Advertisement

                 அந்த ரகுவரன் என்பவர் மீது கோபம் பெருக, அதற்குமேல் அவரை பற்றி சிந்திக்காமல் “வாங்க எல்லாரும் சாப்பிடலாம்..” என்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தவர், நால்வருக்கும் உடலை கழுவி உடையை மாற்றி அழைத்து வர, அபி குளித்து கீழிறங்கி இருந்தான்.

                  பிள்ளைகளுக்கும், கணவருக்கும் உணவை பரிமாறியவர் அருகில் நின்று கவனிக்க, சர்வாவுக்கு இதெல்லாம் புதியதாக இருந்தது. வேலைக்காரர்களிடமே உணவை உண்டு பழகி விட்டிருந்தானே அவன்.

                   அவனின் அன்னை அவனுக்கு இரண்டு வயது இருக்கும்போதே இறந்து போயிருக்க, அடுத்த வருடமே புது மாப்பிளை ஆகி இருந்தார் அவன் தந்தை. சித்தியாக வந்தவள் தான் கண்டு கொள்ளாமல் விட்டதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும், ஆனால், அவள்  ரகுவரனையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டிருந்தாள். புது மனைவியின் மீதான பித்தத்தில் முழுதாக மூழ்கி போயிருந்த ரகுவரனுக்கு பிள்ளையை கவனிக்க நேரம் இல்லாமல் போனது தான் கொடுமை.

                           இரண்டு வயது முதலே வேலைக்காரர்களின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவன் அவன். நேரத்திற்கு உணவு கொடுப்பது, உடை மாற்றி விடுவது, காய்ச்சல், வயிற்றுவலி என்றால் மருந்து கொடுப்பது என்று வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களின் அருகாமையில், பாசத்தின் சுவடு கூட தெரியாமல் வளர்ந்தவன் அவன்.

                    அவன் தந்தையும், சித்தியும் ஹாலில் இருக்கும்போதோ, இல்லை உணவருந்தும்போதோ அறையை விட்டு வெளியே வருவதற்கு கூட அனுமதி இல்லை அவனுக்கு. அவன் சித்தி படு விவரமாக இருக்க, வேலையாட்களும் சுலபமாக அவள் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தனர்.

                     அவள் சொல்வதே அவள் வீட்டில் வேதமாக இருக்க, அத்தனையும் அந்த ஐந்து வயது சிறுவனுக்கு எதிராக திரும்பிக் கொண்டிருந்தது. எப்போதும் நான்கு சுவர்களுக்கு இடையே அடைபட்டே பழகி இருந்தவன் வெளி உலகை பார்க்க தொடங்கியதே பள்ளியில் சேர்ந்த பிறகு தான்.

                      வீட்டை விட்டு வெளியே சென்று வரும் ஒரே காரணத்திற்காகவே பள்ளி செல்லும் நேரம் அத்தனை பிடிக்கும் சர்வாவிற்கு. ஆனால், பள்ளியில் இருந்து வரும் நேரம் அவன் முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பும் அவன் சித்தி யமுனாவிற்கு பிடிக்காமல் போக, சமீப காலங்களில் நேரடியாகவே அவனை தாக்க தொடங்கி இருந்தாள் அவள்.

                      அவன் கண்ணில் படும் நேரங்களில் அந்த பிஞ்சுக் குழந்தையின் மனதில் தைப்பது போல் எதையாவது பேசுவது, அவன் முன்னரே அவன் தந்தையிடம் தன் உரிமையை நிலைநிறுத்துவது என்று அவள் செயல்கள் சமீபமாக எல்லை மீற தொடங்கி இருந்தது.

                    யமுனாவின் செயல்களால் வீட்டில் அறைக்குள்ளே முடங்கி இருப்பவன் பள்ளியில் அப்படியே நேர்மாறாக குறும்புக்காரனாக மாறத் தொடங்கி இருந்தான். அதன் வெளிப்பாடு தான் அவன் ஸ்ரீகாவை சீண்டியது.

