Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 41

                   சர்வா- தீக்ஷியின் திருமணம் முடிந்து நாட்கள் இரண்டாகி இருந்தது. ரகுவரன் எப்போதும் இல்லாதவிதமாக பெரும் பிடிவாதம் பிடித்து சாதித்துக் கொண்டார். ரேகா முதலில் அவரின் கோரிக்கையில் திணறினாலும், அவரின் கண்களில் இருந்த அலைப்புறுதலைக் காணவும் மறுவார்த்தை பேசாமல் தலையசைத்திருந்தார்.

                     முதலில், மதுசூதனனிடம் பேசியவர் அவரை வைத்தே சீதாவிடமும் பேசிவிட, சீதாவுக்கு விருப்பமே இல்லை இந்த அவசர திருமணத்தில். மகள் வாழ்க்கையாகிற்றே. நேற்று முன்தினம் நன்றாக பார்த்த மனிதர் இன்று படுத்துவிட்டிருக்க, அதுவும் அவர் திருமணத்திற்கு இத்தனை அவசரம் காட்டுவது என்று எல்லாம் எல்லாமே தயங்க வைத்து அவரை.

                      அவர் கணவரை சஞ்சலத்துடன் பார்க்க, “நாங்க பேசிட்டு சொல்றோம் ரேகா…”என்று அழைப்பைத் துண்டித்துக் கொண்டார் மது. சீதா தனது பயத்தை அப்படியே மதுவிடம் கடத்த, மதுசூதனன் மகனுக்கு அழைத்துவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவனும் வந்துவிட, இவர்கள் அளவுக்கு எல்லாம் யோசிக்கவில்லை அவன்.

                      “தீக்ஷியை கேளுங்க அப்பா. அவளோட லைப் இது. இப்படி ஒரு கல்யாணம் அவளுக்கு ஓகே வா கேளுங்க.” என்றான் மகன்.

                      “அவ சின்னப்பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்.. “என்று சீதா தொடங்க, மகன் ஒருபார்வையில் அடக்கிவிட்டான் அவரை.

                        ஜெய் தங்கையை அழைத்தவன் அவளிடம் நடந்ததைக் கூற, “எனக்கு சம்மதம்தான்ப்பா… நீங்கப் பேசுங்க.. அவரை இப்படி ஒரு நிலைமையில என்னால விட முடியாது… நாளைக்கே அங்கிளுக்கு ஏதாவது நடந்து விட்டால், ஒருநாள் என்னால நிம்மதியா வாழ முடியுமா…”

                         “நீங்க சரின்னு சொல்லிடுங்கப்பா.. நான் இந்த நேரத்துல சர்வாவோட இருக்கணும் ன்னு நினைக்கிறேன். என்னைப் புரிஞ்சிக்கோங்கப்பா ப்ளீஸ்.” என்றவள் அன்னையிடமும் “இந்த ஒரு முறை என்னோட விருப்பத்துக்கு விடுங்கம்மா. நிச்சயமா இது சரியா வரும்.. எனக்கு என் சர்வா மேல நம்பிக்கை இருக்கு..” என்றாள் தன் நம்பிக்கையை கண்களில் தேக்கி.

                      சீதாவுக்கு அதற்குமேல் என்ன பேசுவது என்று புரியவில்லை. அவர் சஞ்சலத்துடனே அமர்ந்திருக்க, அவர் மக்கள் அன்னைக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டனர். ஜெய் “அம்மா.. அவதான் சொல்றா இல்லையா.. என்ன ஆனாலும், சர்வாவை தான் கட்டி வைக்க போறோம். அது இன்னிக்கே நடந்தா என்ன ஆகிடும். ஒருவேளை அங்கிள் பயப்படுவது போல ஏதாவது நடந்தால் உங்களால நிம்மதியா இருக்க முடியுமாம்மா.” என்றான் நிதானமாக

                    மகனின் குரல் அன்னையை சற்றே தெளிவிக்க, மகள் அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டாள். வார்த்தைகள் இல்லாத ஏக்கம் மிகுந்த தலைசாய்ப்பு. இதற்குமேல் மறுப்பது சரியாகத் தோன்றாததால் சம்மதமாக தலையசைத்து விட்டார் சீதா. அடுத்த மூன்று மணி நேரத்தில் சரோஜினியும் சென்னை வந்துவிட, அவர் வருவதற்கு முன்பே திருமண ஏற்பாடுகள் தயாராக இருந்தது.

