Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 40

                                 சர்வாவின் திருமண விஷயங்கள் முறையாக பெரியவர்களால் பேசி முடிக்கப்பட, அங்கிருந்து நேரே தன் வீட்டிற்கு புறப்பட்டிருந்தார் ரகுவரன். வீட்டினுள் நுழைந்த நிமிடம் யமுனாவிடம் மகனின் திருமண விஷயத்தை அவர் பகிர்ந்து கொள்ள, யமுனா பெரிதாக மகிழ்ந்து விடவில்லை.

                பெண் யார் என்ன என்று  அவர் விசாரிக்க, “ஜெய்யோட தங்கை தீக்ஷிதா தான் பொண்ணு. நல்ல பொண்ணு தெரியுமா?? இப்போதான் பார்த்திட்டு வர்றோம்..” என்று அவர் விவரிக்க

                “சர்வா உங்க பையன்.. அது நியாபகம் இருக்கா உங்களுக்கு..” என்றார் யமுனா.

               “ஏன் நியாபகமில்லாம என்ன??”

            

               “இல்ல.. உங்க பையனுக்கு அந்த ரேகா பொண்ணு பார்த்து வச்சிருக்கா. அதுவும் கடைசி வரைக்கும், அவங்க கைக்குள்ளே இருக்கும்படி அந்த வீட்டு மாப்பிளையோட தங்கை. ஒரு பேச்சுக்கு கூட, நம்மகிட்ட ஒரு வார்த்தை கேட்கல அவங்க. ஆனா, நீங்க உங்களை கூப்பிட்டதுக்கே பூரிச்சு போயிருக்கிங்க.. எப்படி இப்படி இருக்கீங்க..” என்று யமுனா அவரை ஏற்றிவிட முயற்சிக்க

                  “என்ன செய்ய யமுனா… நான் அவனைப் பெத்ததோட கடமை முடிஞ்சதா நினைச்சு, உன்னை கல்யாணம் பண்ணிட்டேனே.. அதற்குப்பிறகு நான் எங்கே மகன் மீது உரிமை  கொண்டாட முடியும்… அப்படியே உரிமை எடுத்தாலும், நீ விட்டுட்டு வேடிக்கைப் பார்ப்பாயா…” என்று தெளிவாக கேட்டார் ரகுவரன். அவரின் இந்த நேரடிப் பேச்சில் யமுனா திகைத்து நிற்க

                  “ஆடற வயசுல புரியல யமுனா. உன்கிட்ட இருந்து கிடைத்த சுகம் பெருசா தெரிஞ்சுது… ஆனா, இப்போ அடங்குற வயசு இல்லையா.. அத்தனையும் யோசிக்கிற நிதானம் வந்திருக்கே…” என்றார் மீண்டும்.

                  “என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு…உங்க மகனை பார்க்க வேண்டாம் னு நான் உங்களை தடுக்கலையே…” என்று யமுனா கோபம் கொள்ள

                    “என் மகனை நீ வளர்க்கவும் இல்லையே… ரேகா கையில கிடைச்சதால என் மகன் உயிரோட இருக்கான்.. இல்ல, அவன் இன்னிக்கு இல்லாமலே கூட போயிருக்கலாம்..” என்றார் ரகு.

                    “நீங்க என்ன சொல்ல வர்றிங்க.. ஒரு பச்சைக் குழந்தையை கொல்ற அளவுக்கு கேவலமானவளா நான்…”

                   “அதே பச்சைக் குழந்தைக்கு சூடு வைத்தவள் நீ.. அதையும் மறுக்க முடியாது…எதுக்கு தேவையில்லாத பேச்செல்லாம்… என் மகன் கல்யாணம் முடிவாகி இருக்கு.. அவனுக்கு அம்மாவா வர வேண்டாம். உனக்கு விருப்பம் இருந்தா எனக்கு மனைவியா வந்து நில்லு.. முடியாது ன்னு சொன்னாலும் ஒண்ணுமில்ல….”