                     இதோ இப்போதும் ரேகா அவன் தட்டில் எதையோ வைக்க, அது கையில் லேசாக சிந்தவும் தான், தட்டை கவனித்தான் சர்வா. ரேகா அவன் தட்டில் அன்று சமைத்திருந்த சிக்கனை வைத்திருக்க, சர்வாவுக்கு அப்போது தான் நீண்ட நாட்களாக தான் சிக்கன் சாப்பிடவே இல்லை என்பது ஞாபகம் வந்தது.

                     வீட்டில் அவன் பயந்து ஒளிந்து கொள்ள ஏகப்பட்ட விஷயங்கள் இருக்க, உணவில் எல்லாம் கவனம் கிடையாது. தட்டில் போட்டுக் கொடுப்பதை உண்டு முடிப்பதோடு சரி. அந்த உணவு தனக்கு போதுமா?? இல்லை இன்னும் பசிக்கிறதா என்றெல்லாம் யோசித்ததே இல்லை அவன். அதைவிட கொடுமை யாரும் கேட்டதும் இல்லை.

                  இப்போது ரேகா பரிமாறவும், ஆசையாக ஒரு வாய் எடுத்து உண்டவனுக்கு அதன் சுவை பிடித்துப் போக, மீண்டும் கேட்கலாமா என்று அவன் நினைக்கும்போதே அவன் தட்டை மீண்டும் நிறைத்தார் ரேகா. அன்னையாக நான்கு பிள்ளைகளை வளர்ப்பவருக்கு அவன் முகத்தில் இருந்தே அவன் பிடித்தம் புரிந்து போனது.

                   பரமேஸ்வரன் வாயிலாக அந்த ரகுவரனின் விஷயமும் ஓரளவு தெரியும் அவருக்கு. ஆனால், அடுத்த வீட்டு விஷயத்தில் தாங்கள் தலையிட முடியாதே… இன்று சர்வா வீட்டிற்கு வரவும் தன் பிள்ளையை போல் அவனையும் கவனித்துக் கொண்டார் அந்த நல்ல மனம் படைத்த பெண். அவரால் முடிந்தது அதுமட்டும் தான் அல்லவா.

                    ஆனால், அப்படி ஒருநாளோடு முடித்துக் கொள்ள சர்வா விரும்பவில்லை. அன்று மாலை கவிந்து இரவு ஏறும் நேரத்தில் தான் பரமேஸ்வரனோடு கிளம்பினான் அவன். பரமேஸ்வரன் அவன் தந்தையிடம் பேசி அவனை விட்டு வர, என்னதான் அக்கறையற்றவராக இருந்தாலும் கண்முன் நெற்றி காயத்தோடு மகன் நிற்கவும், லேசாக மனம் துடித்தது ரகுவரனுக்கு.

                     மகனிடம் “வலிக்குதா சர்வா.. டாக்டர்கிட்ட போவோமா..” என்று அவர் கேட்கும் போதே, அவனுக்கு பின்னால் வந்து நின்றாள் யமுனா.

                    “என்னங்க.. அதுதான் ஏற்கனவே கட்டெல்லாம் போட்டு இருக்கே. உங்க பிரெண்ட் கவனிக்காமலா கொண்டு வந்து விட்டு இருப்பாரு… பிள்ளை வாடிப் போய் வந்திருக்கான்.. தூங்கட்டும் முதல்ல..” என்றவர் வேலைக்காரியை அழைத்து அவளுடன் சர்வாவை அனுப்பி வைத்தாள்.

                      அவன் அந்தப்பக்கம் அறைக்கு செல்லவும், இருந்த இடம் மறந்து கணவனுக்கு நெருக்கமாக அமர்ந்தவள் அவனோடு இழைந்து கொண்டே, “என்ன இன்னிக்கு ரொம்ப சோர்வா இருக்கீங்க.. வேலை அதிகமா..” என்று அவர் கையை எடுத்து தன் தோளில் போட்டுக் கொள்ள, மற்றவை உண்மையில் மறந்து போனது ரகுவரனுக்கு.