                   ரகுவரனை மருத்துவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்காததால், அவர் இருந்த அறையிலேயே பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடந்து முடிந்தது திருமணம். ரேகா- பரமேஸ்வரன், அவர்களின் பிள்ளைகள். சீதா -மதுபாலகிருஷ்ணன், அவர்களுடன் சரோஜினி.. மேலும் மத்திய அமைச்சர் ஜெய்ராம் கிருஷ்ணா. யமுனா அறையில் ஒரு ஓரமாக நின்று நடப்பது எதையும் தடுக்க முடியாமல் வேடிக்கைப் பார்த்தார் என்றால், சந்தோஷி முழு நிறைவுடன் தான் அண்ணனின் திருமணத்தில் பங்கேற்றுக் கொண்டாள்.

                    தந்தையின் முகத்தில் தெரிந்த நிம்மதி ஒன்றே போதுமாக இருந்தது அவளுக்கு. ஆனால், அவரின் இந்த அவசர முடிவுக்கு காரணம் தான் புரியவில்லை. என்ன யோசித்தும் அவளால் எதையும் ஊகிக்க முடியாமல் போக, நேற்று இரவு ஸ்ரீகா பேசியது வேறு உள்ளுக்குள் நித்தமும் சுழற்றிக் கொண்டிருந்தது அவளை.

                      ஆனால், எதையும் முகத்தில் காண்பித்துக் கொள்ளாமல் அவள் இயல்பாக நடமாட, சர்வா- தீக்ஷியின் திருமணம் நல்லமுறையில் அரங்கேறியது. ரகுவரன் ரேகாவை நன்றியுடன் பார்த்து வைக்க, கண்களால் அவரை அதட்டினார் ரேகா. கூடவே சர்வாவை அவரிடம் ஆசி வாங்கிக் கொள்ளுமாறு பணிக்க, இந்த முறை மறுக்காமல் தந்தையை நெருங்கி அவர் பதம் தொட்டு வணங்கினான் மகன்.

                       இல்லாமல் போய்விடுவாரோ என்று பதைத்துப் போயிருந்தவன் அல்லவா… அதற்குமேல் தள்ளி வைக்க முடியவில்லை அந்த மனிதரை. அவன் தன்னிடம் ஆசி வாங்கி கொண்டதே போதுமாக இருந்தது ரகுவரனுக்கு. தீக்ஷியின் குடும்பத்திற்கும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டவர் அறுவை சிகிச்சைக்கும் ஒப்புக் கொண்டார்.

                        அதற்குமேல் நேரம் கடத்தாமல் மருத்துவர்கள் அன்று இரவே அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள, அதுவும் வெற்றிகரமாகவே நடந்து முடிந்திருந்தது. இதோ அடுத்த இரண்டு நாட்கள் மருத்துவமனையில் கழிந்திருக்க, இன்று மூன்றாம் நாள்.

                         இதுவரையும் வீட்டிற்கு கூட செல்லாமல், தந்தையின் அருகில் தான் அமர்ந்திருந்தாள் சந்தோஷி. யார் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. அன்று நிலையிழந்து அவர் விழுந்ததே, கண்களில் இருந்து மறையாமல் இருக்க யாரையும் நம்பி அவரை விட்டுச் செல்வதாக இல்லை மகள்.