                     “நீயோ நானோ இல்லாமலே கூட ரேகாவும், பரமேஸ்வரனும் என் பிள்ளைக்கு அருமையா கல்யாணம் செய்து வைப்பாங்க…” என்றார் பெருமிதமாக

                    “இந்த வீட்ல ஒரு பொண்ணு இருக்கா.. அவளையும் உங்களுக்கு தான் பெத்தேன் நான்.. அவ வாழ்க்கையைப் பற்றி ஏதாவது அக்கறை இருக்கா உங்களுக்கு…”

                    “சந்தோஷி எனக்கு பிறந்தவ தான்.. எனக்கு அதுல இதுவரைக்கும் எந்த சந்தேகமும் இல்ல. வீணா, உன் பேச்சால சந்தேகம் வர வச்சுடாத…” என்று அழுத்திக் கூறியவர்

                      “உன் வயித்துல பிறந்து இருந்தாலும், அவ என்னோட மகள் தான்… ஞாபகமிருக்கட்டும்… அவ மனசை கெடுக்க நினைச்ச… ” என்று ஒற்றை விரல் நீட்டி மனைவியை மிரட்டினார் ரகுவரன்.

                       “அவ எனக்கும் மகள்தான்… என்ன அவ மேலே பாசம் காட்டுறது மாதிரி காட்டிட்டு, அவளை ஒன்னுமில்லாம நடுத்தெருவில் நிறுத்த முடிவு பண்ணிட்டிங்களா… இல்ல, எவனாவது ஒரு அன்னக்காவடியை பார்த்து அவளை தொலைச்சு தலை முழுக்க நினைக்கிறீங்களா…” என்று யமுனா சத்தமிட

                  “இந்த தெருவுல விடறது, தொலைச்சு தலை முழுகுறது எல்லாம் உன்னோட பழக்கம் யமுனா. அதுசரி.. உன் தகுதிக்கு தானே நீ யோசிப்ப…”என்றவர் “சந்தோஷி வாழ்க்கையைப் பற்றி நீ எந்த கவலையும் பட வேண்டாம். அவளுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையை அமைத்து கொடுக்கணும் ன்னு எனக்கு தெரியும்..” என்றவர் அதற்கு மேல் யமுனாவிடம் பேச விருப்பமற்றவராக தனது அறைக்கு சென்றுவிட்டார்.

                    அன்றைய தினமே, ஸ்ரீகாவை அழைத்து பேசியவர் அடுத்தநாள் ஸ்ரீகாவுடனே தன் வழக்கறிஞரை சந்தித்தார். ஸ்ரீகாவும் அன்னை வீட்டில் இருப்பதால், அவர் அழைக்கவும் கிளம்பி வந்துவிட்டாள். ரேகாவும், ஆர்த்தியும் விசாரித்த போது கூட, “ரகு அங்கிளோட வெளியேப் போறேன். இன்னிக்கு ஷாப்பிங், அவுட்டிங், லஞ்ச் எல்லாமே ரகு அங்கிள் பார்த்துப்பாங்க.. பாய்..” என்று ஸ்டைலாக சொல்லி சென்றிருந்தாள்.

                ஆர்த்தி கூட,”எனக்கு புரியவே இல்ல அத்தை. இந்த ரகு மாமா.. சர்வாகிட்ட  பேசவே இல்லை. அவங்க ரெண்டு பேரும் ஒன்றாக இருந்து கூட நான் பார்த்தது இல்ல. ஆனா, இவ அவரோட இப்படி ஒட்டிக்கிறா… அப்படியென்ன சர்வாவை விட இவமேல பாசம் அவர்க்கு..” என்று வியந்த குரலில் கூற

                “என்ன சொல்ல.. அவர் மகன் மேல காட்ட முடியாத அன்பை ஸ்ரீ மேல காட்டிட்டு இருக்காரு அவர். அவரே நினைச்சாலும் கூட சர்வா அவரை நெருங்கமாட்டான்… சர்வாவைக் கொண்டு மற்ற பிள்ளைகளும் அவர்கிட்ட பேச மாட்டாங்க. இவ ஒருத்தி தான் சின்ன வயசுல கூட ரகு அங்கிள்ன்னு அவர் பின்னாடி சுற்றுவா..”

