      அன்றைய தினம் ஜெய்க்கு நல்ல பொழுது போக்காக அமைந்துவிட, வீட்டிற்கும் அழைத்து வந்துவிட்டான் மனைவியை. சீதா மருமகளை முகம் மலர்ந்து வரவேற்றாலும், தன் எல்லையில் நின்று கொண்டார். எப்போதும் அவர் அப்படித்தான் என்பதால் ஸ்ரீகாவும் அதற்குமேல் அவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.

                       அன்று இரவு வரை தனிமையில் ஸ்ரீகாவிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த ஜெய், அன்று இரவு அவளிடம் மாட்டிக் கொள்ள, அவனை ஸ்ரீகா அறைக்குள் துரத்தி துரத்தி அடித்ததெல்லாம் வரலாறு.

 ———————

               ஸ்ரீகா ஜெய்யுடன் சென்று இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், அரக்கப்பரக்க தந்தையின் அலுவலகத்திற்குள் நுழைந்தான் துருவன். அவன் பதட்டத்தில் “என்னடா..” என்று பரமேஸ்வரனும் பதறிப்போக

                 “ப்பா… ராகவி வீட்ல பேசுங்க. ஈவினிங் அவளைப் பொண்ணு பார்க்க வரங்களாம்.. “என்றான் மொட்டையாக

                   “யார் ராகவி..” என்று தந்தை விழிக்க

                   “என் ஆபிஸ் ரிஷப்ஷனிஸ்ட்ப்பா…” என்றான் மகன்.

                   “அந்த பொண்ணு வீட்ல நாம என்னடா பேசணும்…” என்றார் அப்போதும் புரியாமல்.

                  “அப்பா அவ உங்க மருமக.. அவளை வேற யாரோ பொண்ணு பார்க்க விடுவீர்களா.. நீங்கப் பேசுங்க..” என்று துருவன் தந்தையின் முகம் பார்க்க

                    “டேய்..” என்று அதிர்ச்சியில் கத்தினார் பரமேஸ்வரன்.

                     மகன் தந்தையை பாவமாகப் பார்த்து அமர்ந்திருக்க, “நீ எதுவா இருந்தாலும், உன் அம்மாகிட்ட தானே போய் நிற்ப. இப்போ என்ன?? என்னை தேடி வந்திருக்க… ஏதோ வில்லங்கம் இருக்கும் போலவே..” என்று அவர் வெளிப்படையாக சந்தேகிக்க

                    “அப்பா.. அம்மாகிட்ட எப்படி இதை சொல்ல முடியும். நான் அவங்க பார்க்கிற பெண்ணை தான் கட்டிப்பேன் ன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன்ல. “என்று தயங்கினான் துருவன்.

                      “அதற்கு இப்போ நான் என்ன செய்யணும்..” என்று தந்தை பார்க்க

                     “நீங்கப் பேசுங்கப்பா.. அம்மாகிட்ட..” என்றான் துருவன்.

                     “நீ அந்தப்பொண்ணை லவ் ஏதும் பண்றியா..” என்று தந்தை கேள்வி எழுப்ப

                    “ப்பா.. அதானே இவ்ளோநேரம் சொன்னேன்..” என்று முறைத்தான் மகன்.

                    “எத்தனை நாளா பழக்கம்..”

                     “ப்பா.. ரொம்ப நாளாகவே தான். பட், நாங்க பேசிக்க தொடங்கி இப்போ ஒரு இரண்டுமாசம் தான் ஆச்சு. ” என்றான் மகன்.

                     ‘இப்போ நான் என்ன செய்யணும்..” என்று மீண்டும் அவர் கேட்க

                     “எனக்கு ராகவியை ரொம்ப பிடிக்கும்ப்பா… நீங்க அவ வீட்ல பேசுங்க. ” என்றான் துருவன்.

                     “உன் அம்மாவை யார் சமாளிக்க.. ஏற்கனவே நாந்தான் உங்களை கெடுத்து வைக்கிறேன் ன்னு திட்டிட்டு இருக்கா.. இதுல நான் உன்கூட வந்தேன்.. மொத்தமா என் கதை முடிஞ்சிடும் மகனே. நீ உன் அம்மாவை சமாளிக்க என்ன வழி ன்னு யோசி.” என்றார் தந்தை.