                      இருபத்தைந்து வயதில் முதல் திருமணம் முடிந்திருக்க, இதோ முப்பது வயதில் இரண்டாம் திருமணம். அவரின் இளமைக்கு அப்போதைக்கு ஒரு பெண் தேவையாக இருக்க, அவர் மீது தானாகவே வந்து விழும் இந்த இளம் மனைவியை விட மகன் பெரிதாக தெரியவில்லை அவருக்கு.

                     அவர்கள் அதோடு சர்வாவை மறந்து போக, அடுத்தநாள் பள்ளிக்கு சென்றதுமே துருவனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான் சர்வா.  துருவன் அவனைப் பார்த்து புன்னகைக்க, சர்வா தானும் சிரித்தவன் அவனோடு இயல்பாக பொருந்திக் கொண்டான். அன்றுமாலை வரையிலும் இது தொடர, மாலை பள்ளி விடும் நேரத்தில் பிள்ளைகளை அழைத்து செல்ல இன்று ரேகா வந்திருந்தார்.

                     காரில் தான் என்றாலும் எப்போதுமே ஓட்டுனரை மட்டும் அனுப்பி வைக்கமாட்டார் ரேகா. தினமும் தானே வருவார். பரமேஸ்வரன் வீட்டில் இருந்தால், அவரை அனுப்பி வைப்பர். இன்று அவர் வந்த நேரம் ஸ்ரீகா, துருவன், அறிவன், அபியோடு சர்வாவும் நின்றிருக்க, ஆவணி எப்படி விட்டுச் செல்ல முடியும் அவரால்.

                  வீட்டிலிருந்து எப்போது வருவார்கள் என்று அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நேரத்தை கழிக்க, ம்ஹும்.. அரைமணி நேரத்திற்கு மேல் ஆகியும் அதுவரை அவன் வீட்டிலிருந்து யாரும் வந்திருக்கவில்லை. ரேகா முடிவு எடுத்தவராக, அலுவலக அறைக்கு சென்றவர் அங்கிருந்த தொலைபேசியில் கணவருக்கு அழைத்து விஷயத்தைக் கூறினார்.

                        சர்வாவை தான் அழைத்து செல்வதாக கூறியவர், இனி தினமுமே தானே அழைத்து வந்து விடுவதாகவும் அவர் நண்பரிடம் தெரிவிக்க சொல்ல, பரமேஸ்வரன் தயங்கினார். “ரேகாம்மா.. அது எப்படிடா சொல்ல முடியும்… அவனோட பிள்ளைடா.. அவன் ஏதாவது சொல்லிட்டா, நமக்குத்தானே சங்கடம்..” என்று நிதர்சனத்தை உரைக்க

                    “ஏதாவது பண்ணுங்கப்பா.. அவன் என்னவோ சரியே இல்ல.. நான் இப்போ அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்..” என்றவர் போனை அதன் இடத்தில பொருத்திவிட்டு பிள்ளைகளை அழைத்து வந்துவிட்டார். வீட்டிற்கு வந்து பிள்ளைகளை கவனித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாலும், மனம் சர்வாவையே சுற்றி வந்தது.

                           குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த அவன் முகத்தில் அத்தனை சிரிப்பு. ஆனால், இதே பள்ளியில் இருந்து கிளம்பும் நேரம் அவன் முகத்தில் இருந்த தவிப்பும், பயமும், ஏக்கமும்.. இந்த சிறு வயதில் எப்படி இத்தனை அச்சம் ஒரு பிள்ளையிடம் தென்பட முடியும்.

                         பொதுவாக இந்த வயதில் தான் பிள்ளைகளுக்கு கவலை என்றால் என்னவென்றே தெரியாது என்பார்கள். குழந்தைத்தனமும், குறும்புத்தனமும் நிறைந்த நான்கு பிள்ளைகளை நித்தமும் அவர் பார்க்கவில்லையா. அப்படி இருக்கையில் சிறுவன் என்ற வரையறைக்குள் வராமல் முகம் முழுவதும் இறுக்கமும், கண்களில் இத்தனை கவலையும் சுமந்து கொண்டு ஒரு ஐந்து வயது சிறுவன் எப்படி இருக்க முடியும் என்ற எண்ணமே அரித்தெடுத்துக் கொண்டிருந்தது ரேகாவை.