                “அவரும் இவளை வீட்டுக்கு எல்லாம் அழைச்சுட்டு போவார்.. யமுனாவை நினைச்சு யோசனையா இருந்தாலும், இந்த ராங்கி அப்படி ஒன்னும் சர்வா  பயப்படவெல்லாம் மாட்டா.. அதனால நானும் பெருசா கண்டிச்சது இல்ல…” என்று கூறி முடித்தார் ரேகா.

                 ஸ்ரீகாவை ரகுவரன் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அழைத்து வரவும், “இங்க எதுக்கு அங்கிள் வந்திருக்கோம்…யாரையாவது பார்த்துட்டு வருவீங்களா… நான் வெய்ட் பண்ணனுமா..” என்று ஸ்ரீகா கேட்க

                  “இல்ல ஸ்ரீகுட்டி… அங்கிளுக்கு ஒரு வேலை இருக்கு இங்கே.. நீயும் வா..” என்று அவளையும் அழைத்துக் கொண்டே சென்றார் ரகுவரன்.

                   அங்கே வழக்கறிஞரிடம் கேட்டு அவர் தயாரிக்க சொல்லி இருந்த உயில் பத்திரங்களை வாங்கிக் கொண்டவர் தான் ஒருமுறை படித்து, ஸ்ரீகாவிடம் நீட்ட அவளும் படித்துப் பார்த்தாள். எல்லாம் சரியாகவே பிரிக்கப்பட்டு இருந்தது. தொழில், இப்போது இருக்கும் வீடு இரண்டும் சர்வனுக்கும், அவர் மனைவியின் நகைகள், மற்றொரு வீடு, இன்னும் சில அசையா சொத்துகள் சந்தோஷிக்கும் என எழுதி இருந்தது.

                    ஸ்ரீகா புரியாதவளாக, “இப்போ இதற்கு என்ன அவசியம் அங்கிள்… “என்று கேள்வி எழுப்ப

                     “எல்லாமே அவசியம் தான் ஸ்ரீகுட்டி.” என்று அவள் கன்னம் தட்டியவர் அவர் கையெழுத்திட்டு, முறையாக அதைப் பதிந்து விடும்படி வழக்கறிஞரிடமும் அறிவுறுத்தி வெளியே வந்தார். ஸ்ரீகா “என்ன நடந்தது அங்கிள்.. ஏன் இப்படி பண்றிங்க..” என்று ரகுவை நச்சரிக்க

                   “உன் ஆன்ட்டிக்கு பயம் வந்துடுச்சு ஸ்ரீகா. பிள்ளையை மட்டும் பார்த்திட்டு மகளை விட்டுடுவேனோ ன்னு பயம் அவளுக்கு. அதனால என்னென்னவோ பேசறா… இப்போ இதை கையில் கொடுத்தால், அவளும் நிம்மதியா இருப்பா இல்லையா….” என்றார் வழி கண்டவராக

                  ஆனால், ஸ்ரீகாவுக்கு அப்படித் தோன்றவில்லை போலும். என்னவோ மனதை உறுத்தியது அவளுக்கு. சில நேரங்களில் ஏதோ தவறு நடக்கவிருப்பதாக உள்ளுணர்வு அடித்துக் கொள்ளுமே அப்படித்தான் இருந்தாள் அவள். ஸ்ரீகாவை வீட்டில் விட்டு ரகுவரன் கிளம்ப, “வீட்டுக்கு வாங்களேன்… ஏன் இப்படி வாசலோட போகணும்..” என்று எப்போதும் போல் அவள் அழைக்க

                   “உன் பிரெண்ட் வந்திருப்பான்.. என்னைப் பார்த்தால் சங்கடப்படுவான்.. எதுக்கு.. நாம நாளைக்கு பார்ப்போமடா… வேணா, நீ அங்கிளோட வா..” என்று அழைத்தார் அவர்.