                         என்ன நினைத்தாளோ, அவளே யமுனாவிடம் இருந்தும் விலகி நின்றாள் இந்த மூன்று நாட்களாக. அன்று இருந்த மனநிலையில் ஸ்ரீகாவை எதிர்த்துப் பேசி இருந்தாலும், ஸ்ரீகா அப்படியெல்லாம் பழி சொல்பவள் இல்லை என்பதும் புரிந்தது அவளுக்கு. அதோடு தன் அண்ணனின் இந்த அவசரதிருமணம் அதுவும் இடித்தது.

                  அத்தனைக்கும் பதில் தந்தையிடம் மட்டுமே கிடைக்கும் என்பதால், அவரை விட்டு நகரவே இல்லை மகள். அவர் சற்றே நிலை பெறட்டும் என்று காத்திருந்தாள் அவள். அன்று மாலை வேளையில் வந்த மருத்துவர்  அடுத்த நாள் வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கிவிட, மகளை கையில் பிடிக்க முடியவில்லை.

                   தந்தையை கட்டிக் கொண்டு அவள் தன் மகிழ்வை வெளிப்படுத்த, தந்தையின் கண்களில் ஜீவனற்ற பார்வைதான். சந்தோஷி அதிர்ந்தவளாக, “அப்பா.. என்னப்பா.. ஏன் இப்படி இருக்கீங்க..” என்று பதற

                   “அப்பா கண்டிப்பா அந்த வீட்டுக்கு வரமாட்டேன் பாப்பா… என்னால முடியாது.” என்று மேலும் மகளை அதிர வைத்தார் தந்தை.

                    “ஏன்ப்பா… என்னோட வரமாட்டிங்களா.. என்ன நடக்குது நம்ம வீட்ல,, ஏன் வரமாட்டிங்க.. என்கிட்டே சொல்லக்கூடாதா..” என்று மகள் கண்ணீர்விட

                      “நீ அப்பாவோட வரமாட்டியா…” என்றார் தந்தை. குரலில் அத்தனை ஏக்கம்.

                       மகளால் தந்தையின் அந்த ஏக்கத்தை தாங்கவே முடியாமல் போக, “நான் என் அப்பாவோட தான் இருப்பேன்.. என் அப்பாவை என்னால விட முடியாது..” என்றாள் அழுத்தத்துடன்.

                       தந்தைக்கும் அதுவே போதுமாக இருக்க, மகளின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டார் ரகுவரன். “என்ன ஆச்சுப்பா.. என்கிட்டே சொல்லக்கூடாதா..” என்று அப்பாவியாக மகள் கேட்க, அவள் அன்னையைப் பற்றி அவளிடம் குறைவாக சொல்ல, மனம் வரவில்லை ரகுவரனுக்கு.

                       “ஒண்ணுமில்ல பாப்பா.. இத்தனை வருஷம் உன் அண்ணனைப் பிரிஞ்சு இருந்துட்டேன் இல்லையா.. இனி இருக்கப்போற நாட்கள் அவனோட இருக்கனும்ன்னு தோணுதுடா.. அவன் நம்ம வீட்டுக்கு வர்றது உன் அம்மாவுக்கு பிடிக்காது. அதனாலதான் நான் அவன் வீட்டுக்கு போகலாம் ன்னு முடிவு செஞ்சேன். தப்பாடா..” என்று பாவமாக தந்தை கேட்க,

          “சேச்சே.. இல்லப்பா.. நாமப் போகலாம்…”என்று தன்னையும் இணைத்துக் கொண்டாள் அவள்.

            இவர்களின் பேச்சு தொடங்கும்போதே, அறைக்குள் நுழைந்திருந்த சர்வா, அவர்களை இடையிடாமல் வாசலிலேயே நின்று விட்டிருந்தான். சந்தோஷியின் தந்தைப் பாசம் அவன் அறிந்தது தான் என்றாலும், இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை அவன்.