                      “ப்பா…” என்று மகன் சிறுபிள்ளையாக நிற்க,

                     “ஈவினிங் பொண்ணு பார்க்கிற பங்க்ஷன் நடக்காது. அதற்கு நான் பொறுப்பு. ஆனா, அவங்க வீட்ல பேசுறதெல்லாம் உன் அம்மா சொன்னாதான் செய்வேன்.” என்றார் உறுதியாக.

                         துருவன் தந்தையை அறிந்தவனாக, அதற்குமேல் அவரை வற்புறுத்தவில்லை. அங்கிருந்து கிளம்பியவன் நேராக அன்னையிடம் சென்று நிற்க, தந்தையிடம் கூறியது மொத்தத்தையும் ஒருவரி விடாமல் அன்னையிடமும் கூறி முடித்திருந்தான்.

                         ரேகா மகனை அமைதியாகப் பார்க்க “அம்மா. ஏதாவது பேசுங்கம்மா ப்ளீஸ். உங்களுக்கு விருப்பம் இல்லையா… நீங்க வேற ஏதாவது நினைச்சு இருக்கீங்களா..” என்று அன்னையின் அமைதி தாங்காமல் படபடத்தான் மகன்.

                          அதற்குமேல் என்ன மறுப்பு சொல்வார் ரேகா. அவர் உடனே தன் கணவரிடம் பேச, அடுத்த இரண்டு நாட்களில் ராகவியின் வீட்டிலும் பேசி முடித்துவிட்டனர் அவன் பெற்றோர்.

                    ராகவியின் பெற்றோர் துருவனின் உயரத்தைக் கண்டு பயந்தாலும், ரேகாவின் இயல்பான பேச்சில் ஒப்புக் கொண்டிருந்தனர். எந்த வெளிப்பூச்சும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி கண்ணாடியாக அவர் பிரதிபலிக்க, தங்கள் மகள் வாழ்வு நன்றாகவே இருக்குமென்று நம்பிக்கையுடன் துருவனை ஏற்றுக் கொண்டது அந்தக் குடும்பம்.

                  ராகவியின் தம்பி, தங்கைகள் இன்னும் படித்துக் கொண்டிருக்க, அதை நினைத்து முதலில் தயங்கினாள் அவள். துருவன் அவளை ஒருவழியாக சரிக்கட்டி, இறுதியில் திருமணத்திற்கு பிறகும், தன்னிடமே வேலை பார்க்க அனுமதிப்பதாக வேறு கூறி வைக்க, ஒரு முறைப்புடனே சம்மதித்திருந்தாள்.

                          அடுத்த ஆறு  மாதங்களில் திருமணம் என்று பெரியவர்களால் பேசி முடிக்கப்பட, மீண்டும் திருமணக்களை கட்டிக் கொண்டது.

                    இதில் துருவனின் திருமணத்திற்கு முன்பாகவே, சர்வாவின் பெயரில் பரமேஸ்வரன் வாங்கிப் போட்டிருந்த நிலத்தில் வீடு கட்டும் பணிகளை துவங்கி விடுவது என்று முடிவு செய்ய, அதற்கான வேலைகளும் தொடங்கி இருந்தது.

                     வீட்டின் அமைப்பு, கட்டுமானம் என்று அத்தனையும் சர்வாவே கவனித்துக் கொள்ள, வீட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் கூட, ரேகாவின் விருப்பத்தின் பெயரில்தான். பரமேஸ்வரனின் நிலம், அவர் வீட்டிற்கு அடுத்ததாகவே அமைந்திருக்க, இருவீட்டையும் ஒரே வளாகத்தில் அமைத்துவிடும்படி திட்டம் போட்டிருந்தான் மகன்.

                   ரகுவரன் இன்று அவனோடு வந்துவிட்டார் என்பதற்காக ரேகாவை பிரிந்து இருக்க முடியாது என்று சர்வா தீட்டிய திட்டம் இது. மறுத்துப் பேசிய ரேகாவை கூட, எப்படியோ பேசியே சமாளித்து தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தான் அவன்.

                    முதற்கட்ட வேலைகள் முடிந்துவிட, பூமி பூஜையும் ரேகா -பரமேஸ்வரனை முன்னிறுத்தி அவர்கள் கைகளாலேயே செய்யப்பட்டது. ரகுவரனுக்கும் அதுவே விருப்பமாக இருக்க, சந்தோஷிக்காக வந்து நின்றிருந்த யமுனாவிற்கு தான் பற்றிக் கொண்டு வந்தது.