                   அவன் அங்கு இருக்கும்வரை அவனை அன்பாக கவனித்துக் கொண்டவர் இரவில் தன் சந்தேகங்களை கணவரிடம் தெரிவிக்க, ரேகாவின் மண்டையை பிடித்து ஆட்டினார் பரமேஸ்வரன். கூடவே

                     “உனக்கு இன்னும் இந்த குழந்தைகள் ஆசை போகலையா ரேகா.. அதான் நாலு பேர் இருக்காங்களே…இன்னும் வேணும் என்றாலும், நாமே பெத்துக்கலாம்டா.. நான் முழுசா உனக்கு ஒத்துழைக்கிறேன்..” என்றவர் மனைவியின் தோளில் கையைப் போட,

                    “ஹால்ல இருக்கோம் அபிப்பா… பசங்க யாராவது எழுந்து வர போறாங்க…” என்று விலகி அமர்ந்தார் ரேகா. இன்னும்

                      “நாலுப்பிள்ளைகளுக்கு அப்பா.. ஆனா, கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது உங்களுக்கு.. இந்த வயசுல பிள்ளை பெத்துக்கணுமாம்.. ஏன்ப்பா இப்படி பண்றிங்க.. ” என்று சலித்து கொண்டார் ரேகா

                     “பின்ன, நீ அடுத்த வீட்டு பிள்ளையை பத்தி இத்தனை அக்கறையாய் விசாரிச்சா, நான் வேற என்ன சொல்லட்டும் ரேகா..” என்று அவர் சிரிக்க

                        “அடுத்த வீட்டு பிள்ளையா இருந்தா என்னப்பா.. அவனும் குழந்தை தானே. இந்த வயசுல இப்படி பயந்து, ஏங்கி எப்படி ஒரு குழந்தை இருக்க முடியும்.” என்று அவர் புலம்ப

                         “பெத்தவன் கவனிக்காம போனா, பிள்ளைகள் எப்படி நல்லா இருக்கும் ரேகா..” என்றவர் சர்வாவின் இப்போதைய நிலையை பற்றி முழுவதுமாக தன் மனைவியிடம் கூற, அவர் கூறும்போதே அழுது விட்டார் ரேகா.

                       பரமேஸ்வரன் அவரை தோளில் தட்டிக் கொடுக்க, “பாவம்ப்பா அவன்.. எப்படி இப்படி இருக்க முடியுது இவங்களால..” என்று கண்களை துடைக்க

                    “இருக்காங்களே..”

                    “ஏதாவது பண்ணணும்ப்பா.. அவனை அப்படியே விட முடியாது…”

                    “அவன் துருவனும், அறிவனும் இல்ல ரேகா.. பணக்கார வீட்டுப் பிள்ள. ரகுவோட அத்தனை சொத்துக்கும் வாரிசு அவன். அவனை நாம கவனிக்கிறதே கூட, பணத்துக்காக ன்னு சொல்ல வாய்ப்பிருக்குடா.. அதுவும் அந்த ரகுவோட பொண்டாட்டி.. அவ என்ன வேணாலும் செய்வா..” என்று பரமேஸ்வரன் நிதர்சனத்தை எடுத்துரைக்க

                      ரேகாவால் அப்படி விட முடியவில்லை. தன்னால் முடிந்ததை செய்வோம் என்று நினைத்தவர், மாலை மட்டும் இல்லாது மதிய நேரங்களிலும் தானே பள்ளிக்கு சென்றுவர தொடங்கினார். மதிய உணவும் சுவையோடு ஆரோக்கியமும் நிறைந்ததாக எடுத்து செல்பவர் தன் பிள்ளைகளுக்கு ஊட்டுவதைப் போலவே சர்வாவிற்கும் ஊட்டி முடித்து கிளம்புவார்.

                      மாலை வேளைகளிலும் தன் பிள்ளைகளை அழைத்து வரும்போது தயங்காமல் சர்வாவை உடன் அழைத்து வந்து விடுவார். எப்படியோ அவன் இல்லாமல் இருந்தாலே போதும் என்று நினைத்தாளோ என்னவோ யமுனா இதை ஆரம்பத்தில் கண்டுகொள்ளவே இல்லை.

