Advertisement

அபி அவன் பேச்சில் கடுப்பாகி,  “டேய் திருடனாடா நீ.. இப்படி நடுராத்திரில வந்து கதவை தட்டிட்டு இருக்க..” என்று பொரிய

“தட்டவே இல்லையே.. நான் வர்றப்போ திறந்துதான் இருந்தது அபி..” என்றான் மீண்டும்.

அபி “என்னடா வேணும் உனக்கு… என் தூக்கத்துல ஏண்டா மண்ணைப் போடற..” என்று புலம்ப

“போய் உன் அம்மாவை கூப்பிடு.. அப்படியே உன் அப்பாவையும் கூப்பிடு.. அப்படியே என் சட்டையை பிடிச்சான்ல அந்த வீரனையும் வரச்சொல்லு… நான் பேசணும்..” என்றான் ஜெய்.

அபி தானும் சோஃபாவில் அமர்ந்து கொண்டவன் “நீ கேட்ட மூணு பேரும் தூங்கப் போயாச்சு. இப்போதைக்கு ஒருத்தனை வேணும்ன்னா, எழுப்பி இழுத்துட்டு வரேன்..” என

“அவனை வச்சு நான் என்ன செய்ய…  காலையில பேசிக்கறேன்.. என் பொண்டாட்டி எங்கேடா..” என்றான் ஜெய் மீண்டும்.

“டேய்.. அவ ரூம்ல தான் இருப்பா.. எழுந்து போடா..” என்று அபி திட்ட

“இதை வந்த உடனே சொல்றதுக்கென்ன… என்று அவனை திட்டிக் கொண்டே எழுந்தவன், மீண்டும் “நீ தனியா இருக்கியே.. நான் உனக்கு கம்பெனி கொடுக்கவா..” என்று இருக்கையிலேயே அமர

“தெய்வமே.. நீ ஒரு ஆணியும்… வேண்டாம்.. போ..”என்று கையெடுத்துக் கும்பிட்டான் அபி.

அவன் படிகளில் ஏற, அவன் கூட்டிய அலப்பறையில் அறிவன் அவன் அறையிலிருந்து வெளியே வந்தான். வந்தவன் ஜெய் படிகளில் ஏறுவதைக் கண்டு அப்படியே நிற்க, தன் நிதான நடையுடன் அவனை நெருங்கினான் ஜெய்.

அவனிடம் “அப்புறம் மச்சான் எப்படி இருக்க.. உன் தங்கச்சி எப்படி இருக்கா..” என்று நக்கலாக ஜெய் விசாரிக்க வேறு செய்ய, அறிவன் உக்கிரமாகிப் போனான் இப்போது.

“என்ன திடிர்னு பொண்டாட்டி, மச்சான் ஞாபகமெல்லாம் வந்திருக்கு மத்திய அமைச்சருக்கு.. அதுதான் அடிச்சு துரத்தி விட்டாச்சே.. அப்புறம் எங்க வந்திங்க..” என்றான் கடுப்புடன்.

“ஹேய் அடிச்சேன்.. துரத்தி எல்லாம் விடல.. நீ இழுத்துட்டு வந்த..” என்று அவனைத் திருத்தியவன் “ஆனாப் பாரேன்.. என் பொண்டாட்டிக்கு என்னைப் பார்க்காம இருக்க முடியலையாம்.. போனை போட்டு ஒரே கதறல் தான்… அதான் நானும் பாவமே ன்னு ஓடி வந்துட்டேன்….” என்றான் ராகமாக

அறிவன் இப்போது நக்கலாக மாமனைப் பார்த்தவன் “எப்படி எப்படி… எப்படி ஓடி வந்திங்க.. பாவமேன்னு…. ஹான்…” என்றான் தானும் ராகமாக

அவன் இழுவையிலேயே ஏதோ வில்லங்கம் என்று புரிந்து ஜெய் சுதாரித்து திரும்ப, அறிவன் நிஜ சகுனியாக நின்றுக் கொண்டிருந்தான் அங்கே.

ஜெய்யை பார்த்து தன் அறைவாசலில் நின்றிருந்த ஸ்ரீகாவிடம், “கேட்டியா ஸ்ரீ.. பாவமேன்னு..” என்று மீண்டும் அவன் ராகமிழுக்க,

“டேய் சகுனி பொய்த்தொலைடா…” என்று அவனை அடிக்கப் பாய்ந்தான் ஜெய்..