              ரகுவரன் சொல்வது மொத்தமாக உண்மையில்லை என்பதும் புரிய, அப்போதுதான் வருபவன் போல் உள்ளே நுழைந்தான் அவன். சந்தோஷி “வாங்கண்ணா..” என்று அழைத்தவள் “நீங்கப் பேசிட்டு இருங்கப்பா.. நான் கேன்டீன் வரைக்கும் போயிட்டு வரேன்…” என்று எழுந்து கொண்டாள்.

                  சர்வா “என்ன வேணும் சொல்லு.. நான் வாங்கிட்டு வரேன்..” என்றபோதும், “பரவாயில்லைண்ணா.. நானே சும்மா போயிட்டு வரேன்..” என்று நிற்காமல் சொல்லிக் கொண்டே வெளியேறி இருந்தாள்.

                       சர்வா அந்த அறையில் ரகுவரனுடன் தனித்து விடப்பட, சட்டென என்ன பேசுவது என்று தெரியவே இல்லை அவனுக்கு. கிட்டத்தட்ட இருபது ஆண்டு பிரிவு இல்லையா… நேருக்குநேரான சந்திப்புகளில் கூட, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் முகம் சுழித்து நகர்ந்து இருக்கிறானே. இப்போது பட்டென பேசிவிட முடியுமா???

                யோசனையோடு அவன் நிற்க, தந்தை கையசைத்து அருகில் அழைத்தார் அவனை. அவர் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் “சொல்லுங்க.. ஏதாவது வேண்டுமா..” என்றான் இதழ் பிரித்து.

                தந்தைக்கு அதுவே நிம்மதியாக இருக்க, மறுப்பாகத் தலையசைத்து அவன் கையை பிடித்துக் கொண்டார். “எதுவும் கேட்கணுமா என்கிட்டே.. உன் கல்யாணத்தை இப்படி அவசரமா நடத்திட்டேன் ன்னு கோபமா இருக்கியா..” என்றார் ரகுவரன்.

                  “இல்ல.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல…நீங்க கண்டதையும் யோசிக்காதிங்க.. நிம்மதியா இருங்க..” என்றான் ஆறுதலாக உரைத்தான் மகன்.

                   “ஏன் இப்படி பண்ணினேன்னு கேட்கமாட்டியா சர்வா..” என்று அப்போதும் விடாமல் ரகுவரன் அவனை இழுத்துப் பிடிக்க

                     “நீங்க சந்தோஷிக்கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன் நான்.ஆனா, அது மட்டுமே காரணமா இருக்கும்ன்னு நம்ப முடியல…” என்றான் மகன்.

                      ரகுவரன் சிரித்துக் கொண்டார் தனக்குள். “நீ நினைச்சது சரிதான் சர்வா… உன் அப்பன் இப்பவும் கொஞ்சம் சுயநலமா தான் யோசிச்சு இருக்கேன்..” என்றார் ரகுவரன்.

                    சர்வா புரியாமல் அவரைப் பார்க்க, கண்களை மூடிக் கொண்டே நடந்தது மொத்தத்தையும் மகனிடம் கூறி முடித்தார் அவர். மகனின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை காணும் மனோதிடம் இல்லாததால் தான் கண்களை மூடிக் கொண்டதும். ஆனால், சர்வா அவர் நினைத்தது போல், வெறுத்த பார்வை எல்லாம் வீசவே இல்லை.

                     அவனுக்கு தான் யமுனாவின் சுயரூபம் தெரியுமே. அதனால் பெரிதான அதிர்ச்சி இல்லை அவனிடம். என்ன?? இந்த மனிதருக்கு தெரியாமலே இவர் காலம் முடிந்து போயிருக்கலாம் என்று ஒரு எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை அவனால்.