                      ஆனால், நாளுக்கு நாள் பொலிவாகி கொண்டிருந்த சர்வாவின் தோற்றம் அவளை நிம்மதியாகவும் விடவில்லை. அவளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் பிள்ளை இல்லாமல் போக, பெரியவாளின் மகன் இப்படி போஷாக்காக வளர்ந்து நிற்பது அவள் ஆத்திரத்தை தூண்டி விட்டது.

                      அவள் தன் எண்ணத்தை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வெளியே நல்லவளாக வலம் வர, நேரம் பார்த்து ரகுவிடமும் வத்தி வைத்தாள். பரமேஸ்வரன் வீட்டுக்கு செல்வது ரகுவுக்கு அவர் நண்பன் மூலமாக ஏற்கனவே தெரியும் என்பதால் பெரிதாக ரகுவரன் கண்டுகொள்ளவில்லை.

                    ஆனால், யமுனா தொடர்ந்து நம் பிள்ளை நம் வீட்டில் இல்லாமல் நாளும், பொழுதும் அங்கேயே கிடைப்பதா… பார்ப்பவர்கள் என்ன கூறுவார்கள்?? நான் என்ன கொடுமையா செய்கிறேன்..” என்று இடைவிடாமல் நச்சரிக்க, ரகு என்னும் கல் தேய்ந்தது. விளைவு சர்வா ரேகாவின் வீட்டுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது.

                     சரியாக பள்ளி முடியும் நேரத்திற்கு முன்பாகவே அவர்களின் வீடு டிரைவர் வந்து காத்திருந்து சர்வாவை அழைத்து செல்ல, ஒருவாரம் முழுதாக கழிந்திருக்கும். சர்வா பள்ளிக்கே வரவில்லை என்று வந்து நின்றாள் ஸ்ரீகா.

                      ரேகா பரமேஸ்வரனிடம் சொல்லி ரகுவரனிடம் பேச செய்ய, சர்வாவிற்கு காய்ச்சல் என்றார் அவர். அதுவும் அவர் ஊரில் இல்லாமல் இருக்க, யமுனா தனியாக அவனை கவனித்துக் கொள்கிறாள் என்று பெருமிதம் வேறு.

                    ரேகாவிடம் பரமேஸ்வரன் கூறவுமே, மனதிற்கு என்னவோ தவறாகப்பட்டது அவருக்கு. “நாம் சென்று பார்த்து வருவோம்..” என்று அவர் கிளம்ப, முதல் முறையாக அவர்மீது கோபப்பட்டார் பரமேஸ்வரன்.

                    “நாம் என்ன சொல்லி அங்கே போய் நிற்க முடியும் ரேகா.. யாரோ ஒரு பிள்ளை மேல இவ்வளவு அக்கறை வேண்டாம்மா.. இதுல நாம எதுவும் செய்ய முடியாது..” என்று அவர் எடுத்துக் கூற

                    “வருவீர்களா மாட்டீர்களா..” என்று நின்றார் ரேகா.

                   அவரின் பிடிவாதத்தால் பரமேஸ்வரனும், ரேகாவும் சர்வாவின் வீட்டிற்கு செல்ல, யமுனா வீட்டிலேயே இல்லை. வேலையாட்களிடம் பரமேஸ்வரன் விசாரிக்க யமுனா எங்கோ வெளியே சென்றிருப்பதாக கூறியவர்கள் சர்வா இருந்த அறையையும் கைகாட்டினார்கள்.

                  நெற்றியில் காய்ச்சலுக்கு ஒரு துணியை நனைத்து போட்டிருக்க, காய்ச்சல் இறங்காமல் அனத்திக் கொண்டிருந்தான் அவன். பார்த்தவர்களுக்கு அவன் நிலை உடனே புரிய, ரேகா அவனை தூக்க முற்பட, அவரைத் தடுத்து பிள்ளையை தான் கைகளில் தூக்கி கொண்டார் பரமேஸ்வரன்.