அறிவன் சிரிப்புடன் ஸ்ரீகாவிடம் “ஸ்ரீ.. சென்ட்ரல் மினிஸ்டர்.. பார்த்து பதமா பண்ணிவிடு.. என்ன நடந்தாலும், காயம் மட்டும் எதுவும் கண்ணுக்கு தெரியக்கூடாது… பார்த்துக்கோ..” என்று மீண்டும் ஜெய்யை வெறுப்பேற்ற, “டேய்..” என்று ஜெய் அவனை நெருங்க, அதற்குள் அறைக்குள் நுழைந்து கொண்டான் அறிவன்.

ஜெய் இப்போது மனைவியைத் திரும்பி பார்க்க, எதுவும் பேசாமல் அமைதியாக அறைக்குள் நுழையப் போனாள் அவள். ஜெய் நின்ற இடத்தில இருந்தே “பசிக்குது… இன்னும் எதுவும் சாப்பிடல..” என்று தகவலாக கூற, அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை மனைவி.

ஆனால், அறைக்குள் செல்லாமல் அவனைத் தாண்டி அவள் கீழே இறங்க, ஜெய் முகத்தில் ஒரு நிறைவான புன்னகை. அந்த புன்னகையுடனே  அவள் அறைக்குள் நுழைந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கட்டிலில் அமர்ந்து கொள்ள, அவனுக்கான உணவுடன் அறைக்குள் நுழைந்தாள் ஸ்ரீகா.

டீபாயில் அவனுக்கான உணவை வைத்தவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, ஜெய்யும் அவளைத்தான் பார்த்திருந்தான். தான் அழைக்காமல் வரமாட்டான் என்று புரிய, “சீக்கிரம் சாப்பிடுங்க.. தூக்கம் வருது எனக்கு..” என்றாள் விட்டேற்றியாக.

ஆனால், ஜெய்க்கு அதுவே போதுமாக இருக்க, எழுந்து அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் அவன். அவன் தன்னுடைய சோஃபாவில் அமர்வான் என்று எதிர்பாராதவள் எழுந்து கொள்ள பார்க்க, அவள் கையை பிடித்துக் கொண்டவன் “பசிக்குது எனக்கு… சாப்பிட விடு…” என்றான் அப்போதும்.

அவன் வார்த்தைகளில் கொதித்துப் போனவள் “சாப்பிட விடாம என்ன பண்ணேன் நான். உங்க கையை கூட பிடிச்சு வைக்கலையே…” என்றாள் வெடுக்கென. கூடவே அவன் பிடியில் இருந்த தன் கையையும் சட்டென உதறிக் கொண்டாள்.

ஜெய் சட்டென அமைதியாக, இன்னும் உணவிலும் கையை வைக்கவில்லை அவன். ஸ்ரீகாவுக்கே இப்போது எழுந்து செல்ல மனமில்லை. அவனைப் பற்றி அறிந்த வரையில் தான் இங்கிருந்து எழுந்தால், நிச்சயம் உண்ணமாட்டான் என்று தெரிந்ததால், அவளும் அமைதியாக அவன் அருகில் தான் அமர்ந்திருந்தாள்.

அவளின் இந்த செயல் ஜெய்யை சற்றே குளிர்விக்க, அவளை அதற்குமேல் வம்புக்கு இழுக்காமல் அமைதியாக உண்டு முடித்தான் அவன். அவன் உணவை முடிக்கவும், ஸ்ரீகா படுக்கைக்கு செல்ல, அடுத்த சில நிமிடங்களில் அவள் முதுகில் உரசியது அவன் மூச்சுக்காற்று.

அதன் வெம்மை தாங்காதவளாக, அவள் விலக முற்பட, அவள் வயிற்றில் கைகொடுத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டான் கணவன். ஸ்ரீகா முயன்று தன்னை கட்டுக்குள் வைக்க, அவளைக் கட்டிலில் கிடத்தி ஒருபக்கமாக அவள்மீது சரிந்து கொண்டான் ஜெய்.