                   ஏனோ ரேகாவிற்கான முக்கியத்துவம் எப்போதும் அரித்துக் கொண்டே இருக்கிறது அவரை. சிலர் இப்படித்தான். கிடைத்த நல்லவைகளையும், நல்லவர்களையும் தொலைத்து விட்டு, எட்டாத கனவை நினைத்து ஏங்கி கொண்டிருப்பர் எப்போதும்.

                           இவர்களை இவர்கள் போக்கில் கடந்து, நம் வாழ்க்கையை நாமாக வாழ முயற்சிப்பது மட்டுமே உத்தமம். ரேகா அப்படி வாழப் பழகிக் கொண்டதால் தானோ என்னவோ, இன்னுமின்னும் நல்லவைகள் சூழ்ந்து கொண்டே இருக்கிறது அவரை.

                        பெற்ற பிள்ளைகள் போதாமல், இன்னும் இன்னும் தேடலை விரிவுபடுத்தி, எப்படியோ அமைந்திருக்க வேண்டிய இரு குழந்தைகளின் வாழ்வை சீரமைத்து, அவர் வடிவாக்கி கொடுத்திருக்க, இதோ இரண்டுமே ரேகா பரமேஸ்வரனின் பெயர் சொல்லும் பிள்ளைகள் தான்.

                        இவர்களும் போதாமல் அன்புக்கு ஏங்கிய ஒருவனை அவர் அரவணைத்திருக்க, பெற்ற பிள்ளைகளைக் காட்டிலும் அதிக பாசம் கொண்டிருந்தான் அவன் தன் அன்னையின் மீது. நல்லோர் வாழ்வார்கள் என்பதற்கு நடைமுறை சாட்சியமாகவே நின்றார் ரேகா.

                       பூமிபூஜை நல்லபடியாக முடிந்திருக்க, அந்த நேரம் டெல்லியில் இருந்த ஜெய் அடுத்தநாள் மாமியார் வீடு வந்திருந்தான். சர்வா- தீக்ஷிக்கு வாழ்த்து தெரிவித்து அவன்அமர, வழக்கம் போல் அவனை கவனித்தார் ரேகா.

                       அவன் அமைச்சர் பதவியில் இருப்பதால் வேறு ஒரு மகிழ்ச்சியான செய்தியும், செய்தியாவதற்கு முன்பே அவனுக்கு தெரிந்து போயிருக்க, அதில் இன்னமும் குதூகலத்தில் இருந்தான் கணவன்.

                        விஷயத்தை லேசாக அறிவனின் காதில் மட்டும் போட்டு வைத்திருக்க, அன்று இரவு பதினோரு மணி அளவில் முறைப்படி அறிவிப்பு வெளியானது. அந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

                          ஸ்ரீகா நடனம் அமைத்த வரலாற்றுத் திரைப்பட பாடல் தேர்வாகி இருந்தது. சிறந்த நடன இயக்குனராக அரசு அங்கீகரித்திருந்தது அவளை. அதுவே மகிழ்ச்சி என்றால், அதே திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருந்தான் துருவன்.

                          அறிவன் நேரலையில் அறிவிப்பு வெளியாகவுமே, வாசலில் பட்டாசை கொளுத்திவிட, சர்வாவும், தீக்ஷியும் அவனுடன் நின்றனர். அடுத்தடுத்து சரவெடி, வாணவேடிக்கைகள் என்று பதினோரு மணி இரவில் அவன் அதிரவிட, தீக்ஷி அவனுடன் சேர்ந்து சிறுபிள்ளையாக ஆடிக் கொண்டிருந்தாள்.

                            ஜெய் அத்தனைக்கும் அமைதியான பார்வை மட்டுமே. மனைவியை விட்டால் விழுங்கி விடுபவன் போல் அவன் பார்த்திருக்க, ரேகா ஒரு குருவாகவும் பெருமை கொண்ட தருணம். ஆர்த்தி குளிர்சாதனப் பெட்டியில் இருந்த ஐஸ்கிரீம் எடுத்து அனைவருக்கும் கொடுத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ஸ்ரீகா முகம் பூரிப்பில் மின்னிக் கொண்டிருந்தது.