                   “வேண்டாம்.. வேண்டாம்.. நீங்க போங்க… உங்க பொண்டாட்டிக்கு பிபி ஏத்துற ஐடியா இல்ல எனக்கு…” என்று அவள் சிரிக்க, அதே சிரித்த முகத்துடன் தான் கிளம்பினார் ரகுவரன்.

              அதே புன்னகை அவர் வீட்டிற்குள் நுழைந்த பின்பும் அவர் முகத்தில் இருக்க, மனைவி மட்டுமே இருந்தார் வீட்டில். சந்தோஷி இரண்டு நாட்களுக்கு முன்பே கல்லுரி தோழிகளுடன் சுற்றுலாவுக்கு சென்று இருக்க, அன்று இரவு தான் வருவதாக இருந்தது.

               ரகுவரன் மனைவியை அழைத்து, அவராகவே உயில் பற்றிய விவரங்களை நிதானமாக கூறி முடிக்க, அவர் சொத்துக்களை பிரித்து இருந்த விதம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை யமுனாவுக்கு. ரகுவரனின் தாய் வழி சொத்துகள் அத்தனைக்கும் அவன் ஒருவன் தான் வாரிசு என்று ஏற்கனவே அவன் தாய்வழி தாத்தா எழுதி வைத்து இறந்து போயிருக்க, அவன் அன்னை இறப்பிற்கு முன்பே அத்தனையும் சர்வாவுக்கு தான் என்று பதியப்பட்டிருந்தது.

               அதுவே இந்த சொத்துக்களைப் போல இருமடங்கு இருக்கும். அப்படி இருக்கையில் அதையும் அவனுக்கு கொடுத்து, இப்போது ரகுவின் சொத்துக்களில் பாதியை அவனுக்கு கொடுக்க வேண்டுமா என்று கொதித்துப் போனார் யமுனா.

                அதை அப்படியே அவர் கணவரிடம் கேட்டு வைக்க, “என்ன செய்ய யமுனா.. சந்தோஷி எனக்கு தானே பிறந்திருக்கா.. நீ ஜானகி அப்பாவுக்கு பிறக்கலையே…” என்றார் அழுத்தமாக

                யமுனா “என்ன சொன்னிங்க..” என்று ஆத்திரம் கொள்ள

                “தப்பா எதையும் சொல்லலையே. ஆனால், ஒரு விஷயம் அவர் உயிரோட இருந்திருந்தால், நீ என் வாழ்க்கைகுள்ளே நுழைந்திருக்கவே முடியாது. “என்றார் குரலில் கடினத்துடன்.

                  “என்ன காலம் கடந்து ரொம்ப வருத்தப்படறீங்க போல..” என்று யமுனா குத்தலாக கேட்க

                   “என்ன செய்ய.. கண்கெட்ட பிறகு தானே சூர்யநமஸ்காரம் செய்ய தோணுது…” என்று தானும் அவ்விதமே பதில் கொடுத்தார் ரகுவரன்.

                “நீங்க என்னவோ செய்துட்டு போங்க. ஆனால், இந்த வீட்டை யாருக்கும் என்னால விட்டு கொடுக்க முடியாது. ஒன்னு தொழிலை இரண்டா பிரிச்சு என் மகளுக்கு ஒரு பங்கை எழுதி கொடுங்க. இல்ல, வீட்டை என் பெயருக்கு மாற்றி கொடுங்க..” என்று முடிவாக யமுனா நிற்க

                 “நீயென்ன என்னை அதிகாரம் செய்வது.. நான் முடிவு செய்யுறது தான். நான் என்ன எழுதி இருக்கேனோ, அதுதான் முடிவு. இதுல நீ வாயேத் திறக்கக்கூடாது…” என்று தீர்மானமாக உரைத்து ரகுவரன் எழுந்து கொள்ள, அவரின் சட்டையை பிடித்து இருந்தார் யமுனா..

Advertisement