ஸ்ரீகா அசையாமல் அவன் முகம் பார்க்க, அவளைக் கண்டு கொள்ளாமல் அவள் மூக்கின்மீது முத்தம் வைத்தான் கணவன். ஸ்ரீகா இன்னுமே முறைத்து வைக்க, “உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா ன்னு கேட்கறியா…” என்றான் இப்போது.

அவள் பதில் கூறாமல் பார்த்திருக்க, “கேட்கல ஸ்ரீகுட்டி.. என் காதை உன் வாய்ல வைக்கிறேன்… சத்தமா சொல்லு..” என்று இன்னும் நெருங்கினான்.

ஸ்ரீ பொறுமை இழந்தவளாக அவன் கன்னத்தில் பட்டென்று ஒன்று வைக்க, “அன்னைக்கு அடிச்சதுக்கா, கோபம் போச்சா..” என்றான் மீண்டும்.

ஸ்ரீகா அப்போதும் மௌனம் சாதிக்க, “பேசுடி… ஜிங்கிளி மிங்கிள்ஸ்…”என்று கொஞ்சினான் இப்போது.

ஸ்ரீகா அவனை கண்டுகொள்ளாமல் போக, “எனக்கு வேற ஆப்ஷன் இல்ல… ” என்றவன் இன்னும் அழுத்தமாக அவள்மீது படர, சட்டென தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவனை கீழே தள்ளி விட்டிருந்தாள் மனைவி.

கட்டிலில் அவன் விழுந்து கிடக்க, அவள் எழுந்து கொள்ள முற்படுகையில் அவள் பாதம் பற்றியிருந்தான் கணவன். கூடவே அவளை விடாமல் இழுத்துக் கொள்ள, மீண்டும் அவன் அணைப்பில் இருந்தாள் பெண்.

அவன் கைகள் அவள் மேனியில் எல்லைத்தாண்டி பயணிக்க தொடங்க, அவன் கைகளைத் தட்டி விட்டவள் “எனக்கு தூக்கம் வருது..” என்றாள் தீர்மானமாக.

“தூங்கலாம்… அதற்குதானே வந்திருக்கேன்..” என்று சிரித்தவன் அவளை தன்மீது சாய்த்துக் கொள்ள, எந்த எதிர்வினையும் இல்லை அவளிடம்.

ஜெய் அவள் முகம் பார்க்கும்படி தன் கைகளுக்குள் அவளை சிறையிட்டுக் கொண்டவன் “இன்னும் கோபம் போகலையா..” என்றான் அவள் முகம் நிமிர்த்தி.

“நான் யார் கோபப்பட… எதுக்கு கோபப்படணும்… எனக்கு தெரியலையே…” என்றாள் மனைவி.

“எல்லாமே இந்த மோஹினி தான்… எப்பவும் போல நான் கோபமா இருந்தா, என்னைத் தேடி வருவா ன்னு நினைச்சுட்டேன்.. ஆனா, இந்த முறை தேட வச்சுட்டா…” என்றான் சம்பந்தம் இல்லாமல்.

“நான் எதுவுமே இல்ல உங்களுக்கு. அதனாலதான் எப்போதும் ஈஸியா ஹாண்டில் பண்றிங்க நீங்க… இனி அப்படி இருக்க முடியாது என்னால… நான் உங்க பின்னாடி சுத்துறதா இல்ல… கிளம்பி போங்க.. நீங்க, உங்க அம்மா, உங்க மினிஸ்டர் போஸ்டிங் ன்னு கெத்தா இருங்க… எனக்கு வேண்டாம் நீங்க..” என்றாள் ஊடல் குரலில்.

“ஆனா, எனக்கு என் மோஹினி வேணுமே.. பார்த்த நாள் முதலா என்னை மயக்கிட்டே இருக்க இந்த மோஹினி கொடுக்கிற மயக்கம் வேணுமே எனக்கு.. என்ன பண்ணலாம்..” என்று ஜெய் அவளை மயக்க முற்பட

“ஒன்னும் தேவையில்லை… மோஹினிக்கு நீங்க வேண்டாம்.. கிளம்புங்க போங்க..” என்றாள் முடிவாக

“அப்படியெல்லாம் விட்டுப் போக முடியாது.. நாந்தான் வேணும்ன்னு கட்டிக்கிட்ட இல்ல.. கடைசிவரைக்கும் என்னை வச்சு காப்பாத்துறதும் உன் பொறுப்புதான்…” என்றான் சட்டதிட்டமாக

“ஓ.. கடைசிவரைக்கும் வச்சு காப்பாத்தணுமா…அப்போ ஒன்னு செய்யலாம்.. என்னோட தனிக்குடித்தனம் வந்திடுங்க.. உங்க மினிஸ்டர் போஸ்ட்டையும் ராஜினாமா பண்ணிடுங்க… நான் வாழ்க்கை கொடுக்கிறேன் உங்களுக்கு..” என்றாள்  ஸ்ரீகா.

