Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 41-2

                மெல்ல மெல்ல தன் இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தது ரேகாவின் இல்லம்.  ரகுவரனின் மருத்துவமனை வாசம், சர்வாவின் அவரசத் திருமணம் என்று அடுத்தடுத்து நடந்து விட்டிருக்க, இப்போது சற்றே இளைப்பாறத் தொடங்கி இருந்தது அந்தக் குடும்பம்.

                 சர்வா- தீக்ஷி பெயருக்கு தனிவீட்டில் இருந்தாலும், நாள் முழுவதும் அவர்களுடன் யாரவது இருக்கும்படி பார்த்துக் கொண்டார் ரேகா. ஸ்ரீகா இப்போது தாய் வீட்டில் இருப்பது வசதியாகிப் போக, தீக்ஷிக்கு மட்டுமல்லாமல், ரகுவரனுக்கும் அவள்தான் பேச்சுத்துணை.

                  இந்த நாட்களில் தீக்ஷி சந்தோஷியிடமும், ரகுவரனிடமும் நல்ல முறையில் உறவை வளர்த்துக் கொள்ள, சர்வாவால் அது முடியவில்லை. ஏனோ அவனால் இயல்பாக ஒன்றை முடியாமல் போக, வேலையைக் காரணம் காட்டிக் கொண்டு பெரும்பாலான நேரங்கள் அலுவலகத்திலேயே கழித்துவிடுவான்.

                 தீக்ஷிக்கும் அவன் நிலை புரிய, அவனை எதற்கும் கட்டாயப்படுத்துவதில்லை அவள். மாறாக, அவன் இருக்கவேண்டிய இடங்களை தான் இட்டு நிரப்பத் தொடங்கி இருந்தாள் அவள். ரகுவரன், சந்தோஷியை கவனிப்பது மட்டுமல்லாமல், ரேகா- பரமேஸ்வரனிடமும் கூட நெருக்கமாகி இருந்தாள் அவள்.

                துருவன், அறிவன், அபிநந்தன் என்று அத்தனைப் பேரும் ஏற்கனவே பழகி இருந்தவர்களாக வேறு இருக்க, அங்கே பொருந்திக் கொள்வது அப்படி ஒன்றும் கடினமாக இல்லை தீக்ஷிக்கு. இது அத்தனைக்கும் மேலாக ஸ்ரீகா.

               தீக்ஷிக்கு அங்கு பழகும்வரை முதல் இருநாட்கள் கூடவே இருந்தவள் அன்று காலை தான் ரேகாவின் வீட்டிற்கு திரும்பி இருந்தாள். அதுவும் தீக்ஷி சமாளித்துக் கொள்வேன் என்று கூறியதால் மட்டுமே. ரேகா அவர் வீட்டில் இருக்கும் வேலைக்காரர்கள் இருவரை இங்கே விட்டு வைத்திருக்க, தீக்ஷிக்கு பெரிதாக வேலைகள் எல்லாம் இருக்காது.

                இதோ இப்போதும் சமையல் வேலை முடிந்திருக்க, ரகுவுக்கு உணவை வைத்துக் கொடுத்தவள் அவருக்கான மாத்திரைகளை கொடுத்துவிட்டு ஹாலில் அமர்ந்திருந்தாள். அந்த நேரம் அவள் அன்னை அழைக்க, உற்சாகமாகவே அழைப்பை ஏற்றாள் புதுப்பெண்.

                சீதா வழக்கமான நலவிசாரிப்புகளை முடித்துக் கொண்டு, வீட்டிற்கு அழைக்க, ரகுவரனை காரணம் காட்டி மறுத்துவிட்டாள் பெண். அதுவே அவருக்கு வருத்தம் தான். ஆனால், ரேகா தன் மகளை  எப்படி கவனித்துக் கொள்கிறார் என்று கண்கூடாக பார்க்கிறாரே… அதற்குமேல் என்ன பேச முடியும்.

                பேச்சு திசைமாற, “உன் அண்ணி எப்படி இருக்கா??” என்று ஸ்ரீகாவிடம் வந்து நின்றார் சீதா.

                “அம்மா.. இதை அவளுக்கே போன் போட்டு கேட்கலாம் இல்ல..”என்று சிரித்தாள் தீக்ஷி.