                             அவளது கொண்டாட்டத்தில் அறிவனும் கலந்து கொள்ள, ஆட்டம் பாட்டம் என்று அன்று இரவு முழுவதுமே தூங்கா இரவாகத்தான் கழிந்தது ரேகாவின் குடும்பத்திற்கு. இடையில் சீதா வேறு அழைத்து மருமகளுக்கு வாழ்த்து தெரிவிக்க, மதுவும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

                           அவர்கள் காலையில் வருவதாக சொல்லி வைத்துவிட, ஜெய் அப்போதும் மௌனம் சாதித்தான். அடுத்தடுத்து திரைத்துறை சார்ந்தவர்களின் வாழ்த்துச் செய்திகள்,அழைப்புகள் என்று பிஸியாகவே இருந்தனர் ஸ்ரீகாவும், துருவனும்.

                          அனைத்தும் முடியவே அதிகாலை மூன்று மணியாக, அதன்பின்பே அவர்களை அறைக்கு துரத்தி விட்டார் ரேகா. துருவன் தன் ராகத்துடன் அலைபேசியில் சங்கமிக்க, ஸ்ரீகா தன் கண்ணனை தேடி அறைக்கு வந்திருந்தாள்.

                       ஜெய் அறையில் அவளுக்காக காத்திருக்க, ஸ்ரீகா அவனிடம் கேட்ட முதல் கேள்வி “உங்களுக்கு முன்னாடியே தெரியுமா???” என்பது மட்டுமே.

                        ஜெய் அப்போதும் மௌனமாக தலையசைக்க, “ஏன் பேசமாட்டிங்களா…” என்று அவனை நெருங்கினாள் மனைவி.

                         ஜெய் வாய்க்குள் அடக்கிய புன்னகையுடன் நிற்க, “எனக்கு வாழ்த்து கூட சொல்லல அமைச்சரே..” என்று முறுக்கினாள் மனைவி.

                         ஜெய் அந்த அறையின் டீபாயின் மீது இருந்து ஒரு பரிசுப்பொருளை எடுத்து நீட்ட, அவள் விழிகள் பெரிதாக விரிந்தது. ஆனால், அப்போதும்

                     “முதல் கிப்ட் அமைச்சரே..” என்று அவனை நக்கலடிக்க தயங்கவில்லை அவள்.

                       ஜெய் அதற்கும் சிரித்துக் கொண்டே நிற்க, மெல்ல அந்த பெட்டியை திறந்தாள் அவள். வண்ணக் காகிதங்களை நீக்கவும், அழகாக இரண்டு சாக்லேட்கள் கண்சிமிட்ட, சிரிப்புடன் அவற்றை கையில் எடுத்துக் கொண்டாள் ஸ்ரீகா.

                       அந்த சாக்லேட்டுக்கு அடியில் அடுத்தப் பெட்டி இருக்க, அதன்மீதும் வண்ணக் காகிதம். அதைப் பிரிக்கையில் உள்ளே அழகாக சத்தமெழுப்பியது அவளின் காதல். பிரிப்பதற்கு முன்பே உள்ளே இருப்பது என்னவென தெரிந்து போக, காதல் தந்தவனை கன்னத்தில் முத்தமிட்டு வேகமாகப் பெட்டியை திறந்தாள் மனைவி.

                          அதில் அவளுக்கு பிடித்தமான சலங்கைகள் பொன்னிறத்தில் மின்னிக் கொண்டிருக்க, வழக்கமான சலங்கைகள் போல் அல்லாமல் ஜொலித்துக் கொண்டிருந்தன அவை. மஞ்சள் நிறத்தில் சிணுங்கி கொண்டிருந்த சலங்கைகளை அவள் காதலுடன் வருடிக் கொடுக்க, அதன் வேலைப்பாடும் ஈர்த்தது அவளை.

                         அந்த சலங்கைகள் இருந்த அட்டைப்பெட்டியின் உள்ளும் இன்னும் ஒரு சிறியப்பெட்டி இருக்க, அடுத்து அதையும் திறந்தாள் மனைவி. அதில் ஒரு மெல்லிய கழுத்து சங்கிலி வீற்றிருக்க, அதன் முகப்பாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. அந்த மங்கையின் உடலெங்கும் கற்கள் பதிக்கப்பட்டு இருக்க,அதன் ஒளி ஸ்ரீகாவின் முகத்தில் பட்டு மின்னியது.

                         ஸ்ரீகா ஜெய்யிடம் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. நடனத்தை விட்டுவிட சொன்னவன் தானே. அதோடு இதுவரை அவள் துறையை பற்றி பெரிதாக பேசியதுகூட இல்லையே. அப்படிப்பட்டவன் இப்படி பரிசு கொடுத்தால் அவளும் தான் என்ன செய்வாள் ….

Advertisement