                    “உங்க முதலாளி வந்தா, நான் தூக்கிட்டு போயிருக்கேன் ன்னு சொல்லு..” என்றவர் பிள்ளையை தூக்கி கொண்டு தன் வீட்டிற்கு வந்துவிட்டார். வரும் வழியிலேயே அவர் மருத்துவருக்கு அழைத்துவிட, அருகிலேயே இருப்பதால் உடனே வீடு வந்து பார்த்தார் அவர்.

                     அவனை முழுதாக பரிசோதித்தவர் பிள்ளையின் வயிற்றை பார்த்து அதிர்ந்து போனவராக, “பரமேஸ்வரன்..” என்று சத்தமிட

                      “முதல்ல ட்ரீட்மெண்ட் பண்ணு பிரபா.. மத்ததை பிறகு பேசுவோம்..” என்றார் பரமேஸ்வரன். அவன் வயிற்றில் ஒரு உள்ளங்கை அளவுக்கு தீக்காயம் பட்டிருக்க, அதனைக் கொண்டு தான் காய்ச்சல் வந்திருந்தது. மருத்துவர் அதிர்ந்து நின்றதும் அதனைப் பார்த்து தான். ரேகா கண்ணீருடன் அவன் அருகில் அமர்ந்தவர் அன்று முழுவதுமே அவன் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள, அன்று மாலையில் தான் லேசாக சுயநினைவுக்கு வந்தான் சர்வா.

                     ரேகாவை கண்ட நிமிடம் “ரேகாம்மா..” என்றவன் அவர் இடையை கட்டிக் கொள்ள, ரேகாவும் அவனை அணைத்து கொள்ளவும், “நான் அங்கே போகமாட்டேன் ரேகாம்மா.. இங்கே இருக்கேன் ப்ளீஸ்.. நான் போ மாட்டேன்..” என்று சத்தமாக அவன் அழ

                        “நீ போக வேண்டாம் சர்வா.. அம்மவோடவே இரு… இப்போ தூங்கு.. காய்ச்சல் இருக்கு இல்ல.. அழக்கூடாது.. அம்மா இங்கேயே இருக்கேன் தூங்கு..” என்று அவனை உறங்க வைத்தார்.

                       அன்று இரவு பதினோரு மணியளவில் யமுனா பரமேஸ்வரனின் வீட்டின் முன்னால் வந்து நின்றாள். கூடவே மகனை அனுப்ப சொல்லி வேறு சத்தமிட, பெண் என்பதால் பொறுமையாக பேசிக் கொண்டிருந்தார் பரமேஸ்வரன்.

                       ரேகா சர்வாவின் அருகில் இருந்தவர் யமுனாவின் சத்தமான கத்தலைக் கேட்டு வெளியே வர, அவர் கண்டது தன் கணவனை ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்த யமுனாவைத் தான்.

                      அவரின் தந்தை ஒரு வார்த்தை கணவரை பேசினாலே பொறுத்துக் கொள்ளாதவர் ரேகா. யமுனா போன்ற ஒரு பெண் பரமேஸ்வரனை பேசினால் சும்மா விடுவாரா?? வேகமாக வாசலுக்கு வந்தவர் பரமேஸ்வரனை தாண்டி யமுனாவை நெருங்க, பரமேஸ்வரன் “ரேகா..” என்று அதட்டும் முன்பே அவள் கன்னத்தில் தன் கைவிரல் பதியும் அளவிற்கு ஒரு அரை விட்டார் யமுனாவை..

                       “ஏய் என்னையா அடிச்ச..” என்று யமுனா கையை ஒங்க, அவள் உயர்த்திய கையை ஒருகையால் பிடித்து கொண்டு மீண்டும் அவள் கன்னங்களில் மாற்றி மாற்றி அறைந்து தள்ளினார் தன் ஆத்திரம் தீரும் வரை. வெளிவாசல் இரும்புக் கதவு வரை அவளை இழுத்து வந்து வெளியே தள்ளியவர் “இனி இவளை உள்ளே விடாதே..” என்று காவலாளிடமும் எச்சரித்த பிறகே வீட்டிற்குள் வந்தார்.

Advertisement