               “ஏன் கேட்கமாட்டேனா…” என்று சீதா கிளம்ப,

                “நீங்க கேட்கமாட்டீங்க ன்னு நான் சொன்னேனா, கேளுங்க ன்னுதானே சொல்றேன்..” என்று சிரிப்புடன் தீக்ஷி நீட்டி முழக்க

                   “உனக்கு வாய் அதிகமா போச்சு.. எல்லாம் சகவாச தோஷம்.. அவளோட சேர்ந்து அவளை மாதிரியே பேச தொடங்கிட்ட..” என்று சலித்துக் கொண்டார் சீதா.

                   “ம்மா.. நீங்க கேட்டதுக்கு தானே பதில் சொன்னேன்…”என்று மகள் சினுங்க

                  “அதையெல்லாம் விடு.. உன் அண்ணி என்ன சொல்றா.. எப்போ வீட்டுக்கு வருவாளாம்??” என்றார் சீதா…

                  “எனக்கெப்படிம்மா தெரியும்..” என்று தீக்ஷி விழிக்க

                  “உன்கூடவே தானே இருக்கா.. நீ இதையெல்லாம் கேட்கமாட்டியா… என்கிட்டே மட்டும் இத்தனைப் பேசுற…” என்று அதற்கும் அவர் பிடிக்க

                  “அம்மா… நானே பாவம்.. எனக்கு கல்யாணமாகி ரெண்டுநாள் தான் ஆகுது. இதுல நீ இவளோட பஞ்சாயத்தை என்னை கவனிக்க சொல்றியே..” என்று தீக்ஷி புலம்பிய நேரம் அவள் முன் நின்றிருந்தாள் ஸ்ரீகா.

                 காலையில் வீட்டிற்கு சென்றவள் அப்போதுதான் திரும்பியிருக்க, தீக்ஷி அன்னையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். அவள் பேசிக் கொண்டிருக்கவும், ஸ்ரீகா விலக முற்பட, அவள் கையை பிடித்துக் கொண்டு அலைபேசியை ஸ்பீக்கரில் வைத்து விட்டாள் தீக்ஷி.

                   ஸ்ரீகா தீக்ஷியை முறைக்க, அங்கே சீதா “ஏன்.. அவ பஞ்சாயத்தை கவனிச்சா என்ன??? உனக்கு அவ என்னல்லாம் செஞ்சா…. நீ உன் அண்ணனுக்காக இதைக்கூட செய்யமாட்டியா..” என்றார்.

                   “அம்மா.. நான் என்ன செய்ய.. உங்களுக்கு உங்க மருமக வேணும்ன்னா, நீங்க கூப்பிட வேண்டியது தானே..” என்று மகள் எடுத்துக் கொடுக்க

                     “எங்கே விடுறான் உங்க அண்ணன்… மினிஸ்டர்.. மினிஸ்டர்ன்னு சொல்லி வளர்த்ததுக்கு, இப்போ என்கிட்டேயே முறைப்பா நிற்கிறான். அவளைக் கூப்பிட நாங்க யாரும் போகக் கூடாதாம்.. அவனே கூட்டிட்டு வருவானாம்… அவனுக்கா தோணுமாம்….” என்றார் கோபத்துடன்.

                     “அவருக்கு எப்போ தோணும்… அதுவரைக்கும் உங்களுக்கு மருமக வேண்டாமா..”

                    “ஏன் தீக்ஷி நீ வேற.. எனக்கென்னவோ உன் அண்ணன் அவளைக் கூட்டிட்டு தனியாப் போய்டுவானோன்னு தோணிட்டே இருக்கு… அன்னிக்கே சொன்னவன் தானே. உன் கல்யாண விஷயத்தால கொஞ்சம் அமைதியா இருக்கான்.”

                     “அவனே பேசுவான் பாரு. அதனால தான் அவளையும் அங்கேயே விட்டு வச்சிருக்கான். இல்ல, உன் அண்ணனாவது அவளை விட்டு இருக்கிறதாவது… கடைசி காலத்துக்கு நானும், உன் அப்பாவும் தான் தனியா கிடக்கணும் போல.. ” என்று தன் போக்கில் அவர் புலம்பித் தள்ள, ஸ்ரீகாவுக்கே பாவமாக இருந்தது.

                      தீக்ஷி “ம்மா… அண்ணன் அப்படியெல்லாம் உங்களை விட்டு போகமாட்டார். அதைவிட, ஸ்ரீகா

அதோட ஸ்ரீகா, அவளும் அப்படி செய்யமாட்டா.. நீங்க கண்டதை யோசிக்காதீங்கம்மா..” என்றாள்.