“தனிகுடித்தனமா..” என்று அவன் அதிர, “அதானே… இவனா..” என்று நக்கலாகப் பார்த்தாள் மனைவி. ஆனால், அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில்

“தனியா தானே.. நாளைக்கே போயிடுவோம் ஸ்ரீகுட்டி.. என் மோஹினிக்கு இல்லாததா… நாம உடனே தனியாப் போறோம்..” என்று வாக்குறுதி கொடுத்தான் அவன்.

வாக்குறுதி கொடுத்த கையோடு, மனைவியை அணைக்க, “வாக்குறுதி எல்லாம் நிறைவேறட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்.. இப்போ எனக்கு தூக்கம் வருது.. தள்ளிப் போங்க..” என்றாள் ஸ்ரீ.

“இதெல்லாம் அநியாயம் ஸ்ரீ… அதுதான் நான் ஓகே சொல்லிட்டேனே..”

“ஆனா, நான் இன்னும் கோபமாத்தான் இருக்கேன். தனியாய் போனாலும், என் கோபம் போகிற வரைக்கும், தள்ளியே இருங்க..” என்று கெத்தாக கூறியவள் படுக்கையின் ஒருபுறம் சாய்ந்து கொண்டாள்.

ஜெய் அதற்குமேல் பொறுக்க முடியாமல், “உன்னை பேச விட்டதே தப்புடி… வந்த உடனே ஆக்ஷன்ல இறங்கி இருக்கணும்..” என்றான் கடுப்பாக

“என்ன பண்ணி இருப்பிங்க… நீங்க செய்றதெல்லாம் செஞ்சுட்டு, கடைசியா வந்து இப்படி கட்டிபிடிச்சுட்டா, நான் உடனே சரியாகிடணுமா…”

“கோவையில என்னை தனியா விட்டுட்டு வந்திங்க இல்ல… அப்போ தோணலையா… சென்னைக்கு போய் யாரை கட்டிக்குவோம் ன்னு.. இல்ல, இத்தனை நாள் என்னைக் கண்டுக்காம இருந்திங்கல, அப்போ தோணலையா..”

“இன்னிக்கு என்ன திடிர்னு.. சாருக்கு என் ஞாபகம் வந்திருக்கு… அன்னிக்கு சொன்னிங்க இல்ல. இதை வச்சு ப்ளாக்மெயில் பண்றியான்னு.. ஆமா.. அப்படித்தான்… நீங்க என் பக்கத்துலேயே வரக்கூடாது.. என் கோபம் போற வரைக்கும் அப்படித்தான்..”

“கிளம்புங்க… உங்க வீட்டுக்கு போங்க…” என்று கத்தியவள் மீண்டும் தன்னிடத்தில் படுத்துக் கொண்டாள். ஜெய்க்கு அவள் பேச்சில் சிரிப்பு வர, மீண்டும் பின்னிருந்து கட்டிக் கொண்டான் அவளை.

இப்போது ஸ்ரீகா, “கொன்னுடுவேன் ராம் உங்களை..” என்று மரியாதையை விட்டு சத்தமிட, “உனக்குதான் கோபம்… எனக்கு இல்லையே… நான் கொடுக்கிறேன் என்னை, எடுத்துக்கோ… நீ உன்னைத் தரவே வேண்டாம்..” என்றான் அவளிடம்.

அவன் பேச்சில், “விடுடா என்னை.. “என்று அவள் சத்தமிட, “இந்த வாய் நிறையப் பேசுதே ஸ்ரீகா..” என்று அவள் இதழ்களை நெருங்கினான் அவன். அதன்பின் அந்த அறையில் சத்தமில்லாமல் போக, ஸ்ரீகாவின் மறுப்புகள் எல்லாம் தன்னை மறந்து எங்கோ ஒளிந்து கொண்டது.

Advertisement