                     தந்தை மொத்தத்தையும் கூறி முடித்த பிறகே கண்திறக்க, “உங்ககிட்ட சொத்து வேணும்ன்னு நான் கேட்டேனா.. எதுக்காக இப்படியெல்லாம் செய்து, உங்க நிம்மதியை கெடுத்துக்கறிங்க… ஒழுங்கா வீட்டுக்கு போங்க.. நான் அவங்ககிட்ட பேசுறேன். எனக்கு எதுவும் வேண்டாம்…ன்னு சொல்றேன்.” என்றான் மகன்.

                    “இல்ல சர்வா.. இதுக்குமேல என்னால அந்த வீட்ல இருக்க முடியாது. யமுனா கேட்டது எதையும் நான் தப்பு ன்னு சொல்லமாட்டேன். ஆனா, இனி அவளோட வாழ முடியாது என்னால.. இந்த விஷயம் தான் எப்பவும் மனசுல இருக்கும். அது ரெண்டு பேருக்குமே நரகம் சர்வா…”

                     “அவளுக்கு அந்த வீடுதான் பெருசாத் தெரியுது… அதை அவளுக்கே கொடுத்திடு.. முடிந்தால் என்னையும், சந்தோஷியையும் உன்னோட கூட்டிட்டுப் போ.. இல்ல, நானும் சந்தோஷியும் நம்ம அப்பார்ட்மென்டுக்கு போயிடுறோம்..” என்றார் முடிவாக.

                      “உங்களுக்கும் அவங்களுக்கும் பிரச்சனை சரி. சந்தோஷியை ஏன் அவங்ககிட்ட இருந்து பிரிக்கணும். அவ அவளோட அம்மாகிட்ட இருக்க நினைக்கலாம் இல்லையா.”

                     “சந்தோஷி என்னை விட்டு இருக்கமாட்டா சர்வா.. அவ நிச்சயமா என்னோடதான் இருக்க நினைப்பா.. ” என்றார் ரகுவரன்.

                      சர்வா அதற்குமேல் எதுவும் பேசாமல் மெல்லத் தலையசைத்துக் கொண்டான். தந்தை சொன்ன எதற்கும் ஒப்புதலும் கொடுக்கவில்லை, மறுப்பும் தெரிவிக்கவில்லை.

                       ஆனால், அன்று இரவே ரேகாவிடம் இதைப்பற்றி அவன் விவாதிக்க, ரேகா சற்றும் யோசிக்காமல் “அப்பாவை உன்னோட வச்சுக்கோ சர்வா… இப்போ தீக்ஷியும் இருக்கா. உன் அப்பாவை நீ பார்த்துக்கோ. அவர் செய்யாம விட்டதை நீ அவருக்கு செய். இது அவரோட இக்கட்டான நேரம் சர்வா, நீ அவருக்கு துணையா நில்லு..” என்றார் அழுத்தம் திருத்தமாக

                 அவரது அறிவுரையின் பேரில், ரேகாவின் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி அமைந்திருந்த ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடி புகுந்தனர் சர்வாவும்,தீக்ஷியும்.. ரகுவரனும், சந்தோஷியும் மருத்துவமனையில் இருந்து நேரே இங்கு வந்துவிட, சந்தோஷி இயல்பாக ஒட்டிக் கொண்டாள் தீக்ஷியிடம்.

                   இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது யமுனா தான். வீடு வீடு என்றவருக்கு வீடு மொத்தமாக கிடைத்து விட்டிருக்க, மகள் உட்பட அனைத்து உறவுகளும் தள்ளிப் போயிருந்தது. மகளாவது தன்னுடன் வருவாள் என்று அவர் எதிர்பார்க்க, “அப்பாவை என்ன சொன்னிங்கம்மா..” என்று அழுத்தம் திருத்தமாக கேட்டவள் அவருடனே சென்று விட்டிருந்தாள்.

                 யமுனாவால் என்றாவது தான் பேசியதை மகளிடம் சொல்ல முடியுமா… சொல்லும் துணிவு வருமா அவருக்கு???…

—-

Advertisement