            “என்னவோ தீக்ஷி… ஆனா,எனக்கு நம்பிக்கை இல்ல.. பார்க்கலாம்…” என்றதோடு முடித்துக் கொண்டார் அவர்.

                  ஸ்ரீகா இதுவரை அவர்களின் உரையாடலை அமைதியாக கவனித்து வந்தவள்  “உன் அண்ணன் உன் அம்மாவை விட்டு தனிக்குடித்தனம் நடத்தப் போறாராமா… இவங்களும் அதை அப்படியே நம்புறாங்க பாரேன்.. அதுதான் சிரிப்பா வருது எனக்கு..”

                         என்றாள் நக்கலுடன்.

               தீக்ஷி “நீ அன்னைக்கு அண்ணா பேசினதை கேட்கல ஸ்ரீ. உனக்கு புரியாது. அண்ணாக்கு அம்மா முக்கியம்தான். ஆனா, அதே அளவுக்கு நீயும் முக்கியம். எப்பவுமே அம்மாவுக்காக உன்னை அவங்க விட்டுக் கொடுத்ததே இல்ல… அன்னைக்கும் அப்படித்தான் நடந்தது..”

                 “நிறையப் பேசிட்டாங்க… அம்மாவை, என்னை எல்லாரையும்… அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல ன்னு கூடப் பார்க்கல.. அதுதான் அம்மாவை இப்போ இந்தளவுக்கு யோசிக்க வச்சிருக்கு..” என்றாள் அமைதியாக.

                  ஸ்ரீகாவுக்கே இது புதிய தகவல் தானே. அமைதியாக கேட்டுக் கொண்டாள் அவளும். அவளுக்கு என்ன மறுமொழி கொடுப்பது என்று புரியவில்லை. அன்னையிடம் விட்டுக் கொடுக்கவில்லை என்பதற்காக மட்டுமே அவன் செய்தது மொத்தமும் இல்லையென்று ஆகி விடாதே.

                  அடித்தது, கண்டுகொள்ளாமல் விட்டது, பின் கோவையிலும் தனியாக தன்னை விட்டு வந்தது, இங்கு சென்னை வந்த பின்பும் கூட, இதோ இத்தனை நாட்களாக தன்னை தேடாதது என்று ஜெயராம் கிருஷ்ணாவை குற்றவாளியாக்க போதிய காரணங்கள்  இருந்தது ஸ்ரீகாவுக்கு.

                   அதனை சிந்தித்து தானோ என்னவோ, அதற்குமேல் ஜெயராம் கிருஷ்ணாவைப் பற்றி எதுவும் வாயைத் திறக்கவில்லை தீக்ஷியிடம். ஆனால், மனதில் மொத்தமும் அவன் நினைவுகள் தான்.

                    திருமணம் முடிந்து பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட வில்லையே. ஒரே மாதம் தானே முழுதாக முடிந்திருக்கிறது. அவனுக்கு இருக்கும் தேடல், தவிப்பு, ஆசைகள் என்று அனைத்தையும் பட்டியலிட்டாகிற்றே.

                     தனது தவிப்புகளுக்கும், தேடல்களுக்கும் என்ன பதில் சொல்வான் என்று கோபம்தான் அவன்மீது. எப்போதும் போலவே, இந்த முறையும் விட்டுச் சென்றுவிட்டான் என்று அதுவேறு குறை. அதுவும் அறிவினை அனுப்பி அழைத்துக் கொள்ள சொன்னது எல்லாம் ஏற்கவே முடியாது அவளால்.

                     இதோ, நாளை விடுமுறை எல்லாம் முடிந்து அவளின் படப்பிடிப்புக்கு சென்றாக வேண்டும். திருமணத்திற்கென ஒதுக்கி வைத்திருந்த நாட்கள் தான். ஆனால், இப்போது வீட்டிலேயே இருப்பது ஒருவகையில் வெறுத்துவிட, மீண்டும் தனது வழக்கத்திற்கு திரும்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறாள் அவள்.

                    அன்று மாலை வரையிலும் தீக்ஷியோடு இருந்தவள், சந்தோஷி கல்லூரி முடிந்து வரவும், தன் வீட்டை அடைந்தாள். இதுவரை நாளை படப்பிடிப்புக்கு செல்லப் போவதாக வீட்டிலும் யாரிடமும் கூறியிருக்கவில்லை.

               அன்று இரவு உணவின்போது, நாளை படப்பிடிப்புக்கு கிளம்புவதாக அவள் கூற, ரேகா மகளை நிமிர்ந்து பார்த்து பின் அமைதியானார். பரமேஸ்வரன் “ஜெய்கிட்ட சொல்லிட்டியா ஸ்ரீ..” என்று கேட்க

                “சொல்லிக்கலாம்ப்பா… நான் பார்த்துக்கறேன்.” என்றவள் உண்டு முடித்து எழுந்து தன்னறைக்குச் சென்றுவிட்டாள். பரமேஸ்வரனுக்கு மகளின் முகத்தில் இருந்த வருத்தம் புரிந்தாலும், ஜெய்யிடம் என்ன கேட்பது என்று புரியவில்லை.

                  கணவன் மனைவி விவகாரத்தில் எந்த அளவுக்கு தலையிட முடியும் என்று புரியாமல் அவர் குழம்பிக் கொண்டிருக்க, ரேகா ஜெய்ராம் கிருஷ்ணாவின் மீது கடும் கோபத்தில் தான் இருந்தார். அவருக்கு மகளை அடித்த கோபமே இன்னும் மீதமிருந்தது என்றால், இப்படி அவளை கண்டுகொள்ளாமல் இருப்பதில் இன்னும் கோபம் கூடியது.

                  அவர் ஜெயராம் கிருஷ்ணா கையில் சிக்குவானா என்று பார்த்திருக்க, இந்த முறை துருவன் அறிவனை முந்திக் கொண்டிருந்தான்.

                      அன்று இரவு தன்னறைக்கு வந்தவன் ஜெயராம் கிருஷ்ணாவுக்கு அழைத்திருந்தான். எடுத்த எடுப்பில் “ஸ்ரீகாவை ஏன் இங்கே விட்டு வச்சிருக்கீங்க ஜெய்..” என்று அவன் கேட்டும் வைக்க

                        “ஏன் அது அவ வீடும் தானே..” என்று சட்டம் பேசினான் அமைச்சன்.

                        “இது எப்பவும் அவ வீடுதான். அதுல உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். நான் கேட்டது உங்களுக்கு அவ வேண்டாமா ன்னு..” என்று துருவனும் அழுத்தமாக கூற

                          “வேண்டாம்ன்னு நான் எப்போடா சொன்னேன்… “என்றான் ஜெய்.

                          “உங்க நடவடிக்கை எல்லாம் அப்படித்தான் இருக்கு. இதோ நாளைக்கு திரும்ப ஷூட்டிங் போறாளாம்… எப்போ முடியும் தெரியல. உங்ககிட்ட சொன்னாளா இல்லையா ன்னு கூட தெரியல.. என்ன நினைக்கட்டும் நாங்க. அம்மா வருத்தப்படறாங்க ஜெய்.” என்று துருவன் விஷயத்தை முழுமையாக ஜெய்யிடம் கூறிவிட்டான்.

                         ஜெய் சில நிமிடங்கள் யோசித்தவன்  “நான் வரேன் துருவ்.. ” என்றதோடு முடித்துக் கொண்டான்.

                      துருவனும் அவன் அடுத்தநாள் வருவான் என்று நம்பிக்கையுடன் உறங்கச் சென்றுவிட, அர்த்த ராத்திரியில் வந்து நின்றான் அவன். துருவனிடம் பேசிய அடுத்த அரைமணி நேரத்தில் அவன் வீட்டில் இருந்தான்.

                       வீட்டில் உபயோகிக்கும் இலகுவான நைட் பேண்ட், டீ சர்ட்டில் அப்படியே வந்திருக்க, கதவைத் திறந்துவிட்ட காவலாளி அபிக்கு அழைத்து சொல்லி இருந்தான். அபி அடித்துப் பிடித்து வாசலுக்கு வர, அவன் பதட்டத்திற்கு சம்பந்தமே இல்லாதவன் போல் நிதானமாக நடந்து கொண்டான் ஜெய்.

                       ஹால் சோஃபாவில் அமர்ந்து கொண்டவன் “அப்புறம் அபி… என்ன சமையல் வீட்ல.. மருமகன் வந்திருக்கேன்.. எங்கே என் மாமியார்…என்னைப் பார்க்க ரொம்ப ஆவலா இருந்தார்களாம்…” என்றான் சரளமாக

Advertisement